அழியாதது





(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழியாதது; அது என்ன. ? நிரந்தரமானது, அமரத்துவமானது, நிறைவுள்ளது என்றெல்லாம் சித்தாந்திகளும், வேதாந்திகளும், சமயபக்தர்களும் கூறுவதா? அவ்வாறே இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்! நான் சித்தாந்தி, வேதாந்தியல்லன், சமய ஞானியுமல்லன், அல்லவானால் நான் மனிதனா….? ஆம் மனிதன். மனிதனிலும் வித்தியாசமுள்ளவனா கலைஞன்? அஃதெப்படியோ! நான் கலைஞன் ஆமாம் …….!
கவிஞன், கதைஞன் என்றுஞ் சொல்வர். எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை கிடையாது……!
உணர்ச்சிகள், அவைதாம் எனக்கு உணவு. கனவுகள் என் வாழ்க்கை. ‘கனவுகளாவது, வாழ்க்கையாவது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்கிறீர்களா ? சரி, ‘பைத்தியக்காரத்தனம்’ கலைஞன் முதிசம் என்றால், வரலாறு அதை மறுக்காதபோது எனக்கென்ன பயம் ?
பயம், நிர்ப்பயம், ஜெயம், அபஜெயம் எல்லாம் எனக்கொன்றுதான். அழகுகளை, உணர்ச்சிகளை மென்று இரைமீட்பதில் எனக்கு அசுரப் பசி. சமுதாய ஒழுக்கவிதிகளுக்கு இவை முரண்படுவதனால், அதற்காக நான் அஞ்சுவதில்லை. வாழ்வே இந்த இரைமீட்கும் பழக்கமாகும்போது அச்சப்படவேண்டியவன் நானல்லன்! இஃது எனக்கு இயற்கை. உடலும் உளமும் எனக்கு உண்டு. நான் ரூபி. அரூபியல்ல! உடலும் உளமும் பங்கப்படாதவரை ‘ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவதை’ நான் தவறாகவே எண்ணுவதில்லை. என்ணுபவர்களுக்காக என் அனுதாபங்களை ஒட்டு மொத்தமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனக்குக் காதல், காமம் ஒன்றுதான் ‘இல்லை’ அவை வெவ்வேறானவை’ என்றவர்களும் இருக்கிறார்கள் ? இருக்கட்டுமே செல்லரித்துவிட்ட ஏட்டுச்சுவடிகளை எடுத்துவைத்து அவற்றை மீத மிச்சம் விடாமல் ஆராய்ச்சி பண்ணி அவை ஒன்றா, இரண்டா என நிறுவட்டும், எனக்குக் கவலை இல்லை!
‘ஏது; இது தத்துவ விசாரணை’ என்று மயங்குகிறாயா? நல்ல கதை! தத்துவ விசாரமாவது, மண்ணாங்கட்டியாவது! ‘இது’ என் உணர்ச்சிகள். இது சரியா, பிழையா அந்தச் சிந்தனையே எனக்கு இல்லை. பறற்ற நிலை என்றாவது சொல்லேன். பறற்ற நிலையில், முதிர்வில் முத்திப்பேறடையலாம் என்பாய். எனக்கு அது வேண்டுவதில்லை. நான்-இரு எழுத்துக்களாய சொல்லின் ஒரு ‘ன்’-அது என்னைக் குறிக்கும் தனி முத்திரை. அந்த’ன்’ ஒருபுறநடை! என்னைப்போல் எந்தச் சாதாரண மனிதனும் வாழமுடியாது. வாழக்கூடாது. எனவே நான் எப்படியும் வாழலாம்; இல்லையா?
என்ன ஒன்றும் புரியவில்லையா? ஏன் விழிக்கிறாய்? விழிப்பும் உறக்கமும்……..
‘உன்னை மறக்கச் சொன்ன பிறகு எல்லாம் ஒன்றுதான் எனக்கு!’
நீ……?
பெண்….! உன்னில் உள்ள ஒரு ‘ண்’ உன் தனி முத்திரை. பிரபஞ்சத்தின் பரவெளியில் நான் தேடும் அந்த ‘ண்’ நீயே தான்…! நானில் உள்ள ‘ன்’ னும், நீ என்னும் பெண்ணில் உள்ள ‘ண்’ணும், இன எழுத்துக்கள். இயற்கையானவை. அவற்றில் பேதங்கள் பிறப்பித்தல் இயலாது. தூரவைத்தலும் இயலாது. ஆனால் நானும் நீயும்….?
மனிதர்களாக உள்ளவரை தூரமாகத்தான் இருக்கவேண்டுமானால் அது வாழ்வு, சமுதாய நியதிக்குட்பட்ட ஒழுக்க நியதி, பண்புடைமை என்றெல்லாம் ‘முலாம்’ பூசப் புறப்படுபவர்களின் திருப்திக்கு நல்லவெற்றி! ஆனால் புடம் இட்ட இம்முலாம் புரையோடிக் கிடக்கும் உள்ளகத்து இரணங்களை மறைக்குந் திராணியுள்ளதா? நான் யதார்த்தமாகக் கேட்கின்றேன்? உனக்கு விளங்கத்தக்கதாகவே வினவுகின்றேன். ‘அறிவு போதாது’ என் தத்துவத்தை விளங்க என்று தட்டிக்கழிக்கப் பார்ப்பாய்! ஆனால் உண்மையில் உன்னால் அது முடியாத காரியம்! ஏன்?
நீ என் சிஷ்யை! இல்லையா ? நீ என்னிடம் பாடங் கேட்காமலிருக்கலாம், ஆனால் என்னை அறிந்தவள். என்னில் மயங்கியவள். என்னில் என்னாக எதார்த்த நிலையிலில்லாவிடினும், எண்ணத்தளவாவது இருந்து பழக்கப்பட்டவள். ஆகவே உனக்கு இது புரியும்! உண்மையைச் சொல்!
‘அழியாதது; அது என்ன?’ கற்பு, ஒழுக்கம்-கடவுள் பக்தி என்பவள் மனைவி. அவளை நான் வாழ்த்துகிறேன். அக்கற்பின் கொழுந்து வாழ்க! ஆனால் நீ சொல்வது….. ?
விழிகள் நிறைந்த நீரா…..?
முடிவற்ற மௌனமா……?
உன்னை என்னால் விளங்க முடியாது என்று எண்ணுகின்றாயா ? என் அன்புச் சிஷ்யையே, நீ என்னைத் தெரிந்துகொள்ளாதது போலப் பாவனை பண்ணினாலும் எனக்கு உன்னை நன்கு தெரியும் ! பயப்படாமல் உள்ளத்தைத் திறந்து சொல்.
‘அழியாதது என்ன?’
ஒரு சாதாரண ‘எச்சரிக்கைக் கடிதம்’-அப்படித்தான் அதனை எண்ணுகின்றேன். அது கண்டு நீ மிரண்டுவிட்டாயா ? பள்ளித்தோழி எழுதினால் ‘அது பரிகாசக் கடிதம்’ மனைவி எழுதினால் அது யம பாசமா…?
என் சிஷ்யையே நீ ஏமாறிவிட்டாய். என்னையும் மாற வைக்கின்றாய்!
நீ உயர்ந்தவள், உத்தமி என்று புகழப்படுவதில் எனக்கும் ஆசைதான், ‘என்னை’ப் பலிகொடுத்தா உன் புகழ்ச் செடி; வேரூன்ற வேண்டும்?
நான் கேட்பது என்ன…. ? ‘உனக்குத் தெரியாதது’ என்னும் தெரிந்த விடயத்தைத் திருப்பிச் சொல்லிப் பார். ‘உடலை நேசித்ததில்லை. உதிரத்தில் கலந்துவிட ஆசைப்பட்டதில்லை. தசையும் தழுவும் மெய்க்கலப்பை ஒருபோதும் அனுபவித்ததில்லை!
ஆனால் –
ஆத்மா எனும் முதிர் பருவக் கனவின் இளமை உள்ளத்தை என்னிடம் எடுத்துக்காட்டிய போது அதனை நான் காதலித்தேன். காதலிக்கின்றேன்!
ஒரு வேளை அதற்கு உருவம் வேண்டாததாக இருக்கலாம் என்பது உன் எண்ணமென்றால், நான் ஏன் மறுக்கின்றேன்! ஏன் என்றால் நீ என்னை மறந்துவிட்ட இத்தனை இரவுகளிலும் நான் வாழாமலா போய்விட்டேன்? அல்லது வெஞ்சினக் கனலை உன்மீது வீசியா விட்டேன்?
குளிர் நிலவையும், மெய் சிலிர்க்கும் தென்றலையும் என்றைக்கும் போலவேதான் இன்றைக்கும் அனுபவிக்கின்றேன். நான் பகுத்தறிவு வாதி ன்று பெருமை பேசவில்லை. ஆனால் உனக்காக வடக்கிருந்து உயிர்துறக்கவோ, மடலூர்ந்து என் காதலைப் பிரசித்தப்படுத்தவோ தேவையில்லை.
‘உலகம் என்னை எதிர்த்தாலும், நீங்கள் தான் என்னை மறந்தாலும் உயிர் இருக்கும் வரை, இறந்த பின்பும் உங்களை மறக்கமுடியாது என்னால் ……! எட்டுப் பத்தித் தலைப்பிட்டுப் பிரசுரமான பத்திரிகைச் செய்திபோல என் மனத்திரையில் உன்கடித வாசகங்கள் …….!
ஆமாம்!, போனவற்றை நினைவுபடுத்தி உன்னமைதியைச் சூறையாட விரும்பவில்லை. ஆனால் என்னன்புச் சிஷ்யையே, உண்மை என்ன….. ?
‘அழியாதது; அது என்ன?’ கனவுகள் இனிய நினைவுகள் என்பாயா ? இயற்கை வனப்பின் சிகரமான அந்த அமரச் சூழ்நிலையில் நீ என்னிலும் கொடுத்துவைத்தவளாக இருந்து கூடுதலாக அனுபவிக்கலாம்! பொறாமை எனக்கில்லை. ஆனால் நானும் நீயும் ஆங்கே, ஒன்றோ, இரண்டோ தடவைகள் நம்மை மறந்து நின்றோமே!
அஃதெல்லாமே பொய்தானோ ? ‘வாழ்வாவது மாயம், அது மண்ணாவது திண்ணம். காயமே, இது பொய்யடா, காற்றடைத்த பையடா’ என்ற திண்ணைதூங்கிகளின் வாக்குத் தீர்க்கதரிசனமாகிறதா?
நான் உயர்ந்தவன், ஒழுக்கசீலன் என்று எனக்குத்தானே ‘சர்டிபிகேட்’ எழுத விரும்பவில்லை. அப்படி எழுதினால் அது அப்பட்டமான பொய். நான் என்ன ஸ்ரீ இராமனா…? அரிச்சந்திரனா? இல்லை-தருமபுத்திரனா….? ஆனாலும் சாதாரண மனிதப் பிறவியானாலும்…
எனக்கும் இதயம் இருக்கின்றது. எண்ணங்கள் எனும் பூக்கள் இதய தடாகத்தில் மலரவே செய்கின்றன. வண்டுவக்கும் மலராக நீ இருந்தாலும்…. என் எண்ண மலருவக்கும் பெண்ணாக விரும்பாதது ஏன்?
சிஷ்யையே, நீ என்ன கர்மயோகியா? கண்ணுதற் கடவுளையே, தன் நிர்வாணக் கோலத்தை மறைக்கக் கைக்குழந்தையாக்கித் தொட்டிலிட்டுத் தாலாட்டிய ரிஷிபத்தினியா….?
என்னால் நம்பமுடியாது! குறைந்தபட்சம் நீ ஒரு ‘சினிமா ஸ்டாராக’ இல்லாதவரை எனக்கு மகிழ்ச்சிதான்! அதற்காக உன்னைத் ‘தெய்வ மகளாக’க் கருத முடியுமா?
நீ ஒரு அதிசயப் பிறவி, ‘உண்மையை நேசிப்பவள்’ என்றுதானே சொன்னாய், சரி!
அழகு! உன்னிடம் வியக்கும் அளவுக்கில்லையே! கல்வி, என்னிலும் தகுதிப் பத்திரம் கூடியதாக இருக்கலாம். அதனை எதனால் அளவிடுவது? பண்புகள், எல்லாமே நான் துருவிப் பார்த்ததில்லை!
ஆனால்-
இவற்றின் மொத்தவுருவமான நீ ஒரு காவியம்! உன் கடிதங்கள் காவிய ரசனையிற்றோய வைக்கின்றன. உன் நினைவுகள் மழைத்துளிகளை விழுங்கி வாழும் சாகசப்பட்சிபோல, நினைவுகளையே விழுங்கி, விழுங்கி எனை நினைவிழக்கச் செய்கின்றன.
அதனால் நான் உன் அடிமையாகின்றேன் எனக்கிது ‘தகாது’ என்று நீ பேதம் புகட்ட முடியாது. ஏன்…? நீ என் சிஷ்யை என்பதால்….
எங்கள் உறவுக்கு நிலைக்களன் எது….? அதுவும் எனக்கும், உனக்கும் புரியாதது.
நான் தெருவோரத்து, நடைபாதை மனிதன். நீ நடைபாதைக்கு எழில் சேர்த்த சிட்டு, அப்படிச் சொல்லலாம்!
எப்படியோ கண்டோம். விழிகள் நான்கு, இமைக்க மறக்கவில்லை. மொழியை வீணாகச் சிந்தவில்லை. இடையே மொட்டவிழ்ந்த உறவுதான்…. ?
இன்றும் என்னைத் தவிக்க வைக்கின்றது. நீ….? வசதியுள்ளவளாக இருக்கலாம், ‘வசதிகள்’ அர்த்த புஷ்டி மிக்க ஒரு சொல்லாகக் கருதுகிறேன். உன் வாழ்விடம் இன்றும் வனப்புள்ளதாக இருக்கலாம். எனவே நான் உனக்குப் பெரிதாக இல்லை….இல்லையா?
என் சிஷ்யையே, நான் உனக்காக அனுதாபப்படுகிறேன். அறிந்த ஒன்று என்பதன் ‘மயக்கில்’ அழியாத ஒன்றைப் பணயப் பொருளாக வைத்துவிட்டாய்!
உனக்கு வாழ்க்கை இனிமையாகப்படலாம், உன் நினைவுகள் மண்டிவிட்ட என்னுள்ளம் எரியும் சுவாலையாக, எப்பொழுதும் இல்லாவிட்டாலும் சிலபோதுகள் ….! அதனை உன்னால் மறுக்கமுடியுமா?
ஆசிரியரே, காலம் என் முடிவை உணர்த்தும்’ என்ற உன் ‘மணிமொழி’யை மகா கவிஞன் ஒருவனின் தீர்க்கதரிசன வாக்காகக் கொண்டாடும் அறிவீனம் என்றும் எனக்கில்லை.
வசந்தகாலத்தின் மலர்கள் சாதாரணமானவை. அவை அளவில் அதிகமானவை. ஆனால் காலாகாலாமாகக் காத்திருந்த, வசந்த மலர் உதிர்ந்தால் வேதனையன்றோ! வண்ணச் சிட்டுக்களின் பரிச்சயம் இந்த ஏழைக் கலைஞனைக் ‘கிறங்க’ வைத்ததில்லை. வேண்டுமளவுக்குக் குடித்து, வெறித்து, அனுபவித்த குடிகாரனின் போதை நிறைந்த விழிகளை ஒத்த நிலையிலாவது பெண்மையை ஸ்பரிசித்த அனுபவம் உனது குருவுக்குண்டு. ஆனால் என்னருமைச் சிஷ்யையே!
மானிதத்தின் மென்மையையும் அன்பையும், ஏனைய இனிய பண்புகளையும் உணரவைத்த வசந்தத்தில் அனல் மோதிவிட்டது. அல்லவா ?
‘ஆம்’ என உன்னாலியலாது! பாவம். நீ ஒரு பயந்தாங்கொள்ளி!
என்னினிய சிஷ்யையே! வழமையாக உன்னிடம் ‘யாசிக்கும்’ ஒரு கடிதமல்ல இது. கலைஞனின் படைப்பு. உணர்ச்சிகளின் ஓட்டம்!
பிரபஞ்சம்-மாயை-அநித்யம் என்பவற்றின் சேர்க்கைகளிலிருந்து விடுபடல் என்பது எமக்கு இயலுவதொன்றா…?
ஆசைகள் உள்ளவரை மனிதன் மனிதன்தான். இறப்பிருந்தாலும் பிறப்புகள் உண்டு அவனுக்கு. எந்தச் சமயச் சாத்திரமும் புறக்கணிக்க முடியாத நியதி, உண்மை இது.
மனிதன் ஆசைகள் உள்ளவரை அமரன். ஏன்? ‘அழியாதது’ அவனிடம் இருக்கவே செய்கின்றது.
விழிகளில் விளிம்பு புரையும் நீருடன் விளம்புவதற்கு ஒன்று உளதேல் அது அதுதான்!
என்னன்புச் சிஷ்யையே…. ‘அழியாதது; அது என்ன…’ ?
– சுதந்திரன், 18-10-1964.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |