கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 2,052 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30

அத்தியாயம்-25

சாமண்ணா அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனபோது சுபத்ரா முகர்ஜிக்கு மூர்ச்சை தெளிந்திருந்தது. ஆனாலும் மெலிந்து வாடிப் போயிருந்தாள். ஈனசுரத்தில் பேசினாள். உதடுகள் தெளிவில்லாத ஓசைகளை விடுத்தன. நகரின் புகழ் பெற்ற டாக்டர் மக்டனால்ட் துரையே வந்து அவள் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “‘பல்ஸ்’ சரியாக இருக்கிறது. யூ ஆர் ஆல் ரைட்!” என்று சொல்லி, விட்டுப் போனார். இரண்டு ஐரோப்பிய நர்சுகள் எந்நேரமும் படுக்கை அருகிலேயே இருந்தார்கள். 

சாமண்ணா உள்ளே நுழைந்தபோது யாரோ வசீகரமான வாலிபன் ஒருவன் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருந்தான். கிருதா மீசை வைத்திருந்தான். அவனைப் பார்த்தபோது சாமண்ணாவுக்கு ஏதோ மாதிரி இருந்தது. நெஞ்சில் உஷ்ணமாக ஜ்வாலை வீசியது. 

யார் அவன்? 

சுபத்ராவைத் தொட்டு அந்நியோன்யமாய்ப் பேசுகிறான் ஜோக் அடித்துச் சிரிக்கிறான். அவளும், ‘கோஷ்! கோஷ்!’ என்று கொஞ்சி அழைத்து நெருக்கம் கொண்டாடி இழைகிறாள். எல்லோரும் அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். 

செக்கச்செவேர் என்று நிறம். திண்மையாகப் புருவம், பளபள என்று வாரிவிட்ட கிராப்! 

சாமண்ணா தெரிந்தவர்களிடம் நாசூக்காக விசாரித்த போது, அவன் பெரிய ஜூட் மில் சொந்தக்காரர் மகன் என்றும் சுபத்ராவிடம் ரொம்ப நாளாகப் பழக்கம் என்றும் சொன்னார்கள். 

இரவில் சுபத்ராவைப் பற்றிய இன்ப எண்ணங்கள் குமிழ் குமிழாகச் சுழித்து வந்தபோது அங்கங்கே அந்த இளைஞனின் நினைவு ஒரு முள் போலத் தோன்றி அந்தக் கண்ணாடிக் குமிழ்களைக் குத்திவிட்டுச் சென்றது. 

இவர்களுக்குள் அப்படி என்ன உறவாக இருக்க முடியும்? தூரத்து உறவுக்காரனோ? காதலனா, கல்லூரித் தோழனா? யார் இவன்? 

இரண்டாம் நாள் சாமண்ணா ஆஸ்பத்திரிக்குப்போனபோது, சேட் அவனைத் தனியாக அழைத்துப் போய், “சாமண்ணாஜி! சுபத்ரா எழுந்தாச்சு. இப்போ உடம்பு குணமாயிட்டுது! ரெண்டு நாளில் ‘ஆக்ட்’ பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டார். ஆனா தர்பார் சீனை இப்போ எடுக்க வேணாம். வேறே சீன் எடுங்கன்னு சொல்லியிருக்கார்.” 

“ஏனாம்?” என்றான் சாமண்ணா. 

“அந்த சீன்லே உங்க நடிப்புதான் அவளை இந்த அளவுக்குப் பாதிச்சுட்டுதாம். அதனாலே அதைத் தள்ளிப் போடச் சொல்லியிருக்கார்.” 

“அப்படியா?” 

“ஆமாம். ஆஸ்பத்திரியில்கூட சுபத்ரா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. ‘நான் நிஜ சகுந்தலை! நான் நிஜ சகுந்தலை’ன்னு. டாக்டர் இதை ஒரு அபூர்வ கேஸ் என்கிறார். அதாவது தான் நடிக்கிற பாத்திரமாகவே மாறி, தன்னை சகுந்தலையாகவே அந்த அம்மா நினைச்சுக்கறாங்களாம். அந்த நினைப்பில்தான் அன்னிக்கு மூர்ச்சை ஆயிட்டாங்களாம்!” 

சேட் சொன்னதும் சாமண்ணாவுக்குப் பளிச்சென்று ஓர் எண்ணம் உதித்தது. ஒருவேளை தன்னை அவள் கணவனாகவே தீர்மானித்துக் கொண்டு, அந்தப் பிரமையில் துஷ்யந்தன் நிராகரிப்பதை உண்மையாக எடுத்துக் கொண்டு விட்டாளோ? 

சாமண்ணா மனதுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை வெளிக் காண்பிக்கவில்லை. அன்று வார்டுக்குள் நுழையும்போது சுபத்ராவே அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 

மெல்லிய வெளிச்சத்தோடு அறை நிதானமாக இருந்தது. சாமண்ணாவைக் கண்டதும், “வாங்க சாமண்ணா” என்றாள் ஆர்வத்தோடு. 

தன் அருகில் உட்கார்ந்திருந்த கோஷை அலட்சியமாகப் பார்த்து, “சரி, அப்புறம் பார்க்கலாம் கோஷ்” என்றாள். 

சாமண்ணா வந்ததும் அவள் மாறுதலாக நடந்து கொள்வதை கோஷ் புரிந்து கொண்டபோதிலும் எழுந்திருக்காமல் தயங்கினான். 

“எனக்கு ஓய்வு வேணும். நல்லாத் தூங்க விரும்பறேன். ஒரு ரெண்டு நாள் யாரும் வராம இருந்தா நல்லது” என்று ஆங்கிலத்தில் கூறினாள் அவள். 

கோஷ் அப்போதும் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சுபத்ரா, 

“கோஷ்! உங்களைத்தான் சொல்கிறேன்” என்று சற்று அழுத்தமாகக் கூறினாள். 

கோஷ் குமைவது தெரிந்தது. 

இந்தச் சமயத்தில் சாமண்ணாவுக்கு அங்கிருப்பது உசிதமாகப் படவில்லை. அவன் திரும்பி வெளியே நடந்தான். “சாமு! நீங்க எங்கே போறீங்க? நீங்க இருங்க” என்றாள் சுபத்ரா. வெறும் குரலாக இல்லை அது! அவளுடைய ஆன்மாவின் அந்தரங்க தொனியாக ஒலித்தது. 

“இல்லை சுபத்ரா! நான் அப்புறம் வரேன்…” என்று கூறிக் கொண்டே சாமண்ணா அந்த இடத்தைவிட்டு அகலப் பார்த்தான். 

“சாமு!” என்று தாபத்துடன் மேலும் தீர்க்கமாக அழைத்தது அவள் குரல். 

கோஷ் அவர்கள் இருவரையும் கடுமையாகப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து வெளியேறினான். 

சுபத்ரா படுக்கையிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்து சாமண்ணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பிடியின் அழுத்தத்தில் ஆயிரம் அந்தரங்கங்கள் இருந்தன. “சாமு … சாமு… நீங்க வந்தால்தான் எனக்கு மனசுக்கு இதமாக இருக்கு!” என்று குழந்தைபோல் சொல்ல, சாமண்ணா எதுவும் பேசாமல் அவளைக் கனிவோடு பார்த்தான். 

இருவரும் அந்தப் பரவச நிலையிலே சிறிது நேரம் மெய்ம் மறந்து இருந்தார்கள். 

ஏதோ சப்தம் கேட்டுக் கைகளை விடுவித்துக் கொண்ட சாமண்ணா திரும்பியபோது ராமமூர்த்தியும், சகுந்தலாவும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். 

“வாங்க! வாங்க!” என்றான் சாமண்ணா. 

“வாங்க டாக்டர்! அன்னிக்கு நீங்கதான் எனக்கு முதலுதவி செஞ்சீங்களாம். ரொம்ப நன்றி” என்றாள் சுபத்ரா. 

சகுந்தலா எந்த பாதிப்பும் இல்லாததுபோல் சலனமற்று நின்றாள். 

“ஊருக்குப் போகணும். வந்து நாளாச்சு” என்று பேச்சை ஆரம்பித்தார் ராமமூர்த்தி. 

“டாக்டர் ஸார்! அதுக்குள்ள என்ன அவசரம்? மெதுவாப் போகலாம் இருங்க. ஊரைச் சுற்றிப் பார்த்தீர்களா? பேலூர் மடம், காளி கோவில் எல்லாம் பார்க்க வேண்டாமா? நான் வேணும்னா நாளைக்குக் கார் அனுப்பறேனே!” என்றான் சாமண்ணா. 

“நீ என்ன சொல்கிறாய்?” என்பதுபோல் சகுந்தலாவைப் பார்த்தார் டாக்டர். 

“என்ன சகுந்தலா, நான் சொல்றது?” என்று கேட்டுக் கண்களைச் சிமிட்டி சகுந்தலாவிடம் மாறாத அன்பு கொண்டவன்போல் ஒரு பிரமையை உண்டாக்கினான் அந்த நடிப்புக் கலைஞன். 

சகுந்தலாவின் அடி உதட்டல் அரைகுறையாகச் சின்னப் புன்னகை தோன்றி மறைந்தது. சாமண்ணாவின் கபட நாடகம் அவளுக்குப் புரியாமலில்லை. ஆனாலும் தன் உணர்ச்சிகளை அவள் வெகு திறமையோடு மறைத்துக் கொண்டாள். 

“ஏன் சாமண்ணா, கதாநாயகி திரும்பற வரைக்கும் ஷூட்டிங் கிடையாதுதானே? நீயும் நாளைக்கு எங்களோடு வாயேன்” என்றார் ராமமூர்த்தி. 

“நானா?” என்று ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்த சாமண்ணாவின் குரலில் வறட்சி தெரிந்தது. சகுந்தலா ஒய்யாரமாகத் திரும்பி அர்த்தத்தோடு அவனை ஒரு பார்வை பார்த்தாள். 

“என்னது? என்ன விஷயம்?” என்றாள் சுபத்ரா. 

“ஒன்றுமில்லை. நாளைக்கு இவர்களோடு நான் ஊர் பார்க்க வரணுமாம்!” 

“நோ, நோ, நீங்க என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க. நீங்க எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கணும். அப்போதான் நான் உடம்பு தேறி சீக்கிரம் ஷூட்டிங் வர முடியும்!” என்றாள். 

“ரொம்ப சரி. சாமண்ணா உங்களோடயே இருக்கட்டும். நாங்கள் தனியாகவே ஊர் சுற்றிப் பார்த்து விடுகிறோம். என்ன சாமண்ணா! நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார் ராமமூர்த்தி, ‘சரி’ என்பதுபோல் தலையாட்டிய சாமண்ணா அவர்களை ஜாடை காட்டி வெளியே அழைத்துப் போனான். 

“எதுக்கும் நான் சாயங்காலம் இவளுக்கு டிமிக்கி கொடுத்துட்டு வந்துடப் பார்க்கறேன். இன்னும் ஒரு அவுட்டோர்தான் பாக்கி. அப்புறம் இவளையும் இந்தக் கல்கத்தாவையும் விட்டுட்டு வந்துடறேன், பாருங்கோ!” என்றான். 

ராமமூர்த்தி அர்த்தமில்லாமல் தலையாட்டிப் புறப்பட்டார். வாசல்வரை அவர்களைக் கொண்டுபோய் விட்டு வந்தான் சாமண்ணா. 

அன்று இரவு சாமண்ணா உறங்கவில்லை. தங்க மயமான சொர்க்கம் அவன் மீது இறங்கியிருந்தது. எங்கே திரும்பினாலும் தெய்வ வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு இன்பத்தையும் தாங்க முடியாமல் திணறினான் சாமண்ணா. 

சுபத்ரா அவன் கையைப் பற்றிய இடம் இன்னும் குளிர்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்துதான் அத்தனை ஆனந்தங்களும் உற்பத்தி ஆகின. அமிருதக் துளிகள் சுரந்து உடல் எங்கும் பரவி நின்றன. 

‘நீங்கதான் எனக்குத் துணை’ என்று அவள் கூறிய வார்த்தை செவிகளில் தேனாய் ஒலித்தது. 

‘என்னை விட்டுப் போயிடாதீங்க, சாமண்ணா.’ 

ஒருநிலை கொள்ளா ஆனந்தம் அவனது சரீரத்தை ஆட் கொண்டு சுழற்றுவது போலிருந்தது. 

சுபத்ராவா! அந்தக் கல்கத்தா ராணியா? வங்கத்துக் கனவு சுந்தரியா? அவளா என்னை நேசிக்கிறாள்? அவளா இப்படி யெல்லாம் பேசுகிறாள்? நினைக்க முடியவில்லையே! 

ஏன்? என்னிடம் திறமை இருக்கிறது. தகுதி இருக்கிறது. அந்தஸ்து இருக்கிறது. அதனால்தான் சுபத்ரா என்னிடம் இப்படி மயங்கிக் கிடக்கிறாள்! எப்படிப்பட்ட பெரியவங்க, ஜமீந்தாருங்க சமஸ்தான ராஜாக்கள் எல்லாம் அவள் காலடியில் விழத் தயாராயிருக்கிறபோது அவள் என் காலைப் பிடிச்சு கெஞ்சத் தயாராயிருக்கிறாள்! 

காலையில் எழுந்ததும் ராமமூர்த்திக்குக் கார் அனுப்ப வேண்டிய நினைவு வந்தது. 

சகுந்தலாவின் சலனமற்ற முகத்தை ஆராய்ச்சியோடு எண்ணிப் பார்த்தான். 

ஹூம்! இந்தப் பேரழகி சுபத்ராவின் முன்னால் அவள் ஒன்றுமே இல்லை. அவனுக்கு உயர் ரக ஆப்பிளே கிடைத்தாயிற்று. இனிமேல் சொந்த ஊரில் விளைந்த கிச்சிலிப்பழம் இனிக்குமா? 

மணி அடித்து டிரைவரை அழைத்தான்.

அத்தியாயம்-26

‘விக்டோரியா மெமோரியல்’ பார்த்துவிட்டு, அப்படியே எதிரில் மியூசியத்தையும் பார்த்தானதும், “அப்பா வீட்டுக்குப் போகலாமா?” என்றாள் சகுந்தலா. 

“ஏன் இதுக்குள்ளவா களைச்சுட்டே!” என்று கேட்டார் ராமமூர்த்தி. 

“இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லை” என்றாள் சகுந்தலா. 

“சரி, கொஞ்சம் லேக் பக்கம் பார்த்துட்டு அப்படியே வீட் டுக்குப் போயிடலாம், வா!” என்றார் ராமமூர்த்தி. அங்கிருந்து இருவரும் லேக் ஏரியாவுக்குப் போனார்கள். 

சகுந்தலா உற்சாகமில்லாமல் காணப்பட்டாள். காரிலேயே வீட்டுக்குப் போய் இறங்கிக் கொண்டார்கள். 

டிரைவர் மறுபடியும் இரண்டு மணிக்கு வந்து, “புறப்படலாமா?” என்று கேட்டபோது, “இல்லை; நீங்க வண்டியை எடுத்துட்டுப் போயிடுங்க! இன்றைக்கு இனிமே நாங்க வெளியிலே போகப் போறதில்லை!” என்றாள் சகுந்தலா. 

“நாளைக்கு வரட்டுமா?” என்று கேட்டான் டிரைவர். 

“நாளைக்கும் வேண்டாம்.” 

ஊர் சுற்றிப் பார்த்த களைப்பில் ராமமூர்த்தி அயர்ந்து தூங்கிவிட்டார். கண் விழித்ததும் கெடியாரத்தைப் பார்த்தார். “ஐயோ, நாழியாயிடுத்தே! வெளியே போகவேண்டாமா, சகுந்தலா?” என்று கேட்டார். 

சகுந்தலா சோபாவில் மௌனமாய் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். 

“என்ன சகுந்தலா! ஏன் இப்படிப் பிரமை பிடிச்ச மாதிரிருக்கே? என்ன ஆச்சு உனக்கு? சீக்கிரம் புறப்படு, கார் வந்துடும்” என்றார் ராமமூர்த்தி. 

“அப்பா! உடம்பு ஏதோ மாதிரி இருக்கு. மனசிலும் உற்சாகமில்லை. வண்டியைத் திருப்பி அனுப்பிச்சுட்டேன்” என்றாள் சகுந்தலா. 

“அப்படியா? பேலூர் மடத்துக்குப் போகணும்னு ஆசைப்பட்டியே!” 

“ஆமாம். இப்ப வேணாம். இன்னொரு சமயம் வரும்போது பார்த்துக்கலாம்” என்றாள். அவளுக்கும் ஆசைதான். ராமகிருஷ்ணரை நிறையப் படித்திருக்கிறாள். அவர் உபதேசம் ஒவ்வொன்றும் உபநிஷதம்போல இருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். 

“அம்மா பசி வந்தவுடன் என்னை எழுப்பு. சாப்பிடுகிறேன்” என்றது குழந்தை. 

“உன் பசியே உன்னை எழுப்பிவிடும்” என்றாள் தாய். அடேயப்பா! எத்தனை சுருக்கமாக அமைந்துவிட்ட தத்துவம் இது! இந்தச் சுருக்கத்திலும் எத்தனை சுலபமாக அர்த்தத்தை வெளிக் காண்பிக்கிறது!

அந்த உயர்ந்த மகானின் பாதம் பட்ட பேலூர் மடத்தைப் பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை இப்போது அமுங்கிப் போயிருந்தது. 

“என்ன சகுந்தலா இது! உன் உடம்புக்கு என்ன? மறுபடியும் எப்போ கல்கத்தா வரப் போகிறோம்? எப்போது பேலூர் பார்க்கப் போகிறோம்? டாகூர், டாகூர்னு உயிரை விடுவயே! அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டாமா?” என்றார் ராமமூர்த்தி. 

மனசின் அடி ஆழத்தில் ஒரு ‘தீ’ கிழித்த மாதிரி இருந்தது. ஒரு கணம் உடலில் பளிச்சென்று வெளிச்சம் பரவி அடுத்த கணம் அழிந்தது. “அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்காகவே ஒருமுறை வந்தாப் போச்சு!” என்று தீர்மானமாய்க் கூறிவிட்டாள். அவள் உற்சாகம் குன்றி வித்தியாசமாக நடந்து கொண்ட விதம் ராமமூர்த்திக்குக் கவலை தந்தது. 

“வெளியே போயிட்டு வரலாம், வா. அப்புறம் எல்லாம் சரியாயிடும்” என்றார். 

“இல்லைப்பா!” 

“ஏம்மா, என்ன விஷயம்? மறுக்காமல் சொல்லு” என்று ராமமூர்த்தி குனிந்து அவளது கையை எடுத்து நாடி பார்த்தார். நெற்றியில் கை வைத்தார். 

“காய்ச்சல் எதுவும் இல்லையே!”

“உள்ளுக்குள் இருக்கப்பா!”

“மருந்து ஏதாவது?” 

“வேண்டாம்.” 


ஆஸ்பத்திரியிலிருந்து மாலையில் சுபத்ராவை விடுதலை செய்தார்கள். பளபளக்கும் ரோல்ஸ் ராய்ஸில் ஏறப் போனவளை நிறுத்தி, ப்ளாஷ் பல்புகள் பளிச்சிடப் பத்திரிகைக்காரர்கள் சுபத்ராவைப் படம் எடுத்துக் கொண்டார்கள். 

சுபத்ராவின் கார் அவளது வீட்டு வாசலில் போய் நின்ற போது அங்கேயும் நிருபர்கள் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொண்டது. புகைப்படக்காரர்கள் அவளைப் பல கோணங்களில் படமெடுத்ததும், “ஸார், நீங்களும் சேர்ந்து நில்லுங்க” என்று சாமண்ணாவை அழைத்து அவள் பக்கத்தில் நிறுத்திப் போட்டோ எடுத்தார்கள். 

“சமீபத்தில் தங்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று சுபத்ராவிடம் கேட்டனர். 

“ஓ! அது என் வாழ்க்கையிலேயே பெரிய அனுபவம்! சாமண்ணாவின் நடிப்பு என்னை அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுத்திவிட்டது. அதென்னவோ, அந்த நடிப்பு அவரை நிஜ துஷ்யந்தனாகவே ஆக்கிவிட்டது. நான் அவரை நிஜ துஷ்யந்தன் என்றே நம்பிவிட்டேன்” இதைச் சொல்லிவிட்டு அவள் சாமண்ணாவைப் புன்னகையோடு பார்த்தாள்! எதையோ, எண்ணியவளாய்க் கலகலவென்று சிரித்தாள். 

“மன்னிக்கணும் மேடம்! நீங்களும்கூட நிஜ சகுந்தலையாவே ஆயிட்டீங்களே!” 

“ஆமாம்.” 

“இனிமே நீங்க சாமண்ணா கூடத்தானே ஜோடியா நடிப் பீங்க?” 

“ஆமாம்! எப்பவுமே இனி சேர்ந்தேதான் எல்லாமே…” என்று அந்த வார்த்தையை அவள் முடிக்குமுன்பே பலத்த கரகோஷம்! 

போர்ட்டிகோவிலிருந்து எல்லோரும் உள்ளே போனார்கள். மேற்கத்தி முறையில் மது வழங்கப்பட்டது. கிராமபோன் இந்திப் பாடல்களைப் பாடியது. இரண்டு பெரிய பங்காக்கள் ஹாலில் ஆடின. சுபத்ரா விருந்தாளிகளிடையே அங்கங்கே நின்று உரையாடினாள். அவ்வப்போது சாமண்ணாவின் கைகளைப் பிடித்துத் தன் இடுப்போடு அணைத்துக் கொண்டாள். 

சாமண்ணா அந்த ஸ்பரிசத்தில் காந்தர்வ பரவசமாகிக் காற்றில் மிதப்பதுபோல் உணர்ந்தான். தன் பழைய நிலையைச் சற்றே எண்ணிப் பார்த்தான். 

அவனது கிராமம். அவனது குடும்பம். அவனது தாயார். அந்த வறுமை…. 

‘சாமண்ணா! எப்படி ஆயிட்டேடா நீ! நான் பார்க்கக் கொடுத்து வைக்கலியேடா!’ 

விருந்து வைபவங்கள் எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது ராமமூர்த்தியும் சகுந்தலாவும் அவன் நினைவில் குறுகுறுத்தார்கள். ‘அதான் காரை அனுப்பியாச்சே! ஊரெல்லாம் சுற்றிக் காட்டச் சொல்லியாச்சே! இதுக்கு மேலே என்ன செய்துட முடியும்?’ என்று ஆத்திரத்தோடு மனச்சாட்சிக்குப் பதில் கூறிக் கொண்டான். 


ஊருக்குத் திரும்பிய சகுந்தலா, சில நாட்கள் காய்ச்சலோடு இருந்தாள். சாதாரண ஜுரம்தான். 

நாலு நாட்கள் படுக்கையிலேயே இருந்தபின் ஐந்தாவது நாள் மெல்ல எழுந்து தோட்டத்தில் உலாவத் தொடங்கினாள். 

‘சகுந்தலா! உனக்கு என்னம்மா, என்னம்மா?” ராமமூர்த்தி இதற்குள நூறு தடவை கேட்டுவிட்டார். 

“ஒன்றுமில்லை” என்ற சாரமற்ற சொல்தான் அவளிடமிருந்து வந்த பதில். 

பின்னொரு நாள் மாலை சகுந்தலா காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியதும், ‘சகுந்தலா பழைய நிலைக்கு வருகிறாள்’ என்று எண்ணி மகிழ்ந்தார். 

முதலில் பிரதான சாலைக்குள் காரை ஓட்டிச் சென்ற சகுந்தலா அங்கிருந்து ஊரைவிட்டுச் சற்றே விலகினாள். 

ஓரிடத்தில் காரை நிறுத்திப் புதுக்காற்றை சுவாசித்தாள். வெளி இயற்கையின் மெலிதான மணம் அதில் பரவியிருந்தது. உள்ளே இருதயமெல் லாம் புகுந்து குளிர்ச்சி தருவதுபோல் இருந்தது.பிறகு திரும்பவும் கார் ஏறி மேலும் சற்று தூரம் சென்று அந்தக் கிளைப்பாதை ஓரம் நிறுத்தினாள். கீழே இறங்கியதும் கால் நடுங்கிற்று. அடிகளை மெதுவாக முன்னே வைத்து நடக்க ஆரம்பித்தாள். 

சாலை ஒரு அவிழ்ந்த நாடா போலக் கிடந்தது. மாலை மயக்கத்தில் இடதுபுறம் வயலும், பாறைகளும் நிழல் சித்திரங்களாய் மாறிக் கொண்டிருந்தன. 

வலதுபுறம் மல்லிகைப் புதர்களிலிருந்து வந்த மணத்தில் சாமண்ணாவை நுகர்ந்தாள். 

ஏன் இந்த ஓடையில் துக்கம் நிரம்பியிருக்கிறது? இதைப் பார்த்ததும் என் மனத்தில் ஏன் சுமை ஏறுகிறது? இயற்கையே அங்கங்கு சோகங்களை ஒளித்து வைத்திருக்குமோ? 

அந்த சகுந்தலைக் காட்சி பனியிலிருந்து விலகியது போல் பிரத்யட்சமாயிற்று. 

….காலில் முள் குத்துகிறது. பாறையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள் ‘சாமு’ குனிந்து அந்த முள்ளை எடுக்கிறான்… 

மேலே நடந்தாள். 

அந்தப் பிரதேசமே துக்கத்தை இறுக்கமாக வைத்திருப்பது போல் தோன்றியது. 

“சாமூ!” என்று முனகலாய் அழைத்தாள். பழைய மாலைப் பொழுதில் இங்கே நிச்சிந்தையாய், நிர்மலமாய் அவனுடன் உலாவிய காட்சிகள் அவள் கண்ணீரில் கரைந்தன 

அத்தியாயம்-27

அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந்தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஓடையில் முன்பெல்லாம் இருந்த ஒரு குதூகலமான உயிரோட்டம் இப்போது எங்கே? 

உணர்ச்சியின் முதல் திவலை கண் ஓரம் வந்தது. சகுந்தலா தேம்பினாள். நெஞ்சு அடிக்கொரு முறை விம்மியது. அந்தத் தனிமையில், லேசாக இருள் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவளால் மனம் விட்டு அழ முடிந்தது. 

அவள் தனிமையில் நின்று அழுவதைச் சற்று தூரத்தில் ஒளிந்து கவனித்துக் கொண்டிருந்தது ஓர் உருவம். அதை சகுந்தலா கவனிக்கவில்லை. இருள் கனக்கவே, அதற்கு மேல் அந்த இடத்தில் இருப்பதற்கு அஞ்சியவளாய் காருக்குச் சென்றாள். உடனேயே அந்த உருவமும் லேசாக ஓடி அங்கே மரத்தோடு சாத்தி வைத்திருந்த சைக்கிளில் ஏறிக் காற்றாய்ப் பறந்தது. 

அந்த உருவம் ராமமூர்த்திதான். தம் மகளுடைய போக்கில் ஏதோ துயரம் நேர்ந்திருப்பதை ஊகித்த அவர், அவள் தனிமையில் எழுந்து சென்றதுமே ரகசியமாகப் பின்தொடர்ந்து போய் மறைந்து நின்று கவனித்தார். இப்போது அவளுக்கு முன்னால் குறுக்கு வழியில் புகுந்து வேகமாய் வீடு போய்ச் சேர்ந்து விட்டார். 

வீட்டுக்குள் நுழைந்ததுமே, “மிஸ்டர் ராமமூர்த்தி!’ என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. 

“இன்னிக்கு என்ன கிளப்புக்கு வரல்லியா?” என்று கேட்டுக் கொண்டு வந்தார் பஞ்சாபகேசன். 

“இல்லை! எனக்கு உடம்பு சரியில்லை.” 

“அப்படியா! சரி; ஓய்வு எடுங்க! நான் வரேன்!’ என்று போய் விட்டார் பஞ்சாபகேசன். 

சகுந்தலாவை எண்ணிய போது ராமமூர்த்திக்குக் கண்ணீர் வந்துவிட்டது. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டார். இதற்குள் சகுந்தலா வந்து விட்டாள். அவள் காரிலிருந்து இறங்கும் போதே, “வந்துட்டியா சகுந்தலா! ஒரே கவலையாயிடுத்து!” என்றார். 

கல்கத்தாவுக்குப் போகும் போது அவளிடமிருந்த ஆனந்தம், அங்கே அவளிடம் காணப்பட்ட குதூகலம் எல்லாம் இப்போது மேகத்தில் மறைந்து விட்டன. 

கல்கத்தாவைச் சுற்றிப் பார்க்கக் கூட விருப்பமின்றித் திரும்பி விட்ட விரக்தி, ஊருக்குத் திரும்பியதும் சோர்ந்து படுத்துவிட்ட நலிவு, காய்ச்சல், அவளை விட்டுப் போய்விட்ட அந்த நிரந்தர உல்லாசம், சிரிப்பு, புன்னகை – இதற்கெல்லாம் என்ன காரணம்? 

இன்று மல்லிகை ஓடைப் பாதையில் அவள் தனிமையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பிறகுதான் புரிந்தது. 

காதல் என்ற மாயப்பிணி சகுந்தலாவையும் பற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்தக் காதல் யார் மீது? 

‘சாமண்ணா மீதா? படிப்பு வாசனையே இல்லாத அந்தப் பாமர நடிகனையா சகுந்தலா காதலிக்கிறாள்? 

இவ்வளவு நாகரிகமாக வளர்ந்துள்ள சகுந்தலாவா சாமண்ணாவைக் காதலிக்கிறாள்? 

தனக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத, அந்தஸ்து இல்லாத ஒரு சாதாரண நடிகனைத் தேர்ந்தெடுக்க அவள் மனம் எப்படி ஒப்பியது? 

ஒருவேளை அவன் கலையில், நடிப்புத் திறமையில் மயங்கி விட்டாளா? ஆச்சரியம்! 

சகுந்தலா! வாழ்க்கையில் எத்தகைய தவறு செய்து விட்டாய் நீ! உன் உள்ளத்தை நீ ஒருவனிடம் பறிகொடுப்பது தவறல்ல! அது இயற்கை, ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த ‘ஒருவன்’ அதற்குத் தகுதியானவன்தானா என்பதைச் சிறிதாவது யோசித்துப் பார்த்தாயா? படித்த பெண்ணான நீயா இப்படிச் செய்வது?’ 

மறுநாள் மாலை டாக்டர் டிஸ்ட்ரிக்ட் கிளப்புக்குப் போயிருந்த போது அங்கே ‘ஸில்வர் ஸ்க்ரீன்’ என்ற பத்திரிகை வந்திருந்தது. 

அதன் நடுப் பக்கத்தில் காணப்பட்ட வண்ணப் படம் ஒன்று அவருக்கு எரிச்சல் மூட்டியது. 

சாமண்ணாவும், சுபத்ரா முகர்ஜியும் தம்பதி போல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்றனர். 

கீழே ஆங்கிலத்தில்….”இவர்கள் வெறும் திரை ஜோடி மட்டுமல்ல! வாழ்க்கை ஜோடியாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.” என்று ஒரு வாசகம். 

‘தூ’ என்று அதைத் தூக்கி எறிந்தார். வெளியே போக எழுந்தவர் ஒரு கணம் தயங்கி அந்தப் பத்திரிகையைக் குனிந்து கையோடு எடுத்துக் கொண்டார். நேராக வீட்டுக்குப் போய் சகுந்தலாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தார். அவளை அங்கே காணவில்லை. சட்டென அவளது மேஜை மீது அந்தப் படத்தைப் பரப்பி வைத்துவிட்டு வெளியே வந்தார். ‘சகுந்தலா அந்தப் படத்தைப் பார்ப்பாள். பார்த்துவிட்டுக் கண்ணீர் விடுவாள். சாமண்ணாவின் துரோகம் அவளைச் சுட்டுப் பொசுக்கும். உடம்பெல்லாம் தணலாய் தகிக்கும். அந்தத் துயரம் மிக்க உச்சத்தில் அவள் கண்ணீர் விடும்போது நாம் அருகில் இருக்கக் கூடாது. எங்காவது வெளியே போய்விட வேண்டும்”. உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளப் கட்டடத்தை நோக்கி விரைந்தார். 


கல்கத்தாவைப் பார்த்ததும் சிங்காரப் பொட்டு மலைத்து நின்று விட்டான். ஆடம்பரங்கள் நிறைந்த குபேரப் பட்டணமாக மின்னியது அது. நிறைய இங்கிலீஷ்காரிகள் உலாவி னார்கள். கார்கள் புதிது புதிதாக ஓடின. பெரிய மாளிகைகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களும்,சாலை மரங்களும் கம்பீரமாக நின்றன. ஹௌரா பிரிட்ஜ் ஆச்சரியத்தைத் தந்தது. டிராம் கார் ‘கிணுங், கிணுங்’ என்று மணி அடித்தது. 

தமிழர் பகுதியில் ‘கோமள விலாஸ்’ ஓட்டலில் ரூம் பிடித்து, குளித்து சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பி சாமண்ணாவைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டான். ‘உனக்கு வாழ்வு தந்த நண்பனை வெறுங்கையோடு பார்க்கலாமா?’ என்று கேட்டது உள்குரல். வழியில் வங்காளிப் பெண் ஒருத்தி ஆஸ்திரேலிய திராட்சையைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். அழகாயிருந்தாள். பேரம் செய்யாமல் வாங்கிக் கொண்டான். 

பிறகு சாமண்ணாவின் விலாசம் கண்டுபிடித்து அந்தப் பெரிய பங்களா முன்னால் போய் நின்ற போது காக்கிச் சட்டை காவல்காரன் தடுத்து நிறுத்தினான். உடம்பு குறுகிவிட்டது. “சாமண்ணாவின் நண்பன். கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்று சொல்லி அனுமதி பெற்றான். சிறிதும் பெரிதுமாகப் பல கார்கள் சாமண்ணாவுக்காகக் காத்திருந்தன. வராந்தாவில் நின்ற இளைஞன் ஒருவன் சிங்காரப் பொட்டுவின் பெயரைக் கேட்டுச் சீட்டில் எழுதி வாங்கிக் கொண்டு, “இப்படி உட்காருங்க. கூப்பிடறோம்” என்று முகப்பு ஹாலில் உட்கார வைத்தான். 

மேலே பிரம்மாண்டமான ‘சேண்ட்லியர்’ ஒன்று காற்றில் அசைந்த போது சிறுசிறு கண்ணாடிக் குழல் சரங்கள் ‘கிணு கிணு’த்தன. 

எதிரே சுவரில் கங்கைக் கரைக் காட்சியின் ஓவியம் தத்ரூபமாக இருந்தது. சில்க் பிடிகளுடன் நீளநீளமாய் வெல்வெட் சோபாக்கள்! நடுவில் ஓவல் வடிவத்திலிருந்த மேஜையின் பளபளப்பு பிரதி பிம்பம் காட்டியது. 

சிங்காரப் பொட்டுவுக்கு முன்பே வந்து ஹாலில் காத்திருந்தவர்கள் ஒவ்வொருத்தராக உள்ளே போய் வந்தார்கள். ‘அண்ணன் சாமண்ணாவைப் பார்க்கவா இவ்வளவு கூட்டம்! அண்ணனுக்கு இவ்வளவு மரியாதையும் மதிப்பும் வந்து விட்டதா!’ 

மனசில் சந்தோஷம் புரண்டது. 

‘அடேடே, ஊரிலேர்ந்து வக்கீல் ஐயா, அவங்க சம்சாரம், குமாரசாமி, பாப்பா இவங்கல்லாம் வந்து பார்க்காமப் போயிட்டாங்களே!’ 

எல்லோரும் போன பிறகு சிங்காரப் பொட்டு கடைசியாக அழைக்கப்பட்டான். 

உள்ளே ஒரு நடையைத் தாண்டி அந்தப் பெரிய அறைக்குள் காலை வைத்ததும் சாமண்ணா தென்பட்டான். அந்தக் குசேல சாமண்ணாவுக்கும் இப்போது காணும் குபேர சாமண்ணாவுக்கும் எத்தனை வித்தியாசம்! மேனியில் பணக்காரத்தனம் தெரிந்தது. பாவனைகளில் பெரிய மனுஷத்தனம் இருந்தது. 

“வா சிங்காரம், எப்ப வந்தே? முன்னாடி ஒரு லெட்டர் போட்டிருக்கக் கூடாதா? ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பியிருப்பேனே? எல்லாரும் நல்லாயிருக்காங்களா? நாடகமெல்லாம் நடக்குதா?” என்று ஒரு தோரணையுடன் கேள்விகளை அடுக்கினான். 

மேஜைகளும் மற்ற சாதனங்களும் விதவிதமாய்க் குவிந்திருக்க, மேலே சில்க் பங்கா ஒன்று பெரிய ஊஞ்சல் போல ஆடியது. 

“அண்ணே!” என்று கூறிய சிங்காரப் பொட்டுவுக்குச் சந்தோஷத்தில் நெஞ்சு விம்மியது. அவனையும் மீறித் தாவிப் போய் பரதன் வேடத்தில் ராமனைக் கட்டிக் கொள்வது போல் தழுவிக் கொண்டான். 

அப்படியே அவன் தோள் மேலே வளைத்துக் கை போட்டுக் கொண்டு யாரும் பார்க்காதபடி அடுத்த அறைக்குள் அழைத்துப் போய் விட்டான். 

“இந்தா சிங்காரம்! நம்மூர் மாதிரி உரக்கப் பேசாதே! நாட்டுப்புறம்னு நினைப்பாங்க! இப்படி உட்காரு. உன்னைக் காக்க வெச்சதுக்குக் காரணம் அவங்களை முதல்லே அனுப்பிச்சுட்டு உன்னோடு சாவகாசமாப் பேசணும்னுதான்.”

இன்னும் உணர்ச்சி வசத்தில் இருந்த சிங்காரப் பொட்டு, “அண்ணே, நீங்க இப்படி இவ்வளவு பெரிய ஆளா வருவீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும். அதனாலேதான் நீங்க கல்கத்தா போறதை நான் தடுக்கலை. இப்போ உங்க வாழ்க்கை அடியோடு மாறிப் போச்சு! என் மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது… எனக்குக் கொஞ்சம் இடம் கொடுங்க” என்று சொல்லி திடீரென்று முழங்கால் போட்டு சாமண்ணாவின் கால்களைப் பற்றினான். 

“இந்தா! இந்தா! சிங்காரம்! என்ன இதெல்லாம்?’ என்று சாமண் பதற்றத்தோடுகால்களை உயரத்தில் தூக்கிக் கொள்ள, பிடிவாதமாய் அவன் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான் சிங்காரம். 

“உங்ககிட்டே ஒரு முக்கிய சமாசாரம் சொல்லணும் அண்ணே! அதுக்குத்தான் கல்கத்தா வந்திருக்கேன்!” 

“சிங்காரம்! நீ எது வேணுமானாலும் சொல்லு. ஆனா இந்த ‘அண்ணே அண்ணே’ மட்டும் வேணம். இப்ப சொல்லு. அதென்ன அப்படிப்பட்ட சமாசாரம்?” என்று கேட்டான் சாமண்ன. 

“நீங்க நாடகத்தை விட்டுட்டுப் போனீங்களா? உங்க இடத்தை எனக்குத் தந்துட்டுப் போனீங்களா? நானும் அதிலே நடிச்சேனா? இப்போ பேரும் புகழுமா வாழறேன். பணங் காசும் நிறையவே கிடைக்குது. அண்ணன் புண்ணியத்திலே, (நாக்கைக் கடித்துக் கொண்டு) உங்க புண்ணியத்திலே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” என்றான் சிங்காரப் பொட்டு. 

கையோடு கொண்டு வந்திருந்த திராட்சைப் பழங்களை எடுத்துச் சாமண்ணாவின் முன் வைத்தான். 

சாமண்ணாவின் இடது மூக்கோரம் ஒரு வரி தோன்றி சட்டென்று மறைந்தது. “இதெல்லாம் எதுக்கு?” என்று ஒரு பந்தாவோடு செல்லமாகக் கண்டித்தான். 

“இன்னிக்கு உங்களால்தானே எனக்கு இந்தப் பவிசெல்லாம்? அதை நான் மறந்துட முடியுமா?”

“சிங்காரம்! நீ எனக்கு ஒரு முறை விட்டுக் கொடுத்தாய். அதைப் போல நான் ஒருமுறை உனக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பர உதவி! அவ்வளவுதானே?” என்றான் சாமண்ணா. 

“எனக்கு நீங்க செஞ்ச உதவி சாதாரணம் இல்லை. நீங்க போட்ட பிச்சையிலே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இல்லாட்டி எனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைச்சிருக்குமா?” 

“சிங்காரம்! உன் அன்பை இங்கே இவ்வளவு தூரம் வந்து தெரிவிச்சிருக்கணும் என்கிறதில்லை.ஒரு கால கார்டு போட்டிருந்தாலே போதுமே! அதையே நான் பெரிசா நினைச்சிருப்பேன். நீ மேலுக்கு வந்தது, உனக்குப் புகழ் வந்தது எல்லாம் கேட்கிறப்போ சந்தோஷமா இருக்கு. நீ இன்னும் பிரமாதமா வரப் போறே பாரு! வாழ்க்கையிலே திறமை இருந்தா அதை யாரும் தடை போட முடியாது! இப்போ… இப்போ…” 

பேச்சு பாதி யந்திரத்தனமாக வந்தது. அடிக்கடி சாமண்ணா வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். 

“இப்போ நீ ரொம்பக் களைச்சுப் போயிருப்பே! ஓய்வு எடுத்துட்டு அப்புறமா வா. சாவகாசமாப் பேசலாம். நான் கொஞ்சம் வெளியிலே போக வேண்டியிருக்கு. ஆமாம்; நீ எங்கே தங்கி இருக்கேன்னு சொன்னே?”

“கோமள விலாஸ்” என்றான் சிங்காரப் பொட்டு. 

“ரைட்! நம்பவங்களுக்கு அதுதான் சரியான இடம்! ஓட்டல்காரர் பாலக்காடு ஐயர்தான். எனக்குத் தெரிஞ்சவர் தான். ஓட்டல் பில் பணத்தை நான் கொடுத்திடறேன். நீ ஒரு சல்லிக் காசு செலவழிக்கக் கூடாது…” 

“உங்க பிரியம்…” 

“நிறையப் போடாதே! நாகரிகமா நடந்துக்கணும்” என்று கண்சிமிட்டி வலது கட்டை விரலை வாய்க்கு நேராய்க் காட்டினான் சாமண்ணா. 

அந்த நேரத்தில் வாசலில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வந்து நிற்க, சாமண்ணா விரைந்து போய் காரின் பின் கதவைத் திறக்க, அதிலிருந்து பேரழகி சுபத்ரா முகர்ஜி சொகுசாக இறங்கி வந்தாள். 

நீற நிறத்தில் பனாரஸ் பட்டு உடுத்தியிருந்தாள். பவுன் களை அடிக்க, சந்திரன் முளைத்தது போல ஒரு தோற்றம். 

சிங்காரப் பொட்டுவின் கண்கள் சலனமற்று நின்றன. உள் மனசு பேசியது! “அடேங்கப்பா! என்ன அழகு? அசல் அப்சரஸ் மாதிரில்லே இருக்காங்க! இவங்க முன்னாலே நம்ப ஜில்ஜில் ரமாமணி ஒரு தூசு மாதிரி! இவங்களை மட்டும் ஊருக்கு அழைச்சிக்கிட்டுப் போய் மேடைலே ஏத்திட்டா, அத்தனை பயகளும் சொக்கிப் போயிடுவானுக!” 

சாமண்ணாவும் சுபத்ராவும் கைகோத்துப் படியில் ஏறினார்கள். 

“மெதுவா நடங்க, மெதுவா!” என்று சாமண்ணா சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் அந்தரங்க அறைக்குள் சென்று மறையும் வரை சிங்காரப் பொட்டு காத்திருந்தான். கண் கொட்டாமல் அவர்களையே பார்த்து நின்றான். 

– தொடரும்…

– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *