அறன் வலியுறுத்தல்




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பொருளையும், இன்பத்தையும் விட அறம் வலிமையுடையது என்று சொல்லுதல்.
ஔவையார், திருவெண்ணை நல்லூர்ச் சடை யப்பவள்ளல் மனையில் போய் உண்டுகொண்டிருக் கும்போது வள்ளல் பந்தியில் சரியாக உணவு அளிக்கிறார்களா? என்று பார்வையிட வந்தார். அப்போது உணவு அருந்திக்கொண்டிருந்த தமிழ் அரசி வள்ளலே! எங்கள் எல்லோருக்கும் ஒரேவிதமான உணவு அளிப்பதால் நாங்கள் பொறாமையில்லா மலும், அறுசுவை உணவு வேண்டுமட்டும் தருவதால் “போதும் போதும்” என்று நாங்கள் ஆசையில் லாது கூறும் மொழியும், இல்லாததை அறிந்து இலையில் போடுவதால் நாங்கள் கோபமில்லாமல் மகிழ்ச்சியும், போடுகிறவர் குறிப்பறிந்து அளிப்பதால் நாங்கள் தீயசொற்கள் பேசாமல் இனிய சொல்லுடன் உண்கிறோம் என்றாள்; இவ்விதம் நான்கு தீய குணங்களும் வரவொட்டாமல் அறம் செய்யும் தாங்களே வள்ளல் என்று புகழ்ந்தாள். அச்சமயம் – வள்ளல் நான் அறம் செய்தாலும் நீங்கள் பொறாமை, ஆசை, கோபம், கொடிய சொல் ஆகிய இவைகள் இல்லாமல் அமைதியாக உண்டதால், எனது அறமும் சிறந்தோங்கி நானும் வள்ளலாக விளங்குகிறேன்” என்று பதில் அளித்தார். வள்ளுவரும் இந்நான்கையும் விலக்கிச்செய்வதே அறம் என்றார்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு = பொறாமையும்
அவா வெகுளி = ஆசையும், கோபமும்
இன்னாச்சொல் = கொடியசொல்
நான்கும் = இந்நான்கினையும்
இழுக்கா = விலக்கி
இயன்றது = இடைவிடாமல் நடைபெற்றதே
அறம் = தர்மமாகும்.
கருத்து: பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இவற்றை விலக்கிச் செய்வதே அறமாகும்.
கேள்வி: எவை இழுக்கா இயன்றது அறமாகும்? அறம் செய்வோர் விலக்க வேண்டிய நான்கு எவை?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.