இந்தக் கதையில் எந்த நீதியும் இல்லை!
(பர்மா நாட்டுப்புறக் கதை)

தனது வயதை ஒத்த மற்ற சிறுவர்களைக் காட்டிலும் அவன் அதிக உயரமானதாக இருந்ததால் அவனை எல்லோரும் நெட்டைக்காலன் என்று அழைத்தனர்.
அவன் நல்ல பையன். படிப்பதற்கு மிகவும் விரும்பினான். ஆனால் அவனது புத்திக் குறைவு காரணமாக வகுப்பில் ஆசிரியர்கள் கற்பிப்பதை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. இதனால் அவனது முட்டாள்தனத்திற்காகவும் கேலி செய்யப்பட்டான்.
“நீ படிப்பதற்கு லாயக்கில்லை. எருமை மேய்க்கத்தான் லாயக்கு!” எப்போதும் ஆசிரியர்கள் திட்டுவார்கள்.
ஒரு வழியாக படிப்பு முடிந்தது. வேலை செய்ய வேண்டிய வயதை அடைந்தான். ஆனால் என்ன வேலை செய்வது? புத்திக் குறைவு காரணமாக அவனுக்கு எந்த வேலையும் கொடுக்க கிராமத்தில் யாரும் முன்வரவில்லை. வேறு வழியின்றித் தனது தந்தையின் எருமைகளை மேய்க்கும் வேலையை செய்யத் தொடங்கினான்.
“ஆசிரியர்கள் சொன்னபடியே கடைசியில் நீ எருமை மேய்ப்பனாக ஆகிவிட்டாய்!” ஊரார் கேலி செய்தனர்.
அவன் வருந்தினாலும் அவர்களுக்கு எதிராக ஒன்றும் சொல்ல மாட்டான்.
எருமை மேய்ப்பதிலும் அவனுக்கு ஒரு பிரச்சனை.
தமிழகத்திலும் இந்தியாவிலும் மாடு வளர்ப்பு அதிகம் இருப்பதைப்போல சீனா, ஜப்பான், பர்மா, கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் எருமை வளர்ப்பு அதிகம். அவர்களின் ஊரிலும் அப்படியே. மாடுகள் போல வெவ்வேறு நிறங்களில், அடையாளங்களில் இல்லாமல் எருமைகள் ஒரே போல கரிய நிறத்தில் இருப்பதால் அவை அனைத்துமே அவனுக்கு ஒன்று போல் தோற்றமளித்தன. இதனால் மேய்ச்சல் நிலத்தில் மற்றவர்களுடைய எருமையிலிருந்து தனது எருமைகளைப் பிரித்தறியத் தெரியாமல் சிக்கலுக்கு உள்ளானான். அவனது இந்தக் குறைபாடு மற்ற மேய்ப்பர்களுக்கு ஆதாயமாக இருந்தது.
அவர்கள் மரத்தடியில் சுகமாகப் படுத்துக்கொண்டும், அரட்டையடித்துச் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும், புல்லாங்குழலை இசைத்துக்கொண்டும் உல்லாசமாக இருப்பார்கள். அவர்களின் எருமைகள் மேய்ச்சல் நிலத்தை விட்டு அப்பால் விலகிச் சென்றால் அவர்கள், “நெட்டைக்காலா, நெட்டைக்காலா…! உன்னுடைய எருமை அந்தப் பக்கம் போகிறது!” என்று சத்தமிடுவார்கள்.
உடனே அவன் ஓடிச் சென்று அவற்றை மேய்ச்சல் நிலத்திற்குள் திருப்பி ஓட்டிக்கொண்டு வருவான்.
மேய்ப்பர்கள் பலர் இருந்ததாலும், அவர்களின் எருமைகள் பல இருந்ததாலும், ஒன்றை அடுத்து ஒன்றாக ஏதேனும் ஓர் எருமை விலகிச் சென்றுகொண்டிருக்கும். அப்போதெல்லாம் அவர்கள் நெட்டைக்காலனை அழைத்து அதைத் திரும்ப ஓட்டி வரும்படி செய்வார்கள். இதனால் காலை முதல் மாலை வரை மற்றவர்களின் எருமைகளைத் துரத்திச் சென்று பிடிப்பதிலும், திரும்ப ஓட்டி வருவதிலுமாக அவனுடைய பொழுதுகள் ஓய்வின்றிக் கழிந்து கொண்டிருக்கும்.
அதே போல மாலை நேரத்தில் மற்ற மேய்ப்பர்கள் அனைவரும் நேரத்திலேயே வீடு திரும்பி விடுவார்கள். ஆனால், தன்னுடைய எருமைகள் எவை என்று அவனுக்குத் தெரியாததால் அவன் மற்றவர்கள் அனைவரும் சென்ற பிறகு மிச்சமுள்ள தனது மூன்று எருமைகளை வீட்டுக்கு ஓட்டி வருவான். இதனால் அவன் வீடு திரும்புவதற்கு மிகவும் தாமதமாகும்.
இதன் காரணமாகக் கவலைப்பட்ட அவனது தந்தை அவன் தாமதமாவதற்கும் அதிகக் களைப்போடு இருப்பதற்கும் காரணம் என்ன என வினவினார். அவனால் தக்க பதில் சொல்ல இயலவில்லை.
“இவன் எருமை மேய்ப்பதற்குக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டானே!” அவனது தாய் வருத்தப்பட்டாள்.
அவன் தாமதமாக வருவது வெகு நாட்களாகத் தொடர்ந்தது.
மற்ற மேய்ப்பர்கள் செய்யும் தந்திரத்தையும், அவனது குறைபாட்டையும் அவனது தந்தை ஒரு நாள் அறிந்துகொண்டார்.
மறுநாள் காலையில் அவர் ஓர் உபாயம் செய்தார். பனை ஓலையில் வளையங்கள் செய்து அவர்களது மூன்று எருமைகளின் கொம்புகளிலும் மாட்டிவிட்டார்.
“மகனே! நமது எருமைகளின் கொம்புகளில் உள்ள இந்தப் பனை ஓலை வளையத்தை நன்றாகப் பார்த்துக்கொள். இப்போது நம்முடைய எருமைகளை இந்த அடையாளத்தை வைத்து உன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மற்ற எருமைகளைப் பற்றி நீ கண்டுகொள்ள வேண்டாம்!” என்றார்.
அன்று அவன் மேய்ச்சல் நிலத்தில் இருந்தபோது வழக்கம் போல மற்ற மேய்ப்பர்கள், “நெட்டைக்காலா,… உன்னுடைய எருமை போகிறது!” என்று சொல்லும்போது அவன் நிமிர்ந்து பார்த்தான். கொம்புகளில் பனை ஓலை வளையம் சுற்றியிருக்கிற எருமையாக இருந்தால் மட்டும் அதை விரட்டிச் சென்று திரும்ப ஓட்டி வருவான். ஓலை வளையம் இல்லாத மற்ற எருமைகளாக இருந்தால் கண்டுகொள்ள மாட்டான்.
சற்று நேரத்தில் இவனுடைய அந்த ரகசியத்தை மற்ற மேய்ப்பர்கள் அறிந்துகொண்டனர்.
அவனது தந்தை இன்று தனது மகன் நேரத்தோடு திரும்புவான் என்று வாசலிலேயே காத்திருந்தார். ஆனால் அன்றும் அவன் தாமதமாகவே வந்தான்.
“என்ன ஆயிற்று மகனே? இன்றைக்கும் நீ தாமதமாக வந்திருக்கிறாயே?” என்று கேட்டார்.
நெட்டைக்காலன் வருத்தத்தோடு சொன்னான்: “காலையில் எல்லாமும் சரியாகத்தான் இருந்தது, அப்பா! அப்போது நமது எருமைகள் மட்டுமே கொம்பில் வளையம் சுற்றியிருந்தன. ஆனால், மதியத்திற்கு மேல் எல்லா எருமைகளுமே தமது கொம்புகளில் ஓலை வளையங்களைச் சுற்றிக்கொண்டுவிட்டன!”
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |