அன்பு இல்லம்
வழக்கத்திற்கு மாறாக இடமே பரபரப்பாக இருந்தது. மருத்துவர் வருவதும், போவதுமாய் இருந்தனர்.
சுற்றிலும் அழுகையும், புலம்பலும் சிலரிடம் அமைதியும், சிலரிடம் சிரிப்பும்,சிலர் ஜாடைப் பேச்சினில் வானத்தை நோக்கி பேசிக் கொண்டு இருந்தனர். ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என, அழைக்கப்படும் அற்புத பிறவிகள் ஒன்றாக மனித விலங்குகளிடமிருந்து தனித்து பாதுகாப்பாக வாழ வகை செய்யப்பட்ட இடம், இந்த அன்பு இல்லம்.
எல்லோருக்கும் பிடித்த சாந்தி அம்மாள் கிடத்தி வைக்கப்பட்டு இருக்கிறாள்.
இல்லம் வந்து சேர்ந்த நாள் முதல் நேற்று வரை இயங்கிக் கொண்டு இருந்த அவளின் உடலும், மனமும், செயலற்றுப் போனது. இதயம் மட்டும் இயக்கத்தில் இருந்தது.
கைகள் இரண்டும் இழந்த குழந்தை ஒன்று, காலால் அவளைத் தடவி தடவி அழ, அன்புக்கு உறுப்புகளின் அவசியம் கிடையாது, என பறை சாற்றியது.
இல்லத்தில் வளர்க்கப்பட்ட பறவைகளும், நாய்களும்,மீன்கள் உட்பட அனைத்து ஜீவ ராசிகளும் தனது அன்பைத் தவி்த் தவித்துக் காட்டி கொண்டு இருந்தன.
நானும், கண்கள் குளமாக, பார்வையாளனாக மட்டுமே, அப்பொழுதும், இப்பொழுதும் எப்பொழுதும் இருந்துள்ளேன். என்று நினைத்துக்கொண்டே அவளின் வாழ்க்கையை பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறேன்.
சாந்தி, என்னைவிட மூன்று வயது இளையவள், நான் கல்லூரி முடிக்கையில் , பள்ளி இறுதியில் இருந்தாள். லாந்தர் வெளிச்சத்தில் ஒருநாள் இருவரும் பார்த்துக் கொண்டதே இருவருக்கும் ஏற்பட்ட முதல் காதல் அனுபவம்.
காதல் இருவருக்குள்ளும் இருந்தது. ஒருவரிடம் ஒருவர் பரிமாற மட்டும் முடியாமல் போனது காலத்தின் கட்டாயம். ஒரே தெருவில் வசித்தாலும், கட்டுக் கோப்பான பழக்க வழக்கம் இருவர் வீட்டிலும்.
தரை சினிமா, சந்தை கூடும் இடம், நாங்கள் சந்தித்த இடங்கள்,
1956ல், எனக்கு ஆசிரியர் பணி தொடக்கப் பள்ளியிலே கிடைக்க, அவளுக்கு திருமணம் பார்த்து செய்து வைத்தார்கள்.
பார்வையானாக பார்க்கத்தான் முடிந்தது.
நாட்டிலே பாதி விவாகரத்துக்கு காரணமே காதலை நேரத்துக்கு சொல்லாமலே இருக்கிறதுதான்னு இப்ப புரியுது.
நான் மேல் படிப்புக்குப் போனேன். கணவன் வெளி நாட்டில் வேலைப் பார்ப்பதாகவும், நன்கு கவனித்துக் கொள்வதாகவும், அவள் முழுகாமல் அவள் அம்மா வீட்டிற்கு வந்ததாக… தெரு வழி வந்த செய்தி.
காலங்கள் கரைந்தோட…. சுகப்பிரசவம். மகன், மகள், என இரட்டைகளை ஈன்றாள்.
வெளிநாட்டிற்குச் சென்றவன் குழந்தைகளைக் காண சடலமாக வந்தான். அந்த இடியில் நிலைக் குலைந்தனர் இரு குடும்பத்தாரும்.
இவளுக்குத் தாய் வீட்டிலே தங்கும் படியானது. வேளைப் பளுவில் சாந்தியின் தாய் ஒரு நாள் ஓய்ந்து, போய்ச் சேர்ந்தாள்.
மனைவி போனப் பின்னே, மகளைக் கண்டு வெதும்பி குடித்து உயிரை விட்டான்.
கொடுமைகள் வரிசைக் கட்டி வரும்போதுதான் கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா? என்று யோசித்து ஆத்திகனும் நாத்திகனாவான்.
இவள் இரண்டு குழந்தையோடு அனாதியானாள். இரண்டு வருடங்கள் ஓடின..
இதையும் ஒரு பார்வையாளானாக பார்ப்பதை தவிர வேறு என்ன செய்ய என யோசித்த நான், அவளிடம் பேசினேன், இன்றும் நான் உன்னைக் காதலிக்கிறேன், நீ விருப்பப்பட்டால் நான் உன்னை மணம் செய்துக் கொள்ளத் தயார் என்று துணிவாகச் சொன்னேன்.
அது அவள் காதில் விழுவதற்கு முன் தெருக் காதில் விழுந்து, என் அப்பா என் காலில் விழுந்தார்.
மகனே! நான் உசிரோட இருக்கிறது உன் கையிலேதான் இருக்கு. அப்படி ஏதாவது பண்ணினே, நாங்க தாங்கமாட்டோம், உன் கொள்கையை பாராட்றேன்..
கொள்கையெல்லாம் பேச்சுக்கு நல்லாத்தான் இருக்கும். வாழ்க்கை நடைமுறைக்கு ஒவ்வாது. என பயமுறுத்தி அடக்கிவிட்டார். சாந்தியும், இனி எனக்குனு ஒரு வாழ்க்கை கிடையாது. அப்படி ஏற்படுத்திக்கிட்டாலும் உடல் சுகத்துக்காக ஓடிட்டானுதான் சொல்லும் இந்த ஊர். இந்த அவச் சொல்லோட வாழறதுக்கு நான் செத்திடலாம்..
ஆனா எம் புள்ளைங்களுக்காக நான் வாழ்ந்தாகனும்.. என தீர்க்கமாக முடிவெடுத்த சாந்தி சின்னதாக இட்டிலிக் கடை ஊரிலே ஆரம்பித்தாள். காலை இட்டிலி வியாபாரமும், மதியம் பல வீட்டில் வேலைப் பார்த்து பிள்ளைகளைப் தன்னலம் பாராமல் படிக்க வைத்தாள். நாட்கள் நகர நகர இட்லி வேக வேக , இவள் உடலும் நோக ஓடியது காலம்.
நானும் பதவி உயர்வுடன் மேல்நிலைப்பள்ளி சென்றேன், அங்கே அவளின் பிள்ளைகளும் படிக்க என்னாலான உதவிகளைச் செய்தேன், இருவரும் நன்றாக படித்து நல்ல வேளையும் கிடைக்க இருவருக்கும் மணமுடித்து வைத்தாள்,தன் சக்திக்கு உட்பட்டு.
வந்தவளாலும்,வந்தவனாலும் பிரச்சினைகள் வர..
இட்டிலியால் வளர்ந்த இவர்களுக்கு இவளின் இட்டிலி வியாபாரம் அவர்களுக்கு கொளரவக் குறைச்சலாகிப் போனது. விடச் சொன்னார்கள். அவர்களுக்காக அதையும் விட்டாள்.
பிள்ளை மாதா மாதம் பணம் அனுப்புவான்,அதை நான்தான் அவளுக்கு எடுத்துக் கொடுப்பேன், மகன் அனுப்பும் பணத்தில் மிச்சம் பண்ணி வைப்பாள்,மகள் வாங்கிக்
கொண்டு போவாள்.
பண்டிகைக்கு வருவான், போவான், குழந்தைகள் வளர்ந்தனர்,
அவன் பார்க்க வருவதும் , பணம் அனுப்புவதும் குறைந்து போனது,
இவளுக்கான மருத்துவ செலவுகள் அதிகமாயின. இவளுக்கென்று ஏதும் சேர்க்காமல் காலம் தள்ள, இடியென தாக்கியது அந்த செய்தி. தன் மகனை விபத்து ஒன்றில் இழந்தாள்.
வாழ்க்கை நடைபோட…… மீண்டும் கடைபோட, தனக்குப் போக மீத வருமானத்தையும், இட்டிலியையும் தன்னைப் போல் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தாள்.
புகையில் இட்டிலி மட்டும் வேகவில்லை, வெந்தது அவள் உடலும்தான்,
காசநோயால் பாதிக்கப்பட்டாள், மகள் வந்து பார்ப்பதை குறைத்துக் கொண்டாள், பின் வருவதையே நிறுத்தி விட்டாள். ஊர் மக்கள் இரக்கப்பட்டு அவளது மகள் இல்லம் அழைத்துச் சென்றனர்.
காச நோய் காரணத்தால், பாசத்திற்கு நோய் வந்ததாலும், வீட்டினுள் சேர்க்கவில்லை,மகள்.
ஆட்டோவில் அமர்ந்தபடி மகளை இறுதியாக ஏக்கமாக பார்த்தாள்.
அருகே பேசக்கூட வரவில்லை, என நினைத்து ரணமாகிப் போனது சாந்தியின் இதயமும்..
பார்வையாளனாகவே இருந்த நான் அன்று முதன் முறையாக அவள் வாழ்வின் முடிவை நான் எடுத்தேன். சாந்தியை அன்பு இல்லத்தில் சேர்த்துவிட்டேன்.
இனி உன் உழைப்பு இந்த இல்லத்திற்கு போய்ச்சேரட்டும், நானும், இவர்களும் உன்னை நன்கு பார்த்துக் கொள்கிறோம் , நீ உன் வீட்ல இருக்கிறாப்ல இங்க தங்கிக்கொள் என ஆறுதல் கூறி சேர்த்து விட்டு ஆறு வருடங்களானது.
பிடித்தவர்கள் கூட வாழ்வதும் ,பிடித்த வேலையை செய்வதிலும் தான் மகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சி எனக்கு இந்த ஆசிரியரால் இந்த இல்லத்தில் எனக்கு கிடைத்தது என அடிக்கடி கூறுவாளாம்.
அந்த சாந்தி தற்போது அன்பு இல்லத்தில் செயலற்று இறுதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாள், நான் பார்வையாளனாக இதோ இவளை நோக்கிச் செல்கிறேன். அருகே அமர்ந்தவர்கள் வழிவிட, நான் அவள் கரம் பற்றினேன். நாற்பது வருடத்திற்கு முன் பற்ற வேண்டிய கரம், இன்று முதுமையில் ஆறுதல் கூற பற்றினேன்.
அவள் காய்ந்த கரத்தில் அவளின் வாழ்க்கை தெரிந்தது. கண் திறந்து பார்த்தாள், விழி ஓரத்தில் கண்ணீர் வழிய, காதல் சொன்னாள்.
அவள் பேசாமலே அவளின் எண்ணங்களை புரிந்துக் கொள்ள என்னால் மட்டும் தானே முடியும். கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குளிர, நன்றாக ஒருமுறை அனைவரையும் பார்த்தாள்.அந்த பார்வையின் வலி, அவள் வாழ்வின் முடிவையும், இறுதியில் அடைந்த மகிழ்வையும் எனக்கு உணர்த்திவிட்டு உறங்கிப்போனாள்.
கூண்டிலிருந்து வெளியேறும் கிளி போல் உயிர் அழகாக அவளின் உடலை விட்டுப் பிரிந்தது.
மனதளவில் என்னையும், பிற உயிர்களையும் நேசித்து இருக்கிறாள், இவள் ஆதரவற்றவள் இல்லை, இறுதி சடங்குகளை நானே என் வீட்டில் செய்கிறேன். நீங்கள் மற்ற ஏற்பாடுகளை கவனியுங்கள் எனக்கூறி, அன்பு இல்லத்திலிருந்து நான் வாழும் இல்லத்திற்கு அவளை எடுத்து வந்தேன்.
சில மணி நேரமாவது அவளுடன் வாழ…..