கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 3,454 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம் – 19

‘அடேங்கப்பா.. அப்படிப்பட்ட பெரிய இடமா..? அப்படிப் பட்டவங்களுக்கு வேற இடத்தில் பெண் கிடைக்கலியா..? திருநெல்வேலிச் சீமையிலே பொண்ணு கிடைக்காம.. பெரிய குளத்துக்கு என் உயிரை எடுக்கன்னு தேடி வர்றாங்களா…’ 

கொந்தளித்த மனத்தோடு.. சுந்தரியின் கோபத்துக்கு பயந்து.. தயாராகிக் கொண்டிருந்த பூர்ணிமாவின் மனம் நிலையில்லாமல் அலையில் ஆடும் படகைப் போல… ஒரு நிலையில் இல்லாமல் ஆடிக் கொண்டிருந்தது… 

சுரேஷ் அவளைப் பெண்பார்க்க வந்தது.. திடிரென்று நிகழ்ந்த நிகழ்வு.. ஆனால்.. அப்போது அவனைப் பெண் பார்க்க வரப் போகும் நிகழ்வு… அவளுக்குத் தெரிந்தே நடக்கப் போகும் நிகழ்வு… 

‘ஏன் என்னை இப்படித் தவிக்க விட்டாய்…?’ அவள் மனம் குணசீலனிடம் மானசீகமாக கேள்வி கேட்டது… 

‘இத்தனை நாளாய் உன் மனசில் காதலிருக்கா.. இல்லையான்னு எனக்குள் நானே கேள்வியைக் கேட்டுக் கேட்டு உருக்குலைந்து போனேன்.. கொஞ்ச நஞ்சம்.. மனசிலிருந்த நம்பிக்கையையும்.. அந்த லிஸி குழி தோண்டிப் புதைக்க வைச்சிட்டா.. அப்பா என்னடான்னா யாராவது ஒருத்தனுக்கு நான் கழுத்தை நீட்டியே ஆகனுமுன்னு என்னைக் கட்டாயப் படுத்தறாரு.. நான் என்ன செய்யட்டும்.. ? இத்தனைக்குப் பின்னாலேயும்.. உன்னை மறக்க என்னால் முடியலையே.. போய் விடுகிறேன்.. மொத்தமாய் இந்த உலகத்திலிருந்தே போய் விடுகிறேன்.. அதுக்குப் பின்னாலாவது என் காதலை நீ நினைத்துப் பார்…’ 

கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தின் வசீகரத்தில் அவள் மனம் செல்லவில்லை… அவளை விட அழகான மற்ற பெண்களின் நினைவில் அவள் பெருமூச்சு விட்டாள்.. 

‘அந்த லிஸி வந்து சேர்ந்த இரண்டே மாதத்தில் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் பேச்சைப் பேசுகிற அளவுக்குப் போய் விட்டாளே.. அவளோட அழகா எனக்கு இருக்கு… ?’ 

லிஸியிடம் இருப்பது அழகோடு சேர்ந்த கவர்ச்சி என்பது பூர்ணிமாவுக்கு நினைவு வரத்தான் செய்தது… 

‘ஆனாலும்.. இவனுக்கு அவளைத்தானே பிடிச்சிருக்கு..?’ அவள் கன்கள் கலங்கின… 

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திட்டாங்கம்மா..”

கணபதி உற்சாகமாக அறைக்குள் வந்தான். யதார்த்தமாக ஊருக்கு லீவில் வந்தவனுக்கு தங்கையின் வரவும்.. அதைத் தொடர்ந்த பெண் பார்க்கும் நிகழ்வும் சந்தோசத்தைக் கொடுத்தன… 

“பாரு சுந்தரி.. நம்ம கணபதியும் வந்திட்டான்.. என்னவோ… தங்கச்சி கல்யாணத்துக்கு முதல்ல இருந்தே இவனும் கூட இருக்கனுமுன்னு விதிச்சிருக்கு…” கந்தசாமி மகிழ்ந்து போனார்… 

வீட்டிலிருந்தவர்களின் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லையே என்று பூர்ணிமாவுக்குள் வருத்தம் ஏற்பட்டது… அவளும் தான் என்ன செய்வாள்..? அவளுக்கு விதித்த விதி இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த இறைவன் விதித்திருக்கிறாரே- 

ஹாலில் பரபரப்பான பேச்சுச் சத்தங்கள் கேட்டன. எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் பூர்ணிமா பொம்மையைப் போல அமர்ந்திருந்தா… 

“ஸ்வீட் அதிகம் வேணாங்க…”

“எனக்கு காரம் வேணாம்…”

“கொஞ்சமா கொடுங்க போதும்..” 

“இன்னும் கொஞ்சம் வைத்துக்கங்…”

கலவையான பேச்சொலி… வந்தவர்களுக்கு பலகாரங்கள் பரிமாறப்படுவதை உணர்த்தியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் காபி கொடுக்கும் சாக்கில் அவள் மாப்பிள்ளை வீட்டாரின் முன்னால் நிறுத்தப் படுவாள் என்பதை அவள் உணர்ந்துதான் இருந்தாள்… 

நெஞ்சம் படபடக்கவில்லை.. வயிற்றில் பட்டாம் பூச்சிகள் மறக்கவில்லை… கால்கள் பின்னவில்லை… உடலில் நடுக்கம் தோன்றவில்லை.. வெட்கத்துடன் யாரென்று விழிகள் மறைந்திருந்து மாப்பிள்ளை யாரென்று தேடவில்லை… 

“பூர்ணிமா…” சுந்தரி குரல் கொடுத்தாள்…

அவளுக்கு அழைப்பு வந்துவிட்டது… இயந்திரம் போல எழுந்தாள்.. சுந்தரி கொடுத்த காபி டிரேயை வாங்கிக் கொண்டு ஹாலுக்குள் பிரவேசித்தாள்… 

அமர்ந்திருந்தவர்களின் முன்னால் காபி டிரேயை நீட்டினாள்.. அவர்கள் எடுத்துக் கொள்ள… வரிசையாகக் கொடுத்தபடி நகர்ந்தாள்.. அவளை எடைபோடுவதைப் போலப் போர்த் எவர் முகமும் அவள் மனதில் பதியவில்லை… 

கடைசியாய் காபியை எடுத்துக் கொண்டவனின் முகம் பார்க்காமல்.. வேலை முடிந்து விட்ட நினைவுடன் நகர்ந்தபோது… 

“குணசீலா.. பெண்ணை நல்லாப் பார்த்துக்கப்பா.. அப்புறமாய் எதையும் சொல்லக்கூடாது…” 

மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர் ஒருவர் சத்தமாக கூறிவைக்க… பூர்ணிமா சட்டென்று விழி உயர்த்தினாள்…. 

‘குணசீலனா..?” 

அவனேதான்.. அங்கு மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தான்… 

‘இவனா..?!…’ பூர்ணிமாவின் விழிகள் விரிந்தன… அவளது அதிர்ச்சியை எடைபோட்டபடி.. அவளைப் பருகுவதைப் போலப் பார்த்தபடி.. காபியை பருகிக் கொண்டிருந்தான் குணசீலன்… 

நடப்பதை பூர்ணிமாவினால் நம்பவே முடியவில்லை.. அவன் எப்படி அவளைப் பெண் பார்க்க வந்தான் என்று அவளுக்குப் புரியவில்லை… 

“ஏன்ப்பா.. ஏய்ய்.. அதான் மாப்பிள்ளை பூர்ணிமா கூட வேலை பாக்கிறவருன்னு சொல்லியிருக்கேனில்ல.. அப்புறமும் எதுக்காகப்பா.. மாப்பிள்ளையை லந்து பண்ற..? அதெல்லாம்.. பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரை யொருத்தர் பார்த்துப் பழகினவங்கதான்.” 

“என்னது.. ? பழக்கமா..?” 

“யாருய்யா இது.. ? பழக்கமுன்னா. ஒரே ஆபிஸில் சேர்த்து வேலை பார்த்த பழக்கம்ப்பா… வேற மாதிரி பழக்கமில்ல.. எங்கே வந்து பழக்கத்தைப் பத்திப் பேசற..?” 

இரு தரப்பிலும் பொதுவாக இருந்து இந்த சம்பந்தத்தைப் பேசி முடித்த உறவினர்கள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பிக்க.. மற்றவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப் படுத்தினார்கள்… 

“ஏனப்பு.. நீங்களே கோபப்பட்டா எப்படி..? நம்ம வீட்டுப் பொண்ணுக்கு நல்ல இடத்தில இருந்து மாப்பிள்ளையைக் கொண்டு வந்திருக்கீங்க.. திருநெல்வேலியிலயும் நம்ம ஜனம் இருக்குன்னு எனக்கு காட்டிக் கொடுத்ததே நீங்கதானேப்பு..? ஆரம்பிச்சு வைச்ச ஜோலியை மணவறை வரைக்கும் கொண்டு போகிறதை விட்டுப்புட்டு அடிதடிக்கு கிளம்பறது நியாயமாப்பு…?” 

கந்தசாமி வார்த்தைக்கு வார்த்தை ‘அப்பு’ உறவினர் போட்டதில் பொங்கியெழுந்த அவரது சமாதானமானார்… 

“ஏன் மாமா.. நீங்க சொன்னதினாலே தானே.. திருநெல்வேலி சீமையை விட்டுப்புட்டு.. பெரியகுளத்துக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம்.. நாங்க ஏதாவது ஏடாகூடமா பேசிவைச்சா.. நீங்க நியாயம் சொல்லி.. ஆக வேண்டிய காரியங்களை நடத்தி வைக்கிறதை விட்டுவிட்டு.. நீங்களே இப்படிக் குதிச்சா எப்படி மாமா.. ?” 

விசுவநாதன் மாமா.. மாமா.. என்று அழைத்து ஐஸ் வைத்து.. அவர் தரப்பு உறவினரை அமைதி படுத்தினார்.. 

“சரிப்பா கந்தசாமி.. அவங்க பொண்ணு கேட்டு வந்திட்டாங்க… நீ பொண்ணுக்கு என்ன செய்வன்னு சபையிலே சொல்லிட்டா… மேற்கொண்டு பேசலாமே…” 

ஊடே இருந்த உறவினர்.. பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தார்… 

“பொண்ணுக்கு அறுபது பவுனில் நகை போடறோம்.. பெரிய குளத்தில இருக்கிற வீட்டில ஒன்னை பொண்ணு பேருக்கு எழுதி வைக்கிறோம்.. சீரு செனத்திய சிறப்பா செஞ்சுபுடறோம்.. இதுக்கு மேலே மாப்பிள்ளைக்கு என்ன வேணும்ன்னு அவங்க கேட்கிறாங்களோ… அதையும் வாங்கிக் கொடுத்துடறோம்…” கந்தசாமி.. மீசையை குறுக்கியபடி மனைவியை பெருமையாக பார்த்துக் கொண்டார்.. 

‘என்ன.. நான் சொன்னது சரிதானே…’ என்று அவரது விழிகள் கேட்க… ‘ரொம்பச் சரி’ என்று சுந்தரியின் இமைகள் மூடித்திறந்தன… 

“மாப்பிள்ளைக்கு கார் வேணும்ன்னு கேட்டா என்ன செய்வீங்க…?” 

“உடனே காரை வாங்கிக் கொண்டுவந்து அவர் வீட்டு முன்னாலே நிப்பாட்டிருவேன்.. அதில என்ன சந்தேகம்…?” 

கந்தசாமியின் பேச்சில் விசுவநாதனுக்கு பரம திருப்தி ஏற்பட்டது.. அவர் பார்த்து வைத்த பெண் வீட்டில் செய்யும் சீர் வரிசையை விட அதிகமான சீர் வரிசையை கந்தசாமி செய்வார் என்று.. ஊடே இருந்த உறவினர் சொன்னதினால் தானே அவர் பெண் பார்க்க ஊர் விட்டு ஊர் வந்தார்…! 

“எங்களுக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு…” அவர் முகம் மலர கூற… 

“அதைவிட பெண்ணுக்கு செய்யும் சீர்வரிசையைப் பிடிச்சிருக்கு..” என்று குணசீலனின் காதோடு கூறினான் சத்தியசீலன்… 

“போடா.. அரட்டை..” குணசீலனுக்கு சிரிப்பு வந்துவிட்டது… 

காந்திமதி மட்டும் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருந்தாள்… 

பெரியகுளத்துப் பெண்ணைப்பற்றிய பேச்சை விசுவநாதன் வீட்டில் சொன்ன மறு கணமே காந்திமதி தன் அதிருப்தியை தெரிவித்து விட்டாள்… 

“கையில வெண்ணையை வைத்துக்கிட்டு நெய்க்கு அலையனுமா.. ?” 

“வெண்ணையா..? யாரைச் சொல்கிறாடா இவ..?” விசுவநாதன் புரியாமல் இளைய மகனைப் பார்த்தார்… 

“அது வெண்ணையில்லைப்பா.. பீர்..” என்று விளக்கம் சொன்னான் சத்தியசீலன்… 

“பீரா.. ?” விசுவநாதனுக்கு தலையும் புரியவில்லை.. காலும் புரியவில்லை… 

“அதுதான்ப்பா.. எதிர் வீட்டு சில்க் ஸ்மிதா..” இன்னும் படுவிளக்கமாகச் சொன்னான் சத்தியசீலன்.. 

“யாரு.. அந்த லிஸிப் பொண்ணா.. ?” என்று விசுவநாதன் கண்டு பிடித்துவிட… 

“பாருங்கம்மா.. அப்பாவுக்கே.. சில்க் ஸ்மிதான்னா.. அது எதிர் வீட்டு லிஸிதான்னு உடனே அடையாளம் தெரியுது.. இந்த லட்சணத்திலே.. அதைப் போய் குடும்ப குத்துவிளக்குன்னு பினாத்திக்கிட்டு இருக்கீங்களே…” என்று நியாயம் கேட்டான் சத்தியசீலன்.. 

“குடும்ப குத்துவிளக்குன்னு சொல்கிறாளா.. ? அந்த லிஸியையா.. ? ஏண்டி.. உனக்கு என்ன ஆச்சு..? அறிவு கெட்டுப் போச்சா.. ?” 

“அதில்லைங்க.. அந்தப் பெண்ணும் நம்ம குணாகூட பேங்கில்தான் வேலை பார்க்குது…” 

“அதுக்காக…?” 

“ஒரே பேங்கில் வேலை பார்க்கிறாங்களேன்னு நினைச்சேன்..” 

“நினைப்ப.. நினைப்ப.. உனக்க ஒன்னு தெரியுமா..?” 

“என்னங்க…?” 

“இந்த பெரிய குளத்துப் பெண்ணும் குணா கூடத்தான் பேங்கில் வேலை பார்க்கு… இங்கே லேடிஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்குது.. எதிர்வீட்டு பத்திரகாளியைப் போல அடுத்த வீட்டில் டேரா போடலை..” 

“அப்பா.. அதைப் போய் பத்திரகாளின்னு சொன்னா.. காளி கோவிச்சுக்காதா..?” 

“ஏண்டா… நீ கூடத்தான் அந்தப் பொண்ணை சில்க் ஸ்மிதான்னு சொன்ன.. அதுக்கு மட்டும் சில்க் கோவிச்சுக்காதா..?” 

“சில்க் கொஞ்சும் கிளிப்பா… அதுக்கு கோபமே வராது.. “

“இந்த ஆராய்ச்சியை மட்டும் ஒழுங்காப் பண்ணு.. படிக்க உட்காந்தா மட்டும் தூங்கிக்கிட்டே படி.” 

இளைய மகன் முறைக்க ஆரம்பிக்க.. காந்திமதி மனத்தாங்கலுடன் முகம் திருப்பிக் கொள்ள. விசுவநாதன் பெரிய குளத்துக்கு பெண் பார்க்க வரப்போகும் செய்தியை உறவினரிடம் செல்போனில் சொல்லி பேச்சை உறுதி செய்துவிட்டார்… 

அத்தியாயம் – 20

“நினத்ததை… நடத்தியே… முடிப்பவன்…நான்… நான்…” 

லிஸியை ஜாடையாகப் பார்த்துக் கொண்டே சத்தமாகப் பாடினான் குணசீலன்.. அவள் முகத்தில் ஈயாடவில்லை… 

குணசீலன் இந்த அளவுக்கு வேகமாக செயல்படுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை… சுரேஷ் பெண் பார்த்துவிட்டு வந்த செய்தியைக் கேட்டதும் குதுகலமடைந்திருந்தவள்.. அடுத்த நாளே.. குணசீலனும் பூர்ணிமாவை பெண் பார்த்து.. திருமணத்தை நிச்சயமும் பண்ணி முகூர்த்த நாளைக் குறித்து விட்டுத் திரும்புவான் என்று நினைத்தும் பார்க்கவில்லை… 

காந்திமதி அதைச் சொல்லிப் புலம்பியபோது.. அவள் தலையில் இடி இறங்கியது.. முதல் முயற்சியே இப்படித் தோல்வியில் முடிந்து விட்டதே என்று அவள் இடிந்து போனாள்.. 

தன் மனக் கணக்கில் எந்த இடத்தில் பிசகினாள் என்ற ஆராய்ச்சியில் அவள் இறங்கிய போது.. குணசீலன் திருமணப் பத்திரிக்கைகளை விநியோகம் செய்ய ஆரம்பித்திருந்தான்.. 

திருமணத்திற்கு லிஸியைத் தவிர.. அனைவரும் வந்திருந்தார்கள்.. சுரேஷ் கூட முகம் மாறாமல் வாழ்த்துச் சொல்லிக் கலந்து கொண்டான். சென்னைக்கு போய்விட்ட அரவிந்தனும்.. சரளாவும்.. முதல்நானே வந்து விட்டார்கள்… 

“கள்ளி.. கடைசி வரைக்கும் குணசீலன் உன் மனசிலிருந்ததை சொல்லவே இல்லியே…” சரளா பூர்ணிமாவின் காதைத் திருகினாள்… 

“எப்படிடா.. ? எனக்கு இது தோணாம போயிருச்சே..சரளா  சொன்னபோது கூட நான் நம்பலை…. இருக்காதுன்னு தான் நினைச்சேன்…” அரவிந்தன் ஆச்சரியப்பட்டான்… 

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உணர்வுகளோடு வளைய வர.. குணசீலன்.. பூர்ணிமாவின் திருமணம் நடந்து முடிந்து விட்டது… 

திருமண மேடையில்… அவர்கள் இருவரும் சிரித்த முகமாகத்தான் நின்று கொண்டிருந்தார்கள்.. ஆனால்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரிடும் போது மட்டும் முகம் மாறினார்கள்.. 

இரவின் தனிமையில் பூர்ணிமாவைச் சந்தித்தபோது.. கடைசியாக அவளிடம் வாக்குவாதம் செய்து பிரிந்தபோது பார்த்த அதே உறுத்த பார்வையை கண்கள் சிவக்கப் பார்த்தான் குணசீலன்… 

பூர்ணிமாவோ அவன் பக்கம் திரும்பவேயில்லை… புருவங்கள் சுளிக்க.. வேறுதிக்கில் பார்த்துக் கொண்டிருந்தாள்… 

“ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி…” அவன் பேச்சை ஆரம்பித்து வைத்தான்… 

“எதில்.. ? ஒருத்திக்கு பூவாங்கி கொடுத்துவிட்டு.. இன்னொருத்தியின் கழுத்தில் தாலியைக் கட்டுகிற தைரியத்தை விடாவா பெரிதான தைரியத்தை என்னிடம் பார்த்து விட்டிங்க… ?” அவள் பதிலடி கொடுத்தாள்.. 

“அந்த நினைப்பில்தானே.. நீ.. வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத் துணிந்தாய்..?” அவன் வெகுண்டான்… 

அவள் துணிந்தாளா..? எதில் துணிந்தாள்..? அவனுக்காக உயிரை விடத் துணிந்தாள்.. அதை அவன் அறிவானா…? 

“எவளோ ஒருத்திக்கு குங்குமம் கொடுத்தவரெல்லாம் துணிச்சலைப் பற்றி என்னிடம் பேசக்கூடாது…” அவள் உடல் நடுங்கியது… 

“எனக்கு முதலில் சுரேஷ் உன்னைப் பெண் பார்த்திருக்கிறான்… அவன் வீட்டாருக்கு முன்னாடியும் காபியைக் குடுத்து.. நின்னிருக்க.. என் வீட்டாளுகன்னு தெரியாமலேயே.. எங்களுக்கும் காபியைக் குடுத்து.. முன்னால் நின்ன.. என்னைக் காதலித்துவிட்டு.. வேற எவன்.. எவன் முன்னாடியோ காபித் தம்ளரை நீட்டிக்கிட்டு நிற்க.. உனக்கு வெட்கமாயில்லை.. ?” அவன் தீயாகச் சுட்டான்.. 

‘கடவுளே…’ அவள் கண்மூடி மனதிற்குள் அரற்றினாள்… 

இதற்குத்தான் இவன் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டானா…? 

இப்படி நாவால் சுட்டுப் பொசுக்குவதுதான் அவன் நோக்கமா…? 

“ஆமாம்..” என்றான் அவன்…

“இதுக்குத்தாண்டி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… என்னை நினைச்சவளை… எனக்குப் பதிலாய் வேறொருத்தன் உரிமை கொண்டாடி விடக் கூடாதுன்னுதான் தேடிப்பிடிச்சு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…” தெளிவாக அவன் சொன்னான்.. 

‘எனக்காக இல்லையா.. ?’ அவள் மனம் அதிர்ந்தாள்… 

“லிஸியைக்கூட ஒரு கணக்கில் சேர்த்து விடலாம்டி.. உன்னை எந்தக் கணக்கிலேயும் சேர்க்க முடியாது…” 

‘எதனால்…?’ 

“அவ ஒரு தெளிவோட இருந்தாள்டி.. அவ நல்லவளோ.. கெட்டவளோ.. அது இப்ப பிரச்னையில்லை… மனிதரை சரியாய் அவ எடைபோட்டா.. உன்னிடம் அந்தத் தெளிவுமில்லை.. மனிதரை நீ சரியாய் எடை போடவுமில்லை…” 

‘அப்ப.. அவ என்னைவிட உனக்கு உசத்தியாய் போய் விட்டாளா… ?’ 

“எந்தக் காலத்திலேயாவது நீ என்னை நம்பியிருக்கயாடி… கொஞ்சம் கூட இல்லை… சரளா உன் உயிர் சிநேகிதி.. உன் மனசை அறிஞ்சவள்.. எனக்கு அவள் தங்கையைப் போல.. உன்னைச் சீண்டிப்பார்க்க.. விளையாட்டுக்கு என் பக்கத்தில் வந்து அவ நின்றால்.. அதை சீரியஸாய் எடுத்துக்கிட்டு.. என்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் பாடாய் படுத்தினவதானேடி.. நீ ?” 

‘நீ என்னுடையவன்டா.. அதைத் தெரிந்தும் அவ உன்பக்கத்தில் வந்து நிற்கலாமா..?’ 

“லிஸி ஆயிரம் சொல்லட்டும்.. அதை நீ நம்பியிருக்கலாமா…? கண்ணால் கண்டதும் பொய்.. காதால் கேட்டதும் பொய்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே.. அது உன் மரமண்டையில் ஏறலையா…?” 

‘இதைச் சொல்லி.. நீ செய்த துரோகத்தை நியாயப் படுத்தப் பார்க்கறியா…?’ 

“சரளாதான் என் பக்கத்தில் வந்து நின்னு பேச ஆரம்பித்தா..ஆனால் நீ அவகூட சமாதானமாகிட்ட.. என்கூட அவ்வளவு சீக்கிரமாய் சமாதானமாகவில்லை..” 

‘இதையெல்லாம் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி பண்ணு.. என் மனசில் இருக்கிறதை மட்டும் தோண்டிப் பார்க்காதே.. புதைச்சுவைச்சுடு…’ 

“அன்னைக்கு சரளா.. இன்னைக்கு லிஸியா..?”

அதுவரை அவன் பேசியதற்கு மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டிருந்த பூர்ணிமா ஆத்திரத்துடன் அவன் பக்கம் திரும்பினாள்.. 

“சரளாவும் லிஸியும் ஒன்றில்லை… என் பிரண்டோடு எவளையும் இணை கூட்டுகிற வேலையெல்லாம் இங்கே வேணாம்…” 

“ஏண்டி.. பெண்ணுக்கு பெண் இணை கூட்டிப் பேசியதுக்கே இப்படி ரோசக் கழுதை பிய்த்துக்கிட்டு வருதே.. என்கூட அவளை இணை கூட்டிப் பேசினயே.. எனக்கு எப்படி இருக்கும்.. ? நான்னா உனக்கு அத்தனை ஈஸியாகப் போயிருச்சா..?” 

“சும்மா ஒன்னும் பேசலை…’ 

“அதைச் சொல்லு.. பரத நாட்டியம் ஆடிக்கிட்டுத் தானே பேசின.. ? உன் முகம் எப்படியிருந்துச்சுன்னு அதைப் பார்த்த எனக்குத் தானே தெரியும்..?” 

உதடுகள் துடிக்க.. கண்கள் கலங்க பூர்ணிமா பேசியதை அவன் குறிப்பிட அவள் வேறுவிதமாக நினைத்துக் கொண்டாள்… 

“ஆமாம்.. அப்படித்தான்.. என் முகத்தை விட.. அவமுகம் உங்களுக்கு அழகாகத்தான் தோணும்..” 

குணசீலன் பல்லைக் கடித்தான்.. அவன் ஒன்றைச் சொன்னால்… பூர்ணிமா அதை வேறொன்றாகச் சொல்லியதில் அவனுக்கு எக்கச்சக்கமான கோபம் பீறிட்டு எழுந்தது… 

“மனுஷியாடி நீ…?” 

“நான் மனுஷியில்லை.. அந்த லிஸிதான் மனுஷி…”

“இப்ப எதுக்கு தேவையில்லாம அவபேச்சை எடுக்கிற.. ?” 

“நான் பேசலை.. நீங்கதான் பேச ஆரம்பிச்சிங்க “

“நான் எதைச் சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிப்பியா..?” 

“குற்றமுள்ள மனசுதான் குறுகுறுக்கும்…”

“விளங்காதவளே…! எதுக்கு எதைச் சொல்லி வைக்கிற…? நான் என்ன குற்றத்தைச் செய்தேன்..? எதை நீ கண்டே…?” 

“அது அவங்கவங்க மனச்சாட்சிக்குத் தெரியும்..”

“அப்ப… அதிலும் உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லை..?” 

“இல்லை…” 

சட்டென்று குணசீலன் பூர்ணிமாவின் கன்னத்தில் அடித்து விட்டான்.. அதை எதிர்பார்த்திராத பூர்ணிமா அதிர்ச்சியுடன் கன்னத்தைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள்… 

குணசீலன் கண்கள் சிவக்க… அறையில் குறுக்கும்.. நெடுக்குமாக நடந்தான்.. பூர்ணிமா மௌனக் கண்ணீரை உகுத்தபடி தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.. குணசீலனின் நடை நின்றது.. ஒரு முடிவுக்கு வந்தவனாக பூர்ணிமாவின் முகம் பார்த்தான்…. 

“நல்லது… உன் மனசில் என்னைப் பற்றி இப்படிப்பட்ட அபிப்ராயம் தான் இருக்குன்னு நீயே சொல்லிட்ட.. அந்த மட்டிலும் உண்மையைச் சொன்னயே. அதுக்கு தேங்க்ஸ்.. இதுநாள் வரைக்கும் உன்மேலே நான் வைச்சிருக்கிற காதலில்தான் உனக்கு நம்பிக்கை இல்லாம போச்சுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. இப்பத்தான் தெரியுது.. என் மேலேயே உனக்கு நம்பிக்கை இல்லை…” 

பூர்ணிமா பதில் பேசவில்லை… அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை… அவன் அடித்த அடியில் சிவந்திருந்த கன்னத்தையும்… அதில் பதிந்திருந்த விரல் தடத்தையும் பார்த்தவனுக்கு மனம் வலித்தது… 

”உன்னைக் காதலிச்சேண்டி… உன்னைத் தவிர எவ முகத்தையும் நான் ஏறெடுத்தும் பார்க்கலை… உன் நினைப்பைத் தவிர வேற எவ நினைப்பும் என் மனசில் வந்ததில்லை… இதை என்னைக்கு நீ மனப்பூர்வமாக உணர்கிறாயோ.. அன்னைக்கு நாம உடம்பாலே ஒன்னு சேரலாம்…” 

அவனுடைய வார்த்தைகளால் பூர்ணிமாவிடம் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை… சலனமில்லாமல் அவள் அமர்ந்திருக்க முகச்சுளிப்புடன்.. அவன் பேச்சைத் தொடர்ந்தான்… 

“மனசு ஒன்னாய் சேரனும்டி.. என் மனசில் நீ மட்டும்தான் அது உனக்குத் தெரியலை… என் மேலே நீ சந்தேகப் பட்டுட்ட.. அதைப்போல உன் மனசில் நான் மட்டும்தான்னு தலைக்கனமாய் இருந்தேன்.. எது நடந்தாலும்.. என்னைத்தவிர வேறொருத்தன் முகத்தை நீ ஏறெடுத்தும் பார்க்க மாட்டன்னு நினைச்சேன்.. அதையும் நீ பொய்யாக்கிட்ட.. சுரேஷ் உன்னைப் பெண் பார்க்க வந்தப்போ… மறுப்புச் சொல்லாம அவன் முன்னாலே நின்னுட்ட.. நான் தான் உன்னைப் பெண் பார்க்க வருகிறேன்னு தெரியாமலே… என் முன்னாலேயும் வந்து நின்னுட்ட.. ஸோ… நான் உன்னை விட்டுக் கொடுத்திருந்தா… வேற எவன் கையிலோ தாலியை வாங்கிக்கிட்டு.. அவன் கூடக் குடும்பம் நடத்த நீ தயங்கியிருக்க மாட்ட…” 

குணசீலனின் வார்த்தைகள் சூட்டுக் கோலாய் பூர்ணிமாவின் இதயத்தை புண்படுத்தியதில் அவள் ரண வலியெடுத்து துடித்தாள்… 

‘இல்லை… இல்லை..’ என்று மனதுக்குள் கதறினாள்… 

‘உன்னை நினைத்த மனம் வேறு ஒருவனை நினைக்காது… உன்னோடு வாழ முடியாத உயிர் இந்த உலகத்தில் நிலைக்காது…’ என்று மனம் பதறினாள்… 

‘உன் காதலை நான் சந்தேகித்தேன்னு குற்றம் சொல்கிறாயே… என்னையே நீ சந்தேகித்து விட்டாயே.. இதை யாரிடம் நான் போய் சொல்வேன்…’ என்று ஊமையாய் மனதிற்குள் புலம்பித் தவித்தாள்… 

அவள் மனம் பேசிய பேச்சை அவன் உணராமல் போனான்… ஒரு பெருமூச்சுடன் குனிந்து.. சேர்ந்திருந்த இரட்டைக் கட்டில்களைப் பிரித்துப் போட்டான்.. 

“இனி… இந்த ரூமுக்குள் நீ யாரோ… நான் யாரோதான்… இந்த ரூமுக்கு வெளியில்தான்.. நானும் நீயும்.. புருசன் பெண்டாட்டி…” 

கட்டிலில் ஏறி… ஒருபக்கமாகத் திரும்பி அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தவன் தூங்கிவிட்டான்.. விடியும் வரை பூர்ணிமா தூங்கவேயில்லை… 

அத்தியாயம் – 21

“கற்பகத் தருவே… எங்கள் 
கவலைகளைப் போக்கும்…
கார்மே வண்ணனின்.. 
கைபிடித்த மயிலே…
பொற்பாதச் சிலம்பொலிக்க.. 
பூமகளாய் அவதரித்து…
எங்களை மடி தாங்கிய… 
ஏந்திழையே.. மகாலட்சுமி…” 

பக்திப் பரவசத்துடன்.. பூஜையறையில் கண்மூடி கைகுவித்து பாடிக் கொண்டிருந்த பூர்ணிமாவைப் பார்த்தபடி… ஹாலில் வந்து அமர்ந்து பேப்பரை கையில் எடுத்துக் கொண்டான் குணசீலன்… 

ஈரத்தலைமுடி.. இடுப்பைத் தாண்டி நீண்டு முழங்கால்களைத் தொட்டுக் கொண்டிருக்க… அதன் நுனியில் சிறு பின்னலிட்டு… சிறிய மல்லிகைப் பூச்சாத்தை அதில் வைத்திருந்தாள்… 

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டிருக்க… வகிட்டில் குங்குமத்தை வைத்திருந்த நேர்த்தி குணசீலனை ஈர்த்தது.. அந்தக் குங்குமமும் அவள் கழுத்தில் மின்னிய புதுத்தாலிச் சரடும்.. அவள் அவனுக்கு மட்டும் சொந்தமான மனைவியென்பதை பறைசாற்றியதில் அவன் மனதுக்குள் ஓர் இதம் பரவியது… 

அவள் முகத்தில் நிலவிய சாந்தத்தில் அவன் வசீகரிக்கப்பட்டான்… அவளது குவிந்த இதழ்களும்.. சிறு மொட்டுப் போன்ற கூர்மையான மூக்கும் அவனை ரசிக்க வைத்தன… 

‘இவள் அழகில்லையாம்…’ 

அவனுக்கு அவளது அந்த அறியாமையை நினைத்து சிரிப்புக்கலந்த கோபம் வந்தது.. 

‘இவள் அழகில்லைன்னா.. வேற யார்தான் அழகு..?’ 

பூஜைமணி ஒலிக்க ஆரம்பித்தது.. பூர்ணிமா தீபாதரனைத்தட்டுடன் வெளியே வந்தாள்.. விசுவநாதன் பெருமையுடன் மனைவியைப் பார்த்தபடி… மருமகள் நீட்டிய தீபாதரனைத் தட்டிலிருந்த கற்பூர ஜோதியைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார்… 

காலை நேர ஜாகிங்கை முடித்து வீட்டுக்குள் வந்த சத்தியசீலன் கூட.. பக்திப் பரவசத்துடன்.. பூர்ணிமாவை பார்த்தான்… 

“ஹாய் அண்ணி… தெரு முனையிலேயே உங்க பூஜைமணிச்சத்தம் கேட்டது… என்னடா.. நம்ம தெருவில் கோவில் இல்லையேன்னு யோசிச்சுக்கிட்டே வந்தேன்.. வீட்டுக்கு வந்தா.. சாம்பிராணிப் புகை மண்டலத்துக்கு மத்தியிலே தேவதையைப் போல நீங்க நிற்கறிங்க..  ஊஹீம்.. இது நம்ம வீடில்லை… வீடு மாறி நுழைஞ்சுட்டோம்ன்னு நினைச்சு திரும்பிப் போகனுமுன்னு நினைச்சிட்டேன்னா.. பார்த்துக்கங்களேன்….” 

கொழுந்தனின் பேச்சை வாத்சல்யத்துடன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த பூர்ணிமாவை ரசித்துப் பார்த்தான் குணசீலன்… 

அவள் அந்த வீட்டில் மருமகளாய் காலடி எடுத்து வைத்து ஆறு மாதங்களாகி விட்டன… அதற்குள்.. விசுவநாதனின் மனதில் கனிவையும்.. மரியாதையையும் அவள்மேல் உண்டாக்கி.. அவர் மனதில் இடம்பிடித்து விட்டாள்.. 

“காந்திமதி…” என்று அழைத்துக் கொண்டே வருபவர்… இப்போதெல்லாம்… 

“‘அம்மா.. பூர்ணிமா…” என்று அழைக்க ஆரம்பித்திருந்தார்.. அதனால்.. காந்திமதியின் கடும் விரோதத்திற்கும் ஆளாகித் தொலைத்திருந்தார்… 

‘அது என்ன.. மருமகள் வந்ததும்.. அவ கையில வீட்டின் ராஜ்யம் தானாய் போயிருச்சு.. என் புருசன் என்னை விட்டுவிட்டு… அவ பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டே வருகிறாரே…’ 

அவள் வள்ளுவரின் வாசுகியைப் போல… விசுவநாதனுடன் மனம் இசைந்து குடும்பம் நடத்திய இல்லத்தரசி.. 

ஒருவேளை… வாசுகிக்கும் மருமகள் வந்திருந்தால். வள்ளுவரும் மனைவியை விட்டு.. மருமகளை உயர்வாக நினைத்திருந்தால்… அவள் அந்தக் கணவரின் மேல் மட்டற்ற அவிமானத்தை வைத்திருப்பாளோ.. என்னவோ… 

திருநெல்வேலியின் வள்ளுவரான விசுவநாதனின் வாசுகி… தன் நிலையிலிருந்து தடம் புரண்டாள்… 

“காந்திமதி…” என்று விசுவநாதன் அழைத்தா…

இப்போதெல்லாம்…”என்னங்க…” என்று உடனே அவள் ஓடி வருவதில்லை… 

காந்திமதி ஏதாவது சொன்னால்… 

“த்சு.. போங்கம்மா.. உங்களுக்கு வேற வேலையில்லை…” என்று அசட்டை காட்டும் சத்தியசீலன்.. அதே வார்த்தைகளை பூர்ணிமா கூறினால்.. மறுப்பே சொல்லாமல் கேட்டுக் கொண்டதில்… காந்திமதிக்கு இளையமகனும் வேண்டாதவனாகிப் போனான்… 

சத்தியசீலனின் கதையே வேறு.. அவனுக்கு அக்காவோ.. தங்கையோ இல்லை… கூடப்பிறந்த பெண் பிறப்பில்லாதவனுக்கு… பூர்ணிமாகாட்டிய சகோதரபாசம் தேனாக இனித்தது… 

தம்பியில்லாத பூர்ணிமா.. அவனைத் தனது தம்பியைப் போல நேசித்து பரிவு காட்டினாள்.. அவன் கூறிய கல்லூரி கதைகளைக் கேட்டுச் சிரிக்கும் போது… அவனுக்கு சமவயது தோழியாகி தோழமை காட்டினாள்… அவன் கூறும் சின்ன விசயங்களைக் கூட ரகசியமாக வைத்துக் கொண்டதில்.. அவனுக்கு உற்ற சொந்தமானாள்.. 

அவளுக்கும்.. சத்தியசீலனுக்கும் இடையில் உருவான பாசப் பிணைப்பு அற்புதமானது.. அதை குணசீலனால் உணர்ந்து கொள்ள முடிந்தது… யாரிடமும் ஒட்டாத சத்தியசீலன் பூர்ணிமாவிடம் ஒட்டிக் கொண்டதில் அவன் ஆச்சரியப்பட்டுப் போனான்.. 

அவன் சத்தியசீலனுக்கு அண்ணன்.. அவனிடம் சத்தியசீலன் இணக்கமாக பேசிப் பழகி நெருக்கம் காட்டினாலும்.. பூர்ணிமாவிடம் காட்டியதைப் போன்ற ஒட்டுதலை… குணசீலனிடம் அவன் காட்டியதேயில்லை… 

‘இவ… சத்யாவின் மனசைக் கூட ஜெயித்துட்டாளே..’ 

பூர்ணிமாவின் அந்தத் தன்மை அவனை ஆகர்ஷித்தது.. அவள் வந்த பின்பு… வீட்டுக்குள் நிலவிய அலாதியான தனிக்களையை அவன் உணரத்தான் செய்தான்… 

“இப்பத்தான் வீடு.. வீடாய் இருக்குண்ணா.. அண்ணி வந்தபின்னால்.. வீடே நிறைஞ்சிருக்கு…” 

“உன் அண்ணி அத்தனை குண்டுன்னு சொல்கிறயா.. இரு.. அவகிட்ட நான் போட்டுக் கொடுக்கிறேன்…” 

“என்னடா அண்ண ஆச்சு..? உனக்கும் எதிர் வீட்டுக்காத்து அடிச்சிருச்சா.. ? நீயும் போட்டுக் கொடுக்க கிளம்பிட்ட..” 

சத்தியசீலன் விளையாட்டாய் பேசியதில் குணசீலன் துணுக்குற்றான்… 

“என்ன சத்யா… என்ன விசயம்..?” அவன் புருவங்கள் மேலேறின… 

“உனக்கு விசயமே தெரியாதா..?” சத்யா நிமிர்ந்து உட்கார்ந்தான் 

“என்ன விசயம்.. ?” 

“எதிர் வீட்டு சிலர் ஸ்மிதா அம்மாகூட ஜோடி போட்டுக்கிட்டு தினசரி கோவிலுக்கு தள்ளிக்கிட்டு போகுது…” 

“அதுக்கென்னடா..?” 

“போன மகராசி.. அம்மாகிட்ட போட்டுக் கொடுக்கிறாண்ணா…” 

“உனக்கெப்படித் தெரியும்…” 

“தினமும் கோவிலுக்கு போய்விட்டு வந்ததும்.. அம்மா.. அண்ணியை வம்புச் சண்டைக்கு இழுக்கிறாங்க.. அண்ணி பாவம்.. எதிர்த்து ஒருவார்த்தை பேசறதில்லை..”” 

“என்னது..?” 

குணசீலனின் புருவங்கள் முடிச்சிட்டன… ‘அம்மாவா.. இப்படிச் செய்கிறாங்க..?’ அவனால் நம்ப முடியவில்லை… 

அவனறிந்த காந்திமதி அன்பே வடிவானவள்… அதிர்ந்து ஒரு சொல் பேசியறியாதவள்.. அவளா.. மருமகளின் மனம் புண்படபேசுகிறாள்..? 

“நானும் அம்மாகிட்டச் சொல்லிப் பார்த்துட்டேன்.. அவங்க கேட்கிறபாடாய் இல்லை… எதனால் அம்மா இப்படி மாறிப் போனாங்கன்னு துப்பறிய அவங்க கோவிலுக்கு போகும் போது ஃபாலோ பண்ணிபோனேன்.. அங்கே பார்த்தா.. எதிர் வீட்டு சில்க்.. உங்க குணத்துக்கு உங்க ஹஸ்பெண்ட் உங்களைக் கொண்டாடனும் ஆண்ட்டி.. இப்படி மருமக வந்ததும் உங்களைத் தூக்கி மூலையில் போட்டிருக்கக் கூடாது… இந்தப் பூர்ணிமா பயங்கர கைகாரி.. உங்ககிட்ட இருந்து உங்க ஹஸ்பெண்டை பிரிச்சுட்டா.. அப்படி.. இப்டின்னு போட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்கிறா…” 

‘இது வேறா..?’ 

அமைதியான முகத்துடன் சமையலறையில் வலம் வந்து கொண்டிருந்த மனைவியை உற்றுப் பார்த்தான் குணசீலன்… 

‘அம்மாவைப் பற்றி இவ ஒரு சொல் என்னிடம் சொல்லவே இல்லையே…’ 

– தொடரும்…

– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *