ஆகாயத்தில் வண்ணப்பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 2,042 
 
 

நிலத்தில் நின்று எழுந்த ஒளி நீரில் நீந்தி செல்லும் மீன்கள் போல வானை தொட சென்று கொண்டிருந்தது. சட்டென்று மறைந்து பின் வெடித்து பூக்கள் போன்று சிதறி கோடி வண்ண ஒளிகள் நிலத்தை நோக்கி உருகி வந்தது காற்றில் மறைந்தது.

ஆதினி வாசலில் நின்று கொண்டிருந்தவள் அப்பா என்று அழைத்து வான வேடிக்கையை காட்டினாள். அதை பார்த்து ரசித்த எனக்கு அதன் விலை பல ஆயிரம் இருக்கும் என்று தோன்றியது. அப்பா வெடி வாங்கி கொடுங்க என்றாள். நீ வெடிக்க மாட்ட பாப்பா. நல்லா வெடிப்பேன். வெடி வேண்டாம் மத்தாப்பு மட்டும் வாங்குங்க இடையில் ஒரு நாள் தான் இருக்கிறது அப்பா என்றாள். சரி வாங்கலாம் என்றேன்.

சுசிலா டீச்சர் அழைத்தார். ஆதினி படிக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பாடம் எடுக்கிறார். ஏற்கனவே என்னுடன் தான் எங்கள் பள்ளியில் வேலை பார்த்தார். அதிக வேலை பழு அதுவும் இல்லாமல் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும். சனிக் கிழமைகள் விடுமுறை கிடையாது. பெரும்பாலும் விடுப்பு கிடையாது. அதிக கெடுபிடிக்கள். அதனால் அதினி படிக்கும் பள்ளிக்கு மாறி விட்டார். அவருடைய கணவரும் ஆசிரியர் தான். ஆனால் வெளியூரில் தங்கி வேலை பார்க்கிறார். விடுமுறையின் போது தான் வீட்டுக்கு வருவார். அதனால் சில வேலைகளை என்னிடம் சுசிலா கூறுவார். நானும் செய்வது உண்டு. முன்பு வேறு ஒரு காலனியில் இருந்தார்கள். அங்கு பாதுகாப்பு இல்லை என்றார். எங்க தெருவுக்கு வந்து விடுங்கள் என்று கூறி இருந்தேன். எங்கள் தெருவில் ஒரு வீடு காலியானது. அவரும் உடனே எங்க தெருவுக்கு மாற்றி கொண்டு வந்து விட்டார்கள்.

சுசிலாவிற்கு ஒரே மகள் சவிதா. நட்சத்திரம் போல் இருப்பாள். ஆனால் அவளுக்கு பிறந்ததிலிருந்து ஆட்டிஸம். சுசிலா எப்போதும் அவளை பற்றியே பேசுவார். அவளும் எல்லா குழந்தைகள் போல் தான் இருந்தாள். அவர் ஆசிரியர் என்பதால் குழந்தைகளிடம் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டு எல்லா மருத்துவர்களிடம் காட்டி படிப்படியாக எல்லா தெரப்பியும் கொடுத்து இருக்கிறார்கள். நல்ல முன்னேற்றம் இருந்தது. ஆனாலும் பொது பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல். அதற்கான சிறப்பு பள்ளிக்கு தான் போக முடிந்தது.

சுசிலாவுக்கு பக்க பலமே அவருடைய அம்மா தான். அவர் தான் சவிதாவை பார்த்து கொள்கிறார்கள். சவிதாவை ஸ்கூலுக்கு அழைத்து செல்வது. பேச்சு பயிற்சிக்கு கூட்டி கொண்டு போவது எல்லாம். இடையில் கொரோனா காலங்களில் சுசிலாவும் அவருடைய அம்மாவும் சவிதாவை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள். அப்போது எல்லாம் நாங்கள் அவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம். அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். ஆதினி சவிதாவிடம் இயல்பாக தான் பேசுவாள். அவளும் பேசுவாள். சில சமயம் பதில் பேச மாட்டாள். ஆதினியிடம் எந்த மாற்றமும் இருக்காது. எப்படியாவது அவளுடைய வழிக்கு கொண்டு வந்து விடுவாள்.

சவிதாவிற்கு கொரோனாவிற்கு பின்பு பெரிய விடுதலை. மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கி விட்டாள். அவள் அடம் செய்வது கொஞ்சம் குறைந்துள்ளது என்றார் சுசிலா. ஆனாலும் இடை இடையே ஏதாவது ஒன்றை வைத்து அடம் செய்வாள். சமயத்தில் அவள் பாட்டி ஒற்றையாலாக சமாளிக்க முடியாமல் பயந்து போய் என் மனைவி கார்த்திகாவை அழைத்தார்கள். அவள் சென்று சவிதாவை இருவருமாக அமைதி படுத்தி இருக்கிறார்கள். இது அவ்வபோது நடப்பது உண்டு. ஆனாலும் சுசிலா இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து கொண்டு அவளை பார்த்து கொண்டார்.

என் நண்பன் டாக்டர் எதேச்சையாக பார்த்த போது அவன் பெரு நகரத்தில் ஸ்பெஸல் சில்ரன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன் என்றான். அவன் கூறும் சில ஆலோசனைகளை சுசிலாவிற்கு கூறுவேன். அவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சவிதாவிற்கு செய்வார்.

எனக்கு கீபோர்டு கற்று கொடுக்கும் தேவதாஸை தெரியும். அவரிடம் ஒரு முறை கேட்டேன் சவிதாவின் நிலையை கூறி. அவர் முதலில் கொஞ்சம் யோசித்தார் பின்பு ஒத்துக் கொண்டார்.

சவிதா பயிற்சி சென்றாள். இப்போது எல்லாம் நன்றாக வாசிக்க தொடங்கிவிட்டாள். இதுவும் என் நண்பன் கூறிய ஐடியா தான். சவிதா அவ்வப்போது ஆதினிக்கு வாசித்து காட்டுவாள்.

தீபாவளிக்கு வழக்கமாக மூன்று நாட்கள் தான் விடுமுறை இருக்கும் இந்த தீபாவளிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை. அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தேன் என் மனைவி கார்த்திகா கூறினாள் சவிதா அம்மா போன் பண்ணுனாங்க. நீங்க வந்த உடனே வர சொன்னாங்க.

என் எண்ணங்கள் என்ன பிரச்சனை சவிதாவிற்கு என்று ஓடியது. இப்போது எல்லாம் பெரிதாக அடம் பிடிப்பதில்லை என்றார். ஆதினிக்கு பீஸ் கட்டும் போது கூட பார்த்தேன். சுசிலா ஒன்றும் சவிதாவை பற்றி கூற வில்லையே. வேறு எண்ண பிரச்சனை. நான் கிளம்பினேன் உடனே கார்த்திகா நானும் வருகிறேன் என்றாள்.

அப்பா வெடி இன்னும் வாங்கல மறந்துட்டீங்க என்று ஆதினி கூறினாள். திரும்பிவரும் போது வாங்கிட்டு வரேன் என்றேன்.

சவிதா வீட்டிற்குள் நுழைந்தோம் அவள் அப்பா வாங்க சார் என்று வரவேற்றார். இப்ப தான் விடுமுறை கிடைத்தது என்றார். சுசிலா அம்மா முகம் பேய் அரைந்த மாதிரி இருந்தது. சவிதா எங்க அம்மா காணோம் என்றாள் கார்த்திகா.

வெடி சத்தம் கேட்க தொடங்கியதிலிருந்தே அவள் உடம்பு சரி இல்லை. அழுது கொண்டே இருக்கிறாள். இரவெல்லாம் தூங்கவில்லை நாங்கள் யாருமே தூங்க வில்லை. என்ன செய்வதுனே தெரியவில்லை என்றாள் சுசிலா. கார்த்திகா உடனே என்னிடம் உங்க நண்பர்ட்ட கேளுங்க என்றாள். சவிதா அப்போது வெடி சத்தத்தை கேட்டு உரக்க கத்தினாள். அந்த குரல் என்னை அசைத்தது. நான் என் நண்பனை அழைத்தேன். உடனே எடுத்தான். விபரத்தை கூறினேன்.

அவன் உடனே முதல்ல யாரும் பயப்படாதீங்க. அவ இந்த சத்தத்துக்கு ஏற்கனவே பழகவில்லை. அவளுக்கு பிடிக்கல. வெடி சத்தம் கேட்காத இடத்துக்கு கூட்டிட்டு போங்க. ஏதாவது ஐடியா சொல்லு. நம்ம பிரச்சனைக்கு நாம தான் வழி கண்டுபிடிக்கனும் கண்டுபிடி. நான் கொஞ்சம் யோசித்தேன். என்ன யோசனை சவிதா பாவம் என்றாள் கார்த்திகா.

நான் சுசிலாவிடமும் அவர் கணவரிடமும் பேசினேன். ஒரு வழி இருக்கு வெடி சத்தம் கேட்காத இடம் என்றால் தீபாவளிக்கு வெடி வெடிக்காத இடத்துக்கு போய் தங்கனும். வெடிக்காத இடமா அப்படி எங்க இருக்கு என்றார்கள்.

இடம் இருக்கு ஆனா கொஞ்சம் பக்கத்துல இருக்கு. கரைவெட்டி பறவைகள் சரணாலயம். அது ஒட்டி எங்க கிராமம் இருக்கு. பூர்வீக வீடும் இருக்கு. நல்ல நிலையில் இருக்கு.

நாங்க கோயில் திருவிழா, குல தெய்வ வழிபாட்டுக்கு போவோம். நீங்கள் அங்க போய் தங்குங்க எந்த சத்தமும் இருக்காது ஆழ்கடல் அமைதி இருக்கும். இருவரும் யோசித்தார்கள். கார்த்திகா மகிழ்ச்சியில் என் கைகளை இறுக பற்றினாள். சுசிலாவின் அம்மா நல்ல யோசனை அங்கேயே கிளம்பலாம் என்றார். சவிதா தன் இரு காதையும் அழுத்தி கொண்டு வெளியே வர அடம் பிடித்தாள்.

நாங்கள் எல்லோரும் விபரத்தை கூறியவுடன் அவளுக்கு நம்பிக்கை வந்தது. அவள் கொஞ்சம் முகம் மாறியது. அனைவரும் கிராமத்தை நோக்கி வண்டியில் புறப்பட்டார்கள். கிராமத்திற்கு சென்றவுடன் சவிதா அடம் பிடிக்க கூடாது என்று முருகனை வேண்டினேன்.

நான் எப்போதும் போல தீபாவளிக்கு வாங்க வேண்டிதை வாங்க சென்று விட்டேன். நல்ல கூட்டம். மக்களை ஒன்றாக கூட்டமாக பார்ப்பது ஒரு மகிழ்ச்சி தான்.

சுசிலா அழைத்தார்கள். வண்டியில் வரும் போதும் சவிதா அழ தொடங்கி விட்டாள். வெடி சத்தம் குறைந்தவுடன் நன்றாக தூங்கி விட்டாள். கிராமத்திற்குள் பேரமைதி. ஒரு பட்டாசு சத்தமும் இல்லை. உங்கள் வீடு அழகாக இருக்கிறது. கிராமமே மண் அகல் விளக்கில் ஒளி வீசுகிறது. நல்ல வேளை சவிதாவை எப்படி மூன்று நாட்கள் சமாளிக்க போகிறோம் என்று நினைத்தேன். போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருக்கு. இந்த இடம் தான் சொர்க்கம். சவிதா அமைதியாக இருக்கிறாள் அழவில்லை. நன்றி சார் என்றார்.

தெரிந்தவர் ஒருவர் கேட்டார் வெடி வாங்கலயா என்று. ஆதினி வெடி கேட்டது நினைவு வந்தது. வெடி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன்.

அப்பா எங்க வெடி என்றாள் ஆதினி என் கைகளைப் பார்த்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *