ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 234 
 
 

(ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை)

ஒரு காலத்தில் மனிதர்கள் உணவுக்காக விவசாயம் செய்யவோ, வேட்டையாடவோ அவசியமில்லாமல் இருந்தது. சமைப்பதற்காகப் பெண்கள் அடுப்பு மூட்டவோ, அவர்களுக்கு உதவும் வகையில் சிறார்கள் தண்ணீரையும் விறகையும் சுமந்துவரவோ தேவை இருக்கவில்லை.

அப்போது ஆகாயம் மனிதர்களின் கைக்கு எட்டும் உயரத்தில் இருந்தது. பசிக்கும்போது அவர்கள் கையை உயர்த்தி ஆகாயத்தின் ஒரு துண்டை உடைத்து அதைச் சாப்பிடுவார்கள். ஆகாயம் மிகுந்த சுவையோடு இருந்தது.

நிலத்தின் அரசன் ஒபா என அழைக்கப்பட்டான். அவனும் அவனது குடிமக்களும் பறையடிப்பது, நடனமாடுவது ஆகியவற்றோடு பல திருவிழாக்களைக் குதூகலமாகக் கொண்டாடிக் களித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், ஆகாயம் மிகுந்த கோபத்தோடு இருந்தது. காரணம், மக்கள் தமது தேவைக்கு அதிகமாக ஆகாயத்தை உடைத்து அவற்றை வீணாக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உண்பதைவிட வீணாக்கி அழிப்பது அதிகமாக இருந்தது.

ஒரு நாள் நண்பகலில் ஆகாயம் ஒளிர்வதை நிறுத்தி இருட்டாகியது. கருத்த மேகக் கூட்டங்கள் ஒபா அரசனின் அரண்மனையைச் சூழ்ந்து திரண்டன. ஆகாயம் கடூரமான குரலில் முழங்கியது:

“ஒபா அரசனே! நான் உன்னை எச்சரிக்கிறேன்! உனது மக்கள் எனது கொடையைத் தொடர்ந்து இதே போல் வீணாக்கிக்கொண்டிருந்தால் இனிமேல் அவர்களுக்கு உண்பதற்கு என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது!”

ஒபா அதைக் கேட்டுக் கவலை கொண்டார். குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் அனைவருக்குமாக அவர் ஒரு செய்தியை அறிவித்தார். அவர்களுக்கு எப்போது பசிக்கிறதோ அப்போது மட்டும், தேவையான அளவுக்கு மட்டும், ஆகாயத்தை உடைத்தெடுத்து உண்ண வேண்டும் என்றும், தேவைக்கு அதிகமாகவோ அனாவசியமாகவோ அதை உடைத்து வீணாக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார்.

அதிலிருந்து மக்கள் மிகுந்த கவனத்தோடு அரசனின் கட்டளையைக் கடைபிடித்து வந்தனர்.

பிறகு அவர்களின் முதன்மைத் திருவிழா வந்தது. ஒபா உள்ளிட்ட சிறந்த நடனக்காரர்கள் நடனமாடியும், பாடியும், பல விதமான கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் திருவிழாவைப் பல நாட்களாக விமரிசையாகக் கொண்டாடிக் களித்துக்கொண்டிருந்தனர். மக்கள் யாவரும் தங்கள் தேவைக்கு மட்டும் உண்கிறார்களா என்பதை ஒபா கண்காணித்துக்கொண்டிருந்தார்.

திருவிழாவின் கடைசி நாளன்று அதீஸ் என்னும் பெண்ணும், அவளது கணவனான ஒத்தல்லோவும் வருகை புரிந்தனர். அதீஸ் எப்போதுமே

தேவைக்கு அதிகமானவற்றைச் செய்யக் கூடியவள். அவள் தங்கம், வைரம், முத்து, பவளம், வைடூரியம் உள்ளிட்ட பல விதமான நகைகளைக் கழுத்திலும் காதிலும் கையிலும் அணிந்து, கூட்டத்திடையே கர்வத்தோடு நடந்து மினுக்கிக்கொண்டிருந்தாள்.

ஒபாவின் அரண்மனைக்குக் கணவனோடு சென்ற அவள் அங்கு நிலவும் திருவிழாக் கொண்டாட்டத்தைக் கண்டு உவகை அடைந்தாள்.

‘அவர்கள் அழகிய ஆடைகளை உடுத்தி, அருமையாகப் பறை இசைத்து, அற்புதமாக நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய உணவும் சுவைமிக்கதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!’ என எண்ணிக்கொண்டாள்.

நட்சத்திர ஆகாயம் எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதையும் நினைவுகூர்ந்த அவள், கைகளை உயர்த்தி, ஆகாயத்தில் ஒரு பெரிய துண்டை உடைத்து எடுத்துக்கொண்டாள். ஏற்கனவே அவள் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தாள். இப்போது தேவைக்கதிகமாக மிகப் பெரிய அளவிலான துண்டை ஆகாயத்திலிருந்து உடைத்து எடுத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அதிலிருந்து சிறிதளவு மட்டுமே அவளால் உண்ண முடிந்தது. மேற்கொண்டு ஒரு கவளமேனும் உண்ண முடியாது.

பிறகுதான் தனது தவறை உணர்ந்த அவள், கணவனை அழைத்து, “என்னால் இதற்கு மேல் சாப்பிட முடியாது. இந்த ஆகாயத் துண்டைத் தூக்கி எறியவும் இயலாது. அரச கட்டளையை மீறுவது தண்டனைக்குரிய குற்றம். எனவே, நீ இதை உண்பாயாக!” என்றாள்.

ஒத்தல்லோவும் வயிறு நிறைய சாப்பிட்டிருந்ததால் அவன் அதை மறுத்துவிட்டான்.

அவர்கள் இருவரும் வெளியே விளையாடிக்கொண்டிருந்த அனைத்து குழந்தைகளையும் அழைத்து அந்த ஆகாயத்தை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சாப்பிடச் செய்ய முயற்சித்தனர். அக் குழந்தைகளும் ஏற்கனவே வயிறு நிறைய சாப்பிட்டிருந்தன. அதைவிட இப்போது அவர்களுக்கு விளையாட்டிலும், திருவிழாக் கொண்டாட்டத்திலும் ஆர்வம். ஆதலால் ஆளுக்கு ஒரு வாய் மட்டும் கடித்துவிட்டு ஓடிச் சென்றுவிட்டன.

அதன் பிறகு அதீஸும் ஒத்தல்லோவும் அண்டை அயலார்கள் மற்றும் கிராமத்தவர்கள் அனைவரையும் அழைத்தனர். விடிகிற வரையிலும் விருந்து நீடித்தது. விருந்தினர்கள் தங்களால் இயன்ற அளவு சாப்பிட்ட பிறகும், நட்சத்திரங்கள் மறைந்த அதிகாலை ஆகாயத்தின் பெரிய துண்டு மிச்சமிருந்தது.

“இனி இருப்பது இந்தச் சிறு துண்டுதானே! இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, யாரும் காணாதபடி அதீஸ் தனது வீட்டிற்குப் பின்புறமாக உள்ள கொல்லைப்புறத்தில் குழிதோண்டி அதைப் புதைத்துவிட்டாள்.

உடனே காதுகளைச் செவிடாக்கும்படி வானில் இடி முழக்கம் எழுந்து பூமியை உலுக்கியது. மழை எதுவும் பெய்யாமல், கண்களைப் பறிக்கும் விதமான மின்னல்கள் ஒபாவின் அரண்மனைக்கு மேலே பளீரிட்டன.

“ஒபா,… மாட்சிமை மிக்க அரசனே!” ஆகாயம் கர்ண கடூரமான முரட்டுக் குரலில் முழங்கியது. “உனது மக்கள் என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை! எனவே, நான் உங்களிடமிருந்து விலகி, தூரச் செல்கிறேன்!”

அதைக் கேட்டு ஒபா கலங்கினார். “நீ விலகிச் சென்றுவிட்டால் நாங்கள் எதை உண்போம்? எப்படி உயிர் வாழ்வோம்?” இரங்கத்தக்க குரலில் முறையிட்டார்.

“நீங்கள் நிலத்தில் பாடுபட்டு உழுது, பயிரிட்டும், கஷ்டப்பட்டு வேட்டையாடியும் உண்ணுங்கள்!” ஆகாயம் பதிலளித்தது. “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடையை வீணாக்கக் கூடாது என்பதை அப்போது ஒருவேளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!”

சொல்லிவிட்டு ஆகாயம் பூமியிலிருந்து விலகி, மனிதர்களின் கைக்கு எட்டாதபடி, அண்ட சராசரங்களுக்கு அப்பால் சென்றுவிட்டது.

அதிலிருந்துதான் மனிதர்கள் கஷ்டப்பட்டு உழைத்து விவசாயம் செய்தும், வேட்டையாடியும் உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆயினும் மனிதர்கள் மேல் உள்ள மிச்சக் கருணையினால்தான் ஆகாயம் இன்னமும் பூமிக்கு மழையைப் பொழிந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் பூமியில் தாவரங்கள் உயிர் வாழ்கின்றன. அவற்றை உண்டு விலங்குகளும் வாழ முடிகிறது. பூமியில் உள்ள பல்லுயிர்களும் ஒன்றையொன்று சார்ந்து உயிர் சுழற்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *