அம்மா வரமாட்டாள்!!!
“உனக்குப் பிடிச்ச நெய் பாயசம் ! இன்னும் ஒரு கரண்டி போட்டுக்கப்பா …..!!”
மயில் இறகால் வருடும் குரல் !!!! இத்தனை வருஷமாய் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் குரல் !!!!!
நிமிர்ந்து பார்த்த கோகுல் அதிர்ச்சியில் உறைந்தான் !
“அம்மா !!! … என்று கூப்பிடுவதற்கு முன்னால் , விரலை வாயில் வைத்து சைகை காட்டினாள் !
அம்மா மாறவேயில்லை !! அதே பொறுமை…… அடக்கம் ..
“அம்மா !!! நீ இங்க ….உன்னை இப்படி …..??
கண்ணிலிருந்து வழியும் கண்ணீர் கதை கதையாய் கூறியது !!!!
***
“அம்மா !! ”
கோகுல் பள்ளி விட்டதும் ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டான் !! ”
“சீக்கிரம் வா !! சாப்பிடலாம் !! உனக்கு பிடிச்ச நெய் பாயசம் !!”
“ஹையா !! அம்மான்னா அம்மாதான் !!”
அன்று கோகுலின் பிறந்த நாள் !! நெய் பாயசம் தவறாமல் இருக்கும் !!! பாயசம் முழுசும் அவனே காலி பண்ணி விடுவான் போல இருந்தது !!!
“அம்மா !! எப்படி இவ்வளவு நல்லா சமைக்கிற !! என் கூட படிக்கிறவுங்க எல்லாம் சொல்றாங்க ,.
‘ எப்படிடா ? உங்கம்மா எது செஞ்சாலுமே இவ்வளவு ருசியா இருக்கு ??”
“அதுவா!! நமக்கு பிடிச்சவங்களுக்கு சமைக்கும் போது நாம அவங்களையே நினச்சிட்டு சமைக்கிறோமா !!! அதனால ருசியாதானே இருக்கும் !!! “
“அப்போ நீ என்ன நினச்சிட்டே சமச்சியா ???. ”
அவனை அப்படியே கட்டிக் கொண்டாள் !!!
***
பாலாமணிக்கு சரியாக எட்டு மாச குழந்தை வயிற்றில்…இருபத்து இரண்டு வயசுதான் !!
ஆபீசுக்கு போன சுகுமாரன் வீட்டுக்குத் திரும்பி வந்தது போஸ்ட்மார்ட்டம் எல்லாம் முடிந்து தான் !! லாரியும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதின.. !!!
பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தப்புறம்தான் மற்ற பசங்களுக்கு அப்பா அம்மா இரண்டு பேர் இருப்பது புரிய வந்தது !!
பாலாமணி எதையோ சொல்லி மழுப்பவில்லை !! ஐந்து வயசு சிறுவனுக்கு புரிகிற மாதிரி சொல்லி விட்டு ,
“கோகுல் ! அப்பா இல்லைன்னு நெனச்சு வருத்தமாதான் இருக்கும் !! ஆனா அதுக்காக எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம் இல்லை !
அப்பா அம்மா இரண்டு பேருமே இல்லாம எத்தனையோ குழந்தைங்க இந்த உலகத்தில வாழ்ந்துட்டு தான் இருக்காங்க !!
நீ அம்மாவோட பத்திரமா இருக்க !! பொறுப்பு கூட !! அவ்வளவு தான் !! உன்னை மாதிரி இருக்கிற மத்த பசங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ இப்போதிலிருந்தே பழகிக்கோ !”
பாலாமணி பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் பாதி வீட்டு வேலையை முடித்து விடுவான் கோகுல் !
அம்மாவும் பையனும் கடைக்குப் போய்விட்டு வரும்போது இரண்டு பேருக்கும் அன்றைக்கு நடந்த சமாச்சாரம் முழுவதும் தெரிந்திருக்கும் !
“அம்மா ! அநேகமாக இந்த வருஷம் பள்ளிக்கூடத்திலேயே சிறந்த மாணவன் விருது எனக்குத்தான்னு பேசிக்கிறாங்க!!!”
***
கோகுல் இப்போது ஒரு பெரிய மருந்துக் கம்பெனியின் நிர்வாக மேலாளர் !!! சனிக்கிழமை எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்து விடுவான் !!
அம்மா கையால் பருப்புருண்டை மோர்க்குழம்பும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டும்…….
“அம்மா ! ப்ளீஸ். ! இனிமே தனியாக இருக்கக் கூடாது !! பெரிய வீடு பாத்திருக்கேன் !! நிம்மதியா என்னோடே வந்திடுங்க !! உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் !!!”
பாலாமணி கோகுலுடன் நிம்மதியாகத் தான் இருந்தாள் !
நந்தினி வரும் வரை………
நந்தினி கோகுல் ஆபீசில் தர நிர்ணய பிரிவின் ஆராய்ச்சியாளராக நுழைந்தவள் இன்றைக்கு அந்த கிளைக்கே மேலதிகாரி….!!
நிறுவனத்தின் வெற்றிக்கு அவளுக்கும் முக்கிய பங்கு உண்டு ! கோகுல் மனதில் இடம் பிடித்து விட்டாள் !
அடிக்கடி வீட்டுக்கு வருவாள் !! கோகுலுடன்தான் நிறைய பேசிக் கொண்டிருப்பாள்!
பாலாமணியுடன் அதிகம் பேசமாட்டாள் !
“எப்படி இருக்கீங்க ஆன்ட்டி. ?? “என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொள்வாள் !!
பாலாமணியும் அதற்குமேல் எதிர் பார்க்கவில்லை !
“அம்மா ! நான் நந்தினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு …..”
பாலாமணி எதிர்பார்த்த ஒன்றுதானே !!”
மகன் எப்போதுமே யோசித்துத்தான் முடிவெடுப்பான் என்ற நம்பிக்கை !!
கோகுல் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நந்தினியின் கேட்டுக்கொண்டான் !
“அம்மா கடைசி வரை நம்மளோட தான் இருப்பாங்க ! அதுக்கு சம்மதம்னா எனக்கு வேறு எந்த வேண்டுகோளும் இல்லை ! “
ஆரம்பம் முதலே நந்தினி கொஞ்சம் தள்ளியே இருந்தாள்!
நிறுவனத்தின் சட்டப்படி இனிமேல் சேர்ந்து வேலை பார்க்க முடியாத நிலையில் நந்தினி சொந்தமாய் தரநிர்ணய பரிசோதனை நிலையம் தொடங்க தீர்மானித்தாள் !
இரண்டு பேரும் அதில் ரொம்பவே மும்மரமாக இருந்ததால் வீட்டு பொறுப்பு முழுவதையும் பாலாமணியே கொண்டாள் !
இருவருக்கும் பரிமாறிவிட்டுதான் சாப்பிடுவாள் !!
“அம்மா ! ரவா தோசையும் வெங்காய சட்னியும் ‘ just out of the world ‘ இல்ல நந்தினி ???”
“அம்மா உன்ன மாதிரி நெய் பாயசம் பண்ண இனிமேல் ஒருத்தர் பொறக்கணும் !
நந்தினி ….!!!இன்னும் ஒரு டம்ளர் எடுத்துக்கோ”
நந்தினி வாயே திறக்க மாட்டாள் !
சாப்பிடும் நேரம் தவிர கோகுலுடன் முன்பு மாதிரி மனம் விட்டு பேச முடியாமல் போனது முதலில் சிறிது மன வருத்தம்தான்
ஆனாலும் இது ஆரம்பத்தில் எல்லாம் அம்மாக்களுக்குமே ஏற்படும் கசப்பான அனுபவம் என்று மனதை தேற்றிக்கொள்வாள்!!
நந்தினி கெட்டிக்காரி ! வார்த்தைகளை வீணாக்க மாட்டாள் ! அடுத்த காய் நகர்த்துவது பற்றி பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்!
“ஆன்ட்டி…!! இந்த வயசில எதுக்கு கஷ்டப்பட்டு பரிமாறிட்டு…… நீங்களும் சேர்ந்து உட்காருங்க ….”
“ஆமாம்மா ! நந்தினி சொல்றது சரிதானே ! கூட உக்காருங்கம்மா!!”
பேச்சை வேறு பக்கம் திருப்பி கோகுல் அம்மாவிடம் அதிகம் பேச விடாமல் பார்த்துக் கொண்டாள் !
கொஞ்ச நாளில் வேண்டுமென்றே சாப்பிட வருவதற்கு நேரமாக்கினாள்.
“ஆன்ட்டி…! எங்களுக்காக வெயிட் பண்ணாதிங்க ! நேரத்தில சாப்பிடணும் ! நாங்க பாத்துக்கறோம்! நீங்க சாப்பிட்டு தூங்கப் போங்க !!”
நிறைய நாள் சாப்பிடப் பிடிக்காமல் பாலை மட்டும் குடித்து விட்டு தூங்கப் போவாள் !!
காலையில் ,
‘ Breakfast meeting ! வெளியே போறோம் ……!!!!
‘ கோகுல்..என்ன கொஞ்சம் பாங்கில இறக்கி விட்டுட்டு போறியா..???…’
என்று ஏதோ சொல்லி விட்டு கோகுலுடன் அவசரமாய் கிளம்பி விடுவாள் நந்தினி !!
இரவில் சாப்பிடும்போது தான் அவனுடன் பேச முடியும் ! இப்போது அதுவும் இல்லாமல் போகவே சனி , ஞாயிறுக்காக ஏங்க ஆரம்பித்தாள் பாலாமணி !!
ஒருநாள் மதியம் மூன்று மணி இருக்கும் ! அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் பாலாமணி !
ஐம்பது வயது இருக்கும் ! ஒரு அம்மாள் கையில் பையுடன் நின்றிருந்தாள் !
“வணக்கம் அம்மா! எம்பேரு கோமதி !! இங்க வீட்டோட சமையலுக்கு ஒரு ஆள் வேணும்னு…….”
“சமையலுக்கா ??? இங்கயா ??? இருக்காதே …. விலாசத்தை நல்லா பாருங்க !!!!….”
“இது மேடம் நந்தினி வீடு தானே ? நீங்கதானே பாலாமணி !!!……”
“ஆமாம்மா !! ….’
“நந்தினி மேடம் தான் வரச் சொன்னாங்க ! அவங்க வர வரைக்கும் வெயிட் பண்ண சொன்னாங்க !!!….”
“அப்படியா ??? உக்காருங்கம்மா “
பாலாமணிக்கு முதன் முறையாக நந்தினி மேல் கோபம் வந்தது !
தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே……
“ஏதாவது சாப்பிட கொண்டு வரவா ??”
“ஒரு வாய் காப்பி இருந்தா நல்லாயிருக்கும் ! சிரமமில்லைனா ……பஸ் ஸ்டாப்பிலிருந்து ரொம்ப நடக்க வேண்டியிருந்தது !!”
சூடான காப்பியும் ஒரு தட்டில் நேற்று பண்ணின முறுக்கையும் கொண்டு வைத்தாள் !!!
பாலாமணிக்கு மனசு பாரமாயிருந்தது !
“வெயிட் பண்ணுங்கம்மா !!!….”என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள் !!
ஆறு மணியாகிவிட்டது நந்தினி வருவதற்கு !!
நுழைந்ததுமே கோமதியைப் பார்த்தாள்!
“நீங்க ……??”
“போன வாரம் போனில பேசினீங்களே!!! குக் !!! .. கோமதி ….!!!”
“ஓ ! வாங்கம்மா !! வீடு கண்டுபிடிக்க கஷ்டமில்லையே ….”
பாலாமணிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது !! இந்த ஐந்து வருஷத்தில் ஒரு நாளாவது அம்மா என்று தன்னை கூப்பிட மாட்டாளா என்று எத்தனை தடவை ஏங்கியிருப்பாள்!!
போனவாரம் தீர்மானம் செய்தவள் தன்னிடம் ஏன் சொல்லவில்லை ?? எதற்காக இப்போது சமையலுக்கு ஆள் ??
கோகுலுக்கு இந்த விஷயம் தெரியுமா ??
விடையில்லா எத்தனையோ கேள்விகளுடன் இதுவும் சேர்ந்து கொண்டது !!
நந்தினி கோமதியிடம் என்னென்னவோ குறிப்பு கொடுத்துக் கொண்டிருந்தாள் !!
“ஆன்ட்டி !! இவங்க கோமதி ! இனிமே நீங்க கிச்சன் பக்கம் போகவே வேண்டாம் !! மெனு கூட நான் தயார் பண்ணி குடுத்து விட்டேன் !
நாம ருசி பாக்கணும்னு கூட அவசியம் இல்லை ! இவங்க சமையல் பத்தி மூணு பேர் சர்ட்டிபிகேட் குடுத்திருக்காங்க !
இரண்டு நாளும் கோமதி சமையல் !…. குற்றம் சொல்ல முடியாது !!!…..
ஒரு வேலையுமில்லாமல் சும்மா இருந்து பழக்கமில்லை !! எப்பவோ அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த மேசை விரிப்பை எடுத்து வைத்துக் கொண்டு எம்ப்ராய்டரி பண்ண ஆரம்பித்தாள் !!
“அம்மா !! …..”
குரல் கேட்டு நிமிர்ந்தாள் !!!
கோகுலும் நந்தினியும்!!
“அம்மா ! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!! நீங்க பாட்டியாகப் போறீங்க !!
நந்தினி போன வாரம் தான் கைனகாலஜிஸ்ட் கிட்ட கன்ஃபர்ம் பண்ணிட்டு வந்தா !
“ஆமாம் அத்தை !! எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க ”
பாலாமணி இருவரையும் அணைத்துக் கொண்டாள் !!
“ரொம்ப சந்தோஷம்மா ..!!”
அவளுக்கு சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது !!
அன்று கோகுலின் பிறந்த நாள் ! கோமதி வந்தப்புறம் முதல் முறையாக சமையலறைக்குள் நுழைகிறாள் பாலாமணி !!
“கோமதி ! இன்னிக்கு எம் பையனோட பிறந்த நாள் !
என்னேட நெய் பாயசம்ன்னா அவனுக்கு உயிர் ! அத மட்டும் நான் பண்ணிடறேன் ! பால் இருக்கா …வாங்கணுமா .??
“நந்தினி அம்மா நேத்தே சொல்லிட்டாங்க ! காலைல எழுந்து முதல் வேலையா அதை செஞ்சு வச்சிட்டேன் !
சாமிக்கு நைவைத்யம் எடுத்து வச்சிட்டு டேஸ்ட் பாக்கிறீங்களா ? உங்க பாயசம் மாதிரி வராது !!!
அதற்குமேல் கிச்சனில் நிற்க முடியவில்லை !
நேரே அறைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு அழுதாள் !!
அதுதான் முதலும் கடைசியுமாய் பாலாமணி அழுதது ! கோகுல் தன்னை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டமாதிரி ஒரு தோணல் !!
அறையை விட்டு வெளியே வரவேயில்லை !!
“அம்மா ! …”
கோகுல் தான் கதவைத் தட்டினான் !
“அம்மா!! வாங்க சாப்பிடலாம்… உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கோம்….
பிறந்த நாளன்னிக்கு உங்களோட சேந்து சாப்பிட வேண்டாமா !’
ரொம்ப நாளைக்கப்புறம் மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தார்கள் !!
“கோகுல் ! இந்தா… உனக்கு பிடிச்ச பால் பாயத்தோட ஆரம்பி..!!!! ! ”
ஒரு கப்பில் பாயசம் விட்டு கொடுத்தாள் நந்தினி !!!
“அம்மா ! உன் கையால் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு ! நெய் பாயசம் தானே !! ”
“அத அத்த பண்ணல! ! கோமதி அம்மாவே பண்ணிட்டாங்க …..”
வாயருகே கொண்டு போன பாயசத்தை குடிக்கவில்லை !!
முதன் முறையாக கோகுல் கோபப்பட்டு அப்போதுதான் பார்த்தாள் .
“என்ன ?? கோமதி அம்மாவா ??…
அம்மா உன் கையால செஞ்ச பாயசத்துக்காக எப்படி ஏங்கிட்டிருக்கேன் தெரியுமா ??
ஏம்மா ?? மறந்துட்டிங்களா ??? ”
எதை மறந்தேன் ?? உன்னையா ? உன் பிறந்த நாளையா?? அல்லது நெய் பாயசம் உனக்கு பிடிக்கும் என்பதையா??
பாலாமணி வாய்வரை வந்த வார்த்தைகளை முழுங்கும் கலையில் தேர்ச்சி பெற்றவளாகிவிட்டாள் !!
“ஏன் கோகுல் ! கோமதி அம்மா நல்லாத்தானே சமைக்கிறாங்க !! குடிச்சு பாத்தாத்தானே தெரியும் !! நீ ஆனாலும் ஒருதலை பட்சமா இருக்க… ஒரு சின்ன விஷயத்த பெரிசு பண்ணாத…இது ஒரு அற்ப விஷயம்…!! பிறந்த நாளும் அதுவுமா உன் மூட ஏன் கெடுத்துக்கற …….!!”
“முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்கோ !! உனக்கு வேணா இது அற்ப விஷயமாய்த் தோணலாம் !
ஆனால் என்னைப் பொறுத்தவரை இது வெறும் பாயசம் இல்லை ! எங்க அம்மாவோட அன்பு முழுசும் கொட்டி கிடக்கும் அமுதம் !!
‘ அற்புதம் ‘ னு ஒரு வார்த்தையில சொல்ற விஷயமில்லை !
இரண்டாவது என் மூட நீதான் ஸ்பாயில் பண்ணிட்ட !!
இந்த பாயசத்தை அம்மா பண்ணியிருந்தாங்கன்னா நான் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேன் !!”
கோகுல் அன்றைக்கு பாயசம் குடிக்காமலேயே எழுந்து விட்டான் !!
கல்யாணம் ஆகி இத்தனை நாளில் இரண்டு பேருக்கும் மனவருத்தம் ஏற்பட தான் காரணமாகிவிட்டதை நினைத்து பாலாமணி நொறுங்கிப் போனாள் !!
அதுவும் அவன் பிறந்த நாளும் அதுவுமாய் !!
தீடீரென்று குருவாயூரப்பன் கண் முன் வந்தான் !
குழந்தை கோகுலுக்கு கோவிலில் சாதம் ஊட்டியது இன்னும் கண்ணுக்குள் அப்படியே இருந்தது !!
******************************
இப்போதெல்லாம் நந்தினி சுவாதீனமாய் கிச்சனில் நுழைந்து
“மாமி ! இன்னிக்கு மாங்கா பச்சடி பண்ணிடுங்க !! ”
“சாம்பார் காரம் தூக்கலாக இருக்கட்டும் ”
“போன வாரம் செஞ்சீங்களே ! வெந்திய குழம்பு ! ருசி இன்னும் நாக்கிலேயே இருக்கு !
கோகுலுக்கும் ரொம்பவே பிடிச்சிருந்தது ! அதையும் செய்திடுங்க !!”
இதுபோல் கோமதியிடம் சொல்லி விட்டு பாலாமணியைத் திரும்பி கூட பார்க்காமல் போவது ரொம்ப சகஜமாகிப் போனது !!
பாலாமணிக்கு குருவாயூரப்பனை உடனே பார்க்க வேண்டும் போல ஆசை வந்து விட்டது !!
“அம்மா …இப்போ என்ன தீடீர்னு குருவாயூர் …..? “
“இப்போ இல்லைப்பா !! ரொம்ப நாள் ஆசை ! வீட்ல ஒரு குட்டிப் பாப்பா வருதுன்னவுடனே அந்த குட்டிக் கிருஷ்ணன் ஞாபகம் வந்துட்டது!!!”
“பத்து நாள் பொறுத்துக்கோம்மா !ஆஃபீஸ்ல லீவு போட்டுட்டு நானே உன்னை கூட்டிட்டு போறேன் !! தனியால்லாம் போகவேண்டாம்!!”
“குருவாயூருக்கு துணையெல்லாம் எதுக்குப்பா! இங்க ஏத்திவிட்டா சுசீலா வந்து கூட்டிப்பா … நாளைக்கு கிளம்பறேன் ! ஒரு வாரத்தில வந்திடுவேன்!! “
இப்போதேல்லாம் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை குருவாயூருக்கு போவது வாடிக்கையானது !!
மனசு லேசாகிக்கொண்டே வருவது கண்கூடாக தெரிந்தது !!
*******************************
நந்தினிக்கு ஏழாவது மாதம் ! இன்னும் ஒரு மாதத்தில் அம்மா வீட்டுக்குப் போய் விடுவாள் !
முடிந்தால் கோமதிக்கும் ஒரு மாசம் விடுப்பு கொடுத்து விட்டு கோகுலுக்கு மனதாற சமைத்துப் போட வேண்டும் !! நினைப்பே இனித்தது !!
தோட்டத்து செடிகளுக்கு தண்ணி விட்டுக் கொண்டிருந்தாள் பாலாமணி !
“அத்தே.. ! அடுத்த மாசம் அப்பா அம்மா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறதா இருக்காங்க ! எப்படியும் நாலு மாசம் அங்க இருக்க வேண்டி வரும் !
கோகுலுக்கும் ஜெர்மனில மூணு மாச ப்ராஜெக்ட் இருக்கு ! நான் போனதுமே அவனும் கிளம்பணும் !
கோமதி உங்களுக்கு துணையாக இருப்பா ! ஆனா அவளுக்கும் ஒரு மாசம் லீவு வேணுமாம் !! ………..
அதான் என்ன பண்றதுன்னு …..
ஒண்ணு பண்ணுங்க ! நீங்களும் அடிக்கடி குருவாயூர் போறீங்க ! உங்க ஃப்ரெண்ட் சுசீலா வீட்டில ஒரு மாசம் தங்கிடுங்க ! மாமியும் ஊருக்கு போய்ட்டு வந்திடட்டும் !!…..”
எல்லா கேள்விகளுக்கும் ஒட்டுமொத்தமாக விடை கிடைத்து விட்டது! பாலாமணி ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டாள் …!!!
*******************************
பாலாமணி வீட்டைவிட்டு வந்து சரியாக ஆறு மாசம் ஆகியிருந்தது !
நந்தினியையும் கோகுலையும் நிஜமான சந்தோஷத்துடன் தான் வழி அனுப்பி வைத்தாள் !,பாஸ்புக் , செக்புக் , மற்றும் தனது முக்கியமான உடைமைகள் எல்லாமே எடுத்துக் கொண்டாள் !
பணத்திற்கு ஒரு குறையும் இல்லை !! இருபது வயதில் வயிற்றில் எட்டுமாதக் குழந்தையுடன் வாழ்க்கையில் தன்னந்தனியே போராடத்துணிந்தவளுக்கு தன்னம்பிக்கைக்கும் குறைவேயில்லை!
“மாமி ! நா கிளம்பறேன் ! நீங்களும் ஊருக்கு போய்ட்டு வாங்க !
கோகுல் , நந்தினி அப்புறம் குழந்தையை நல்லபடியாக பாத்துக்கோங்க ! சுசீலா அட்ரஸ் இதில இருக்கு ! ஏதாவது முக்கிய செய்தியாயிருந்தாமட்டும் கூப்பிடுங்க !!!”
“என்னம்மா ! நீங்கதான் குழந்தை பிறக்கும் போது இங்கு இருப்பீங்களே ! நீங்க பாத்துக்க மாட்டீங்களா ??”
பாலாமணி ஒன்றுமே பேசவில்லை !!!
ஒரு வாரம் குருவாயூரப்பனுடன் இருந்தாள் ! சுசீலாவுக்கு எல்லாமே தெரியும் !
“சுசீலா ! நா கொஞ்ச நாள் ரிஷிகேசம் ஆசிரமத்தில் தங்கி இருக்கலாம்னு யோசிக்கிறேன் !
ஒரு மாசத்தில திரும்பாட்டா நிச்சயம் என் பையன் ரொம்ப கவலப்படுவான் ! உன்னத்தான் உடனே கான்ட்டாக்ட் பண்ணுவான் !
நான் வர கொஞ்ச நாளாகும்னு மட்டும் சொல்லு ! தயவுசெய்து எந்த காரணத்துக்காகவும் நா இருக்கும் இடத்தை மட்டும் சொல்லிடாத !!
அவள் நினைத்த மாதிரியே சரியாக ஒரு மாதத்தில் கோகுல் சுசீலாவுக்கு ஃபோன் பண்ணினான் !!
“அம்மா எப்படி இருக்காங்க ! பேச முடியுமா ? எப்போ வராங்க ?? “
பாலாமணி சொன்னதை சுசீலா மறக்கவில்லை !! பத்து நாளிலேயே மறுபடி phone !!
“ஆன்ட்டி ! அம்மாவை கூப்பிட முடியுமா ! ரொம்ப ரொம்ப சந்தோஷ வார்த்தை…!
அம்மாவுக்கு குட்டி கிருஷ்ணனே பேரனா பொறந்திருக்கான் ! “
“அம்மா இன்னும் வரலியேப்பா ”
“ஆன்ட்டி ! அம்மா இருக்கிற இடம் உங்களுக்கு நல்லா தெரியும் !! தயவு செய்து சொல்லுங்க ஆன்ட்டி..!”
இரண்டு நாளில் கோகுல் நேராக சுசீலா வீட்டுக்கு வந்து விட்டான் !
“ஆன்ட்டி. !! அம்மா ரொம்பவே காயப்பட்டிருக்கணும்! இந்த மாதிரி ஒரு நாளும் செய்ய மாட்டாங்க !
அவங்களப் பாத்து வளந்த பையன் நான் ! நல்லதோ , கெட்டதோ எனக்கும் சாப்பாட்டோட சேத்து பொறுமையை ஊட்டி விட்டுட்டாங்க !
அவங்க கண்ணிலேந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்து நான் பார்த்ததில்லை ! அதுக்கு நான் காரணமாயிருந்தா நாங்க இரண்டுபேரும் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாம போயிடும் !!”
அவனுக்கு புரிந்து விட்டது ! அம்மா இனிமேல் வரமாட்டாள் !!!
பாலாமணி குருவாயூர் வந்துவிட்டாள் ! அவளுக்குத் தெரியும் இனிமேல் கொஞ்ச நாளைக்கு அவளை யாரும் தேட மாட்டார்கள் !
கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் மடத்தில் பக்தர்கள் சாப்பிட வருவார்கள் ! அவர்களுக்கு சமைத்து பரிமாறுவதில் மனசு நிறைவாய் இருந்தது !
சோறுண்ணலுக்கு வரும் குழந்தைகள் எல்லோருமே அவளுடைய பேரன் பேத்திகள் !! அப்புறமென்ன ??
ஒரு வருஷம் ஓடி விட்டது!
“பாலாம்மா !! சாப்பாடெல்லாம் தயார் தானே ! இப்போ வந்திடுவாங்க எல்லோரும் !
இன்னிக்கு உங்க நெய் பாயசம் வேறே !! கூட்டம் நிறையவே இருக்கப்போறது! “
பந்தி ஆரம்பித்துவிட்டது ! இலைபோட்டு பரிமாறத் தொடங்கியாச்சு !
பாலா தூரத்திலிருந்தே அவர்களைப் பார்த்து விட்டாள் !!
கோகுலும் நந்தினியும் , இடுப்பில் குட்டிப்பாப்பாவும் !
அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடி விடலாமா ????
ஒரு வினாடி தான் ! சமாளித்துக் கொண்டு விட்டாள் !!
கடைசி பந்தியில் குழந்தையுடன் இரண்டு பேரும் உட்கார்ந்தார்கள் !
குழந்தை குட்டி கோகுலேதான் ! அள்ளி எடுத்து முத்தம் கொடுக்க பரபரத்த கைகளில் பாயசத்தை எடுத்துக் கொண்டாள் !
நந்தினியும் கோகுலும் குழந்தைக்கு சாதமும் ஊட்டுவதில் கவனமாயிருந்ததில் பாலாவை கவனிக்கவில்லை !
***
“உனக்குப் பிடித்த நெய் பாயசம் !! இன்னும் கொஞ்சம் போட்டுக்கப்பா”…..!
மயில் இறகால் வருடும் குரல் !!!! இத்தனை வருஷமாய் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் குரல் !!!!!
நிமிர்ந்து பார்த்த கோகுல் அதிர்ச்சியில் உறைந்தான் !
“அம்மா !!! … என்று கூப்பிடு முன் விரலை வாயில் வைத்து சைகை காட்டினாள் !
நந்தினியின் முகம் பேயறைந்ததுபோல மாறியது !
“குட்டிக் கிருஷ்ணன் சாப்பிட அடம் பண்றானா ?? இதோ ஒரு நிமிஷம் !!!!”
பாலாமணி ஓடிப் போய் ஒரு கிண்ணத்தில் சுடச்சுட சாதம் போட்டு , நெய் விட்டு பருப்பைப் போட்டு நன்றாக பிசைந்து கொண்டு வந்தாள் ! நந்தினி கையில் கொடுத்து ,
“ஊட்டும்மா …….”என்றாள் !
“நீங்களே ஊட்டுங்கம்மா ….”
கோகுல் சொன்னவுடன் ஒரு வாய் ஊட்டப்போனாள் …..!!!
குழந்தை தலையை அப்படியும் இப்படியும் திருப்பி அவளைப் பார்த்து சிரித்தது !!
“இதோ !! பாட்டி பாரு !! ஆ காட்டு…… ஒரு வாய் !!!”
குழந்தை அழகாக வாயைத் திறந்தது ! பாலா கண்ணுக்கு ஈரேழு லோகங்களும் தெரிந்தது !
மளமளவென்று குழந்தை கிண்ணம் முழுதும் காலி பண்ணி விட்டது !!
“இருடா கண்ணா !! பாயசம் கொண்டு வரேன் !! “
இரண்டு வாய் பாயசமும் சாப்பிட்ட குழந்தை “பாட்டி ….!”என்றது !!
இந்த வார்த்தையைக் கேட்க தவமாய் தவமிருந்த பாலா குழந்தையை வாரி எடுத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள் !
கோகுலும் நந்தினியும் கைகழுவி வர கிளம்பினார்கள் !!
“கோகுல் !! ஆறு மாசமா சாப்பிட அடம்பிடிச்சானே !! இப்போ பாரு !! நான் ஒண்ணு கேக்கட்டா ?? பேசாம அத்தய நம்மளோட வந்துடுங்கன்னு ……”
கோகுல் அவளை நிமிர்ந்து பார்த்தான் !
“இன்னொரு தடவை அம்மாவை ஏமாத்த வேண்டாம் நந்தினி !! என்னால் அதை தாங்கிக்க முடியாது !! அம்மா வரமாட்டாள் !!!!”