கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2025
பார்வையிட்டோர்: 517 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இன்று மாலை கோவிலுக்குப் போனேன்.

திருநெல்வேலி வந்து மூணு நாட்கள் ஆகின்றன். நாளைக்கு மதுரைக்கு டிக்கட் வாங்கியாகி விட்டது. இன்னமும் கோவிலுக்குப் போகாமல் இருந்தால்-? 

சாங்கோபாங்கமாக, சட்டையைக் கழற்றிவிட்டு, மேலே அங்கவஸ்திரத்துடன் போனேன். நான் தங்கியிருக்கும் வீடு அம்மன் சன்னதித் தெருவில். ஆகவே, கோவிலுள் அம்மன் சன்னதி வாசல்வழி நுழைந்தேன். மதிலைச் சுற்றி, மாட வீதிகளில் கடைகண்ணியும் ஜனங்களும் வழிகிறார்கள். பிரம்மோத்ஸவம். 

வெளிக்கும்பலோடு ஒப்பிட, கோயில் உள்ளே கூட்டமே இல்லை. 

இருபது வருடங்களுக்குப்பின் இப்பத்தான் வருகிறேன். தட்டினால் ஸ்வரங்கள் பாடும் தூண்களைத் தவிர கோவில் பற்றி மற்றவை தேய்ந்த ஞாபகங்கள்தாம். அனேகமாகப் புதிதாய்ப் பார்க்கிற மாதிரிதான். 

மற்றும் இருபது வருடங்களுக்கு முன் கோவிலுள் முதன் முறையாக நுழைந்த ஆள் வேறு. இப்போ ஆள்வேறு என்னைத்தான் சொல்லிக்கொள்கிறேன். 

அம்பாள் சன்னதி காலி, குருக்கள் பூட்டிக்கொண்டே போய்விட்டார். 

கிராதிக் கதவு வழியே உள்ளே பார்வையைக் கவித்துக் கொள்கிறேன். கவிந்த இருளில் அகல்களின் மங்கிய சுடர் களுக்குப்பால், அவள் லேசாக விளிம்பு கட்டுகிறாள். சிக்குப் பிடித்து சாயம் தேய்ந்த தோம்பில் பரிதாபமாக நிற்கிறாள். 

இவள் கதியே இப்படி ஆனால் சுவாமியைப் பற்றி கேட்கவே வெண்டாம். பார்த்துவிட்டேன். எல்லா சிவன் கோவில்களிலும் சிவன் நிலைமை ஒரே நிலைமைதான். 

எப்பவுமே உத்ஸவர்தான் ‘மாப்பிள்ளை’. பிரம்மோத் ஸவம் வேறே. 

மதுரையிலும், லிங்கத்தின் வடையாரைச் சுற்றி அழ்-ழு-க்கு வஸ்திரம்தான். 

ஆனால் அம்மாவுக்குப் பூஜைக்குப் பூஜை, பட்டுப் புடவை மாற்றிய வண்ணம்தான். ராஜாத்தியாச்சே! அந்த அட்டஹாஸமும் தர்பாரும், சன்னதியில் சதா கூட்டமும்! 

ஐயா, ராஜாத்தி மணந்த பிச்சைக்காரன்! 

முதன் முறையாக மதுரை கோவிலுக்குச் சென்றபோது -அதே இருபது வருடங்களுக்குமுன் சன்னதியின் கிராதிக் கம்பிகளின் இருமருங்கிலும் தாங்கமுடியாத நெரிசலில், கர்ப்பக்ருஹத்தை ஒட்டிப் பக்கவாட்டில் ஒரு வாசல் சுலப மாகவும் கூட்டமே இல்லாதிருக்கிறது. 

“ஐயோ ஏன் கஷ்டப்படுகிறார்கள்? இவர்களுக்குப் புத்தியில்லையா? கண்ணில்லையா?” என்று எனக்குள் சிரித்துக்கொண்டு அந்த வாசலில் நுழைய யத்தனிக்கையில் ஒரு கை தடுத்தது. 

“எங்கே போகிறீர்?’ 

உள்ளே காட்டினேன். 

‘இது கட்டண வழி. உங்களுக்கெல்லாம் ஒன்பது மணிக்குத் தரும தரிசனம். அப்போ வாரும். 

இருபது வருடங்களுக்குமுன், எனக்கு நினைவு தெரிந்து என் முதல் நீண்ட பிரயாணத்தில் அதுதான் முதல் ஷாக். 

சென்னையில் காபாலி கோவில், கந்தகோட்டம் ஆனால் க்லுப்தமாக கோவிலுக்குப் போவோரில், நான் அல்லன். அதற்கும் கொடுப்பனை வேண்டும். 

ஆமாம். இங்கே காந்திமதி அம்மன் சன்னதியில் நின்று கொண்டு, மீனாட்சி, கற்பகாம்பாள் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறேனே என்ன நியாயம்? 

இவளைப் போலத்தான். ஆள் உயரத்துக்கு, எங்கள் பெருந்திரு. 

எனக்கு வயது பத்து, பன்னிரண்டில் சென்னையி லிருந்து லால்குடிக்கு வர நேர்ந்த ஒரு ஆபூர்வ சமயத்தில், அண்ணா – அதான் அப்பா, சன்னதியில் சொன்னது இப்போ ஞாபகம் வருகிறது. 

‘ராம். லால்குடியில் நமக்கு வேறு சொத்து கிடையாது! இதோ இவள்தான் நம் குடும்ப சொத்து, நம் எல்லாமே இவள்தான். 

அப்படிச் சொல்கையில் அவருக்குக் கண் துளும்பிற்று. அப்போ எனக்குப் புரியவில்லை. இப்பவும் முழுக்கப் புரியவில்லை. ஆனால் இப்போது, இங்கே எனக்குக் கண்கள் தஹிக்கின்றன. பெருகி கன்னங்களில் வழிகிறது. 

அம்மா! 

நீ காந்திமதியோ, 

மீனாட்சியோ 

கற்பகமோ, 

பெருந்திருவோ 

உனக்கு இன்னம் எத்தனை பெயர்களோ?

நீ இங்கே இருக்கிறாயோ இல்லையோ 

அன்று அண்ணாவின் கண்ணீரில் நனைந்த சொல்லில் வாழ்கிறாய்,பளபளக்கிறாய். 

இப்போது என் கண்ணில் பெருகுவது அண்ணாவின் கண்ணீர். வம்சம் வழிவழியாக உன் சன்னதியில் வடித்த கண்ணீர் வீழ்ச்சியே நினைவெனும் ஜீவநதியாகப் பாய்கிறது. 

போன வாரம் குருவாயூரில் இருந்தேன்.கண்ணனும் கூட இருந்தான். 

இரவு 10,11க்கு பஸ் குருவாயூரை அடைந்தபோது ராஸப்பசி. லேசான மழை பெய்து, பூமி ‘சொதச்சொத அங்கங்கே இருட்டு. 

“அதோ கேசவனைப் பார்த்தேளா?” 

“கேசவனா, யார்? எனக்குத் தெரியாதே!” திறுதிறு வென விழித்தேன், சுற்றுமுற்றும். 

‘சரி விடுங்க.’ கண்ணனுக்குப் பொறுமை குறைவு. ஆனால் இப்போ அவனைக் குறை கூறுவதற்கில்லை. 

இரவு தங்க விடுதி பிடித்தாகணும். ராக்ஷஸப்பசி வேறே. 

தூங்கினேன் என்று சொல்லமாட்டேன். முந்தின நாள். ஏக்தம்” பன்னிரண்டு மணிநேரம் பஸ் பிரயாணம் என்னை அடித்துப் போட்ட மூர்ச்சையிலிருந்து மீண்ட போது கண்ணன் கோவிலுக்குப் போகத் தயாராகிவிட்டான். ஸ்னானம் பண்ணி, திருநீறைப் பட்டை பட்டையாக இட்டுக் கொண்டு பாலமுருகன் மாதிரியிருந்தான். 

“நீங்கள் பின்னால் வாங்கோ. நான் முன்னால் போறேன்” 

நான் ஏற்பாடாய்க் கிளம்பியபோது அப்படி ஒன்றும் நேரமாகிவிடவில்லை. 

கிராமத்தில் பெரிய வீட்டை ஞாபகப்படுத்துகிற மாதிரி, ஓட்டுக் கூரையிட்டு, கேரளாவின் கோயில் கட்டடப் பாங்கு எனக்கு எப்பவுமே பிடிக்கும். எப்பவும்? இதுவரை எத்தனைமுறை இந்தப் பக்கம்? 

இந்தப் பக்கமும் இருபது வருடங்களுக்கு முன்னால் வந்ததுதான். 

ஆனால் நினைப்புக்குக் கடிவாளமுண்டா? சென்னை யில், அம்பத்தூரில், என் அறையில், ஜன்னலோரம் சிமிட்டி மேடையில் படுத்தபடி, வெளியே, மரமாய் வளர்ந்துவிட்ட செம்பருத்திச் செடியில், எட்டா உயரத்திலிருந்து எள்ளும் பூக்களைப் பார்த்துக்கொண்டு, இருபது வருடங்களுக்குமுன் என் நீண்ட பிரயாணத்தை எத்தனை முறையானாலும் நினைவுகூட்டி மகிழ, அசைபோட,ஏங்க…நினைப்புக்குக் கடிவாளமுண்டா? 

இதழ்கள் புலுபுலு விரிதல் போலும் மலரும் பொழுதில் ஆண்களும் பெண்டிரும் நீராடி கூந்தல் ஈரம் இன்னும் உலராமல் கோடாலிமுடிச்சில், வெள்ளையுடுத்து, சுறுசுறுப் பாகக் கோயிலில் வளைய வருவதைக் காண நெஞ்சை அள்ளுகிறது. 

தன் சுழிப்போடு, கூட்டம் என்னை இழுத்துத் தள்ளிக் கொண்டுபோய். இசைகேடாய்ப் பக்கவாட்டில் தள்ளி என்னைத் தன்னிடமிருந்து உதறிவிட்டது. எங்கோ பிரிந்து போனேன். அதனாலேயும் பரவாயில்லை. இரவு மயக்கம் இன்னும் முழுக்கத் தெளியவில்லை. நடந்துகொண்டே தூங்கும் பருவத்திலிருக்கிறேன். என் வட்டம் முடிந்து ஆரம்பித்த புள்ளிக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது – நான் தூங்கவில்லை. நடந்துகொண்டே கனவு கண்டுகொண்டி ருக்கிறேன். காலத்தைத் தாண்டி காலத்தின் உள் சுழியுள்… 

மனம் வைத்தால், இந்தப் பெரிய வீட்டில் ஒரு திண்ணை யில், தூணோடு கயிறை அணைத்து, யசோதா ஆத்தா தயிர் கடைந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். அவளுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவள் பரந்த முதுகில் தொங்கிக் கொண்டு போக்கிரிப் பயல், அவள் காதுமடலை (சற்று அழுத்தமாகவே)கடிக்கிறான். மயிலிறகு அவள் நெற்றிப் பொட்டில் குறுகுறு- 

“ஹே கிருஷ்ணா! குருவாயூரப்பா!” சன்னதியில் கோஷம் எட்டுகிறது. நான் போதையிலிருக்கிறேன். 

ஒரு திண்ணையில் நம்பூத்ரி சந்தனமும் தீர்த்தமும் வழங்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம் போய்க் கை ஏந்துகிறேன். 

“டிக்கட் வாங்கியிருக்கா?” 

திறுதிறு 

“டேய்! அப்பா சில சமயம் முழிக்கறதைப் பார்த்தால் நடிக்கிறார் இல்லை?” 

“இல்லை. நட்சத்திரத்தை விழுங்கியிருக்கிறார். 

“அதோ அவ்விட கௌன்டர் நோக்கியோ? வாங்கி வரட்டோ. அஞ்சு ரூவா.” 

அங்கிருந்து, கோவிலிலிருந்து விலகுகிறேன். வெளியே, காலணிகளை விடும் (டிக்கட்டுக்குத்தான்) இடத்தை ஒட்டி அங்கே கிடந்த கல்லின்மேல் உட்காருகிறேன். இதென்ன திடீர்னு இப்படி ஒரு அசதி? 

“எங்கெலாம் அப்பா உங்களைத் தேடறது, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கேள்?” 

“கண்ணா எப்போடா வீட்டுக்குத் திரும்பப் போறோம்?” 

என்னைக் கவலையோடு நோக்கினான். “என்னப்பா திடீர்னு?” 

எனக்கும்தான் புரியவில்லை. நாடே, ஒரு முடிவிலாத, நீண்ட கௌன்டர் – எண்ணங்கள், நம்பிக்கைகளுக்கும்கூட ஆகிவிட்டதை நினைக்கும்போது திகைப்பாய் இருக்கிறது. 

கனவு அற்ற தூக்கமோ கிடையாது. 

கனவுகள் இழந்த வாழ்க்கையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? 

பயமாயிருக்கிறது. 

கோவிலை விட்டு வெளியே வந்தபோது வெய்யில் மஞ்ச ளாகிவிட்டது. தங்கியிருக்கும் வீட்டுக்கு ஏதேனும் வாங்கிப் போலாமே!ஓரமாக நடந்து சென்று வடக்கு மதிலுக்குத் திரும்பினேன். இங்கே கூட்டம் சற்று தணிவு. 

மதிலோரமாக ஒருவன், ஜாதிக்காய்ப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு, அதன்மேல் வாழையிலையில் மல்லிப் பூ விற்றுக்கொண்டிருந்தான். இன்னும் தொடுத்துக்கொண்டிருந்தான். எதிரே போய் நின்றேன். 

“நூறு ரூபாய்.’ 

“உன் கணக்குப் பிடிபடல்லே. பட்டணத்தில் முழத்தில்…”

“ஓ, பட்டணத்திலிருந்து வாரீங்களா? அப்டின்னா இது முக்கால் முழம் தேறும். ஆனால் வயல்காடில்லே ஆளுங்க குரல் கொடுத்துக்கற மாதிரி, எட்ட எட்டக் கட்டி அங்கே முழம் பண்ணிடறாங்களே, அப்படியில்லே இது. என்ன அடர்த்தியாயிருக்குது பார்த்தீங்களா?” துரத்தைத் தூக்கிக் காட்டினான். 

“அப்பா நான் ஊருக்குப் புதுசு. எப்படியிருந்தாலும் நீ கேக்கற விலையைத்தான் கொடுக்கப்போறேன். ஆனால் உன் விலை சூடாத்தான் படுது.” என்று இழுத்தேன். 

“என்ன செய்யறதுங்க. இப்போ பண்ணினாத்தானே ண்டு! நாளைக்குத் தேருங்க. அப்படியும் பூக்கட்டி என்ன சம்பாரிச்சுட முடியும்?”

இரண்டு முழம் வாங்கினேன். ஐந்து ரூபாய் நோட்டுக்கு மீதி சில்லரை கொடுத்தான். 

“ஏம்பா, அரைரூபாய் கூடக் கொடுத்துட்டே போல இருக்கே!” 

புன்னகை புரிந்தான். “ஆமானுங்க, நீங்க ஊருக்கும் போனால் எங்களைப்பத்தி நல்லபடியா நினைக்க வேணாமா?’ 

இவனுக்கு என் நினைப்பிலேயே இடம்பிடிக்க வேணுமாம். தான்மட்டும் இல்லை,திருநெல்வேலிக்கும் சேர்த்து, இவனும் மேடையை ஞாபகப்படுத்துகிறான். ஏக்கம் அலை மோதிற்று. 

சமாளித்துக்கொண்டு, சற்று எட்டத் தள்ளுவண்டியில் வாழைப்பழம்,விலை பேசி ஒரு சீப்பு வாங்கிக்கொண்டேன் பணம் கொடுக்க, மடியில் பர்ஸுக்குத் துழாவினால் ஆமாம், பர்ஸ்?- எங்கே? 

பதறிப்போய், இடுப்பில் எட்டுத் தடவை தடவித்தடவி, வாழைப்பழ வண்டிக்கும் பூ வாங்கின இடத்துக்கும் இடையே தூரத்தைப் பத்துத் தடவை நடந்து என்னையே தட்டா மாலை சுற்றினால் கிடைத்துவிடுமா? ஐயைய்யோ, நாளைக்கு மதுரைக்கு டிக்கட்டும் என் முழுப்பணமும் அதிலே தான். இப்போ என் முழி நிச்சயம் திருட்டு முழி, திகில் முழி. 

இருந்தாற்போல் இருந்து என் காதண்டை ஒரு குரல். 

“பர்ஸ்தானே? அதோ அங்கே ஒரு பெண் பிள்ளையும் பையனும் நிக்கறாங்களே! – சுட்டிக்காட்ட மாட்டேன் – வெற்றிலை கூடைக்காரியோடு பேரம் பேசறாங்களே! அதான் ஸார். பையன் கிஷ்ணாயில் காலனோடு நிக்கறான், அம்மா கையிலே ப்ளாஸ்டிக் கூடை தொங்குது – அவங்ககிட்ட உங்கள் பர்ஸ் இருக்குது, போய்க் கேட்டு வாங்கிக்கங்க. 

அவ்வளவுதான். நேரே போய் மதில்மேல் சாய்ந்தபடி நின்றுகொண்டு, நெருப்புக் குச்சியால் பல் குத்த ஆரம்பித்து விட்டான். 

இவன் எனக்கு ஒத்தாசைக்கு வரமாட்டான். ஆமாம், தான் ஏன் வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டும்? இடம் காட்டினதே பெரிசு. 

என்னென்று கேட்பேன்? ஏன் அப்படிச் செய்தேன் என்றும் தெரியவில்லை. நேரே அவளிடம் போய் இரு கை களையும் சேர்த்து ஏந்தினேன். 

என்னை ஏற இறங்கப் பார்த்தாள். ஒன்றுமே பேச வில்லை. கூடையை அடைத்த முளைக்கீரைக் கட்டு அடியி லிருந்து எடுத்துக் கொடுத்தாள். 

அடுத்தது என் செய்கை அதுவும் புரியவில்லை. மடியி லிருந்து வாழையிலைக் கிழிசலில் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். 

வாங்கிப் பிரித்துப் பூவை எடுத்துக் கொண்டையில் சொருகிக்கொண்டாள். அவள் கண்களில் ஃப்ளாஷ்! உடனே மறைந்தது. 

இருவரும் விர்ரென நடந்து ஒரு கடைச்சந்தில் மறைந்தனர். 

இத்தனையும் ஒரு டாப்ளூ (Tableaux) நிழல் ஆட்டம் (Shadow play) 

மோனம் புனைந்த கவிதையின் தன்மையும் வேளையும் யாரால் முன்கூட்டிச் சொல்ல முடியும்? 

அம்மா! 

நீ என் தாயின் மறுபிறவியோ?

முற்பிறவியில் என் மகளோ! 

உன் பெயர் 

காந்திமதியோ? மீனாட்சியோ? கற்பகமோ? பெருந் திருவோ? சமயத்தின் சமயாம்பிகையோ? 

கேவலம், ஒரு பர்ஸ் காட்டின கண்ணாமூச்சிக்கு ப்படி ஒரு அந்தாதியா? 

“ஐயா, இது கண்ணாமூச்சி காட்டினது பர்ஸ் இல்லை.” 

“பின்னே யார்?” 

“சரி விடுங்சு!’ 

குருவாயூரில், மறுநாளே, கண்ணன், மனம் குளிர்ந்து சமயத்தில் விளக்கினான். 

தன் பாகன் நோய்வாய்ப்பட்டு இறந்த பிரிவாற்றாமை தாளாமல்.ஆகாரம் எடுக்காமல்,பட்டினி கிடந்து தானும் உயிர்நீத்த கேசவன் எனும் யானைக்கு எழுப்பியிருக்கும். சிலையைப் பார்க்கச் சொன்னானாம். 

மனிதாபிமானம், ஆன்மீகம் இவ்விரு வார்த்தைகளும் அரசியல் அகராதியில் சேர்ந்து, படாத பாடுபடும் நிலையில் கேசவனின் அபிமானத்தை என்னென்று அழைக்க? மிருகாபி மானம் எனலாமா? 

பூக்காரன்,தன் ஊருக்கே சேர்த்து, நினைப்பின் மூலம் அமரத்வத்தை நாடுகிறான். 

பர்ஸ் கூட அவளுடைய ப்ரஸாதம்தான். மறுத்திருந்தால்?

கோயிலில் “டிக்கட்” கேட்டாலும். 

ஆமாம், இத்தனையும் யாருக்கு அர்ச்சனை? 

சென்னையில், அறை ஜன்னலுக்கு வெளியே, செடியில்  எட்டா உயரத்தில் சிரக்கம்பம் செய்துகொண்டு  செம்பருத்திப் பூக்கள் சிரிக்கின்றன. 

அவைதான் அறியும். 

– குங்குமம்

– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *