ஆசிரியர் தினம்
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,608
திருச்சி நோக்கி எடிட்டர் சங்கரலிங்கத்தின் கறுப்பு பி.எம்.டபிள்யூ., கார் பறந்தது. ஸ்டியரிங்கை கையாண்டபடி, என்னிடம் திரும்பினார்.
“”நவாப்… திருச்சி மாநகரத்துக்குள்ள எப்ப பிரவேசித்தாலும், பசுமை நிறைந்த பால்ய நினைவுகள் என்னை வெட்டுக்கிளி படையெடுப்பாய் தாக்கும். திருச்சி மலைக் கோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம் முதலியன எனக்கு பிடித்த இடங்கள். உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? ஏழாவதிலிருந்து, பதினொன்றாவது வரை திருச்சி சிந்தாமணி ஈ.ஆர்.ஐ., ஸ்கூலில்தான் படிச்சேன்!”
“”வாவ்… ஸ்கூல் லைப் எப்படி?”
“”எக்சலன்ட்டா! எனக்கு அப்பவும் முஸ்லிம் நண்பர்கள் அதிகம். நாங்கள் நால்வர் கடைசி வரிசை பெஞ்சில்தான் உக்காருவோம். எங்களுக்கு பின்னாடி மாணவர்களின் டிபன் பாக்ஸ்கள் நீளவாக்கில் வைக்கப்பட்டிருக்கும்.
“”என்னுடைய பெஞ்சில் முகமது அலி, ஜக்கரியா, சந்தானம் உக்காருவர். முகமது அலி எப்பவும் மூணு தோசை கொண்டு வருவான். மூணுக்கும் தொட்டுக்க ஜீனிதான் அவங்கம்மா வச்சு விட்ருப்பாங்க.”
“”மீதி பேர்?”
“”ஜக்கரியாவும் தோசைதான் கொண்டு வந்திருப்பான். ஒவ்வொரு தோசைக்கும் ஒவ்வொரு வகை சட்னி. வெரைட்டியான சட்னிகளை வச்சுக்கிட்டு ரெண்டு பேர் தோசையையும் நானே தின்னுடுவேன்!”
“”உ<ங்க டிபனை அவங்க சாப்பிடுவாங்களாக்கும்!''
""நான் டிபன் பாக்சே எடுத்து வர மாட்டேன். அவங்க ரெண்டு பேரையும், கேன்டினுக்கு கூட்டிப்போய் பூரி கிழங்கை அக்கவுன்ட்டில வாங்கித் தருவேன். பூரி அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். காரணம், அவங்க அம்மாக்கள் அடிக்கடி பூரி செய்ய மாட்டாங்களாம். மாசா, மாசம் அம்மாகிட்ட பத்து ரூபா, இருபது ரூபா வாங்கிட்டு போய் அக்கவுன்ட்டை செட்டில் பண்ணுவேன்!''
""சந்தானம்?''
""சந்தானம் வீட்ல எப்பவும் அசைவம்தான் சமைப்பாங்க. அவங்க வீட்டில்தான் மொதமொத மட்டன் சாப்பிட்டேன். அவங்க வீட்ல சமையலுக்கு மூணு குக் போட்டிருந்தாங்க. நானும், சந்தானமும் ஓட்டலுக்கு போனா, பாட்டு பெட்டில காசு போட்டு, விரும்பின பாட்டு கேட்போம். (குரலை ரகசியமாக்கி) நானும், சந்தானமும், வின்ஸ்டன் சர்ச்சில் மாதிரி சுருட்டு குடிச்சு பார்த்திருக்கோம்!''
""ஓவ்!''
""இன்னொரு முக்கியமான விஷயம்... நானும், சந்தானமும் காவிரில குளிக்கப் போவம். சந்தானம் மாற்று ஜட்டி கொண்டு வர மாட்டான்; நான் கொண்டு வருவேன். குளிச்சிட்டு அதே ஈர ஜட்டி அணிந்து, அதன் மேல் டவுசர் போடுவான். நானோ, ஈர ஜட்டியை காயப்போட்டுவிட்டு, புது ஜட்டி போட்டுக் கொள்வேன்.
""குளித்துவிட்டு இருவரும் பள்ளிக்கு வந்தால், ஜட்டி மீறி அவன் டவுசர் ஈரமாகி யிருக்கும். அவனை டி.எம்.எஸ்., முட்டிகால் போடச் சொல்வார்; என்னை வகுப்புக்குள் போய் உக்கார சொல்லிடுவார்.''
""டி.எம்.எஸ்., பற்றி சொல்லுங்க பாஸ்!''
டி.எம்.எஸ்., என்றதும் சங்கரலிங்கத்தின் முகம் சூரியனித்தது.
""டி.எம்.சீனிவாசன் சாரின் பெயர்தான் சுருக்கமா டி.எம்.எஸ்., அவர் தான் பள்ளியின் தலைமையாசிரியர்; ஆல்ரவுண்டர். எங்களுக்கு, சரித்திரமும், ஆங்கிலமும் நடத்துவார். அவர் பலாப்பழம் மாதிரி; வெளியே முள்; உள்ளே தேனாய் தித்திக்கும் சுளை.
""ஆள் வெடவெடவென்று உயரமாய் இருப்பார். வெற்றிலை போட்டு, போட்டு வாய் நிரந்தரமாக சிவந்திருக்கும். ஆரோக்கியர். எனக்கு மிகவும் பிடித்த வாத்தியார்...''
""இப்போது அவருக்கு என்ன வயசிருக்கும்?''
""அறுபத்தியெட்டு இருக்கலாம்!''
""பள்ளி வாழ்க்கைக்குப்பின் டி.எம்.எஸ்., சாரை சந்தித்திருக்கிறீர்களா?''
""இருபது ஆண்டுகளுக்கு முன்வரை அவரை நான்கைந்து தடவை பார்த்திருக்கிறேன்; கடந்த இருபது ஆண்டுகளாக அவரை பார்க்கவில்லை.இப்போது அவர் ஸ்ரீரங்கத்தில் இருப்பதாக கேள்வி!''
""முகமது அலி, ஜக்கரியா, சந்தானம் இப்போது என்ன செய்கின்றனர்?''
""முகமது அலிக்கு படிப்பு பிரமாதமாக வரவில்லை. அதனால், பிற்காலத்தில் ஐ.டி.ஐ., படித்தான். வெல்டிங் பயிற்சி மேற்கொண்டான். தற்சமயம், "அஜ்மீர் இன்டஸ்ட்ரீஸ்' நடத்துகிறான். அவனது நிறுவனத்தில், நாற்பதுக்கும் மேற்பட்டோர் பணிபுரி கின்றனர்; மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக் கிறான்.
""சந்தானம் ரெண்டு பொண்டாட்டி காரன். ஜுவல்லரி ஷாப் வச்சிருக்கான். ஒரு நாள் என்னை கட்டி பிடிச்சுகிட்டு, "வாழ்க்கைல எது வேணாலும் பண்ணு லிங்கம்... ரெண்டு கல்யாணம் மட்டும் பண்ணிடாதே. நரகம்டா லிங்கம்...'ன்னு கதறினான்!''
சிரித்தேன்.
""என் மக கல்யாணத்துக்கு டி.எம்.எஸ்., சாருடன், முகமது அலி, ஜக்கரியா, சந்தானம், மீனாட்சி சுந்தரம், பியூன் ரங்கசாமி இவர்களை இன்வைட் பண்ணினேன். வகுப்பறை தோழர்கள் வந்திருந்தனர்; டி.எம்.எஸ்., வாத்தியார் மட்டும் வரவில்லை. அவருக்கு அனுப்பிய அழைப்பிதழ் முகவரி சரியில்லை என்ற காரணத்துடன் திருமணத்துக்குப் பின் திரும்பி வந்தது. டி.எம்.எஸ்., வராத குறை எனக்கு இன்னும் இருக்கு!''
ஆமோதித்தேன்.
""கம்மிங் பேக் டு பாயின்ட்... இப்ப நாம திருச்சிக்கு எதுக்கு போய்கிட்ருக்கம் தெரியுமா? டி.எம்.எஸ்., வாத்தியாரை பார்க்க!''
""இஸிட்... கிரேட்!''
""இன்னைக்கி ஒரு விசேஷமான நாள் தெரியுமா?''
உதடு பிதுக்கினேன்.
""ஆசிரியர் தினம்டா மக்கு. ஆசிரியர் தினமான இன்னைக்கி டி.எம்.எஸ்., வாத்தியாரை ஸ்வீட்டோட போய் பார்த்து, பேசி, ஆசீர்வாதம் வாங்கிட்டு வரலாம்ன்னு போறேன்!''
""செய்யுங்க பாஸ்!''
""நீ உன் வாத்தியார்களை எல்லாம் போய் பாக்றதில்லையா?''
""பாக்றதில்லை. ஆனா, படிச்ச வாத்தியார்களை பத்தி கதை எழுதி, மரியாதை பண்ணிடுறது!''
""நோகாம நுங்கு திங்கிறவன் நீ!''
""பாஸ்... நீங்க டி.எம்.எஸ்., வாத்தியாரை பாக்கப் போறப்ப, நான் கார்லயே இருந்துக்கிறேன். உங்க உணர்ச்சிகரமான சந்திப்பில் இடைஞ்சலா நிற்க வேண்டாமே நான்!''
""சில நேரங்கள்லதான்டா உபயோகரமா சிந்திக்கிற!''
கார் ஸ்ரீரங்கத்துக்குள் புகுந்தது. இரண்டு இடங்களில் விசாரித்து விட்டு, மிகச்சரியாக டி.எம்.எஸ்., வீட்டுமுன் போய் காரை நிறுத்தி இறங்கினார். ஆசிரியருக்கான பரிசு பொதியை எடுத்துக்கொண்டு வெளிவாசல் கதவைத் தட்டினார்.
கதவு திறந்தது.
""யாரு?'' குரல் தடுமாறியது.
""உங்க சங்கரலிங்கம் வந்திருக்கேன்!''
""எந்த லிங்கம்?''
""ஈ.ஆர்.ஐ., ஸ்கூல்ல 1970களில் ஏழாம் வகுப்பு படிச்ச சங்கரலிங்கம்! அன்பா லிங்கோம் லிங்கோம்ன்னு கூப்பிடுவீங்களே...''
""படுவா நீயா? இப்பவும் காவிரில குளிச்சிட்டு ஈர உள்ளாடை மாத்திட்டு வந்திருக்கிறாயா?''
சிரித்தார் சங்கரலிங்கம்.
இருவரும் உள்ளே நடந்தனர். டி.எம்.எஸ்.,ஸின் கைகள் சங்கரலிங்கத்தை ஆதரவாய் தடவிக் கொடுத்தன.""என்னடா சாயபு மாதிரி தாடி வளத்திருக்க?''
""தாடி முஸ்லிம்களுக்கு மட்டுமா பேடன்ட் உரிமை? எல்லாரும் வைக்கலாம். உங்க சரித்திர பாடமும், அதில் வரும் தாடி வைத்த கதாநாயகர்களையும் கேட்டுதான் எனக்கு தாடி வைக்கும் ஆசை வந்தது.
""எனக்கு செங்கிஸ்கான் மறக்கல, திப்புசுல்தான் மறக்கல, ஜான்சிராணி மறக்கல. நீங்க சொல்லி கொடுத்த ஆங்கிலம்தான் எனக்கு இன்னைக்கு பல வழில உதவுது. நல்ல ஆசிரியர்களின் பாடம் கொம்புத்தேன் போல. அய்யாயிரம் வருடங்கள் ஆனாலும் கெடுவதில்லை!''
எடிட்டர் சங்கரலிங்கம் பேசுவதை பார்த்து சிரித்தார் டி.எம்.எஸ்.,
கொண்டுவந்த இனிப்பையும், வெள்ளி பிள்ளையார் சிலையையும் நீட்டி,""ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்! என்னை ஆசீர்வதிங்க!''
டி.எம்.எஸ்., கால்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் எடிட்டர் சங்கரலிங்கம். ஆசிரியரின் இருகால் கட்டை விரல்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.
""அமோகமா இரு லிங்கோம்... எந்திரி!''
எழுந்தார் சங்கரலிங்கம்.
""காபி சாப்டுறியாடா லிங்கோம்!''
""சரி!''
டி.எம்.எஸ்., சமையலறை புகுந்த ஐந்தே நிமிடங்களில், இரு டபராக்களில் காபி தயாரித்துக் கொண்டு வந்தார்.
""சுகர் இருக்காடா?''
""இல்லை!''
""எனக்கும் இல்லை. சர்க்கரை தூக்கலா போட்டிருக்கேன். குடி!''
இருவரும் காபி அருந்தினர்.
""இப்பவும் வால்தனம் பண்ணும் பனிரெண்டு வயது சிறுவன் லிங்கோம் தான் மனக்கண்ணில் தெரிகிறான். உன்னை வேற மாதிரி பாக்க மனது ஒத்துக்க மாட்டேங்குது!''
""நான் உங்களை ஒண்ணு கேக்கணும்... தப்பா நினைச்சிக்காதீங்க. உங்ககிட்ட அடியோ, திட்டோ வாங்காதவங்க ஈ.ஆர்.ஐ., ஸ்கூல்ல இருக்கவே முடியாது; விதிவிலக்கு நான். என்னை மட்டும் நீங்க ஏன் அடிக்கல, திட்டல?''
கண்களை ஏறக்குறைய மூடி சிரித்தார்.
""தெரியலையேடா...''
""நான் உங்ககிட்ட அஞ்சு வருஷம் படிச்சிருக்கேன். நான் மக்கு மாணவனா... புத்திசாலி மாணவனா?''
யோசித்தார்.
""மற்றவர்களை ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கக்கூடிய துறுதுறு மாணவன் நீ. உன் ஆடை அணிதலில் ஆடம்பரம் இருக்காது; நேர்த்தி இருக்கும். நீ சிரித்துக்கொண்டே இருப்பாய். அதனால், உலகமே சிரித்துக் கொண்டிருப்பது போல தோன்றும்!''
""என்னை, உங்கள் மகன் போல பாவித்திருக்கிறீர்களா?''
""அப்படியெல்லாம் உறவுமுறை யோசித்ததில்லை. பள்ளியில் படித்த அனைவரையும் சமமாகவே பாவித்தேன். ஆனால், காலம் கடந்து பார்க்கும்போது உன்னைப்போல சிலர்தான் மனதில் பச்சக் என்று நிற்கின்றனர். உனக்கும், எனக்கும், பூர்வஜென்ம பந்தம் ஏதாவது இருக்கோன்னு தோணுது!''
""இருக்கலாம் சார்!''
""கல்லூரி வாழ்வில் நிறைய ஆசிரியர்களை பார்த்திருப்பாய். அவர்களின் மீது இல்லாத அபிமானம், என் மீது மட்டும் எப்படி லிங்கோம்?''
""கல்லூரி படிப்பில் சீரியஸ் சங்கரலிங்கம் ஆயிட்டேன். ஆசிரியர்களுக்கும், எனக்கும் இடையே ஆன உறவு தாமரை இலை தண்ணீர்போல் ஆகிவிட்டது. நிறைய ஆசிரியர்களின் முகம் மறந்து விட்டது.
""இன்றைக்கும் நீங்கள் தலைகேசத்துக்கு டை செய்து, முகச்சவரம் செய்து, 68 வயதிலும் 50வயது போல் காட்சியளிக்கிறீர்கள். சில ஆசிரியர்கள் நமக்குள் அகல்விளக்கு ஏற்றுவர்; நீங்களோ சூரியனை பறித்து மூளைக்குள் பூட்டி விட்டீர்கள்!''
""அப்படி இல்லை. மிகைப்படுத்தி பேசுகிறாய். என்னை இன்றைக்கும் திட்டும் மாணவர்கள் இருப்பர் இல்லையா லிங்கோம்?''
""தெரியாது சார்!''
""என் குடும்பத்தை பற்றி நீ எதுவும் கேட்கவில்லையே... ஏன்?
""பிறரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி பிரவேசிக்க நான் விரும்பவில்லை சார்!''
""நான் உன்னுடைய அந்தரங்கத்தில் அனுமதியின்றி பிரவேசிக்கிறேன். உன் குடும்ப அங்கத்தினர்கள் என்ன செய்கின்றனர்?''
""குறும்பான அம்மா. கடமையே கண்ணான அப்பா. "இன்னோவேட்டிவ்' மகன். மகாலட்சுமி போல் மகள். விஞ்ஞானி மருமகன். சந்தோஷமாக இருக்கிறேன். என் மகள் கல்யாணத்துக்கு கூரியரில் அழைப்பிதழ் அனுப்பினேன். நீங்கள் ஏன் வரவில்லை?''
""என் பெயரை என்னவென்று போட்டாய்?''
""டி.எம்.எஸ்., சார்!''
""சீனிவாசனைத்தான் யாருக்கும் இங்கு தெரியும்; டி.எம்.எஸ்.,ஐ தெரியாது. ஐலான்ட்டை, இஸ்லான்ட் என படிச்சிருப்பான் கொரியர்காரன்!''
சிரித்தனர்.
""<உன் எதிர்காலத் திட்டம் என்ன?''
""டிவி சானல் ஆரம்பிக்க வேண்டும் சார்!''
""அம்முயற்சி யிலும் நீ வெற்றிபெற வாழ்த்துக்கள்!''
""நன்றி டி.எம்.எஸ்., சார்!''
திடீரென்று இடது மணிகட்டை பார்த்துவிட்டு ருத்ரதாண்டவம் ஆடினார் டி.எம்.எஸ்.,
""ஏன்டா லிங்கோம்... வந்தா, பேசினோம் கிளம்பினோம்ன்னு இருக்க மாட்டியா? வந்தா வந்த இடம்; போனா போன இடமா உ<னக்கு? நான் அப்படி இல்லை. நீ ஆசிரியர் தினத்துக்கு உன் ஆசிரியரை பார்த்து ஸ்வீட் குடுத்து, ஆசீர்வாதம் வாங்கிட்ட. நான் போய் என் ஆசிரியர்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வேண்டாமா?''
பாய்ந்து மேஜையிலிருந்து ஸ்வீட் பாக்சை எடுத்துக்கொண்டு, ஹெர்குலஸ் சைக்கிளில் கிளம்பினார்.
என்னிடம் நடந்து வந்த சங்கரலிங்கம், ""சேம் ஓல்டு சிந்தாமணி பலாப்பழம்!'' என முணுமுணுத்தார்.
- அக்டோபர் 2010