அபிக்குட்டி






எப்போதுமே எங்கள் வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பது கிடையாது. அருகில் உள்ள பங்காளி குடும்பங்களில்தான் வளர்ப்பார்கள். எங்களுக்கு அந்த இரண்டு குடும்பங்களோடும் பேச்சுவார்த்தை இல்லை. என்றாலும், அவர்கள் வளர்க்கிற நாய்கள் எங்கள் வீட்டிலும் – எனக்கு நினைவு தெரியும் காலத்துக்கு முன்பிருந்தே வாசப்பானியோரம் கிடக்கிற கல்லிலான ‘பண்ணையில் – ஊற்றுகிற கஞ்சியைக் குடித்து வளரும். தற்சமயம் சின்னப் பெரியப்பா வீட்டார் வளர்க்கிற செவலை ‘டாமி’ உட்பட. மூன்று குடும்பங்களுக்குமே பொதுவாக இவை உள்ளதால் நாங்கள் தனியே நாய் வளர்க்க அவசியமேற்படவில்லை.
அப்படியிருக்க, இருந்தாற்போல ஒரு நாய்க்குட்டி எங்கள் வீட்டு வாசலில் கோடை வெயிலுக்குப் போட்டிருந்த பந்தக்காலில் கட்டப்பட்டிருக்கவே, அன்றைய இரவில் வீடு திரும்பிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாசப்பானியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த மஞ்சுவிடம், “ஏது இது?” என்று விசாரித்தேன்.
“செல்வான் குடுத்தான்” என்றாள். அருகாமையில் உள்ள நாய்க்கர் காட்டில் ஒரு பகுதியைக் குத்தகைக்கு ஓட்டிக்கொண்டிருக்கிற குடியானவச் குடும்பத்துப் பையன் அவன்.
அனுப்பூரிலிருந்து பெரும்பதிக்காரர் வீட்டு நாயின் குட்டிகள் மூன்றை எடுத்து வந்திருந்தானாம். ஒன்றை அவர்களுக்கு வைத்துக்கொண்டு, அடுத்ததைப் பக்கத்துக் காட்டு ரத்தினசாமியண்ணன் வீட்டாரிடம் கொடுத்துவிட்டானாம். மற்றதை, “உங்களுக்கு வேணுங்களாங்க்கா?” என்று கேட்டிருக்கிறான். மஞ்சுவும் வாங்கி வந்துவிட்டாள்.
இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வீட்டுக்குள்ளிருந்து, “அவளுக்கு இது வேண்டாத வேலை. இங்க அவனவன் பாட்டப் பாக்கறதுக்கே நேரம் பத்த மாட்டீங்குது. இதுல இந்தக் கருமத்த வேற கொண்டு வந்துட்டா” என்றான் கோவிந்தண்ணன்.
“அது இருந்தா உன்னை என்ன பண்ணுது? நீயா பாத்துக்கப் போற?” என்பது மஞ்சுவின் கேள்வி. அவன் பதிலுக்கு எதையோ முணுமுணுத்தான்.
எனக்கும் இது வேண்டாத காரியமாகவே பட்டது. யாராயிருந்தாலும் இதற்கென மெனக்கெடணுமே.
நாய்க்குட்டியைக் கவனித்தேன். சின்னக் குட்டி. பிஸ்கட் நிறத்துக்கும் சேராமல் செவலையாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு நிறம். முகத்திலும் உடம்பிலும் சற்றே வெள்ளை. பருமனான வாகு. என்ன ரகம் என்று தெரியவில்லை. உயர் ரகமல்ல என்பது நிச்சயம். குட்டையான முகத்துடன் சின்ன வாலை ஆட்டிக்கொண்டு, ‘ஊங்… ஊங்…’ என அப்படியும் இப்படியுமாக நடந்துகொண்டிருந்தது. சணல் கயிறிலேதான் கட்டியிருந்தது அதை.
“இது கடுவனா, பொட்டையா மஞ்சு?” என்று கேட்டேன்.
“தெரியல” என்றாள் அவள்.
“அது தெரியாமயே வாங்கிட்டு வந்துட்டயாக்கு?”
“செல்வான் கடுவன்னுதான் குடுத்தான்.”
“அவனே தெக்கு வடக்குத் தெரியாதவன். அவன் சொன்னான்னுட்டு இவ…!” கோவிந்தண்ணனின் குரல்.
கடுவனாக இருந்தால் தேவலாம். பெட்டை என்றால் தொல்லைதான். பெரிதாகிவிட்டால் மார்கழி மாதத்தில் சுற்றுப்புற கடுவன்களெல்லாம் இங்கே வந்துவிடும். பெண்கள் புழங்குகிற இடத்தில் அந்த அசிங்கத்தை எப்படி சகிப்பது?
பெரியப்பா குடும்பத்தவர்கள் பெட்ட நாய்களை வளர்த்தியபோது இத் தொல்லைக்கு ஆட்பட்டோம். எங்கள் பகுதியில் பக்கம் பக்கமாக உள்ளது ஐந்து வீடுகள்தான். அங்குள்ளதும், சற்றுத் தள்ளி களங்காடுகளில் உள்ளதுமான கடுவன்கள் எல்லாமும் சேர்ந்து இங்கே வந்துவிடும். தமக்குள் ஒன்றையொன்று கடித்துக் குதறி, ‘வலுவுள்ளது ஜெயிக்கும்’. இரவு பத்து, பதினோரு மணியானாலும் இவை ஓய்வதில்லை. குரைப்புகளும் கடிபட்டு எழுப்பும் ஓலங்களுமாக இருக்கும் – வீட்டில் யாரும் தூங்க முடியாதபடி. அப்பா கையடக்கக் கற்களைப் பொறுக்கி எடுத்துவந்து வாசலில் ஓர் ஓரமாகக் குவித்து வைத்திருப்பார். தினமும் ராத்திரிகளில் இந்த நாய்களை விரட்டியடிப்பது அவரது பொறுப்பு.
“பேசாம நாளைக்கு அதைத் திருப்பிக் குடுத்துரு’” என்றான் கோவிந்தண்ணன்.
நானும் அதை வழிமொழிந்தேன். “இவ்வளவு சின்னக் குட்டிய வளத்தறதுன்னா சிரமம். அது இப்ப கஞ்சியும் குடிக்காது. பாலுக்கு எங்க போறது?”
“அந்தக் குட்டி என்ன லிட்டர் கணக்குலயா குடிக்கப் போகுது?” என்றாள் மஞ்சு, கழுவிய பாத்திரங்களைத் தண்ணீர் வடிய கவிழ்த்து வைத்தவாறே. நானும் கை, கால், மூஞ்சி கழுவிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டேன். அம்மாவிடம் இதைப் பற்றிப் பேசியபோது, ”நானும் வேண்டாம்னேன். அவ கேக்குல. சரி, அவளுக்கு நாய் வளத்தோணும்னு ஆசை… வளத்திட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன்” என்றாள். அப்பா ஒன்றும் சொல்லக் காணோம். எனக்கு அது கடுவன்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. மறுபடி வந்து நாயை எடுத்துப் பார்த்து உறுதி செய்துகொண்டேன். நான் அறிந்த வரைக்கும் அது கடுவன்தான்.
“என்ன குட்டி?” என்று கேட்டுக்கொண்டே மஞ்சுவும் பக்கத்தில் வந்து நின்றாள். ““தடுவன்தான்”’ என்று சொல்லிவிட்டுக் கீழே விட்டேன்.
இந்த நாய்க்குட்டியை மஞ்சு வளர்த்துக்கொள்ளட்டுமே என்று பட்டது. திருப்பிக் கொடுத்துவிடுவதென்றாலும் ஆட்சேபணை கிடையாது எனக்கு. இதை நினைத்ததோடு சரி. மற்றவர்களின் தீர்மானம் போல செய்துகொள்ளட்டும் என்பதால் வெளியே சொல்லவில்லை.
பிறகு, நாங்கள் சாப்பிடும்போதுதான் ஞாபகம். “அந்த நாய்க்கு ஏதாவது குடுத்தியா மஞ்சு?”
“மத்தியானம் கொண்டு வந்ததுமே கொஞ்சம் பால் ஊத்திக் குடுத்தேன். சாயந்திரம் கொஞ்சம் கஞ்சி ஊத்திப் பாத்தேன். குடிக்கல. அப்புறம் பால்ல கொஞ்சம் தண்ணி கலந்து ஊத்திக் குடுத்ததும் குடிச்சுது.”
அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் வேலைக்குப் போய்விட்டேன். இரவு வீடு திரும்பியபோது பந்தல் காலில் நாய்க்குட்டியைக் காணோம். மஞ்சுவிடம் கேட்கவே, “பொடக்காளில கட்டியிருக்குது” என்றாள். கோவிந்தண்ணன், அது எதற்கு வாசலில் என்று சத்தம் போட்டானாம்.
அவனுக்கு இந்த நாய், பூனை, கோழி எதையும் வீட்டிலோ வாசலிலோ காணப் பிடிக்காது. அவற்றின் தொல்லைகள் அது மாதிரி. பூனையென்றால் பூச்சி, வண்டு, ஒடக்காய், எலி எனக் கண்டது கடியதைக் கடித்துத் தின்று மிச்சத்தை வீட்டிலே கொண்டுவந்து போட்டுவிடும். கோழிகள் திண்ணை, வாயிற்படிகளிலும், ஆள் அசந்த நேரத்தில் வீட்டுக்குள்ளேயும் கூட வந்து பேண்டு வைத்துவிடும். நாய்களின் தொல்லைகள் வேறு வகை. பெரியப்பா வீட்டு டாமி, பாத மண் மற்றும் ஈரம் துடைக்க படியில் போட்டிருக்கும் கோணிச் சாக்கையும் கவ்வி இழுத்துக் கொண்டு போய் அதில் சுகமாகப் படுத்துவிடும். கோவிந்தண்ணநுக்கு அதைக் கண்டால் எரிச்சல் மிகுந்து, குச்சியைத் தேடுவான். சில தடவை வெளுப்பியும்விட்டான். அதனால் அவனைக் கண்டதுமே டாமி வாலைச் சுருட்டிக்கொண்டு கமுக்கமாக எழுந்து போய்விடும். வாசல் மண்ணில் படுத்திருந்தால் கூட.
நான் வெளிச்சமிருக்க வீடு திரும்பிவிட்டால், டாமி எங்கிருக்கிறதோ அங்கிருந்து வாலையாட்டிக்கொள்ளும். ராத்திரியென்றால் ரோட்டிலேயே பார்த்துவிட்டுக் குரைத்து வரும். வாசல் விளக்கு வெளிச்சத்துக்கு வந்த பின்னர் அடையாளம் கண்டு கொனியும். இந்தக் கொனிப்பையும் குரைப்பையும் தவிர, இதுநாள் வரை எங்கள் நாய்கள் எதுவுமே ஆளைக் கடித்ததாக சரித்திரம் இல்லை.
சக்தியண்ணனிடம் மட்டும் இந்த நாய்களுக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட வாஞ்சை இருந்து வருவதும் ஆச்சரியமான விஷயம்தான். அவன் பெரும்பாலும் வெளியூரில் தங்கியிருப்பதால் எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவான். அவனைக் கண்டதுமே வாலை ஆட்டத் தொடங்கி, பின்னர் வாலுடன் உடம்பும் ஆடுமளவு கொனிந்து, அவன் மீது தொத்துக்கால் போடும். இத்தனைக்கும் அவன் பிஸ்கட்டோ, வறுக்கியோ வாங்கிவந்து போடுவதும் கிடையாது. குறைந்தபட்சம் தலையையோ உடம்பையோ தொட்டுத்
தடவிவிடுவதும் இல்லை. இந்த நாய்க்குட்டியும் பெரிதாகிவிட்டால் அவனிடம் மட்டும் தன் வாஞ்சையைக் காட்டுமோ என்னவோ?
பொடக்காளிப் பப்பாளி மரத்தடியில் அதன் மெல்லிய சத்தங்கள் கேட்டன. “இருட்டுக்குள்ளயா கட்டி வெச்சிருக்கற?” என்றதுக்குப் பிறகு மஞ்சு அதை அவிழ்த்துவந்து சுவர் ஓரமாகக் கட்டி வைத்தாள் – உபயோகம் இல்லாத ஒரு சிறிய அம்மிக்கல்லில்.
நாய்க்குட்டி கயிறை இழுத்துக்கொண்டு நடப்பதால் கால்களில் கயிறு சிக்கிக்கொண்டு இருந்தது. நான் அதை எடுத்துவிடச் சொன்னதும் மஞ்சு கயிறைப் பிடித்தபடியே ஒரு சிறு குச்சியை வைத்து அதன் கால்களை விடுவிக்க முயன்றாள். “ஏய்,… அந்தப் பக்கம் போ! இப்படி,… இப்படி முன்னாடி வா…!” என்றெல்லாம் அதனிடம் கட்டளை. தத்தித் தத்தி அது பாட்டுக்கு எங்கேயோ இழுத்துக்கொண்டு மேலும் சிக்கலாக்கிக்கொண்டது.
“கையில் எடுத்துவிடு” என்றால் அவள் கேட்கணுமே. “ஐயே… நாயைக் கையில தொடறதா?” என்கிறாள்.
“ஓ…! கையில தொட மாட்டாளாமா…! இவ நாயை வளத்தப் போறா…!’” என்றுவிட்டு நானே அதைச் செய்தேன். நாய்க்குட்டி சிக்கலிலிருந்து விடுபட்டதும் நடக்கத் தொடங்கியது. கயிற்றின் நீளம் வரைக்கும் சென்று, அதற்கப்பால் நகர முடியாமல் ‘ஊங்… ஊங்… என்று கத்தலானது. அப்போதுதான் கழுத்தில் கயிறு இறுகியிருப்பதைக் கவனித்தேன். “இவ்வளவு டைட்டாவா கட்டறது?” என்றபடி அதைத் தளர்த்திக் கட்டுவதற்காக அவிழ்த்தபோது தெரிந்தது, அது ‘சுருக்காமுடி என்று.
“என்ன வேய்க்கானம் உனக்கு! சுருக்காமுடி போட்டா நாய் இளுக்கும்போது கழுத்து இறுகிச் செத்தறாதா?”
“ஐயோ…! எனக்கு அது ஞாபகமே இல்ல…!”
“சுருக்காமுடி போட்டா இறுகிரும்ங்கறதையெல்லாம் மறக்கணும்னா உன்னாலதான் முடியும்.” சொல்லிக்கொண்டே முடிச்சை அவிழ்ப்பதற்குள், அந்த நாய்க்குட்டி திணறித் திமிறி கையை விட்டுக் கீழே இறங்கவும் செய்தது. அப்போதும் குச்சியால்தான் தடுத்து, ”ஏய்…! ஓடாத… இங்கயே நில்லு!” எனக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தாள். நான் அதைக் கயிற்றிலேயே சாதா முடிச்சாக அதன் கழுத்தில் சற்றே தளர்ந்திருக்கும்படியாகக் கட்டிவிட்டேன்.
“இதுக்குக் கயிறெல்லாம் போட்டா சரியாகாது. சங்கிலி இருந்தா நல்லது.”
“நம்மகிட்ட நாய்ச் சங்கிலி இல்லையே…!” என்றவள், “ரத்தனண்ணன் வீட்டுல ரெண்டு நாய்ச் சங்கலி இருக்குதாமா. ‘ஒண்ணுல இதுகூட சேந்த குட்டியைக் கட்டி வெச்சிருக்குது. இன்னொண்ண வேணும்னா தர்றேன்’னு ரஞ்சிதக்கா சொல்லுச்சு. நாளைக்கு வாங்கிட்டு வரணும்” என்றாள்.
அதன்படியே மறுநாள் ராத்திரி பார்க்கும்போது சங்கிலியால் கட்டியிருந்தது.
இதற்குள்ளாகவே அந்த நாய்க்குட்டிக்கு மஞ்சுவை எப்படியோ தனித்து அடையாளம் காணப் பழக்கப்பட்டுவிட்டது. அவள் வீட்டின் பின் கததவைத் திறந்துகொண்டு படியிறங்கினாலே அது சங்கிலியை இழுத்துக்கொண்டு அவளின் காலடிக்கு வரும்.
“அடே,… அதுக்கு இப்பவே எப்படி ஒரு அறிவு பார்றா!” என்று அப்பாவும் வியந்தார்.
நாய்க்குட்டிக்குப் பால் ஊற்றுவதற்கு மஞ்சு ஒரு பழைய ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடியைத்தான் பயன்படுத்தினாள். அதில் பாலை ஊற்றிக் கீழே வைத்தால், அதற்கு, ஒரு ஓரத்திலிருந்து குடிக்கத் தெரியாமல் முன்னங்கால்களையும் மூடிக்குள்ளே வைத்து பாலில் மண்ணாக்கிவிடுகிறது. ஆகவே, மூடியைக் கையில் சற்றே உயர்த்திப் பிடித்துத்தான் அதைக் குடிக்கவைக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்திலும் மஞ்சு வலது கையில் குச்சியை வைத்திருப்பாள். சங்கிலி கால்களில் சிக்கிக் கொண்டால் எடுத்துவிடுவதற்கும் குச்சியையே பயன்படுத்துவது மாறவில்லை. ஆனால், கூடுதலாக இப்போது நாய்க்குட்டி படுத்துக்கொள்வதற்கு சாக்கைப் போட்டு வைத்திருந்தாள். அப்படியும் அது பாலைக் குடித்துவிட்டுத் தரையில்தான் படுத்துக்கொண்டது.
காலையில் குளிக்கும்போது பார்த்தால் சாக்கின் மீது தலையை உடம்புடன் குறுக்கித் தூங்கிக்கொண்டிருக்கிறது. ராத்திரியில் பதினோரு மணி இருக்கும்போது அதனுடைய ‘ஊங்… ஊங்…’ என்கிற முனகல்கள் கேட்டது எனக்கு நினைவு வந்தது. ஒருவேளை குளிரில்தான் அப்படி நடுங்கி இருக்கும்.
வாசலில் கட்டியிருந்தால் வீட்டு மறைப்பில் அதற்குக் குளிரடிக்காது. ஆனால், அதை கோவிந்தண்ணன் ஆட்சேபிப்பான். எனவே, அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்தோம். அதன்படி பகல்பொழுதில் வாசலுக்கு அப்பால் உள்ள நெல்லி மரத்தில் அதைக் கட்ட வேண்டியது. ராத்திரியில் வாசல் பந்தல்காலில் கட்டிவிட்டு, காலையில் மீண்டும் நெல்லி மரத்துக்கே மாற்றிக் கட்டிவிடுவது.
சில வேளைகளில் மஞ்சுவும், சில வேளைகளில் நானும் இதைச் செய்தோம். அப்போது நாய்க்குட்டியைச் சொடுக்குப் போட்டு அழைத்தால் அது வருவதில்லை. சீழ்க்கை அடித்தும், அதனருகில் காலையோ கையையோ காட்டியும் தொடர்ந்து வருமாறு இடம்பெயர வைக்க வேண்டும். அப்படி இருக்கத்தான் அதை அழைப்பதற்குப் பெயர் இல்லாதது குறையானது.
“ஏம் மஞ்சு, இதுக்கு ஒரு பேரு வெக்கலாமல்ல? சும்மா எப்படி கூப்படறது?” என்றேன்.
“என்ன பேரு வெக்கறது?” என்றவள், “நீயே ஒரு பேரு சொல்லு” என்றாள்.
டாமி, சீஸர், டைகர், மணி என வழக்கமாக உள்ளது போலன்றி வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து. தோன்றிய பலதில் இறுதியாக, ‘அபி’ என்பதைத் தேர்ந்தெடுத்தேன்.
“அது பொம்பளைப் பேராச்சே…!” என்றாள் மஞ்சு.
பிறகு அதே தொனியில் ஆம்பளைப் பெயராக யோசித்து, சிபி என்று சொன்னது முடிவாயிற்று. அந்த நாய்க்குட்டி அருகே அமர்ந்து அந்தப் பெயரைச் சொல்லி சில தடவை அழைத்கேன். மஞ்சுவும், “சிபி… சிபி… சிபிக்குட்டீ….” என்று அழைத்தாள். என்னிடமும் மஞ்சுவிடமுமாக மாறி மாறி நகர்ந்து, எங்கள் பாதங்களைத் தன் முன்னங்கால்களால் தொற்ற முயன்றது அது – சங்கிலியின் எல்லைக்கு உட்பட்ட வரையிலும்.
அந்தப் பக்கமாக வந்த அம்மா, “அதை அவுத்துட்டா காலாற நடக்கும். குட்டி அப்படி ஓடியாடித் திரிஞ்சுதுன்னாத்தான் உஷாராகும்” என்றாள்.
நான் சிபியின் கழுத்தை சங்கிலியிலிருந்து விடுவித்தேன். இப்போது வாசல் முழுக்கவும் அது நாங்கள் நடத்துகிறபடியே தொடர்ந்து வந்தது. தன் போக்கிலும் முகர்ந்தபடி போனது.
இப்படியாக நான் சிபியுடன் விளையாட ராத்திரிகளில் சற்று நேரத்தை ஒதுக்கினேன். ஷேக் ஹேண்ட் கொடுக்க. பின்னங்கால்களில் நின்று உயரத்தே காட்டும் பிஸ்கட்டைக் கவ்வ என்பதாகவெல்லாம் பழக்க வேண்டும் என்றாள் மஞ்சு. ”ஆதுக்கு இந்தக் குட்டி இன்னும் கொஞ்சம் பெருசாகணும்” என்றேன்.
“சரி… நாளைக்கு இதுக்கு நாய் பிஸ்கட் வாங்கிட்டு வர்றயா?”
“இப்ப அது பிஸ்கட்டெல்லாம் திங்காது.”
“அதெல்லாம் திங்கும்” என்றவள் வீட்டிலிருந்த பிஸ்கட்டை எடுத்துவந்து துண்டு துண்டாகப் பிய்த்துப் போட்டாள். சிபி முகர்ந்து பார்த்துவிட்டு விலகிக்கொண்டது.
“நான் சொன்னனல்ல…! அது இப்ப கஞ்சியே குடிக்காது. அப்பறமல்ல பிஸ்கட் திங்கறக்கு?”
இதைப் பற்றி நாங்கள் பேசக்கொண்டிருந்தபோதுதான் மஞ்சு, ”இந்தக் குட்டியப் பாக்கறக்கு இதோட அம்மா இன்னிக்கு வந்திருந்தது தெரியுமா?” என்றாள். சொல்வது புரியாமல் என்ன, ஏதென்று விசாரித்தேன். சிபிக்குட்டியின தாயான, பெரும்பதிக்காரர் வீட்டு நாய், கடந்த ஓரிரு நாட்களாகவே மதியம் சுமார் பன்னிரண்டு, பன்னிரண்டரை வாக்கில் இங்கே வருகிறதாம். கட்டியிருக்கிற நாய்க்குட்டியின் அருகே வந்து பார்த்துவிட்டு திரும்பிப் போய்விடுமாம். “நாளைக்கு நீ வீட்லதான இருப்ப. அந்த நாய் வரும்போது காட்டறேன்!” என்றாள்.
அடுத்த நாள் ஞாயிறு என்பதால் எனக்கு விடுமுறை. மதியம் பன்னிரண்டே காலோ பன்னிரண்டரையோ இருக்கும். வீட்டுக்குள் இருந்த என்னை மஞ்சு அழைத்தாள். ‘சிபியோட அம்மா வருது.”
வெளியே வந்து பார்த்தேன். சின்னப் பெரியப்பா வீட்டுப் பக்கமாக ஒரு கருத்த பெட்டை நாய், எலும்புகள் துரத்தித் தெரிய நின்றுகொண்டிருந்தது. நாங்கள் இருப்பதைக் கண்டு தயங்குகிறது போலும். உள்ளே வந்து, கதவோரம் மறைந்துகொண்டு எட்டிப் பார்த்ததில், அந்தக் கருத்த தாய், நெல்லி மரத்தடிக்கு வந்து, சிபியை முகர்ந்து பார்த்தது. பிறகு அது வந்த வழியிலேயே திரும்ப ஓடிவிட்டது.
“அதுக்கு இந்தக் குட்டி இங்க இருக்கறது எப்படித் தெரியும்?” என்று மஞ்சுவைக் கேட்டேன்.
“எப்படின்னு தெரியல. செல்வான்தான் சொன்னான்,… அதோட குட்டிதான் இதுன்னு.”
நாய்களின் விசுவாசம், காவல் உணர்வுகள் பற்றியெல்லாம் விதவிதமாக அநேக கதைகளைப் பலரிடமும் கேட்டதுண்டு. ஆனால், இந்த விஷயம் நம்ப முடியாத ஆச்சரியமாகவே இருந்தது – நேரில் பார்த்தும்கூட.
அன்றைக்கு மதியம் சாப்பிட்ட பிறகு எனக்கு எழுத்துப் பணிகள் எதுவும் இருக்கவில்லை. போரடித்தது. வெளியே வந்தவன் சிபிக்குட்டியிடம் சென்றேன். அதைக் கட்டவிழ்த்துவிட்டு வாசலுக்கு அழைத்து வந்தேன்.
இப்போது அது காலருகே வந்து கடிக்கவும், நகர்கிற பக்கமெல்லாம் ஓடி வரவும் செய்தது.
‘பொவ்… பொவ்…’ என்று குரைக்கவும் தொடங்கிவிட்டது. அந்தக் குட்டிக் குரைப்பு, சின்ன வாலாட்டல், பாதத்தில் தொற்றிக் கடிக்க முனைவது என அதன் சுறுசுறுப்பில் என் மந்தமான பிற்பகல் பொழுது விரைந்து கழிந்தது. தெரு வரைக்கும் கூட்டிச் சென்றேன். அது ஆங்காங்கே நின்று செடிகளையும் கற்களையும் முகர்ந்து பார்த்தது. கூப்பிட்டால் உடனே வராமல் அங்கும் இங்குமாக ஓடி விளையாடியது. ஒரு வழியாக திரும்ப அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது எனக்கு.
சாயந்திரம் டி.வி.யில் சினிமா பார்க்க வந்த ரஞ்சிதக்கா, “குட்டியோட கலரு நல்லா இருக்குது. எங்கூட்ல இருக்கறது செவலைக் குட்டி. இதுக்கு என்ன பேரு வெச்சிருக்கறீங்க?” என்று கேட்டாள்.
பேரைச் சொல்லவும் அதை, “சிபி… சிபி…” என்று சொடக்குப் போட்டு அழைத்தாள். அது வாலை ஆட்டிக்கொண்டு வேறு திசைக்கு நகரவே, அதைக் கையில் எடுத்துக்கொண்டாள். சிபியைக் கொஞ்சியபடியே சோதித்துப் பார்த்தவள், “மஞ்சு கடுவங்குட்டின்னு சொன்னா. இது பொட்டையாச்சே!” என்றதும் திகைத்துக் குழம்பினேன்.
“எங்கண்ணனும் இது கடுவன்னுதான் சொல்லுச்சுங்க்கா” என்று மஞ்சு சொல்லவே, என் அறியாமை அல்லது அனுபவக் குறைக்கு அசடு வழிந்தேன்.
இந்த விஷயம் ராத்திரி வீட்டில் ப்ரஸ்தாபிக்கப்பட்டபோது, என் அறியாமையின் மீதான கேலியை விடவும் அந்தக் குட்டி பெட்டை என்பதுதான் மற்றவர்களுக்கு உறுத்தலாகிவிட்டது.
“பொட்டக் குட்டின்னா அது நமக்கு வேண்டாம்” என்றாள் அம்மா. “அதை செல்வாங்கிட்டயே திருப்பிக் குடுத்துரு.”
“அவங்க வாங்க மாட்டாங்கம்மா. அங்க இன்னொரு குட்டி இருக்குதாச்சே…!”
“அட, அதை எங்காவது கொண்டுபோயி விட்டுட்டாப் போச்சு” என்றான் கோவிந்தண்ணன். “ஏங்க கொண்டுபோய் விடறது?” என்றதற்கு, “முருகேசண்ணன் காட்டுக்கட்ட, பள்ளத்துக்குப் பக்கமா விட்டுட்டாப் போதும்” என்றான். ரோட்டில் அது வழியாகத்தான் நான் போய் வருவேன். காலையில் போகும்போது அப்படியே விட்டுவிடுமாறு சொன்னான்.
நான் மறுத்தேன். “எனக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்காது. நானே அவசர அவசரமாப் பொறப்பட்டுப் போறதாச்சு.”
“நீ சைக்கிள்ல ருபர்ல்வல்ல,… போர்கும்போது லாலாகாட்டு ரோட்டு முக்குல விட்டுடேன்…” என்றாள் மஞ்சு, கோவிந்தண்ணனிடம். அவனும் மறுத்தான். “அந்தக் கருமத்தைத் தூக்கிட்டுப் போறதா? நம்மனால ஆகாது.”
“ஏனுங்யா,… நீங்க கொண்டுபோயி விட்டர்றீங்களா?” மஞ்சு, அப்பாவிடம் கேட்டாள்.
“எனக்கென்னமோ அதையக் கொண்டுபோயி விடறதுக்கு மனசே இல்ல” என்றார் அவர்.
“அந்தக் கருப்பு நாய் நாளைக்கு வரும்போது குட்டிய அவுத்து விட்டர்லாம். அப்ப அது தூக்கிட்டுப் போயிருமல்ல” என்பது மஞ்சுவின் யோசனை. அவ்வாறே செய்துவிட நாங்கள் தீர்மானித்தோம்.
திங்கள் காலையில் மஞ்சுவிடம் அதை ஞாபகப்படுத்திவிட்டும் சென்றேன். ராத்திரி வந்து பார்த்தால் சிபிக்குட்டி வாசலிலேயே கட்டப்பட்டிருக்கிறது.
“ஏம் மஞ்சு, நாய்க்குட்டியை அவுத்துவிடவே இல்லையா?”
அவள் வருத்தத்தோடு சொன்னாள். “பத்து மணிக்கே அவுத்து விட்டுட்டேன். அந்தக் கருப்பு நாய் வரவே இல்ல இன்னைக்கு. சரி,… இதுவே எங்காவது ஓடிப்போறதுன்னாப் போகுட்டும்னு சாயந்திரம் வரைக்கும் கட்டவே இல்ல. அது வாசல்லயே சுத்திட்டிருந்துட்டு திண்ணை ஓரமாப் படுத்துத் தூங்கிருச்சு. அதுக்கப்பறந்தான் கட்டி வெச்சேன்.”
எனக்கு இதைக் கேட்கச் சங்கடமாக இருந்தது. இங்கேயே இருக்கட்டும் என வளர்த்திக்கொள்ளலாமா என்றும் யோசனை. இப்போது அதற்குப் பரிதாபப்பட்டால் பிற்கால விளைவுகளை யார் சமாளிப்பது? அதனால், கொண்டுபோய் எங்கேயாவது விட்டுவிடுவதே நல்லது என்றும் தோன்றியது. எதற்கும் சில நாட்கள் பொறுத்திருப்பது என எனக்குள்ளாக முடிவு செய்துகொண்டேன். அதுவரை சிபி இங்கிருக்கட்டும்.
அன்றைக்கும் சிபியுடன் சிறிது நேரம் பொழுது போக்கினேன். “இது பொட்டைன்னா… இந்தப் பேரு சரியாகாதே। அபின்னே வெச்சுக்கலாம்…” என்றபோது, “ஆ…மா! கொண்டுபோயி விடப்போற நாய்க்கு இனி பேரு எதுவா இருந்தா என்ன?” என்றாள் மஞ்சு.
மறுநாள் இரவில் வீடு திரும்பியபோது அபியை வாசவில் காணவில்லை.
மஞ்சுவிடம் விசாரித்தேன். அவள்தான் இன்றைக்கு மதியத்தில் அதைக் கொண்டுபோய் தெற்கே, லாலாகாடு பிரிவுக்குப் பக்கமாக ரோட்டோரப் புதர் ஒன்றில் போட்டுவிட்டு வந்தாளாம். வழியைப் பார்த்து வைத்துக் கொண்டு, திரும்ப இங்கேயே வந்துவிடக்கூடும் என்பதால் ஒரு பழைய ஒயர் கூடையில் போட்டுத்தான் கொண்டு சென்றிருக்கிறாள். “அங்க விட்டதுமே ஒரே ஓட்டமா ஓடிவந்துட்டேன்” என்றாள்.
“எதுக்கு ஓடிவந்த?” என்றான் கோவிந்தண்ணன்.
“நடந்து வந்தா அதுவும் பின்னாடியே வந்துருமேன்னுதான்!”
அதைக் கேட்டு மற்ற அனைவரும் சிரித்தோம்.
தொடர்ந்து மஞ்சு இன்னொன்றையும் சொன்னாள். சாயந்திரமாக வீட்டுக்கு ரஞ்சிதக்கா வந்தாளாம். அவளும் ரத்தினசாமியண்ணனும் கானல்புதூரிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சவாரி வண்டியில் போய்விட்டு வரும்போது லாலாகாடு பிரிவுக்குப் பக்கம் அபிக்குட்டியைப் பார்த்திருக்கிறார்கள். “குட்டியை அவுத்துட்டிருக்கறீங்கோ… அது பாட்டுக்கு அத்தன தொலைக்குப் போயிருச்சா’ என்றாளாம். இவள் அது பெட்டையென்பதால் கொண்டு விட்டுவிட்டதைச் சொல்லியிருக்கிறாள். அதற்கு, ரஞ்சிதக்கா, “அடடா… நல்ல குட்டியாச்சே!” என்று அங்கலாய்த்தாளாம்.
நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அபிக்குட்டி மத்தியானத்திலிருந்து எதுவும் சாப்பிட்டிருக்காதே என்பது எனக்கு நினைப்பு வர, அதையும் சொன்னேன்.
“அதக் கொண்டுபோயி விடறதுக்கு முன்னாடி பால் ஊத்துனேன். வயிறு நெறயக் குடிச்சுது” என்றாள் மஞ்சு.
இருந்தாலும் இப்ப அது வெறும் வயித்தோடதான இருக்கும்! பாவம், அது எங்க போச்சோ… இல்ல, அங்கயே கத்திட்டிருக்குதோ…”‘ என்றுவிட்டு
யோசனையாக, “இருட்டுல ஒண்ணும் தெரியாம பொதருக்குள்ள கெடந்து கத்திட்டிருக்கும்” என்றேன்.
யாரும் ஒன்றும் பதில் பேசவில்லை.
சாப்பிட்டு எழுந்த பின்னர் எனது மேஜைக்குத் திரும்பினேன். கோவிந்தண்ணன் டி.வி-யில் செய்தி பார்த்துவிட்டு டார்ச்சுடன் ரோட்டுப் பக்கமாக ‘வெளியே’ போகச் சென்றான். கால் கழுவி வந்ததும், “அங்க போயி பொதர்லல்லாம் தேடிப் பாத்தன் மஞ்சு. அந்த நாய்க் குட்டியக் காணம்” என்றான்.
“இந்த இருட்டுல பொதருக்குள்ள எல்லாம் போனயா? ஏண்டா, பூச்சி புளுவு இருக்கற எடம்…” என்றாள் அம்மா.
“டார்ச் இருக்குதல்லம்மா. பாத்துத்தான் தேடுனன்” என்றவன், “இருந்திருந்தா எடுத்துட்டு வந்திருக்கலாம். பாவம், என்னாச்சுன்னு தெரியலியே” என்றான்.
“எங்கயாவது போயிருச்சோ என்னமோ” என்றாள் அம்மா. “இல்லீன்னா, ஆராவது பாத்து எடுத்துட்டுப் போயிருப்பாங்க.”
பாம்புகளும் நரிகளும் புழங்குகிற இடமென்பதால் உறுதியாக எதையும் கணிக்க முடியவில்லை. வெறும் யூகங்களே நம்பிக்கையூட்டிக்கொண்டிருந்தன. அபிக்குட்டிக்கு எதுவும் ஆகியிருக்காது என்று நம்பவே நாங்கள் விரும்பினோம்.
அதன் பிறகு, நெல்லி மரத்தில் கட்டியிருந்த – ரஞ்சிதக்கா கொடுத்த – அந்த நாய்ச் சங்கிலி, ரொம்ப நாளைக்கு அப்படியே, கட்டப்பட்ட வாக்கிலேயே கிடந்தது. அதைச் காணும்பாோதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது அபிக் குட்டியை மட்டுமல்ல.
– ஆனந்த விகடன், 04-06-2000.