இன்பவல்லி





(1947ல் வெளியான கற்பனை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்சி 1-5 | காட்சி 6-10 | காட்சி 11-15
காட்சி – 6

அரண்மனையில் தனியிடம் :
[பாண்டிமாதேவி அமர்ந்துள்ளாள்.]
பல குரல்கள் :
“மன்னர் யாரோ ஒரு நாட்டியக்காரியின் மையலில் சிக்கிவிட்டார்!”
“இந்த நாட்டின் பட்டயங்களும் கல் வெட்டுக்களும் வைக்கப் பெற்றிருக்கும் ஆவணக்களரியில் அவளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாமே!”
“நீதிக்கும் நியாயத்திற்கும், கல்விக்கும் பு கலைக்கும் வாய்த்த அமர பீடமாயிருந்த இந்த அரச பீடம் பாண்டிய வம்சத்தின் பரம்பரையில் தோன்றிய நெடுஞ்செழியனின் லீலா விநோத மண்டபமாக மாறி விட்டது!”
[அமைச்சர் வருகிறார்.]
தேவி :- அமைச்சரே! கேட்டீர்களா, பெருங்குடி மக்கள் பேசுவதை?
அமைச்சர் :- தேவி! கலையென்று வந்து வலை வீசி விட்டாள், அந்தக் கன்னி.
தேவி :- கலைஞர்கள் வருவார்கள், போவார்கள்.. இவளோ…
அமைச்சர் :- ஆம், தேவி! இவள் நெடுங்காலம் இங்கே வாழ வந்தவள் போல் நடந்து கொள்ளுகிறாள். மன்னரோ ஸ்திரவாசம் செய்விப்பவர் போல ஆவணக்களரியில் குடியேற்றியிருக்கிறார் அவளை.
தேவி :- மதியை அழிக்கும் மதுவை உண்டு மையலில் மயங்கிக் கிடக்கும் அவனிடம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியுமா? தாய்மையை அறியும் சக்திதான் அவனுக்கு உண்டா?
அமைச்சர் :- தேவி! வருந்த வேண்டாம்.
தேவி :- தாயின் அன்பில் கடுமை உண்டு. ஆனால் அது மென்மை கலந்தது. அவன் அதை அறிய வில்லை.
அமைச்சர் :- நெறிதவறி நடப்பவன், நீதி கூறுபவன் முன்னால் நாணப்படுவது இயற்கைதானே? உண்மையும் நேர்மையும் கசப்பைத்தான் அளிக்கும் அம்மணி. இதனால்தான் மன்னர் தங்களைச் சந்திக்கவே விரும்பவில்லை.
தேவி :- அமைச்சரே! நெடுஞ்செழியனைப் பற்றிய கவலை என் உடலை விழுங்கிக்கொண்டே வருகிறது. அவனுடைய நடத்தை இன்னும் சிறிது காலத்திற்கு இப்படியே இருக்குமானால், கவலையை அனுபவிக்கும் நிலையிலிருந்து நான் விடுதலை பெற வேண்டியது தான்.
அமைச்சர் :- தேவி! எது பொய், எது உண்மை என்பதை அறிந்து கொள்ள அதிக காலம் தேவை யில்லை. என்றோ ஒருநாள் அம்மாயத் திரை கிழிந்து தானாகவேண்டும்.
தேவி:-ஆம். மாயத் திரை கிழிந்து தானாக வேண்டும்.
திரை.
காட்சி – 7
அரண்மனையைச் சார்ந்த ஒரு நந்தவனம்:
[மாலைப்பொழுதில் பாண்டியனும் இன்பவல்லியும் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.]
இன்பவல்லி :- என்றோ ஒருநாள் அம்மாயத் திரை கிழிந்து தானாக வேண்டும். அப்பொழுது இந்த இன்பவல்லியைக் கைவிட்டு விடுவீர்கள்.
பாண்டியன் :- இன்பவல்லி! அதோ அமுத நிலவைப் பொழிந்துகொண்டு வானமண்டலத்திலே உல்லாச யாத்திரை போகும் சந்திரன் சாட்சியாகச் சொல்லுகிறேன். உள்ளத்திலே உதயமாகியிருக்கும் உன் நினைவு மாயை அல்ல. உடலில் உயிர் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை என் உள்ளத்தில் உன் உருவமிருப்பது!
[மெதுவாக ஒரு செடியின் பின் மறைந்துகொள்ளுகிறாள் இன்பவல்லி. இன்பவல்லி பாடுகிறாள்.]
பாண்டியன் :- சரி, இனி நானும் பாடவேண்டியது தான் போலிருக்கிறது!
இன்பவல்லி :- ஆம் ! ( சிரிப்பு) [வருகிறாள்]
பாண்டியன் :- ஏன் இன்பவல்லி சிரிக்கிறாய்?
இன்பவல்லி :- நான் விளையாட்டாகப் பதில் சொன்னதற்கு இப்படியா, பாடுவேன் என்று பழிதீர்க்க விரும்புகிறீர்கள்!
[இருவரும் சிரிக்கின்றனர். திடீரென்று இன்பவல்லி சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளுகிறாள்.]
பாண்டியன் :- இன்பவல்லி! இதென்ன…… திடீரென்று..!
இன்பவல்லி :- ஸ்வாமி! தங்களுடன் சிரித்துப் பேசும் இந்தப் பாக்கியம் நிரந்தரமானதா என்று நினைத்தேன்; வேறொன்று மில்லை.
பாண்டியன் :- மீண்டும் மீண்டும் இதைக் கேட்டு… ஆண்களின் மனத்தை வாட்டுவதில் பெண்களுக்கு என்ன திருப்தியோ? இதோ பார் இன்பவல்லி! பாலாறும் பெண்ணையும், காவிரியும் அமுதப் பிரவாகமாகப் பெருக் கெடுத்தோடும் தமிழகத்திலே, நம்முடைய பரந்த சாம்ராஜ்யத்தின் சிங்காதனத்திலே மணிமுடி தரித்து நாம் வீற்றிருக்கும் நன்னாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். போதுமா?
இன்பவல்லி :- கலாதேவியின் அடிமை என்பதைத் தவிர வேறு யோக்கியதை இல்லாத எனக்கா அந்தப் பதவி? ஸ்வாமி! கனவு காண்கிறேனா?
பாண்டியன் :- இல்லை – இன்பவல்லி, இது கனவல்ல, நினைவு.
இன்பவல்லி :- ஸ்வாமி ! தென்றலுடன் கலப்பதைத் தவிர மகரந்தப் பொடிக்கு வேறு இன்பம் உண்டா? ஸ்வாமி தங்கள் கண்களில் காணப்படும் குறு குறுப்பு, கன்னங்களின் கவர்ச்சி, அவற்றின் குழிப்பிலே உள்ள கனிவு, தேன் இதழ்களின் சிரிப்பிலே மிளிரும் களிப்பு, மதிமுகத்திலே தோன்றும் வனப்பு, எல்லாம் நாட்டிய தேவனான நடராஜப் பெருமானைத் தவிர வேறு யாருக்கேனும் இருக்குமா? தங்களைக் காணும் போதெல்லாம் அந்த மூர்த்தியின் தோற்றம் தான் என் இருதய மலரிலே கூத்தாடுகிறது.
பாண்டியன் :- நாட்டிய உருக்கொண்ட நீ நடராஜப் பெருமானை அடைவது நியாயம்தான்.
திரை.
காட்சி – 8
சேரனின் சபை :
[சேனாதிபதியும், மதிவாணரும் உடன் இருக்கின்றனர்.]
சேரன் :- சேனாதிபதி! அமைச்சர் மதிவாணரே! என் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிக் கொண்டு வருகிறது.
சேனாதிபதி :- இன்பவல்லியிடம் சிக்கிக் கொண்டான் பாண்டியன். நம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இதுவே தக்க சமயம்.
சேரன் :- ஆம். சேனாதிபதி, விரைவில் படை திரட்டுங்கள்.
மதிவாணர் :- படையா? ஏன்?
சேரன் :- போர் புரியத்தான்! இது என்ன கேள்வி? மதிவாணரே! உங்கள் கருத்து விளங்கவில்லை!
மதிவாணர் :- போர் புரிவதென்று நிச்சயித்து விட்டீர்களா?
சேரன் :- ஆம்.
மதிவாணர் :- போருக்கு இப்பொழுது என்ன அவசியம்? பின்னால் வருந்தாமலிருக்க இப்பொழுது சிறிது சிந்திக்கலாகாதா?
சேரன் :- எதைப் பற்றிச் சிந்திப்பது?
மதிவாணர் :- பாண்டிய அரச பீடத்தைப் பொது மக்கள் புகழ்ந்து பேசுகிறார்கள் என்பதற்காகப் போர் தொடுப்பது அநியாயமானது. நாகரிகமற்ற செய்கை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சேரன் :- அமைச்சரே! நீர் அறியாமற் பேசுகின்றீர்! இந்தச் சேர ராஜ்யம் ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டியதுதானா? பாண்டியனுக்கு அவ்வளவு பரந்த ராஜ்யமா!
மதிவாணர் :- பாண்டியனுடைய படை பலத்திற்கு முன் நம்முடைய படை பலம் பெரிதல்ல.
சேரன் :- அது எனக்குத் தெரியும். தெரிந்துதானே நான்…
மதிவாணர் :- அது மட்டுமல்ல பிரபு! பொதுஜன அன்பால் ஆட்சி பீடத்தை அமைத்துள்ள பாண்டியனை நாம் சுலபமாக வென்று விட முடியாது. பொது மக்கள் அவ்வளவு பேருமே வீரர்களாக மாறிப் போர்க்களம் புகுந்து விடுவர்.
சேரன் :- அந்தக் காலம் மாறும்வரை காத்திருந்தாகி விட்டது.
மதிவாணர் :- பிரபு! படைபலம் காரணமாக இப்பொழுது நாம் பாண்டியன் மீது போர் தொடுப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மை விட படை பலமுள்ள வேறு மன்னன் நம்மீது போர் தொடுத்தால் என்ன செய்வது? இப்படிப் பார்த்தால் ‘தடி எடுத்தவன் தண்டல் காரன்’ என்றல்லவா ஆகி விடும்!
சேனாதிபதி :- இப்பொழுது கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தைக் கை நழுவ விட நாம் அறிவீனர்களில்லை.
சேரன் :- அப்படிச் சொல்லும்!
மதிவாணர் :- சரி, நமக்கு வெற்றி என்றே வைத்துக் கொள்ளுவோம். சொந்த விருப்பு வெறுப்பை முன்னிட்டு ஆயிரக் கணக்கான மக்களைப் பலி இடுவது எவ்வளவு அநியாயம்!
சேரன் :- மதிவாணரே ! ராஜாங்க முறை தெரியாமல் பேசுகிறீர். ஒரு தனி மனிதன் இன்னொரு தனி மனிதனுடன் சச்சரவிடுவது குற்றம். ஆனால் ஒரு அரசன் இன்னொரு அரசன் மீது போர் தொடுப்பது வீரம்.
சேனாதிபதி :- மதிவாணர் பயப்படுகிறார் போலும்!
மதிவாணர் :- நீதிக்குப் புறம்பாகச் செல்லப் பின் வாங்குபவன் கோழையல்ல பிரபு! அவனே வீரன்.
சேரன் :- மன்னனுக்கு ஏற்பட்ட மாசைப் போக்க நினையாத நீரா வீரம் பேசுவது?
சேனாதிபதி :- இப்படிப்பட்ட கோழைகள் ஆட்சி பீடத்தில் பெரும் பதவி வகிப்பதற்குத் தகுதி இல்லை.
மதிவாணர் :- மாசே ஏற்படவில்லையே. மாசு ஏற்பட்டிருப்பது உங்கள் மனச்சாட்சியில் தான். பொறாமை என்பது மனித சுபாவம் படைத்த அனைவருக்கும் தோன்றுவது இயற்கை. அறிவாளியாயிருப்பவன் பொறாமைப்படுவது அவசியம் தானா என்பதைச் சிந்தித்து அதைக் கைவிட்டு விடுகிறான். மற்றவர்கள் பொறாமைத் தீயிலே விழுந்து மடிகிறார்கள்.
சேரன் :- மதிவாணரே…
மதிவாணர் :- அரசே ! அநியாயத்தை அநியாயம் என்று சொல்லக் கூட அஞ்ச வேண்டுமா?
சேரன் :- போதும்! நீர் மன்னனின் விருப்பத்துக்கு மாறாகப் பேசுகிறீர். கடமை அறியாதவர்.
மதிவாணர் :- மன்னா! மன்னிக்க வேண்டும். உண்மையாக உங்களை நேசிக்கும் ஊழியன் நான். அந்த நேசம் காரணமாகத் தான் தங்கள் கோபத்தையும் பொருட்படுத்தாது தங்கள் நன்மையை விரும்புகிறேன். மன்னன் சந்தர்ப்பத்தின் குறுக்கீட்டின் காரணமாக வழி தவறும் போது திருத்த வேண்டியது மந்திரியின் கடமையல்லவா?
சேரன் :- போதும். விரைவில் போர் தொடங்குவ தென்று முடிவு செய்து விட்டேன். இன்றோடு உமது அமைச்சர் பதவி முடிந்தது.
மதிவாணர் :- அரசே! துரும்பின் துணை பற்றிக் கரை சேர முடியாது. வாளை வீசுகிறீர்கள். அது திரும்பிப் பாயும் போது துடிதுடிக்கப் போகிறீர்கள். இறைவன் உங்களைக் காப்பாற்றுவானாக. நான் போய் வருகிறேன்.
[போகிறார்.]
சேரன் :- சேனாதிபதி! மதிவாணரின் போக்கு விபரீதமாக இருக்கிறது, பார்த்தீரா?
சேனாதிபதி :- எப்போதுமே அவர் சிறிது செருக்குடையவர் தான்.
சேரன் :- போர் தொடங்குவதென்ற எனது முடிவைப் பற்றி உமது கருத்தென்ன?
சேனாதிபதி :- உங்கள் பரந்த லட்சியம் நானறியாததா பிரபு!
திரை.
காட்சி – 9
தோட்டம்:
[சுந்தரி பாடிக்கொண்டே வருகிறாள். மற்றொரு புறமிருந்து இன்பவல்லி வருகிறாள்.]
இன்பவல்லி :- சுந்தரி ! என்ன இன்று ஆனந்தம் தாங்கமுடியவில்லை போலிருக்கிறதே!
சுந்தரி :- நாம் வந்த காரியத்தில் எதிர்பாராத வெற்றி வெகு சுலபத்தில் கிடைக்கும் போது…
இன்பவல்லி :- வெற்றியா?
சுந்தரி :- வெற்றியில்லையா என்ன? அதுவும் இவ்வளவு எளிதில்?
இன்பவல்லி :- எதைச் சொல்லுகிறாய்?
சுந்தரி :- சரிதான் போ. அடுத்தாற்போல எதற்காக நாம் வந்திருக்கிறோம், ஏன் வந்திருக்கிறோம் என்று கூட நீ கேட்பாய் போலிருக்கிறதே!
[ராஜகுமாரி இன்னொருபுறமிருந்து]
குமாரி :- அந்தக் கேள்வியைத் தான் நான் எவ்வளவோ தடவை கேட்டு விட்டேன். சரியான பதில்தான் இல்லை.
இன்பவல்லி :- யார் அரசகுமாரியா?
குமாரி :- ஆச்சரியப்படுகிறாயா? என்னை எதிர்பார்க்க வில்லை போலும்!
சுந்தரி :- தாங்கள் குறுக்கிட்டதை நாங்கள் விரும்பவில்லை என்று சொல்லவில்லையே !
குமாரி :- நீ சொல்லித் தான் நான் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவ்வளவு மடமையையா என்னிடம் எதிர்பார்க்கிறாய்?
சுந்தரி :- உங்கள் புதிர்களுக்கு என்னால் பதில் சொல்ல இயலாது.
குமாரி :- எப்படி முடியும்? வெள்ளை மனமானால் பயமற்றுப் பேசலாம்
[சுந்தரி போகிறாள்.]
சுந்தரி! எங்கு போகிறாய்?
சுந்தரி :- அரசகுமாரி! தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் காரணமில்லாமல் என்னைச் சந்தேகிக்கிறீர்கள்.
குமாரி :- ஹும், நீயும் இன்பவல்லியும் இங்கே இருப்பது இந்த நாட்டின் நன்மைக் கென்று எனக்குத் தோன்றவில்லை.
இன்பவல்லி :- அரசகுமாரி!
குமாரி :- இன்பவல்லி! உன் உருவம் பார்க்க எவ்வளவு களங்கமற்றிருக்கிறது. அதில் மாசற்ற இருதயம் இருந்திருக்கலாகாதா? ஹூம்.
[இன்பவல்லி போகிறாள். ராஜகுமாரி பார்த்துக் கொண்டே நிற்கிறாள்.]
திரை.
காட்சி – 10
அரண்மனை :
[அமைச்சரும் பாண்டிமாதேவியும்]
அமைச்சர் :- பாண்டிமாதேவி! அபாயம் அரசரை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இன்பவல்லி என்று பெயர் பூண்டு துன்ப மூட்டையுடன் தோன்றியிருக்கும் கள்ளி அவள். மன்னனையும் இந்நாட்டையும் அழித்து விடுவதற்காகப் பகை அரசனால் ஏவப்பட்ட சூழ்ச்சிக்காரி.
தேவி :- அமைச்சரே! நீங்கள் தான் எப்படியாவது அவனைக் காப்பாற்றவேண்டும். என் தாயுள்ளம் கொந்தளிக்கிறது, குமுறுகிறது. விளக்கின் ஜோதியைப் புஷ்பமென்று கருதும் விட்டில் அவன். இந்த சாம்ராஜ்யத்தின் அழிவுக்கு என் குமாரன் காரணம் என்று ஏற்படுமானால் அந்தப் பாரத்தைச் சுமந்து கொண்டு என்னால் இருக்கவும் முடியாது. நிம்மதியாக இறக்கவும் முடியாது.
அமைச்சர் :- அம்மணி! குளிர் காய்வதற்காக மூட்டப் பட்ட நெருப்பு வீட்டையே எரித்து விட்டது போல், பொழுது போக்குக்காக ஏற்படுத்தப் பெற்ற கலைக் கூடம் மன்னரின் வீழ்ச்சிக்குக் காரணமான பலிபீடமாக மாறிவிட்டது.
தேவி :- நெடுஞ்செழியன் எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டான்.
அமைச்சர் :- அதனால்தான் அம்மணி நாம் சொல்லும் நீதிகள் அவருக்கு நாராசத்தைப்போல் இருக்கின்றன.
தேவி :- இதற்கு மாற்றம்தான் என்ன ?
அமைச்சர் :- எப்படியும் அவரைக் காப்பாற்றவேண்டும்.
[யாரோ போவது தெரிகிறது.]
யார் அங்கே போவது? சேவகா, பார்!
சேவகன் :- பிரபு நாட்டியக்காரியின் தோழி சுந்தரி போகிறாள்.
தேவி :- அமைச்சரே! நிர்வாகக் காரியங்களைக் கவனித்து விட்டு மாலை வாருங்கள். என் மகனைக் காப்பாற்ற ஒரு மார்க்கம் கூறுங்கள்.
அமைச்சர் :- வணக்கம்.
திரை.
– தொடரும்…
– இன்பவல்லி (கற்பனை நாடகம்), முதற் பதிப்பு: மார்ச் 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.