அப்பாவைப் போல மகள்!





அன்று தன் ஆஃபிஸில் வேலை செய்யும் மகேஷ் என்பவனை காதலிக்கிறதாகவும்,
அவனையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் லதா தன் பெற்றோரிடம் தீர்த்துச் சொல்லிவிட்டாள்.

மகள் திருமண விஷயத்தில் எடுத்த முடிவைக் கேட்டு ராகவனும் பார்வதியும் அதிர்ச்சியு ற்றனர். முக்கியமாக பார்வதி கொதித்துப் போயிருந்தாள். ஒரே பெண்தானே என்று செல்லம் கொடுத்து, சிறு வயது முதல் மகள் இஷ்டப்பட்டு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்ததால் வந்த வினை; இன்று தன் ஆசைப்படி தன் திருமணத்தை தானே முடிவு செய்திருக்கிறாள் என்ற கோபம் உண்டாயிற்று.
ராகவனுக்கும் ஏறக்குறைய இதே எண்ணம்தான் தோன்றியது. லதாவைக் கண்டித்து வளர்ந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த அளவுக்கு போயிருக்க மாட்டாள் என்ற ஆதங்கமும் ஏற்பட்டது.
இருவரையும் மாறி மாறி பார்த்த லதா, “உங்கள் அபிப்ராயம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? யெஸ்ஸூன்னா சந்தோஷப்படுவேன். நோன்னா வருத்தப் பட மாட்டேன். நோவையே யெஸ்ஸாக எடுத்துப்பேன்.” துணிச்சலுடன் சொன்னாள்.
கோபத்துடன் ஏதோ சொல்ல வந்த பார்வதியை கையமர்த்தினார் ராகவன். பார்வதியும் மிகவும் கஷ்டப்பட்டு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள். கணவர் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.
“சரிம்மா, பையன் என்ன ஜாதின்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா ?” என தன்மையாக கேட்டார் ராகவன்.
அம்மாவை ஓரு தினுசாகப் பார்த்தாள் லதா. குறுஞ்சிரிப்பொன்றை உதிர்த்தாள். பிறகு, “ம்..அம்மா ஜாதி அப்பா!” என்று பட்டென்று பதில் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.
இருபத்தேழு வருடங்களுக்கு முன்னால் அய்யர் குலத்தைச் சார்ந்த தான் நாயுடு இனத்தைச் சார்ந்த பார்வதியை காதலித்து மணம் புரிந்த வழியைத்தான் இன்று தங்கள் மகளும் பின்பற்றுகிறாள் என்பது புரியாமல் இல்லை ராகவனுக்கு.