இனி ஓடுவதில்லை





(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கனவிலும் ஓட்டம்தான். முகமற்ற மீசை. பருத்த ஆகிருதியான ஆட்கள் துரத்த, அவள் பதறி ஓடுவதாகத்தான் பெரும்பாலும் கனவு வந்தது. பாதை இருண்டு மூட, அவள் வியர்த்து, அவற் வாய் திறக்கையில் விழிப்பு வந்துவிடுகிறது.

இப்போது ஓடுவது நிஜம். மூச்சிரைக்கிறதுதான். ஆனாலும் இன்னும் இரண்டே எட்டுவைத்து எம்பினால் நகரும் பஸ்ஸினுள் ஏறிவிடலாம். டிபன் பாத்திரமும் குடையுமாய் பருத்த கைப்பையை இறுக்கிக் கொண்டவன், எட்டிக் கம்பியைப் பற்ற. வியர்த்த உள்ளங்கை வழுக்கியது. சில கைகள் அவள் கைப்பற்றி இழுக்க, பஸ் படியில் இருபாதங்களும் ஏறிப் பதிந்தன.
ஆனாலும் இதயம் எகிறித் துடித்தது.
“பையனுங்கதான் இப்படீன்னா, பொண்ணுங்களும் புடவையோட ஓடற பஸ்ஸிலே தொத்தறதா? எம்மா… விழுந்திருந்தியானா, யாருக்கு பதில் சொல்றது? என் தலை உருளும். உள்ள போம்மா!” கண்டக்டர் கோபித்தார். அசுவாரஸ்யமாய் அவளைத் திரும்பிப் பார்த்த பல ஜோடிக் கண்களில் புது ஆர்வம் அப்பிக் கொள்ள, விலகாது வெறித்தன. விஜயா குனிந்து கொண்டாள். அங்கிருந்தும் ஓடி ஒளிய மனம் துடித்தது.
மெருகிட்ட பொன் விளக்காய் மின்னுவது அவள் தப்பல்ல, வளைவோடு உயரம், பம்மென்று அடர்ந்த கூந்தல், செதுக்கிய முகமும் அகன்ற விழிகளும்… எட்டு மணிநேரம் உழைப்பும் உளைச்சலுமாய் அலுத்த பின்னும் அலுங்காத அழகு. அம்மா தந்துபோன அழகு.
‘ஏன் இத்தனை நேரம்? கடையைவிட்டு இறங்கினா காலை பஸ்ஸிலே வை!’
‘பஸ் கிடைக்கணுமேப்பா’
‘எவனாச்சும் கிடைச்சா பஸ்ஸு கிடைக்காது’, சீறும் அப்பாவிற்கு அஞ்சிதான் அவள் இப்படி பதைத்து ஏறியிருக்கிறாள்.
பஸ் ஸ்டாப்பில் நிற்கும்வரை கட்டியவன் போல் ‘என்ன விஜி’ என்றழைத்து இழையும் சுந்தரத்திடமிருந்து தப்பி ஓடவும்தான்.
இந்தத் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே இவள் பம்மிப் பதுங்க, பார்த்தவர்களின் கொடி உயர்ந்தது.
‘விஜி… நூத்து முப்பதுக்கு ஒரு பில் போடு’
‘ஏய் விஜி, நாலு டீக்கு சொல்லி விடேன்.’
‘மீட்டர் ஸ்டிக்கை இப்படிப் பிடிச்சு அளக்கணும்’ கை பிடித்துக் காட்டினார்.
‘துணியை இப்பிடி மடிச்சு, கத்திரியை சர்ருன்னு ஓட்டு – பிசிறில்லாம வெட்டிரும்’- மூச்சு, தோளில் வெப்பமடிக்கும் நெருக்கத்தில் கற்றுத் தந்தனர்.
ஆறு ஆண்களிடையே அவள் பெண்மைக்கு மூச்சடைத்தது. ஒருவேளை ஆண் என்ன பெண் என்ன என்ற சமத்துவ இயல்பில்தான் பழகுகிறார்களோ?
‘விஜி வந்தபிறகு கடையிலே கூட்டம் டபுள். நீ போனபிறகுதான் விளக்கு வைக்கிறோம்மா. ஆனாலும் இருளோடிடுது.
‘இப்போ முதலாளி கூட ‘டீக்கா’ உடுத்தி அடிக்கடி விசிட் வரார்ப்பா’ – கண்ணடித்தார்கள்.
‘மதுரைக்கார பொண்ணுங்களுக்கு விபரம் பத்தாது. 12 வயசுவரை ‘ஃபிராக்’ போட்டுட்டு பிறகு மிடி, பாவாடைன்னு இறங்கிடுதுங்க. 16 வயசுக்கு மேலேதான் உடுப்பு எடுப்பு – என்ன விஜி?’
வக்கிரம் வெளிப்பட அவள் மேலும் ஒதுங்கினாள். எல்லாக் கணக்குப் பொறுப்பிலிருந்த இரு பெரியவர்கள் ‘கண்டுகொள்ளாது’ விட, மற்ற நால்வரிடமும் புது உற்சாகம் பிய்ந்துக் கொண்டது.
பத்திரிகை, பூ, புத்தகம், இனிப்பு என்று வாங்கி நீட்டினார்கள். அவள் மறுப்பு முறைப்பு எதுவும் எடுபடவில்லை. அதில் மூவருக்குத் திருமணமாகி, குழந்தைகளும் இருப்பது தெரிந்தபோது எரிச்சலும் கவலையுமாயிருந்தது.
சுந்தரத்திற்கு சர்வ சுதந்திரம்.
பின்புறமிகுந்த பாத்ரூமிற்கு அவள் போக, தொடர்ந்து வாசலில் விசிலுடன் நிற்பான். உள்ளே விளக்குக்கூட போடாமல் இருட்டுக்குள் நின்று அவள் பல நாட்கள் மௌனமாய் அழுதிருக்கிறாள்.
சில சமயங்களில் தகரக்கதவைச்சுரண்ட, இவன் பதறிப்போய் வெளியே வந்தால்…
‘நேரமாயிடுச்சேன்னு பார்த்தேன் விஜி – முகங் கழுவினியா?’
முதலாளியிடம் கோடி காட்டினாள்.
‘நீதாம்மா முதல் பொண்ணு. இப்போ சேல்ஸ் கூடியிருக்கா, கூட ஒரு பொண்ணைப் போடலாமான்னு யோசிக்கேன்’ என்றார்.
பதில் விடுதலையில்லாவிட்டாலும், குகையின் துளி வெளிச்சமாய் நம்பிக்கை தந்தது.
இன்னுமொரு பெண் துணையில் இத்தனை சிரமமிருக்காது. வந்த ருக்மணி கரேலென்று முயற்பற்களுடனிருக்க, அவளைச் சிந்துவாரில்லை!
பேரை உருட்டி ‘ருக்கு’ என்று பேச்சுக்குப் பத்துமுறை அழைப்பாரில்லை!
தீய்ந்த திரி புகைந்தது.
‘பளிங்கு கணக்கா நிறமிருந்தா கஸ்டமருங்ககூட சிரிச்சு பேச மாட்டாம பாறை மாதிரி நிக்குறா – மித்த ஆம்பளைங்க ‘விஜி விஜி’ன்னு தாங்கற கர்வம்’ – பொறாமை ருக்குவை எட்டவே வைத்தது. அவள் நெருங்க முயன்ற சுந்தரம், அவளை அண்ட விடவில்லை.
இரவு படுக்கையில் இந்நினைவுகளைப் புரட்டிப் பார்க்க சோகையாய்ச் சிரிப்புவரும்.
“என்ன உல்லாசமா நீட்டி நிமுத்திட்ட? காலைக்குத் தண்ணி இல்லை. அடிச்சு, குடிக்க ஒரு குட காய்ச்சி வை” என்று அப்பா சிடுசிடுப்பார்.
போன வருடம் ஒருநாள் வீட்டில் பம்ப் அடிக்கும்போதுதான் கோபாலை முதன் முறையாகப் பார்த்தது.
வெள்ளிக்கிறலான மூன்றாம் பிறையைப் பார்த்தபடி நின்றவள் அரவம் கேட்டு அவசரமாய் ஓங்கியடித்தாள்,
“என்னங்க இந்த நேரத்தில்?”
“யாரு?” நிமிர்ந்து புருவஞ் சுருக்கினாள்.
“புரொபசர் சார் வீட்டுக்கு எம்ஃபில் பண்றது விஷயம அடிக்கடி வர்றேன். சார் உதவியா இருக்கார்.”
அவள் பதிலளிக்காது இயங்க குடம் தளும்பித் தெறித்தது.
‘வேலைக்குப் போனா இதால் சிரமம்…’
நிரம்பாத வாளியுடன் உள்ளே நடந்தாள் அவள்.
நான்காம் நாள் அவளது அலுவலகத்திற்கு வந்தான்.
“உங்ககூட போணுங்க…”
“யாரு?”. விழிகள் உறையக் கேட்டாள்.
“நினைவில்லை? பம்ப்… நீங்க…. மூணாம் பிறை'” தடுமாறினான்.
“இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை”
அவன் மேலே தொடரவில்லை.
மறுநாளே அடுத்த போர்ஷன் புரொபசர் சார் வந்து சம்பந்தம் பேசினார்.“கோபால் எங்க காலேஜ் லெக்சரர். எம்.ஃபில் முடிச்சு பர்மனெண்ட் ஆயிடுவான். நல்ல குடும்பம், நேரான பிள்ளை.”
“அப்ப ஏன் அவளைத் துரத்தறான்?” அப்பா நிஷ்டூரமாய் நிமிண்டினார்.
“அப்படி ஒண்ணுமில்லையே சார். விஜயா விருப்பம் தெரிஞ்சு கல்யாணம் பேச ஆசைப்பட்டான். அவ்வளவுதான். விஜயாவைப் பற்றி மூணு மாசமா என்கிட்டே ஒரே சிலாகிப்பு. ‘அந்தக் கால பதமினி போல ஒரு கம்பீரமான அழகு சார் அவங்க. அமைதியும் குணம்கூட அழகுதான்’னு சொல்லிக்கிட்டேயிருப்பான். ‘பைசா எதிர்பார்க்கலை பூவா வெச்சுக்குவான்’.
அவளுக்குள் சந்தோஷக்காற்று – அஞ்சி ஓடும் அவள் சுபாவம் அவனுக்குக் கம்பிரமாகப் பட்டதாமா?
“அநாதைப் பயலா? கேட்டற உறவில்லை” – வாய் கோணி கன்னத்தைச் சொறிந்து கேட்டார்.
”பெத்தவங்க கடையத்திலே இருக்காங்க. செயலான குடும்பம். ரெண்டு பக்கமும் தெரிஞ்சவன்ற முறையிலே என்னையக் கேட்டுக்கிட்டான்”.
“விசாரிச்சுக்கிட்டுச் சொல்லி விடறேன்”
“சரி. விஜயாவையும் ஆறேழு வயசுக் குழந்தையிலிருந்து எனக்குத் தெரியும். கோபாலும் நல்லா தெரிஞ்ச பையன் – அதான் சொல்றேன்…”
“போருமய்யா. தொழிலை மாத்திக்காதீயும், நாலையும் யோரிக்கணும்னா புரிஞ்சு ஒதுங்குமேன்.”
சார் முகம் சுண்டித் திரும்பினார்.
அவள் உள்ளே பரவிய சந்தோஷக் காற்று அடங்கி வறண்டது.
மறுமுறை கோபாலன் வந்திருந்த வேளை பார்த்து, அவள் பின்புறமாய் சார் வீட்டில் நுழைந்து வலியப் பேசினாள்.
“சார் சொன்னார்” – ரப்பர் வளையல்களை மேலும் கீழுமாக ஒட்டியபடி சொன்னாள்.
“என் கிட்டேயும் சொன்னார்” வருத்தமாய் தலையசைத்தான்.
“அப்பாவுக்குப் பயம். அம்மா இறந்து 15 வருஷமாச்சு. தம்பி 20 வயசிலேயே ஒரு கேரளப் பொண்ணைக் கட்டிக்கிட்டு அவ ஊர்ப்பக்கமா போயிட்டான். எஞ்சியது நான் மட்டும்தான் சம்பாதிக்க, சமைக்க, துணையா…”
“கலியாணத்துக்குப் பிறகு நம்மகூடத்தானே இருக்க போறார்?”
“யோசிச்சுத்தான் சொல்றிங்களா?”
“அவரு ஒண்டின்னு தெரியுமே.”
“உங்க அப்பா அம்மா..”
“கடையத்திலே நிலமிருக்கு. அண்ணியைச் சொந்தத்திலேதான் எடுத்தோம். வீடு கொள்ளாம போன் பேத்தி, குற்றாலச் சாரல், குளியல் அவங்க ஊரை விட்டு அசைய மாட்டாங்க”
“அப்பாகிட்டே பேசறேன் நான்.”
“முடிவு எப்போ… தெரியும்? – முகம் மலர்ந்தான்.
“தெப்பக்குளம் பக்கத்தில நாளைக்கு வந்திருங்க.”
மறுநாள் தளும்பிய குளத்தருகே கோபாலின் மலர்ச்சி வற்றிப் போனது.
“ஏங்க விஜயா? வரதட்சணை எதிர்பார்க்கலை. அவரை ஒதுக்கலை – பிறகென்ன? நான் வந்து பேசட்டுமா?”
“பயங்கரமா சுத்தறாரு. அவன் வீட்டுல சம்பாத்தியத்துல நானிருக்கறது கேவலம்ங்கறார். எனக்கு விஷம் வச்சிட்டு நீ போய் தாலி கட்டிக்கோன்றார்.”
இதே பேச்சை அவள் வேலை பார்த்த அலுவலகத்தில் வந்து அவர்மேஜை மேஜையாய் நின்று பேசி தன்கட்சிக்கு ஆள் சேர்க்க, அவள் ராஜினாமா செய்துவிட்டு மூன்று மாதங்கள் வீட்டிலிருந்தாள்.
குந்தித் தின்ன நிமிஷத்தில் குன்றிமணி கரைந்தது. பணத்தேவையைவிட தகப்பனிடமிருந்து தப்பும் வேகத்தில்தான் அவள் துணிக்கடை வேலையில் சேர்ந்தாள்.
சட்டியிலிருந்து அனலுள் குதித்த கதையாய் இங்கு மனதில் மேலும் பொசுங்கல். ஓடுதலும் அலுத்துப் போனது.
அடிக்கடி வந்து பேசும் கோபாலும் அவன் கண்ணியமும்தான் ஒரே குளிர் மருந்து.
“ஏம்மா… ஒத்த ரூவா டிக்கெட்டில மொத்த பஸ்ஸை வாங்கிட்டாப்பல சப்ஜாடா உக்காந்திருக்கியே. பிள்ளையத் தூக்கும்மா. அந்தப் பொண்ணு இன்னும் இளைச்சுட்டு நிக்குது பாரு. விரிச்சு அடைச்சிரணும் சீட்டை.”
கண்டக்டரின் கூச்சல் தனக்குப் பரிந்துதான் என்ற உணர்வில் விழிகளை நிமிர்த்தினாள் விஜயா. உடல் இன்னும் இலையாய் நடுங்கியது. நெஞ்சு விம்மியது.
சுற்றிலும் கொத்திய கண்களில் குன்றி குறுகினாள்.
ஓட.. கால் பரபரத்தது.
வாரிச் கருட்டிய கொண்டையும், பிசுக்கேறிய தலையுமாயிருந்த பெண் படுஅமர்த்தலாயிருக்க மீண்டும் அதட்டல்,
“உன்னத்தான் – காது செவிடா? பிள்ளையத் தூக்கேன்?”
“ஒத்தரூவா டிக்கெட்டுதான். ஆனா பிள்ளைக்குமாச் சேத்து ரெண்டு எடுத்திருக்கோமில்லை. எதுக்குத் தூக்கணும்?”
“ஆமா… ரெண்டு ரூவாயில பஸ்ளே உன்னுதாயிடுது.”
“என்னுதில்லைய்யா. மரசக்கூலி வாங்குற உன்னுதுமில்லை. மொட்ட அம்பலம் பண்ணாத, சொல்றத நயந்து சொல்லேன். உன் ரப்பு தோரணையிலே நா ஓடணுமாக்கும்?”
அமர்த்தலான குரல்தான்.
ஆனால் சுத்த அச்சமில்லா கிராமத்துத் தோரணையில் தன் பதற்றம் அடங்கினாற் போலிருந்தது விஜயாவிற்கு.
மேலும் கூட்டம் ஏற, முன்னே நகர்ந்தவளின் கை தொடப்பட்டது.
“உக்காரும்மா” – கிராமத்துப் பெண் பிள்ளையை மடியிலேற்றிக் கொண்டாள்.
“ப..பரவாயில்லை.”
“உக்காரு நீ… பயந்துட்டியா? அவிட்டு அதிகாரத்துக்குப் பணிஞ்சுப் போகப்படாதுன்னு பேசினேன். வேலைக்குப் போயி வர்றியா?”
“ம்… நீங்க சொல்றதும் சரிதான்.”
‘”எண்ணெயும் தூசுமா இருக்கோமில்ல – விரட்டுவானுங்க. முதுகு காட்டினா எக்களிப்பா குத்தி நெம்புவானுங்க, நின்னு பேசிடணும். ஓடுனா கல்லெடுக்க குனியறதுதான். ஆனா நாய் நின்று திரும்பினா கிலிதான?”
“சரிதான்”
”நியுந்தான் எதுக்கு இப்படி ஓடிவந்து ஏறுன? வழுக்கி விட்டிருந்தா இத்தனை அழகும் டயருக்கும் ரோட்டுக்குந்தான?”
நொடிகள் கண்மூடித் திறந்தவள் சொன்னாள்.
“இல்லை இனி ஓடலை.”
மறுநாள் காலை, கடையின் மானிக்குயீன் பொம்மைக்கு நைட்டி மாட்டிக் கொண்டிருந்த சுரேஷ் இவளிடம் கிசுகிசுத்தான்.
“ட்ரெஸ் வெளிச்சம் போடுது பொம்மையைப் பார்க்கிறவனே வழிவான் – பொண்ணுக்குப் போட்டு நிறுத்தினா… என்ன விஜி?”
அவன் விழிகள் வஞ்சனையாய்ச் சுருங்கிச் சீண்டின.
“போட்டு விடுங்களேன். வீட்டிலே அக்கா, தங்கை இருக்காங்கல்ல? போட்டு எங்க வேணா நிக்க விடுங்க.”
கணிரென்று வந்த பதிலில் விதிர்த்துக் குளித்தான்.
“சுந்தரம், பதினொரு மணி டீக்கு நீயே சொல்லிடு. தவிர உன் கஸ்டமர் பில்லை நீதான் இனி போடணும்”. சொன்னபின் எதையும் சமாளிக்கலாம் என்ற தெம்பேறியது. வந்த கோபாலுடன் என்றுமில்லாத உல்லாசத்துடன் பேசினாள்.
இரண்டாம் நாள் கைக்கொரு பெட்டியுடன் புறப்பட்டு நின்றவளைப் பார்த்த அப்பா தொய்ந்தார்.
“எ…எங்க… என்ன பெட்டியைத் தூ… தூக்கிட்ட?”
“வர்ற புதன்கிழமை எனக்குக் கல்யாணம்ப்பா. பிரியமா மதிப்பா எப்பவும் உங்களை வச்சுக்கக் கடமைப்பட்டவ நான், ஆனா, உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லைங்கறப்போ.. போறேம்ப்பா…”
அப்பா கத்த ஆரம்பிக்க, அவள் படியிறங்கினாள்.
“எங்க போறே நீ?” பின்னால் ஓடி வந்தார்.
“சார் வீட்டுக்கு. கோபால் குடும்பத்தார் வந்தாச்சு. நாளை காலை ஜவுளி எடுக்கப் போறோம். நீங்களும் வந்தா சேர்ந்தே போவோம்பா.”
வீதியில் இறங்கியபோது பெட்டிகளை கோபால் வாங்கிக் கொண்டான். பயந்தது போல மனசு பாரமாயில்லை. முன்றாம்பிறை போல தகடாய், மெலிசான ஒளியாய் உணர்ந்தாள்.
அப்பா இனிமுரண்ட மாட்டார் என்ற நம்பிக்கை.
அவருக்கும் நல்லதாய் வேட்டி, சட்டை எடுக்க வேண்டும். அவர் பயஜுரம் நீங்க கல்யாணத்தன்று குளிரக் குளிர அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும். கடைசி வரை அவர் மனம் வாடாது வைத்துக் கொள்ள வேண்டும்.
கோபாலுக்கும் குறையே தோன்றக்கூடாது. இதெல்லாம் நான் சந்தோஷமாய் இருக்கத்தான் சாத்தியம் என்று தோன்ற முக்கியமாய் ஒன்றை மனதுள் அழுந்த குறித்து வைத்தாள்.
இனி ஓடுவதில்லை…
மனம் வெகு நிம்மதியாயிருந்தது.
– மங்கையர் மலர்.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.