ஆயிரம் டொலர் மனிதன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 1,687 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

அபுசாலி எனக்கு நெருக்கமானவரல்ல. அவர் இந்தக் கதையில் அதிகம் வரமாட்டார். எனக்கு நெருக்கமில்லாத காரணத்தால் அவரைப் பற்றி அதிகம் எழுதப்போவதில்லை என்று அர்த்தமல்ல. அந்த மாதிரியான ஓரவஞ்சனை ஒன்றும் எனக்கு இல்லை. குறிப்பாகச் சொல்வதானால் இது அவரைப் பற்றிய கதைதான். ஆனால் அதற்கு முதல் வேறு விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

அவரைப் பற்றிய சிறு அறிமுகத்தை மட்டும் இப்போது தருகிறேன். அபுசாலி ஏடன் துறைமுகத்தில் முதன்மை அதிகாரியாகப் பணிபுரிந்தார். ஏடனில் கப்பல் தரித்து நின்றதால், அது சம்பந்தமான வழமையான பத்திரப் பதிவுகள் போன்ற அலுவல்களுக்காக அவரைத் தொடர்புகொள்ள வேண்டி யிருக்கும். கப்பலுக்கு அவர் சில வேளைகளில் விஜயம் செய்தாலும் சம்பிரதாயப்படி அது கப்டினோடு உள்ள தொடர்புதான். 

இப்போது அவர் எங்களுக்கு மிகவும் தேவைப்பட்டார். நாங்கள் பெரிய இக்கட்டில் மாட்டுப்பட்டுப் போயிருக்கிறோம். யுத்த பேரிகை முழங்கிக்கொண்டிருக்கிறது. ஏடனில் கப்பற் துறைமுகம் தாக்கப்படப்போகிறது. கப்பலை எடுத்துக்கொண்டு வெளியேற அனுமதில்லை. அனுமதி கிடைத்தாலும் கப்பலைச் செலுத்திச் செல்லத் தகுதி வாய்ந்த மாலுமிகள் இல்லை. கப்பலில் தொலைதூர வானலைக் கருவிகள் கூட தொழிற்படவில்லை. தேவையான ஒழுங்குகளைச் செய்யக்கூடிய வெளித் தொடர்பாளனாக இருந்த ஐமனும் போய்விட்டான். இப்போது என்ன செய்வது? 

தந்தையைப் போன்ற வயதை ஒத்த கப்டின் அழுவதைப் பார்க்கத் தாங்கவில்லை. அவரைக் கைகளில் அணைத்துக் கொண்டு கூறினேன். “கவலைப்பட வேண்டாம் கப்டின்… நாங்கள் போகமாட்டோம்…. இங்கிருந்து இந்தக் கப்பலிற்தான் போவோம். அதுவரை உங்களுடன் இருப்போம்.” 

அவர் சொன்னார். “எனக்குத் தெரியும் ராஜா… உங்களைப் பற்றித் தெரியும். இலங்கையர்களைப் பற்றித் தெரியும்.” 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக மட்டுமல்ல, மன உறுதியும் முக்கியம் என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அவ்வாறான உறுதியை கப்டினுக்கும் ஊட்ட வேண்டியிருந்தது. 

“கப்டின்… நாங்கள் இப்போது வீ.எச்.எஃப் – இல் ஹாபர் மாஸ்டருடன் தொடர்புகொள்வோம். எங்களுடைய நிலைமையைக் கூறுவோம்… எப்படியாவது வெளியேற வேண்டும்.. அதற்கு உதவி செய்யுமாறு கேட்போம்.” 

“எங்கள் நிலைமை ஏற்கனவே அவருக்குத் தெரியும்தானே…?” 

“பரவாயில்லை… திரும்பவும் சொல்லுவோம். எங்கள் கைவசமுள்ள பணங்களைச் சேர்த்து அத்தனை டொலரையும் அவரிடம் கொடுக்கலாம். அதுபற்றி இப்போதே மறைமுகமாக அவருக்குத் தெரிவித்துவிடுவோம்… யார் செய்யமுடியாத அலுவலையும் பணம் புகுந்து செய்துவிடும்…!” 

ஹாபர் மாஸ்டர் அபுசாலியுடன் பேசும்போது கப்டின் மீண்டும் அழுகிற நிலைக்கே வந்துவிட்டார். எப்படியாவது உதவுவதற்கு முயற்சிப்பதாகவும், பதற்றப்பட வேண்டாமெனவும் அபுசாலி கூறினார். ஆனால் கப்பலுக்குத் தேவையான மாலுமிகளை யேமனில் எடுப்பது அப்போதைய நிலைமைகளில் சாத்தியப்படாது எனவும் தெரிவித்தார். 

கப்டின் இன்னும் சோர்ந்துபோனார். 

சில தடவை ஏற்கனவே கம்பனிக் கப்பல்களிற் பயணம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் கப்பலின் மேற்தளத்தில் வீல்றூமில் நின்று கப்பலை இயக்கும் நடவடிக்கைகளைக் கவனித்திருக்கிறேன். தொழிற்சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவ்வப்போது கப்பற்தளத்தில் (டெக்) பணிபுரியும் மாலுமிகளுடன் சேர்ந்து உதவியாக, கப்பலைக் கட்டுதல் (மூறிங்), மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட சாதனங்களில் ஓரளவு பழக்கப்பட்டிருந்தார்கள். (ஆனால் பயிற்றப்பட்டிருக்கவில்லை) 

என்ஜின் அறைக்குப் பொறுப்பாக இருக்கும் இரண்டாவது என்ஜினியருக்கு (தற்போதைய பிரதான என்ஜினியர்) உதவியாக தொழிற்சாலைப் பகுதியிலுள்ள இரு என்ஜினியர் களைக் கொடுக்கலாம். கப்பல் வெளியேற்றுவதற்கு அனுமதி கிடைத்தால் எடுத்துக்கொண்டு அண்மையாக உள்ள ஒரு நாட்டுக்குப் போய்விடுவது… அங்கு தரித்து நின்று தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு மேற்கொண்டு தேவை யான ஆட்களை எடுக்கலாம். இவ்வாறான திட்டத்தைக் கப்டினிடம் கூறினேன். அவரது முகத்திற் சற்றுப் பிரகாசம், எனினும் தயக்கம். 

“அது எப்படி முடியும்…? சர்வதேச விதிகளின்படி அது தவறான செயல்..” 

“அதையெல்லாம் இப்போது பார்த்துக்கொண்டிருந்தால்… சர்வதேச விதிகளின்படி நாங்கள் இங்கே இறந்துபோக வேண்டியதுதான்… ஆபத்துக்குப் பாவமில்லை…” 

கப்டின் அதற்குக் கொள்கையளவில் இசைந்தார். அதற்கு மேலாக கப்பல் புறப்படுவதற்குரிய அனுமதி கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாயிருந்தது. அடிக்கடி துறைமுக அதிகாரி யுடன் தொடர்புகொண்டோம். அவரும் ‘அந்தா இந்தா’ என நம்பிக்கையூட்டிக்கொண்டிருந்தார். அரச லெவலில் போய்க் கதைப்பதாகவும், அனுமதி கிடைக்கும் எனவும் கூறினார். அவர் செய்யப்போகும் உதவிகள் எங்கள் கைவசமிருந்த ஆயிரம் டொலர்களுக்குச் சமம்! அப்படியாவது காரியம் ஆகட்டுமே! 

குண்டு வீச்சு விமானங்கள் அடிக்கடி துறைமுகத்துக்கு மேலாக பேரிரைச்சலுடன் வந்துகொண்டிருந்தன. ‘இந்தா போடப் போகிறான்’ எனத் தலையில் கையை வைக்கும்போது இன்னொரு பக்கம் குண்டு விழுந்து அதிரும். ‘அடுத்தது எங்கள் கப்பல்தான்…’ என செல்வராசா மாமா சொல்லிக்கொண்டிருந்தார். இப்படியே இரண்டொரு நாட்கள் கடந்தன. கையிருப்பிலிருந்த உணவு வகைகள் தீர்ந்துபோகும் நிலைக்கு வந்தோம். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பாவித்த தண்ணீரும் தீர்ந்து போகும் கட்டம். 

பக்கத்தில் ஒரு கப்பலில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. அந்தக் கப்பலும் வேலைகளை நிறுத்தி அங்கேயே நின்றது. அவர்களிடம் சில மூடைகள் அரிசி தருமாறு கேட்டுப் பார்க்கலாம் எனக் கப்டினிடம் கூறினேன். ஆனால் சட்டப்படி அதுவும் குற்றமாம். ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு பொருட்களை மாற்றமுடியாது. எனினும் இன்னும் சில தொழிலாளர்களுடன் அந்தக் கப்பலுக்குப் போனோம். அவர்களுடன் பேசினோம். ஆபத்துக்குப் பாவம் பார்த்து அவர்கள் உதவினார்கள்… சில மூடைகள் அரிசியுடன் திரும்பினோம். 

சில தினங்களில் துறைமுக அதிகாரி அபுசாலியிடமிருந்து நல்ல தகவல் வந்தது. 

கப்பல் புறப்படுவதற்கு விஷேட அனுமதி பெற்றிருக் கிறாராம். புறப்படுவதற்குரிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அறிவித்திருந்தார். ஆனால் ஒரே ஒரு இழுவைப் படகுதான் உதவிக்கு அனுப்பமுடியுமாம். (வழக்கமாக மூன்று இழுவைப் படகுகள் இதுபோன்ற பாரிய கப்பலை அணைத்து இழுத்தும் தள்ளியும் துறைமுகத்திற்கு வெளியே பக்குவமாகக் கொண்டு செல்ல உதவும். ஆனால் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைக்கு வராத காரணத்தால் இந்த நிலைமை.) 

எப்படியாவது அங்கிருந்து வெளியேறிவிட்டால் போதும் என்ற நிலை எங்களுக்கு, தொழிலாளர்களை அவசரத்துடன் தயார்ப்படுத்தினோம். ஏற்கனவே அவர்களுக்குச் சொல்லப்பட்ட நிலைகளுக்கு அனுப்பினோம். 

கப்பல் புறப்பட ஆயத்தம். இழுவைப் படகு பக்கத்துக்கு வந்தது. அபுசாலி பைலட்டாகத் தொழிற்பட்டார். கப்படினுக்கு உதவியாக நான் மேற்தளத்தில் நின்றுகொண்டேன். பைலட்டிடமிருந்தும் கப்டினிடமிருந்தும் கட்டளைகள் பிறந்தன. (அல்லது பறந்தன.) கயிறுகள் கழற்றப்பட்டன. 

ஒட்டிக்கொண்டு நின்ற நிலப்பரப்பை விட்டு கப்பல் மெதுவாகத் தண்ணீரில் அசைந்து விலகியது. 

அப்போது ஒரு டுமீல்! (துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் குறிப்பிடுவதற்கு வாசகர்கள் பழக்கப்பட்டுப்போன இந்தச் சொல்லைப் பாவிப்பதைத் தவிர வேறு வழியில்லை!) ஜீப் வண்டிகளிலும், பிக் அப் வாகனங்களிலும் இராணுவத்தினர் வந்து நின்றனர். மேலும் சில டுமீல்… டுமீல்! வானத்தை நோக்கித்தான் சூடு நடந்தது. 

கப்பலைத் திரும்பவும் கட்டுமாறு வி.எச்.எஃப் கருவிமூலம் பணித்தனர். அவர்களுடன் அபுசாலி பேசினார். அரசிடம் விசேட அனுமதி பெற்றிருப்பதாகக் கூறினார். இராணுவத்தினர் சம்மதிக்கவில்லை. (எல்லா நாடுகளிலும் இராணுவத்தினர் ஒரே மனநிலையில்தான் இருப்பார்கள் போலும்!) 

கப்பல் திருப்பப்பட்டது. 

“எப்படியாவது போவதற்கு உதவி செய்வேன்.. கவலைப்பட வேண்டாம்..” என அபுசாலி கூறிச்சென்றார். அதை நாங்கள் முழுமையாக நம்பினோம். சும்மாவா? ஆயிரம் டொலர் பற்றி மறைமுகமாக உணர்த்தியிருக்கிறோம். மனுசன் அதை விடுவாரா? 

அடுத்த நாள் இன்னொரு மாற்றம் நிகழ்ந்தது. எங்கள் கப்பல் பேர்த்திலிருந்து சற்று அகற்றி சற்று வெளியே, ஆனால் உள் கடலிலேயே நங்கூரமிடச் செய்தார்கள். அதுவும் படையினரின் கட்டளைப்படி நடந்தது. 

அந்த இடத்தில் ஒரு பக்கம் கடற்படை முகாம். மறுபக்கத்தில் பத்தோ பதினைந்து ஈராக்கியக் கப்பல்கள் நங்கூரமிடப் பட்டிருந்தன. (இவை குவைத்துடனான யுத்த காலத்தில் தாக்கி அழிக்கப்படாமலிருப்பதற்காக, ஈராக் இங்கு கொண்டுவந்து கட்டி வைத்த கப்பல்களாம்.) ஈராக் தென் யேமனுக்கு ஆதரவான நாடு. எனவே, இந்தக் கப்பல்கள் வடயேமன் 

படைகளால் தாக்கப்படக்கூடும். அவற்றின் பாதுகாப்புக் கருதியும் கடற்படை முகாமின் பாதுகாப்புக் கருதியும் வெளிநாட்டுக் கப்பல்களை இங்கு கொண்டுவந்து நங்கூரமிடச் செய்திருக்கிறார்கள். (யுத்த தர்மம்!) 

செல்வராசா மாமாவின் சாஸ்திரம் அநேகமாகப் பலிக்கப்போகிறது. எனச் சிலர் நம்பிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் சற்றும் மனம் தளராத விக்கிரமனைப் போல அபுசாலியைத் தொடர்பு கொண்டிருந்தோம். 

அடுத்த நாள் மாலை அபுசாலி கையடக்க வானலைக் கருவியில் தொடர்புகொண்டு சொன்னார். “எல்லாம் சரி! நீங்கள் புறப்படலாம்.. இழுவைக் கப்பல்களை அனுப்புகிறேன். இருள்வதற்கு முன்னர் வெளிக் கடலுக்குப் போய்விட வேண்டும்… என்னை எதிர்பார்க்க வேண்டாம். நான் பைலட் போட்டில் வந்து வெளிக் கடலில் சந்திப்பேன்… உடனடியாகக் கிளம்புங்கள்…” 

சற்று நேரத்தில் இழுவைக் கப்பல்கள் வந்தன. வழமையாக துறைமுகத்தைச் சேர்ந்த பைலட் ஒருவர் வந்து அவரது உதவியுடன்தான் கப்பல் வெளியேற வேண்டும். இப்போது யாருமில்லை. 

‘மினிஸ்டரிடம் விசேட அனுமதி பெற்றுக்கொண்டு வருகிறேன்… காரில் துறைமுகத்துக்கு வந்து சேரச் சுணங்கும்… நீங்கள் போய்க் கொண்டேயிருங்கள்… நான் வெளிக்கடலில் சந்திப்பேன்…’ அபுசாலி அடிக்கடி வானலைக்கருவியில் இவ்வாறு கூறிக்கொண்டிருந்தார். 

எது சரி, பிழை என்று சிந்திக்கவும் நேரமில்லை. (அல்லது விருப்பமில்லை) எது உண்மை எது பொய் என்றும் தெரியவில்லை. அபுசாலி சும்மா ஒரு முயற்சி செய்து பார்க்கிறாரோ என்று தோன்றியது. நாங்கள் வெளியேறிவிட்டால் அவருக்கு ஆயிரம் டொலர் கிடைக்குமல்லவா? எனினும் நாங்களும் ஒரு முரட்டு நம்பிக்கையுடன் புறப்படுவதற்குத் தீர்மானித்தோம். 

மூறிங் கயிறுகள் கழற்றப்பட்டன. இழுவைக் கப்பல்கள் தொடுக்கப்பட்டன. இருள் சூழ்ந்துகொண்டிருந்த நேரம். பைலட் இல்லாத கப்பலை துறைமுகக் கால்வாயினூடாக வெளியே கொண்டுபோகும் சிரமத்தை உணர்ந்து, கப்டின் ஒரே டென்ஷனாக இருந்தார். பல தடவைகள் தூஷணத்தில், கடவுளையும் தலைமைக்கந்தோர் அதிகாரிகளையும் திட்டிக் கொண்டிருந்தார். பக்கதில் நின்று அவரை ஆறுதற் படுத்தினேன். என்ஜின் ரூமில் எனது என்ஜினியர்கள் உதவியாய் இருந்தனர். கப்பல் மெல்லமெல்லக் சென்று கொண்டிருந்தது. 

அபுசாலி தொடர்ந்து வி.எச்.எஃப். பில் பேசி ஊக்கமூட்டிக் கொண்டிருந்தார். துறைமுகத்துக்குள் வந்துவிட்டதாகவும், பைலட் போட்டில் சீக்கிரம் வந்து கப்பலை அடைவேன் எனவும், கயிற்று ஏணியைக் கப்பலில் தொங்கவிடுமாறும் கூறினார். 

வெளிக் கடலை அடைந்துவிட்டோம். 

“டுமீல்… டுமீல்…!” 

துவக்கு வேட்டுக்கள்… சட… சட… சட… என பீரங்கிகள் தீர்க்கப்படும் சத்தம். இருளப்போகும் அந்த நேரத்தில் எங்களை வளைத்துக் கடற்படையினர் வானத்தை நோக்கிச் சுட்டனர். உடனடியாகத் திரும்பத் திரும்புமாறு பணிக்கப்பட்டோம். 

கப்டின் வெடவெடத்துப் போனார். (நாங்களும்தான்!) “சுட வேண்டாம் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்…” என வி.எச்.எஃப்.பில் அபுசாலிக்குக் கத்தினார். 

“நீங்கள் பயப்பட வேண்டாம். நான் அவர்களுடன் பேசுகிறேன்…” 

அபுசாலி அவர்களுடன் அரபுப் பாஷையில் பேசுவதும் வானலைக் கரு 

வியில் கேட்டது. எனினும் அவர்கள் “திருப்புங்கள்… திருப்புங்கள்” எனத் துவக்குகளினால் எங்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். 

“கப்பலைத் திருப்புங்கள். இதோ நான் வந்துவிடுவேன்…” என அபுசாலியும் கூறினார். 

கப்பல் ஆழாக் குறையாக ஒரு யூ வளைவெடுத்துத் திரும்பியது. துறைமுகத்தை நோக்கிக் கப்பலைச் செலுத்தினோம். அபுசாலி வந்து கயிற்று ஏணிமூலம் கப்பலில் ஏறிக்கொண்டார். 

சற்று முன்னர் வரை ஒருவித விடுதலையுணர்வுப் பரபரப்புடன் இருந்த தொழிலாளர்களெல்லாம் மீண்டும் குழப்பமடைந்தார்கள். 

“நீங்கள் பயப்பட வேண்டாம்… மந்திரியிடம் எழுத்துமூல அனுமதி பெற்றிருக்கிறேன்…” தொடர்ந்து கடற்படையினரிடம் அவர் பேசினார். கடற்படைப் பெரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். ஒரு கட்டத்தில் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்த இரு பீரங்கிப் படகுகளும் விலத்திக்கொண்டு முன்னே சென்றன. 

“சரி இனி நீங்கள் போகலாம்… அவர்களுக்கு ஓடர் கிடைத்துவிட்டது… கப்பலைத் திருப்புங்கள்…!” 

கப்பல் மகிழ்ச்சியுடன் திரும்பியது… 

வெளிக்கடல் வரை அபுசாலி வந்தார்… பின்னர் கப்டினை ஆரத்தழுவி விடைபெற்றார். 

“சந்தோஷமான பயணமாக அமையட்டும். போய் வாருங்கள்…!” 

கப்டினிடம் கண் சிமிட்டி ஞாபகப்படுத்தினேன். ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஆயிரம் டொலர்களை கப்டின் அவரிடம் கொடுத்தார். 

“என்ன இது…?” 

“உங்களுடைய உதவி மிகப் பெரியது… அதற்குக் கைமாறாக என்ன செய்வதென்று தெரியவில்லை. இதையாவது எங்கள் அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.” 

அபுசாலி சிரித்தார். 

“வேண்டாம். இது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் உதவி… நீங்கள் இரண்டு வருடங்கள் அளவில் இங்கு இருந்திருக்கிறீர்கள்… என் குடும்ப நண்பர்களைப் போல உங்களுடன் பழகியிருக்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத் தினரைப் பிரிந்து இங்கு பரிதவித்து நின்ற நிலைமையில் என்னால் இயன்ற உதவியைச் செய்தேன்… அவ்வளவுதான்… இன்ஷா அல்லாஹ்…! போய் வாருங்கள்… உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்…!” 

– மல்லிகை, 2002.

– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

– உயிர்க்கசிவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2010, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிட், சென்னை.

சுதாராஜ் விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *