அன்புள்ள அத்தான்…
சீக்கிரம் கிளம்பு சீதா.. வெயிலுக்கு முன்னாடி எல்லா வேலையும் முடிச்சிட்டு வர சரியா இருக்கும்.. ரகுராமன் வற்புறுத்த, இதோ வரேன் என்றாள்..
ரகுராமன்-சீதா நல்ல ஜோடி என்று பாராட்டுபவர்களே இல்லை. சீதா கிராமத்துப் பைங்கிளி. படித்தவள். ரகுராமன் முறைப்பையன். டவுனில் உத்யோகம். கல்யாணத்துக்குப் பிறகு டவுன் வாழ்க்கை சீதாவுக்கு.
வயல்வெளி, பம்புசெட் குளியல், புளியம்பழம் மற்றும் கொருக்காப்பளி பறித்தல், ஓலைக் காற்றாடி, நுங்கு வண்டி, கட்டவண்டி பயணம், டென்ட்டு கொட்டாய் சினிமா என்று ஓடிய கிராமத்து வாழ்க்கை அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைந்து கிடைப்பதை எண்ணி ஆரம்ப நாட்களில் வருந்தினாலும் பின்னாளில் பழகிக் கொண்டாள்..குழந்தையில்லா குறையைத் தவிர குறை ஒன்றுமில்லா வாழ்க்கை. கருத்தரிப்பு மையங்களின் அணிவகுப்பு இவர்களையும் அரவணத்தது.
ரெடி கிளம்பலாம் என்ற குரல் கேட்டு பைக்கை கிளப்பினான்..நீங்களே முடிச்சுட்டு வரலாம் இல்ல வழக்கம் போல. எதுக்கு இந்த வேகாத வெயில்ல என்னையும் சுமந்துகிட்டு என்று கேட்டவளுக்கு.. என்னோட பைக்ல வர அவ்ளோ சந்தோஷப்படுவியே அப்பெல்லாம். இப்ப அலுத்துப்போச்சா என்றதும்.. ச்சீ..ச்சீ சும்மா சொன்னேன். ஜாலிதான் இப்பவும். சந்தோஷமா ஓட்டுங்க என்று hug கினாள்..
சீத்து.. இந்தா இந்த challan ஃபில்லப் பண்ணு நான் கியூவில நிக்கறேன்.. பெப்பே என்று முழித்த சீதாவிடம்..
இங்க உன் பெயர் எழுது..
இங்க அக்கவுன்ட் நம்பர்..
இந்த இடத்தில டினாமினேஷன்.. புரியுதா..
பணம் கட்டிவிட்டு கிளம்பினர்.. போஸ்ட் ஆஃபீசில் RD.கட்ட நின்றவனிடம் challan பில்லப் செய்து நீட்டினாள்.. Hey..good good..என்று மெச்சினான்.
நான் ஒண்ணும் மக்கு இல்ல என்றாள்..
சார்..வாங்க உங்க ஒய்ஃப் ஆ என்ற காய்கறி காரரிடம்.. ஆம் என தலையாட்டி விட்டு..சீத்து…இவர் கிட்டத்தான் ரெகுலரா வாங்குவேன் என்று அறிமுகப்படுத்த வணக்கம் அண்ணா என்றாள்..
வரும் வழியில் வழக்கமாக மளிகை சாமான் வாங்கும் whole sale shop இல் ப்ரொவிஷன் லிஸ்ட் பேப்பர் வாங்கியபின்.. சீத்து எது இருக்கு எது வாங்கணும்னு லிஸ்ட் பில்லப் பண்ணி குடு வீட்டுக்குப் போனதும். இந்த கடையில தான் நாம வாங்கறமாங்க என்று கேட்டவளிடம் தலையாட்டி விட்டு நேராக E.B. Office சென்றான்.
சீத்து இந்த ரூட் தெரியுதா உனக்கு. ஹும் புரியுதுங்க. நம்ம வீட்டிலி்ருந்து வந்தா வேற வழியா வரணும் கரெக்டா? Yes..என்றான்..
சீத்து லேடீஸ் கியூவில் நில்லு. சீக்கிரமா கட்டிடலாம். அங்குள்ள A.E. அறையில் யாருமில்லாமல் பேன் ஓடிக்கொண்டிருக்க அதை ஆஃப் செய்த பின்பு வரிசையில் நின்றாள்.. (மின்சாரத்தை சேமிக்கவும் என்ற போர்டு கம்பீரமாகத் தொங்கியது..)
வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பின்பு ஓய்வெடுத்தனர். சீத்து.. சாயங்காலம் ப்ளாட் அசோசியேஷன் மீட்டிங்குக்கு போகணும். நீயும் வாயேன்.. அங்க இருக்கும் லேடி மேனேஜர் உன்ன பாக்ணும்னு சொன்னாங்க என்று சொன்னதும்.. ஓ அப்படியா.. வரேன் என்றாள்..
நாட்கள் ஓடின.. என்னங்க நீங்க சரியாவே சாப்பிடறதில்ல இப்பெல்லாம். ஏன்? இல்லையே சாப்பிடறேனே.. வேலை கொஞ்சம் டைட் ஆபீசில..நேரம் தவறி சாப்பிடறதனால பிடிக்க மாட்டேங்குது..
நாளுக்கு நாள் சோர்வாக ஆரம்பித்தான்.
ப்ளாட் அசோசியேஷன் மீட்டிங்கில் சக வீட்டு உரிமையாளர்களை அறிமுகப் படுத்தி வைத்தான்.. சீத்து இவர் பேர் தான் சிவராமன். Liason officer. இவர் மூலமா தான் எல்லா இன்ஷியூரன்ஸும் போட்டிருக்கோம்.
அந்த லேடி மேனேஜர் மிகவும் நெருக்கமானாள் நாளாக நாளாக. அவள் ஒரு விசிட்டிங் கார்டு தந்தாள் சீதாவிடம். அதில் செந்தில் டிரைவிங் ஸ்கூல் என்று போட்டிருந்தது.
அவளது பிறந்த நாள் வந்தது. சர்ப்ரைஸாக ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்கித் தந்தான். எதுக்குங்க வீண் செலவு? உங்க பைக் போதாதா நம்ம இரண்டு பேருக்கு. எனக்கு ஓட்டவும் தெரியாது..
கத்துக்கோ சீத்து. எப்பவும் என்னையே நம்பிட்டு இருக்க முடியுமா? நீ கத்துகிட்டா நானும் உன் பின்னாடி ஏறி வருவேன் இல்ல. என்ன ஏத்திக்க மாட்டியா.. (அந்த மேனேஜர் தந்த டிரைவிங் ஸ்கூல் கார்டு உதவியது..)
ஒரு நாள் வாசலில் காலிங் பெல் அடிக்க கதவைத் திறந்தாள்.. மேடம் ரகு சார் இல்லியா. நான் IFDC BANK இல் இருந்து வரேன் என்று விசிட்டிங் கார்டை தந்தார் அந்த நபர்.
என்னங்க…
சீத்து.. பீரோவில் housing loan file எடுத்துட்டு வாயேன். என்னங்க இவ்வளோ files இருக்கு. எது வேணும்? படி ஒண்ணொன்ணா.
ஹும் இது vehicle insurance..
இது life insurance…
இது term insurance.ன்னு போட்டிருக்கு.
Yes இதோ இருக்கு housing loan file. இந்தாங்க.
இந்த statement அந்த file ல வை. என்னங்க இன்னும் 9 வருஷமா கட்டணும். 6 வருஷம் கட்டிருக்கோம் இல்ல.. Yes.. எல்லா files உம் பத்திரமா வை.
சில வாரங்கள் கழிந்தன. ஒரு நாள் ரொம்பவே சோர்வாக இருந்த ரகுவை எப்போதும் காண்பிக்கும் பக்கத்திலிருந்த ஆஸ்பிடலுக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றாள். அப்போது தெரியாது அவளுக்கு அது தான் ரகுவின் கடைசி ஸ்கூட்டர் பயணம் மனைவியுடன் என்று..
மேடம் க்கு இன்னும் சொல்லலையா Mr.Raguraman..என்ற டாக்டரை விநோதமாகப் பார்த்தாள்…
தெரியாது டாக்டர். சொல்ற நேரம் வந்துடுச்சி. நீங்களே please…
சீத்தா மேடம்..வாங்க உட்காருங்க. நிதானமா கேளுங்க. Six months back ரகு வந்திருந்தாரு ஒரு நாள். எல்லா டெஸ்டும் எடுத்தோம். Sorry அவருக்கு stomach கேன்சர் final stage..எப்போ வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கும்.
இப்போ நீங்க கூட்டிட்டு வந்திருக்கிற இதுவே மோசமான தருணமா அமையலாம். டூ வீலர் வேண்டாம் cab ல அழைச்சிட்டு போங்க. Whatever is happen.. Life has to go on.. தைரியமா face பண்ணுங்க.. Hope you will..என்று கூறிய டாக்டரை விரக்தியுடன் பார்த்து மேலும் கூறினாள்.. இந்த விஷயத்தை மட்டும் சொல்லாமல் மறைச்சி ஒண்ணொன்னா சொல்லிக் கொடுத்தார் கொஞ்ச நாளா. நான் independent ஆ மேனேஜ் பண்ண என்ன தயார் பண்ணினாரோன்னு இப்ப நினைக்கிறேன்…
அங்கிருந்து கிளம்பினாள்…
இருவருக்குமிடையே மௌனமொழி மட்டுமே நடந்தது. ரகுவின் உயிரற்ற கண்கள் எதையோ உணர்த்தின. அந்த சோகம் அன்றிரவே நடந்தது. நடைப்பிணமானாள். அசோசியேஷன் லேடி மேனேஜர் உடனிருந்தாள் ஈமக்கிரியை முடியும் வரை. தேம்பல் ஒலி ஓயும் முன்பே சாம்பல் கைக்கு வந்தது மின் மயானங்களின் சாதனை. எல்லோருக்கும் உயிர் போகத் தான் போகிறது என்றாவது ஒரு நாள். அனைவரும் அதனருகே தான் பயணிக்கிறோம். சிலர் சீக்கிரம் தொட்டு விடுகிறார்கள். அவ்வளவு தான்.
விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தாள். உன்னை என்னிக்காவது ஒரு நாள் விமானத்தில் கூட்டிப்போறேன் என்று கூறி இருந்தது நினைவுக்கு வந்தது. அது நடக்கிறது இன்று.. ஆனால் அவனது அஸ்தியுடன்.. இதைத்தான் கணித்துக் கூறினானோ..விம்மினாள்…
கங்கை நீரோடு கரைந்தான் ரகு.
மேல் வீட்டு சிவராமன் காப்பீட்டுத் தொகைகளை வாங்க உதவினார். அன்று வந்த IFDC அலுவலர் வீட்டுப் பத்திரங்களை மீட்டுக் கொடுத்து இனி dues கட்டத் தேவையில்லை என்று கூறிச் சென்றார். அவனது கம்பெனி நிர்வாகம் பணப்பலன்கள் அனைத்தையும் சீத்தாவின் bank account இல் டெபாசிட் செய்தது.
ஏன் எதற்கு எனக்கு இவ்வளவு பணம். என்ன செய்யப் போகின்றன விலை உயர்ந்த இந்தக்காகிதங்கள் என்று ஒரு நாள் நினைத்துக் கொண்டிருக்கையில்..அடி வயிற்றில் குறு குறுவென ஒரு உணர்வு.
சில வருடங்களாய் எடுத்துக்கொண்டு வந்த fertility treatment இன் விளைவு. இனம் புரியாத சந்தோஷத்துடன் ரகுவின் போட்டோவை பார்க்கிறாள். Whatever is happen life has to go on என்று அன்று டாக்டர் கூறியதையே ரகுவின் வாயிலிருந்து போட்டோ மூலம் உச்சரிப்பது போன்ற உணர்வு.
உடல் சிலிர்த்தவண்ணம் ரகுவின் வாரிசை சுமந்து கொண்டு பயணிக்கிறாள்… மீண்டு(ம்) வா என்கிற ஒற்றை ப்ரார்த்தனையுடன்..