ஆடி வந்தாச்சு!





ராஜன் – சுசீலாவுக்குக் கல்யாணம் ஆகி முழுசாக மூன்று மாதம்கூட ஆகியிருக்காது… புதுத் திருமண வாழ்க்கை ஜாலியும் சந்தோஷமுமாகப் போய்க் கொண்டு இருந்த வேளையில், அன்று காலை ஊரிலிருந்து வந்து இறங்கினாள் சுசீலாவின் தாயார் கற்பகம்.
“வாங்க அத்தே! என்ன திடீர்னு… லெட்டர்கூடப் போடலையே?” என்று குழப்பமாக வரவேற்றான் ராஜன்.
“ஆடி பொறந்தாச்சே, மாப்பிளே! அதான், சுசீலாவைக் கூட்டிட்டுப் போகலாம்னு…” என்றாள் கற்பகம்.
சுவாரஸ்யமாகத் தின்றுகொண்டு இருக்கும்போது, சட்டென்று கையிலிருந்து லாலிபாப் பிடுங்கப்பட்ட குழந்தை மாதிரி ஆகிப்போனான் ராஜன். “சரி அத்தை, கூட்டிட்டுப் போங்க! வீட்டைப் பூட்டி, மாடி வீட்டுல சாவி கொடுத்துட்டுப் போங்க. சாயந்திரம் நான் வந்து வாங்கிக்கிறேன்” என்றபடி சுசீலாவை ஏக்கப் பார்வை பார்த்துவிட்டு, ஆபீஸ் கிளம்பிப் போனான் ராஜன்.
மாலையில் ராஜன் வீடு திரும்பியதும், வாசல் கதவு திறந்திருந்தது. ஹாலில் மாமியாரும் சுசீலாவும் அமர்ந்திருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, “என்ன அத்தை, கிளம்பலியா?” என்றான்.
“போயிட்டு வந்துட்டோம் மாப்பிளே! சுசீலாவுக்குப் புடவைங்க, ஜாக்கெட் துணி, உங்களுக்குப் பேன்ட், ஷர்ட், வேட்டின்னு வாங்கியிருக்கோம். ஆடிக் கழிவுல நல்ல மலிவா கிடைக்குமேன்னுதான் சுசீலாவையும் கூட்டிட்டுப் போய் வந்தேன். நான் நாளை காலைல ஊருக்குப் புறப்படறேன், மாப்பிளே’’ என்றாள் கற்பகம்.
– 15th ஆகஸ்ட் 2007