ஆயா பிளைட்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாகன வீதி. இடப் பக்கமாக கிளை விரித்து உள்நோக்கி நீள்கின்ற குறுகலான மணற் பாதை. அங்கே பெருத்தும் சிறுத்தும் படர்ந்தும் விரிந்தும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற தூர்ந்த பலகைகளினதும், ஓலைகளினதும் சிருஷ்டிகளான குடிசைகள்.
வாசலில் நின்றால் தூரத்தே வாகன வீதி தெரியும். சட்சட்டென ஓடி மறையும் பஸ், கார் போன்ற வாகனங்களின் விரைவான வோட்டம் காட்சியாகும். ஜானுவின் கண்களில் அந்தக் காட்சி நடனங்கள்.
‘ஓ….’ அவள் கண்கள் ஆனந்தப் பூக்களாகின. மகிழ்ச்சிப் புனல் பிரவகிக்கும் நெஞ்சினளாக சட்டென மணலுக்கு இறங்கி வாகனப் பாதையில் இருந்து பிரிந்து, சந்துக்குள் நுழைந்து மணற் பாதையில் சுழலும் சக்கரங்கள் தூசிப் படலத்தை உசுப்பிவிட சைக்கிளில் வேகமாக வரும் தபால்காரனை நோக்கி விரைந்தாள்.
அட, தபாத்சேவகனின் கிழட்டு முகத்தில் பொக்கைச் சிரிப்பு. பெடல் மிதிப்பில் வாலிப மிடுக்கு.
“துவட்ட லிவுமக் தியனவா….”
“மகளுக்குக் கடிதமொன்று இருக்கு…”
சரேலென வந்து நின்ற வண்டியில் இருந்து சடாரெனத் தாவிக் குதித்து உற்சாகமாகக் கத்தினான் அவன்.
ஜானகியின் பன்னிரண்டு வயது மகள் புஷ்பாவும், மகன் ரமணனும் ஓடிவந்து அருகில் நின்று கொண்டார்கள். முக்கலும் முனகலுமாக சாக்குக் கட்டிலில் படுத்துக் கிடக்கும் அப்பா, வாயில் பீடியோடு எழும்ப முயற்சி செய்தார்.
ஜானகி கடுமையாக முயற்சி செய்து சுயமாகவே கொஞ்சம் படித்தவள். தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் கடிதத்தைப் படித்தாள்.
அவளுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள், அபிலாஷைகள், எதிர்கால வெளிச்ச மயமான திட்டங்கள் அத்துணையையும் சுமந்துகொண்டு அந்தக் கடிதம் வந்திருந்தது.
“உங்களுடைய தேவையான விஷயங்கள் எல்லாம் முடிவாகிவிட்டன. டிக்கெட்டும் வந்து விட்டது. இன்னும் மூன்று நாட்களில் மிடுல் ஈஸ்ட் போகத் தயாராகவும்…”
அவள் மெதுவாக வாசிக்கிறாள். தபால்காரனின் பொக்கை வாய் இன்னும் கொஞ்சம் கிழிபடுகிறது.
ஜானகி வானவெளியில் பறக்கலானாள், எங்கெங்கும் சங்கீத அலைகள். பட்சி ஜாலங்களின் இன்னிசை கீதங்கள். வெண்மேகமென துகிலணிந்து, பொன்னொளிரும் விண்ணுலகில் மிதப்பதாக பிரமை.
“அம்மாவுக்கு டிக்கெட் வந்துட்டு, அம்மாவுக்கு டிக்கெட் வந்துட்டு… அம்மாவுக்கு டிக்கெட் வந்துட்டு…!”
குழந்தைகள் இருவரும் அவளைச் சுற்றிச் சுற்றி கை கொட்டிக் கும்மாளித்து கெக்கலிட்டுச் சிரித்து ஆனந்த மலர்களைச் சொரிந்தார்கள்.
பொன் வண்டுகளின் ரீங்கரிப்பு.
அப்பா, இரண்டு பிள்ளைகளைத் தவிர ஜானகிக்குள்ள ஒரே ஒரு உறவு அவள் தம்பி காளியண்ணன்தான். ஊதாரியாகவும், சோம்பேறியாகவும் திரிகின்ற அவனுக்கு அக்கா துபாய் போகிறாள் என்றதும் உற்சாக வெள்ளம் கரையுடைத்துப் பாய்ந்தது. கையிலுள்ள அத்துணை பொறுப்புகளையும் (விசேஷமாக சீட்டு விளையாடுவதைத் தவிர அப்படி ஒரு பொறுப்பு அவனுக்கில்லை.) அதனை தள்ளிப் போட்டுவிட்டு பரபரப்பாகக் காரியங்களில் ஈடுபடலானான்.
கட்டுநாயகா விமான நிலையம் போக ஒரு வான் வேண்டும். கிட்டத்தட்ட இருபத்தைந்து பேரையாவது அதில் ஏற்றிக்கொண்டு பாட்டும் கச்சேரியுமாகத்தான் போக வேண்டும். அந்த சின்ன சாம்ராஜ்யத்திற்குள்ளே பெரும் பரபரப்பும் குழப்பமும் தோன்றியிருந்ததால் அது அமளி துமளி படுகின்றது.
வாகனத்தில் இடம்பிடிக்க வேண்டும். எயர் போர்ட் போக வேண்டும். அடடா ‘சுவிஸ் எயார்’ வானக் கடலில் அதன் நீச்சலைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆவல் நெருப்பு அந்த ஏழைச் சனங்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் சடசடவென கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தமையால் எல்லோரும் அள்ளுப்பட்டார்கள்.
அங்கலாய்ப்புடன் மூன்றாம் திகதி எப்பொழுது பிறக்கும் என பரபரத்தார்கள். பலருக்கு நெஞ்சு பொறாமையால் எரிகின்றபொழுதும் வண்டியில் பாட்டுப் பாடிக்கொண்டு செல்லத் தயாராகிவிட்டார்கள்.
ஆனால் வண்டி?
காளியண்ணன் இரவும் பகலுமாகப் பிரயாசைப் பட்டான். கடன்பட்டாவது காரிய சாதனையில் ஈடுபடுவது அக்காதான். சுளைகளையாகப் பணம் அனுப்பப் போறாளே!
வண்டி ரெடி…
பௌடர், பேஸ்ட், பிரஸ், (ஜானகிக்கு அடுப்புக் கரியையும் பற்பொடியையும் தவிர வேறு அனுபவங்கள் இல்லை.) டிஸ்பிரின், சீப்பு, கண்ணாடி இன்னும் என்னென்னவோ இத்யாதிப் பொருட்கள் எல்லாமே தயார்.
ஜானகிக்குச் சந்தோஷம். தம்பி இப்பொழுதாவது பொறுப்போடு நடக்கிறானே என பெருமிதப்பட்டாள். கணவனை என்றோ இழந்துவிட்ட அவளுக்கு வாழ்க்கையில் என்னென்னவோ கஷ்டங்கள்.எப்படியோ அந்தக் கடின பாதைகளை எல்லாம் கடந்து இன்று ஒரு முழு நிவாரணத்திற்கான வழியைத் தேடி அவள் செல்கின்ற வேளையில் எல்லாமே வசந்தங்களாகின்றன.
காளியண்ணன் அவள் வருகின்றவரையில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை நட்சத்திரம் நெஞ்சில் ஒளிர்கின்றது.
அவனுடைய கட்டளைகளுக்கு எல்லாம் பணிந்தாள்.
மூன்றாம் திகதி காலை ஏழு மணிக்கு விமானம். பொதுவாகவே அந்தப் பிரதேசத்தின் எல்லாக் குஞ்சுகளுக்கும் அவளுடைய பயணம் தெரியும். கட்டுநாயகாவில் இருந்து புறப்படுகின்ற விமானம் கராச்சியில் தங்கி பின் டமாம் எயர் போட் நோக்கிப் புறப்படும் போன்ற விவரங்களிலிருந்து கராச்சியில் வெற்றிலைக்கு நல்ல கிராக்கி போன்ற விஷயங்கள் வரை மழலை குழந்தைகளுக்கும் தண்ணீர் பட்டபாடு.
எப்பொழுதும் அந்தக் குடிசைக்குள் பெண்டும் பிள்ளைகளுமாக வந்து குசலம் விசாரித்துப் போனார்கள். என்றாலுமென்ன அன்று இரவு சாப்பாட்டிற்குப் பின்னர் காளியண்ணனும் புஷ்பாவும் ரமணனும் ஜானகியுமாக ஒவ்வொரு குடிசைகளுக்கும் சென்று பிரியாவிடை சொல்லி பெரியவர்களிடமும் ஆசி பெற்றுக் கொண்டார்கள். ஜானகிக்கும் ஒரு மவுசு வந்திருந்தது. அவள் நாகரிகமாகவும் பக்குவமாகவும் அமைதியாகவும் பேசினாள். தான் கொழுத்தும், கன்னச் சதைகள் உப்பிப் பெருத்து பூரித்தும் போயிருப்பதாக அவள் பிரமையுற்றிருந்தாள். அடடடா.. போகு முன்னரே இப்படி என்றால் போய்வந்த பின்னர் எப்படி இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் நெஞ்சிற்குள் ஊடுருவிச் சென்றதும் அவள் உடல் புல்லரிப்படைந்து கலகலத்தாள்.
கணவனின் நினைவு வந்தது. குடியும் சூதுமாக வாழ்ந்து பின்னொரு சச்சரவில் உயிர் பறிகொடுத்து மண்ணுக்குள் மறைந்து சிதிலமாகிவிட்ட அவன் முழு உருவமாகத் தெரிந்தான்.
எத்தனை கோபத்திலும் என்னென்னவோ துன்பங்களிலும் அவன் ஒருபொழுதும் அவளை அடித்ததில்லை. கடுமையாக நெஞ்சு புண்படும்படியான வார்த்தைகளைச் சொன்னதில்லை. அவன் கத்தியால் குத்துப்பட்டு குற்றுயிராக வைத்தியசாலையில் கிடந்த பொழுது விக்கி விக்கி அழுதுகொண்டிருந்த அவளை அருகே அழைத்து இறுக அணைத்து தலையை வருடி நா தழுதழுக்க கண்கள் நீர் பொழிய என்னென்னவோ உளறினான்.
“ஜானு… நீ இன்னொரு கலியாணம் செய்துக்கோ… இந்த சின்ன வயசிலே உட்டுட்டு போறேனே” என அழுதான்.
கணவன் இறந்த பின்னர் இரண்டு மூன்று வருடங்களை எந்தவொரு வெளி ஆணின் துணையில்லாமலே அவள் கழித்துவிட்டாள். பெண்மைக்குத் தீமையில்லாமலே வாழப்போகின்ற வாழ்க்கை கிடைத்துவிட்டதாகப் பேருவகையுற்றாள்.
மூன்றாம் திகதி காலை புஷ்பித்தது.
கிழக்கு வானில் வெள்ளிக் கரைசல் விரிவதற்கு முன்னரே அந்தக் குடிசைப் பிரதேச சனங்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். குப்பிலாம்பின் வெளிச்சத்தில் உள்ள நடமாடினார்கள். அவரவர்களுக்கென புதியவைகளையும் சுத்தமானவைகளையும் அணிந்து கொண்டு ஆரவாரமாகத் திரிந்தார்கள். வண்டி வந்ததுதான் தாமதம். திமுதிமுவென ஓடி அதற்குள் ஏறிக்கொள்ள ஒரு சண்டை.
அரச மரத்தடி பிள்ளையாருக்கு ஜானகி சூடம் பற்ற வைத்தாள். நெற்றியில் திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாள். கண்களில் நீர்க் கோடுகள் பிரகாசிக்கின்றன.
‘ஆண்டவனே நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டிட்டே. நான் போய் சந்தோஷமா திரும்புவேன். அதுவரைக்கும் என் பிள்ளைகளை கஷ்டப்படுத்தாம நோய் நொடி இல்லாம காப்பாத்தரது உன் கையிலேதான் இருக்கு…’
அவள் மனமுருகி வேண்டினாள். நெஞ்சு மானசீகமான பிரார்த்தனையில் ஈடுபட்டது.
எல்லோராலும் வண்டியில் ஏற முடியுமா? கொஞ்சப் பேர்தான் அனுமதிக்கப்பட்டார்கள். அந்தக் கொஞ்சப் பேரும் அரிசி மூட்டைகளாக அடைக்கப்பட்டும் திணிக்கப்பட்டும் கிடக்க வண்டி பாய்ந்துகொண்டு புறப்பட்டு வாகன வீதிக்குத் தாவியது.
ஓஹோ என்ற சப்தத்தால் குடிசைகளில் எல்லாம் அதிர்வு. பிரதேசக் குழந்தைகள்தான் எக்காளமிட்டுக் கத்தினார்கள்.
பொழுது புலர்ந்துவிட்டது.
மப்பும் மந்தாரமுமாகவிருக்கும் வானில் வெய்யிலொளி இல்லை. மழைவரும் போலவொரு இருள். விமானத் தளம் தெரியத் தொடங்கியதும் பாட்டும் கூத்தும் கும்மாளமுமாகவிருந்த வண்டிக்குள் நிசப்தம் குடி கொள்கிறது.
“ஆ… அதோ ஒரு சுவிஸ் எயார்!” யாரோ ஆச்சரியக் குரலில் கத்த எல்லோர் கண்களும் ஆகாய வெளியில் பிரமிப்போடு லயிக்கின்றன.
அடடா எவ்வளவு அழகான விமானம். அது சுற்றிச் சுற்றி இறங்குகின்றது.
“ஏன் ஜானு, இதுலதான் போறியா?” யாரோ கேட்டார்கள்.
“இல்ல… இது மிடுல் ஈஸ்ட்லே இருந்து வருது…!”
அவள் எல்லாம் தெரிந்தவளாகச் சொன்னாள்.
டிரைவர் சிரித்தான்.
“ஏன் டிரைவர் சிரிக்கிறே….?” மறுபடியும் அந்தக் கிழவி கேட்டாள்.
அம்மா, இந்த அழகான ஏரோப்பிளானுக்கு என்ன பேர்னு தெரியுமா ஒங்களுக்கு….?”
“என்ன பேர்…?”
“ஆயா பிளைட்”
“என்னது… ஆயா பிளைட்டா…?”
வண்டி கட்டிட எல்லைக்குள் நுழைய எல்லோரும் பரபரப்புடன் இறங்குகிறார்கள்.
ஒரு வெள்ளி மீன் சயனிப்பதைப் போன்று அந்த விமானம் பச்சைப் புல்லின்மீது தெரிகிறது. அவள் அதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
கதவுகள் திறபடுகின்றன.
இரண்டு பையன்கள் வந்து ஒரு வெள்ளைப் பொதியை ட்ரொலியில் வைத்து வேகமாகத் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.
“ஆ… ஐயோ, எண்ட மகளே, பிஞ்சிப் பூவாபோய் இப்புடி பொணமா வாரியே….!”
ஒரு தாயின் அலறல் முழு விமான தளத்தையும் கிடுகிடுக்க வைத்தது.
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வீட்டுப் பணிப் பெண்ணாக அந்நிய நாட்டிற்குச் சென்று, கடினமாக தொழில் செய்தும், பெண்மையை இழந்த கன்னிப் பெண்ணொருத்தி பிணமகித் திரும்புகிறாள். அவளை பெற்றவனே கதறுகிறாள்.
ஜானகி தனக்குக் கீழ் பூமி பெயர்ந்து தூளாவதாக உணர்ந்தாள்.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |