அம்மா!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 2,943
அம்மாவின் பதினாறாம் நாள் காரியத்துக்கு முதல் நாள்…
“அம்மாவுக்குப் பிடிச்ச ஸ்வீட்டோ, காரமோ ஏதோ ஒண்ணு செஞ்சு நைவேத்யம் பண்ணணும்கிறது சம்பிரதாயம். அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?”
சாஸ்திரிகளின் குரல் என்னைக் கலைத்தது.
“சுமதிக்குத் தோசைதான் பிடிக்கும், அவளுக்கு நான் வார்த்துப் போட்டுக்கிறேன். நீ இட்லியைத் தின்னுட்டு ஆபீஸுக்குக் கிளம்பு. டப்பாவுல உனக்குப் பிடிச்ச வாழைப்பூ உசிலி செஞ்சு வெச்சிருக்கேன். பசங்களுக்குப் பூரிதான் பிடிக்கும். சுமதி, தோசைக்குத் தொட்டுக்க உனக்குப் பிடிச்ச எள்ளுப் பொடி வெச்சிருக்கேன்…”
என பாசத்தோடும் அக்கறையோடும் எங்கள் எல்லோருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்தவள் என் அம்மா.
அவளுக்கு என்ன பிடிக்கும்? தெரியவில்லை.
அதைத் தெரிந்துகொள்ளக்கூட எப்போதும் நாங்கள் அக்கறைப்பட்டதில்லை என்கிற நிஜம் உறுத்த, அழுகை வெடித்துக்கொண்டு வந்தது!
– ஏப்ரல் 2018