ஆட்டோ ஆனந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 176 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

சூரியன் முழுசா உதிக்குறதுக்கு முன்னாடியே ஆனந்தியின் ‘மஞ்சள் சிட்டு’ ஆட்டோ ஸ்டார்ட் ஆயிடும். சென்னை தெருக்களில் ஆண்களுக்கு மத்தியில தன் மூன்று சக்கர வாகனத்தை திருப்பும்போது, தொடக்கத்தில் அத்தனை பார்வைகள், கிண்டல்கள். ஆனா, அவள் நெஞ்சில் இருந்த தைரியத்தால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் … தனது வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். கிண்டல் செய்த ஆண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அலுத்துப் போய் , அமைதி காத்தனர். ஆட்டோ ஆனந்தி எதையும் பொருட்படுத்தாமல், போய்க்கொண்டே இருந்தாள். 

அன்றைக்கு சரியான மழை. மாலை நேரம். டி.நகர் சிக்னலில் நின்றபோது, ஒரு நபர் பதற்றமாக ஓடிவந்து ஆனந்தியிடம் கெஞ்சினார். “அம்மா… அண்ணா நகர் போகணும், அவசரம்! பிரசவ வலி… என் மனைவி காரில் மாட்டிக்கிட்டா, டிராஃபிக்ல கார் நகரவே இல்லை. நீங்க சந்து பொந்து வழியா எப்படியாவது ஹாஸ்பிட்டல் கொண்டு போக முடியுமா?” என்று கதறினார்.

ஆனந்தி சரி எனக் கூறியவுடன் ,பின்னாடி வந்த காரில் இருந்து அலறிய அந்தப் பெண்ணை, அந்த நபர் மெல்ல தூக்கி ஆட்டோவில் உட்கார வைத்தார். ஆனந்திக்கு கணப்பொழுதில் நிலைமை புரிந்தது. மழைநீர் தேங்கிய சாலையில், பெரிய கார்கள் எல்லாம் அணிவகுத்து நிற்க, ஆனந்தி தன் “மஞ்சள் சிட்டு” ஆட்டோவைச் சிறு இடுக்கான சந்து பொந்துகளில் சுழற்றி அடித்தாள்.

திடீரென பின்சீட்டில் இருந்து அலறல் சத்தம் தீவிரமானது. “அக்கா… குழந்தை தலை தெரியுதுக்கா!” என்று அந்தப் பெண் அலற, ஆனந்திக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. இன்னும் மருத்துவமனை வர பத்து நிமிடங்கள் ஆகும். நிலைமையை உணர்ந்த ஆனந்தி, வண்டியை ஓரமாக ஒரு பூட்டிய கடைக்கு முன்னால் நிறுத்தினாள்.

தான் வைத்திருந்த சுத்தமான துண்டுகளை எடுத்தாள். அந்த கணத்தில் ஒரு டிரைவராக இல்லாமல், ஒரு தாயாக மாறி, ஆட்டோவின் திரைச்சீலைகளை இழுத்து மூடி, அந்தப் பெண்ணின் கணவரை வெளியே நிற்கவைத்துவிட்டு, அவளுக்குத் தைரியம் சொன்னாள். சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, ஆட்டோவுக்குள்ளேயே அந்த அழகிய மழலையின் அழுகை சத்தம் மழையையும் தாண்டி கேட்டது.

தொப்புள் கொடியோடு குழந்தையையும் தாயையும் அவள் கணவன் பத்திரமாக பிடித்துக் கொள்ள, சிறிது நேரத்தில் ஆட்டோ மருத்துவமனையை அடைந்தது. நிலைமை அறிந்து மருத்துவ சிப்பந்திகள் , குழந்தையையும் தாயையும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்து, “சரியான நேரத்தில் பிரசவம் பார்த்திருக்கீங்க. கொஞ்சம் தாமதிச்சிருந்தாலும் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும்.. யார் அந்த அம்மா?” எனக் கேட்க, அங்கிருந்த கணவர் ஆனந்தியைக் சுட்டிக்காட்டினார்.

“நான் … ஆட்டோ ஆனந்தி . அவசரத்திற்கு என்னால் முடிந்ததை தெரிந்ததை செய்தேன் மேடம்! ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் மேடம் என்று பணிவாகக் கூறியவளை டாக்டர் புகழ்ந்து தள்ளினார். அந்தப் பெண்ணின் பெற்றோர் கண்ணீரோடு அவளைப் பார்த்து கைகூப்பி வணங்கினர்.

அடுத்த நாள், அந்தப் பெற்றோர் ஆனந்தியின் ஆட்டோவைக் தேடிப்பிடித்து வந்து, குழந்தைக்கு “ஆனந்தி” எனப் பெயரிடப் போவதாக கூறி, ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளிக்க முயன்றனர்.

அதை மறுத்த ஆனந்தி, “இந்த சங்கிலியை விட, என் ஆட்டோல பிறந்த அந்த சின்னக் குழந்தைதான் எனக்குக் கிடைத்த பெரிய மகிழ்ச்சி, டாக்டரின் பாராட்டு தான் எனக்கு கிடைத்த பெரிய விருது!” என்று சொல்லி சாவியைத் திருப்பினாள். மஞ்சள் சிட்டு கம்பீரமாக நகரத் தொடங்கியது.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *