அந்த ஒரு நாழிகை!





மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி நிறுத்தி, உரிய நேரம் வரும் வரை பிரசவமாகாமல் தடுத்தான் மங்க தேசத்து வாரிசும், தற்போது எதிரிகளிடம் நாட்டை இழந்து காட்டிற்குள் தலை மறைவாக வாழ்பவனுமான வரகுலன்.
“டேய் வரகுலா… அவளுக்குப்பிரசவமாகாமல் தடுத்து அவளை சவமாக்கி விடாதே… அந்தபாவம் உன்னை ஏழு ஜென்மத்துக்கு விடாது. அவளுக்கு பிறக்கக்கூடிய குழந்தை நாட்டை ஆளாவிட்டாலும் பரவாயில்லை, உயிரோடு இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து விட்டு போகட்டும். கயிற்றை அவிழ்த்து அவளைக்கட்டிலில் படுக்க வைக்க மாட்டாயா…? மருத்துவச்சியே கண்களில் கண்ணீர் விட்டு கதறுகிறாளே… உனக்கு மன இறக்கம் சிறிதும் இல்லையா? எனக்கும் பயமாக இருக்கிறது. இறைவா நான் என்ன செய்வேன்….?” கண்கலங்கி பேசிய தாய் மயங்கினியின் பேச்சைக்காதில் வாங்கிக்கொள்ளாமல் உரிய நேரத்துக்காகக்காத்திருந்தான் வரகுலன்.
“நம் மங்க தேசம் கைவிட்டுப்போய் இதோடு மூன்று தலைமுறை முடிந்து போனது. சகோதரியின் மகத தேசத்தையும் அதே சதிகாரர்கள் பிடுங்கிங்கொண்டார்கள். எத்தனை காலத்துக்குத்தான் எதிரிகளைக்கண்டு பயந்து இந்தக்காட்டுக்குள் மிருகங்களிடையே வாழ்வது? இந்தக்குழந்தையாவது பிறந்து இழந்த நாட்டை மீட்டு ஆளட்டும். நாட்டை இழந்து காட்டிற்க்குள் வாழ்ந்த மகத தேசத்து மன்னர் வாரிசான முதலாம் மாறவர்மன் என் சகோதரி வசுந்தையை மணந்து, மனைவி கருவில் குழந்தையைச்சுமந்திருக்கையில் எதிரிகளின் வாளுக்கு இறையாகிவிட்டான். இரக்கமின்றி வெட்டிச்சாய்த்து விட்டுச்சென்று விட்ட தந்தையைக்கொன்ற கயவர்களை தனயன் பெரியவனாகி, நாட்டுக்கு மன்னனாகி அழித்து ஒழிக்கட்டும். இல்லையேல் பிறக்கும்போதே செத்து வீழட்டும். இதோடு மகததேசத்து உண்மையான வாரிசு ஒழிந்து போகட்டும். மங்க தேசத்து வாரிசான நானும் என்னை மாய்த்துக்கொள்கிறேன். எனது ஆசைகளும் மண்ணோடு புதைந்து போகட்டும். இரண்டில் ஒன்று நடக்கட்டும்” உறுதியாகக்கூறியவனைக்கண்டு அனைவரும் பேச்சிழந்து நின்றனர்.
வசுந்தைக்கு பிரசவ வலியைத்தாங்கிக்கொள்ள மயக்க மூலிகையை அரைத்து நீரில் கலக்கிக்கொடுத்தான். தமக்கை கண் மூடினாலும் தம் கண்களை இமைக்காமல் கூட இருந்து கண்ணும் கருத்துமாகப்பார்த்துக்கொண்டான் சோதிடத்தை முற்றிலுமாக அறிந்த வரகுலன்.
உரிய நேரத்தில் குழந்தை பிறந்தால் மட்டுமே கோள்களின் உதவியால் பிறக்கும் குழந்தை மன்னனாக நேரும் என்பதை அறிந்து, அந்த நேரம் வரும் வரை பிரசவ வலி வந்தும் காத்திருக்கச்செய்து எதிர்பார்த்த தருணம் வந்ததும் வசுந்தையை கட்டிலில் இறக்கிப்படுக்கவைத்து, கிரக வலிமை மிகுந்த அந்த ஒரு நாழிகை நேரத்தில் குழந்தையை மருத்துவச்சியின் உதவியுடன் பிறக்கச்செய்தான். பிறந்த குழந்தையை மருத்துவச்சியிடமிருந்து கையேந்தி வாங்கினான். குழந்தை அழவில்லை. மாமன் வரகுலனின் முகத்தை முதலில் கண் விழித்துப்பார்த்தது.
மாமன் எனும் முறையில் சர்க்கரைத்தண்ணீரை தனது தாயிடமிருந்து வாங்கி முதலாக குழந்தையின் நாக்கில் தனது சுண்டு விரலால் வைத்த போது” மாவீரன், ராஜாதி ராஜன், மகத தேசத்தை ஆளப்போகும் இரண்டாம் மாறவர்மன் வாழ்க” என முழக்கமிட்டான் வரகுலன். இதைக்கேட்டு
குழந்தை சிரித்ததைக்கண்டு பலரும் ஆச்சர்யம் கொண்டனர்.
“இந்த பஞ்சமகா புருச யோகம் கோடி பேரில் ஒருவருக்குத்தான் கிடைக்கும். அது தவிர கெஜ கேசரி யோகம், தருமகருமாதிபதி யோகம்னு ராஜ யோகங்களுடன் பல கிரகங்கள் சுபபலமாக சஞ்சரிக்கும் சமயம் பிறந்திருக்கின்றான் மகத வாரிசு. அஷ்டமாதிபதி கெட்டுப்போய் லக்னாதிபதி உச்சமான காரணத்தினால் அவனை பக்த பிரகல்நாதனைப்போல் கொல்ல நினைப்பவர்களை இறைவன் கொன்று விடுவார். பல நாடுகளை கடவுள் அருளால் அவன் வென்று விடுவான். என்றும் வெற்றியுடன் சக்கரவர்த்தியாக வாழ்வான். இந்த லக்ன சூட்சும ரகசியம் மிகப்பெரிய கைதேர்ந்த சோதிடருக்கு மட்டும் தான் தெரியும். இது தேவ ரகசியமும் கூட. இந்த சிறப்பை குழந்தையின் தாய் மாமனும், மறைந்த மகத மன்னன் முதலாம் மாறவர்மனின் உயிர் நண்பனுமான மங்கதேசத்து வாரிசான வரகுலன் தான் கணித்துப்பார்த்து குழந்தை பிறக்க வேண்டிய நேரத்தைக்கூறியிருப்பான்” என தனது குரு கூறியதைக்கேட்ட தற்போதைய மகத தேசத்தின் மன்னன் சோரனுக்கு அதிர்ச்சியால் உடல் வேர்த்தது.
“இந்தக்குழந்தை வாலிபனாகி விட்டால் உங்களுடைய சோலியை சுத்தமாக முடித்து விடுவான். அவனைக்கொல்லும் போது தெய்வம் தடுக்காமல் இருக்க பெரிய யாகம் செய்ய வேண்டும். அதில் எருமைகள், குதிரைகள், யானைகள், ஏன் மனிதர்களைக்கூட பலியிட வேண்டும் ” என குல குரு மறவன் சொன்னதைக்கேட்டு மன்னர் சோரன் பெருங்கோபம் கொண்டான்.
“எது நடக்கக்கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்து விட்டது. மகத தேசத்து மாறவர்மனை வெட்டிச்சாய்த்த போதே அவனது கற்பிணி மனைவியையும் வெட்டிக்கொன்றிருக்க வேண்டும். கற்பமுற்ற மானைக்கூட கொல்லக்கூடாது என நீங்கள் குருகுலத்தில் சொல்லிக்கொடுத்ததை நினைவில் கொண்டதால் இன்று எனது குலத்துக்கே பேராபத்து வந்து சேர்ந்துள்ளது. அந்தக்குழந்தையை இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விட்டு வைக்க மாட்டேன். எந்தக்கடவுள் வந்து தடுத்தாலும் சாம்பலாக்காமல் தூங்க மாட்டேன். இப்பொழுதே படைகளை அனுப்புகிறேன்… நீங்கள் யாகத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என கடும் சினத்துடன் குருவிடம் கூறிச்சென்றான் மன்னன்.
“கிருஷ்ணனைப்போன்ற அவதார புருஷன் அவன். கம்சனைப்போல் எதிர்த்து அழிவைச்சந்திக்காமல் அவனிடம் சரணடைந்து ஆட்சியதிகாரத்தை உரிய வயது வந்தவுடன் அவனிடம் ஒப்படைப்பது ஒன்று தான் சிறந்த வழி… இதுவரை பல யாகங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளேன். இந்த யாகத்தை செய்து முடிக்கையில் ஒரு வேளை யாகத்தை முடிப்பதற்குள் எனக்கு ஆபத்தும் வரலாம் என அஞ்சுகிறேன்” என குரு அச்சத்தோடு பேசியதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை மன்னன் சோரன்.
காட்டிற்குள் பல குடிசைகளுக்கு மத்தியில் இருந்த தனது குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக்காணாமல் பதறினாள், கதறினாள் வசுந்தை. “ஐயோ என்னுடைய குழந்தையைக்காணவில்லை. யாராவது பார்த்தீர்களா…?” என வாசலில் வந்து கத்தினாள். அப்போது கருவேலஞ்செடிக்கடியே மறைந்திருந்த ஒருவன் குழந்தையைத்தூக்கிக்கொண்டு குதிரையிலேறி வேகமாகச்சென்றான்.
குதிரையில் செல்பவன் குழந்தையை எடுத்துச்செல்வதைக்கண்ட ஊர் மக்கள் அக்குதிரை பின்னே ஓடியும் குதிரையைப்பிடிக்க முடியவில்லை. நடந்த சம்பவத்தால் மயக்கமுற்ற வசுந்தையை தண்ணீர் தெளித்து எழுப்பிய வரகுலன், மற்றவர்களை போகச்சொல்லிவிட்டு குழந்தையைத்தானே எடுத்துச்செல்லச்சொன்னதாகச்சொன்ன பின்னே வசுந்தைக்கு உயிர் வந்தது.
“எதற்காக என்னிடம் சொல்லாமல் எனது குழந்தையை படை வீரனிடம் எடுத்துச்செல்லச்சொன்னாய்? இந்நேரம் நான் வேதனையில் செத்துத்தொலைந்திருப்பேன்….”
“எல்லாம் நாடகம்….”
“நாடகமா….? எதற்காக….?”
“மன்னன்…. இல்லையில்லை… மகத நாட்டையும், மங்க நாட்டையும் கொள்ளையடித்த திருடன் சோரனுக்கு உன் குழந்தை அரசளப்போகும் வாரிசு என தெரிந்து விட்டது. அது மட்டுமல்ல. அவன் நாடாளும் யோகம் உள்ளவன் என்பதையும் குருவிடம் கேட்டு தெரிந்து கொண்டான். அவனது குருவின் சிஷ்யன் ஒருவன் என்னுடைய சிநேகிதன். அவன் இவ்விசயத்தை என்னிடம் சொன்னான். இன்னொரு செய்தியையும் சொன்னான்…”
“என்ன செய்தி….?”
“உன்னுடைய குழந்தையைக்கொல்ல மன்னன் சபதமெடுத்துள்ளானாம்…. அதற்க்காக பெரிய செலவில் உயிர்களைப்பலி கொடுத்து யாகம் நடத்துகிறானாம். அதே யாகத்தில் உன் குழந்தையைப்பலியிட முடிவு செய்துள்ளானாம்”
“ஐயகோ…. பிஞ்சுக்குழந்தையைக்கொல்வதா….? நாம் இந்த நாட்டை விட்டே சென்று விடுவோம்…” சொன்னவள் பதறினாள்.
“அவசரப்படாதே… சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும். மன்னனைப்பொறுத்த வரை உன் குழந்தை காணாமல் போய்விட்டது. ஊரில் வந்து விசாரித்தாலும் அப்படித்தான் கூறுவார்கள். நான் முற்றிலும் புதிய இடத்தில் உன்னையும், குழந்தையையும் குடித்தனம் வைக்க உள்ளேன். நீ இப்போது குழந்தையைத்தேடிப்போவதாக பக்கத்து குடிசையில் இருப்பவர்களிடம் கூறி விட்டு வந்து விடு…” என சகோதரன் வரகுலன் கூற, அதற்கு சம்மதித்து அவன் கூறியபடியே வனத்தில் நடுவில் இதுவரை குடியிருந்த பகுதியிலிருந்து மலையடிவாரத்தை நோக்கி குதிரை வீரன் கொண்டு போய் மறைத்து வைத்திருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றனர்.
ஆதிவாசிகள் வாழும் மலைப்பகுதியில் ஒரு பெரிய மரத்தின் மீது மூங்கில்களால் குடிசை அமைத்து குடி வைத்து விட்டு திரும்பிய வரகுலன் ‘குழந்தையைந்தேடிச்சென்ற வசுந்தையும் காணாமல் போய் விட்டதாக தனக்குத்தெரிந்த சிலரிடம் கூறி வதந்தி பரப்பி விட்டான்.
குழந்தை காணாமல் போன செய்தியைக்கேட்ட மன்னன் சோரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். குழந்தையையும், தாயையும் வெட்டிக்கொன்று விட்டதாகவே இரத்தக்குறி காட்டி பரிசைப்பெற்றான் வீரன் பரமன். அந்தப்பரிசு சாதாரண பரிசு அல்ல. தளபதியாக நியமிக்கப்பட்ட பரிசு.
வீரன் பரமன் மகத தேசத்து மாறவர்மனின் தந்தையால் ஆதிவாசிப்பெண்ணின் வயிற்றில் அவதரித்தவன் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. அவனது தாய் இறக்கும் தருணத்தில் ஒரு முத்திரை மோதிரத்தைக்கொடுத்து உண்மையைச்சொல்லி ‘முதலாம் மாறவர்மனான உனது சகோதரனின் அரச வாரிசைக்காப்பாற்று’ எனக்கூறிய தனது தாயின் ஆணையை நிறைவேற்றினான்.
மன்னரின் ஆணைப்படி குழந்தையைக்கொல்ல குதிரையில் வந்தவன் வரகுலனைச்சந்தித்து முத்திரை மோதிரத்தைக்காட்டி தான் யார் என்பதையும், வந்திருக்கும் காரணத்தையும் கூற குழந்தையை தன்னிடம் தரும்படியும் குதிரையில் தான் குழந்தையுடன் செல்வதை ஒற்றர்கள் பார்க்க வேண்டும் என்றும் அதன் பின் குழந்தையை குறிப்பிட்ட இடத்தில் வைத்து விடுவதாகவும் கூற, நம்பிக்கையுடன் குழந்தையை எடுத்து அவன் கையில் கொடுத்தான். குழந்தையை வீரன் பரமன் எடுத்துச்செல்வதை பக்கத்து குடிசையில் வசிக்கும் சிலரும், ஒற்றர்களும் பார்த்ததை அறிந்ததும் வழிமாறிச்சென்று வரகுலனிடம் சொன்ன இடத்தில் குழந்தையை வைத்து விட்டு அரண்மனைக்குச்சென்று விட்டான்.
பரமன் தளபதியாக அறிவிக்கப்பட்ட செய்தியைக்கேட்ட வரகுலன் தான் எதிர்பார்த்ததில் பாதி வெற்றி கிடைத்து விட்டதாகவே கருதினான். குழந்தை பிறந்து ஒரு திங்களில் தந்தையின் சகோதரன் நாட்டை வழிநடத்தும் தளபதியானது குழந்தையின் யோகமேதான். அக்குழந்தையைக்கொன்றதற்காகத்தானே, அக்குழந்தையின் பெயரை முன்னிருத்தித்தானே இப்பரிசை மன்னர் வழங்கியுள்ளார். மன்னருக்கு கிரகங்கள் வழங்கிய முதல் அடி. நமக்கு வெற்றியின் முதல் படி. இதை வைத்துப்பார்க்கும் போது குழந்தை வளர்ந்து மன்னராவது உறுதி என விளங்கியது அந்த நொடி. நினைத்து மகிழ்ந்தான் வரகுலன்.
சில வருடங்களில் குழந்தை சிறுவனாகி காட்டில் மான்கள், முயல்கள், கிளிகள் போன்றவற்றுடன் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த ஒற்றை யானை சிறுவனை தனது துதிக்கையால் தூக்கிச்சென்ற போது சிறுவன் அழவில்லை. அதையும் விளையாட்டாகவே எடுத்துக்கொண்டான்.
யானை வெகு தூரம் சென்று விட்ட நிலையில் மரத்தின் மீது பரண் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வசுந்தை மானும், முயலும், கிளியும் எச்சரிக்கையான ஒலியை எழுப்பியதால் ஏதோ ஆபத்து வந்துள்ளது என்பதையறிந்து கண் விழித்த போது பல வீரர்கள் மரத்தின் கீழே நின்று கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவளது கண்கள் மான்களுடன் விளையாடிக்கொண்டிருந்த மகன் மாறவர்மனைத்தேடியது. எங்கும் காணாததால் மயக்கமே வந்தது. சுதாரித்தவளை கீழே அழைத்து ‘உன் மகன் எங்கே..?’ எனக்கேட்ட குரலைக்கேட்டு மேலும் அதிர்ந்தாள்.
அதே குரல்… கற்பிணியாக இருந்த போது ‘உன் கணவன் எங்கே?’ எனக்கேட்ட அதே குரல்… எதார்த்தமாக கணவன் இருக்கும் இடத்தைச்சொன்ன அடுத்த நொடி அவனத்தலையற்ற உடலாகப்பார்த்து கதறி மயங்கிய தருணம் நினைவுக்கு வந்ததும் ‘தம் மகனுக்கும் கணவனுக்கு ஏற்பட்ட நிலை வந்து விடுமோ?’ என நினைத்து பதறினாள்.
மன்னன் சோரன் கண்கள் கோவைப்பழம்போல் சிவந்திருந்த நிலையில் கடும் கோபத்துடன் வசுந்தையை ஏறிட்டான்.
“எனது மகன் எங்கே….? அவனை ஒன்றும் செய்து விடாதீர்கள். அவனுக்கு நாடு வேண்டாம். காட்டுக்குள்ளேயே வாழ்ந்து விட்டுப்போகட்டும். உங்களிடம் என் மகனுக்காக உயிர் பிச்சை கேட்கிறேன்” எனக்கூறி அவனது கால்களைப்பிடித்துக்கதறினாள்.
வசுந்தையின் உண்மையான கதறலைக்கேட்டு வீரர்களைப்பார்த்தான் மன்னன். அவர்களனைவரும் கோரசாக ‘தாங்கள் குழந்தையைக்கடத்தவில்லை’ எனத்தெரிவித்த பின் காட்டில் முழுவதும் தேடச்சொல்லி மன்னன் உத்தரவிட தேடினர். தேடிச்சென்ற வீரர்கள் பல நாட்கள் இருப்பிடமான தனது முகாமிற்கு வராதது கண்டு அதிர்ந்த மன்னன், அரண்மனையிலிருந்து மேலும் பல யானைப்படை வீரர்களை வரவழைத்து தேடிய போதுதான் இதற்கு முன் சென்ற பலர் ஒரு யானையால் கொல்லப்பட்டுக்கிடந்ததை அறிந்து ஆச்சர்யமும், கவலையும் கொண்டான்.
குரு சொன்னபடி நடந்துள்ளது. சிறுவனை யானை கடவுளைப்போல பாது காத்துள்ளது. அவனைத்தேடி வந்தவர்களை ஓடி வந்து கொன்றுள்ளது. எனப்புரிந்ததால் அதிர்ச்சியடைந்தான்.
தற்போது மலைமீதிருந்து கற்களை ஒற்றை யனை உருட்டி விடத்தொடங்கியதும் மலை அடிவாரத்தில் இருந்த யானைப்படை மொத்தமாகப் பின் வாங்கியது.
சிறுவனை நெருங்க முடியாத ஆத்திரத்தில் அவனது தாய் வசுந்தையை கைது செய்து அரண்மனை சிறையில் அடைக்க உத்தரவிட்டான் மன்னன் சோரன்.
சிறையிலிருப்பது தனது சகோதரன் மனைவி எனும் மனநிலையில் வசுந்தைக்கு தளபதி பரமன் சலுகைகள் அளித்ததால் அவன் மீது ஒற்றறர்கள் அழித்த புகாரால் மன்னனுக்கு சந்தேகம் வர ஆரம்பித்ததை தெரிந்து கொண்ட பரமன் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி தன்னுடன் சில வீரர்களையும், சிறையிலிருந்த வசுந்தையுடன் அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக நாட்டை விட்டுக்காட்டிற்குள் சென்றவன் காட்டை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.
சிறுவன் இருக்குமிடமறிந்து அவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்ததோடு வரகுலனுடன் சேர்ந்து மாறவர்மனுக்கு போர் பயிர்ச்சிகளைக்கற்றுக்கொடுத்தான் பரமன்.
அவனிடமிருந்த அசாதாரண திறமைகளைக்கண்டு வியந்தனர் பரமனும், வரகுலனும். வில் வித்தையில் சிறந்து விளங்கியதால் மகாபாரத விஜயனே மறுபிறப்பாக வந்து விட்டார் என நம்பினர்.
ஒரு நாள் நிறைந்த அமாவாசை நாளில் காட்டு தெய்வத்துக்கு பலியிட்டு விட்டு நாட்டிற்குள் படையுடன் புகுந்தனர். மகத தேசத்து வாரிசு மறுபடியும் நாட்டை ஆள வந்திருப்பதை அறிந்த மக்கள் வேண்டிய உதவிகளைச்செய்ய சில நாட்களில் நாட்டின் பெரும் பகுதிகளை வசப்படுத்தினர்.
வரகுலன் குறித்துக்கொடுத்த ஒரு நல்ல நாளில் அரண்மனைக்குள் காலடி எடுத்து வைக்க மொத்தப்படையும் சத்தமின்றி இரண்டாம் மாறவர்மன் பக்கம் சாய, உயிருக்குப்பயந்த சோரன் தனது குடும்பத்துடன் கடற்பகுதிக்குச்சென்று படகில் ஏறி வேறு தேசத்துக்கு ஓடி விட்டான். அவனது குரு தான் நடத்திய வேள்ளியில் தன்னையே பலியிட்டு மறைந்தார்.
சிறு வயதிலேயே இரண்டாம் மாறவர்மன் மகத நாட்டின் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்பட்டான்.
பரமன் மறுபடியும் தளபதியாக பதவியேற்றான்.
வரகுலன் தனது மங்க தேசத்துடன் இணைந்த மகத தேசத்துக்கு தலைமை மந்திரியானான்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |