அருகிப்போகும் அட்டப்பள்ளம்
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 9
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை வேளையில் நிந்தவூர் கடற்கரையில் நடந்து கொண்டு இருந்தார் ஹாஜியார் காசிம். எண்பது வயது தாண்டினாலும் இன்னும் அவரின் உடல் உறுதியாக இருந்தது. அதற்கு காரணம், அவரின் உணவுப் பழக்கவழக்கம். மற்றது உடற்பயிற்சி. தலைமுறை தலைமுறையாக காசிம் அவர்களின் வம்சம் இந்த கடற்கரையை அண்டியே வாழ்கின்றது. நிந்தவூருக்கு வடக்கே காரைதீவு தமிழ்க் கிராமம் தெற்கே அட்டப்பள்ளம் அதுவும் தமிழ்க் கிராமம். இது காலாகாலமாக இருந்து வந்த ஒன்றுதான். தமிழர்களும் முஸ்லிம்களும் மிக ஐக்கியமாக இருந்து வந்தவர்கள். ஹாஜியார் காசிம் அவர்கள் கடின உழைப்பாளி.
மாட்டுப்பளையில் பல ஏக்கர் நெற்காணி இருக்கிறது. இப்போது அவரின் மகன், மருமகன் இருவருக்கும் கொடுத்துவிட்டார். இவர் இஸ்லாம் மார்க்கத்தையும், அதன் கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்றுபவர். இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. அது வாழ்வை நெறிப்படுத்தும் ஒரு மார்க்கம்தான் என்றும் அல்லா ஒருவன்தான் என்றும், இறைதூதர் நபிகள் நாயகம் சொன்ன போதனைகளை கருத்தில் கொண்டும் வாழ்ந்த காசிம் அவர்கள் தனது அறுபதாவது வயதிலேயே மக்காவுக்கு சென்று தனது புனித யாத்திரையை முடித்து, காபாவை தரிசித்து வந்தவர். அதனால் ஹாஜியார் ஆகிவிட்டார். எல்லோராலும் மதிக்கப்படும் இவர் நல்ல மனிதநேயம் உள்ளவர். தமிழ்தான் தனது தாய்மொழி என்று வாழ்பவர். குரான், அரபுமொழியில் இருந்தாலும் அதை தமிழ் படுத்தி பலருக்கும் சொல்வதை ஒரு மார்க்க ஊழியமாக செய்து வருபவர்.
பொதுவாக இஸ்லாம் மார்க்கத்தில மௌலபிகள் தான் குரானை படித்து பிரசங்கம் தமிழில் செய்வார்கள். பள்ளியிலும், மதுரசாக்களிலும். இது பின்பற்றப்படும். காசிம் ஹாஜியார் கடற்கரையில் ஒரு பத்துபேர் கூடி நின்றால் அவர்களுக்கு அல்லாவின் புனித மொழிகளை சொல்வார். பலர் இவர் பேசுவதை கேட்பார்கள்..
“ஒரு கூலித் தொழிலாளியின் வியர்வை வற்றும் முன்னரே அவன் கூலியை கொடுத்துவிடு”
“அல்லாவையும் இறுதி நாளையும் நம்புகிறவர் தனது அண்டை வீட்டாரு டனும், அயலவர்களுடனும் பெருந் தன்மையுடன் நடந்துகொள்ளட்டும்”
“ஒருவர் நல்ல முஸ்லிமாக இருப்பதன் ஒரு பகுதி என்ன தெரியுமா, அவர் தனக்கு சம்பந்தமில்லாததை விட்டுவிடவேண்டும். எதையும் அடாவடியாக அபகரிக்க கூடாது”
“தனக்கென விரும்புவதை தன் சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் உண்மையான நம்பிக்கையாளராக மாட்டார்” இப்படியாக காசிம் ஹாஜியர் தான் படித்த, அறிந்த நபி மொழிகளை தன் நண்பர்களுக்கு சொல்வார்.
அப்படிப்பட்ட அற்புதமான ஒரு நல்ல முஸ்லிம் பெரியவர் தன்னை அரபு நாட்டிலிருந்து வந்த முஸ்லிம் என்று எப்போதும் நினைத் ததில்லை. தங்களின் பரம்பரை பல தலைமுறைகள் இங்கேயே தோன்றியவை.
தமிழ்தான் தங்கள் தாய்மொழி. அரபு அல்ல. அது மார்க்க மொழி என்ற கருத்தை கொண்டிருப்பவர். அவருக்கு மனதில் ஒரு பெரிய வலி இருக்கிறது. ஒரு நான்கு. ஐந்து தசாப்தங்களுக்கு முன் ஏற்பட்டது.
தனது பக்கத்து கிராமமான அட்டப்பள்ளம், பத்துக் கிலோமீற்றர் தள்ளி இருந்த மீன் ஓடைக்கட்டு, சற்று உள்ளுக்குள் இருந்த திராய்க்கேணி போன்ற தமிழ் கிராமங்கள் இன்று காணாமல் போய்விட்டன.
சில முஸ்லிம்களின் அடாவடித்தனத்தாலும், சில முஸ்லிம் தலை வர்களின் கெடுபிடிகளாலும் அந்த தமிழ் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் சகோதரர்கள் தங்கள் சொந்த காணி, பூமிகளை விட்டு இடம் பெயர்ந்தார்கள்.
சிலர் அறாவிலைக்கு முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்றார்கள். ஓட்டு மொத்த முஸ்லிம் மக்களும் பிழையானவர்கள் இல்லை.மிக நல்ல மனிதநேயப் பண்பாளர்கள், கல்வியாளர்கள், சகோதரத்துவம் பேணு பவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் காசிம் ஹாஜியார்.
அவர், இப்போது தான் வழக்கமாக இளைப்பாறும் இருக்கைக்கு வந்துவிட்டார். அங்கே அவரது நண்பர் முத்துமீரான் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் ஹாஜியார் கேட்டார்.
“என்ன மீரான் ஊட்டுல இருந்து வெள்ளண்ண வெளிக்கிட்டிட்டியா”
“வாங்க, ஹாஜியார் நான் கொஞ்சம் நேரத்தோடதான் ஊட்டால கிளம்பினன். இப்படி இருங்க. காலத்தாலயே வெயில் கொளுத்துது பாத்தீங்களா”
“ஏறு வெயில் உடம்புக்கு நல்லதுதானே. எங்க மஜீத், இப்ராகிம், ஹபீல், கபூர் எல்லாரும் எங்க போனாங்க மீரான் ஒருத்தனையும் காணல்ல”
“வருவானுகள்… வந்துருவானுகள்… நீங்க கொஞ்சம் இளைப்பாருங்க. இந்தாங்க கொஞ்சம் தண்ணீ குடியுங்க” என்று தன்னிடமிருந்த தண்ணீர் போத்தலை கொடுத்தார் முத்து மீரான்.
காசிம் ஹாஜியாரும் கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார்.
“இன்னிக்கு கதைக்க என்ன விஷயம் இரிக்கு ஹாஜியார்”
“என்னத்த பேசி என்ன நடக்கபோவுது மீரான். நம்மட மக்கள் அல்லாவுக்கு பயந்து வாழுற மாதிரி தெரியல்ல”
“என்ன செல்லுறிய. ஆரும் மார்க்கத்துக்கு விரோதமா ஏதும் பண்ணிட்டானுகளா?”
“பின்ன என்ன மீரான். உனக்கும் கிட்டத்தட்ட என்ட வயசுதானே.உனக்கு தெரியும்தானே நம்மட அயல்கிராமம் அட்டப்பள்ளம் தமிழ் கிராமம்தானே”
“ஏன் தெரியாம, நல்லாத் தெரியும். நம்மட எத்தனையோ கூட்டாளிகள் இருந்த கிராமம். அவங்களோட நாம காலா காலத்திற்கும் எவ்வளவு அந்நியோன்யமாக இருந்திருக்கம்”
“இல்லையா பின்ன. ஆனா என்ன நடந்தது நாப்பது அம்பது வருசங்களுக்கு முன், நம்மட முஸ்லிம் மக்களில் சிலர் தங்கட சுயநலத்துக் காக அவுகள விரட்டி அடிச்சாங்க. அதுக்குப்பொறகு சண்டைக் காலத்துல முஸ்லிம் ஊர்காவல் படையை வச்சி அதிரடிப்படை, தமிழாக்கள சுட்டு கொண்டது. அவங்கட கோவில அடிச்சி உடைச்சாங்க. போன கிழமை கல்முனையில அவங்கட தரவை பிள்ளையார் கோவிலையும் உடைச்சி இருக்காங்க. இதெல்லாம் அல்லாவுக்கும், மார்க்கத்துக்கும் எதிராக இல்லையா மீரான்”
“அல்லாவுக்கு அடுக்காத காரியங்கள் ஹாஜியார். நம்மட மார்க்கத்துக்கு ஒவ்வாத விசயங்கள். நீங்க சொல்லுவீகளே அல்லாவையும், தன்ர மவுத்து நாளையும் நம்புறவன். அவன்ட அண்டை ஊட்டையும், அயலவனையும் பெருந்தன்மையுடன் நடத்த வேணும். நடந்து கொள்ள வேணும் என்று. நபிகளின் பொன் மொழி ஒன்று செல்லுதெண்டு. இதெல்லாம் இப்ப ஆரு ஹாஜியார் கண்டுக்கிரானுகள்?.”
“நம்மட பக்கம் எப்ப அரசியல் வாதிகளின் ஆதிக்கம் தலை தூக்கிச்சோ அப்பவே மார்க்கக் கட்டுப்பாடுகள் உடைஞ்சி போச்சி போன கிழமை அட்டப்பள்ளம் தமிழர்களின் சவக்கால, ஒரு முஸ்லிம் பெரியமனுசனால் அபகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது . அந்த சவக்கால இடம் தன்ர காணி என்று பொய்ப் பத்திரங்களை தயார் பண்ணி கொண்டு சென்று, அரச அதிகாரிகளையும் விலைக்கு வாங்கி பெரிய அடாவடி பண்ணி இருக்கார்!”
“ஆ… அது பெரிய கலவரமாகி மிச்சமிருந்த ஒருசில தமிழ் குடும்பங்களின் தலையில பெரும் இடியை உண்டாக்கி போட்டு ஹாஜியார். தமிழ் பொடியனுகள், இல்ல இது எங்கட சவக்கால பரம்பரையாக நாங்க இதை சவக்காலையா பாவிசிக் கொண்டு வாறம் என்று எதிர்த்ததற்கு அவனுகள் போலீசைக் கொண்டு புடிச்சி சிறையில் அடைச்சி போட்டானுகள். அது ஒரு கசபோக்கிலித்தனம் ஹாஜியார். நம்மட வயசுக்கு தெரிந்த வரை அது தமிழர்களின் மைய வாடியாகத்தானே இருந்தது. இப்ப எப்பிடி அந்த முஸ்லிம் பெரிய மனுஷனுக்கு சொந்தமானது”
“அவரெல்லாம் முஸ்லிமாக இருக்க முடியாது மீரான் ஏன்னா ஒரு நல்ல முஸ்லிமாக இருப்பதன் ஒரு பகுதி, அவர் தமக்கு சம்பந்தம் இல்லாததை விட்டுவிடுவதாகும்.” என்று இஸ்லாத்தில் சொல்லப் பட்டிருக்கு மீரான். அப்ப பார்த்தாயா தனக்கு சம்பந்தமில்லாத ஒரு சவக்காலையை, சரி மையவாடியை தனது என்று சொல்லி அடாத்தா எடுக்க முயலும் அவர் எப்படி முஸ்லிமாக இருக்கமுடியும் மீரான்?”
“கண்டிப்பாக இருக்க முடியாது. இந்தா வாரானுகள் ஹபீலும், மஜீத்தும். எங்கடா போனனீங்க ஹாஜியார் கேட்டுக்கொண்டே இருந்தார்”
“இல்ல காக்கா, கரைவலையில நல்ல மீன் கிடைச்சிருக்கு. சூரையும், கீரியும். கும்பளா பாரையும். அதுதான் அதை பார்த்துகிட்டு வலையைப் புடிச்சி இழுத்தோம் அபூபக்கர் நானா. கறிக்கு கொஞ்சம் கும்பளா பாரை தந்தார். அதைக் கொண்டு ஊட்டுல குடுத்துட்டு வாறம். “என்றான் மஜீத்.
“இப்ராகிம், கபூர் ஆக்கள் எங்க. அவனுகளும் வலை இழுத்தானுகளா? கேட்டர் ஹாஜியார்
“இல்ல ஹாஜியார். இண்டைக்கு அவனுகள் ரெண்டுபேரும் மாட்டுப் பளைக்கு போயிட்டானுக. அங்க கபூர்ர வாப்பாட வயல் விதைப்பு நடக்குதாம். அதற்கு வக்கடை வெட்டவும், வரவைகளின் மூலைகள் கொத்தவும் இவனுகள் போறானுகள்.”
“மாட்டுப்பளை, செங்கற்பளை எல்லாம் ஒருகாலத்தில் தமிழர்களின் காணி பூமியாக இருந்தது உனக்கு தெரியுமா மீரான்? நான் சொன்னமாதிரி தமிழர்களிடமிருந்து அவை கட்டாயத்தின் பேரிலும், அவர்களுக்கு விற்பதைத்தவிர வேறு வழியில் லாமலும்தான் நம்மவர்களால் வாங்கப்பட்டது.”
“ஆ… நல்லா தெரியும் ஹாஜியார். அவங்களில் பலபேர் பெரிய போடிமார்களாக இருந்தவங்க. ஏக்கர்கணக்கில் காணிபூமி அவங்களிட்ட குத்தகைக்கு நம்ட ஆக்கள் வாங்கி செய்தாங்க. அவங்ககிட்ட கூலிக்கு வேலைக்கு போனாங்க. குத்தகைக்கு பூமி எடுத்து செய்பவர்கள் அறுவடை முடிச்சப்புறம் “கா” கொண்டு போடிமாருக்கு கொடுப்பதை பார்த்து இருக்கேன் அதெல்லாம் மறக்க முடியாதே ஹாஜியார்”
“இண்டைக்கு பார்த்தியா மீரான் அந்த பகுதிகளில் உள்ள பூமிகள் முழுக்க நம்மட ஆக்கள் சொந்தமாக்கி வேளாண்மை மூன்று போகம் செய்யுறாங்க”
ஹாஜியாரும், முதுமீரானும் என்ன கதைக்கிறாங்க என்று ஒன்றும் புரியாம நின்று கொண்டு இருந்தாங்க மஜீதும், ஹபீலும். பிறகு அவர்களுக்கு ஹாஜியார் மூலம் சொல்லப்பட்டது. முதுமீரானும், ஹாஜியாரும் அவர்கள் வரும்முன் என்ன பேசிக்கொண்டு இருந்தார்கள் என்று. அண்மையில் நடந்த அட்டப்பள்ளம் சம்பவம் அவர்களுக்கும் தெரிந்து இருந்தது. அவர்களுக்கு மட்டுமல்ல. அது ஊர்முழுக்க. ஏன் நாடுமுழுக்க தெரிந்த விடயம்தானே. ஊடகங்களிலும், அந்த சம்பவம்பற்றி வந்ததுதானே. அதை ஹபீலும் சொன்னான்.
“இதை அல்லாவும் ஏற்க மாட்டார். நம்மட முஸ்லிம் மக்களில் சிலர் விடும் இப்படியான பிழைகளால் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்குமே கெட்ட பெயர் வருகிறது ஹாஜியார். இதற்கு அரசும் துணைபோகிறது. அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள. முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம். செய்து கொடுக்கிறது அரசு. அதை சாக்காக வைத்துக்கொண்டு நம்மட அரசியல்வாதிகளும் தங்கட இஷ்டத்துக்கு அல்லாவுக்கு அடுக்காத காரியங்கள் செய்யுறாங்க!”
“என்ன ஹபீல் உனக்கு ஏதும் தெரியுமா? அப்படி ஏதும் காரியங்கள் செய்திருக்காங்களா?” மீரான் கேட்டார்.
“பல காரியங்கள் இவனுகள் செய்யிறானுகள் காக்கா. நேற்றுக்கூட டிவியில் ஒரு விவாதம் போச்சி. பார்த்தேன். அது என்னன்னா, நிந்தவூருக்கு ஒரு ஆதார வைத்தியசாலை இரிக்கி அது சிறப்பாக நடக்குது. எல்லா வசதிகளும் இரிக்கி. அதுபோல எல்லா முஸ்லிம் ஊருகளிலும் உள்ள வைத்தியசாலைகள் நிறைய வைத்தியர்களோட. நிறைய நேர்ஸ் மார்களோடதான் இரிக்கி. ஆனா, தமிழ் பகுதிக்குள் இரிக்கிற வைத்திய சாலைகள் ஆதரா வைத்தியசாலையாக பேரளவில்தான் இரிக்கி. ஒரு அடிப்படை வசதிகள்கூட இல்லையாம். திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கட்டிடங்களும் புதிதா இல்லை. வைத்தியர்களும் இல்லை அதேபோல் வாழைச்சேனைக்கும்தான். ஆனால் நிந்தவூருக்கு இன்னுமொரு ஆதார வைத்திய சாலை கட்ட ஐயாயிரம் மில்லியன் காசு சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்? என்று தமிழ் எம்பி நாடாளுமன்றத்தில் கேட்கிறார்?”
“அது நியாயமான கேள்விதானே ஹபில். சகல மக்களுக்கும் சமமாக நடந்து கொள்வதுதானே முறை. தமிழர்கள் பகுதியில் உள்ள வைத்தியசாலைகளும் நல்ல படி இயங்க அரசு செய்ய வேண்டிய காரியம் இருக்க. ஏற்கனவே நல்லபடி இயங்கும் நமது ஹொஸ்பிடல் இருக்கத்தக்கதாக புதிய ஹொஸ்பிடல் கட்ட பணம் ஒதுக்கப்பட்டது ஒதுக்க முடியாது என்று தமிழ் எம்பி சொல்வதில் நியாம் இரிக்கி ஹபீல். இப்படி நடந்து கொள்வதால்தான் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் வர அரசே வழி வகுத்துக் கொடுக்கிறது. இது ஒன்றும் ஏற்புடையதல்ல.” என்ற காசிம் ஹாஜியார் தன இருக்கையில் இருந்து எழுந்துகொண்டார். முத்து மீரானும் உடன் எழுந்து கொண்டார்.
“சரி மீரான் வெயிலும் ஏறிட்டு. நான் மொள்ள மொள்ள ஊட்டுக்கு போறன் இண்டைக்கு நாம கதச்சதே போதும். எல்லா மக்களும் சரி சமமாக வாழணும். அடுத்தவரை கெடுத்து வாழ்வது ஹறாமாகும் நபி மொழி ஒன்று சொல்கிறது. அல்லா சொல்வதாக
“நான் உங்களுக்கு எதை தடை செய்திருக்கிறேனோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். நான் உங்களிடம் எதை செய்யுங்கள் என்று பணித்திருக்கிறேனோ அதை எவ்வளவு செய்ய முடியுமோ செய்யுங்கள்” என்று சொல்கிறது. நாம் நமக்கு பணிக்க பட்டதையே செய்து அல்லாவுக்கு பிடித்தமானவர்களாக சுவர்க்கம் செல்லுவோம். இன்சா அல்லா. அல்கம்துலில்லா,” என்று சொன்ன காசிம் ஹாஜியார் எல்லோரிடமும் விடைபெற்று தன் வீட்டுக்கு புறப்பட்டார்.
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கொட்டு மேளம்
தி.ஜானகிராமன்
September 12, 2026
பிடிவாதம்
இரா.கலைச்செல்வி
September 9, 2026
புத்தகம் சுமக்க வேண்டிய கைகள்
எஸ்.மதுரகவி
September 9, 2026
