கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,748 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

என்னடி இது என்னோட சட்டை, பேண்ட் எல்லாம் இங்க் கறை? மனைவியை கேட்டான் சுந்தரம்.

ஆங்… எல்லாம் உங்க புள்ள செய்யுற வேலை. ஏண்டா இப்படி செஞ்சேனு கேட்டா கறை நல்லதுங்கறான். இது மட்டும் இல்லை. சுவத்துல கண்ணுல பார்க்குற இடமெல்லாம் அசிங்கப்படுத்திட்டு கறை நல்லதுங்கறான்.

ஆறு வயசு நவீனை கண்டித்து அடக்க முடியாமல் சுந்தரமும் அவன் மனைவி ராகிணியும் தவித்தார்கள். டி.வி. குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.

இவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தால் தான் திருந்துவான்

”நவீன் இங்கே வா”

”என்னப்பா?” துள்ளிக்குதித்து ஓடி வந்தான் நவீன்.

”என்னடா இது அப்பா சட்டை, பேண்ட் எல்லாம் இங்க் ஆக்கி வச்சிருக்கிற?”

”கறை நல்லதுப்பா…” சொல்ல வாயெடுக்கவும் பளீரென்று ஒரு அறை விழுந்தது நவீனின் முதுகில். இதுவரை மகனை அடிக்காத சுந்தரம் அடித்ததில் அவன் மனைவி கூட வாயடைத்து நின்றாள். நவீனும் அழ மறந்து உறைந்து நின்றான். நாட்கள் ஓடியது. இப்பவெல்லாம் நவீன் எங்கும் கறைப்படுத்துவதில்லை.

என்னங்க இப்ப நவீன் எங்கயேயும் கறைப்படுத்திட்டு கறை நல்லதுன்னு டயலாக் அடிக்கிறதில்ல. மனைவி கூற சுந்தரம் சில நேரத்துல அறை கூட நல்லது தான் போலிருக்குது என்றான்.

– வி.சகிதா முருகன் (மே 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *