அம்மா அம்மாதான்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 14,285
தன்னிடமிருந்த மாற்றுச் சாவியால் கேட்டைத் திறந்த சண்முகம், ஸ்கூட்டரை உள்ளே தள்ளவும், வீட்டுக்குள் யாரோ விளக்குப் போடவும் சரியாக இருந்தது. அடுத்த நொடியே வீடு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். ஸ்கூட்டரைத் தள்ளுவதை நிறுத்திவிட்டு யார் விழித்துக் கொண்டிருப்பது என நோட்டமிட, கதவைத் திறந்து கொண்டு அபிராமி வெளிப்பட்டாள். நல்லவேளை பிள்ளைகள் விழித்திருக்கவில்லை.
ஆடிட் காரணமாக நேற்றும் இப்படி பதினொரு மணிக்கு வீட்டுக்கு வந்தபோது தூங்கிக் கொண்டிருக்க வேண்டிய பிள்ளைகள் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பதையும் அவர்கள் அருகில் அபிராமியும், அம்மாவும் இருப்பதைப் பார்த்தவுடன் பதறிப் போனான்.
“”என்னாச்சு?”
ஊர் அடங்கிவிட்டதையும் மறந்து அவன் பெருங்குரலில் கேட்க, பிள்ளைகள் அவனருகில் ஓடி வந்தனர்.
“”நம்ம சீசரைக் காணோம்பா ”
சீசர், வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ஆண் நாய். விஷயத்தின் கனபரிமாணத்தைப் புரிந்து கொண்டவன் எரிச்சலுற்றான்.
“”பைசா பெறாத விஷயத்துக்காகவா இப்படி கண் விழிச்சு உட்கார்ந்திருக்கிறீங்க?”
குடும்பத்தினரின் தேவைகளைத் தீர்த்து வைக்க பொருளாதாரத்தை ஈட்டித் தரும் குடும்பத் தலைவனுக்கு அவன் பிரச்னைக்கு முன் மற்றவர்கள் பிரச்னை நேரத்துக்கேற்பவே புரிந்து கொள்ளப்படுகின்றது.
அம்மா எழுந்து கொல்லைப்புறம் போக, மனைவி புரிந்து கொண்டவளாய் பதில் கூறினாள்.
“”நான் தூங்கச் சொல்லிட்டேன். அதுங்கதான் கேட்க மாட்டேங்குது”
அவனுக்குப் புரிந்து போயிற்று.
“”சரி போய்ப் படுங்க. கார்த்தாலே வந்துடும்”
“”அப்பா நான் ஸ்கூல் போறப்பவே போயிருக்கும் போல. எங்கப்பா போயிருக்கும்? ”
மகளின் கெஞ்சலான கேள்வி அவனைக் குழையச் செய்தது.
“”இங்கேதான் எங்காவது போயிருக்கும்… வந்துடும்மா”
“”அதுக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் இருக்காங்களாப்பா?”
செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கும் மகன் கேட்க எட்டு வயது மகள் சிரித்தாள்.
“”நாய்க்கு ஏதுடா ரிலேட்டிவ்ஸ்?”
இதுதான் அவர்களைத் திசை திருப்ப சமயம் என்று அவர்களைச் சமாதானப்படுத்தினான்.
“”ஏன் இல்லே… அது அதனோட அம்மாவைப் பார்க்கப் போயிருக்கும்”
“”ஏம்பா மதியானம் சாப்பிட்டிருக்குமா?”
சற்றே குரல் கம்ம மகள் கேட்க, அவன் நெகிழ்ந்தான்.
“”சாப்பிட்டிருக்கும். காலைல வந்திடும். சரி போய்ப் படுங்க. நாளைக்கு ஸ்கூல் போகணும்”
அவர்கள் அரைகுறை மனதுடன் தூங்கப் போனார்கள். அடுத்து அபிராமியைப் பார்த்தான்.
“”எங்கே போச்சு? எப்போ போச்சு?”
“”தெரியலே… காலையிலேயே இல்லே”
நேற்றைய நினைவுகளைக் கலைத்துவிட்டு ஸ்கூட்டரை தள்ளி அதற்கான இடத்தில் நிறுத்திப் பூட்டினான். வெளியே வந்த அபிராமி ஸ்கூட்டரிலிருந்து டிபன் கேரியரை எடுத்துக் கொண்டாள்.
“”மதியச் சாப்பாடு பிடித்திருந்ததா? மீதி வெக்காம சாப்பிட்டீங்களா?”
“”நல்லாயிருந்தது”
“”இப்போ டிபன் சாப்பிட்டிங்களா?”
“”முடிஞ்சுடுச்சு. நீ சாப்பிட்டியா?”
“”உம். சாப்பிட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு வேலை இருக்கும்?”
“”அநேகமா நாளைக்கு முடிஞ்சுடும்”
“”பால் சாப்பிடுறீங்களா?”
“”வேண்டாம். நீ போய்த் தூங்கு. யாராவது வந்தாங்களா? ஏதாவது செய்தி உண்டா?”
“”எதுவுமில்லே”
“”நாய் வந்துடுச்சா?”
“”இல்லே. அதான் பார்த்துக்கிட்டிருந்தேன்”
“”உனக்கும் நாய் பைத்தியம் பிடிச்சுடுச்சு”
“”பின்னே இருக்காதா? எப்படிங்க மறக்க முடியும்?”
“”பிள்ளைங்க என்ன சொல்றாங்க. நாயை மறந்துட்டாங்களா?”
“”நீங்கதான் மறக்கலாம்”
“”அப்படின்னா?”
“”உங்க பையன் நாய் வந்தாத்தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சு அடி வாங்கிகிட்டுப் படுத்திட்டான்”
“”அம்மாவா? இல்ல நீயா?”
அவள் அமைதி, அவனுக்குப் புரிய வைக்க, கோபமானான். பிள்ளை பட்டினியாய்ப் படுத்துவிட்டதைவிட அடி வாங்கிக் கொண்டு படுத்த செய்தி அவனை ஆத்திரமுறச் செய்தது. சதா சர்வநேரமும் ஒரு குச்சியை வைத்து விரட்டிக் கொண்டிருக்கும் அம்மாவின் மீது திரும்பியது. இந்த நாயைக் குட்டியாக தூக்கி வந்ததே அவள்தான். நாய் வளர்க்க வேண்டாம் என அவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் ஏற்கவில்லை.
“”நாம அதுக்காகத் தனியாகவா சமைக்கப் போறோம். மிச்சம் மீந்ததைப் போடப் போறோம். தின்னுட்டு வீட்டுக்குக் காவலா இருக்கும்டா. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற மனுஷன் மாதிரி இல்லேடா நாய். அது நன்றியுள்ள பிராணி. தனி வீட்டுக்கு அது துணையா இருக்குண்டா”
எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அதை வீட்டுக்குள்ளேயே இருத்திக் கொண்டாள். பிள்ளைகளுக்கும் அது பிடித்துப் போய்விட குட்டியாய் இருந்த காலத்தில் இரவு பகல் பாராமல் “வாள் வாள்’ எனக் கத்தியதைக் கூட பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அது குட்டியாய் இருந்த காலத்தில் பால் ஊட்டி பின் சோறு போட்டு வளர்த்த அம்மா வளர்ந்த பின்னர் அதை விரட்ட அது அவளை விட்டு விலகி பிள்ளைகளிடம் ஒட்டிக் கொண்டது. படுத்திருக்கும்போது மகன் அதன் மேல் விழுந்து புரள்வான். எதுவும் செய்யாது. ஆனால் மகளை அடிக்க வந்த மூன்றாவது தெரு பெண்ணை விரட்டி பயத்தை உண்டாக்கியது. இதன் பிறகுதான் நாயின் மீது அவனுக்குப் பரிவு ஏற்பட்டது. சண்டைக்கு வந்தவர்களை எதிர்த்துப் பேசினான். இரவு சாப்பிட்டு முடித்தவுடன் அதற்கு ஓர் உருண்டை வைக்க வாலை ஆட்டிக் கொண்டே தின்றது. பின்னர் அதைத் தினசரி வழக்கமாக்கினான்.
நாயைப் பற்றிய நினைவலைகளை ஒதுக்கி ஓரம் கட்டியவன் மீண்டும் மனைவியைப் பார்த்தான்.
“”கொஞ்சம் ஊட்டிவிடறதுதானே?”
“”எவ்வளவோ கெஞ்சினேன். பிடிவாதமா மாட்டேனுட்டான்”
குளித்து முடித்துச் சற்று நேரம் காற்றாடி வருவதற்குள் அபிராமி தூங்கிப் போயிருந்தாள்.
அவனுக்குக் கிராமத்து வாழ்க்கை நினைவுக்கு வந்தது. அங்கும் அப்பாவின் வார்த்தையை மீறி அம்மா நாய் வளர்த்தாள். ஒன்று போன பின்பு மற்றொன்று என ஏழெட்டு நாய்கள் வரை வளர்த்தார்கள். அந்த நாய்கள் இறந்த பின்னர் முருங்கை மரத்தடியில் புதைக்கப்பட்டன. அப்பாதான் அதைச் செய்வார். அந்த மரத்தின் கீழ் மட்டும் புதைக்கக் காரணமென்ன? அப்பாவிடம் அவன் கேட்க நிறைய காய் காய்க்கும் என்று பதில் சொன்னார். ஏனோ அவனுக்கு அவரின் பதில் திருப்தியைத் தரவில்லை.
திடீரென வாசலில் வெளிச்சம் தெரிய நினைவுகளைக் கலைத்துவிட்டு எழுந்தான். ஜன்னல் வழியாகப் பார்க்க வாசல் நடையில் அம்மா உலாவுவது தெரிந்தது. அடிக்க வைத்திருந்த கோபம் பீறிட்டு எழ கதவைத் திறந்து அம்மாவின் முன் எதிர்ப்பட்டான்.
அவன் வருகையை எதிர்பார்த்திராத அம்மா நடப்பதை நிறுத்தி நெளிந்தாள். சூழ்நிலையைச் சமாளிக்கும் முகமாக முந்திக் கொண்டு பேச்சுக் கொடுத்தான்.
“”தூக்கம் வரலியாப்பா?”
அவன் கோபமானான்.
“”நீ ஏன் பன்னிரண்டு மணிக்குத் தூங்காம இப்படி பண்றே? உடம்பு என்னத்துக்கு ஆகிறது? ”
“”தூக்கம் வரலே. இந்த எழவெடுத்த நாய்”
சொல்ல வந்ததை பாதியிலேயே மென்றாள்.
“”ஏன் நிறுத்திட்டே… நீ சொல்லலேன்னா எனக்குத் தெரியாம போய்டுமா? உன்கிட்ட அடி வாங்க முடியாமத்தான் அது வீட்டை விட்டு ஓடிடிடுச்சு. அடிச்சுத் தொரத்திட்டு அப்புறம் ஏன் எதிர்பார்க்கறே?”
அவன் பேச்சில் அனல் தெரிந்ததை அம்மா உணர்ந்திருக்க வேண்டும். பதில் பேசாதிருந்தாள்.
“”இதுக்காகத்தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். நீ கேக்கலே. இப்போ பாரு… உன் பேரன் சாப்பிடாமப் படுத்திட்டான். நீயும் உன் பங்குக்கு கண்விழிச்சு உடம்பை கெடுத்துக்காதே. போ, போய் படு. இது போனா இன்னொன்னு.”
அம்மா எதுவும் பேசாமல் லைட்டை நிறுத்திவிட்டு உள்ளே போக, அவன் கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு படுக்கைக்கு வந்தான். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அபிராமி விழித்திருந்தாள்.
“”என்னங்க சத்தம். நாய் வந்துடுச்சா!”
அவன் கோபம் உச்சத்திற்கு ஏறியது.
“”ஏன் இப்படி எல்லோரும் நாய் நாய்னு டென்ஷன் பண்றீங்க. ஆபீஸ்ல ஆடிட் டென்ஷன். வீட்டுக்கு வந்தா நாய் டென்ஷன், மனுஷன்னு நினைச்சியா இல்லே நாயின்னு நினைச்சியா?”
அவன் கோபத்தைப் புரிந்துகொண்ட அவள், அமைதியானாள்.
“”அம்மாவைச் சத்தம் போட்டீங்களா?”
“”பின்னே”
“”எம்புள்ளை சாப்பிடாம படுத்திடுச்சு” எல்லாம் உன்னாலேதான்னு திட்டினீங்களா?”
“”திட்டலே நீ சொன்னமாதிரிதான் சொன்னேன்.”
“”என்னங்க இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துக்கிறீங்க. அவுங்க நேத்திலேருந்து சாப்பிடலேங்க. காபியை குடிச்சுட்டு பொழுதை ஒட்டிகிட்டிருக்காங்க.”
இதைக் கேட்டு திடுக்கிட்டான் அவன்.
“”என்ன சொல்றே நீ”
“”நாய் வீட்டைவிட்டுப் போனது அவுங்களையும் பாதிச்சிருக்கு. வெளியே சொல்லிக்காம இருக்காங்க. சாப்பிடலேன்னு உங்களுக்குத் தெரிஞ்சா திட்டுவீங்கன்னு நான் குளிக்கப் போறப்ப சாப்பிடற மாதிரி காட்டி சாப்பாட வெளியிலே கொட்டிட்டு சாப்பிட்டேனுட்டாங்க”
“”இதை ஏன் என்கிட்டே சொல்லலே?”
“”சொல்லக்கூடாதுன்னூட்டாங்க”
“”ஒரு நாய்க்காகப் பட்டினி கிடக்கணுமா?”
அவன் படுக்கையைவிட்டு எழுந்தான்.
“”எங்கே போறீங்க?”
“”அம்மாவைப் பார்க்க”
“”வேண்டாம். ஏன்டி சொன்னேன்னு என் மேல கோபப்படுவாங்க”
“”என்ன பண்றது இப்போ”
“”நாயை தேடிக் கண்டுபிடிங்க”
மறுநாள் அனைவருக்கும் முன்பாக விழித்துக் கொண்ட அவன் உடை மாற்றிக் கொண்டு ஸ்கூட்டரில் புறப்பட்டான். திருவேட்களம், ராஜா முத்தையா மருத்துவமனை, பல்கலைக்கழக வளாகம், ரயிலடி, வடக்கிருப்பு ஆமைபள்ளம் என பல இடங்களில் சுற்றினான். அதிகம் நாய்கள் தென்படவில்லை. அப்படி விசாரித்தால் பதில் சொல்வார்களோ என மருகினான். கிராமத்தில் ஒருதடவை வளர்ப்பு ஆடும் உழவு மாடும் காணாமல் போய் தேடிச் சென்றது நினைவுக்கு வந்தது. அப்பொழுது வேலையாளும் உடன் வந்தான். அடையாளம் சொல்லிக் கேட்டான் அதுபோன்று கேட்கலாமா? நாய்க்கு முக்கியத்துவம் அளிப்பார்களா? தயங்கித் தயங்கி ஒரு பெரியவரிடம் கேட்க அவர் சிரித்தார்.
“”நாட்டு நாயா? ஜாதி நாயா?”
“”நாட்டு நாய்”
“”அதைத் தேடிக்கிட்டா அலையறே? ரயில்லே அடிபட்டு செத்துருக்கும் போ. ஒண்ணு போனா இன்னொண்ணு”
கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னால் போதாதா? கோபத்தை அடக்கிக் கொண்டான்.
அடுத்த தெருமுனையில் ஒரு பையன் எதிர்ப்பட்டான் – நாய்களைப் பற்றி இவனுக்குத்தான் தெரியும் – கேட்டான்.
“”அக்ரி காலேஜ் பக்கம் நிறைய நாய் நிக்குது போய் பாருங்க”
போய் பார்த்ததும் பிரமித்தான். முப்பது முப்பத்தைந்து நாய்களுக்கு மேல் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
இவனைப் பார்த்து பயத்தில் ஆஜானுபாகுவான இரண்டு நாய்கள் குரைக்க அவன் தன்னிலைக்கு வந்தான். வேறு பக்கம் போவதுபோல திரும்பி அவற்றின் கவனத்தை மாற்றினான். இப்பொழுது அந்த நாய்கள் அவனை மறந்து தங்கள் வேலையில் கவனமாயின. ஒவ்வொரு நாயாக நோட்டமிட்டவன் அதில் தன் வீட்டு நாய் இல்லை என்ற முடிவிற்கு வந்தவுடன் ஏமாற்றமடைந்தான்.
எங்கே போயிருக்கும்?
ஸ்கூட்டரை நோக்கித் திரும்பி நடக்க ஒரு நாய் ஓலமிட்டது. ஓலம் வந்த திசையை நோக்கிப் போனவன், அதிர்ந்து போனான். ஒரு புதிருக்குள் அவன் வீட்டு வளர்ப்பு நாய் சீசர்… அப்பாடாவென பெருமூச்சுவிட்டான்.
சீசர் அவனைக் கண்டு வாலாட்டியது. ஆனால் எழுந்து கொள்ள முடியாமல் ஏராளமான காயங்களுடன் கிடந்தது. அதன் மீதிருந்து வீசிய நாற்றம் குமட்டியது. ஒரு நிமிடம் போய்விடலாமா என நினைத்தவன் வீட்டின் நிலை புரிந்து முடிவை மாற்றிக் கொண்டான். அருகில் சென்று ஏதேதோ செய்து பார்த்தான். அது அசையவில்லை. மாறாக நீண்ட குரல் கொடுத்து அழுதது. இவன் என்ன செய்வது என்பது புரியாமல் கையைப் பிசைய புதரிலிருந்து ஒருவன் வெளிப்பட்டான்.
“”உங்க நாயா?”
“”நேத்துலேயிருந்து இங்கேதான் கிடக்குது”
“”என்னாச்சு”
“”இங்கே பக்கத்திலேதான் என் வீடு. ரெண்டு நாளா இந்த களேபரம் நடக்குது. அந்த நாய்களைப் பாருங்க. அதுங்க கிட்டே போட்டி போட முடியுமா? ரெண்டு நாய்ங்க ஒண்ணு இதோட காதைப் பிடிச்சு இழுக்க இன்னொன்று பின் காலை பிடிச்சுக்கிட்டது.”
“”ரெண்டும் ஆளுக்கொரு பக்கமா இழுத்து துவம்சம் பண்ணிடுச்சு.”
அவன் சொல்ல இவன் அதிர்ந்தான்.
சொன்னவன் அவன் பங்கிற்கு ஏதேதோ செய்து பார்த்தான். அப்பொழுதும் எழுந்தரிக்கவில்லை.
“”ஸôர் உங்க வீடு எங்கேயிருக்கு?”
“”முத்தையா நகர்லே”
“”எதிலே வந்திருக்கீங்க”
“”ஸ்கூட்டர்லே”
“”அப்ப ஒண்ணு செய்யலாமா?”
“”சொல்லுங்க”
“”நான் தள்ளு வண்டிக்காரன், மூட்டை முடிச்சுக்கள் ஏத்தறது தான் என்னோட வேலை. உங்களைப் பார்த்தா பாவமாயிருக்கு. அதுக்கு மேலே இதையும் இப்படியே விட்டுட்டுப் போக மனசு வரலே. என்னோட வண்டியிலே ஏத்திக்கிட்டு வரட்டுமா?”
அவன் கேட்டது பேருதவியாய்… இல்லையில்லை… பேருபகாரமாய்ப் பட்டது.
“”நாயை ஏத்துவீங்களா?”
“”அதுவும் உசிருதானே ஸôர், எண்பது ரூபாய் தரணும், நடுவழியிலே இறங்கி ஓடினா ரூபாய் தரமாட்டேன்னு சொல்லக்கூடாது சரிதானே”
“”சரி வாங்க”
அடுத்த சில நிமிடங்களில் தட்டு வண்டியில் ஏற்றப்பட்டது. சற்றுநேரம் மிரண்டு பின்னர் சுருண்டு படுத்துக்கொண்டது.
“”நான் பின்னாடியே வர்றேன். நீங்க போங்க”
வீட்டு வாசலில் அனைவரும் வெளியில் நின்று ஆளுக்கொரு திக்காய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“”சொல்லிக்காம எங்கே போய்ட்டீங்க”
மனைவி கோபமாய் கத்தினாள்.
“”எல்லாம் உங்களுக்காகத்தான்”
“”என்னப்பா மகள் கேட்டாள்”
“”சீசரைத் தேடிப்போனேன்”
“”கிடைச்சுடுச்சா?”
மகளுக்கு முன்னர் அம்மா முந்திக்கொண்டு கேட்கவும் வாசலில் தட்டு வண்டி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. தட்டு வண்டியை நோக்கி அனைவரும் ஓட அவன் சட்டை பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து வண்டிக்காரனிடம் தந்தான்.
“”சில்லறை வேண்டாம் வெச்சுக்குங்க”
இருபது ரூபாய் கூடுதலாகக் கிடைத்த மகிழ்ச்சியில் வண்டிக்காரன் நன்றி கூறினான்.
இத்தனை நேரமாக எழுந்திருக்க முடியாமல் தவித்த நாய் “விசுக்’கென்று எழுந்து நின்றது. பின்னர் வண்டியிலிருந்து குதித்து மெல்ல நடந்தது. அதன் செயலைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சியில் பலம் வந்திருக்குமோ என நினைத்தான்.
ஆளாளுக்கு அதன்மீது கவலைப்பட்டவர்கள் அடுத்த நிமிடமே அதைக் குளிப்பாட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் பாசமழையில் நனைந்த நாய் இனிமேல் உங்களை விட்டு போகமாட்டேன் என்பதாய் மெல்ல அழுதது. மகளும் மனைவியும் குளிப்பாட்ட மகன் சோப்புடன் ஓடினான். அம்மா வழக்கம்போல அதே அதிகாரத்துடன் இரண்டு நாட்களாக கீழே போட்டிருந்த குச்சியை மீண்டும் எடுத்துக் கொண்டான்.
“செத்துப்போயிருந்தா அய்யோ போயிடுச்சேன்னு விட்டுறலாம். உசிரோட பறிகொடுத்துட்டு எப்படிடா இருக்க முடியும்? அதுவும் இந்த வீட்டிலே ஒண்ணுதானே? நாய்ங்கிறதாலே விட்டுற முடியுமா? அதை அடிச்சேன்தான். உன்னை அடிச்சு வளர்க்கலியா? உம் புள்ளைங்களை அடிச்சு வளர்க்கலியா? அது நல்லா இருக்கணும்தான் அடிக்கிறேன். அதுக்குத்தான் புரியலே. உனக்குமா புரியலே? அது இப்போ என்கிட்டே ஒட்டறதில்லே. புள்ளைங்க கிட்டே ஒட்டிகிச்சு. அதுக்காக நான் விட்டுறமுடியுமா? என் கடமையை நான்தானே செய்யணும்!
சுவற்றைப் பார்த்துக்கொண்டே அம்மா சொல்ல அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
– டிசம்பர் 2013