கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 2,154 
 
 

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் ஏழு 

நைஜீரியனைப் பிடித்த பேயும், தடுப்புமுகாம் கணக்கெடுப்பும்! 

நாவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை வரவேண்டிய விருந்தாளிகள் வராத நிலை, எதிர்பாராத விருந்தாளிகளின் வரவு ஆகிய சந்தர்ப்பங்களை எதிர் கொண்டு தொடர்ந்தபடியிருந்தது. இதே சமயம் உலக நடப்பிலும் குறிப்பிடும்படியான சம்பவங்கள் சில நிகழ்ந்தன. பிரயாணிகளுடன் சோவியத் நாட்டு எல்லைக்குள் அத்து மீறிப்பறந்த கொரிய விமான மொன்று ரஷ்யப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்செயல் சர்வதேசரீதியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான நாடுகள் மத்தியில் ரஷ்யாவுக்கெதிரான உணர்வு களைக்கிளர்ந்தெழ வைப்பதற்கு இச்சம்பவம் பெரிதும் துணையாக இருந்தது. இதே சமயம் எம் நாட்டைப்பொறுத்தவரையில் கொழும்பு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் தாக்கப்பட்டதும், வவுனியாவில் இரு தமிழ் இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடும்படியான செய்திகள். 

எதிர்பாராத விருந்தாளிகளினால் சற்றே தென்புற்றிருந்த எங்களது நிலைமை மீண்டும் சிறை வாழ்வின் தாக்கத்தால் நிலை மாறியது. பழைய குருடி கதவைத்திறந்த கதைதான். ஆனால் பாதிரியார் ஏபிரகாமின் தொடர்பு எங்களை உளவியல்ரீதியில் உறுதியாக்குவதற்குப் பெரிதும் உதவியாகவிருந்தது. அடிக்கடி ஒருவர் மாறி ஒருவர் பாதிரியார் ஏபிரகாமுடன் தொலைபேசியில் கதைத்துக்கொள்வோம். அவரும் எந்த நேரமென்றாலும் அலுக்காமல், சலிக்காமல் ஆறுதலாக. இதமாக எங்களுக்குத் தேறுதல் சொல்வார். அந்தச் சமயத்தில் இவ்விதம் கதைப்பதே எங்களுக்குப்பெரிய தென்பைத்தந்தது. எங்களில் மிகவும் அதிகமாக இராஜசுந்தரத்தாருக்குத்தான் ஃபாதரின்’ தொடர்பு உதவியாகவிருந்தது. மனுசன் பிள்ளை, குட்டிகளைத் தவிக்க விட்டு விட்டு இந்த வயதிலை நாடு விட்டு நாடு அகதியாக ஓடி வந்திருந்த நிலையில் தடுப்பு முகாம் வாழ்வு அவரை ஓரளவு நிலைகுலைய வைத்திருந்தது என்று கூடக்கூறலாம். 

இது இவ்வாறிருக்கத் தடுப்பு முகாமைப்பொறுத்தவரையில் புதியவர்கள் வருவதும், உள்ளேயிருப்பவர்கள் போவதுமாகக் காலம் போய்க்கொண்டிருந்தது. சிலர் நாடு கடத்தப்பட்டார்கள். சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியே சென்றார்கள். ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் வழக்கு முடியும் வரையில் வெளியில் செல்ல முடியாதுபோல் பட்டது. 

இதற்கிடையில் டானியலின் வாழ்க்கையில் ஒருவித மலர்ச்சி மலர்ந்தது. அவனும் அடிக்கடி உணவுக்கூடத்தில் வேலை செய்வான். அவ்விதம் வேலை செய்யும்போது அவனது நாட்டைச்சேர்ந்த பெண் கைதி ஒருத்தியுடன் காதல் வயப்பட்டிருந்தான். குழந்தைத்தனம் சிறிது சிறிதாக அவனை விட்டுப்போய்க்கொண்டிருந்தது. 

இது தவிர இன்னுமொரு முக்கியமான விடயம் நாடு கடத்தப் படுவதற்காகக் காத்திருந்த நைஜீரிய நாட்டு இளைஞனொருவன் ஓரிரவு சன்னி கண்டு விட்டதுபோல் பிதற்றத்தொடங்கியதுதான். பலவித எதிர்பார்ப்புகளுடன். பண விரயத்துடன் அமெரிக்கா வந்திருந்தவன். நாடு கடத்தப்படவிருந்ததனால் அவனது புத்தி பேதலித்துவிட்டது என்று கூறிக்கொண்டார்கள். பேய் பிடித்துவிட்டது என்றும் கதைத்துக்கொண்டார்கள். எங்கள் தடுப்பு முகாமில் இருந்த பிரிகர்களிலொருவர் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த விற்பன்னராம். உடலில் குடியிருக்கும் கெட்ட ஆவிகளை ஓட்டுவதில் சமர்த்தராம். 

அன்றி இரவு முழுவதும் பேய் பிடித்த நைஜீரிய இளைஞனுக்கு ஆவியோட்டிக் கொண்டிருந்தார் அந்த மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த மந்திரவாதி நாங்களும் அவர் பேயோட்டுவதைப்பார்த்தபடி, விடிய விடிய விழித்தபடியிருந்தோம். ஆபிரிக்க வாழ்வைக்காட்டும் ஆங்கிலப்படங்களில் வரும் மந்திரவாதிகளைப்போல் ஆபிரிக்க மொழியில் கெட்ட ஆவியை அவர் விரட்டிக்கொண்டிருந்த காட்சி வியப்பாகவும். சுவையாகவுமிருந்தது. புதுமையாகவுமிருந்தது. முகாம் பாதுகாவலர்களும் இந்த விடயத்தில் தலையிடாமல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்கள். ஆனால் மறுநாளிரவு அந்த இளைஞன் தனது சுயநிலைக்கு வந்துவிட்டான். 

இது தவிர இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் கூறித்தானாக வேண்டும். அது இரவு நேரத்தில் முகாமிலுள்ளவர்கள் படுப்பதற்கு முன்னர் இறுதிக்கணக்கெடுப்பார்கள். இதை எடுப்பது பாதுகாவலர்கள் தரத்திலும் சிறிது கூடிய அதிகாரியொருவர். கறுப்பினத்தவர். பழைய ஆங்கில யுத்தத்திரைப்படங்களில் வரும் கண்டிப்பான ஜேர்மன் இராணுவ அதிகாரியொருவரைப்போன்ற தோற்றம். கண்ணாடி அணிந்து, தொப்பியுடன். முகத்தில் கடுமையுடன். கைகளைப் பின்புறமாகக் கட்டியவாறு, கண்டிப்பான இராணுவ அதிகாரியிருவரைப்போல் கணக்கெடுக்க வரும் இவரைப்பார்த்ததும். முகாமிலுள்ளவர்களுக்குச் சிரிப்பாகவிருக்கும். பகல் முழுவதும் பல்வேறு நினைவுகளுடன் மாரடித்துவிட்டுப் படுக்கையில் சாயும் நேரம் மனம் இலேசாகிக்கிடக்கும். குறும்பு செய்யும் எண்ணம் பரவிக்கிடக்கும். ரவிச்சந்திரன் தனது கட்டிலில் தலையணையை வைத்துப் போர்வையால் மூடிவிட்டு, வந்துவிட்டு எங்களுடன் கதைத்தப்படியிருப்பான். இதுபோல் டானியலும் செய்வான். எங்களைக் கணக்கெடுக்கவரும் அந்த அதிகாரி ரவிச்சந்திரனை இரு தடவைகள் கணக்கெடுத்துவிட்டுச்செல்வார். அவர் தலை மறைந்ததும் எங்கள் கூடத்தில் குபீரென்று சிரிப்பு வெடிக்கும். சிரிப்பு வெடித்ததும் அதைக்கேட்டு எமது கூடத்துக்கு மீண்டும் திரும்பும் அந்த அதிகாரி எங்களைப்பார்த்து முறைத்துவிட்டுச்செல்வார். ஆனால் கணக்கு பிழை என்று அறிவிப்பார்கள். மீண்டும் ஒருமுறை கைதிகளை எண்ணுவதற்காக அந்த அதிகாரியே திரும்பவும் வருவார். இதற்கிடையில் நல்ல பிள்ளையாக ரவிச்சந்திரன் தன் படுக்கையில் போய்ப்படுத்துவிடுவான். 

அத்தியாயம் எட்டு

விஜயபாஸ்கரனின் வரவும்., விடிவும்! 

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும் இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது. நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை. ‘ஃபாதர்’ ஏபிரகாம் அடிக்கடி கூறுவார்: ‘ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேசனிலை இதைத்தான் சொல்லுறாங்க. ஒவ்வொருமுறை அவருக்குத் தொலைபேசி எடுக்கும் போதும் இதைத்தான் அவர் கூறுவார். ஃபாதர் பாவம். அவருக்கு நல்ல மனது. ஆனால் எங்களுக்குப்புரிந்திருந்தது ஃபாதரிக்கு நம்பிக்கை போய்விட்டதென்று. ஃபாதருக்கும் புரிந்திருந்தது எங்களுக்குச்சூழலின் யதார்த்தம் தெரிந்து விட்டதென்பது. இருந்தும் சுதந்திரம் மறுக்கப் பட்டு, கூண்டுக்கிளிகளாகவிருந்த நிலையில் எங்களுக்கும் அத்தகைய ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது. அதே சமயம் நம்பிக்கையை இழந்துவிட நாங்களும் விரும்பவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பே நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாக உப்புச்சப்பற்று போய்க்கொண்டிருந்த இருப்பினை மாற்றி வைத்தது விஜயபாஸ்கரனின் வரவு. 

இவன் முகத்தில் சிரிப்பு மறைந்து நான் பார்த்ததேயில்லை. எத்தகைய இக்கட்டுகளையும் சமாளிப்பதற்கும் பழகியிருந்தான். 

யாழ்ப்பாணத்தில் பிரபலமான வர்த்தகர்களிலொருவராக விளங்கிய விநாசித்தம்பியின் ஒரே மகன் இவன். எங்களைப்போலவே கனடா செல்லும் வழியில் நியுயார்க்கில் பிடிபட்டிருந்தான். இவனைப் பார்க்கப்பாவமாயிருந்தது. நாங்களும் வந்து இரண்டரை மாதங்கள் ஓடி விட்டிருந்தன. இவனும் இனிமேல் எங்களில் ஒருவன் வந்ததுமே எங்களது எண்ணங்களைச் சொல்லி இவனது மனதைக் குழப்ப விரும்பவில்லை. இவனது உறவினர்கள் பலர் நியூயார்க்கில் இருந்தனர். அவர்களுடன் கதைத்து, அவர்கள் மூலமாக விரைவாகவே பிரபல சட்டத்தரணியொருவரைத்தனக்காக அமர்த்திக்கொண்டான். இவனால் முடிந்ததைச் செய்யட்டும் என்று நாங்கள் பேசாமலிருந்தோம். இவன் வந்து சேர்ந்திருப்பது ஓர் இரும்புச்சிறை. இதை உடைத்துக் கொண்டு வெளியேறுவதென்பது அவ்வளவு சுலபமான செயலல்ல. காலம் அதனை இவனுக்கு உணர்த்தி வைக்கும். ஏற்கனவே நாங்கள் முயன்று பார்த்துச் சோர்ந்திருந்தோம். எனவே நாங்கள் யதார்த்த நிலையினை எம் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தோம். இவனும் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வான். 

இதற்கிடையில் இவன் இலங்கையிலிருந்து நேராக வந்திருந்ததால் நாட்டு நிலைமைகளை விசாரித்தோம். தொடர்ந்தும் தலை விரித்தாடிக்கொண்டிருந்த இலங்கை அரச பயங்கரவாதத்தை இவன் விபரித்தபொழுது இலங்கை அரசின்மீது பயங்கரமான வெறுப்பு உணர்வு கலந்த கோபம் வெளிப்பட்டது. 

விஜயபாஸ்கரன் கூறினான்: ‘ஒவ்வொரு ஊரிலையிருந்தும் பள்ளிக்கூட பெடியளெல்லாம் இயக்கங்களில் சேர்ந்து கொண்டிருக் கிறான்கள். இனி பிரச்சினை முந்தி மாதிரி ஒரு பக்க இடியாக இருக்காது. 

அதே சமயம் எங்களுக்கு ஒருவித குற்றவுணர்வு தோன்றியது. நாட்டை விட்டுக் கோழைகளைப்போலவல்லவா தப்பி வந்திருக் கின்றோம். 

தொடர்ந்த சிவகுமாரின் கூற்று இதனை வெளிப்படுத்தியது: ‘இந்தச் சிறையிலிருந்து வெளியிலை போனால் இலங்கை அரசின் அக்கிரமங்களுக்கெதிராக வெளிநாட்டு மக்களைத்திருப்பப் பாடுபட வேண்டும்: 

குறைந்தது எங்களால் எதையாவது செய்ய வேண்டுமென்ற தொனி அவனது கூற்றில் தென்பட்டது. 

ஒரு வாரம் விரைந்தது. அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அன்று விஜயபாஸ்கரனின் முகத்தில் இயல்பான புன்னகையைவிட ஒருபடி இன்னும் அதிகமாகவிருந்தது. விசயத்தை அறியும் ஆவல் மண்டியிட்டது. அவன் கூறினான்: ‘என்ர லோயர் சொன்னவர் பிணையிலை வெளியிலை போகலாமாம். இரண்டாயிரம் டொலர் கட்டினால் சரியாம். நாளைக்கு அல்லது நாளன்றைக்கு நான் வெளியே போகலாமாம் 

அவனது அக்கூற்று எங்களுக்குச் சந்தோசத்தையும். அதே சமயம் ஒருவித ஏக்கவுணர்வினையும் ஒருங்கே தந்தது. அதே சமயம் புதிதாக ஒருவித நம்பிக்கையும் குடிபுகுந்தது. விஜயபாஸ்கரன் வெளியே போக முடியுமென்றால் ஏன் நாங்களும் அவ்விதம் பிணையில் வெளியேற முடியாது என்றொரு கேள்வியும் எமக்குள் எழுந்தது. 

இராஜசுந்தரத்தாருக்குச் செய்தி அறிந்ததிலிருந்து இருப்புக் கொள்ளவில்லை. 

‘எங்கடை விசயத்திலை ஏதோ சுத்துமாத்து நடந்திருக்கு. எதுக்கும் பாஸ்கரன் மூலம் அவனுடைய லோயரிடம் விசாரித்துப் பார்ப்பம் என்றும் அவர் ஆலோசனை கூறினார். இதற்கு நாமனை வரும் ஆமோதித்தோம். ஒரு வேளை எங்களுடைய நிலைமைக்கும். விஜயபாஸ்கரனுடைய நிலைமைக்கும் இடையிலேதாவது சட்டரீதியிலான வேறுபாடுகளிருக்கலாம். இவ்விதம் நாமும் வெளியே செல்லக்கூடிய சந்தர்ப்பமிருக்கும் பட்சத்தில் விஜயபாஸ்கரனின் சட்டத்தரணியையே எங்களுக்காகவும் அமர்த்துவது நல்லதாக எமக்குப்பட்டது. விஜயபாஸ்கரன் தன் மாமா மூலமாகத் தனது சட்டத்தரணிக்கு எங்களது நிலைமையை எடுத்துக் கூறினான். வெளியில் வந்தால் அவரையே எங்களுக்கும் சட்டத்தரணியாக அமர்த்த நாங்கள் அனைவரும் ஒருமித்து முடிவெடுத்தோம். அதனையும் அவருக்குத் தன் மாமா மூலம் எடுத்துக்கூறியிருந்தான் விஜயபாஸ்கரன். எங்களது பொஸ்டன் சட்டத்தரணியின் பெயர். தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களையும் விஜயபாஸ்கரனின் சட்டத்தரணிக்குக்கொடுத்தோம். அன்றிரவே எங்கள் விடயத்துக்கும் ஒரு முடிவு வந்தது. 

விஜயபாஸ்கரனின் மாமா ஃபாதர் ஏபிரகாமிடம் எல்லாவற் றையும் எடுத்துக்கூறியிருந்தார். ஃபாதர் ஏபிரகாம் எங்களுக்கு உடனேயே தொலைபேசி வாயிலாக அழைத்தார். நியூயார்க் சட்டத்தரணி கூறித்தான் பொஸ்டன் சட்டத்தரணிக்கே எங்கள் விடயத்தில் அமெரிக்கக்குடிவரவுத்திணைக்களம் இழைத்த தவறு தெரிய வந்ததாம். உடனேயே பொஸ்டன் சட்டத்தரணி குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டிருக்கின்றார். அதன்படி இன்னும் ஒரு வாரமளவில் நாங்களும் வெளியே பிணையில் செல்லக்கூடியதாகவிருக்கும். இதுதான் ஃபாதர் ஏபிரகாம் கூறிய தகவலின் சாராம்சம். 

எங்களுக்கு இச்செய்தி தந்த களிப்பினை வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியாது. அவ்வளவு சந்தோசம். இறக்கைக் கட்டிக் கொண்டு விண்ணில் பறப்பதைப்போலிருந்தது. உண்மையில் நாங்கள் விஜயபாஸ்கரனுக்குத்தான் நன்றி கூற வேண்டும். இவன் மட்டும் வராமலிருந்திருந்தால் நிச்சயமாக எங்களுக்கு இவ்விதம் விடுதலைகிடைத்திருக்கப்போவதில்லை. இந்த விடயம் பற்றிய உண்மையும் தெரிந்திருக்கப்போவதில்லை. அவ்விதம் தெரிய வந்தாலும் எவ்வளவு நாள்கள், மாதங்கள். அல்லது வருடங்கள் ஓடி விட்டிருக்குமோ? 

விஜயபாஸ்கரனின் சட்டத்தரணி மூலமாக, ஃபாதர் ஏபிரகாம் மூலமாக எமக்குக்கிடைத்த தகவல்களின்படி அமெரிக்க அரசின் சட்டவிரோதக் குடிவரவாளர்கள் மீதான சட்டதிட்டங்களை அறியக்கூடியதாகவிருந்தது. சட்டபூர்வமாக நாட்டினுள் நுழைந்த ஒருவர் குறிப்பிட்ட அனுமதிக் காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதக் குடிவரவாளராக மாறுகின்றார். அதே சமயம் சட்டவிரோதமாகக் கடல் மூலமாக அல்லது எல்லைப்புறத்தினூடாக நாட்டினுள் நுழையுமொருவரும் சட்டவிரோதக் குடிவரவாளரே. நாட்டுக்குள் ஒருவர் சட்டபூர்வமாகவும் அல்லது சட்டவிரோதமாகவும் நுழையலாம். இதுபோல் போலிக்கடவுச்சீட்டுகள் போன்ற பிரயாணப் பத்திரங்களுடன் விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளிடம் அகப்பட்டு விட்டால். அவர்கள் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்கள். இவர்களைப்போல் கடல் வழியாக வரும் ஒருவர் நிலத்தில் கால் வைக்கப்படும் முன்னர். கடலினுள் வைத்துக்கைது செய்யப்பட்டுவிட்டால், அவர்களும் சட்டவிரோதமாகக் கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்கள் என்ற பிரிவுக்குள் அடங்குவர். 

சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்தவர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு, குடிவரவு அதிகாரிகளிடம் அகப்படும் பட்சத்தில். அவர்களது வழக்கு முடியும் வரையில், பிணையில் செல்வதற்கு சட்டரீதியாக அனுமதியுண்டு. ஆனால், அதே சமயம். சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர்களது வழக்குகள் முடியும் வரையில் பிணையில் செல்வதற்குக்கூட அனுமதியில்லை. அது வரையில் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்கள். வழக்குகள் முடிந்து, தீர்ப்புகள் எதிராக அமையும் பட்சத்தில், தடுப்பு முகாம்களில் வைத்தே நாடு கடத்தப்பட்டு விடுவார்கள். 

இராஜசுந்தரத்தார் எங்களுக்கேற்பட்ட நிலைமையினை எளிமையாக. நன்கு விளங்கும்படி எடுத்துக்கூறினார்: 

‘எங்களுக்கு நடந்ததென்னவென்றால்.. எங்களையும் அமெரிக்கக்குடிவரவு அதிகாரிகள், நாட்டினுள் சட்டவிரோதமாகக்கூட நுழையாத சட்டவிரோதக்குடிவரவாளர்களாகக்கருதி தடுப்பு முகாமில் அடைத்து விட்டார்கள்.’ 

அப்படியென்றால்.. நாங்களும் அப்படியான பிரிவுக்குள் அடங்கவில்லையா? எங்களையும் அப்படித்தானே விமான நிலையத்தில் வைத்து தடுத்தார்கள். விளங்கவில்லையே. இவ்விதம் கேட்டவன் அருள்ராசா. 

அதற்கு இராசசுந்தரத்தார் ஒரு பெரு மூச்சினை இழுத்து விட்டவாறு. தன் விளக்கத்தைத்தொடர்ந்தார்: 

இவங்கட இமிகிரேசன்காரன்களும் அப்படித்தான் எங்களைப் பிழையாக நினைச்சுப்போட்டான்கள். நாங்கள் அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக நுழைந்தவங்களில்லை. நாங்கள் பொஸ்டன் ஏர்போட்டிலை இறங்கினதும், எங்கடை எல்லாருடைய பாஸ்போர்ட்டி லையும் ட்ரான்சிட் விசா குத்தினவங்கள் ஞாபகமிருக்கா.? 

‘ஓமோம். நல்லா ஞாபகமிருக்குது..’ இவ்விதம் இராஜசுந் தரத்தாரின் கூற்றினைச் செவிமடுத்துக்கொண்டிருந்த சிவகுமார் இடையில் குறுக்கிட்டுக் கூறினார். 

அப்ப நாங்கள் ஒருத்தரும் சட்டவிரோதமாக வந்தவங் களில்லையே. நாங்கள் சட்டபூர்வமாக உள்ளுக்குளை வந்தவங்கள். ஆனால் எங்களை டெல்டா எயார் லைன்ஸ் ஏத்த மாற்றோமென்று மறுத்துப் போட்டதாலை தானே நாங்கள் இங்கை அகதிக்கோரிக்கை வைத்தனாங்கள்..’ 

இவ்விதம் கூறிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக மூச்சிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திய இராசந்தரத்தார் மீண்டும் தொடர்ந்தார்: 

‘நல்ல காலம் விஜயபாஸ்கரன் நியூயார்க் விமான நிலையத்தில் பிடிபட்டவன். அதனால்தான் எங்களுக்கு இவங்கட அகதிகள் பற்றிய ஓட்டைகள் தெரியவந்திருக்கின்றன. அவன் மட்டும் இங்கே வராதிருந்தால்..என்னாலை நினைச்சுக்கூடப் பார்க்க முடியவில்லையே. சட்டபூர்வமாக ட்ரான்சிட் விசா எடுத்து . எங்களுக்கு எட்டு மணித்தியால விசாவும் இவங்கட இமிகிரேசனாலை தந்திருந்த நிலையிலை, டெல்டா எயார் லைன்ஸ் ஏற்ற மறுத்ததாலைதானே நாங்கள் எட்டு மணி கடந்து, சட்டவிரோதமாக இங்கேயே நிற்க வேண்டி வந்தது.. 

இப்பொழுது அருள்ராசா இடை மறித்து இவ்விதம் கூறினான்: 

சட்டவிரோதமாக நாட்டினுள் அகப்பட்ட ஒரு சட்டவிரோதக் குடிவரவாளனுக்குப் பிணையிலை வெளியிலை செல்ல முடியது. ஆனால் நாங்கள் சட்டபூர்வமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நாங்கள் சட்டபூர்வமாக இங்கு தங்கியிருந்த நேரத்திலை இங்கு அகதிக்கோரிக்கையை வைச்சோம். நாங்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நேரத்திலை பிடி படேலை. சட்டபூர்வமாகத் தங்கியிருந்த நிலையிலைதான் அகதிக்கோரிக்கையை முன் வைத்தோம். உண்மையிலை எங்களைப்பிணையில்லாமலேயே வெளியே அனுப்பியிருக்க வேணும்.’ 

அடுத்த ஒரு வாரத்திலேயே நாங்களும் வெளியில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதற்கு முன்னர் நாங்கள் புரிந்ததாகக் கூறும் குற்றப்பத்திரங்களை எங்களுக்குத்தந்தார்கள். அதில் குடிவரவுச்சட்டத்தின் பிரிவுகளான 241(a) (15) ஆகியவற்றுக்கேற்ப நாங்கள் நாடு கடத்தப்படுவதற்கான குற்றங்களைப்புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆக ஆகஸ்ட் 28 ஆம் திகதி நடை பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்துக்காக நவம்பர் 23ந் திகதி எங்களுக்குக் குற்றப்பத்திரிகைகள் தரப்பட்டிருந்தன. இதில் கூட எத்தனையோ விடயங்கள் மூடி மறைக்கப்பட்டிருந்தன. முதலாவதாக நாங்கள் சட்டபூர்வமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டவர்கள். முறையாக ‘ட்ரான்சிட்’ விசா பெற்றிருந்தவர்கள். நாங்கள் சட்டபூர்வமாகத் தங்கியிருந்த காலகட்டத்திலேயே டெல்டா ‘எயார் லைன்ஸ்’ மறுத்த நிலையில் அமெரிக்க மண்ணில் அகதிக் கோரிக்கையினை விடுத்திருந்தவர்கள். 

உண்மையில் எங்களுக்கும் இரண்டு வருடங்கள் தங்குவதற்கான விசா பெற்று வந்த ஒருவர் வந்து ஒரு வருடத்தின் பின்னர் அகதி அந்தஸ்து கூருவதற்குமிடையில் சட்டரீதியில் வித்தியாசமேயில்லை. இவ்விதம் அகதிக்கோரிக்கையினை விடும் ஒருவரை இரண்டு வருடங்கள் கழிந்ததும் சட்டவிரோதமாக நாட்டில் இருப்பதாகக்கூறித் தடுப்பு முகாமில் தடுத்து வைப்பார்களா? அப்படி நடப்பதாகத் தெரியவில்லையே. நாங்களும் எங்களது ட்ரான்சிட் விசா முடிவடைவதற்குள் அகதிக்கான கோரிக்கையினைச்சமர்ப்பித்த வர்களல்லவா? ஆனால் எமக்குத்தரப்பட்ட குற்றப்பத்திரிகையில் நாங்கள் ட்ரான்சிட் விசா முடிவடைந்த பின்னரும், சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக அல்லவா குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள்தாம் குறிப்பிட்ட காலத்துக்குள்ளேயே அமெரிக்க அரசிடம் அகதிக்கான கோரிக்கையினை விடுத்திருந்தோமே. அவர்களின் அனுமதியுடன் தானே. அதிகாரத்தின்கீழ்தானே. அவர்களின் காவலில்தானே தொடர்ந்தும் இருக்கின்றோம். இவர்கள் எப்படி இவர்களுடைய அனுமதியில்லாமல் தொடர்ந்தும் தங்கிருந்தோமென்று குறிப்பிடலாம்? 

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் இன்னுமொரு விடயமிருந்தது. ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆகஸ்ட் 28, 1983 தொடக்கம் நவம்பர் 13, 1983 வரை எங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டிருந்திருக்கிறது. குற்றம் புரிந்ததாகக் கூறும் பத்திரத்தை மூன்று மாதங்களின் பின்னரே கையளித்திருக்கின்றார்கள். இதை யாரிடம் போய் முறையிடுவது? இந்த மூன்று மாதங்களாகச் சிறைக்கைதிகளாக உளவியல்ரீதியில் நாம் அடைந்த பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? அதுவும் சுதந்திர தேவியின் சிலை கம்பீரமாகக்காட்சி தரும் நியுயார்க் மாநகரில்தான் எங்களுக்கு எங்களது மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. வேடிக்கையாயில்லையா? 

ஒருவாறு எங்கள் தடுப்புமுகாம் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அந்த மூன்று மாதங்கள் நாங்கள் எங்கள் உரிமையினை இழந்திருந்தோம். ஏற்பட்ட அனுபவங்களோ மறக்க முடியாதன. பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பழகிய அனுபவங்கள் பயன் மிக்கவை. டானியல், ரிச்சர்ட், அப்துல்லா. போன்ற நல்ல உள்ளங்களைப் பிரிவதை நினைக்கையில் வேதனையாகத்தானிருந்தது. எங்களுக்கு விடுதலை என்ற செய்தியை வரவேற்று மகிழ்ந்த அதே சமயம் தங்களது எதிர்காலத்தையெண்ணி அவர்கள் முகத்தில் படர்ந்த ஏக்க உணர்வுகளை எங்களால் உணர முடிந்தது. அவர்களைப் பொறுத்த வரையில் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாத வகையினர் என்ற பிரிவினைச்சேர்ந்தவர்கள். வழக்கு முடியும் வரையில் அவர்களது நிலை திரிசங்கு நிலைதான். வழக்கில் சில வேளை தீர்ப்பு சாதகமாயிருக்கும் பட்சத்தில் நாட்டினுள் உரிமைகளுடன் அனுமதிக்கப் படலாம். இல்லாத பட்சத்தில் நாடு கடத்தப்படலாம். அதுவரை ஏக்கங்களுடன், கற்பனைகளுடன், கனவுகளுடன் அந்த ஐந்தாவது மாடித்தடுப்பு முகாம் என்றழைக்கப்படும் சிறையினுள் வளையவர வேண்டியதுதான். வேறு என்னதான் அவர்களால் செய்ய முடியும்?

(முற்றும்)

– அமெரிக்கா (நாவல்), முதற் பதிப்பு: 1996, மகுடம் பதிப்பக வெளியீடு, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *