அவனும் ஒரு மனிதன்
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆனால் பாவம்! தன்னை வேறு இரண்டு கண்கள் உறுத்திப் பார்த் துக்கொண்டே இருக்கின்றனவென் பதை அவன் அறியவில்லை. அவன் குழந்தை.
அன்று மாணிக்கத்தின் வீட்டில் ஒரே குழப்பம். மாணிக்கத்தின் மனைவி கமலம் பிரசவ வேதனையினால் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள். டாக்டர்களின் உதவியுடன், அவள் உயிருக்காக, மாணிக்கம் எமனுடன் போராடிக் கொண்டிருந்தான். மனித முயற்சியினால் இது ஆகக்கூடிய காரியமில்லை என்று கமலத்தின் மனம் அவளுக்கு உறுதியாகச் சொல்லிற்று. அவள் அதற்காக வருத்தப்படவும் இல்லை! ஆனால்?…. அவள் குழந்தை பாலு? அவனுக்கு நான்கு வயதுதானே ஆயிற்று!-அதுதான் அவளின் பெரு மூச்சுக்குக் காரணம்.
‘கடவுளே! நீர்தான் அவனுக்குத் துணை’ என்று அவள் தன் மனதுக்குள் தியானித்த சமயத்தில்தான் ‘அம்மா! அங்கச்சி வருவாளா” என்று கேட்டுக் கொண்டே குழந்தை பாலு அவளிடம் நெருங்கி னான். அந்த மரணாவஸ்தையிலும் அந்தச் சின்ன மணி வாயிலிருந்து வந்த மதலை பொழிகள் அவளின் தாய்மை யுள்ளத்திற்கு எவ்வளவு சாந்தியை அளித்து விட்டது! அவள் சில நிமிஷங்கள், தன் வேதனையும் மறந்து, தங்க விக்கிரகம் போன்று தன் பக்கத் திலே நின்ற பாலுவைப் பார்த்தாள். தங்கத் தகட்டிலே வயிரக் கற்கள் வழிந்தோடுவது போல அவள் கன்னங்கள் வழியாக இரண்டு கண்ணீர்த் துளிகள் வடிந்தன.
அப்பொழுது அங்கே வந்த மாணிக்கம் பாலுவை எடுத்துச்செல்ல முயன்றான். ”வேண்டாம! அவனுக்கு அங்கச்சி வேண்டுமாம். அவன் ஆசையை நிறைவேற்றுங்கள்” என்று தீனக்குரலில் அவள் கூறி முடித்ததும், எங்கிருந்தோ ஒரு பிரகாசம் வந்து அவள் கண்களில் புகுந்து கொண்டது. அவள் விழித்துப் பார்த்தாள்; அடுத்த நிமிஷத்தில்? அவ்வளவுதான் அவள் வாழ்க்கை.
காலச் சக்கரம் மின்சார வேகத்தில் சுழன்று கொண்டேயிருந்தது! கமலம் மண்ணோடு மண்ணாகி ஆறு வருடங்கள் கழிந்துவிட்டன. மாணிக்கம் தன் இளம் மனைவி புஷ்பத்துடன் உல்லாசமாய் வாழ்க்கை நடத்துகிறான். பாலுவின் ஆசை நிறைவேற வேண்டுமே? புஷ்பம் கர்ப்பவதியானாள். தன் முதல் தாரத்தின் எண்ணம் ஈடேற வேண்டுமே என்று மாணிக்கம் துடியாய்த் துடித்தான். “தெய்வமே! என் மனைவி வயிற்றிலிருப்பது பெண்ணாய்ப் பிறக்க வேண்டும்” என்று அவன் ரகசியமாகத் தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான். ”எனக்கு அங்கச்சி வருவாள். உங்களுக்குப் பழமும் கற்கண்டும் தருவேன்” என்று பாலு தன் தோழர் களிடமெல்லாம் சொல்லி வந்தான்.
ஒருநாள் பாலுவுக்கு அங்கச்சி வந்துவிட்டாள். மாணிக்கம் தன் முதல் மனைவியை நினைத்துக் கொண்டான். “கமலம் குணவதி; அவள் பிரார்த்தனை பொய்க்குமா?” என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். தங்கையைக் கண்ட பாலு தன் தோழர்களைக்கூட மறந்து விட்டான்.
பாலு எப்பொழுதும் தொட்டிலருகிலிருந்து தன் தங்கையைப் பார்த்துக் கொண்டேயிருப்பான். அப்பொழுதெல்லாம் அவன் கண்களிலே ல அன்பு குதிகொள்ளும் – ஆனால் பாவம்! தன்னை வேறு இரண்டு கண்கள் உறுத்திப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன என்பதை அவன் அறியவில்லை. அவன் குழந்தை.
ஒருநாள் பாலு தொட்டிலில் கிடந்த தன் தங்கையைத் தொட்டுப் பார்த்தான். அது ‘கிரீச்’சென்று சத்தமிட்டு விட்டது. அவன் நடுங்கிப் போனான். அப்பொழுதுதான் அங்கு வந்த அவள் – பாலுவின் மாற்றாந்தாய் – “பிள்ளையை எண்டா கிள்ளினாய்” என்று இரைந்துகொண்டே அவன் தலையில் குட்டினாள். “ஐயோ! நானா கிள்ளினேன்?” என்று அந்தக் குழந்தையுள்ளம் துடித்துக் கேட்டது. அன்றிரவு மாணிக்கம் வந்ததும் பாலுவுக்கு அடிகள் கிடைத்தன.
இன்னும் இரண்டு வருடங்கள் காலச் சுழற்சியில் அகப்பட்டு உருண்டோடி விட்டன. தன் சொந்த வீட்டிலே தான் வேற்றாளாக நடத்தப்படுவதை பாலு உணர்ந்தான். தன் தந்தை கூட தன்னைத் துன்புறுத்துகிறார் என்பதை நினைக்க நினைக்க, விரிந்து மலரவேண்டிய அவன் ஹிருதயம் குவிய ஆரம்பித்து விட்டது. ‘தங்கம்’ என்று அவன் செல்வமாக அழைத்துக் கொண்டு தன் தங்கையை நெருங்கும் போது, அந்த ஏதுமறியாக் குழந்தைகூட முகத்தைத் திருப்பிக் கொண்டால் பாலுவின் மனம் புலம்பாமல் இருக்குமா? அவன் புலம்பிக் கொண்டே நாட்களைக் கடத்தினான்.
பாலுவுக்கு உற்சாகம் குன்றி விட்டது. தன் தந்தையை நினைக்க நினைக்க சோகம் தலைக்கேறி விடும்.”தீபாவளியன்று அவர் ஒரு கட்டு ஜவுளி கொண்டு வந்தாரே! தங்கைக்கும் சிற்றன்னைக்கும் விதம் விதமான துணிகள் அதில் இருந்தனவல்லவா? எனக்கு மட்டும் தானா இந்தக் கந்தல் துணிகள்?” என்று அவன் நினைத்த பொழுது அழுகை அவனை பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
வாழ்க்கையை வெறுத்து விட்ட வேதாந்தி போல பாலு நடைப்பிணமாக அலைய ஆரம்பித்தான். அவன் கண்கள் எதையோ தேடி அலைந்தன. அவன் தாயன்பைத் தான் தேடியிருக்க வேண்டும்!
ஒரு நாள் அந்தி மயங்கும் வேளை.பாலு தன் வீட்டுத் திண்ணையிலிருந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே யிருந்தான் வான வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மேகங்களுக் கிடையிலே தன் தாயை அவன் தேடியிருக்க வேண்டும்! அன்று அவன் உள்ளத்தின் பொருமலை எதிரொலிப்பன போன்று பக்ஷிஜாலங்கள் கொக்கரித்துக் கொண்டு விண்ணிலே மிதந்துசென்றன.
‘அப்பா!’
என்று இரைந்து கூவினாள் தங்கம். ‘என் கண்ணே!’ என்று கூறி அவளை வாரி எடுத்துக் கொண்டான் அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்த மாணிக்கம்.
பாலு திரும்பிப் பார்த்தான் “அப்பாவாம்!, அவளுக்கு மட்டும்தான் அப்பா” என்று அவன் முனங்கினான். “என்னடா முனங்குகிறாய்?” என்று சீறினான் மாணிக்கம். “அவன் இது மட்டுமா செய்வான், இன்னும் செய்வானே” என்று எரிந்து விழுந்து அவன் காதைப் பிடித்துத் திருகினாள் புஷ்பம். போதாக் குறைக்கு அந்த அங்கச்சியும் அவனைப் பல்லிளித்துக் காட்டிற்று. பாலுவும் இப்பொழுது வயது வந்தவன் தானே! ரோஷம் எங்கிருந்தோ வந்து அவனைப் பிடித்துக் கொண்டது.
”ஏன் என்னை இம்சிக்கிறீர்கள்? உங்களுக்குத் துன்பமாகவிருந்தால் என்னைக் கொன்று விடுவது தானே!” என்று அவன் தன்னை யறியாமலே கூறி விட்டான். ”கொல்லவா? வாயா பேசுகிறாய்? எங்கேனும் விழுந்து செத்துத் தொலை போ” என்று கூறிக் கொண்டே திண்ணையிலிருந்த பாலுவை உதைத்துத் தள்ளினான் மாணிக்கம் – அவன் அப்பா.
முற்றத்தில் குப்புற விழுந்த பாலு ஆவேசம் கொண்டவனைப்போல எழுந்து நின்றான். “அப்பா நான் சாகவா வேண்டும? இந்த உமது மகன் செத்துத்தானே தொலைய வேண்டும். சரி! நான் போகிறேன். நாளைக் காலையில் மண்ணிலோ மரத்திலோ, ஆற்றிலோ குளத்திலோ என்னைக் கண்டெடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிக்கொண்டே ஒட ஆரம்பித்தான் பாலு.
அவன் வார்த்தைகளிலே தொனித்த உறுதியையும், திக்கற்றவனைப் போல அவன் ஒடுவதையும் பார்த்தான் மாணிக்கம். அவனும் ஒர் மனிதன் தானே! அவனும் பிள்ளைகளைப் பெற்றவன் தானே! “அவன் ஆசையை நிறைவேற்றுங்கள்!” என்ற கமலாவின் கடைசிப் பிரார்த்தனை மின்னலைப் போன்று அவன் உள்ளத்தைத் தாக்கிற்று. அவன் நிலைகுலைந்தான்.
“மகனே! நில்” என்று கூவியவண்ணம் தன் மகனைப் பிடிக்க ஓடினான் அவன். பாலு ரோட்டில் போய் விட்டான். “நில் நில்” என்ற தந்தையின் குரலைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். ‘கொல்’ என்று அவன் சிரித்த ஒலி அடங்கு முன் கால தூதனைப் போல் விரைந்து வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் லாறி அவனைத் தூக்கி எறிந்துவிட்டு பறந்துவிட்டது. “ஐயோ” என்ற அலறல் விண்ணில்ப் போய் எட்டியது. பாலுவின் உயிரற்ற உடல் தன் அப்பாவின் பாதத்தடியில் போய் விழுந்து கிடந்தது.
– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.