ஆயிரம் ட்ராம் அல்லது பத்து வருடம்
(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை)

ஒரு கிராமத்தில் ஏழைகளான இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது வறுமை அதிகரித்தபோது தம்பியை வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, அண்ணன் வேலை தேடி வெளியூர் சென்றான். அதன்படியே தம்பி வீட்டில் இருந்து, அவர்களுக்கு இருந்த சிறிதளவு நிலத்தில் விவசாயம் செய்து வந்தான்.
அண்ணன் தூரத்து ஊரில் நிலக் கிழார் ஒருவரிடம் வேலை கேட்டான்.
அந்த நிலக்கிழார் தந்திரமான ஆசாமி. அவர் வினோதமான ஒப்பந்தத்தை அவனிடம் சொன்னார்.
“வசந்த காலத்தில் குயில் கூவத் தொடங்கும்வரை நீ என்னிடம் வேலை செய்ய வேண்டும். இந்த ஒப்பந்த காலத்தில் வேலை காரணமாக நான் உன்னிடம் கோபப்பட்டால், நான் உனக்கு ஆயிரம் ட்ராம் தருவேன். மாறாக நீ என்னிடம் கோபப்பட்டுவிட்டால், நீ எனக்கு ஆயிரம் ட்ராம் தர வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு சம்மதமா?”
“ஆனால், என்னிடம் ஆயிரம் ட்ராம் பணம் இல்லையே!” என்றான் அண்ணன்.
“கவலைப்படாதே! நீ எனக்கு ஆயிரம் ட்ராம் தருவதற்கு பதிலாக பத்து வருடங்கள் என்னிடம் வேலை செய்தால் போதும்!”
ஆயிரம் ட்ராமுக்கு பதிலாக பத்து வருடங்கள் வேலை செய்வது என்பது மிக அதிகபட்சம். ஆனால், வேறு வழியின்றி, வறுமை காரணமாக அவன் அந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டான்.
‘எஜமானர் எதைச் சொன்னாலும் நான் கோபப்பட மாட்டேன். எந்த நிலையிலும் பொறுமையைக் கைவிடாமல் இருந்து, அவர் தரக்கூடிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுதான் வீடு திரும்புவேன்!’ எனத் தனக்குள் உறுதி செய்துகொண்டான்.
அடுத்த நாள் விடிகாலையிலேயே எஜமானர் அவனை எழுப்பி, அவரின் வயற்காட்டுக்கு வேலைக்குப் போகச் சொன்னார்.
“வெளிச்சம் வரத் தொடங்கியதும் நீ வேலைக்குப் போக வேண்டும். இருட்டிய பிறகுதான் திரும்பி வர வேண்டும்!”
அவனும் சரி என்று வயற்காட்டுக்குச் சென்று, நாள் முழுக்க வேலை செய்தான்.
அந்தி சாய்ந்து இருட்டியதும் வீடு திரும்பினான்.
எஜமானர் அவனைப் பார்த்து, “எதற்காக வீடு திரும்பினாய்?” என்று கேட்டார்.
“சூரியன் அஸ்தமித்துவிட்டது. இருட்டும் ஆகிவிட்டது. அதனால்தான் திரும்பி வந்தேன்!”
“வெளிச்சம் இருக்கிற வரை வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா! சூரியன் அஸ்தமித்துவிட்டது வாஸ்த்தவம்தான். ஆனால், சூரியனின் சகோதரியான நிலா வந்துவிட்டதே! இப்போது பௌர்ணமியை அடுத்த நாள் என்பதால் நிலவொளி எவ்வளவு ப்ரகாசமாக இருக்கிறது! நிலா வெளிச்சம் இல்லாமல் முற்றிலும் இருண்டிருக்கும் சமயத்தில் வேண்டுமானால் நீ வீடு திரும்பலாம். ஆனால், நிலா வெளிச்சம் உள்ள சமயங்களில் கண்டிப்பாக வேலை செய்தாக வேண்டும்!”
“அது எப்படி சாத்தியம்? ஓய்வே இல்லாமல் பகலிலும் இரவிலும் என்னை வேலை செய்யச் சொல்கிறீர்களே…! இது நியாயமா?”
எஜமானர் கமுக்கமாகச் சிரித்தபடி, “நீ என்னிடம் கோபப்படுகிறாய்!” என்றார்.
பணியாளுக்கு ஒப்பந்தம் ஞாபகம் வந்தது. உண்மையிலேயே அவனுக்கு கோபம்தான் என்றாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது எனும் இக்கட்டான நிலையை உணர்ந்துகொண்டான்.
“இல்லை எஜமானரே! நான் கோபப்படவில்லை. களைப்பாக இருக்கிறது என்றுதான் சொன்னேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் மீண்டும் வேலைக்குப் போகிறேன்.” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு, அங்கிருந்து களைப்போடும், வருத்தத்தோடும் மீண்டும் வயற்காட்டுக்குத் திரும்பினான்.
தந்திரம் மிக்கவரும், ஈவு இரக்கம் அற்றவருமான அந்த நிலக்கிழாரிடம் ஏமாந்து வசமாக மாட்டிக்கொண்டோமே என்கிற கவலையோடு நிலா ஒளியில் வேலையைத் தொடர்ந்தான்.
இரவு முழுக்க வேலை நீடித்தது. பௌர்ணமி சமீபம் ஆதலால் நிலா அஸ்தமித்ததுமே புலரி வெளிச்சம் வந்துவிட்டது. எனவே, மேலும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை. அவன் சோர்ந்து போய் நிலத்தில் விழுந்துவிட்டான்.
பிறகு தன் உடலெங்கும் மிச்சமுள்ள கொஞ்ச நஞ்ச சக்தியைத் திரட்டி எழுந்தான்.
எஜமானரைக் குறித்து, “உங்களது விளைநிலம், நீங்கள் சாப்பிடும் உணவு, உங்கள் பணம் – அனைத்தும் நாசமாகப்போகட்டும்!” என சபித்தான்.
மேற்பார்வை பார்ப்பதற்காக அங்கு வந்த எஜமானரின் காதில் அது விழுந்துவிட்டது.
“நீ என்னைத்தானே சபித்தாய்? ஒப்பந்தப்படி, கோபப்படவே கூடாது. நீயோ சாபமும் விடுகிறாய். எனவே, நீ எனக்கு ஆயிரம் ட்ராம் கொடுத்தாக வேண்டும்!” என்றார் அவர்.
அவன் இரண்டு பக்கமும் பற்றிக்கொண்ட நெருப்புக்கு இடையில் சிக்கிக் கொண்டது போலத் தவித்தான்.
இதே நிலையில் தொடர்ந்து இரவு பகலாக ஓய்வு ஒழிச்சலின்றி வேலை செய்வது இயலாத காரியம். எனவே “என்னால் முடியவில்லை. நான் வேலையிலிருந்து விலகிவிடுகிறேன்” என்றான்.
“அது உன் இஷ்டம்! ஆனால், எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுப் போ!”
அவனிடம் பணம் இல்லை என்பதால் ஆயிரம் ட்ராம் தருவதாகப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான்.
“என்ன ஆயிற்று?” குடும்பத்தவர்கள் விசாரித்தனர்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விரிவாகக் கூறி வருந்தினான்.
“பரவாயில்லை, அண்ணா! கவலைப்பட வேண்டாம். இனி மேல் நீ வீட்டில் இரு. நான் வேலை தேடிக்கொள்கிறேன்.” தம்பி ஆறுதல் கூறினான்.
மறு நாளே புறப்பட்ட அவன், அண்ணன் வேலை செய்த அதே எஜமானரிடம் சென்று வேலை கேட்டான்.
அவரும் பழையபடியே நிபந்தனை விதித்தார்.
“தொகையும் காலக்கெடுவும் குறைவாக இருக்கிறது. நீங்கள் கோபப்பட்டால் 2,000 ட்ராம் எனக்குத் தர வேண்டும்; நான் கோபப்பட்டுவிட்டால் அதே தொகையை நான் உங்களுக்குத் தருகிறேன், அல்லது இருபது ஆண்டுகள் வேலை செய்கிறேன் என வைத்துக்கொள்ளலாமா?” எனக் கேட்டான்.
எஜமானர் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டார்.
இப்போது தம்பி ஒப்பந்தப் பணியாள் ஆகிவிட்டான். எஜமானர் அப்போதே அவனிடம் காலையில் வெளிச்சம் வந்ததும் வேலைக்குப் போகவேண்டும், இருட்டிய பிறகுதான் வீடு திரும்ப வேண்டும் என்கிற நிபந்தனைகளைத் தெரிவித்துவிட்டார்.
மறுநாள் காலையில் சூரியன் உதித்து வெகு நேரமாகியும் வேலைக்காரனான தம்பி இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தான். எஜமான் அவனை உலுக்கி எழுப்பி, “சூரியன் உதித்து வெகு நேரமாகிவிட்டது. இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறாயே?” என அதட்டினார்.
தலையை உயர்த்திப் பார்த்த அவன், “என்ன விஷயம் எஜமான்? கோபமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
அவர் சுதாரித்துக்கொண்டு குரலைத் தாழ்த்தி, “இல்லை, இல்லை! எனக்குக் கோபம் எல்லாம் இல்லை. வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டது என்று உனக்கு ஞாபகப்படுத்தினேன். அவ்வளவுதான்!” என்றார்.
புதிய வேலையாள் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தான். பிறகு மெதுவாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, சாவகாசமாக செருப்புகளை அணிந்து வயற்காட்டுக்குக் கிளம்பினான். அதற்குள் காலை பத்து மணி ஆகிவிட்டது
“என்ன இது, இவ்வளவு மெதுவாகப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறாயே? இப்படி மந்தமாக இருந்தால் எப்படி? சுறுசுறுப்பாகச் சென்று வேலை செய்!” எஜமானர் அதட்டினார்.
“எஜமான் கோபப்படுகிறீர்கள் போலிருக்கிறதே!”
“இல்லையில்லை! நான் கோபப்படுவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வேலைக்குச் செல்வதில் நாம் ஏற்கனவே தாமதம். இனியும் தாமதம் செய்யக் கூடாது என்பதை ஞாபகப்படுத்தினேன். அவ்வளவுதான்!”
“அப்படியானால் சரி! இருந்தாலும், கவனம் கொள்ளுங்கள். நமது ஒப்பந்தத்தை மீறிவிடக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்!” எச்சரித்துவிட்டு ஆடல் பாடலாக நடந்தான்.
அவனது பேச்சும் நடத்தையும் எஜமானருக்கு சந்தேகத்தைக் கிளப்பின. இவன் ஏதோ திட்டத்தோடுதான் தன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறான் போலிருக்கிறது என எண்ணிக்கொண்டார். ஏற்கனவே இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. அவரது வயற்காடோ ஊருக்குள்ளிருந்து தூரமாக இருந்தது. இதே போல இவன் ஆடல் பாடலாகச் சென்றால் இன்று மாலை ஆனாலும் அங்கே போய்ச் சேர மாட்டான் என்று தோன்றியது. எனவே, அவனைக் கண்காணிப்பதற்காக அவரும் கூடவே வந்தார்.
அப்படி இருந்தும் அவன் ஊருக்குள் ஆங்காங்கே நின்று, இது யார் வீடு, இவர் யார், இவருடைய பெயர் என்ன என்று விசாரித்துக்கொண்டும், வழித்தடங்களில் உள்ள ஒவ்வொரு பொருள்களையும், இடங்களையும் பற்றி அவரிடம் விசாரித்துக்கொண்டும் இருந்தான். இதனால் மென்மேலும் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. அவருக்குக் கடுப்பானாலும் வெளிக்காட்ட இயலவில்லை. அது பற்றி ஏதேனும் கேட்டால் கோபித்துக்கொள்கிறீர்கள் என்று அவன் சொல்வான் என்பதால் தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பொறுமை காத்து, அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
ஒரு வழியாக அவர்களின் வயற்காட்டைச் சென்று அடையும்போது மதியம் ஆகிவிட்டது.
“இதுவா வேலை தொடங்கும் நேரம்? அதோ பார், மற்றவர்கள் எல்லாரும் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்!” என்றார் எஜமானர்.
“அப்படியானால் நாமும் சாப்பிடலாமே!” என்றான் வேலையாள்.
“சரி, சரி! சாப்பிட்டுவிட்டே வேலையைச் செய்வோம்!”
அவர்களுக்கும் உணவு வந்தது.
சாப்பிட்டு முடித்ததும், “நாமெல்லாம் வேலைக்காரர்கள். மதிய நேரத்தில் சற்று நேரம் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்தால், வேலையைத்
தொடர்வதற்குப் புத்துணர்ச்சியாக இருக்கும்” என்ற பணியாள், மரத்தடி நிழலில் படுத்து சுகமாக உறங்கினான். மாலை வரைக்கும் எழவில்லை. அந்திக் கருக்கலில்தான் எழுந்தான்.
“என்னப்பா, நீ கடவுளுக்கு பயப்படுகிற மனிதன்தானா? பொழுது இருட்டிவிட்டது. ஒவ்வொருவரும் அவரவருடைய நிலத்தில் உழுது முடித்துவிட்டார்கள். நம்முடைய நிலம் மட்டுமே இன்னும் உழப்படாமல் இருக்கிறது. இதுவா நீ வேலை செய்கிற லட்சணம்?” எரிந்து விழுந்தார் எஜமானர்.
“நீங்கள் கோபப்படுகிறீர்களா எஜமானரே?”
“இல்லை, நான் கோபப்படவில்லை! பொழுது இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போக நேரம் ஆகிவிட்டது என்று சொன்னேன்; அவ்வளவுதான்!”
“அது சரிதான்! நடங்கள்; வீட்டுக்குப் போவோம்!” என நடையைக் கட்டியவன், “நீங்கள் மிக நியாயவான், எஜமானரே! நம்முடைய ஒப்பந்தப்படி என்னிடம் கோபப்படாமல் எவ்வளவு அன்போடு நடந்துகொள்கிறீர்கள்! நானும் அதே போல ஒப்பந்தத்தை ஒருபோதும் மீற மாட்டேன்!” என்றான்.
நிலக்கிழாருக்கு வெந்த புண்ணில் அமிலம் ஊற்றியது போல் இருந்தது.
இருவரும் வீடு திரும்பினர்.
சில விருந்தாளிகள் எஜமானுக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கு இரவு உணவு அளிப்பதற்காக எஜமானர் புதிய ஒப்பந்த வேலைக்காரனிடம் ஒரு ஆட்டை வெட்டி வருமாறு பணித்தார்.
“எந்த ஆட்டை வெட்டுவது?”
“பட்டியில் எது சிறந்ததோ அதை வெட்டு!”
சற்று நேரம் கழித்த பிறகு அவரது மற்ற வேலைக்காரர்கள் சிலர் ஓடிவந்து, “புதிய ஒப்பந்த வேலைக்காரன் வெறிபிடித்தவன் போல பட்டியில் உள்ள ஆடுகளை ஒன்றை அடுத்து ஒன்றாக வெட்டிக்கொண்டிருக்கிறான்!” எனத் தெரிவித்தனர்.
பதறியடித்தபடி வீட்டிலிருந்து ஓடிச் சென்று பார்த்தார். ஒரு மந்தை ஆடுகள் முழுதுமே தலை வேறு முண்டம் வேறாகக் கிடந்தன. அவற்றின் உடலிலிருந்து ஒழுகிய ரத்தத்தால் ஆட்டுப் பட்டியே ரத்த நிலமாகக் காட்சியளித்தது.
அதைக் கண்ட எஜமானர் தனது கட்டுப்பாட்டை மீறிக் கத்தினார்.
“உனக்கு மூளை குழம்பிவிட்டதா? அல்லது ஏற்கனவே நீ கிறுக்கன்தானா? ஏன் இப்படிச் செய்தாய்? என்னுடைய ஆட்டு மந்தை முழுவதையும் நாசமாக்கி விட்டாயே!” எனக் கதறினார்.
“மந்தையில் உள்ள சிறந்த ஆட்டை வெட்டச் சொல்லி நீங்கள்தானே சொன்னீர்கள்! நம்முடைய மந்தையில் உள்ள ஆடுகள் அனைத்துமே சிறந்தவைதான். அதனால்தான் அவை அனைத்தையுமே வெட்டிவிட்டேன்.
உங்களுடைய வாக்கை மீறி நான் எதுவும் செய்யவில்லையே!” அவன் அமைதியாகச் சொன்னான்.
பிறகு, “நீங்கள் என்னிடம் கோபப்படுகிறார்களா?” என்று கேட்டான்.
“இல்லை, நான் கோபப்படவில்லை! என்னுடைய மந்தை முழுவதையுமே நாசப்படுத்திவிட்டாயே என்றுதான் துக்கப்படுகிறேன். வேறு ஒன்றும் இல்லை!”
“அப்படியானால் சரி. உங்களுக்கு என் மீது கோபம் இல்லை என்றால் நான் வேலையைத் தொடர்கிறேன்.”
இதே ரீதியில் அவனது வேலைகள் சில மாதங்களுக்கு நீடித்தன.
அவன் உருப்படியாக எந்த வேலையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல; அவனது வேலைகளால் நிலக்கிழாரின் சொத்துக்கள் பெருமளவு நாசமும் நஷ்டமும் அடைந்தன. இன்னும் அவனை வேலைக்கு வைத்திருந்தால் தனது சொத்துக்கள் முழுவதையுமே நிர்மூலமாக்கி, தன்னை ஓட்டாண்டி ஆக்கிவிடுவான் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, அவனை வேலையை விட்டு விலக்கிவிடுவதே நல்லது என்று பட்டது.
ஆனால், ஒப்பந்தப்படி வசந்த காலத்தில் குயில்கள் கூவும் வரை அவன் வேலை செய்தாக வேண்டும். அதற்கு முன் அவனை விலக்க முடியாது. இப்போது பனிக் காலம். குயில்கள் கூவாது. எனவே அந்தத் தந்திரமான வேலைக்காரனை வேலையை விட்டு நீக்குவதற்கு அவரும் ஒரு தந்திர உபாயம் மேற்கொண்டார். தனது மனைவியை காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து ஒளிந்திருக்கவும், தானும் வேலைக்காரனும் அங்கு வரும்போது அவள் குயில் போலக் கூவவும் ஏற்பாடு செய்துகொண்டார்.
பிறகு வீட்டுக்கு வந்து வேலைக்காரனை அழைத்துக்கொண்டு அந்தக் காட்டுக்குள் வேட்டையாடுவதற்குச் சென்றார். அவர்கள் காட்டுக்குள் வருவதைப் பார்த்து, மரத்தின் மீது இருந்த எஜமானரின் மனைவி “க்கோவ்வ்வ்… க்கோவ்வ்வ்…” என்று குயில் போலக் கூவினாள்.
உடனே எஜமானர், “உனக்கு வாழ்த்துக்கள்! குயில் கூவுகிறது. உன்னுடைய ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. நீ உன் வீடு திரும்பலாம்!” என்றார்.
எஜமானரின் தந்திரத்தை அறிந்துகொண்ட வேலைக்காரன், “இல்லை, அப்படிச் செய்ய இயலாது. பனிக் காலத்தின் மத்தியில் குயில்கள் கூவுவதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? இது குயில் அல்ல. நான் அந்தப் பறவையைச் சுடுகிறேன். அப்போது அது என்ன பறவை என்பது தெரிந்துவிடும்!” என்றுவிட்டு குயிலோசை வந்த இடத்தை நோக்கி துப்பாக்கியால் குறி பார்த்தான்.
எஜமானர் பதறியடித்துக்கொண்டு அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டார்.
நாயே, பன்றியே, கழுதையே என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி அவனைத் திட்டிவிட்டு, “நீ என்னை மிகவும் எரிச்சல் அடையச் செய்கிறாய்!” என்றார்.
“இப்போது நீங்கள் கோபப்படவில்லையா?”
“ஆமாம், நான் கோபப்படுகிறேன்! உன் மீது எனக்குக் கொலை வெறியே இருக்கிறது!” நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட பதில் அவரிடமிருந்து வந்தது.
“உனக்குத் தர வேண்டிய பணத்தைத் தந்து விடுகிறேன். அதை வாங்கிக்கொண்டு ஒழிந்து போ! இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடு!” என்ற அவர் வீடு திரும்பியதும் ஒப்பந்தப்படி இரண்டாயிரம் ட்ராம்களை அவனுக்குக் கொடுத்தார்.
அதன் பிறகே தான் யார் என்ற உண்மையை அவரிடம் வெளிப்படுத்தினான். தனது அண்ணன் அவருக்கு எழுதிக்கொடுத்த பத்திரத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு, அண்ணன் சார்பாக ஆயிரம் ட்ராமைத் திருப்பிக் கொடுத்தான். அந்தப் பத்திரத்தை அங்கேயே சுக்கல் சுக்கலாகக் கிழித்து வீசி எறிந்துவிட்டுச் சென்றான்.
சொர்க்கத்திலிருந்து மூன்று ஆப்பிள்கள் விழுந்தன. ஒன்று அந்த இளம் வேலைக்காரனுக்கு. இன்னொன்று, இக் கதையை எழுதியவருக்கு. அடுத்தது, கதையை வாசித்த உங்களுக்கு!
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |