அவன் அவள் கெமிஸ்ட்ரி




அலைகள் எட்டடி உயரத்துக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்றுக் கிடந்தது வெள்ளை மணல் கடற்கரை. பௌர்ணமி நிலா மஞ்சள் வெளிச்சம் கொட்டி சூழலை அழகாக்கிக் கொண்டிருந்தது. வித்தியாசமான கட்டடம் ஒன்று தன் பழைய பொலிவையெல்லாம் இழந்து பாழடைந்து கிடந்தது.
“ஜே இந்த இடம்தானா?”
“ஆம். என்றுதான் நினைக்கிறேன். சுற்றுவட்டாரத்தில் என்ன பார்க்கிறாய்?”
“கடல்-அலை-வெள்ளைமணல்-பௌர்ணமிநிலவு”
“போதாது. ஏதேனும் கட்டடம் தெரிகிறதா?”
“ஆம். வித்தியாசமாக இருக்கிறது. பிரமிட்டின் குழந்தை வடிவம் போல. கூம்பாக வானை நோக்கி”
“சரிதான். உன் ஜீன்கள் தமிழ்தானா? அது ஒரு கோயில். அலைவாய்க்கோயில் என்று சொல்வார்கள்”
“ஓ.. ஞாபகம் வருகிறது.. மாமல்லபுரம் என்பது பழைய பெயர் – சரியா?”
“சரியே! இன்னும் 24 விநாடிகள் அங்கே காத்திருக்க வேண்டி இருக்கும். அவள் இன்னும் 17இல்தான் இருக்கிறாள்”
24 விநாடிகள். என்ன செய்து பொழுதைப் போக்குவது? இந்த ஜேக்கு நேரத்தின் அருமையே தெரிவதில்லை. ஒரு புத்தகம் படிக்கலாமா? மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். விரல்கள் நடுங்குவது தெரிந்தது.
“கவிதை! கவிதைப் புத்தகம் படி. இப்போதைக்கு உனக்கு அதுதான் தேவை”
“ஜே. எத்தனை முறை சொல்வது? மனத்தையெல்லாம் படிக்காதே.. இது என் நேரம். கடமை நேரம் அல்ல!”
யதேச்சையான திருப்பலில் “விழிகள் விண்ணை வருடினாலும் விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான்” என்ன அர்த்தம் இதற்கு? ஜன்னல் கம்பி என்றால் என்ன?
“அதை விடு.. பக்கம் 48க்கு போ!” என்றான் ஜே காதோரம்.
“எதுவும் பிரச்சினை வராதே?
“நீ எதற்கும் தயாரானவன் சீ! உன்னால் முடியாததா?”
“உனக்கென்ன- பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய். நேரடியாக இறங்குபவன் நான் தானே”
“பயம் வேண்டாம். உனக்கு இது சுலபம்!”
“அவள் தயார்ப் படுத்தப்பட்டுவிட்டாளா?”
“ஆம். 5 சிசி”
“அவர்கள்?”
“காத்துக் கொண்டிருக்கிறார்கள்”
அவள் வண்டி வானில் தென்பட்டது. சிறிய வண்டி. அவள் அமரவும், ஒரு சிறு பெட்டி வைக்கவும் மட்டுமே இடம். மண்ணைச் சிதறடித்து இறங்கினாள்.
“திருவாளர் சீ”
“நானே!” என்றேன். அவள் மீதிருந்து கண்ணை எடுக்க முடியாமல். அளவான வடிவுகள், வளைவுகள்- சீருடையையும் மீறிய வசீகரம்.
“வசீகரம் என்றால் என்ன?” என்றான் ஜே.
சும்மா இருடா – மனத்துக்குள்ளேயே அவனுக்கு பதில் சொல்லிவிட்டு “உங்கள் பெயர்?” என்றேன் அவளிடம்.
“எனக்கு பெயர் கிடையாது. 44 என்பது என் பணி எண் – உங்கள் அடையாளம் காட்டுகிறீர்களா?” பெட்டியிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தாள்.
கிளம்புகிறாளே. எப்படி நிறுத்துவது? “நீங்கள் உணவருந்திவிட்டீர்களா?”
“ஒரு மணிக்குதான். இடை நேரங்களில் எதுவும் சாப்பிடக்கூடாது”
“தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு கேள்வி”
கேள்விக்குறியாய் புருவம் தூக்கினாள்.
“நீங்கள் மனிதப்பிறவிதானே? எந்திரள் அல்லவே?”
சிரிப்பு போலவே அவள் உதடு குவிந்தது. “மனிதள்தான்!”
“அமருங்களேன் உணவருந்தலாம்”
“இல்லை என்னை அடுத்த கடமை அழைக்கிறது”
அடுத்த கடமையா?
“இல்லை. அவற்றை கவ்னித்தாகி விட்டது” ஜே குசுகுசுத்தான்.
“இந்த அழகிய மாலை, ஆர்ப்பரிக்கும் கடலலை, மஞ்சள் நிலா – இதை விடுத்து அடுத்த கடமையா? எனக்காக சிறிது நேரம் அமரமாட்டீர்களா?”
வண்டியிலிருந்த திரையைப் பார்த்தாள்.”ஆமாம்.. வேறு கடமைகள் இன்று இல்லை! என்ன ஆச்சரியம்!”
“இந்த உணவு எனக்கு மிக அதிகம். நீங்களும் பங்கு கொள்கிறீர்களா?”
“இல்லை வேண்டாம். நான் கிளம்புகிறேன். அறையில் வேலைகள் இருக்கின்றன; இந்த எதிர்பாராத விடுமுறையை உபயோகிக்க உத்தேசம்” கிளம்பிவிட்டாள்.
ஜே. திட்டத்தின் அடுத்த கட்டம்..
“இதோ”
அவள் வண்டி வேகமெடுத்து மேலேறுவதற்கு முன்னர் எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் நான்கு வண்டிகள் அவளைச் சூழ்ந்து அவளைத் தரையிறக்கின. நானும் அவள் வண்டி இருக்குமிடத்துக்கு ஓடினேன்.
“அழகிய பெண். மனிதள் போல!” என்றான் அவளைச் சூழ்ந்த நால்வரில் ஒருவன்.
“ஆம். மனிதளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது”
“பெண்ணே உன் உடைகளை அவிழ்”
44 ந் முகத்தில் கலக்கம். “எனக்கு அதற்கு ஆணையில்லை”
“ஆணையும் வேண்டாம் ஆனையும் வேண்டாம். நீயாக அவிழ்த்தால் வன்முறை தேவையில்லை”
என்ன ஜே இது பிராசமாகப் பேசுகிறார்கள்! நாடகத்தனமாக இருக்கிறார்களே.. அவள் புரிந்துகொண்டுவிடப்போகிறாள்!
“அவளுக்கு அவ்வளவு மூளை கிடையாது”
44க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. “யாரடா நீங்கள்? என்ன செய்கிறீர்கள் அந்தப் பெண்ணை”
“இதைக் கவனி.. அவளைக் காப்பாற்ற வந்த வீரனை முதலில் முடிக்கலாம்”
நால்வரும் என் மீது பாய, நான் அவர்களை அடிக்க, அவர்கள் என்னை அடிக்க.. மூன்று நிமிடங்களின் முடிவில் அவர்கள் தோற்று ஓடி வண்டியேறிப் பறந்தார்கள்.
“எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” நன்றி என்ற வார்த்தை பழகாவிட்டாலும் அவள் குரலில் நன்றி இருந்தது.
“நீங்கள் என்னுடன் அமர்ந்து உணவருந்தி இருந்தால் இது நிகழ்ந்திருக்காது”
அமைதியாகவே என்னுடன் வந்தாள். “அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்கள் அழகு அப்படி”
“கலக்கறே சீ!” என்றான் ஜே.
“அழகாகவா இருக்கிறேன்?”
“அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் இருக்கிறது என்று ஒரு பழைய பழமொழி. நீங்கள் எல்லார் கண்ணிலும் அதை ஏற்றக்கூடியவர்”
“நீங்கள் பேசுவது பெரும்பாலும் புரியவில்லை”
“ஞாயும் ஞாயும் யாராகியரோ”
“இது சுத்தமாகப் புரியவில்லை”
“இது சங்ககாலத் தமிழ்க் கவிதை. எங்கே பிறந்து எங்கே வளர்ந்தாலும் அன்புடை நெஞ்சம் கலந்துவிடும் என்று அர்த்தம்”
“நெஞ்சம் என்றால் இதயமா? அது எப்படிக் கலக்கும்?”
“செம்புலப் பெயல்நீர் போல”
“எங்கள் உணவகத்தில் அந்த நீர் கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டும்தான்” நகைச்சுவையாகப் பேசுகிறாளா இல்லை நிஜமாகவே அப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டாளா? எதையும் காட்டாத முகபாவம்.
“உங்களை இதற்கு முன்னால் எங்கேயாவது சந்தித்திருக்கிறேனா?”
“இருக்கலாம். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இதே உணவகத்தில் வேலை செய்கிறேன்”
“மூன்று அல்ல.. முன்னூறு ஆண்டுகளாகப் பார்த்த ஞாபகம். ஜன்ம ஜன்மமாய்த் தொடரும் பந்தம்”
“முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நான் பிறக்கவே இல்லை!” இப்போது நிஜமாகவே சிரித்தாள்.
“சிரிக்கிறாளா.. அற்புதம். இன்னும் கொஞ்சம் கஷ்டப்படு! மடிந்துவிடுவாள்”
“பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்ட பந்தமாகத்தான் நான் உணர்கிறேன். நீ?”
“எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஆனால் உங்களை முன்னமேயே பார்த்த உணர்வு எனக்கும் இருக்கிறது”
“முதல் பார்வையில் காதல் வருமா என நேற்று கேட்டிருந்தாலும் இல்லை என்றுதான் சொல்லி இருப்பேன்”
“இன்று?”
“இன்றுதான் உன்னைச் சந்தித்து விட்டேனே.. என் முன் அனுபவங்கள் அனைத்தும் மாறிப்போயின. இன்று – இக்கணம் புதிதாய்ப் பிறந்தவன் போல உணர்கிறேன்!”
“கவித கவித” ஜே சும்மாவே இருக்கமாட்டான்.
“நீங்கள் பேசுவது முழுவதும் புரியாவிட்டாலும் நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது” அவள் கண்ணில்.. இதுதான் காதலா?
“இன்னும் இல்லை. அவளை உன் முடிவுக்குக் கட்டுப்படவை” ஜே புத்தகப்புழு. அவனுக்கு முடிவுகளை நிரூபிக்கவேண்டும்.
“என் இல்லத்துக்குச் செல்லலாமா? 15 நிமிடம்தான் ஆகும். அங்கும் கடற்கரை, இதே நிலவு, மாலை இப்போதுதான் துவங்கி இருக்கும்.. என் கவிதைப் புத்தகத்தைக் காட்டுகிறேன்”
“கவிதையா? நீங்கள் எழுதுவீர்களா?”
“கவிதை மட்டுமா? காற்றிலேறி அந்த விண்ணையும் சாடுவோம் – காதல் பெண்டிர் கடைக்கண் பார்வையில்!”
“இது உன் கவிதையாடா? அவளுக்குத் தெரியாதுன்ன வுடனே பொளந்து கட்றான் பாரு”
“மிக அழகாகப் பேசுகிறீர்கள். உங்களுடனேயே இருந்துவிடலாம் போல் இருக்கிறது”
“கிளம்பிவிடு. உணவகத்தில் இரண்டுநாள் தேடுவார்கள் அப்புறம் கைவிட்டு விடுவார்கள்.”
“பிறகு?”
“நமக்காக ஒரு புது உலகம் காத்திருக்கிறது. காதல் செய்வோம்! சம்போகம்! ஆணும் பெண்ணும் கலக்கும் அற்புத வினாடிகள்! இன்றைய நடைப்பிணங்கள் வாழ்நாளில் கண்டிராத இன்பத்தின் உச்சம் காண்போம். தொழிற்சாலை வேண்டாம். நம் இல்லத்தில் உருவாக்குவோம் நம் சந்ததிகளை! காதலினால் மனிதர்க்கு கலவி உண்டாம் – கவலைபோம் – ஆதலினால் காதல் செய்வோம்!”
அவளை லேசாக அணைத்து மேல் நெற்றியில் ஒரு முத்தமிட்டேன். சிலிர்த்தது இருவருக்கும்.
அவள் என் வலது காதை வருடினாள். பின்னர் இடது காதோரம் வந்து,
“ஜே.. உங்களுக்கும் கேட்கும் என நம்புகிறேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட காதல் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததற்காகவும், அரசு அனுமதியின்றி திருடப்பட்ட எஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை உபயோகித்து உணர்ச்சிகளை தூண்டியதற்காகவும், அரசின் ஜனத்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் 1208ன் கீழ் உங்கள் இருவரையும், 244, அமைதி காப்புப் படைக் காவலாளியாகிய நான் கைது செய்கிறேன். உங்கள் உணர்ச்சிநீக்குத் தண்டனை இன்னும் சில விநாடிகளில் நிறைவேறும்.”
– மார்ச் 2009
குறிப்பு: அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டிக்காக ஆக்கப்பட்டது