அப்பா பிள்ளை அம்மா பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2025
பார்வையிட்டோர்: 152 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சலசலவென்று பேசிக்கொண்டே குழந்தைகள் தீப்பெட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். 

திடீரென்று, அதிகாரக் கோபத்தோடு கேட்டாள் பொட்டி, நிசப்தமாகிவிட்டது வீடு. 

மாரியின் கண்களும் எங்க்கியின் கண்களும் மின்னல் வேகத்தில் பார்வை தொட்டு மீண்டன. 

திரும்பவும் பொட்டியின் அதே தோரணையில் அதே கேள்வி ‘மாடாக்குழியிலெ வச்சிருந்த எந் தீப்பெட்டியெ யாரு எடுத்தா’? 

கொஞ்சம் இடைவெளி கொடுத்து அடுத்த பாணத்தை எடுத்தாள். ‘அய்யா வந்ததும் சொல்லி ரவை ரவையா உரிக்கச் சொல்வேன்’, அந்தக் கண்கள் பீதியோடு ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. விரல்கள் எந்திரகதியில் தீப்பெட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தன. வீட்டின் கடைக்குட்டிப்பிள்ளையான எல்லி சொன்னாள்: 

‘ஓங்கண்ணு என்ன பெறத்தாலெ இருக்கா? காலுக்குக் கீளே தானெ கெடக்கு; நல்லாபாரு’ 

பொட்டி குனிந்து பார்த்தாள். நெசந்தான்: கீளெதான் கெடந் திருக்கு. மாடாக்குழியிலே வச்சது நல்லா ஞாபகமிருக்கு. எப்படி வந்தது இங்கே? 

தீப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்தாள். பொன்வண்டை மறைக்கும்படியாக இருந்த கருவைத்தளிர்களை விலக்கிப் பார்த்த போது ஒரு முட்டையைக் காணோம்! வந்துவிட்டது ஆங்காரம் அவளுக்கு. 

இந்த சமயத்தில் எல்லி ஏளமானகச் சிரித்துக்கொண்டு ‘காலுக்கு கீழாற போட்டுக்கிட்டு ஊரெல்லாந் தேடுதா’ என்று சொன்னதை கேட்டதும் கோபம் தலைக்கேறிவிட்டது. 

‘தேவிடியாச் சிறுக்கி, ஏம் பொன்வண்டு முட்டெயக் களவாண்டது மில்லாமே எனக்குப் பயித்தியாரப் பட்டமுங் கட்டுதயா’ என்று அவள் மேல்ப் பாய்ந்தாள். 

முட்டையை எல்லி தொடாததால் இவளுடைய தாக்குதலை தைரியமாக எதிர்கொண்டாள். 

ரெண்டு பேரும் ஒருவரையொருவர் மொத்திக்கொண்டார்கள். தலைமயிரைப் பிடித்து உலுக்கிக் கொண்டார்கள். கட்டிப் புரண்டார்கள். நகங்களால் கீய்ச்சிக் கொண்டார்கள். 

நிலைமை மோசமாகிவிட்டது என்று கண்டுகொண்ட பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் அவரவர் தீப்பெட்டிக் கட்டுகளையும் பசயையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். 

மீதி அங்கே இருந்தவர்கள் வீட்டின் பிள்ளைகளான சுப்பியும் மாரியும் எங்க்கியும்தான். 

இவர்கள் மூவரும் பொட்டி விஷயத்திலும் எல்லி விஷயத்திலும் தலையிடுவதில்லை. ஒன்றும் நடக்காததுமாதிரி இவர்கள் தீப்பெட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். 

காதுகொடுத்துக் கேட்கமுடியாத கெட்டவார்த்தை வசவுகளுடன் மல்லுக்கட்டு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. 

இந்த ஐந்து பேரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். மூத்தவள் சுப்பிக்கு 11 வயசு. கடைக்குட்டி எல்லிக்கு 7 வயசு. 

சுப்பி கொஞ்சம் யோசித்தாள். என்ன இருந்தாலும் எல்லி சின்னப் பெண், ஆனாலும் இவ்வளவு பலம் அவளுக்கு எங்கே இருந்து வந்தது? எல்லி அம்மாவின் செல்லம். பொட்டி அப்பாவின் செல்லம். 

அம்மாவும் அப்பாவும் புஞ்சைக்காட்டில் வேலை செய்துவிட்டு சாய்ந்திரம் வீடு திரும்பியபிறகு இவர்கள் ரெண்டுபேருக்கும் அடி கிடைக்கப்போவதில்லை. எனக்கும் மாரிக்கும் எங்க்கிக்கும்தான் கிடைக்கும். 

‘பயபிள்ளே, ஏம்பிள்ளையெ அவ அடிக்கிறப்போ நீ பாத்துக் கிட்டா இருந்தே’ என்று அப்பா கை ஓங்கிக்கொண்டு வருவார் அடிக்க.

“சிறுக்கி மகளே, ஏம்பிள்ளை அடிப்பட்டுக்கிட்டிருக்கும்போது பாத்துக்கிட்டா இருந்தே” என்று அம்மா வாரியலை எடுப்பாள். 

இப்படிச் சமயத்தில் மாரியும் எங்க்கியும் நைய்சாய் வெளியே நழுவிவிடுவார்கள். 

உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி, மத்தளத்துக்கோ ரெண்டுபக்கமும் அடி. தான்தான் லோலாயப்படணும். தனது நிலையை நினைக் கிறப்போ சுப்பிக்கு அழுகைகூட வந்துவிட்டது. 

பொட்டியை அப்பா கொஞ்சும்போது, “பொட்டிதாம் ஏம்புள்ளே இந்த மூத்தவளே சந்தையிலே தவிடுக்கில்லா வாங்கினது” என்று சிறுபிள்ளையிலிருந்தே அப்பா தன்னைப் பழிப்பார். 

அம்மா காட்டிலிருந்து வந்து வீட்டுக்குள்ளே நுழையும்போதே ‘எல்லீ…ஏங் கப்பலு; ஏங் கப்பலை எங்கே காணோம்…” என்று செல்லக் கொஞ்சலோடுதான் சொல்லிக்கொண்டு வருவாள். 

ராத்திரி ஆயிட்டா எல்லி முண்டை அம்மாவோடதான் படுத்துக்கிடுவா. பொட்டி அப்பாவுக்குப் பக்கத்திலே, நாங்க மூணு பேருந்தான் கோணிச்சாக்கை விரிச்சு தனீயாப் படுத்துக்கிடணும். எந்திரிச்ச உடனே காலையிலே எல்லிக்கும் பொட்டிக்கும் பாலு ஊத்தின காபி. எங்களுக்கு கடுங்காப்பிதான். 

மல்லுக்கட்டு மும்முரமாக நடந்துகொண்டிருந்த சமயம் பார்த்து மாரி பளிச்சென்று – நெமை தட்டுவதற்குள் தன்னுடைய தீப்பெட்டிக் குள்ளிருந்த பொட்டியின் பொன்வண்டு முட்டையை எடுத்து தீப்பெட்டிக்குள் போட்டுவிட்டு ஒண்ணும் தெரியாததுமாதரி இருந்து கொண்டாள். இதை ‘ரைட்’ என்று எங்க்கி கண்ணாலேயே ஒரு தலை யசைப்பால் ஆமோதித்தாள்! மாரிக்குச் சிரிப்பு தாங்கலை. எழுந்து வேகமாக வாசல்பக்கம் போய் மூக்கைச் சீந்துவதுபோல ‘சீந்தி’விட்டு “அய்! அம்மா அய்யா ரெண்டுபேரும் வாராங்கள்” என்று சத்தம் போட்டுச் சொன்னாள். அவ்வளவுதான். மல்லுக்கட்டு உடனே மேலும் சூடுபிடித்தது. 

எல்லியின் சட்டையை பொட்டியின் கை பலமாகப் பிடித்திருந்தது. சட்டையை விடுவித்துக்கொள்ள எல்லி கையை பலமாகத் தள்ளினாள். தள்ளிய வேகத்தில் எல்லியின் சட்டை கிழிந்துபோய் விட்டது. 

‘சட்டையெக் கிழிச்சிட்டயா; பாரு அம்மாக்கிட்டெச் சொல்லி ஒன் தோலை உரிக்காட்டாப் பாரு’. 

‘தோலையா உரிக்கச் சொல்லுவே…’ என்று கேட்டுக்கொண்டே எல்லியின் வாய்க்குள் விரலைக் கொடுத்து அவளுடைய சிலுவாயைக் கிழிக்க ஆரம்பித்தாள் பொட்டி. 

வாய்க்குள்ளே வந்த விரலை எல்லி விடுவாளா? பலமாகப் பற்களால் கடித்து இறுக்கினாள். வலி பொறுக்கமுடியாமல் பொட்டி திணறினாள். அய்யோ அய்யோ என்று கூப்பாடு போட்டாள். 

இதற்குமேலும் சுப்பியால் பார்த்துக்கொண்டிருக்க முடியலை. எழுந்துவந்து, ‘எல்லீ, கடிக்காதே விரலை விட்ரு நீ நல்லா இருப்பே’ என்று வேண்டினாள். 

‘விலக்குதீக்க’ ஆள் வந்ததும் எல்லிக்கு வேகம் பிறந்துவிட்டது. இனிமேல் இந்தப் பொட்டிக் கழுதையை தன் வழிக்கே வராதபடி செய்யவேண்டும் என்று கடித்து விரலைத் துண்டாக்கிவிட நினைத்தாள். 

அவளுடைய வெறி சுப்பிக்கு பயத்தைக் கொடுத்தது. ‘ஐயோ நா என்ன செய்வேன்’ என்று சுப்பி அழ ஆரம்பித்துவிட்டாள். 

அவள் அழுவதைப் பார்த்த மாரியும் எங்க்கியும் ‘சீ இவ ஒண்ணு’ என்று சுப்பியை அருவருப்போடு பார்த்தார்கள். 

வீட்டுக்கு மூத்தவள் ஆனதால் எல்லாத்துக்கும் தானேதான் பொறுப்பு என்று நினைத்து சுப்பியின் மனசு ரொம்ப சங்கடப்பட்டது. அழுதுகொண்டே, ‘எல்லிப் பொண்ணு நா சொல்லுறதைக் கேளுடா; அக்காவிரலை விட்டுறம்மா, கடிக்காதே. பொன்வண்டு முட்டையெ நீ எடுக்கலை; சாமி சத்தியமா நாந்தான் எடுத்தேன். பொட்டீ இந்தா முட்டை” என்று தன் தீப்பெட்டியிலிருந்த தன்னுடைய பொன் வண்டின் முட்டையை எடுத்து நீட்டினாள். 

அதிசயத்தால் வாய்திறந்ததாலோ என்னவோ எல்லியின் வாயி லிருந்து பொட்டியின் விரல் மீண்டதோடு, மாரியும் எங்க்கியும் திடுக் கிட்டு சுப்பியைப் பார்த்தார்கள். சுப்பியைப் பார்க்க அவர்களுக்கு வெறுப்பாகவும் பாவமாகவும் இருந்தது. என்னத்துக்காக இப்படி இவள் தன் முட்டையை வம்படியாகக் கொண்டுபோய்க் கொடுக்கணும் என்று நினைத்தார்கள். 

எல்லியிடமிருந்து விடுபட்ட பொட்டி, இப்பொழுது யாரும் எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள். ‘ஓஹோ நீதானா இதுக்கெல்லாம் காரணம்’ என்பதுபோல பசைப் பலகையை எடுத்து சுப்பியின் தலையில் வீசி அடித்தாள். அவள் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. ‘அம்மா அய்யோ’ என்று சுப்பி துடித்தாள். 

முதலில் ஒருகணம் திகைத்தாலும், தங்கள் தகப்பனார் இந்தப் பொட்டிக்கு கொடுக்கும் சலுகையினாலும் செல்லத்தினாலும் அல்லவா இப்படி வெளம் எடுத்து ஆடுகிறாள் என்று மாரியும் எங்க்கியும், இந்தப் பொட்டியால்தானே தனக்கு அப்பாவின் பிரியம் கிடைக்காமல் போய்விட்டது என்ற எல்லியின் சிறுபொறாமையாலும் இன்று அநியாயமாக தன்னோடு சண்டைக்கு வந்தாளே என்கிற தீராத ஆத்திரமும், அதோடு ஒரு குற்றமும் செய்யாத அக்காவின் மண்டையையும் நொறுக்கிவிட்டாளே என்கிற கோபத்தாலும் மூவரும் பொட்டியின்மேல் பாய்ந்தார்கள். 

மூன்று பேரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பொட்டி பயந்து கூக்குரலிட்டாள். இந்த ‘களேபரத்தை’க் கேட்ட பக்கத்து வீட்டுக் காரர்கள் என்னமோ ஏதோ என்று ஓடி வந்தார்கள். 

மூவரிடமிருந்தும் பொட்டியை விலக்கிக் காப்பாற்றினார்கள். ரத்தம் வழியும் காயத்துடன் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த சுப்பி யிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அழுதுகொண்டே நடந்தது எல்லாத்தையும் சுப்பி சொன்னாள். 

பொட்டியின் பொன்வண்டு முட்டையை யார் களவாண்டார் களோ தனக்குத் தெரியாது என்றும், தன்னுடைய முட்டையை இவளுக்குக் கொடுப்பதாகச் சொல்லியும் இவள் என் மண்டையை உடைச்சுட்டா என்று கேவிக்கேவி அழுதாள். 

பக்கத்துவீட்டுப் பொன்னக்காளுக்கு ‘கோவம்’ வந்துவிட்டது. 

“இப்பொ நெசத்தைச் சொல்லணும் எங்கிட்டே; யாரு எடுத்தது அவ பொன்வண்டு முட்டையெ ?” என்று கேட்டாள் நாக்கைத் துருத்திக்கொண்டு. 

மாரி பளிச்சென்று முன்வந்து “யாரும் எடுக்கலை; இந்தா பாருங்க அவ முட்டை அவ தீப்பெட்டிக்குள்ளதான் இருக்கு. அவதான் சரியாப் பாக்காமெ அக்கா மண்டையெ ஒடைச்சிட்டா” 

பொட்டி, தன் தீப்பெட்டியை வாங்கி சரிபார்த்தாள், சரியாகத் தான் இருந்தது. தலையைக் கவிழ்ந்து பேசாமல் இருந்தாள். 

“பிள்ளைகளுக்கு செல்லங்கொடுத்து வளக்கிற லெச்சணத்தை பாக்கலையா லெச்சணத்தை” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொல்லிவிட்டு பொன்னக்கா விருட்டென்று அங்கிருந்து வெளியேறி னாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் போய்விட்டார்கள். 

எதிர்த்தவீட்டுப் பாட்டிதான் சுப்பியின் தலையில் வழிந்த ரத்தத் தைத் துடைத்து ஈரத்துணியால் கட்டு கட்டிவிட்டுப் போனாள். 

சுப்பியின் மௌனமான ஊமை அழுகையும் நெடுமூச்சுக் குலுங் கலும் அவளுடைய தங்கைமாரின் மனசை என்னவோ செய்தது. 

– அண்ணா, ஜனவரி 1980.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *