ஆங்காரம்
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 126
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பன்னிரண்டு மணிக்கு ஏர் அவிழ்த்து மாட்டைக் கொண்டுபோய் இலுப்பாற்றுத் துறையில் இறக்கினான் கறுத்தச் செல்லையா. எருமைக் கடாக்களின் அடிவயிற்றுத் தொழி போகத் தேய்த்துக் கழுவினான். புட்டியில் கை வைத்தால் கிடாக்கள் காலைத் தூக்கி உதறின. தார்க்கம்பு ஏற்படுத்திய புண். ஒரு மாதிரி பொத்திப் பொத்தித் தேய்த்துக் கழுவி கிடாக்களைக் கரையேற்றினான். தன் நடையில் மாடுகள் தொழுவத்தை நோக்கி நடந்தன.
தலைமுண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டி, வேட்டியை உதறி மடித்து வைத்துவிட்டு ஆற்றில் முங்கிக் குளித்தான். தலைதுவட்டி, செம் பட்டைத் தலைமயிரில் கைவிட்டு உதறி, பண்ணையார் வீட்டை நோக்கி நடந்தான்.
எருமைக் கடாக்களைக் கண்ணியில் பிணைத்து வைக்கோல் படப்புக்குப் போனான் செல்லையா. புறவாசலிலேயே சாமிப்பண்ணை யாரின் தொழுவம், அறுத்தடிக்கும் களம். வைக்கோல் படப்பு. அறுப்புவைத்திருந்த படப்பில் இருந்து கைநிறைய வைக்கோலை வெட்டி இழுத்துப் பிடுங்கி இரண்டு குத்தாகப் போட்டு அழியில் கொண்டு அமுக்கி வைத்தான். அதிகமாக வைத்தால் கடாக்கள் வைக் கோலை இழுத்துக் கீழே போட்டு மிதிக்கும். அதன்மீது சுகமாகப் படுத்துக்கொள்ளும். வெள்ளையாக இருக்கும் வைக்கோலில் சாணியும் மூத்திரமும் புரண்டு மஞ்சள் பூத்து உரக்குண்டுக்குப் போகும். இதைப் பார்த்தால் சாமிப் பண்ணையாருக்கு ஆராசனை வந்துவிடும். இதற்காக வைக்கோல் குறைத்துத்தான் வைப்பது. சாயங்காலம் இன்னும் ஒருமுறை பிடுங்கி வைக்க வேண்டும்.
சாமிப்பண்ணையாருக்கு நான்கு கோட்டை விதைப்பாடு சொந்தம். கொஞ்சம் தோட்டம் துரவும் உண்டு. பிள்ளைகள் கிடையாது. ஆனால் சுற்று வட்டாரத்தில் ஆள்கட்டு கொண்ட குடும்பம். அவரும் பொண்டாட்டியுமாக ஆனந்தமான வாழ்க்கை.
சம்பாப் பயிர் கதிராகிவிட்டது. வயல் வேலைகள் என்று ஏதும் அதிகமாகக் கிடையாது. நாற்றுப் பாவுவதற்கு ஏழு மரக்கால் விதைப் பாடு நாற்றங்கால். அதைத்தான் உழுதுவிட்டு வந்தான் செல்லையா.
செல்லையாவுக்கு மாதச் சம்பளம். உண்டான வேலைகளைச் செய்வது, மேற்பார்வை செய்வது, யாரும் ஏவ வேண்டும் என்று இல்லை. அவன் பாட்டுக்குச் செய்துகொண்டிருப்பான். ஒன்றில்லாவிட் டால் ஒன்று இருந்துகொண்டிருக்கும். மாதம் ஒரு கோட்டை நெல்லும் மத்தியானத்துக்குக் கஞ்சியும் என்பது விதி. இது போக காலையில் சுட்டு மீந்துபோன தோசையோ, கொழுக்கட்டையோ, விறைத்த பிணம்போல, சாயங்காலம் வீட்டுக்குப் போகுமுன் கிடைக்கும்.
சாமிப் பண்ணையார் வீட்டுக்கு செல்லையா வேலைக்கு வந்து பத்திருபது ஆண்டு இருக்கும். ஒரு முரட்டுசுபாவம். விசேடமான அறிவு என்று இல்லை. வேலையில் பழகிய மாடு. ஏறத்தாழ சாமிப்பண்ணை யாருக்கும் செல்லையாவுக்கும் சமபிராயம். புதன் சனிகளில் எண்ணெய் தேய்த்துக் குளியல். அன்று நல்ல கோழிக்கறி. வெள்ளி செவ்வாயில் விரதம். விரதம் என்றால் பட்டினி என்பது அந்தப் பக்கம் நடைமுறை இல்லை. எனவே அறுபது திகைந்துவிட்டாலும் சாமிப்பண்ணையார் திடகாத்திரமாகவே இருந்தார்.
செல்லையாவின் கதை அதல்ல. பெரிய சம்சாரி. ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தும் தாங்குவார் இல்லை. அவனவன் பாடு அவனவனுக்கு. யார் வீட்டிலும் முட்டைச் சொறிந்து கொண்டிருப்பவன் செல்லையா அல்ல. உடல்பலம் ஓரளவு குன்றிப்போனாலும் பழைய வாசனைகளில் வண்டி ஓடியது. தொட்டுப் பொட்டிட்டுக் கொள்ளலாம் போல் பிரகாசமான கறுப்பு. தோலில் செதில்செதிலான சடை. பல்லெல் லாம் பட்டுப்போய் ஈறுமெல்லல் நடைமுறை.
நாற்றங்காலை உழுது போட்டுவிட்டதால் மத்தியானம் கஞ்சி வாங்கிக் குடித்த பிறகு மேலப்பத்து வயலில் வெள்ளம் நிற்கிறதா என்று பார்த்து அடைத்து வர வேண்டும் என்ற நினைப்பில் வைக்கோலை அழியில் வைத்துவிட்டு புன்னக்கெண்ணெய் கொண்டுவந்து மாட்டின் கழுத்தில் தொட்டுப் போட்டான் செல்லையா. சாம்பலைக் குழைத்துப் புட்டியில் பூசினான். வைக்கோல் படப்பின் ஓரத்தில் பூவரச மர நிழலில் சாய்ந்தான். காற்று சொகுசாகத் தடவியது.
அடுக்களையிலிருந்து ஒரு வாசனை மூக்கில் உராய்ந்தது. சுப்பம் மாள் உளுந்தஞ்சோறு பொங்குகிறாள் போலிருக்கிறது. வறுத்த உளுந்தும் வித்துச் சம்பா அரிசியும் சுக்கும் திருவிய தேங்காய் பூவும் வெந்தயமும் வெள்ளாய்ங்கமும் சேர்ந்து கலந்து கொதிக்கும் மணம். அதன் கரங் கோர்த்து உலாவிய முட்டை அவியலின் வாசனை. முட்டையோடு முருங்கைக் காயும் வடகமும் போட்டிருப்பாள் போலிருக்கிறது.
செல்லையாவின் வயிறு புறுபுறுத்தது. கன்னத்துச் சதையை உறிஞ்சிச் சப்பி உமிழ் நீரை உள் விழுங்குகையில் தன் காதுக்கு மட்டும் கேட்கும் சன்ன ஒலித்துணுக்கு.
‘காலம்பற குடிச்ச கஞ்சி பரலோகம் போய்ச் சேர்ந்திருக்கும்… உண்டான மத்தியானக் கஞ்சியை நேரத்தோடு தந்தா குடிச்சுட்டுப் போட்டு செத்த கண் அசரலாம். அதுக்காச்சுட்டி இன்னி காத்துக் கெடக்கணும். போய்க் கேட்டா, பெரிசா கோவம் வந்திரும். உனக்கு அதுக்குள்ள சாப்பாட்டு மணி அடிச்சிற்றா? நாங்களே இன்னும் சாப்பிடலியே. தலைவாழை இலை பரத்தி அவியலும் பொரியலுமா பரிமாறித் தாறதுபோல… எண்ணும் உண்டான பளங்கஞ்சியை நேரத்துக் குத் தந்தா என்ன?’
வாழைக்காய் பொரியல் தேங்காய் எண்ணெயில் முறுகும் வாசனை. இரும்பு சீனிச்சட்டியில் வெண்கலக் கரண்டி ‘கணங் கணங்’ என்று தட்டும் ஓசை. ‘சுர் சுர்’ என்று வாழைக்காயின் வலி முனகல்.
‘சின்ன நாச்சியாரு சமைஞ்சி இருக்கச்சிலே எதாம் நல்ல பண்டம் பலகாரம் செய்தா கூப்பிடுத் தருவாவ… உளுதுக்கிட்டு வந்தால, நாச்சியாரே சுடுதண்ணி இருக்காண்ணு கேட்டாப் போரும். போணியிலே உப்புபோட்டு சோறு வடிச்சதண்ணி, தேங்காத் திருவின செரட்டை, ஒரு துண்டு கருப்பட்டி கொண்டாந்து தருவாபுண்ணியாட்டி. இப்போபெரிய நாச்சியாரு ஒரு கொணம் வந்தா தருவாவ… போயிக் கேட்டா ஈனாப் பேச்சி கெணக்க முளிப்பாவ… இண்ணு உளுந்தஞ்சோறு பொங்குகாவ. இன்னாலே இதைக் கொஞ்சம் திண்ணுண்ணு தரவா போறாவ… நமக்கு அந்த புளிச்ச பளையது. திண்ணு மிச்சம் மீதி வந்தா தண்ணி ஊத்திப் புளிக்கப்போட்டு நாளைத் தருவாவ… சுப்பம்மாளின் தங்கை இங்கு நின்று வளர்ந்த காலத்துக் கதையின் பிசிறு.
வடகமும் அரிசி வத்தலும் வறுக்கும் வாசனை. மோர் மிளகாய் எண்ணெயில் கரியும் கமறல். விறகை வெளி இழுத்து அடுப்பைத் தாழ்த்தி, தீக்கங்கில் மண் தோண்டியில் குடிதண்ணீர் வைத்துவிட்டு அடுக்களை வாசலில் வந்து எட்டிப் பார்த்தாள் சுப்பம்மாள். “லே… எலே செல்லையா…”
கஞ்சி எடுத்து வைத்துவிட்டுக் கூப்பிடுகிறாள் என்று எழுந்து போனான்.
“வீட்டைக் கொஞ்சம் பாத்துக்கலே… ஆத்திலே போயி ஒரு முங்கு போட்டுக்கிட்டு வந்திருகேன்… பண்ணையாரு குளிக்கப் போயிருக்காரு. அவுரு வாறதுக்கு மின்ன வந்திருவேன். எங்காச்சும் போயிராதே… கதவு தொறந்து கெடக்கு… நா வந்து உருட்டீராம…”
முன் வாசலைத் தாள்போட்டு, அடுக்களைக் கதவை ஒருக்களித்துச் சாத்திவிட்டு சுப்பம்மாள் குளிக்கப் போனாள். செல்லையாவின் வயிறு கொந்தளித்துக் குலுங்கியது, குமுறியது. உளுந்தஞ் சோற்றின் மெல்லிய வாசனை இழைகள் மூக்கின் முனையில் சுற்றிச்சுற்றி வந்தன.
மெல்ல அடுக்களைக் கதவைத் திறந்து தலைநீட்டிப் பார்த்தான்.
கலவறைமீது வெண்கலப் பானை, அவியல் உருளி, சீனிச்சட்டி. மெதுவாக ஆண்டுக்கொரு முறை கழுவிவிட்டு வெள்ளையடிக்க மட்டுமே நுழையும் அடுக்களையின் உள்ளே நுழைந்தான். வெண்கலப் பானையை மூடியிருந்த சிப்பலை நீக்கிப் பார்த்தான். குப்பென்று கிளம்பிய ஆவி, கன்றுள்ளிக் கனைக்கும் எருமையின் மடுக்காம்பின் பால்பீய்ச்சல் போல் உமிழ்நீர் பீய்ச்ச, இரண்டு விரலால் வழித்து வாயில் போட்டு இடமும் வலமும் சூடு பொறுக்க ஒதுக்கி விழுங்கினான்.
“லே நாய்க்குப் பொறந்த பயலே… என்ன காரியம்லே செய்யே…” குரல்வளையில் கைவைத்து வெளியே தள்ளினார் சாமிப்பண்ணையார். “எறங்குலே வெளீல நண்ணி கெட்ட நாயே” ஏச்சும் அறையும் சேர்ந்து விழுந்தன.
“போ போக்களிஞ்சு… இரக்கம் பாத்து இந்தால விடுகேன்… இனி இந்த நடைக்கு வந்தே குருத்தைப் பறிச்சிருவேன்…”
பிடரியோடு சேர்ந்து விழுந்த அடி வயிற்றில் உறைத்தது. மனத்தில் ஒரு ஆங்காரமும் பொங்கியது.
‘விறீர்’ என்று நடையைக் கட்டினான். வீமநேரி குத்தாலிங்கம் வீட்டில்போய் வேகம் நின்றது.
”என்னலே செல்லையா? என்ன சங்கதி?”
”உம்மைக் கையோடு கூட்டியாரச் சொன்னா?”
”என்னலே சொல்லுகே? வெவரமாச் சொல்லு…”
”பண்ணையாருக்கு இறுக்கமாக் கெடக்கு.”
“என்னது?”
“நீரு சட்டுண்ணு பொறப்பட்டுப் போவும்…”
வீமநேரியில் தொடங்கிய நடைசுற்றுப்புற ஊர்களில் புகுந்து வெளி வந்து மாலை நான்கு மணிக்குத் திரும்பினான் செல்லையா.
தெரு முனையில் நின்று சாமிப்பண்ணையாரின் வீட்டைப் பார்க் கையில் -வீட்டுமுன் படைபடையாய்ச் சனக்கூட்டம். பிள்ளை இல்லாத ‘சொம்மு’க்காக ஆலாய்ப்பறந்து வந்து சாரிசாரியாய்ச் சேர்ந்த உறவினர் கள்… தெரிந்தவர்கள்.
இரவுச்சாப்பாட்டுக்காகப் புறவாசலில் கிடார அடுப்புகள் இரையத் துவங்கின.
– தீபம், ஆகஸ்ட் 1978.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?
வளர்கவி
September 6, 2026
இதய ஓசைகள்
மா.வீ.தியாகராசன்
September 6, 2026
உறவுகள் ஆயிரம்
ஐ.சாந்தன்
September 6, 2026
