அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 305 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறை கண்டாகி விட்டது என்று வானொலியில் அறிவித்து விட, தக்பீர் ஒலிக்கிறது. நபீலா உம்மா அடுக்களையில் இரவுச் சமையலில் ஈடுபட்டிருந்தார். மகள் ஸமீனா தாய்க்கு ஒத்தாசைகள் செய்த வண்ணமிருக்க, முன் அறையில் பேத்தி அஸ்மா குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தாள். மௌனமாக வேலையில் ஈடுபட்டிருந்த நபீலா உம்மாவை மகளின் குரல் சுய நினைவுக்குக் கொண்டு வருகிறது. 

“உம்மா, பெருநாள் கடையாப்பத்துக்கு இடியப்பம் நல்லம். மாவு இருக்காம்மா?” 

“சாமான் பெட்டியில அவித்த மாவு இருக்கும், எடுத்து வைங்க.” மகள் அவ்விடம் விட்டகன்றதும், நபீலா உம்மாவின் நாசியினூடாகப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது. அவரது தம்பி அக்ரமுக்கு இடியப்பம் என்றால் உயிர். “இப்போது எப்படி இருக்கிறானோ?யாஅல்லாஹ்!” 

கண்களில் துளிர்த்த நீரைப் புறங்கையால் துடைத்துக் கொள்கிறார். அவரையறியாமலேயே அவரின் எண்ணப்பறவை பின்னோக்கிப் பறக்கிறது. 

கிழக்கு மாகாணத்தின் அழகான சிற்றூர் ஒன்றிலே மிகப்பெரும் புள்ளியாய் விளங்கியவர் அக்ரம் முதலாளி. புகழும் மதிப்பும் கிடைக்கவேண்டுமென்று பலநூறு பேரை ‘கியு’ வில் நிற்கவைத்து ‘ஸகாத்’ (?!) வழங்கும் அளவுக்கு அவர் செல்வச் செழிப்பில் மிதந்தாலும், அவரின் மூத்த சகோதரியான நபீலா உம்மா வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தார். ‘அடுத்த வீட்டான் பசித்திருக்கத் தான் மட்டும் புசிப்பவன் நம்மைச் சேர்ந்தவனல்லன்’ என்று அண்ணல் நபியின் அமுதமொழியிருக்க, ஸகாத் என்ற பெயரில் ஊர்ப் பெருமைக்காக ஒரு சில சில்லறைக்காசுகளைச் சுண்டி எறிபவரான அக்ரம் முதலாளி, தமக்கையின் துன்பத்தைக் கண்டும் காணாதவராயிருந்தார். 

தம்பி, தன்மகன் அன்வருக்கு வேறிடங்களில் வரன் தேட முற்பட்டிருப்பதைக் கேள்வியுற்ற நபிலா உம்மா திடுக்கிட்டார். சிறுவயதிலேயே ஸமீனா அன்வருக்காகத்தான் எனத் தீர்மானித்திருக்க, இன்று செல்வச் செழிப்பில் வாழ்ந்து வரும் ஒரே காரணத்தால் பழைய வாக்குறுதியைத் தன் தம்பி மீறத் துணிந்தது கண்டு வெகுண்டு, வேதனையுற்றார். இனியும் பேசாதிருந்தால், காரியம் கைமீறிப் போய்விடும் என்றுணர்ந்து தம்பியின் வீடு நோக்கி விரைந்தார். 

தன் மாளிகை போன்ற வீட்டின் முன்னறையில், சொகுசு நாற்காலியொன்றில் சாய்ந்தவாறு பத்திரிகையைப் புரட்டிக் கொண்டு இருந்த அக்ரம் முதலாளி, தன் தமக்கையைக் கண்டதும் நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். 

“என்ன ராத்தா, ஒரு நாளும் இல்லாத திருநாளாய் இவ்வளவு தூரப்பயணம்?” 

“ஏண்டாப்பா வந்தால்தான் என்ன? நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா?” 

“சேச்சே யார் இப்போ அப்படிச் சொன்னது? சும்மா கேட்டேன்.” 

“நீதான் எங்க வீட்டுப் பக்கம் எட்டியும் பார்க்கமாட்டே, நானும் அந்தத் தகப்பனையிழந்த பொண்ணும் தனியா அந்த வீட்டுல காலம் தள்ளறோமெங்கிற நெனப்புகூட ஒனக்கில்லை ஹும்! என்னால அப்படி இருக்கேலுமா?” 

“சரி, சரி சும்மா புலம்பாதீங்க ராத்தா, வந்த விஷயத்த சட்டுப்புட்டுன்னு சொல்லிடுங்க. நானும் இன்னுங்கொஞ்ச நேரத்துல டவுணுக்குப் போகணும். ஏதும் கடன்கேட்டு வந்தீங்களா?” 

“அவசரப்படாதேப்பா, நான் உங்கிட்ட கடன் கேட்டு வரல்ல. வந்து மருமகனுக்கு வேறெடத்துல வரன் பேசுறியாமே!” 

“மரு… மகனா? ஓ! நம்ம அன்வரச் சொல்றீங்களா? அவன் ஒங்களுக்கு மருமகன்கிற விஷயமே எனக்கு மறந்திட்டுது பாத்தீங்களா? ஆமா! வரன் பேசுறேன். அதுக்கென்ன இப்போ? அவனுக்குப் பொண்ணுதர எல்லோரும் நான், நீன்னு போட்டி போடுறாங்க. ஆனா, நான் ரெண்டு லட்சம் ரொக்கம், கார், பங்களா, நகை நட்டுன்னு எதிர்பார்க்கிறேன். அதுல பாருங்க ராத்தா, ஒவ்வொருத்தரிட்டயும் ஒண்ணிருந்தா இன்னொண்ணு இல்ல; அதுதான் எல்லாம் பொருந்தி வர்றமாதிரி ஓரெடத்தைத் தேடுறேன்.” 

தம்பியின் பேச்சைக் கேட்டு உள்ளூரக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வெகு சாந்தமாகவே பேச முயற்சித்தார் நபீலா உம்மா. 

“ஏன்டாப்பா, நம்ம ஸமீனா… அன்வருக்குத்தான்னு எங்கட வாப்பா ஹயாத்தோட இருக்கிறப்பவே முடிவாக்கின விஷயமாச்சே! இப்ப நீ என்னடான்னா…” 

“இஞ்ச பாருங்க ராத்தா, பொண்ணு யாராயிருந்தாலும் எனக்கு ஒண்ணுதான். 

அதாவது, நான் கேட்கிற சீர்வரிசைகள் தாரதா இருந்தா. அதனால…” 

“அதனால…?” 

“நான் கேட்கிற சீதனத்த உங்களால தர முடியுமாயிருந்தா ஸமீனா எனக்கு மருமகளா வர்றதுல எந்தத் தடையுமில்லை” 

“என்னப்பா இப்படிச் சொல்லிட்ட? இந்த சீதனம் சீர்வரிசை எல்லாம் எடுக்கிறது இஸ்லாத்துல தடுக்கப்பட்டிருக்கே! தவிர ஏண்ட நெலம தெரிஞ்சும், நீ இப்படிப் பேசுறது சரியா?” 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு ஏண்ட இன்ஜினியர் மகன்ட கௌரவம் ரொம்ப முக்கியம். உங்களுக்கு முடியும்னா, நான் கேட்கிறதத் தாங்க. இல்லாட்டி தயவு செஞ்சி எடத்தக் காலி பண்ணுங்க.”

“தம்பி, கொஞ்சம் இரக்கம் காட்டப்பா! ஏன்ட வீடும், வீட்டோட உள்ள காணித்துண்டும் மகளுக்குத்தான்.” 

“ராத்தா இந்தப் பிச்சைக்காரக் கதையெல்லாம் எனக்குத் தேவையில்ல. சொல்றேண்டு தப்பா நெனக்காதீங்க. நீங்க ஏன் வீணா எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுறீங்க? ஒங்கட தகுதிக்கேத்த மாதிரி ஒரு தோட்டக்காரனையோ, கூலிக்காரனையோ பாத்து ஸமீனாவுக்கு முடிச்சி வையுங்க.” 

“தம்பீ…!”

“சும்மாக்கத்தாதீங்க. ஒங்கட பிச்சைக்கார வீட்டு சம்பந்தம் பேச… எவனாவது இளிச்ச வாயனாப் பாருங்க, போங்க!” 

தம் தம்பியின் ஏளனமொழிகளால் உடலும் உள்ளமும் அவமானத்தால் கூனிக்குறுகிப் போய், கண்கள் பனிக்க, நா உலர, நடை தளர வீட்டையடைந்தார் நபீலா உம்மா. 

அன்றுதான் இறுதியாக அவர் தம்பியைப் பார்த்தார். அந்த ஏழைத்தாயின் மனக்குமுறலைப் போக்கவே வந்தது போல் அலுவலக விடயமாய் அக்கிராமத்துக்கு வந்த ஸாதிக், ஸமீனாவின் மார்க்கப்பற்று, அடக்கம், அழகு என்பவற்றைக் கேள்வியுற்று அவளைத் துணைவியாக்கிக் கொண்டு, தம்முடன் நபீலா உம்மாவையும் அழைத்துக் கொண்டு, எழில் கொஞ்சும் கண்டி மாநகரில் இருந்த தன் வீட்டுக்கு வந்து விட்டான். கருணையாளனான அல்லாஹ்வின் அருளையெண்ணி அல்லும் பகலும் அவனுக்கே நன்றி செலுத்தி வந்தனர் தாயும் மகளும். 


வெளியே மழை பொழிந்துகொண்டிருந்தது. சிந்தனையில் மூழ்கியிருந்த நபீலா உம்மாவைப் பேத்தி அஸ்மா தன் சிறு கைகளால் கட்டிக்கொண்டு, கெஞ்சும் குரலில் பேசலானாள். 

“உம்மம்மா, எங்கட ஊட்டுத் திண்ணையில ஒரு அப்பா மழைல நனைஞ்சு போய், நடுங்கிக்கிட்டு நிக்கிறாரு. பாவம் உம்மம்மா. நீங்க அவர ஊட்டுக்குள்ள வரச்சொல்லுங்க.” 

“அட அப்படியா? நீங்க போய், அவர உள்ள வந்து உட்காரச் சொல்லுங்கம்மா.” 

“நல்ல உம்மம்மா!” அவள் சிட்டெனப் பறந்தாள்.

அந்த வயோதிபர் தளர் நடையோடு, உடலிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட வீட்டினுள் பிரவேசித்தார். அவரது தலையைத் துவட்டுவதற்காகத் துவாயை நீட்டிய உருவத்தைப் பார்த்த அந்த வயோதிபர், திடுக்கிட்டார். அவரது நாக் குளறியது. 

“நீ… நீ… நீங்க… ந… பீலா… ராத்தா தானே?” 

“ஆ… ஆமா! நீ… நீங்க…?” 

“ராத்தா என்னையத் தெரியல்லையா? நா… நான்… அக்ரம்.”

“எ… என்னது! நீயா?” 

“என்னைய மன்னிச்சிடுங்க ராத்தா! பணத்திமிர் கண்ண மறைச்சப்போ, ஒங்கள நானொரு பொருட்டாகவே மதிக்கல்ல. இ… இப்போ, எ… என் மகன் கூட என்னைய உதாசீனப்படுத்தி விட்டான். அடுக்குமாடி வீட்டுல வாழ்ந்த நான், இ… இன்னைக்கி அகதி முகாம்ல!” 

“அழாதேப்பா! எல்லாம் அந்த அல்லாஹ்ட நாட்டம். நாம என்ன பண்ண முடியும்? ஒரு மனுஷனுக்கு சொத்து சொகந்தான் ‘பெரிசுன்னு நீ நெனச்சே! அல்லாஹ்வுக்குப் பயந்து உண்மை முஃமினா சொந்த பந்தங்களை நேசிச்சி வாழக்கூடிய வசதி இருந்தும், நீ அதைப் பயன்படுத்திக்கத் தவறிட்டே! இப்ப வருந்தி என்ன பயன்?” 

தன் தவறுக்கு வருந்துபவராய் தலைகுனிந்து அமர்ந்திருந்த அவரது செவிகளில் ஒலிநாடாவிலிருந்து ஒலித்த கணீரென்ற குத்பாப் பிரசங்கம் தெளிவாகக் கேட்கிறது. 

“…மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளிலே, செல்வமும் பிள்ளைகளும் யாதொரு பயனுமளிக்க மாட்டா. இம்மையிலே தன் செல்வத்தைக் கொண்டு நற்கிரியை புரியாதவர்கள் திடுக்கம் நிறைந்த அந்தக் கியாமநாளிலே ‘என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! என் செல்வமும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்துவிட்டனவே’ என்றும் அரற்றுவார்கள் என்று அல்லாஹ் தன் அருள்மறையிலே அருளியுள்ளான். எனவே, அன்பார்ந்த பெரியோர்களே, சகோதரர்களே…” 

குத்பா பிரசங்கத்தில் ஒலித்த அந்த சன்மார்க்கப் போதனையில் உணர்வொன்றிட, விழிகள் அருவிகளாயின. தமக்கை அன்போடு நீட்டிய கோப்பியைப் பருகியவர், தொழுகைக்காக பள்ளிவாயிலை நோக்கி விரைகிறார். 

தன்னைப் படைத்த தூயோனின் சந்நிதானத்தில் சிரம் பணிந்து, தன் பாவக்கறைபோக்க அழுதழுது இறைஞ்சிய அந்த முதியவரின் ஆவி நிம்மதியாய்ப் பிரிகிறது. இறையில்லத்தில் அவர் தன் இன்னுயிர் நீத்ததை அறியாது, நாளைய பெருநாள் தினத்தைத் தன் சகோதரரோடு கொண்டாடலாமே! என்ற ஆவலோடு நபிலா உம்மாவும், ஏனையோரும் அவரின் வருகைக்காகச் சாப்பாட்டையும் தயாராக வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

– அல் ஹஸனாத், ஜுலை-ஓகஸ்ட், 1997.

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *