இதுவேறுலகம்…தனிஉலகம்…
“சார்..உன்னோட பெரிய ரோதனயாப் போச்சு… நானும் மூணு நாளா பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்…
‘பாலு தண்ணியா இருக்கு….’
‘அர லிட்டர் இருக்காது போலியே…’
‘பாலு என்னவோ வாடை வீசுதே..காம்பெல்லாம் நல்லாத்தானே கழுவுற…இல்லாட்டி டி.பி.வந்துடும்ப்பா…’
‘என்னப்பா லேட்டு….?’
ஏன் சார்..பத்து வருசமா எங்கிட்டத்தானே பால் வாங்குறீங்க..?
காலைல எந்திருச்சு குளிச்சு தெளிச்சு மகாலச்சுமியாட்டம் மகராசி பால் வாங்கிட்டு ஒரு வார்த்த பேசாம போய்க்கிட்டே இருக்குமே ..
நீ வீட்ல இருந்தாலும் இருந்த .. ‘நொய்..நொய்’னு… சார் போயி அம்மாவ வரச்சொல்லு..!
உங்க வீட்டுக்கு பாலூத்த என்னால ஆவாது….”
பால்காரன் குருசாமி போட்ட சத்தம் படுக்கையறை வரை கேட்டது..
மணியைப் பார்த்தாள் மனோகரி.. ஐந்து தான் ஆகியிருந்தது..
“ச்சே..இன்னைக்காவது ஏழுமணி வரைக்கும் தூங்கலாம்னு பாத்தா…விடமாட்டார் போலயே…!”
வாசலில் பால்காரனுடன் தர்க்கம் பண்ணிவிட்டு அப்போதுதான் பால் பாத்திரத்துடன் திரும்புகிறார் சுகவனம்…
“ஆமா..நீ ஏன் எந்திரிச்ச..ஏழு வரைக்கும் நிம்மதியா தூங்க வேண்டியதுதானே..நான்தான் ரிடையர் ஆகி வீட்டோட இருக்கேனே.. எல்லாத்தையும் பாத்துக்க மாட்டேனா..?”
“அதானே இப்ப ப்ராப்ளம்..!”
மனோகரி மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்…
சுகவனம் ஓய்வு பெற்று இன்றோடு ஒரு வாரம் ஆகிறது..
போனவாரம் அவள் கண்ட கனவென்ன….? நிஜத்தில் நடப்பதென்ன…?
“யோகா… இன்னும் ஒரு வாரம்தான்.. அதுக்கப்புறம் எனக்கு விடுதலை….! அப்பறம் பாரு நடக்கப்போற வேடிக்கய….!”
“என்ன மனோ சொல்ற…இத்தன நாள் ஜெயில்லயா இருந்த…? என்னமோ சசிகலா ரேஞ்சுக்கு பேசற…?”
“இல்லடி…அவரு ரிடையர் ஆக இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு…எல்லா பொறுப்பையும் அவர் தலைல தள்ளிட்டு நான் ஆசப்பட்டதெல்லாம் பண்ணப்போறேன்..!!
நீ வேணா பாரு..ஒருமாசத்துக்கு இப்பவே திட்டம் ரெடி..!! நேர்ல வா…! எல்லாம் விவரமா சொல்றேன்…!”
சுகவனம் ஒரு சாதாரண நடுத்தர வர்க்க , கூட்டத்தில் தனியாகத் தெரியாத , அதிகம் ஆசைப்படாத, ஒரு கதைக்கு நாயகனாக இருக்கத் தகுதியில்லாத ஆனால் பிடிவாதக்கார சுயநலவாதி என்று சொல்லலாம்..
ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் என்கிற டைப்..
சுமாராகப் படித்து கிடைத்த அரசாங்க உத்தியோகத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு , அவர்களாக மேலே தூக்கிவிட்டால் அடுத்த படியில் ஏறுவது, இல்லையென்றால் உட்கார்ந்த இடத்தில் சீட்டை தேய்ப்பது என்றிருந்து விட்டார்..
இருபது வயதில் கிளார்க்காக சேர்ந்து ஐம்பத்தெட்டு வயதில் செக்க்ஷன் மேனேஜராக ஓய்வு பெற்றவர்..
வெளியே புலி…வீட்டில் எலி..என்பார்களே அதற்கு நேர் எதிர்….! ஆபீசில் எலி…வீட்டில் புலி..!
ஆபீசில் இருக்கும் இடம் தெரியாது.. அதிகாரம் எல்லாம் மனோகரியிடமும் குழந்தைகளிடமும் தான்..!
இரண்டு பெண்களையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தபின் அவரும் மனோகரியும்தான்…
“ஏங்க.. இன்னும் ஒரு வாரம்தான்..பத்து நாள் நல்லா ரெஸ்ட் எடுக்க..அப்புறமா ஒரு மாசம் கேதாரிநாத், பத்ரிநாத் டூர் புக் பண்ணுங்க…ஒரு எடம் போனதில்ல…”
“மனோ..! இப்போதைக்கு அந்த பேச்சே வேணாம்..நானே ஆஃபீஸ்..ஆஃபீஸ்னு ஓடி ஓடி அலுத்துப்போய் உக்காந்திருக்கேன்..எல்லாந்தான் டி.வி.யில வருதே…அதப்பாரு..!
இனிமே பாத்துகிட்டே இரு……நீ ஒரு வேலையும் செய்ய வேண்டாம்.. நான் என்ன செய்யப்போறேன்னு மட்டும் பாரு..’
அதன் முதல் அத்தியாயம் இதுதான் போலிருக்கு….!
“மனோ..நீ ரொம்ப வெள்ளந்தியா இருக்க..இத்தன நாளும் குருசாமி தண்ணிப்பால குடுத்து ஏச்சு கிட்டு இருந்திருக்கான்.. நான் போட்ட போடுல நாளையிலிருந்து பாரு..!”
பாலை எடுத்துக் கொண்டு நேராக சமையலறைக்குள் நுழைந்தார்..
“போய் படுத்துக்கோ…ஏழு மணிக்கு எந்திரி போதும்..நானே டிபனும் பண்ணி வச்சிட மாட்டேனா…?”
சரி…ஆடற மாட்ட ஆடி கறக்கணும்..பாடற மாட்ட பாடித்தானே கறக்கணும்.!
‘நல்லதாப் போச்சு’ என்று முணுமுணுத்து கொண்டு மனோகரி மறுபடியும் விட்ட தூக்கத்தைப் பிடிக்கப் பார்த்தாள்…
எங்கே தூங்க முடிந்தது…?
திடீரென்று தண்ணி லாரி வருகிற சத்தம்… இரும்பு பட்டறையில் சம்மட்டியால் அடிப்பது போன்று ‘டங்..டங்..’ என்று மண்டையைப் பிளக்கும் சத்தம்..’உய்யென்று ஏரோப்ளேன் வேறு நடுவில் பறந்தது…’
ஆனால் எல்லாமே சமையலறையிலிருந்து தான்..
‘இனிமே எங்க தூங்கறது…?’
எழுந்து முகமெல்லாம் கழுவி சமையலறைக்குள் நுழைந்தாள்..
ஒரு யுத்தபூமி போல காட்சியளித்தது.நடுவில் ஒரு போர் வீரனைப் போல தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார் சுகவனம்…
“மனோ..வா!வா..! இந்தா முதல்ல இந்த காப்பியைக் குடி…!”
நானாவித வாசனைகள்…
பால் தீய்ந்த வாசனை , வெங்காய வாசனை…முந்திரிப் பருப்பு வறுத்த வாசனை , கேஸ் வாசனை.. இன்னும் சொல்லத் தெரியவில்லை…!
“ஏங்க..அடுப்பில ஒண்ணும் காணம்.. கேஸ் பாட்டுக்கு எரிஞ்சிட்டிருக்கு…!”
“இப்பத்தான் பாத்திரத்தை எறக்கி வச்சேன்.அடுப்ப அணைக்க மறந்திட்டேன் போல…”
ம்ம்ம்… அவர் முன்ன சொன்ன வார்த்தை இன்னும் காதுலேயே இருந்தது மனோகரிக்கு…
‘எத்தன வாட்டி சொல்றது..? அடுப்ப அனாவசியமா எரிய விடாதன்னு.. எவன் கட்டுவான் பில்ல…?”
திருப்பி கேட்க எத்தனை நேரம் ஆகும்….?
காப்பி ஒரு புதுவிதமான நிறத்தோடு … கொஞ்சம் ஆடை அணிந்துகொண்டு…..!
“என்ன மனோ…..? .ஃபில்ட்டர ஒழுங்கா தேய்க்கல போல..டிக்காஷன் எறங்குவேனாங்குது…?
ஃபில்ட்டர தெறந்து பார்த்தவளுக்கு ஒரே ஷாக்..
ஒரு வாரத்துக்கு உண்டான பொடியை சிரமப்பட்டு அடச்சு வச்சா எப்பிடி எறங்கும்..?
காப்பிப்பொடி டப்பாவ திறந்து பார்த்தாள்.. நாளைக்கு பொடி வாங்கணும் போலியே…?
காப்பியை மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரே மடக்கில் குடித்து டம்ளரை தேய்க்கப் போட்டாள்..
“மீதிப் பால்ல கொஞ்சம் சாயங்காலம் டீக்கு வச்சிட்டு உறை ஊத்தணும்..”
“மீதிப்பாலா….?”
பால் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் பால் ஒட்டிக் கொண்டிருந்தது…
“எல்லா பாலையுமா காப்பி போட்டீங்க….?”
இப்போது சுகவனத்தின் சுருதி கொஞ்சம் இறங்கியிருந்தது…
“அதில்ல மனோ…பால அடுப்பில வச்ச உடனேதான் பிச்சுமணிக்கு ஃபோன் பண்ண தோணனுமா…?
பேச்சு மும்மரத்தில பால் மறந்தே போச்சு…நிறைய தண்ணி கலந்திருப்பான்னு நெனைக்கிறேன்..இல்லாட்டி இவ்வளவு சீக்கிரம் பொங்குமா..?
கல்யாணம் ஆன புதிதில் ஒரே ஒரு தடவை பால் பொங்கினதுக்கு மனோவைக் காய்ச்சி எடுத்தது அவளுக்கு மறக்குமா..?
சமையலறை திண்டு முழுதும் ஒரே பரத்தல்.. வெங்காயம்.. பச்சைமிளகாய், இஞ்சித் துண்டுகள்… முந்திரிப் பருப்பு டப்பா…..நெய்….!
“டிபன் கூட ரெடி….பால் கஞ்சி..நல்லா முந்திரிபருப்பு வறுத்து போட்டிருக்கேன்….”
“கஞ்சியா…? 104 டிகிரி காய்ச்சல் வந்தாலும் கஞ்சி குடிக்கமாட்டாரே..!’
“ஆமா.. பால் கஞ்சிக்கு இஞ்சி , பச்சமிளகா போடுவாங்களா என்ன. ….?
“அதுவந்து..மனோ…”
நாய்க்குட்டி மாதிரி குழைந்து நெளிந்து…
“மனோ…ரவா உப்புமா கிளறலாம்னு எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு ரவையைத் தேடினேன்..கிடைக்கலன்னதும் பொங்கல் பண்ணிடலாம்னு….!
அப்பறம் என்ன நடந்திருக்குமென்று மனோகரிக்கு புரிந்து விட்டது..
பொங்கல் தான் கஞ்சிவடிவில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறதா…?
காலையில் நாலு மணிக்கு எழுந்திருந்தவருக்கு தூக்கம் வந்திருக்க வேண்டும்.. கஞ்சியைக் குடித்தவர் பேசாமல் போய் படுத்து விட்டார்…
மதியம் உணவு பிரச்சினை இல்லாமல் முடிந்தது… சாப்பாடு தேவார்மிதமாய் இனித்தது…
மூணுமணிக்கே பசி வந்துவிட்டது சுகவனத்துக்கு..
“மனோ..டீ ரெடியா..?”
“நானே உங்கள எழுப்பணும்னு நெனச்சேன்..பால் இல்லையே.. அப்படியே காப்பி பொடியும் வாங்கிட்டு வந்திடுங்க..
பால் கூட அர லிட்டர் வாங்கிடுங்க.. குருசாமி வரது சந்தேகம்தான்..”
முனகிக் கொண்டே கடைக்கு கிளம்பினார் சுகவனம்….
இரவு உணவுக்கு சமையலறையில் நுழைய தைரியமில்லை..
மனோ சின்னதாய் ஒரு தோட்டம் போட்டிருந்தாள்..
சரி தண்ணி விடலாமென்று தோட்டத்துக்கு போனார்..
முதல் முறையாக எல்லா செடிகளையும் பார்க்கிறார்..
செம்பருத்தி, பிச்சி, செண்பகப்பூ, கத்திரிக்காய், வெண்ணெய், மிளகாய்…! அசந்தே போனார்..
‘பரவாயில்லையே..மனோ அசத்தியிருக்கிறாளே…!’
“மத்தியானமெல்லாம் என்னதான் பண்ற?”
எப்போதோ கேட்ட கேள்விக்கு இப்போ விடை கிடைத்த மாதிரி இருந்தது….ஏதேதோ யோசனைகள்….!
திடீரென்று ‘சார்.. சார்..நிறுத்துங்க ..’ என்ற குரல்.
‘நம் வீட்டு தோட்டத்துக்கு தண்ணி விடுவதை தைரியமாகத் தடுப்பது யார்?’
குரல் பக்கத்து காம்பவுண்டிலிருந்துதான் வந்தது..
“சார். உங்க செடியோடு என்னையும் சேத்து குளிப்பாட்டிட்டீங்களே…”
சுகவனம் ட்யூபை உயர்த்தி பிடித்து விட்டார் போலிருக்கிறது..
ஐந்து நிமிடத்தில் அவரே நேரில் வந்தார்..
தொப்பமாய் நனைத்திருந்தார்..
“சார்..எத்தன வருஷமா உங்க வீட்டு அம்மா தண்ணி விடுறாங்க.. ஒரு துளி பட்டிருக்குமா…? ஆமா.. நீங்க வீட்ல எப்படி…?”
“போனவாரம் தான் ரிடையர் ஆனேன்…சாரி சார்…”
சத்தம் கேட்டு மனோவே வாசலுக்கு வந்தாள்…
“ஐய்யய்யோ..இது என்ன கோலம்..ஒரு நிமிஷம்..! டவல்கொண்டுவரேன்…துடைச்சுக்கோங்க…”
தனக்கு இது கூட தோணவில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டார் சுகவனம்…
“ஏங்க.. நான் தண்ணி விட மாட்டேனா…?”
சுகவனத்துக்கு ஆஃபீஸ் நியாபகம் வந்து விட்டது..
போய் உட்கார்ந்ததுமே ..
“வணக்கம் சார்…!” என்று அவரின் கட்டளைக்காக காத்துக் கொண்டு நிற்கும் அட்டெண்ட் வரதனின் முகம் வந்து போனது…
பாவம்.. எத்தனை திட்டு வாங்கியிருப்பான்…? அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்க முடியுமா…?
காலையில் நாலு மணிக்கு எழுந்திருந்து வாசலில் பால்காரனுக்காக காத்திருந்ததுதான் மிச்சம்..
குருசாமி வரவேயில்லை..
முதல்நாள் மீதியிருந்த பாலில் காப்பி போட்டுக் குடித்தவர் பேசாமல் பேப்பரை எடுத்துக் கொண்டு வாசலில் உட்கார்ந்தார்..
“ஏங்க.. போய் ஒரு எட்டு பால்காரன் பாத்துட்டு வந்திருக்கிறேன்.. அவன் ரொம்ப ரோஷக்காரன்…நாளையிலிருந்து பாலுக்கு என்ன பண்றது..?”
பத்து மணிக்கு மேல் அவன் வீட்டு விலாசம் கண்டுபிடித்து போய்விட்டார்..
“சாமி.. எதுக்கு வீடு வரைக்கும் வரணும்..? மனசு விட்டுப் போச்சு சாமி…எத்தினி வருஷ பழக்கம்…?”
“குருசாமி..மன்னிச்சிடுப்பா…மேல கூட்டி வேணா தரேன்.. அம்மா கண்டிப்பா நீதான் வரணும்னு சொல்லிட்டாங்க..!”
சுகவனத்துக்கு தான்தான் பேசுகிறோமா என்று சந்தேகம் வந்து விட்டது…குரலை உயர்த்தியே பேசியவருக்கு தனது இந்த குரலே அந்நியமாக ஒலித்தது…
“சார்.. பணத்துக்காக பால்மாற மாட்டான் இந்த குருசாமி…அம்மா மொகத்துக்காக பாக்குறேன்..! நாளையிலிருந்து ஊத்தறேன்.. போங்க…!”
பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று இதுவரை நம்பியிருந்த சுகவனம் குருசாமி முன்னால் கூனிக்குறுகி நின்றார்…
‘சரிப்ப ..வரேன்…!”
மூன்று நாளாய் சுகவனம் அறையை விட்டு வரவேயில்லை..சாப்பிட வருவதோடு சரி..
தன்னை எல்லோர் உதாசீனப்படுத்துவது போல ஒரு தோணல்…
எத்தனை பேரை அதட்டி வேலை வாங்கியிருந்தார்.. தன்னுடைய மதிப்பு யாருக்கும் தெரியவில்லையே….!
மனோகரிக்கு புரிந்து விட்டது.. தான் பேசினால் எரிந்து எரிந்து விழுவார்…கோவம் இன்னும் அதிகமாகும்..
அவரது நெருங்கிய நண்பர் ரகுபதி நினைவுக்கு வந்தார்…
ஒருநாள் பகல் மூன்று மணி இருக்கும்.. வாசலில் காலிங் பெல்..
“ஏங்க… உங்க நண்பர் ரகுபதி வந்திருக்கார்…!”
“சுகு… என்னப்பா.. ஆபீசுக்கு ஃபோன் பண்ணினேன். நீ ரிடையராயிட்டயாமே… எப்படி இருக்கு புது அனுபவம்…?”
“ரகு…எனக்கு மனசே சரியில்லப்பா…ஏதோ வெட்டியா உக்காந்திருக்காமாதிரி….ஒரு பய மதிக்க மாட்டேங்கறானே…ஆமா..நீ எப்படி இருக்க..? ரிட்டையராகி மூணு வருஷம் இருக்குமா..?”
“சுகு….ஆரம்பத்தில நானும் உன்ன மாதிரிதான் ஃபீல் பண்ணிட்டிருப்பேன்…ஆபீசும் வீடும் வேற வேற உலகம்.. அங்க அறிவு பேசும்…அதிகாரம் பேசும்.. பணம் பேசும்…! ஆனா இங்க அன்பு மட்டும்தான் பேசும்…!”
“ரகு.. ஒரு பால்காரன் கூட என்ன மதிக்க மாட்டேங்கிறானே…!”
“பால்காரன் கூட ன்னு சொல்றியே அதுவே தப்பு..அவன் உனக்கு கீழ வேல பாக்கறவன் இல்ல…அவன் ஒரு தனி மனிதன்…அவனுக்கு அவன்தான் முதலாளி…கடைசில நீதானே அவன் வீட்டு முன்னால் போய் நின்ன! இதே ஆபீசா இருந்தா ‘சீட்டை கிழிச்சிடுவேன்னு ‘பயமுறுத்தலாம்…! நீ உன் அதிகாரத்தையெல்லாம் மூட்ட கட்டி வை…இங்க எல்லாருமே சரிசமம்தான்..மரியாதைய கேட்டு வாங்க முடியாது..அதுவே கிடைக்கும்போது தன்னால கிடைக்கும்…!”
“ரகு… உங்கிட்ட பேசினது ரொம்பவே ஆறுதலா இருந்தது.. அடிக்கடி வா…”
“மனோ…ரகுவுக்கும் எனக்கும் ரெண்டு காப்பி கொண்டு வரியாம்மா…?”
மனோவுக்கு கணவரின் குரல் புதுமாதிரியாக ஒலித்தது…