இதழ்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2025
பார்வையிட்டோர்: 256 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வசுதேவ தவ பாலனே 
கம்பளி அடைப்புக்குள் சுகமான இருளுள் 
கதகத 
இமையடியில் ஆழ்ந்துபோன தன் இழப்புள் 
மினு மினு 
உருகும் வெள்ளிப்பாகின் இழையென 
நுழைந்து 

அசுர குல காலனே 
அம்மாவின் குரல் நினைவைச் சுற்றிப் பற்றிக் கவ்வி இழுக்கிறது. 

தேவகி மைந்தனே யசோதையின் செல்வனே
பிருந்தாவன லோலனே 
எழுந்திரும் 

அம்மாவின் குரலில் எப்பவுமே ஒரு இம்மி இனிப்பு கூடுத லாகிவிட்ட தெவிட்டல் உண்டு என்று எனக்கு அப்பவே எண்ணம். அந்நாளில் கலியாணம் கார்த்தி கொலு போன்ற விசேஷங்களில் அம்மாவும் அத்தையும் சற்றுப் பிரசித்தமான பாட்டு ஜோடி. திண்ணையிலிருந்து பெரியவர்கள், “தமிழ்ப் பண்டிதராத்துப் பெண்ணையும் நாட்டுப் பெண்ணையும் பாடச் சொல்லுங்களேண்டி என்று கேட்டதும், 

கௌரி ராஜராஜேஸ்வரி சிவசங்கரி கருணாகரி 
விரி கடைக்கண், வைத்தென்னை ஆளம்மா 

அம்மாவின் குரல் நயத்துடன் அத்தையின் வெண்கல சாரீரம் சேர்கையில் ஒரு நாதச் சுழிப்பு நேர்ந்து, செவி வழி உடல் பூரா நிறைவது போன்ற ஒரு அனுபவம் சிறிசுகளுக்கே ஏற்படுமென்றால் விஷயம் தெரிந்த பெரியவர்களைப் பற்றிக் கேட்பானேன்? 

“எப்படிப் பாடறா! இத்தனைக்கும் சிக்ஷையில்லை, ராகம் தாளம்னு தனி ஞானம் இல்லை -” 

“அப்படியெல்லாம் அவசியமா என்ன? அதுவே ஸான் னித்யம் உள்ள குடும்பம் அல்லவா! அம்பாள் கடாக்ஷம் இருக்கறப்போ வித்தைக்கென்ன குறைச்சல்?” 

“லக்ஷ்மிகடாக்ஷம் வேண்டாமா? “

“அங்கேதான் விதி. கர்மா ஊழ் – வேறு பாஷை முட்டுக் கொடுக்க வந்துடறது பாஷையிருக்கிற வரை சமாதானங்களுக்கு என்ன குறைச்சலப்பா?” 

“ராமாமிருதம், எழுந்திரு, போய்ப் பால் வாங்கிண்டு வா!” 

முக்கல் முனகல், கம்பளியின் கதகதப்பிலிருந்து மன மில்லாமல் உதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து உடலை முறித்து… 

என்ன பண்ணினாலும் நடக்காது. இன்னிலிருந்து, பதினைஞ்சு நாளைக்கு என் முறை. மிச்சப்பாதி என் தம்பி. ராஸ்கல், துணி போனது தெரியாமல் எப்படித் தூங்கறான் பாரு! வெடுக்குனு தொடையில் – இல்லை. கூடாது. பாட்டு வெச்சான்னா அண்ணாவுக்குத் தூக்கம் கலைஞ்சு – அவ்வளவு தான் என் தோலை உரிச்சுடுவார். 

புரர் – பல், கிலுகிலுப்பை அடிக்கிறது. ஆனால் அம்மா குளிச்சாச்சு, பச்சைத் தண்ணிலே. சுறுசுறுப்பா காரியத்தில் வளைய வரா காரியம் இல்லாட்டாக்கூட, அம்மா காரியத்தை உண்டு பண்ணிப்பா. 

வாசற்கொறடில் பெரிய கோலம். உள்ளிலும் வெளி யிலும் காவியில் கரைகட்டி, கோலத்தின் நடுவே சாணியில் பூசணிப் பூவை நட்டு – ஒருவேளை அம்மா வெண் பொங்கல் பண்ணப்போறாளா? அதுதான் இன்னிக்கு ன்னும் சுருக்கக் காரியம் பாக்கறாளா? 

படிக்கட்டிலிருந்து இறங்கினதும் புல் நுனிகளின்மேல் பனித்துளிகளின் ஈரம் சில்னு ல் னு-ஈரம் மண்டையைப் பிளக்கிறது. இப்படியே ஒரு மைல் நடந்தாகணும். 

பட்டணத்திலிருந்து புதிதாகக் கிராமத்துக்கு வந்திருக் கும் எங்களுக்குத்தான் இன்னும் விடியலையே ஒழிய, தெரு வில் நடமாட்டம் நிறையவே இருக்கு. ஆண், பெண் அத்தனைபேரும் இந்நேரத்திலிருந்து ராத்திரி வரை ஏதேனும் வேலையா இருக்கா. இவாளுக்கு ஓய்ச்சல் ஒழிவே கிடையாதா? அதெப்படி முடியும்? அதுவே எனக்கு ஆச்சர்யமாயிருக்கு. 

இது ஒரு நெசவாளர் கிராமம். நெசவுடன் விவசாயம் இரண்டுக்கும் இடையில் கொஞ்ச நஞ்சப் போதுக்கு கோர்ட்டுக்கு அலைய வீட்டுக்கு வீடு ஒரு கேஸ் கட்டு. கேஸ் இருந்தால்தான் அந்தஸ்து. 

தெருவில் பாவு தோயப்போறது. ஏற்பாடெல்லாம் நடந்திண்டிருக்கு. பூமியில் கடப்பாறை அடிச்சு இறக்கும் சத்தம் கேட்கிறது. 

பெரிய கற்கண்டுக் கட்டியாட்டம் வள்ளி, நான் போகும் வழியில் என்னை முன்னிட்டுண்டு ஆகாசத்தில் தொங்கறது. வெள்ளின்னு நக்ஷத்ரம் உண்டுன்னு இங்கு வந்துதான் தெரியும். சூரியனின் புறப்பாடு வர்ணங்கள் தோய ஆரம்பிச்சதுமே, இது மங்கி இதன் பெருமை மங்கி இதுவும் அந்தப் பெரிய வெளிச்சத்தில் மறைஞ்சுடும் என் கிறதைப் போகும் வழிக்குப் பொழுது போக்கா நெனச்சுண்டு போனாலே அதுவே ஒரு ருசியான துக்கமாயிருக்கு. 

தினம் அலைக்கழிக்கிற இடையன். இன்னிக்கு எனக்கு முன்னாலேயே வந்து நிக்கறான். இல்லே உக்காந்துண்டிருக்கான். கன்னுக்குட்டியை, மாட்டின் முன்னங்காலில் அணை கயிறால் பிணைச்சிட்டு மாட்டின் வயத்தில் தலையை முட்டிண்டு, கறக்கத்தயாரா – குவளையைக்கூட அவனிடம் கொடுக்கப்போயிட்டா, கரெக்டா நான் போய்ச் சேர்ந்தேன். ஓடிப்போய்ப் பிடுங்கிக் கவிழ்த்தா – கொட்டறது ஒரு ஆழாக்குத் தண்ணி. 

‘ஈ தேம் பாடே!’ தெலுங்கில் என்னவோ கத்தறா.

‘ஆதி, கிழவி, பிசாசு!’ நானும் கத்தறேன். எப்படாப்பா யார் ஏமாறுவான்னு காத்திண்டிருக்கா பாவி! 

ஆனால் எனக்கு உள்ளூர அவள் திருட்டைக் கண்டு பிடிச்சுட்ட பெருமை பொங்கறது. இவள் இன்னும் ஏதேனும் ராக்ஷஸ மாயம் பண்ணுவா. ராமலக்ஷ்மணா யாகம் காத்து மாதிரி (தாத்தா கதை சொல்லியிருக்கா) மாட்டைச் சுத்திச் சுத்தி வரேன். அவள் தன் பாஷையில் கத்திண்டேயிருக்கா, கத்தட்டும். 

‘சக்றிங்! கிளிங்! க்றீங்ங்!” ஆரம்பத்தில் இனிய சத்தத் துடன் குவளையில் இறங்கிய பீறல்கள் குவளையில் பால் உயர உயர, மெத்து மெத்து என்பதை நின்று சுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டிருக்கையில், என் கண் திடீரென ஈரத்தில் வெதவெதக்கிறது. கண்களைக் கசக்கிக்கொள் கிறேன். மொட்டை சிரிக்கிறான். மொட்டைக்குத் தலை நிறைய மயிர்; ஆனால் மொட்டைன்னு பேர் ஏன் தெரியல்லே. 

இம்மாதிரி மாறி மாறி, இரு கண்களிலும் மாட்டின் மடியிலிருந்து நேரே எத்தனை பால் பீச்சல் வாங்கி அதனாலேயே விஷயங்களை அனுதாபத்துடன் பார்க்க ஆசிர்வாதம், கண்கள் பெற்றிருக்குமோ? 

அசட்டு எண்ணம், ஆனால் எவ்வளவு பிடித்தமான எண்ணம்! ஒருவேளை, எண்ணத்தில் அசடு ல்லையோ? 

காலை ஆட்டிண்டு குறடுத் திண்ணையில் உட்கார்ந் திருக்கேன். சூரியன் உச்சி மண்டைக்கு நிக்கறான். ஆனால் அந்த வயசில் எனக்கு உச்சி வெய்யிலும் உச்சி நிலாவும் ஒண்ணுதான்; 

முருகன் காலடியில் ஒரு கல்லைத் தெத்திண்டே வரான்.

“ஏன் வெய்யில்லே குந்திட்டிருக்கே, மூஞ்சி குரங் காட்டம்!”

“ஷட் அப் கரிக்கட்டை உன்னால் ஒரு நாளும் என் மாதிரி சிவப்பு ஆக முடியாது. பொறாமை!” 

“மெய்தான். நான் அதுக்கு என்ன செய்ய முடியும்? கடவுள் எப்பிடிப் படைச்சானோ அப்பிடி. எனக்குச் செழுப் பாறு என்ன ஆவணும்? எனக்கு உன்மேல் பொறாமை யில்லே. எள்ளும் பச்சரிசியும் கலந்த மாதிரி நாம எப்பவும் சினேகமாயிருந்தா சரி.” 

என் கோவம் பறந்தோடிப் போச்சு. என்னால் வெகு நேரம் என் சிநேகிதனோடு கோவமாயிருக்க முடியாது. 

ஆனால் முருகன் கரிதான் அட்டக்கரி. கட்டுக்குடுமி. கழுத்தில் ஒட்டக்கட்டின சிவப்புநூலில் நெஞ்சங்குழியில் தங்கும் ருத்ராக்ஷக் கொட்டை. இடுப்புத்துண்டு எப்பவும் அவன் கழுத்தைச் சுற்றித்தான் இருக்கும். கோவணத்தில் சுற்றுவான் என் வீட்டை ஒட்டிய இந்த அஞ்சு வீட்டில் பெரியவர்களே அப்படித்தான். கழுத்தைச் சுற்றி அல்லது தலையில் முண்டாசாய்ச் சுற்றியிருக்கும். இவர்கள் குயவர்கள். மண் மிதித்து, மண்பாண்டம் செய்து. பாண்டத்தைத் தட்டி மண்ணிலேயே உழன்று, தவிர எப்பவுமே உழவு 

“ராமு” 

“…”

“ஏ ராமு!” 

“சொல்லேன்.” 

“இப்டி போவோமா?” 

“எங்கே? 

“இப்டீ-“‘ 

“சரி, சொல்லிட்டு வந்துடறேன்’ எழறேன் கையமர்த்துகிறான். 

“சொன்னால் போகவிடமாட்டாங்க. அவங்க தேடற முன்னாடி வந்துடுவோம். 

“சரி” இழுக்கறேன். சரியாயில்லை. சரியாவுமிருக்கு.  

“நம்மை நம்ம இஷ்டத்துக்கு விடமாட்டாங்க. அதனால் தான் அவங்க பெரியவங்க. 

உள்ளே போய்ப் பார்க்கறேன். எல்வாரும் தூங்கறா. அண்ணாதான் எப்பவோ பள்ளிக்கூடம் போயாச்சு.அண்ணா ஹெட்மாஸ்டர். 

முனை திரும்பியதுமே, கால்கள் தாமே வேகமெடுத்து விட்டன. ஆனால் முருகன் ஸ்பீடு என்னால் முடியாது. அதென்ன சுருள் பிரிஞ்ச மின்னல் மாதிரி ஒரே சீறல். 

“பரவாயில்லே. பட்டணத்துப் பையன் பாப்பாரப் புள்ளேக்கு நல்லாத்தான் ஓடறே!” 

வாய்க்கால் தாண்டினதும் எந்த அடைப்புமில்லாமல் ஒரே வெட்டவெளி. அது எங்களை விழுங்கி,நானே எனக் கில்லாமல், இத்தோடு இழைஞ்சு போயிட்டமாதிரி – ஒரு விதத்தில் இது பயமாயிருக்கு. நல்லாவுமிருக்கு. 

தரையின் மேடு தாழ்வு, வளைவு நெளிவுகள் கிரஹண சமுத்ரம் மாதிரி (குளிச்சிருக்கேனே!) அலைபாய்றது. எட்டட் ரொம்ம்ம்ப எட்டட பச்சை விளிம்பு. அந்த விளிம்புக்குக் கரை கட்டி ஒரு மேடு வளைஞ்சு வளைஞ்சு போக, அதன்மேலே பனைமரங்கள் சோல்ஜர் பாரேட் மாதிரி காவல் நிக்றதுகள். வெய்யில் நக நக – 

எங்கள் ஓட்டம், எங்கள் வேகம்,எங்கள் மூச்சு ஏதோ ஒரு ஒழுங்கில் விழுந்துபோச்சு. இறைப்பு இல்லை. ஒரே ஸ்டெடி. 

“ராமு,அதோ பாத்தியா பச்சையம்மன் கோயில்!”

ஆமா, என் பார்வையின் மிதப்பாட்டத்தில் அதோ ரெண்டு பெரிய சிலைகள் பூமியின் அலைகளிலிருந்து எழறது. நெருங்க அதுகள் ஒரு மதில்மேல் உட்கார்ந்திருக்கு. அது களுக்கெதிரில் ஒரு கோயில். அந்த ஸைஸுக்கு ஒப்பிட் டால், கோவில் நிறுத்திவெச்ச நெருப்புப் பெட்டி. 

நெருங்க நெருங்க, ஒன்று ஆண் மற்றது பெண். ஆளுக்கு நெட்டுக்குத்தலா கையில் ஒரு கத்தியை ஏந்திண்டு ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒரு காலை மடிச்சிண்டு உட்கார்ந்திருக்கு. 

“கோவிலுக்குள்ளே ஆத்தாள் இருக்கா” ஓடிக் கொண்டே ஒரு கையால் தாடைகளில் மாறி மாறிப் போட்டுக்கொள்கிறான். நானும் அவன் செய்ததைப் பார்த்து அவன் போலவே. 

“இவங்க ரெண்டுபேரும் ஆத்தாளுக்குக் காத்தான்கள் 

சிலைகளை அண்ணாந்தபடி எதிரே நிக்கறோம் வானம் ஒரே பூரித்த நீலம். வெய்யில் பிளக்கிறது. காற்றுக்கூட அசையல்லே. ‘கப்சிப்கமா பயமாயிருக்கு. 

தோளோடு தோள் இடிக்கறான்,திரும்பறேன். 

“ராமு” – கிசு கிசு கண்கள் கூத்தாடுகின்றன. 

“எம்மாம் பெரிசு பாத்தியா?” கையை வேறு அகல விரிச்சுக் காட்டறான். ஒண்ணொண்ணும் ஒரு குடம் கொள்ளும். இம்மா பால் நம்ம உண்ணால், என்னாத்துக் குடா ஆவறது?” 

அவனிடமிருந்து புறப்பட்ட சிரிப்புச் சரம் வெட்டவெளியில் தனித் தனியாய்த் தெறிக்கிறது. என்னையும் தொத்திண்ட சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கிறேன். 

“வாவா கெட்ட வார்த்தையா பேசறே? ஆத்துலே சொல்றேன். அப்புறம் உன்னோட சேரவே விடமாட்டா.” 

“என்னடா கெட்ட வார்த்தை கண்டுட்டே?” பாசாங்கில் கையை ஓங்கிக்கொண்டு நெருங்கறான். அவங்க அவங்க ஆத்தாகிட்ட அவங்க அவங்க உண்ணலியோ? நீ உன் அம்மாகிட்டே உண்ணாமதான் இம்மா ஆளாயிட்டியா? என் அம்மாகிட்ட நான் எட்டு வயசு வரைக்கும் உண்டேன், தெரியுமா?” 

”ஊங்-?” ஆச்சரியமாயிருந்தது. 

“ஆமா விளையாடிக்கிட்டே யிருப்பேன். நெனப் பெடுத்துக்கும். அம்மாகிட்டே ஓடியாருவேன். அம்மா வேலையாயிருப்பா. எனக்கு அக்கறையில்லே. சரி விடு – சட்டென்று மாறினான். ஆமா, இந்த வேளையிலே நாம் இங்கே வந்திருக்கக்கூடாது. ஒரு மாதிரியா சுற்று முற்றும் பிறகு என்னையும் பார்த்தான். 

“ஏன்?” நானும் சுற்றுமுற்றும் பார்த்தேன். 

“இப்போ இவங்களுக்குச் சாப்பாட்டு வேளை” 

“எவங்களுக்கு?” 

சிலைகளைச் சுட்டிக் காண்பித்தான். 

புரியல்லே. விழித்தேன். 

“காத்தான்கள் துன்ன வேணாமா? இவங்களுக்குப் பசியாதா? ஒரு மாதத்துக்கு முன்னாலே ஒரு நாள் மாலை, கோயிலுக்கு விளக்கு வெக்க பூசாரி வந்தால் வாசல்லே. காலையும்கையும் பரப்பிட்டு, ரத்தத்தைக் கக்கிட்டு ஒரு ஆள் செத்துக்கிடக்கான். இதுங்க அடிச்சுப் போட்டிருக்குதுங்க. 

“ஐயையோ எனக்குப் பயமாயிருக்குது. நான் மாட்டேம்பா” 

பிச்சுண்டுட்டான். திகிலில் உளறியபடி அவன் பின்னால் ஓடினேன்.ஆனால் அவனைப் பிடிக்க முடியுமா? கால் தடுக்கி விழுந்தேன். சத்தம் கேட்டு நின்று திரும்பி வந்தான், சிரித்த படி தூக்கி விட்டான். 

“என்ன பொட்டையாட்டம் அளுவறியே, சும்மா டமாஸ் பண்ணினா!” 

“என்னை ஆத்தில் கொண்டுபோய் விட்டுடு. இனிமே ஏ – ஏ – உன்னோடு வரவே – ஏ – ஏமாட்டேன் ஊ” 

“உஷ் ராமு, கோவம் பண்ணாதே- “கன்னங்களைத் துடைத்தான். “அளுவாதே-சந்தோஷமாயிருக்கத்தானே வந்திருக்கோம். இ இப்போ உனக்கு ஒண்ணு காமிக்கப் போறேன், ஒரு அதிசயம்-“

வயல்களின் நடுவே ஒரு திட்டில் நாங்கள் இப்போ நின்னுண்டிருந்தோம். புல் திட்டில் ஒரு மரம். மரத்தில் ஒரு பொந்து. 

“இதோபார் அதிசயம் – சூ மந்தரக்காளி!” பொந்துள் குனிந்து ஒரு மாதிரியா கொக்கரித்தான். 

என்ன ஆச்சரியம்! பொந்திலிருந்து ஏதோ ஒண்ணு வெளிப்பட்டு அவன்மேல் தாவி ஓடி, விரித்த அவன் கைமேல் இறங்கித் தங்கினது. அணில். அவன் அதன் முதுகைத்தடவத் தடவ, அந்த அன்பில், செல்லத்தில் சுகத்தில் அது பெரி தாவதுபோல் எனக்குத் தோணறது. 

“”இப்போ என்ன சொல்றே?” என்றான் பெருமையா. “டேய், டேய் நான் தொடறேண்டா!” 

“உன்னைத் தொடவிடாது. அத்தோடு முன்னாலே நன்னா பழகியிருக்கணும். இது எப்படிக் 

கிடைச்சுது தெரியுமா? இதைப் பாம்பு வவுத்திலேருந்து கிழிச்சு எடுத்தேன். இதை முழுங்கறப்போ நான் பார்த்துட்டேன். உள்ளே உயிரோடு இருந்தது. 

இவன் எப்போ நிஜம் சொல்றான்; எப்போ பொய் சொல்றான் தெரியாது. ஆனால் இவன் சொல்றதை நான் இப்போ நம்பியாகணும். ஏன்னா இது இவன் இடம், இவன் வேளை. 

“டேய் டேய் ஒரே ஒருதடவை! ஆசையாயிருக்குடா முருகா முருகா!” குதித்தேன். 

“சரி ஒழி.வாங்காதே. என் கையிலேயே இருக்கட்டும் உஜாராயிரு-” 

முதுகைத் தொட்டேன். பட்டாப் பட்டாவால், ப்ரஷ்மாதிரி- 

அவ்வளவுதான். நெருப்பு வெச்ச மாதிரி சுறீல்’ விரல் நுனியில் ஒரு சின்ன சிவப்புப் பொட்டு. உடனே பூவா பூக்க ஆரம்பிச்சிடுத்து. 

‘”சொன்னாக் கேட்டியா? வாயிலே வெச்சு சப்பு!சப்பு!” சப்பினேன் உப்புக் கரிக்கறது. 

“இதோ பார் என்னைப்பார். இதன் வாயிலேயே விரலை வெக்கறேன் பார்! 

உடனேயே கூச்சல் போட்டு குதித்தான். வாயுள் விரலை வைத்துக்கொண்டான். 

அது அவன் கையிலிருந்து இறங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது.

ஐயோ சிரிப்பே! திணறி, புரைக்கேறி- 

நன்னா வேணும் என்னை என்ன பாடு படுத்தினான்? 

அண்ணா பள்ளிக்கூடத்திலிருந்து- 

வரக்கூட நேரமாயிடுத்து. அவாள்ளாம் விளையாடப் போயிட்டா. ஆனால் அம்மா என்னை மட்டும் இழுத்துப் பிடிச்சி வெச்சிண்டிருக்கா. மயிரைச் சிக்கெடுக்கறா; பிராணன் போறது. 

‘இது என்னடா, குதிரைக் காசாரியாட்டம் நாளைக்கே ஐயாக்கண்ணை வரச்சொல்லி கரைச்சுக் கொட்டச் சொல்கிறன். வைதீஸ்வரா, தையநாயகித்தாயே. மன்னிச்சுக் கோங்கோ. இப்படியே விட்டால் பையன் வீட்டுள்ளே பேனைக் கொண்டுவந்து விட்டுடுவான்போல இருக்கு.” 

எனக்குத் திடீர்னு ஞாபகம் வந்தது. திரும்ப முயன் றேன், முடியல்லே. 

ஏம்மா எனக்கு அம்பிப் பாப்பா பிறக்கப்போறா னாமே,நிஜமா? 

ஒரு மௌனம்.என் பின்னாலிருந்து அம்மா குரல்; 

யார் சொன்னது?” 

‘முருகன் அம்மா சொன்னாள் என் பம்ரத்தைப் பிளந்துட்டான்னு சிவாவை அடுச்சேன். முருகன் அம்மா, பெரியவனாயிட்டே,தம்பியை எல்லாம் அடிக்கக்கூடாது. உனக்கு இன்னொரு தம்பிவேறே பொறக்கப் போறான். நீ அடிக்கலாமா” ன்னாள். நிஜமாவாம்மா?’ 

‘உனக்கு அம்பிப் பாப்பா வேணுமா, அங்கச்சி வேணுமா?” 

இதென்ன புதுக் கேள்வி கேட்டு அம்மா மடக்கிட்டா? யோசனை பண்றேன். இப்போ ரெண்டு தம்பி, ஒரு தங்கச்சி. இருக்கா. இன்னும் ஒரு தங்கச்சி – அப்போ கணக்கு சாரியாடுமோன்னோ?” 

“தங்கச்சி பாப்பா.” 

“ராமா ராமா ஒண்ணு இருக்கறது போதாதா. தாமிருக் கிற நிலைக்கு உன்னைப் போய்க் கேட்டேனே, அஸ்று ப்ராம்மணா!” 

திடீர்னு எனக்கு இன்னொரு சந்தேகம் வந்துடுத்து.

“இது அண்ணாவுக்குத் தெரியுமா? – என்னம்மா சிரிக்கறே?” 

“கேட்டாலும் கேட்டியே ஒரு கேள்வி!” மறுபடியும் சிரிக்கிறாள்.”சரி விளையாடப்போ!’ 

முதுகில் என்னைச் செல்லமாத்தட்டி செல்லமாத்தள்ளி விடறாள். நின்னு திரும்பிப் பார்த்தால், அம்மா திடீர்னு அப்படி ஒரு அழகாயிருக்கா. எப்டின்னு சொல்லத் தெரியல்லே. மூஞ்சி ஒரே ரோஸ்- சிரிச்சு வேறே யிருக்கா. 

“என்ன பாப்பான்னு சொல்லல்லியே!” 

“அதைப்பத்தி இப்போ என்ன? அது அவள் இஷ்டம். இல்லை அவளுக்குக்கூடத் தெரியாது.” 

“யார் அந்த அவள்?” 

அம்மா பதில் சொல்லல்லே. உள்ளே போயிட்டா.

வாசல் திண்ணையில் வெறிச்சோன்னு நிக்கறேன்.. கோவமா வரது “பதில் சொல்றியா இல்லையா?’ 

நிறுத்தி வெச்சு நம்மை ஆயிரம் கேள்வி கேப்பா அடிப்பா.ஆனால் நாம் ஒரு கேள்வி கேட்டால் ஹும் பெரியவாளே இப்படித்தான் 

ராச்சாப்பாடு முடிஞ்சு எல்லாரும் வாசல் திண்ணையில் உக்காந்திருக்கோம். இன்னிக்குள்ளேயே, ஏன் என்னிக்குமே எனக்குப் பிடிச்ச நேரம் இதுதான். வேலை யெல்லாம் முடிஞ்சு எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பேசிண்டி ருக்கிற நேரம் இதுதான். அண்ணாகிட்டே ஒண்டிக்கிறேன். என் பக்கத்திலே அம்மா. சின்னவள் அவள் மடியிலே தலை வெச்சு எப்பவோ தூங்கியாச்சு. பெரியவன் உக்காந்துண்டு சாமியாடறான். அவனையிழுத்து அம்மா மடியில் தலையை வெச்சுக்கறா. தங்கச்சி தனியா துண்டு விரிச்சு சத்தே எட்டே படுத்திருக்கா. தூங்கிட்டாளா இல்லியா தெரியாது. 

இப்போது நான் அப்பா. அம்மா மட்டும்தான். கோவில்லே ஸோமாஸ்கந்தர் மாதிரி. தாத்தா காண்பிச் சிருக்கா. எனக்கு எதுவும் மறக்காது.நான் தூக்கமும் வரமாட்டேன். இந்த நேரத்தை விடுவேனா? 

வீட்டுக்கெதிரே ஒரு மரம். அதுலே, மானத்துலேருந்து நக்ஷத்ரங்கள் உதிர்ந்தமாதிரி மின்மினிப் பூச்சிகள் அடை அடையா அப்பிண்டிருக்கும். மானத்துலே அப்படி வாரி யிரைச்சுக்கிடக்கு. இதெல்லாம் பட்டணத்தில் கிடைக்குமா? தலையை நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவே இங்கே வந்து தானே தெரிஞ்சுண்டோம்! 

நாளைக்கு அமாசை, ஏன்னா அம்மா இன்னிக்கு இட்டிலிக்கு அரைச்சா. 

“ஏண்ணா, நமக்கு ஒரு வருஷம் தேவாளுக்கு ஒரு நாளாமே!” 

“தாத்தா சொன்னா, இல்லியா?” 

“ஆமாம். அப்போ நாம் இப்போ இங்கே உக்காந்துண் டிருக்கற இந்த நேரம் அவாளுக்கு ஒரு கணக்குக்குக் கூட ஆகாதில்லியா?’ 

“அதனாலே?” 

“அவாமாதிரி நமக்கே இந்த நேரம் இவ்வளவு சுருக்கக் கழிஞ்சுடுமேன்னு வருத்தமாயிருக்கு எனக்கு.” 

அண்ணா சிரித்தார். “அட நீ சொல்ல வந்ததை இப்படி ஒரு உதாரணத்தோடுதான் சொல்ல வரதாக்கும்!” 

“அம்மா! அவன் யாராத்துப் பிள்ளை? தமிழ்ப் பண்டிதர் பேரன் இல்லியா?” 

“இல்லேண்ணா, இந்த நக்ஷத்ரங்கள் என்னை இப்பிடி பேச வெக்கறது.” 

“இருக்கலாம் எப்பவோ… எங்கேயோ ஒரு ஜப்பானியம் பெண் சொல்லித்தாம் இந்த நக்ஷத்ரங்களைப்பத்தி அவளுக்குத் தோணினதை. நக்ஷத்ரங்கள் வானத்தின் சல்லடைக் கண்கள். சுவர்க்கத்தின் ஒளி அவைகளின் வீசறதுன்னு.’ 

நாக்கில் ஜலம் ஊறின மாதிரி நான் உஸ்னு உள்ளுக்கு இழுத்துண்டேன். 

“அவள் சொன்னது அழகாயிருக்கில்லே?’ 

“ஆம், அழகை இந்த வயசிலேயே ரஸிக்கத் தெரியறது ஒரு அதிர்ஷ்டம்தான்” என் தோள்மேல் அண்ணா கை போட்டுக்கொண்டார். அண்ணாகிட்ட எனக்கு ஒண்ணு ரொம்பப் புடிச்ச விஷயம் என்ன தெரியுமா? சின்னப் பையனா நடத்தமாட்டார். சரி சமமாவே பேசுவார் 

இருவரும் நக்ஷத்ரங்களைப் பார்த்தபடி சற்றுநேரம் மௌனம். 

“ஆனால் ஒண்ணு ராம்! இத்தனை நக்ஷத்ரங்கள் எண்ண முடியாமல் இரைஞ்சு கிடக்கு. ஆனால் இதில் இருபத்தேழுக்குத்தான் பேர் உண்டு. இந்த இருபத்திஏழின் ஆட்சிக்குள்ளேதான் உலகத்தின் அத்தனை மனுஷாளும். பிறக்கறா வாழறா, சாகிறாளாம்.” 

“அதெப்படி? அப்படியிருக்க முடியுமா அண்ணா?”

“என்னத்தைக் கண்டோம்? பெரியவா ரிஷிகள் காலத்தி லிருந்து சொல்றா, கேட்டுக்கறோம். “

மறுபடியும் மௌனம். எனக்கு மனசு என்னவோ அலையறது சமாதானமாகல்லே. 

“எனக்கு ஒண்ணு தோணறதுன்னேன்.” 

“எஸ்?” 

“இந்த உலகத்தின் ஒவ்வொரு உயிருக்கும். இந்த நக்ஷத்ரங்கள் ஒண்ணொண்ணு 

மேனிக்குத்தான். 

இருந்தால் என்ன, இல்லாட்டா என்ன? 

“பலே! பலே! அண்ணா என் முதுகைத் தட்டினார். இப்படியெல்லாம் சிலபேருக்குத்தான் வரும்போல் இருக்கு-பட் ஒன் திங்.” 

காத்திருக்கிறேன். 

அவர் குரல் முன்னிலும் தாழ்ந்து ஆனால் ஏதோ அழுத்தமா, ‘ஒரு நாள் எல்லாருக்குமே தெரிய, இந்தப் பேரில்லாக் கூட்டத்திலிருந்து ஒரு நக்ஷத்ரம் பிரிஞ்சு “ராம் ங்கிற பேரிலே, பேர் கொண்ட நக்ஷத்ரங்களுடன் சேர்ந்து…” 

அப்படிச் சொன்னதுமே என் மாருள் ஒரு பொறி ஏத்திண்டமாதிரி உடம்பு பரபரத்தது. நாளுக்கு நாள் இந்தப் பொறி பெரிசாகி நக்ஷத்ரமாக என்கிட்டேருந்து பறந்து மேலே போய் — ஏன் துருவன் கதையைத் தாத்தா சொல்ல லியா? என் உடலிலிருந்து இப்பவே நான் தாவிடுவேன் போல… ஒரே தவிப்பு. என் கைகளை முஷ்டியாக்கிக் கொண்டு என்னை என்னோடு இறுகப் பிடிச்சுண்டேன். 

அம்மா அதுக்குள், இதென்ன குழந்தை மனசுக்குள் வயசுக்கு மீறி என்னென்னவோ புகுத்திண்டு? எங்கேனும் மனுஷாளோடு மனுஷனா தானும் வாழ்ந்து குடித்தனம் நடத்திண்டு சௌக்யமா ஆயுசோடு இருந்தால் அதுவே போதும். ஆகாசத்திலிருந்து நக்ஷத்ரங்களைக் கயிறு திரிக்க வேண்டாம் – 

“அட ஆகாட்டாப் போறது. ஆசைகூடப் படக் கூடாதா? மந்தையோடு மந்தையாக இருக்கக்கூடாது. அம்மாப் பெண்ணே. பேரை இங்கே வந்ததுக்கு அடையாளம் பொறிச்சுட்டுப் போகணும். நான்தான் இந்த வயசிலேயே நோயாளியா எதுக்கும் உதவாமல் ஆயிட்டேன். நான் செய்ய முடியாததை என் பிள்ளை செய்யணும் – இது என் ஆசை. அவன் ஆசை எப்படியோ, போகப் போக எப்படி அமையுமோ, அவன் நக்ஷத்ரம் அவனுக்கு எப்படி வழி காட்றதோ. யார் கண்டது? இப்போ என் ஆசையைத்தான் வெளிப்படுத்திக்கிறேன்!’ 

“பனி விழுந்துட்டாப்போல இருக்கே!” அம்மா சிலிர்த்துக் கொண்டாள். “உங்களுக்கு இனிமேல் வெளியில் இருந்தால் ஆகாது. நேரமும் ஆச்சு. 

“என் நிலைமையை எனக்கு ஞாபகப்படுத்துகிறாய்.” அண்ணா பெருமூச்செறிந்து எழுந்திருக்கிறார். 

“உங்கள் நன்மைக்குத்தான் -” 

“வாஸ்தவம். நான் இருப்பதே உன் பலத்தில்தானே. நீ இல்லாவிட்டால் நான் எப்பவோ – “

அம்மா சட்டேன இடைமறித்தாள். ‘சரி, எனக்காகவும் சேர்த்துத்தான் சொல்றேன், வெச்சுக்கோங்களேன்!” 

பேச்சு புது பாஷையா மாறி எங்கேயோ போயிடுத்து இல்லே எங்கிருந்தோ வரதா? 

நக்ஷதிரங்களிலிருந்தா? 

இதான் இவாகிட்ட ட்ரபிள். 

இங்கே, ராத்திரியை அதற்குத் தனி தேவதையே இருப்ப தாகப் பேசலாம். 

வீடு என்னவோ படாசயிருக்கே ஒழிய, அதில் பாதிக்கு மேலே ஆகாசத்தைப் பார்த்த நடுமுற்றம்; சுற்றித் தாழ்வாரம். அதில் ஒரு தாழ்வாரத்தில், குட்டைச் சுவர் எழுப்பி அதுதான் சமையல் மறைவு. உருப்படியா ஒரு ரூம் தான். அதில்தான் இப்ப அடையறோம். அடைஞ்சால் என்ன? இந்தக் குமையற சுகமே தனி. கண்ணில் இந்தக் கும்மிருட்டில் ஏன்னதான் நடக்கறது பார்க்கணும்னு கண்ணைத் திறந்து வெச்சுக்கப் பார்க்கறேன் முடியல்லே. ராத்தேவன் விரல்கள் மெத்தென என் இமைகளைப் பொத்தறது. அவனுடைய கம்பளிக்குள் தான் நாங்கள் எல்லாருமே அடங்கியிருக்கோம். 

கம கம 

கத கத 

க சுக

– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *