கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2025
பார்வையிட்டோர்: 669 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திரும்பவும் அது கிடைத்தேவிட்டது. கையிலிருந்த மற்ற புத்தகங்களைக் கீழே வைத்துவிட்டு அந்தப் புத்தகத்தை மட்டும் கையில் எடுத்தான். நல்ல ஊதா நிறமான துணியால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் அது. பக்கங்கள் பழுத்துப்போயின. மஞ்சள் நிறத்தில் தொட்டால் உதிர்ந்துபோகும் வண்ணமிருந்தன பக்கங்கள்.

நிறையப் புத்தகங்கள் அவனைச் சுற்றிக் கிடந்தன. பாதிக்கு மேல் மாத நாவல்கள். சில மூலிகை மருந்து, ஜோசியம் பற்றிய புத்தகங்கள். அவன் வந்தபோது சில சரித்திர நாவல்கள்தான் எதிரில் கிடந்தன. கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு ‘சிரான் மலைக்கோவை’ என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்தல புராணம் போல இருந்தது.

அந்தக் கடையில் சில வேளைகளில் நல்ல பழைய புத்தகங்கள் கிடைக்கக் கூடும். எப்பவாவது வாங்க வருவான். கடை கோயிலை ஒட்டிப் போகும் தெருவில் இருந்தது. வெளியே நிறைய மாதப் பத்திரிகைகள் தொங்கவிட்டிருப்பான். அவன் பார்த்துக்கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு நிமிரும்போது கடைக்காரன் கேட்டான்:

“தமிழ்ப் பாட்டெல்லாம் பிடிக்குமா? புதுசா வந்திருக்கு.” அவன் பேசாமலே இருந்தான். உள்ளேயிருந்த சின்னக் கட்டை எடுத்துக் கொண்டு வந்தான். ரொம்பவும் பழைய புத்தகங்கள் போல அவனுக்குத் தோணியது. கட்டை அவிழ்த்து வைத்துப் பிரித்தான். மற்ற புத்தகங்களைத் தள்ளிவிட்டு அவற்றைப் பரப்பினான்.

அவன் எடுத்த புத்தகம் முதல் பக்கம் பிரிக்கப் போவதற்கு முன்பே தெரிந்தது, அது அவர்கள் புத்தகம் என்று. அட்டையை அடுத்த பக்கத்திலே எழுதியிருந்தது: “ஸ்ரீமான் நாராயணசுவாமி பிள்ளை குமாரத்தி கனகாவுக்கு அன்பளிப்பு’ கீழே கறுப்பு மையில் கிறுக்கினாற் போன்றதொரு கையெழுத்து. அவன் வைத்திருந்த கட்டில் இருந்த புத்தகங்கள் எல்லாம் அம்மாவின் புத்தகங்கள். தாத்தாவிடமிருந்து வாங்கியவை. இதைப் போன்ற புத்தகங்கள் பதினாலு இருக்கும். வரிசையாக அலமாரியில் அடுக்கி வைத்திருப்பாள். அதற்கு மேல்தட்டில் சின்ன வெண்கல யானையும் விநாயகரும் இருப்பார்கள். திருநீற்றுக் கிண்ண மிருக்கும். சரஸ்வதி பூஜைக்கு வைத்த சந்தனப் பொட்டு புத்தகத்தின் முகப்பிலிருக்கும்.

அந்தப் புத்தகங்களைத் திரும்பவும் புரட்டிப் பார்த்தான். உள்ளே அம்மாவின் கையெழுத்து. உருட்டு உருட்டாக இருந்தது. சில பக்கங்களைக் காணவில்லை. ராமாயணப் புத்தகத்தில் இருந்த படம் காணவில்லை. சில படங்கள் காணப்பட்டன. உள்ளே திரும்பி வரும்போது பார்த்தான். ஜடாயுவின் சிறகுகள் முறிந்து கிடக்கும் காட்சி. ராம-லட்சுமணர் எதிரே நிற்கிறார்கள். வானம் தலைக்கு மேல். முறிந்து கிடக்கும் சிறகுகளின் ரோமங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஜடாயுவின் மரணம் தோய்ந்த முகம் அப்படியே இருந்தது.

இந்தப் படத்தை நிறைய தடவைகள் பார்த்திருக்கிறான். அம்மா எப்பவாவது அவளே கதை சொல்லும் ஆர்வத்தில் இருந்தால் அந்தப் படத்தைக் காட்டிக் கதை சொல்வாள். அவன், ரமணி, முத்து எல்லாம் கதை கேட்பார்கள். மெல்லிசான விளக்கு எரிந்து கொண்டிருக்கும் வீட்டில். அம்மாவின் முகம் மஞ்சளில் தோய்ந்து மிளிரும். கற்றை மயிர்கள் அம்மாவுக்கு. எடுத்துப் போட்டாலும் இடுப்பை விட்டு இறங்கும்.

அடர்த்தியாக இருக்கும் மயிர். விளக்கு வெளிச்சத்தில் அவை நிழலில் நாணல் புதர் போலத் தெரியும். பாடல்கள் மெல்லிசான தொனியில் பாடுவாள். குரல் மென்மையானது. ஜடாயுவின் கதை அவளுக்கும் பிடிக்கும். அந்தப் படத்தில் இருப்பதை விவரிக்கும்போது முகம் பெருந்துக்கத்தின் தாக்கம் சேர்ந்ததாக இருக்கும்.

“ஜடாயுவைப் போல அம்மா” – நினைவில் இப்போது.

நான்கு புத்தகங்களையும் எடுத்து அவனிடம் கொடுத்து விலை கேட்டான். அவன் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்தான். ஒரு கையில் வைத்து எடை பார்த்தான். திரும்பவும் திருப்பி உள்ளே பார்த்து விட்டுச் சொன்னான்:

“இருபத்தைந்து ரூவா குடுங்க.”

கையிலிருந்த காசை எண்ணினான். இருபது ரூபாய்க்கும் உள்ளே தான் இருந்தது. புத்தகங்களைத் திரும்பவும் எடுத்துப் பார்த்தான். “கொறச்சுப் போடுங்க” என்றான்.

கடைசியில் பத்தொன்பது ரூபாய்க்கு வாங்கினான். சில பக்கங்கள் உதிர்ந்துபோய் அந்த இடத்திலே கிடந்தன.

இருட்டத் தொடங்கியிருந்தது. கோயிலைத் தாண்டி கிழக்கில் பிரிந்தான். வீடு தள்ளியிருந்தது. யாரோ சிலர் சப்தமாகப் பேசிக் கொண்டு முன்னால் போனார்கள். வீடுகளில் விளக்கு பொருத்தியிருந்தார்கள். ஸ்கூல் மைதானத்தில் ஆட்களே இல்லை. கருப்படித்த கல் சுவர்கள் நின்றிருந்தன. வானம் நீலத்தில் இருந்தது. காற்றில் லேசாகக் குளிர் இருந்தது.

புத்தகத்தை மார்புக்கு நேராகப் பிடித்துக்கொண்டான். அம்மா பெரும்பாலும் குளிர்காலத்தில் சீக்கிரமே விழித்துக் கொள்வாள். விரல்கள் நடுங்க ஈரம் சொட்ட நடந்துபோன காலடித் தடங்கள் சிவப்புச் செங்கல்லில் பதிந்திருக்கும். அநேகமாக ஆற்றில் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த நேரத்தில்.

படித்துறைகளில் முழு நிசப்தமிருக்கும். சிறு அசைவோடு ஆறு ஓடிக்கொண்டிருக்கும். அவன் சில நாட்களில் அம்மாவோடு போயிருக்கிறான். தெருவில் காலை படர்ந்திருக்கும். பறவை களின் சப்தம் விட்டு விட்டுக் கேட்கும். ஆற்றுக்குப் போகும் பாதையில் இருள். அம்மாவின் விரல்களோடு கடந்து போவான்.

சுண்டு விரல்கள் தடிப்பாயிருக்கும் அம்மாவுக்கு. படிக்கட்டு ஈரம் உறைந்துபோயிருந்தது. மரத்தில் இருந்து உதிர்ந்த இலைகள் நிறையப் படிக்கட்டில். தூரத்தில் மதகு தெரியும். படிக்கட்டில் உட்கார்ந்துகொள்வான். எதிரே ஆண்கள் படித்துறையில் பஜனைக்குப் போகும் சிலர் குளித்துக் கொண்டிருப்பார்கள். ஆள் தெரியாவிட்டாலும் பேச்சு கேட்கும். அம்மா ஆற்றுக்குள் இறங்கிக் குளிப்பாள். மார்பளவில் நின்று கொண்டு அவனைப் பார்ப்பாள். தூக்கம் நிறைந்த கண்களோடு சிரிப்பான். அம்மா முகம் தண்ணீருக்குள் மறையும். சில நிமிஷங்களுக்குப் பின் தண்ணீரை விலக்கித் தெரியும் முகம். ஈரம் சொட்ட நடந்து வருவாள்.

“கீசுகீ சென்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?”

ஈரத்தில் நடுங்கின குரல். அவன் மேல் படும் விரல்களில் குளிர்ச்சி இருக்கும். அவன் வீட்டை நெருங்கும்போது வாசலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. நிழலில் யார் கள்ளன், யார் போலீஸ் எனத் தெரியவில்லை. அவன் செருப்புச் சத்தத்தில் திரும்பின குழந்தைகள்.

அவன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். உள்ளே வித்யா படுத்துக் கிடந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்து கொண்டாள். அவன் மேஜை மேல் அந்தப் புத்தகங்களை வைத்துவிட்டு முகம் கழுவப் போனான்.

தண்ணீர் சில்லென்றது. திரும்பும்போது பார்த்தான். குழந்தைகள் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அவளிடம் படத்தைக் காட்டிக்கொண்டிருந்தன. அவனைப் பார்த்ததும் புத்தகத்தோடு ஓடிவந்தன குழந்தைகள்.

“அப்பா, இது மான் படம்தானா?”

தலையாட்டினான். நாலு புத்தகத்தையும் ஒருசேர எடுத்து அவளிடம் காட்டினான்.

“எல்லாம் எங்க அம்மாவோட புத்தகம். பழைய புத்தகக் கடையில் வாங்கினேன்.”

“எப்படி அங்க போச்சு?” என்றாள். குழந்தைகள் திரும்பவும் படம் பார்க்கப் புத்தகத்தை எடுத்துக்கொண்டன. அவன் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைப் பிரித்தான்.

அம்மா அந்தப் புத்தகங்களை எல்லாம் எப்போது படித்தாள் எனத் தெரியவில்லை. அவள் எல்லா நேரமும் அடுப்படிதான். காலையில் சாமி கும்பிட்டு அடுப்பில் பானையைத் தூக்கி வைப்பதில் இருந்து அங்கேயேதான் இருப்பாள்.

வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். அப்பாவுடைய தம்பி, அவர் குடும்பம், பெரிய அக்கா எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தார்கள். இருந்தாலும் பெண்கள் கம்மி. வீடு நிறைய ஆண்கள். அம்மா அவர்களுக்கு மத்தியில், எல்லோருக்கும் அம்மா. ‘கனகவல்லி அத்தை’, ‘மதினி’, ‘பெரிய மதினி’, இப்படி.

கடையை மூடிவிட்டு அவர்கள் இரவில் வரும்வரைக்கும் அம்மா முழித்திருப்பாள். கடைச்சாவிகளை அலமாரியில் வைத்துவிட்டு அவர்கள் வரும்வரை அவளுக்குச் சமையலறையின் வாசல்படி தான் தலைகாணி.

அம்மாரமணிகல்யாணத்தை ஒட்டி ஊருக்குப்போன ஒரு வாரத்தில் வீடு வெரீரென்றிருந்தது. பெரிய தூண்கள் மட்டும் இருந்தன வீட்டில். யாருக்கும் சமைத்த மாதிரியோ சாப்பிட்ட மாதிரியோ தெரியவில்லை. அம்மா திரும்பி வரும்போது இரவானது. வந்ததும் குளித்துவிட்டு அடுப்படிக்குள் போனாள். கொஞ்ச நேரத் துக்குப் பின்பு பொரித்த குழம்பின் வாசம். வெறும் அப்பளமும் குழம்பு சாதமும் மட்டும். எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அம்மா பரிமாறினாள். இலையில் சாதம் விழுந்து ஆவி பறந்தது. இரண்டு வாய் சாப்பிடுவதற்குள் சித்தப்பாவுக்குப் பொரை ஏறி, கண்ணில் நீர் வந்தது. அம்மா தலையில் தட்டினாள். சித்தப்பா சாப்பாட்டை நிறுத்திவிட்டு உடைந்துபோன குரலில் சொன்னார்: “மதினி… உங்க கைக்குக் காப்பு போடணும்.”

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அம்மாதான். சித்திக்கு உடம்புக்கு சொகமில்லாமல் போய்க் கிடந்த நாளில் அம்மாதான் உடனிருந்தாள். அவள் பிள்ளைப் பேறுக்காகப் போனபோது அம்மாதான் எல்லாமும். ஆனாலும் முதலில் பிரிந்துபோனது சித்தப்பாதான் அந்த வீட்டை விட்டு.

அன்றைய இரவில் கடைச் சாவியைக் கொண்டுவந்து வைத்து விட்டு அப்பா மட்டும் சாப்பிட வந்தார். சித்தப்பா வரவில்லை. அப்பா சாப்பிட்டுக்கொண்டே சொன்னார்:

“கடையில கணக்கு முடிச்சோம். அவன் தனியாப் போகப் பிரியப்படுறான். இந்த வியாபாரம் வேணாமாம். டவுனுக்குப் போறானாம்.”

அம்மா பதில் சொல்லவில்லை. அந்த மாதத்துக்குள் கணக்கைப் பிரித்துக் கொடுத்தார்கள். சித்தப்பா வீட்டைக் காலி பண்ணிவிட்டுச் சென்றார். அப்பாவும் கடையை விற்றுவிட்டு வேறு வியாபாரம் செய்யலாம் என்றார்.

அம்மா அன்றிரவு எல்லோருக்கும் பிடித்தமான பொரித்த குழம்பு வைத்திருந்தாள். ஆனால் அன்றைக்கு யாரும் சாப்பிடவே யில்லை. அப்பா இருந்த பணத்தைப் பிரித்து மற்றவர்களுக்குக் கொடுத்து அனுப்பினார். அவர்கள் வீட்டை விட்டுக் காலி பண்ணிப் புறப்பட்டபோது இதுபோன்ற இரவாகத்தான் இருந்தது. ரயிலில் நகரத்துக்கு வந்தார்கள். அம்மா, அவள் புத்தகங்கள், சாமி படங்களைக் கொண்டு வந்த பை ரயிலோடு போனது. பெஞ்சுக்கு அடியில் வைத்து விட்டு இறங்கிப் போய்விட்டார்கள். கொஞ்ச நாள்களுக்குப் பின் அம்மா ஒடுங்கி விட்டாள். கடைசியில் அவளிடம் இருந்து பேச்சே வரவில்லை. ஜடாயுவின் சிறகு முறிந்து கிடக்கும் காட்சி அவனுக்கு ஞாபகம் வரும் அப்போதும்.

அவன் ரொம்ப நேரம் கழித்துத்தான் அன்றைக்குச் சாப்பிடப் போனான். சாப்பிட்டுவிட்டுத் திரும்பும்போது குழந்தைகள் தூங்கியிருந்தன. அவள் பாயை விரித்துப் போட்டிருந்தாள். அதில் சாய்ந்துகொண்டான். அவள் புஸ்தகங்களைப் பிரித்துப் படித்தாள். பின் கேட்டாள்:

“உங்க அம்மா பேரு கனகவல்லியா?”

அவன் தலையாட்டினான். அவள் அந்தப் புத்தகங்களை வைத்து விட்டுச் சுவரோரத்தில் கிடந்த மாத நாவலைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். நாலைந்து பக்கம் படித்து முடித்தபின் கேட்டாள்: “இந்தப் புத்தகம் எவ்வளவு வெலை?”

“இருபது ரூபாய்.”

”நாளைக்குச் செலவுக்கு என்ன செய்றது?”

அவன் பதில் சொல்லவில்லை. அவள் புத்தகத்தில் மூழ்க ஆரம்பித்துவிட்டாள். ரொம்ப நேரம் உட்கார்ந்தே இருந்தான். பின் குழந்தைகளை ஒட்டி, தலைகாணியைப் போட்டுப் படுத்துக் கொண்டான். அவனுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. “நாளைக்கு அவசியம் அந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும்” என்று. அவள் சாய்ந்து படித்துக் கொண்டிருந்தாள் இன்னமும்.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *