அப்பாவின் கல்யாணம்
(இதற்கு முந்தைய ‘அப்பாவும் காமராஜும்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).
இத்தனைக்கும் காமராஜ் அவன் வீட்டிற்கு வந்து அவன் அப்பாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப்போவார், ஆனாலும் அப்பா காமராஜிடம் அவரின் கல்யாண விஷயம் பற்றி மட்டும் வாயைத் திறக்கவில்லை.
ஆனால் ஒருநாள் காமராஜுக்கு, அவருடைய அம்மா, அவன் அப்பாவைக் கூப்பிட்டு பேசிய விவரம் அவர் அம்மா மூலமே தெரிய வந்தது. அப்பா அதைப்பற்றி தன்னிடம் எதுவுமே பேசாததில் காமராஜுக்கு ரொம்ப ஆச்சர்யம் வந்துவிட்டது. காமராஜ் அதை ஒருநாள் அப்பாவிடமே கேட்டுவிட்டார்.
தேசப் பணிக்காகத்தான் திருமண வாழ்க்கையில் தன்னைப் பொருத்திக் கொள்ளப் போவதில்லை என்ற காமராஜின் கொள்கையில் அவன் அப்பாவிற்கு மிகப்பெரிய மரியாதையும் ஒப்புதலும் இருந்தது. அதனால் அவரால் காமராஜிடம் அவரின் கல்யாண விஷயம் பற்றிப் பேச முடியவில்லை. இதை காமராஜிடம் அப்பா தயக்கப் படாமல் சொன்னார். அப்பாவின் பதிலில் காமராஜின் மனம் நெகிழ்ந்து போனது. இந்தச் சம்பவம் காமராஜுக்கும் அவன் அப்பாவிற்கும் இடையில் இருந்த மிக நெருக்கமான நட்பில் ஒரு மைல்கல் என்று கூடச் சொல்லலாம்.
இது நடந்த வருஷம் 1940. .
1971 ல் அவன் தன் இளைய சகோதரியின் திருமண அழைப்பிதழை காமராஜை நேரில் பார்த்துக் கொடுப்பதற்காக மெட்ராஸ் திருமலைப் பிள்ளை தெருவில் இருந்த அவருடைய வீட்டிற்குச் சென்றான். அவன் அப்பா விருதுநகரில் இருந்தவாறே போன் பண்ணி காமராஜை அவன் இளைய சகோதரியின் கல்யாணத்திற்கு வரச்சொல்லி ஏற்கனவே அழைப்பு விட்டிருந்தார்.
அவன் மெட்ராஸில் இருந்ததால் காமராஜை நேரில் பார்த்து கல்யாணப் பத்திரிக்கையை கொடுக்கும்படி அப்பா அவனுக்கும் போன் மூலம் தகவல் சொல்லியிருந்ததால் அவன் நேரில் போயிருந்தான். கல்யாணத்துக்கு கண்டிப்பாக வருவதாக காமராஜ் சொன்னார். பின் சில நிமிடங்கள் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சினிடையே, “உன் அப்பன் சொன்னான்… நீ கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருந்தியாமே, ஏன் அப்படி?” என்றார். அவன் அவருக்குப் பதில் சொல்லவில்லை. மெளனமாக இருந்தான்.
அந்த நேரத்தில் அவன் வாழ்க்கையில் நடந்து விட்டிருந்த சில கசப்பான சம்பவங்களால் திருமணம் செய்து கொள்வதில்லை என்கிற முடிவில் அவன் இருந்தான். அதைப்போய் காமராஜிடம் விவரிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம். அதனால் அவன் மெளனமாக இருக்க வேண்டியிருந்தது. சில வினாடிகள் அவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த காமராஜ் மெல்லிய சிரிப்புடன், “சரி சரி உனக்கு இஷ்டமில்லைன்னா யாரு என்ன செய்ய முடியும்?” என்றார்.
கல்யாணம் செய்துகொள்ள காமராஜிடம் அவன் அப்பா சம்மதித்த சில மாதங்களிலேயே 1940 ன் செப்டம்பர் மாதத்தில் அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. அப்போது அவன் அப்பாவிற்கு முப்பது வயது. அந்தக் காலக் கட்டத்தில் அவர்கள் ஊரில் 17 அல்லது 18 வயதாகும்போதே கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். அவன் அப்பாவிற்குத்தான் அவருடைய பிடிவாதத்தால் கல்யாணமாவதற்கு அத்தனை காலதாமதமாகி விட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், அந்த முப்பது வயதில் அவன் தாத்தாவிற்கு ஏழு பிள்ளைகள் பிறந்து விட்டார்கள்.
காமராஜின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, மரியாதை தந்து என் அப்பா மண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தாலும் அந்த வாழ்க்கையை ஈடுபாடு இல்லாமலோ வெறும் கடமைக்காகவோ வாழவில்லை. அவன் அம்மாவோடு அப்பா மேற்கொண்ட இல்லறத்தில் மனப்பூர்வமான ஒருமிப்பும் காதலும் கொண்டிருந்தார். அம்மாவை மிகுந்த மரியாதையுடனும் சமத்துவத்துடனும் நடத்தினார்.
வாழ்நாள் பூராவும் மாமிச உணவைத் தொடுவதில்லை என்ற அவருடைய விரதத்தை அவன் அப்பா எந்தக் கட்டத்திலும் அவன் அம்மாவின் மேல் திணிக்க முயலவில்லை. அம்மாவுக்கும் அது ஆறுதலாக இருந்தது.
அவன் அம்மா அடிக்கடியும் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியும் நிறைய மாமிச உணவு சாப்பிடுகிற குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால் அவன் அப்பாவைக் கல்யாணம் செய்துகொண்டு வந்தபின் தனிக்குடித்தன வாழ்க்கையில் அவருக்கு விருப்பமான விதவித அசைவ உணவுகள் எலாவற்றையும் சமைத்து ஆசையுடன் சாப்பிட்டுக் கொண்டார்.
அதேமாதிரி அவன் அப்பாவிற்கும் பலவிதமான சைவ உணவுகளை ருசியுடன் தயாரித்துக் கொடுத்தார். அசைவ உணவு தயாரிக்க தனி பாத்திரங்கள், சைவ உணவு தயாரிக்க தனி பாத்திரங்கள் என கவனமாக உபயோகித்து வந்தார்.
அவன் அப்பா அம்மாவிற்கு கல்யாணமான ஒரு வருடத்தில் அவன் பிறந்து விட்டான். அவன் பிறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் ரவீந்திரநாத் தாகூர் இறந்து போயிருந்தார். அவன் அப்பாவிற்கு தாகூரின் கவிதைகள் மீதும், சிறுகதைகளின் மீதும் பெரிய ஈடுபாடு இருந்தது. அளவற்ற மரியாதையை தாகூரின் ஆளுமையின் மேல் அப்பா வைத்திருந்தார். அதனால் அவனுக்குத் தாகூர் என்றே பெயர் வைத்தார்.
ஆனால் அவனுடைய தாத்தா தாகூர் என்ற பெயருக்கு மறுப்புத் தெரிவித்து விட்டார். அதனால் அவன் அப்பா ராஜாராம் மோகன் ராய் பேரில் இருந்த மரியாதையின் காரணமாக அவனுக்கு ராம் என்று பெயர் வைத்தார். மகனை சைவ உணவு சாப்பிடுகிறவனாக மட்டுமே வளர்க்க வேண்டும் என்பதை அப்பா அவன் பிறந்தபோதே தீர்மானித்து விட்டார். அம்மாவும் இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் உடனே ஒப்புக் கொண்டார். அதன்படி அவர்கள் குடும்பத்தில் அவன் சைவ உணவு மட்டும் சாப்பிடுகிறவனாக வளர்க்கப்பட்டான்.
அந்தக் காலத்தில் இது அவர்கள் ஊரின் சூழ்நிலையில், அவனின் பரம்பரை நடைமுறையில் எந்தக் குடும்பத்திலும் இல்லாத ஒரு வழக்கம். பிறந்த சில மாதங்களிலேயே பிள்ளைகளுக்கு முட்டை அவித்துக் கொடுத்து விடுகிற ஊர் அது. முதல் வருஷம் முடியும்போது மீன் கொடுப்பார்கள். நன்றாக வேக வைத்த மீனை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். இரண்டு வயசு முடியும்போது ஆட்டுக்கறி தந்து விடுவார்கள். பார்த்து பார்த்துக் கொஞ்சம் பிஞ்சுக் கறியாகக் கொடுப்பார்கள். நன்றாக வெந்த பிஞ்சுக்கறி வயிற்றை எதுவும் செய்யாது.
மூன்று வயசு முடியும்போது பிள்ளைகள் ஆட்டுக்கறியைத் தவிர வேறு எதையும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பார்கள். அந்த மாதிரி சூழ்நிலை இருந்த ஊரில்தான் அவன் சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிற பையனாக வளர்க்கப் பட்டான். இந்த வளர்ப்பு முறை ஊர்க்காரர்களுக்கும் சொந்தக் காரர்களுக்கும் சிரிப்புக்குரியதாகவும் அபத்தமானதாகவும் இருந்தது.
ஆனால் அவன் அப்பாவிடம் நேரிடையாக வந்து இதை யாரும் சொன்னதில்லை. அவருடைய நெறிமுறைகள் எல்லோரும் அறிந்தது. அப்பழுக்கற்ற காந்தியவாதி அவர். கதர் உடை மட்டுமே அணிகிற எளிய மனிதர். காமராஜின் அபிமானத்திற்குரிய நண்பர். அப்பா சைவ உணவு மட்டும் சாப்பிட்டதை யாரும் எந்த விமர்சனமும் செய்ததில்லை.
ஆனால் மகனை அப்படி அவர் பழக்கப் படுத்தியதைத்தான் நிறைய பேருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. ஒரு பரிதாபத்திற்குரிய பையன் என்பதுபோல் சொந்தக்காரர்களும், ஊர்க்காரர்களும் அவனைப் பார்த்தார்கள்…