இன்னும் மனிதர்கள் இருக்கிறார்களா?
(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு நல்ல பசி.
காலையில் வீட்டை விட்டு எழுந்ததுமே அவசர வேலை காரணமாக வெளியே வந்துவிட்டேன். அப்படிப்பட்ட நேரங்களில் எனக்குக் காலை உணவைப்பற்றியோ, ஏன் காலை தேநீரைப் பற்றியோ கூடக் கவலை கிடையாது ஆனால் வீட்டில் தரப்படும் “பிளேன் டீ” யைத் தள்ளிவிடவும் முடியாது. உறுஞ்சிக் குடித்துவிட்டு வெளியேறி விடுவேன். அன்றும் அவ்வாறு தான் உறிஞ்சிக் குடித்துவிட்டு வெளியேறினேன். ஆனால் மன்னார் பஸ் நிலையத்தை அடைந்து, அங்கு இரண்டொரு மணித்தியாலங்களை ‘டல்’லாகச் செலவிட்டதன் பின்னர் தான் பசியின் அருமையை உணரமுடிந்தது. உண்மையிலேயே எனக்கு நல்ல பசிதான்.
பழைய உடைந்த ரெயில்வே கொம்பாட்மென்ட் போல நீளமாய் அமைக்கப்பட்டிருந்த அந்தத் தகரத்தாலா ‘ரெஸ்டிங் ஷெட்’டுக்குள் சனம் முட்டி மோதிக்கொண்டு நின்றது. நானும் தான் பார்க்கிறேன் காலையிலிருந்து அந்த சனம் அதே ‘ஷெட்’டுக்குள் தான். நிறைந்து வழிந்திருந்த தவிர கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை.
சனங்கள் மத்தியில் முணு முணுப்பும், புறு பறுப்பு தாராளமாக நடைபயிலத்தொடங்கின. சிலர் வாய்விட்டே ‘பஸ்’ ஸையும், பஸ் நிலையத்தையும் திட்டத் தொடங்கினர்.
“அண்ணே பஸ் வராதா அண்ணே!”
“அது பசு தானே! ஆடி அசைஞ்சுதான் வரும்”
கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லை. புறுபுறுப்போடு கலகலப்பும் சேர்ந்து கொண்டது பஸ்நிலையத்தில். அந்த நேரத்தில் ‘பிசு பிசு’ வென்று தூறிக்கொண்டிருந்த மழை வேறு பிலாக்கணம் வைத்துக்கொண்டு அழத்தொடங்கியது ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த பஸ்நிலையம் இப்போது குளமும் கடலுமாக மாறியது. வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் ஒருவாறு முண்டி யடித்துக் கொண்டு ‘ரெஷ்டிங் செட்’ டுக்குள் நுழைகிறேன் சிலர் தங்கள் கைகளிலிருந்த குடைகளை அவசரம் அவசரமாக விரித்து வேறு பிடித்துக் கொள்கிறார்கள். ‘ஷெட்’டுக்குள் தான், இப்போது பஸ்நிலையத்தினுள் புறுபுறுப்பு பன்மடங்காகிறது.
“எளவு புடிச்ச பஸ் இன்னும் வரயில்லே!”
”பஸ் வராட்டி என்னப்பா மழையாவது வந்துதே!”
”எவன்டா அவன் எரியிற நெருப்புலே எண்ணெய ஊத்துறது”
சனங்களின் முணுமுணுப்பும் தொண தொணப்பும் உச்சஸ்தாயியை அடைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் அந்த ஆச்சரியமான சம்பவம் நடந்தது. ஆம் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு. கண்மண் தெரியாத வேகத்தில் வந்து கொண்டிருந்த ‘அந்த’ பஸ் ‘கியூ’ வருகே வந்ததும் பக்கத்தில் இருந்த குழிக்குள் தனது முன்னங்கால்களை நுழைத்து ‘கியூ’வில் நின்றவர்கள் மேல் சேற்றை வாரியடித்துக் கொண்டு ‘கியூ’ வுக்கு அப்பால் வெகு தொலைவில் போய் நின்றது. அது ஏற்கனவே தனது உடம்பு முழுக்கச் சேற்றை வேறு அள்ளிப் பூசியிருந்தது. அந்த ‘பஸ்’ நின்றது தான் தாமதம் ‘கியூ’ வில் நின்ற சனங்கள் அனைத்தும், ஆமாம் அனைத்தும்தான் பஸ்ஸருகே ஓடிச்சென்று வாசலில் முட்டிமோதிக் கொண்டு ஒருவருமே உள்ளே ஏற முடியாமல் நெடுநேரம் கிழிபட நின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சிதான். மன்னாரின் எந்தெந்த மூலைக்குச் செல்ல வேண்டுமோ அங்கு செல்ல வேண்டியவர்களெல்லாம் இந்த பஸ்ஸையே முற்றுகையிட்டனர். பெயர்ப்பலகையைப் பார்ப்போமே என்று … ஊஹும் (பெயர்ப்பலகை என்று ஏதும் இருந்தால்தானே! அவர்களது நிலை அப்படி).
இந்த வேடிக்கையில் ஒருவாறு அமுங்கியிருந்த என் பசி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. பஸ் நிலையத்தில் நின்ற வாறே என் கண்கள் எதிரே தெரிந்த முஸ்லீம் ஹோட்டல் ஒன்றை நோட்டம் விடுகிறது. பஸ் வரும் வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தால் நான் பட்டினி கிடந்தே சாகவேண்டியது தான் போலும்! நம்முடைய பஸ் நாளைக்குத்தான் வரும் எதையாவது சாப்பிடுவோம் என்று மனதிற்குள் குமைந்தலாறு ஹோட்டலை நோக்கி நடக்கிறேன்.
ஹோட்டலில் எக்கச்சக்கமான கூட்டம், காலை வேளை எனக்குத் செரியும், மன்னாரில் இரண்டொரு ஹோட்டல்கள் தான் இருக்கின்றன. அவை எப்பொழுதும் ஜனசஞ்சாரமாகவே காட்சியளிக்கும். ஒருவாறு நெருக்கியடித்துக் கொண்டு சென்று ஒரு கதிரையில் அமர்கிறேன். என் கண்கள் பக்கத்து மேசைகளை எடைபோடுகின்றன. எனக்கு எதிரே உள்ள மேசையருகில் அமர்ந்தவாறு ஒருவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். எனக்கு அவனை நன்கு தெரியும். அவனது குடும்ப நிலையும் புரியும். மிகவும் வறிய குடும்பம் அது! சதா சண்டையும் சச்சரவும் குழந்தைகளின் பசி ஓலமும்தான். அவனது மேசையில் ஈரல், இறைச்சி முட்டை றோஸ்ட் இறைச்சி முதலிய விதம் விதமான கறிவகைகள் இருக்கின்றன. அவன் குனிந்த தலை நிமிராமல் அவற்றை வெட்டித் தள்ளுகிறான். எனக்குத் தெரியும் இந்த உணவுக்கு எப்படியும் ஐந்தாறு ரூபாயாவது ஆகுமென்று! என்மனம் வேதனையுறுகிறது. அவனது வீட்டு நிலைமை இதயத்திரையில் கண் சிமிட்டுகிறது. பசியால் வீரிட்டலறும் குழந்தை. பத்திரகாளி போல் நிற்கும் அவனது மனைவி…. இவனைப் போன்றவர்கள் ஏராளமானோர் இங்கு இருக்கிறார்கள். இவர் களெல்லாம் வீட்டில் மனைவியுடன் சண்டை. பிடித்துக் கொண்டு “சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்” என்று கூறிவிட்டு ஹோட்டலுக்கு வந்து வெட்டித் தள்ளுவார்கள். முழுக்குடுப்பத்திற்கே சோறு போடலாம். இவர்களது ஒரு நேரச் செலவிலிருந்து.
என்னருகே சர்வர் இன்னும் வரவில்லை ஆனால் வாசல்புற மிருந்து ஒரு மனிதன் மிகவும் சோர்வுடன் எனது மேசையருகே வருகிறான். அவனது முகத்தில் பிரேதக்களை தெரிகிறது. பலநாட்களாக ‘ஷேவ்’ செய்யாத தாடி முள்ளாககத் தெறிக்கிறது, அவனது தலைமயிர் சிக்குப்படர்ந்து குரோட்டனைப் போல் இருக்கிறது. ‘ஹாப்சிலிப்” ஷேட் ஒன்று அணிந்திருக்கிறான். அது முன்னர் வெள்ளை நிறமாகத்தான் இருந்திருக்க வேண்டும். பழைய பழுப்புநிற ‘ட்ரௌஸா’ அவனது இடுப்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவன் படித்தவன் தான். பார்க்க விளங்குகிறது. ஆனால் ஏதும் மனக்கோளாறினால் பாக்கப்பட்டவனாக இருப்பானோ… அப்படியும் தெரியவில்லை. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் அவன் தாள முடியாத வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கிறான் என்றே கூற வேண்டும்!
“என்ன மாஸ்டர் வேணும்!” ஒரு சர்வர் என்னை நோக்கி வருகிறான். எனக்கு முன்பே தெரிந்தவன். ‘பலகாரங்கள் கொண்டு வாரும்!’ என்று கூறிவிட்டு கண்களை நானா திசைகளிலும் சுழற்றுகிறேன். இப்போது ஹோட்டலில் அவ்வளவு ‘கிறவுட்’ இல்லை. அங்குமிங்கும் அலைந்த என் கண்கள் மீண்டும் அந்த் ‘அவனை’ நோக்கித் திரும்பி அவனிடமே சங்கமமாகின்றன.
இப்போது அவன் ஒரு கதிரையில் இருந்துவிட்டான். அவனது முகத்தில் பலமான சிந்தனைரேகைகள் படர்ந்திருக்கின்றன. அடிக்கடி தனது உள்ளங்கையினால் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கும் இளம் தாடியை உரசிவிட்டுக் கொள்கிறான். தாடி கடிக்கிறது போலும்.
சர்வர் என்னருகே பலகாரங்களைக் கொண்டு வந்து வைக்கிறான். என் கை ஒரு ‘பெற்றீஸை’ எடுத்துக்கொண்டாலும் கண்கள் மட்டும் ஏனோ அந்த ‘அவனை’ யே குறி வைக்கின்றன. சர்வர் அவனருகே வருகிறான் ‘என்ன வேணும்’. வழமையான மாமூல் கேள்விதான். ‘கொஞ்சம் ஐஸ் வாட்டர்’ அவனது வாய்மெல்ல முணுமுணுக்கிறது. சர்வர் அவனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு உரத்த குரலில் கூறுகிறான்.
‘ஐஸ் வாட்டர் இல்லே!’
‘அப்ப சும்மா தண்ணி தாங்க!’
‘இது என்னடா புதுத்தொல்லை’ என்பதுபோல் சர்வரி அங்கிருந்து நகர்கிறான். சிறிதுநேரத்தில் தண்ணீருடன் திரும்புகிறான். தண்ணீரை மேசை மீது வைத்தவாறே சர்வருடைய வாய் உரத்துச் சத்தமிடுகிறது.
“டீ போடவா?”
அவன் அதிர்ச்சியடைகிறான்…இருந்தும் சமாளித்துக் கொண்டு ‘இல்லே! பிளேன் டீ போடுங்க’ என்று மெல்லிய குரலில் முணுமுணுக்கிறான்.
என் கண்கள் ‘அவனை’ யே மொய்க்கின்றன! அவன் மெல்லத் திரும்பிப்பார்க்றான். அவனது மேசையருகில் பழைய உடைந்த எண்ணெய்த்தகரம் ஒன்று இருக்கிறது. அதனுள்ளே வாழைப்பழத்தோல் தின்ற எச்சங்கள், கட்லற், பெற்றீஸ், ரொட்டித் துண்டங்கள், கைதுடைத்த கடதாசிகள் கிடக்கின்றன. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவனது கண்கள் சற்று அகல விரிந்து ஒளியுடன் பளிச்சிடுகின்றன. எனது கண்களும் தீட்சணயமாகின்றன
அவன் மெல்ல அங்குமிங்கும் விழிகளை மட்டுமே சுழற்றி நோட்டம் விடுகிறன் தன்னை ஒருதரும் கவனிக்கவில்லை என்று ஆத்ம திருப்தி அவனுக்கு. கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று வெகு வேகமாக அந்தப் பழைய எண்ணெய்த் தகரத்திற்குள் கையை விட்டு எவரோ தின்று விட்டு எறிந்த எச்சத்தை பெற்றீஸ் துண்டொன்றை எடுக்கிறான். எடுத்த வேகத்துடனேயே அதைத் தனது வாயருகே கொண்டு செல்கிறான்.
அட்டா! அவனது தூரதிஸ்டம்! அவனையே நான் கவனித்துக் கொண்டிருப்பதை அகஸ்மாத்தாகக் கவனித்து விடுகிறான். முகம் கூனிக் குறுகித் தொய்கிறது. கையலி ருந்த ‘பெற்றீஸ்’ நழுவிக் கீழே விழுகிறது. மனிதாபிமான உணர்ச்சி அவன் முகத்தில் துளிர்விடுகிறது. நான் பல்லைக் கடித்துக் கொள்கிறேன். ‘என்ன மடத்தனமான காரியம் செய்துவிட்டேன்; அவனுடைய சுதந்திரத்திற்குக் குறுக்கே…’ என் கண்களை நானே நொந்து கொள்கிறேன். அவனுடைய கண்களை என் கண்கள் நேருக்குநேர் சந்திக்க மறுக்கின்றன.
அவன் அருகே ‘சர்வர்’ வருகிறான். அவன் ஓடர் செய்த ‘பிளேன் டீ’ யை வைத்துவிட்டு நகர்கிறான். அவனோ அந்த ‘பிளேன் டீ யை அருந்தாமல் கிளாசின் வெளிப் புறத்தை தன் விரல் நகத்தினால் சுரண்டியவாறு தலையைக் குனிந்தபடி இருக்கிறான்.
நான் சர்வரை அழைத்து அவனுக்குச் சாப்பாடு கொடுத் துவிட்டு அந்த பில்லை என்னிடம் தருமாறு கேட்கலாமா என்று நினைக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவ்வாறு செய்ய விடாமல் தடுக்கிறது. ‘சுய கௌரவமா அது’ எனது கண்கள் மீண்டும் கூர்ந்து நோக்குகின்றன. அவனோ குனிந்தவாறு கடைக்கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.
“யாவும் கற்பனை” என்று கதையின் இறுகியிவ் என்னால் போட முடியவில்லை. உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை எப்படி ‘கற்பனை’ என்று போட்டுக் கொள்ள முடியும் அந்த ‘அவனும்’ கூட ஒருவேளை இந்தக் கதையைப் படிக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்.
நாய்க்கும் பூனைக்கும் எறிகின்ற எச்ச சொச்சங்களை மனிதர்கள் தின்னும் ஒரு நிலை உருவானால் அந்த நிலை மகா பயங்கரமானது,
(யாவும் கற்பனையல்ல)
– 1976
– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.