அன்புதான் இன்ப ஊற்று…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2025
பார்வையிட்டோர்: 2,460 
 
 

என்னதான் பிரச்னை…? என்று தோன்றியது எனக்கு. என்னவாம்….? என்று அவளிடம் கேட்டேன். உங்களுக்கு ஒண்ணும் இல்லை… – பட்டென்று பதில் வந்தது விமலாவிடமிருந்து. ஒரு வயதுக்கு மேல் ஆகி விட்டால் நம்மிடம் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் வீட்டில்.. இந்த அலட்சியப் போக்கில் என் மனையாளும் சேர்ந்து கொள்வதுதான் விசேஷம். ஒரு பக்கம் வருத்தம்.

அவளென்ன குமரியா? என்னை விட நாலு வயது சின்னவள். அவ்வளவுதானே…? ஆனால் தன்னை அந்தச் சின்னவனோடு சேர்த்துக் கொண்டு என்னை ஒதுக்குகிறாள். பொருட்படுத்தாமல் கழிக்கிறாள். அப்படியிருப்பதில் அவளுக்கு ஒரு திருப்தி.

அப்படியிரு…வேண்டாம்ங்கல…ஆனால் நல்லதை வழிகாட்ட வேண்டாமா? மகனோடு சேர்ந்து கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தால் எப்படி? அவன் சொல்வது தப்பு என்று தெரிந்தாலும் ஒத்துப் போவது எப்படி?

மனிதனுக்கு வாழ்க்கை மிதமாய், பிரச்னை எதுவுமின்றி ஓடிக் கொண்டிருந்தால் அதில் ஸ்வாரஸ்யமிருப்பதில்லை. எதையாவது நோண்டி, திருகி, கோணலாக்கிக் கொண்டு அலைந்தால்தான் திருப்திப்படுகிறது. ஒன்றுமேயில்லையா, கூட இருப்பவர்களைக் கிள்ளி விடுவோமே என்று அலைகிறார்கள். அது உறவாய் இருந்தாலும் அப்படித்தான்.

இப்படி இருப்பது தவறு என்று யார் இவர்களுக்கு உணர்த்துவது? யார் எடுத்துச் சொல்வது? அல்லது யார் தீர்த்து வைப்பது? வயதில் முதிர்ந்த அனுபவஸ்தர்களான பெரியவர்கள், வீட்டில் சின்னவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். வழிகாட்டியாக இருக்க வேண்டும். நாம் கூடவே இருப்பது அதற்காகத்தானே? அவர்களோடு சேர்ந்து பொருத்தமில்லாமல் கொட்டமடிக்கவா? அல்லது அவர்களின் பிரச்னைகளைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போகவா? அல்லது காதில் விழாததுபோலவே இருந்து விடவா? மதி மண்ணாய்ப் போனது போல் ஜடமாய் இருந்து கழிக்கவா?

என்ன ஒண்ணுமில்ல….அவனோடு சேர்ந்து நீயும் குழம்பிட்டிருப்பியா….? ஏதாவது தீர்வு சொல்லணுமில்ல…? உங்கிட்டதானே வந்து புலம்புறான்…?

என்ன பெரிய்ய்ய்ய தீர்வு? இதுக்கெல்லாம் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணனுமா? தொட்டுத் தொட்டு எல்லாமும் அப்படித்தான் இருக்கு…அவன் பாடு அவனுக்கு…என் பாடு எனக்கு…உங்க பாடு உங்களுக்கு…..அவ்வளவுதான்…

இப்டிப் பொதுவாவே பேசிட்டுப் போனா எப்படி? விஷயம் என்னன்னு சொல்ல மாட்டியா….?-

ஒண்ணுமில்லப்பா….குப்பை போடப் போனா…அந்தாளு என்னத்தையாவது சொல்றான்….தினமும் எதாச்சும் சலிச்சிக்காம குப்பையை வாங்கிக்கிறதில்லை….அதான் உங்கம்மாட்ட சங்கடப்பட்டேன்…

என்ன சொல்றான்…..? வாங்க மாட்டேங்கிறானா? அல்லது போடக் கூடாதுங்கிறானா? வண்டியைக் கொண்டுவந்து நாலு தெரு சந்திக்கிற இடத்துல நிறுத்திக்கிட்டு விசிலடிக்கிறான்தானே….கொண்டு போய் போட்டுட்டு வந்தா முடிஞ்சிது….இதிலென்ன பிரச்னை…?

அங்க கொண்டுவந்து நிறுத்துறதுதான் அவன் வேலையா…? தெருவுக்குள் வரமாட்டானா…?

வந்திட்டுத்தானே இருந்தான்….இப்போ வீடு வீடால்லாம் வர முடியாதுங்கிறமாதிரி அங்கியே நிறுத்திக்கிட்டு விசிலடிச்சுக் கூப்பிடுறான்….யாரு கேட்கிறது இதை?

அதாவது தொலையட்டும்…வரான்…வரல்லை…அதவிடு…கொண்டு போய்ப் போட்டா…எதாச்சும் நொண்டு நொடை சொல்லிட்டேயிருக்கானே…? – பையன் பெருத்த சங்கடமாய் உணர்ந்தது போலிருந்தது.

சரி விடு…நாளைலேர்ந்து நான் கொண்டு போய்ப் போடுறேன்…அவ்வளவுதானே…! எங்கிட்ட சொல்றானா பார்ப்போம்….. – நான் சொன்னேன்.

ஆமா…அது ஒண்ணுதான் குறைச்சல்…நீங்க ரெண்டு மாடி இறங்கிப் போய் தடுக்கி விழறதுக்கா…? லிஃப்ட் இருந்தாலும் பரவால்லை…

பத்திரமா இறங்கிப் போயிட்டு வரேன்…பயப்படாதே….- அந்த மட்டுமாவது கொஞ்சம் கரிசனம் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன்.

அதுக்கா நான் சொன்னேன்…அவன் தேவையில்லாமப் பேசுறான்ங்கிறதைச் சொல்ல வந்தா…ஏதேதோ பேசிட்டிருக்கீங்களே ரெண்டு பேரும்…? – பையன் சலித்துக் கொண்டான்.

என்ன பேசுறான் அப்டி…? அதத்தான் சொல்லேன்…சொன்னாத்தானே தெரியும்…?

என்ன இப்டிக் கொண்டு வர்ற…மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு பிரிக்கணும்னு எத்தனை தடவை சொல்றது? ஒண்ணாவே போட்டுக் கொண்டு வந்தா….? அப்டீங்கிறான்….அப்புறம்…இங்க போடாதீங்க…அங்க போடுங்க… அதுல போடாதீங்க, இதுல போடுங்கன்னு மாத்தி மாத்திப் பெட்டியைக் காண்பிக்கிறது….தூக்கி எறியாதீங்க…பக்கத்துல வந்து போடுங்கங்கிறது…இப்டி ஏதாச்சும் நச்சு நச்சுன்னு சொல்லிட்டேயிருக்காம்ப்பா…ரொம்பச் சங்கடமாயிருக்கு…..

எல்லார்ட்டயுமே இப்டிச் சொல்றானா…? நான் கேட்டேன் குறிப்பாய். என்னவோ இடறுவதுபோல் தோன்றியது எனக்கு. வயதில் பெரியவன்…சின்னப் பையனான இவனை

சமயத்தில் ஒருமையில் அழைத்திருப்பான்…அது ஒன்றும் தவறு என்று தோன்றவில்லை. பையன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை…

..எங்கிட்ட மட்டும்தான் எரிஞ்சு விழறான்ப்பா….எத்தனையோ லேடீஸ் கொண்டு வந்து போடுறாங்களே…யார்ட்டயும் வாயைத் திறக்கிறதில்லை….அவங்க முன்னாடி என்னைத்தான் எகிர்றான்….திமிருதான அவனுக்கு…..

அவங்கள்லாம் எப்டிப் போடுறாங்க….ரெண்டாப் பிரிச்சே கொண்டு வர்றாங்களா…?

அதுதான் கிடையாதுப்பா…யாரும் இன்னும் அப்டியெல்லாம் பழகலை….அவங்கவங்களுக்கு இருக்கிற மார்னிங் உறரிபரில இதை வேறே பிரிச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்களா…சாப்பாடு, டிபன்னு ரெடி பண்ணி, குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிச்சு, அவங்களும் எடுத்து வச்சிட்டுக் கிளம்புறதுக்கே டைம் பத்தலை…கால்ல வெந்நீரைக் கொட்டிக்கிட்ட மாதிரிக் கிடக்காங்க….எல்லாரும் ஒரே பையாத்தான் கொண்டு வந்து போடுறாங்க…நான்தான் பார்க்கிறேனே….! வழக்கமா குப்பை லாரி வர்ற இடம் இருக்கில்லப்பா…அங்க உட்கார்ந்து இவங்களே பிரிச்சிட்டிருக்காங்க…அதையும் பார்த்தேனே…அப்புறம் எதுக்கு என்னை மட்டும் ராவுறான்….கொழுப்புதானே…? – எரிச்சலில் விழுந்தன வார்த்தைகள்.

புரிந்து போனது எனக்கு. சரி…..நாளைக்கு குப்பை போடுற போது நானும் வர்றேன்…. – என்றேன்.

ஆமா…நீங்க போயி புதுஸ்ஸா என்ன கிழிக்கப் போறீங்க….? உங்களப் பார்த்தவுடனே பயந்துடப் போறானாக்கும்….?

சரி வேண்டாம்…என்கிட்டே கொடுங்க….நானே போய் போட்டுட்டு வர்றேன்னு சொல்றேன்…அதையும் கேட்க மாட்டேங்கிறீங்க…..அப்புறம் என்னதான் செய்றது….?

சரி…விடுறா…..நாளைக்கு உங்கப்பாவும் வரட்டும்….என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே…..! பையனுக்கு ஒப்புதலா தெரியவில்லை. அமைதியாயிருந்தான்.

மறுநாள் காலை……விசில் சத்தம் நீளமாய்க் கேட்க…குப்பைப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான் மகேஷ். வர்றியாப்பா….? என்றான்.

நானும் கிளம்பினேன். மாடிப்படி இறங்கி….சற்றே தூரத்தில், அந்த நான்கு தெரு மையத்திற்கு வந்தபோது அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

ஒரு புன்னகையோடு…நான் அவனை நோக்கினேன். “நல்லாயிருக்கீங்களா…? பார்த்து ரொம்ப நாளாச்சு….!“ என்றேன்.

இருக்கேங்கய்யா….நீங்க சௌக்கியங்களா….? என்றவாறே மகேஷைப் பார்த்தவன், தம்பி உங்க மகருதானுங்களா….? என்றவாறே “கொண்டாங்க…“ என்றான் அவனைப் பார்த்து.

பெட்டியில் போடப் போனவன், கை நீட்டிய அவனிடம் கொடுத்தான் குப்பைப் பையை. சரி…வரட்டுங்களா…. வெய்யில் ஏறிட்டேயிருக்கு……சீக்கிரம் கிளம்பப் பாருங்க….- என்றவாறே முன்னே திரும்பி நடந்து கொண்டிருந்த பையனைத் தொடரும் முன், “இந்தாங்க…..வச்சிக்குங்க…“..என்றேன்.

வேணாங்கய்யா….எதுக்கு இதெல்லாம்…?

இல்ல…இருக்கட்டும்…பிடிங்க….டீ சாப்பிடுங்க…..-சொல்லிவிட்டுப் பையனைப் பின் தொடர்ந்தேன்.

என்னப்பா இது…அவன்ட்டப் போய் இப்டியெல்லாம் பேசுற….? மகேஷ் கேட்டான். நல்லவேளை…அவன்ட்டப் போய் பேசுற? என்று கேட்கவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.

எப்டி….? எப்படிப் பேசறேன்…? என்றேன் பதிலுக்கு..

நல்லாயிருக்கீங்களாங்கிறே…பார்த்து ரொம்ப நாளாச்சுங்கிறே…பதிலுக்கு அவன் என்னடான்னா படு சகஜமா சௌக்கியங்களான்னு விசாரிக்கிறான்…..என்னதிது….? முன்னப் பின்னப் பார்க்காத ஆள்ட்ட…?

ஏன் விசாரிக்கக் கூடாதா? பதிலுக்கு நலம் விசாரிக்கிறான்….அந்தப் பக்குவம் இருக்கே…? ஒருத்தனப் பொதுவா விசாரிக்கிறதுல என்னப்பா தப்பு? அவனும் மனுஷன்தானே…? நாம ஆபீசுல வேலை பார்க்கிறோம்…அவன் கார்ப்பரேஷன்ல வேலை செய்றான்…அதானே வித்தியாசம்….? சம்பாதிச்சித்தானே சாப்பிடுறான் அவனும்…

அது சரிப்பா….ரொம்ப நெருக்கமா இருக்கிறாப்லல்ல இருக்கு உன் கேள்வியும், அவனோட பதிலும்…அப்போ ஏற்கனவே இந்தாளை தெரியுமா..உனக்கு..?

எதுக்குத் தெரியணும்….? இல்ல எதுக்குத் தெரியணும்ங்கிறேன்….? அவனையும் மனுஷனா மதிச்சதாலே கேட்டேன்?…இதெல்லாம் தானா வரும்ங்கிறேன்….ஒருத்தரைப் பார்த்து வணக்கம்னு சொல்றதும், நல்லாயிருக்கீங்களான்னு கேட்கிறதுக்கும் சாதாரண அறிவு போதும்….மனசுல அன்பும், நேயமும்தான் முக்கியம்….எல்லாம் தானா வரும்….

அப்போ நான் அப்டி மதிக்கலேங்கிறே…. அதானே…?

அப்டி அர்த்தமில்லப்பா….தெரிஞ்சிக்கணும்னு சொல்ல வர்றேன்…அவனும் ஒரு தொழிலாளிதான்…வேலை செய்து, சம்பளம் வாங்கிப் பிழைக்கிறவன்தான்ங்கிற எண்ணம் வேணும்….வெறுமே குப்பை வண்டிக்காரன்தானே…அழுக்கோட அழுக்கா நாத்தமாத் திரியறவன்தானே…வீதி வீதியா வந்து போட்டதை அள்ளிட்டுப் போறவன்தானேங்கிற நெனப்பு கூடாது…. அந்த அலட்சியத்த அவன் உணரக் கூடாது… அதுக்காகச் சொல்ல வந்தேன்….

அதான்…அப்படி நான் நினைக்கிலேங்கிறே…அதானே. அர்த்தம்…நீ சொல்றதுக்கு?

இந்த பார் மகேஷ்…நான் உங்கிட்ட சண்டைக்கு வரல்லை…எனக்குத் தோணினதைச் சொன்னேன்…அவ்வளவுதான்..யோசிச்சுப் பார்…புரியும்….இந்த உலகத்துல திருடறது, பொய் சொல்றது, பிச்சையெடுக்கிறது இது மூணும்தான் கேவலம்…மத்த எதுவும் கேவலமில்லே…தெரியுதா? …நம்பள மாதிரி அவனும் ஒரு தொழில் செய்றவன்ங்கிற எண்ணம் வேணும்….பெரிஸ்ஸா மதிக்கணும்ங்கிறது கூட இல்லே…அவனையும் பொருட்படுத்துற மாதிரி உணர வச்சாப் போதும்…கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு வீடியோ வந்திச்சே ஃபேஸ்புக்ல…கவனிச்சிருப்பியே….இந்தக் கொரோனா காலத்துல தங்கள் உடல்நலத்தையும் பொருட்படுத்தாது, தவறாம தினமும் வந்து…வீடு வீடா…அபார்ட்மென்ட் அபார்ட்மென்டா வண்டியை உருட்டிட்டுப் போய் குப்பை எடுத்துப் போற ஊழியர்களுக்கு…மாலை போட்டு மரியாதை செய்தாங்களே. அங்க குடியிருக்கிறவங்க சில பேர்…..அதைக் கவனிச்சியா….? மாடி பால்கனிலருந்து நிறையப் பேர் கைதட்டி வாழ்த்தினாங்களே? கவனிச்சியா? நம்பள விட அவங்களுக்குத்தான் நோய் வர்ற சாத்தியக் கூறு அதிகம்…அப்டியிருந்தும் எப்படி அவங்க இந்த இக்கட்டான காலத்துல கூட கடமையை சின்சியராச் செய்றாங்கங்கிறதுதானே அந்த மரியாதைக்கான அர்த்தம்…. அவங்களை மதிச்சா…இன்னும் கொஞ்சம் நல்லா நடந்துக்குவாங்க…அவ்வளவுதான்.இக்கட்டான காலகட்டத்துல ஒருத்தவுங்க எப்டி செயல்படுறாங்கங்கிறது ரொம்ப முக்கியம்….எளிய மனுஷங்களுக்கு நம்ப பாராட்டு, நெருக்கமான பேச்சு இதெல்லாம் ஒரு ஊக்கம். சந்தோஷம்….இந்த சிம்பிள் சைக்காலஜி நிறையப் பேருக்குத் தெரியறதில்ல….

எப்டியோ…ஆளைக் காசைக் கொடுத்து சரி பண்ணிட்டே….இதையே என்கிட்டே கொடுத்துவிட்டிருந்தேன்னா நான் கொடுத்திருக்கப் போறேன்…அப்புறம் என்ட்டயும் ஏன் வாயைத் திறக்கப் போறான்…?

பையனின் உடனடிப் புரிதலைப்பற்றி சற்று வருத்தமாய்த்தான் இருந்தது எனக்கு. இப்போதும் அவனை, அவனது உழைப்பை மதித்ததாகத் தெரியவில்லையே?

என்றோ ஒரு நாள் அன்பின் அடையாளமாய் ஆத்மார்த்தமாய்ச் செய்யும் ஒன்று எப்படியான ஒரு கொச்சையான அர்த்தத்தை, மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது?

வயதும் அனுபவமின்மையும்தான் இதற்கெல்லாம் காரணமோ? அறியப்படும் வெவ்வேறுவிதமான சமூக நிகழ்வுகள் அவனை இப்படியெல்லாம் எண்ண வைக்கிறதோ?

.நான் அவனை சக மனிதனாய் மதித்துப் பேசியது இவனுக்குப் புரியவில்லையோ? புரியவில்லையா அல்லது புரிய மறுக்கிறானா? எளிய விஷயங்களில் கிடைக்கும் அனுபவங்களை அலட்சியப்படுத்துவது மனித இயல்பு போலிருக்கிறது…!

இது தற்காலிகத் தீர்வுதான். நிரந்தரத் தீர்வுங்கிறது, மக்கும் குப்பை – மக்காத குப்பைன்னு நாமளே பிரிச்சுக் கொண்டு போய்ப் போடுறதுதான். அரசாங்கம் அதைத்தானே சொல்லுது….? அரசு சொல்லாமலேயே நாமளாச் செய்ய வேண்டியதில்லையா அது? அதுல இன்னைவரைக்கும் சுணங்குறோமே…? அவன் கேட்குறதுல என்ன தப்பு? அவனுக்கு அப்படிச் சொல்லியிருக்காங்க…கேட்கிறான்…அது அவன் ட்யூட்டி…நம்ம ட்யூட்டி?

அன்பும், கருணையும், நேயமும் வாழ்க்கையின் அடிநாதமாய் ரத்தத்தோடு ஊறிய அல்லது பிறவியிலேயே இயல்பாய் அமையாதவரை, அல்லது அனுபவ சாரமாய் உணரப்படாதவரை எல்லாமும் மாறுபாடாயும், விபரீதமாயும்தான் தோன்றும் போலும்…! காலம்தான் எல்லாவற்றையும் கனிய வைக்கும்…நினைத்துக் கொண்டே அவன் தோளில் தட்டி, வா…போவோம்….என்று உடன் நடந்தேன்.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *