கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 5,362 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீனித்தாய் இப்பத்தான் காட்டிலிருந்து வருகிறாள். இடுப்பொடிகிற வேலை. உள்ளங்கை யெல்லாம் கொப்புளம் கொப்புளமாய்ப் புண். உப்பையள்ளிப் போட்ட மாதிரி… காந்தல்.

முக்கால் குறுக்கம் புஞ்செய். வாலோடியான தோட்டம். நெஞ்சுயரத்துக்கு வளர்ந்து ஓய்ந்துபோன பருத்தி. வேனாக்கொதிக்கிற கோடை வெயிலில் ஓடிஓடி பருத்திமாரைப் பிடுங்கினாள். உள்ளங்கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்தாள். அது எந்த மூலைக்கு? மாரைப் பிடுங்கப் பிடுங்க ரத்தம் கன்றிப் போன உள்ளங்கை. வலி உயிர் போகிறது.

வீடு போனவுடன் முந்தியை விரித்துப் படுக்கணும் போலிருந்தது. குறுக்கெல்லாம் பூரான் கடித்த மாதிரி கடுகடுக்கிற வேதனை. மூட்டுக்கு மூட்டு ‘நெறு, நெறு’ ங்கிற வலி.

வீட்டை நெருங்கினாள். இவள் காலடித் தடத்திலேயே ஆள் வாசனையை உணர்ந்து ஆவலாய் ‘தடாபுடா’ வென்று எழுகிற எருமை. தாழ்வாரத்தில் அதன் காலடி பூராவும் நசநசப்பு. சாணமும், கூளமும், மூத்திரமும், அது படுத்திருந்த அடையாளமுமாய்…

இவளைப் பார்த்ததும் நம்பிக்கையில் மின்னுகிற அதன் கண்கள். மூத்திரத்தில் நனைந்த அதன் வாலைச் சுழற்றிக் கொண்டே ‘ம்மேய்ங்ங்’கிறது. ‘ம்மா… எனக்கு தண்ணீ…’ என்று கத்தலாய் அதன் நீண்ட கனைப்பு.

காலையில் போகும்போது இவள் வைத்த தண்ணீர். அதற்குப் பிறகு சொட்டுத் தண்ணீர் யாரும் அதன் கண்ணில் காட்டவில்லை. தவித்த வாய்க்குத் தண்ணீரில்லாமல் தகை எடுத்துக் கிடக்கிறது. பாவம்… வாயில்லாச் சீவன்.

உஸ்ஸென்று உட்காரப் பொழுதில்லை. கொடுப்பினை யில்லை. பானைகளை உருட்டினாள். ம்ஹும்…

சீனித்தாய்க்குக் கசந்து வந்தது. மொத்த வாழ்க்கையின் அத்தனை பாரத்தையும் அந்தக் கணத்தில் உணர்ந்தாள். ‘இதுவும் ஒரு பொழைப்பா? இப்படியும் சீரழியணுமா? என்னத்தைக் கட்டியாளப் போறோம்? ஓய்ஞ்சு உட்கார நேரமில்லாமல் மாய்ஞ்சு மாய்ஞ்சு சாகுறதைவிட… ஒரேயடியா செத்துத் தொலையலாம்’ என்று ஓடுகிற மனசு.

இனி நிற்க நேரமில்லை. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடித் தவிக்கணும். கடைக்கு ஓடணும். சாமான்கள் வாங்கி வந்து அடுப்பை மூட்டணும். பள்ளியிலிருந்து வரும் பிள்ளைகளைக் கவனிக்கணும். காட்டிலிருந்து புருஷன் வருவதற்குள் காப்பி போட்டு வைத்திருக்கணும்.

இதையெல்லாவற்றையும் விடப் பெருங்கொடுமை, தண்ணீர் சுமப்பது.

நினைக்க நினைக்க மலைப்பு பிரம்மாண்டமாக இருந்தது. நினைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்க முடியவில்லை. ‘ம்மேய்ங்’கிற கதறலில் துரத்துகிற எருமை மாடு.

குடம், பானை, வாளிக்கயிறு இவற்றோடு தெருவில் இறங்கினாள். ஆவணி மாசத்து வறண்ட காற்று. சுள்ளென்று கன்னக் கதுப்பில் அறைகிற வெயில்.

மனசின் சலிப்பும், கசப்பும் நடக்கிற நடையில் தெரிகிறது. ‘தக், தக்’ கென்று அதிர்கிறது தரை.

நடுத்தெருவில் நான்கு உயரக் கால்களில் வட்டமாய் உட்கார்ந்திருக்கிற நீர்த் தொட்டி. அதன் உடம்பு முழுக்க குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம். கிணற்றிலிருந்து தரைக்குள் நீர்த்தொட்டிக்கு வருகிற குழாய் உடைந்து மூன்று மாசமாயிற்று. போட்ட மனுக்களுக்கு உயிர் இல்லை. கலெக்டரிடம் போனால்… ஒன்றிய ஆணையாளரைக் காட்டினார்கள். அவரிடம் போனால்… குடிநீர் வாரிய இன்ஜினீயர். அலைந்து அலைந்து ஊர்ஜனத்துக்குக் கால் மூளை அற்றுப் போனதுதான் மிச்சம். ஆடிமாதக் கோடையில் கிணறும் நீர்வற்றி வெறுங் கிணறாயிற்று.

ஓடை போலவும், வண்டிப் பாதையாகவும் நீள்கிற பாதை. இரு மருங்கிலும் வேலி மரக்கிளைகள் அடர்த்தியாய். நாசியைத் தாக்கித் திணறடிக்கிற மனித மல நெடி. வாலையாட்டிக் கொண்டு சோம்பலாக நகர்கிற பன்றி.

ஓடைக்கரையேறுகிற இடத்தில் அடி பம்பு. அதன் வட்ட பிளாட்பாரம் சிதைந்துபோய்… அடிபம்பும் துருவேறிப் போய்… நாள்பட்ட ரிப்பேர். ஊர் பூராவுக்கும் தண்ணீர் கொடுத்த அந்த அடிப்பம்பையும் ரிப்பேர் பண்ண நாதியில்லை. மனுக்களுக்குப் பதிலுமில்லை. மனுவின் தமிழ், அதிகாரிகளுக்கும் புரியவில்லை.

இளவட்டங்கள் மனுவை எழுதிக் கொண்டு வீடு வீடாகக் கையெழுத்து வாங்குவார்கள். இவளிடமும் கேட்டார்கள். ‘சீனித்தாய்’ என்று இங்கிலீஷில் தடுமாற்ற மில்லாமல் கையெழுத்துப் போடுவாள். பையன்கள் அசந்து போவார்கள். பிரமிப்போடு இவளைப் பார்ப்பார்கள். போகும்போது ஒரு பையன் சொல்வான்; “அக்கா… ஒம்பதாப்பு வரைக்கும் படிச்சிருக்காக.”

சீனித்தாய் அடிபம்பைக் கடந்தாள். உழுதுகிடந்த புஞ்செய்களுக்குள் நீள்கிற ஒற்றையடிப் பாதையில் நடந்தாள். எதிரில் பாரத்தோடு வருகிற ஒரு பெண். இடது இடுப்பில் நீர்க்குடம். தலையில் ததும்பும் பானை. வலது கையில் வாளியும் கயிறும். நகர்ந்து வரும் இந்தியா போலத் தோன்றினாள்.

“என்ன சீனித்தாயி, தண்ணீக்கா?”

“ஆமக்கா. கெணத்துலே ஆள் இருக்காகளா?” “நெறைய இருக்காக.”

“தண்ணி கெடக்கா?”

“கமலைக் குழியிலே மட்டுந்தான் கொஞ்சமா கெடக்கு. வறட்டிழுப்புதான்.”

சீனித்தாய்க்குள் பதைப்பு. நடையை எட்டிப் போட்டாள். உள்ளுக்குள் எருமையின் கதறல். ரொம்ப நேரமாகுமோ…

நாலைந்து நடை தண்ணீர் சுமக்க வேண்டும். காத்திருந்து, காத்திருந்து எப்ப எடுத்து முடிக்க? எப்ப சோறாக்க? எப்ப வாழ்றது..?

காட்டுக் கிணறு. சுவரில்லாத மொட்டைக் கிணறு. சுற்றிலும் செடிகளும் கொடிகளும், புதராய்.

ஏழெட்டுப் பேர் காத்திருந்தனர். ஊர்பொரணி நடந்து கொண்டிருந்தது. ஒருத்தி பானை மினுக்கினாள். ஒருத்தி கமலைக்கல்லில் காலை வைத்துக்கொண்டு வாளியைப் போட்டு இறைக்கிறாள்.

சீனித்தாயுக்குள் ஆயாசம். கிணற்றை எட்டிப் பார்த்தாள். வெகு ஆழம். ஒரு மூலையில் கமலைக் குழி. அதற்குள் கலங்கலாய் நீர். பழுத்து உதிர்ந்த மஞ்சணத்தி இலைகளும், சருகுகளும், தவளையுமாய்.

போனவருஷம், ஊரில் காலரா. மூன்று பேர் மண்டையைப் போட, மொத்த ஊரே கதி கலங்கிப் போய், மறியல் பண்ண… கலெக்டர் வந்திருந்தார்.

“காட்டுக் கெணத்துத் தண்ணிதான் காரணம். சுகாதாரமற்ற குடி தண்ணீர். இதை யாரும் குடிக்காதீக. பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீரைத்தான் குடிக்கணும்.” வண்டி வண்டியாக உபதேசம்.

யாருக்கு வேணும்? சுத்தமான குடிதண்ணீர் கொடுத்தால், குடிக்கக் கசக்கவா செய்கிறது? யார் தருவது? ரிப்பேரான குழாயைச் சரிபண்ண நாதியில்ல. அடிபம்பை செம்மை செய்ய அதிகாரிகள் இல்லை. இந்த லட்சணத்தில்… உபதேசம்! நல்ல கூத்து.

இந்தக் காட்டுக் கிணற்றுத் தண்ணீருக்கே வறட்டிழுப்பு. காத்திருப்பு. காலும் கழுத்தும் வலிக்கச் சுமை…

நேரம் போகப் போக… நிறம் மாறுகிற வெயில். அவளுக்குள் பதைப்பு. பிள்ளைகள் வந்திருக்குமோ… அவர் வந்திருப்பாரோ…

தலையில் நீர்ப்பானை. இடுப்பில் ஒரு குடம். நடக்கவே சிரமமாக இருந்தது. கழுத்து வலிக்கிறது. முகமெல்லாம் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்..

வீடு திறந்து கிடந்தது. ‘அவரு வந்துட்டாரோ..’

பானைத் தண்ணீரை எருமைக்கு ஊற்றினாள். இடுப்பு நீரை வீட்டுக்குள் வைத்தாள். அவர்தான். நடையில், அவர் கொண்டு வந்து போட்டிருந்த புல்லுக்கட்டு.

வெளியே புறப்படுகிற தோரணையில், அந்த ஆள்.

“சித்தே இருங்க… இந்தா காப்பி போட்டுருதேன்.”

“எனக்கு வேண்டாம்.”

“ஏன்?”

“இன்னைக்கு வேண்டாம்.”

அவன் சொல்லின் பூடகம், எதையோ மறைத்து வைத்துப் பேசுகிற தொனி. பத்து வருஷ தாம்பத்யத்தில் இவளுக்குள் பிடிபடுகிற அவனது மனநிலை.

“சம்பளம் வாங்கியாச்சா?”

“ம்.”

“கொண்டாங்க.”

“எனக்குத் தேவைப்படுது.”

“சாராயம் குடிக்கவா?”

“ம்….”

“தண்ணி கெடைக்கலே. சொமக்க முடியலே. நாங் கெடந்து சீரழிஞ்சு சாகுதேன். கூடமாட ரெண்டு நடை சொமக்கலாம்லே? சாராயந்தான் முக்கியமாப் போச்சா?”

“என்னையா பானை சொமக்கச் சொல்றே?”

“ஏன்… பானை சொமந்தா… ஆம்பளைக் கிரீடம் எறங்கிருமோ?”

“எறங்காது. ஆனா… இப்ப எனக்கு வேற அர்ஜென்ட்.”

அவன் முகத்தில் துள்ளுகிற உற்சாகம். எந்தக் கோபத்திற்கும் புண்படாத உல்லாச மனோபாவம்.

“காட்லேயும் பாடு, வீட்லேயும் பாடுன்னு பொம்பளை நா சங்கடப்படுதேன். குடிதண்ணிக்குக் கதியத்துப் போய், காடோ கரையோன்னு அலைஞ்சு சாகுதேன். ஒங்க தண்ணி மட்டும் ஒரு தட்டுப்பாடு இல்லாம ரெடியா கெடைக்குதோ? அதுக்கு ஒரு கட்டுப்பாடே இல்லியாக்கும்?”

கோபமற்ற கண்டனமாய் அவளது கேள்வி. வார்த்தை உறைக்குள் சொருகப்பட்ட கத்தியாக கற்றைச் சோகம்.

தண்ணியடிக்கிற குஷியான மிதப்பில் முற்றத்துக்குப் போனவன், இவளைப் பார்த்துக் கிண்டலாகக் கண்ணடித்தான்.

“தருமன் பீமன்ங்க அஞ்சு பேருதான். அதுலேயும் அடிமைக. துரியோதனன் கூட்டம் நூறு பேரு… ஆனா, ராஜ சபையிலே-அந்த நெலையிலேதா நம்ம நாடு, இப்ப. குடிதண்ணிக்கு வழியில்லே நம்ம ஊர்லே. ஆனா, கள்ளச்சாராயத்துக்கு பஞ்சமேயில்லே. காசிருந்தா, விழுந்து நீச்சலே அடிக்கலாம். தெரியுமா?”

நக்கலாகச் சிரிக்கிற அவன், ஏதோ ஒரு பெரிய ஜோக்கைச் சொல்லிவிட்ட சுயதிருப்தியில் சிரிக்கிறான்.

யாரைப் பார்த்து இந்தச் சிரிப்பு? தன்னைப் பார்த்தா? நாட்டைப் பார்த்தா? எல்லாப் பொறுப்புகளையும் போதையில் நழுவ விடுகிற அவனையே பார்த்துத்தானா? அவன் முதுகையே வெறித்தாள். சீனித்தாய்க்கு மனசெல்லாம் கசந்து வந்தது.

– குமுதம், தீபாவளி மலர் 27.10.1994.

– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *