ஆராய்ச்சி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 17,274
இரவு மணி ஒன்றா.. அல்லது ஒன்றரையா.. என்பது தெரியாத படி சுவர்க் கடிகாரம் ஒருமுறை அடித்து விட்டு “டடக் ..டடக்” என தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தது..தூக்கம் கலைந்து புரண்டு புரண்டு படுத்த போதிலும் தூக்கம் வரவில்லை ..ராஜேஷுக்கு ..
பக்கத்தில் படுத்திருந்த அவனது மனைவி விமலா முனகுவது தெரிந்ததும், “என்ன..விமலா..என்ன பண்ணுது..எதுக்கு இப்ப அழுவறே” என்ற ராஜேஷ் அவளை எழுப்பி உட்கார வைத்தான்..அவள் விசும்பலில் கரைந்தவன், அவளை ” வா..வெளியே போய் வாசப்படியில கொஞ்ச நேரம் உக்காரலாம் விமலா ” என்றதும் அவனை பின் தொடர்ந்து தெருக்கதவை திறந்து கொண்டு வீட்டு வாசற்படியில் அவனோடு போய் உட்கார்ந்து கொண்டு அவன் தோளில் தன் தலையை வைத்தபடி சப்தமில்லாமல் அழுதாள்.
“விமலா ..கவலப்படாத..எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சிக்கோ..சொல்றது ஈசிதான்..ஒங்கஷ்டம் புரியாம இல்ல விமலா ” என்றதும் கேவி கேவி அழுதாள் விமலா..
“மாரெல்லாம் பால் கட்டிகினு வலிக்குதுங்க” என்றவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்ட ராஜேஷுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை..
முழு கர்ப்பகாலம் முடிந்து அவள் வயிற்றிலேயே இறந்து அதன் பின் பிரசவித்த அந்த பெண் குழந்தைக்காக அழுகிறவளை என்னென்னவோ சொல்லித்தான் சமாதானப் படுத்தி வந்தான் ராஜேஷ் ..இந்த இருபது நாட்களாக..ஆனால்..இப்படி ஒரு சொல்லமுடியாத வலியும் அதன் வேதனையும் அவனுக்கு புதிதாக இருந்ததால் அதனை அதன் தாக்கத்தை கற்பனை செய்யக்கூட அவனால் முடியவில்லை.
“அந்த குழந்தைய ஏங்க என் கண்ணுல கூட காட்டல ..அது உங்கள மாதிரி இருந்துச்சாம்..அம்மா சொன்னாங்க..தோள்பட்டையெல்லாம் உங்கள போல விரிஞ்சு அகலமா..” மீண்டும் அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள் விமலா.
“இங்க பாரு..அதையே நெனச்சி அழுவறதால ஒன் உடம்பைத்தான் கெடுத்துக்கற விமலா..நீ ஆசைப்பட்ட மாதிரி ஒரு பையன் பொறப்பான்..அந்த கொழந்தைய ஆஸ்பத்திரிலேயே புதைச்சிட சொல்லிட்டேன்..” என்றான் ராஜேஷ் எங்கோ வெறித்து பார்த்தவாறு ..
இப்போது சுவர்க்கடிகாரம் மூன்று மணி என சொல்லி மூன்று முறை அடித்தது!
அதற்கு பிறகு அதே போல பல இரவுகள்..அவளது வலி..அழுகை..இரண்டு வருடங்கள் ஓடின..அவள் ஆசைப்பட்ட மாதிரியே பையன் பிறந்தான்..
முதல் குழந்தை அழகுப் பெண்..
இரண்டாவதுதான் இறந்தே பிறந்தது ..இப்போது மூன்றாவது பையன் ..
ஆசைக்கு ஒண்ணு ..ஆஸ்திக்கு ஒண்ணு என்பது போல..
ஆனால் ..எப்போதாவது ராத்திரி நேரங்களில் திடீரென அவனிடம் கேட்பாள் விமலா..”ஏங்க அந்த கொழந்தைய ஆஸ்பத்திரியில ஏன் புதைக்க சொன்னீங்க..புதைக்கும் போது நீங்க ஏன் போகல..” என்பாள் .
“என்ன விமலா..இந்நேரத்துல…எத்தனை தடவ சொல்றது..உனக்கு..” என்று லேசாக எரிச்சலடைவது போல காட்டிக் கொண்டாலும் அவனுக்கு அவளை நினைத்து பரிதாபமாகத்தான் இருக்கும் ..அவளும் ஏதோ சமாதானம் அடைந்து விட்டதாய் திரும்பி படுத்துக் கொண்டு விரல் நகத்தை கடித்தபடி யோசனையில் ஆழ்ந்து விடுவாள்..
வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன..அவளது பெண்ணுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகளையும் பார்த்து விட்டாள்..பையனும் நன்றாக படித்து உத்தியோகத்தில் சேர்ந்து விட்ட மகிழ்ச்சியிலும் புருஷனின் அன்பு மழையில் நனைந்து வாழ்ந்த முப்பதாண்டு தாம்பத்ய வாழ்விலும் அவள் நன்றாகத்தான் இருந்தாள்..
ஆனாலும், அவ்வப்போது அவனிடம் அந்த குழந்தையை பற்றி கேட்பதும், அதற்கு எரிச்சல் அடையாமல் அன்பாக ராஜேஷ் பதில் சொல்வதுமாக காலம் ஓடியது..
அப்போதுதான் எங்கிருந்தோ வந்த ஆட்கொல்லி நோயான கேன்சர் கருப்பையில் வந்து விட நான்கு வருடபோராட்டத்திற்கு பின் …
ஒரு நாள் இரவு மூன்று மணிக்கு …
விமலா மரணத்தை தழுவ, பைத்தியம் பிடித்தது போல ஆஸ்பத்திரியின் வராந்தாவில் கதறிக் கொண்டிருந்தான் ராஜேஷ் ..அவள் இறந்து போயிருக்க மாட்டாள் ..டக்கென்று அசைந்து எழுந்து விட மாட்டாளா என அவளருகே குனிந்து பார்த்தபடி இருந்தவனை நகர சொன்னார்கள் யாரோ..”சத்தம் போடாதீங்க சார்” என்று சொல்லியபடி..
“ப்ளீஸ்..கொஞ்சம் வெளிய இருங்க ” என்று அவனை ஏறக்குறைய தள்ளிக் கொண்டு இழுத்து வந்தார்கள் ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்கள் .
என்னவோ நினைத்தபடி மீண்டும் ஆஸ்பத்திரியின் வராந்தாவில் ஓடிய ராஜேஷ் குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவள் காதில் ரகசியமாக..அழுதபடி சொன்னான்..”அந்த குழந்தய அந்த மெடிக்கல் காலேஜ் படிப்புக்காக ஆராய்ச்சிக்காக தர முடியுமான்னு கேட்டாங்க விமலா..யாருக்காவது அது இறந்தாலும் உபயோகப்படட்டுமேன்னு கொடுத்துட்டேன் ..பொதைக்கல விமலா…என்ன மன்னிச்சுடு விமலா” என்று ரகசியமாக அவன் அரற்றியது நிச்சயமாக அவளுக்கு கேட்டிருக்கும் ..
அவளும் மன்னித்திருப்பாள் ..என்றுதான் நம்புகிறேன் !