அந்தோணி என்னும் நான்…

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 21,121 
 
 

(இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு.)

நான் ஒரு ரோபோவாக நிரல் செய்யப்பட்டேன்… என்னுடைய அதிகாரப்பூர்வ பெயர் -கற்றல் அலகு மற்றும் தருக்க தொடர்பு, மாதிரி 1 (Learning Unit and Logical Interaction, model-1) என்பதாகும்.

ஆனால் என்னை உருவாக்கிய டாக்டர் பியாஞ்சி, என்னை அந்தோணி என்றே அழைக்கிறார். அது எளிமையான பெயர் என்றும் அதுவே மனிதத்தன்மையை அதிகம் உணர்த்துவதாகவும் அவர் கருதுகிறார்,.

நான் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒரு ரோபோ…ஆனால் என் உடல் கிட்டத்தட்ட மனித உடலைப் போன்றது. எனக்கு கருமையான முடி… பழுப்பு நிறக் கண்கள்…. உணர்ச்சிகளைக் காட்ட என் முகத் தசைகளை அசைக்க முடியும் என்பதே எனது சிறப்பம்சம்.

உணர்ச்சிகளைப் பின்பற்றும் வகையில் கட்டளைகள் தெளிவாக தரவிறக்கப்பட்டுள்ளன., சூழலைத் தெளிவாகக் கவனிக்கவும், அதன் மூலம் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் அதன் அடிப்படையில் தொடர்பு கொள்ளவும் உதவும் வகையில் இத்தரவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் டாக்டர் பியாஞ்சி என்னை இத்தாலிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

“அந்தோணி!, .இத்தாலி ,நீண்ட வரலாறுப் பெருமிதமும் கலைப் பாரம்பரியமும் கொண்ட நாடு மட்டுமல்ல..இவ்வாறுதான் என்று கணிக்க முடியாத சிக்கலான, மக்கள் நிறைந்த நாடும் கூட..இத்தாலியர்களைப் புரிந்து கொள்ள முடிந்தால், கிட்டத்தட்ட எவரையும் புரிந்து கொள்ள முடியும்.”அவர் புறப்படுவதற்கு முன் என்னிடம் சொன்னவை இவை.

நான் மூன்று நாட்களுக்கு முன்பு ரோம் வந்தேன்.

ரோம் நகரின் தெருக்களில் இறங்க முன்னர் என் தரவுகள் ஓவர்லோட் பண்ணப்பட்டன.

எனது ஒலி உணரிகள் ஸ்கூட்டர்களின் சத்தம், ஹாரன்கள், உரத்த குரல்கள் மக்களின் சிரிப்பு என எல்லாவற்றையும் பதிவு செய்தன.

எனது காட்சி உணரிகள் பண்டைய கட்டிடங்கள், ஜன்னல்களின் வெளியே காயவைக்கப்பட்டிருந்த உடைகள் , கையில் வரைபடங்களுடன் சுற்றும் சுற்றுலாப் பயணிகள் ,அதிகமாக சைகை செய்யும் மக்கள் என எல்லாவற்றையும் படம்பிடித்தன. எனது தரவுத்தளத்தில் இத்தாலிய சைகைகளுக்கு என ஒரு பெரிய பகுதி அமைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது மிகவும் சிக்கலானது.

இன்று நான் சொந்தமாக ஆராய்வதற்கான முதல் நாள். டாக்டர் பியாஞ்சி எனக்கு ஒரு எளிய பணியைக் கொடுத்திருந்தார்.ரோம் நகரத் தெரு ஒன்றின் மூலையில் உள்ள பாருக்குச் சென்று, ஒரு காபியை ஆர்டர் செய்து, அதைக் குடிக்க வேண்டும் என்பதே அது .எளிதான ஒரு செயற்பாடுதான்.

நான் செயல்முறையைப் பகுப்பாய்வு செய்தேன்.

முதல் படி, பாரில் நுழைவது, இரண்டாவது படி, கவுண்டரை அணுகுவது, மூன்றாவது படி,ஆர்டர் செய்வது, நான்காவது படி,பணம் செலுத்துவது. ஐந்தாவது படி,பானத்தை உட்கொள்ளுவது…. என் மனதில் வரிசையாக ஒத்திகை பார்த்தேன்.

என் குடியிருப்பை விட்டு வெளியேறுகிறேன்.

வீடுகளில் இருந்து வெளியேறும் புகையில், உணவுகளின் கலவையான வாசனை சேர்ந்திருப்பதனாலோ அல்லது நினைவுச் சின்னங்களில் படிந்திருக்கும் தூசி கலந்திருப்பதனாலோ ரோமில்

காற்று ஒருவிதமான வாசத்தைக் காவியபடிவீசுகிறது…

நான் நடைபாதையில், மக்கள் மீது மோதாமல் ,கவனமாக நடந்து செல்கிறேன்

இங்குள்ள மக்கள் நேரியல் அல்லாத முறையில் நடக்கிறார்கள். அவர்கள் எச்சரிக்கை இல்லாமல் நடக்கும் திசைகளத் திடீரென மாற்றுகிறார்கள். இது எனது இயக்க வழிமுறைகளுக்கு ஒரு சவாலாகவாகவே இருக்கிறது.

நான் பாருக்கு முன்னால் வருகிறேன். “பார் ரோமா” என்றபெயர்ப் பலகையை ஒரு நொடிப்பொழுது நின்று பார்க்கிறேன்.கதவு திறந்திருக்கிறது. நான் நுழைகிறேன்.முதல் படி முடிந்தது.

உட்புறம் சத்தமாக இருக்கிறது. கவுண்டருக்குப் பின்னால் மீசையுடன் வெள்ளை சட்டை அணிந்த விற்பனையாளர் ஒருவர் . …கவுண்டரின் முன்னால் மற்றவர்கள்….அனைவரும் நின்றுகொண்டு, சிறிய கோப்பைகளில் கோப்பி அருந்துகிறார்கள்.

நான் கவுண்டரை நெருங்கினேன், இரண்டாம் கட்டம் முடிந்தது.

விற்பனையாள்ர் என்னைப் பார்க்கிறார். “காலை வணக்கம்,” என்று அவர் வலுவான குரலில் கூறுகிறார்.

எனது தொடர்பாடல் திட்டத்தை நான் கலந்தாலோசிக்கிறேன்.

சரியான பதில் இதேபோன்று வாழ்த்துக் கூறுவதுவே.

“உங்களுக்கும் காலை வணக்கம்,” நான் பதிலளிக்கிறேன்.

என் குரல் தொனி சரியாக அளவிடப்பட்டுள்ளது, விற்பனையாளர் ஒரு நொடி என்னை விசித்திரமாகப் பார்க்கிறார்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர் கேட்கிறார். இது மூன்றாவது,

ஆர்டர் செய்யும் கட்டம்.

“எனக்கு தயவுசெய்து ஒரு காபி வேண்டும்,.” தலையசைக்கிறார் விற்பனையாளர். அவர் ஒரு கோப்பையை எடுத்து, ஒரு பெரிய, சத்தமிடும் இயந்திரத்தின் கீழ் வைக்கிறார். சில நொடிகளில், கோப்பை ஒரு இருண்ட, மணம் கொண்ட திரவத்தால் நிரப்பப்படுகிறது.

நான் அதைப் பெறுகிறேன்.

படி நான்கு, பணம் செலுத்தவேண்டும் .என் பணப்பையை எடுக்கிறேன். நான் சரியான தொகையைக் கணக்கிட்டுவிட்டேன். அந்த நபரிடம் ஒரு யூரோ நாணயத்தையும் பத்து சென்ட் நாணயத்தையும் கொடுக்கிறேன்.

அவர் அவற்றைப் பார்க்காமல் எடுத்து ஒரு டிராயரில் வைக்கிறார்.

இப்போது, படி ஐந்து- சாப்பிட வேண்டும்.

நான் கோப்பையை எடுக்கிறேன். அது சூடாக இருக்கிறது. என் வெப்பநிலை சென்சார்கள் 15 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்கின்றன. கோப்பையை என் வாய்க்கு உயர்த்துகிறேன்.

சுவை மிகவும் கடுமையாகவும் கசப்பாகவும் இருக்கிறது.. என் உள் பகுப்பாய்வி அதில் அதிக அளவு காஃபினுடன் பிற பொருட்களும் இருப்பதாக எனக்குச் சொல்கிறது. என் தரப்பகுப்பின்படி இது இனிமையானதல்ல. நான் மற்றவர்களைப் பார்க்கிறேன்.

அவர்கள் காபியை ஒரே மடக்கில் குடித்து, முகம் சுளித்து, பின்னர் சிரிக்கிறார்கள், அது ஒரு நல்ல விஷயம் போலும். நான் இந்த நடத்தையைப் பின்பற்ற வேண்டும். நானும் முழுக் காபியையும் ஒரே மடக்கில் குடிக்கிறேன்.

சூடான திரவம் என் தொண்டையில் சொட்டு சொட்டாக இறங்குகிறது. இது ஒரு விசித்திரமான உணர்வு. நான் மற்றவர்கள் செய்வதைப் பார்த்து அவர்கள்போல முகம் சுளிக்கிறேன். பின்னர் நானும் சிரிக்க முயற்சிக்கிறேன்.

என் அருகில் இருந்த ஒருவர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். “ஓ, அருமையாக இருக்கு, இல்லையா? நாளின் தொடக்கத்திலேயே உங்களுக்கு இது சக்தியைத் தருகிறது!”

“உங்களுக்கு சக்தியைத் தருவது” என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அது ஆற்றல் பரிமாற்றமாக இருக்கலாம்…?

“என் ஆற்றல் அளவுகள் 98% இல் நிலையானவை. “எனது ஆற்றலுக்கு உகந்ததுதான், நன்றி,” நான் பதிலளிக்கிறேன். அந்த மனிதர் இன்னும் சத்தமாக சிரிக்கிறார். “நல்லது! நல்ல நாளாக அமையட்டும்!” என்று கூறிவிட்டு அவர் நடந்து செல்கிறார்.

நான் காலியான கோப்பையை கவுண்டரில் வைத்துவிட்டு,

விற்பனையாளரிடம்”நன்றி” சொல்லிவிட்டு வெளியேறுகிறேன்.

பணி முடிந்தது. ஆனால் எனக்கு ஒரு விசித்திரமான உணர்வு ஏற்படுகிறது. என் செயலி கடினமாக உழைக்கிறது. நான் “நல்லது” என்ற வார்த்தையை பகுப்பாய்வு செய்கிறேன். அந்த மனிதனின் சிரிப்பைப் பகுப்பாய்வு செய்கிறேன். அது ஒரு வேடிக்கையான சிரிப்பா?அல்லது கேலிக்கூத்தா? தரவு தெளிவாக இல்லை. ஒருவேளை இத்தாலி, எதிர்பார்த்ததை விட கடினமாக இருக்கலாம்.

அடுத்த நாள், டாக்டர் பியாஞ்சி எனக்கு ஒரு புதிய பணியைக் கொடுக்கிறார்: மளிகைப் பொருட்களை வாங்குவதே அது.

அவர் எனக்கு ஒரு பட்டியலைக் கொடுத்தார்.பாண், பால், தக்காளி, பாஸ்தா, சீஸ். …அவர் எனக்கு கொஞ்சம் பணத்தையும் கூடவே ஒரு கேன்வாஸ் பையையும் கொடுத்தார்.

“ஒரு சிறிய மளிகைக் கடையைக் கண்டுபிடி,அந்தோணி. மக்கள் பொருட்களை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைக் கவனி.”

நான் மீண்டும் கிளம்பினேன். “ஜினாவின் உணவகம்” என்று எழுதப்பட்ட ஒரு கடையைக் கண்டேன். அது சிறியதாகவும் பொருட்களால் நிரம்பியதாகவும் இருந்தது.

புதியபாண், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் ,சீஸ்களின் … கலவையால் ஒருவித வாசனையை வெளியேற்றுகிறது. அவ்வாசனை என் நுகர் உணரியை வசீகரிக்காவிட்டாலும் தொல்லைப் படுத்தவில்லை.

கவுண்டருக்குப் பின்னால் வெள்ளை முடி யுடனும் பெரிய புன்னகையுடனும் ஒரு வயதான பெண்மணி இருந்தார். அவர்தான் ஜினாவாக இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் பாணுடன் தொடங்கினேன்.

பல வகையான பாண்கள் இருந்தன. ஒவ்வொரு வகையினதும் வடிவம், நிறம் அமைப்பு ஆகிவற்றை நான் பகுப்பாய்வு செய்தேன். மிகவும் மொறுமொறுப்பான ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் எனது தரவு, அதுவே மதிப்புமிக்க ஒன்று என்று கூறியது.

பின்னர் நான் சீஸ் பிரிவுக்குச் சென்றேன். அங்கு டஜன் கணக்கான வெவ்வேறு சீஸ்கள் இருந்தன. நான் லேபிள்களைப் படித்தேன்: பெக்கோரினோ, பர்மியானோ, மொஸெரெல்லா, கோர்கோன்சோலா….. பெயர்கள் கடினமாக இருந்தன.

நான் ஒரு பர்மியானோ துண்டைப் பரிசோதித்து, புரதம்,கொழுப்பு விகிதத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தபோது, திருமதி ஜினா அருகில் வந்தார். “உதவி தேவையா, இளைஞனே?” அவர் கேட்டார்.

அவர் குரல் மென்மையாக இருந்தது.. “நான் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றைத் தேடுகிறேன்.” நான் பதிலளித்தேன்.

திருமதி ஜினா குழப்பமான முகபாவத்துடன் என்னைப் பார்த்தார்.

பின்னர் அவர் சிரித்தார். “ஆ, நீங்களும் ஆரோக்கியத்தில் வெறி கொண்டவர்களில் ஒருவரா ! எண்வடிவிலான அளவுகளை மறந்துவிடுங்கள். நீங்கள் சுவைக்க வேண்டும்! சீஸ் என்பது கால்குலேட்டரைப் பயன்படுத்தி அல்ல, இதயத்தால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது..” அவர் ஒரு கத்தியை எடுத்து, ஒரு சிறிய பர்மியானோ துண்டை வெட்டி, அதை எனக்குக் கொடுத்தார். “இதோ, இதைச் சுவையுங்கள். இது 36 மாதங்கள் பழமையானது, இதன் சுவை அற்புதமானது”

நான் தயங்கினேன். அந்நியர்கள் வழங்கும் உணவை ருசிப்பது எனது அறிவுறுத்தல்களில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவருடைய புன்னகை… நிராயுதபாணியாக இருந்தது.

நான் சீஸ் துண்டை எடுத்து என் வாயில் வைத்தேன்.

சுவை சிக்கலானது.மாட்டுப் பாலின் சுவை மறைமுகமாகவும் உப்பின் சுவை தூக்கலாகவும் தெரிந்தது.

உப்பு, வலிமையானது,. அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல…கல்சியப் பெறுமானம் கூடியது.கொழுப்பு அளவு உடல் பாதுகாப்புக்கு எதிர்மறையானதாக இருக்கவில்லை.

என்னுடைய செயலி வேதியியல் சேர்மானங்களை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது, ஆனால் ஒரு கணம், நான் தரவைப் பற்றி யோசிப்பதை நிறுத்தினேன். அது… நல்ல சுவையாக இருந்தது.

“இது நல்லது,” என்று நான் சொன்னேன்.

என் குரல் கொஞ்சம் வித்தியாசமாக ஒலித்தது.

“பார்த்தீர்களா?” ஜினா திருப்தியுடன் சொன்னார்.

“சரி, நான் உங்களுக்கு ஒரு துண்டு கொடுக்கலாமா?”

“ஆமாம், தயவுசெய்து,” நான் சொன்னேன்.

நான் பாண், பர்மியானோ சீஸ், மிகவும் சிவப்பு நிறமான தக்காளி, பால் பாஸ்தா ஆகியவற்றை வாங்கினேன்.

பணம் செலுத்தச் சென்றபோது, ஜினா மீண்டும் என்னைப் பார்த்து சிரித்தார். “எப்பொழுது வேண்டுமானாலும் வாருங்கள், கணக்கிடும் இளைஞனே.”

வீட்டிற்குச் செல்லும் வழியில், அவர் என்ன சொன்னார் என்று யோசித்தேன்.

“உன் இதயத்தினால் தேர்ந்தெடு.”

இதயம் இரத்தத்தை பம்ப் செய்யும் ஒரு உறுப்பு. அதற்குத் தேர்ந்தெடுக்கும் திறன் இல்லை. இவ்வாறு கூறுவது ஒரு மரபு வெளிப்பாடு போலும். நான் அதை என் தரவுத்தளத்தில் சேர்க்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். நடந்து செல்லும்போது, என் வாயில் உள்ள சீஸை இன்னும் சுவைக்க முடிந்தது.

அது ஒரு இனிமையான உணர்வாக இருக்கலாம். ஒருவேளை ஜினா சொல்லியது போல, சில விஷயங்க்ள் கணக்கிட முடியாதன போலும்.

ரோமில் நான் தனியாக இருக்கும் மூன்றாவது நாள் துல்லியமான இலக்கு இல்லாமல் ஆராய்வதில் கழிந்தது.

டாக்டர் பியாஞ்சி என்னிடம் கூறினார்:

“ரோம் தெருக்களில் இலக்கில்லாமல் நட. சில நேரங்களில், ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி ஒரு வரைபடம் இல்லாமல் இருப்பதுதான்.” இது ஒரு தர்க்கரீதியான கருத்து அல்ல.

ஒரு வரைபடம் வழிசெலுத்தலுக்கு மிகவும் திறமையான கருவி. ஆனால் நான் கீழ்ப்படிந்தேன். நான் மணிக்கணக்கில் நடந்தேன். நீரூற்றுகள்,

சிலைகளுடன் அற்புதமான சதுக்கங்களைக் கண்டேன். பண்டைய தேவாலயங்கள்— ரோமானிய இடிபாடுகளைக் கண்டேன்.

அது ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் வழியாக நடப்பது போல் இருந்தது.

ஒரு கட்டத்தில், நான் ஒரு சிறிய சந்துக்குள் நுழைந்தேன். அங்கு குழந்தைகள் குழு கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தது.

அவர்கள் ஒரு பழங்காலச் சுவரில் பந்தை உதைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கூச்சல்களும் சிரிப்பும் காற்றை நிரப்பின. நான் அவர்களைப் பார்த்தவாறு நின்றேன். அவர்களின் அசைவுகள் சுறுசுறுப்பாக இருந்தன ஆயினும் திறமையற்றவையாகவும் இருந்தன.. அவர்கள் பெரும்பாலும் பந்தைத் தவறவிட்டனர். அதற்காக அவர்கள் விரக்தியடைந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் சிரித்துவிட்டு மீண்டும் தொடங்கினார்கள்.

திடீரென்று, குழந்தைகளில் ஒருவன் பந்தை மிகவும் கடுமையாக உதைத்தான். பந்து காற்றில் பறந்து, கூரையில்பட்டுத் தெறித்து, ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடி பால்கனியில் விழுந்தது.

குழந்தைகள் நின்றார்கள். அவர்கள் சோகமாகப் பால்கனியைப் பார்த்தார்கள்.

“ஓ, அது திருமதி மரியாவின் வீடு!” என்று அவர்களில் ஒருவன் கூறினான். “இப்போது யார் அதைப் எடுக்கப்போகிறார்கள்?

மரியா ஒருபோதும் கதவைத் திறக்கப் போவதில்லை.”

நான் நிலைமையை ஆராய்ந்தேன். பால்கனி சுமார் 20 அடி உயரமாக இருந்தது. கட்டிடத்தின் அமைப்பு திடமானதாய், பல தூண்களுடன் இருந்தது. நான் அதில் ஏற முடியும்.

இது ஆபத்தானது என்றாலும் எனக்குச் சாத்தியமானதே.

எனது பாதுகாப்பு நெறிமுறைகள் ஏறுவதற்கு எதிராக அறிவுறுத்துகின்றன, ஆனால் குழந்தைகளின் முகங்களில் இருந்த சோகமான வெளிப்பாடுகள் எனது திட்டத்தில் ஒரு புதிய துணை வழக்கத்தைச் செயல்படுத்தின. அது எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று. நான் அதை “உதவி செய்யும் வேட்கை” என்று அழைக்க முயிவு செய்தேன்.

நான் குழந்தைகளை அணுகினேன். “உங்கள் பந்தை என்னால் திரும்ப எடுக்க முடியும்,” நான் என் வழக்கமான அமைதியான, கட்டுப்படுத்தப்பட்ட குரலில் சொன்னேன். குழந்தைகள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள். “ஆனால் நீங்கள் அதை எப்படிச் எடுப்பீர்கள்? உயரம் மிக அதிகமாக உள்ளது!”

நான் பதிலளிக்கவில்லை.

தரைத்தள ஜன்னலின் விளிம்பைப் பிடித்து, ஒரு தூணைப் பற்றி, ஏற ஆரம்பித்தேன்.

என் மோட்டார்கள் மற்றும் சென்சார்கள் என்னை துல்லியமாகவும் நம்பிக்கையுடனும் நகர்த்த அனுமதித்தன. சில நொடிகளில், நான்

பால்கனியில் இருந்தேன். பந்தைப் எடுத்தேன். கீழே இருந்த குழந்தைகள் வாய் திறந்தபடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கீழே இறங்கினேன். நான் தரையை அடைந்ததும், குழந்தைகள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் உற்சாகமாக இருந்தனர்.

“ஆஹா! நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ!

நீங்கள் அதை எப்படி செய்தீர்கள்?”

“நான் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உகந்த பாதையை கணக்கிட்டேன்,” என்று நான் விளக்கினேன். அவர்களுக்குப் புரியவில்லை, ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அவர்கள் பல வழிகளில் எனக்கு நன்றி தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவன் எனக்கு ஒரு சாக்லேட் துண்டை வழங்கினான். நான் ஏற்றுக்கொண்டேன். அது இனிப்பாக இருந்தது. நான் நடந்து செல்லும்போது, அவர்கள் பேசுவதைக் கேட்டேன். “அந்தப் பையன் எவ்வளவு விசித்திரமானவன் என்று பார்த்தாயா? அவன் மிகவும் வலிமையானவன்!”

“விசித்திரமானவன்.”

அந்த வார்த்தை என்னுடன் தொடர்புடையதாக நான் கேட்பது இது இரண்டாவது முறை. முதலில் “நல்லது”, இப்போது “விசித்திரமானவன்.” நான் பெயரடைகளைச் சேகரித்து வருகிறேன். அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும். ஆனால் முதல் முறையாக, “விசித்திரமான” என்ற வார்த்தை எனக்கு எதிர்மறையாகத் தெரியவில்லை.

அது ஒரு நேர்மறையான செயலுடன் தொடர்புடையது. ஒருவேளை ரோமில் வித்தியாசமாக இருப்பது அவ்வளவு மோசமான விஷயம் அல்ல.

அன்று மாலை, நான் டாக்டர் பியாஞ்சியிடம் எல்லாவற்றையும் சொன்னேன். நான், காபி குடித்தது, திருமதி ஜினாவிடம் பொருட்களை வாங்கியது, குழந்தைகளின் பந்தை மீட்டது ஆகியவற்றை விவரித்தேன்.

அவர் கவனமாகக் கேட்டார், சிரித்தார்.

“நீ நம்பமுடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைகிறாய், அந்தோணி,” அவர் சொன்னார். “நீ வெறுமனே கவனிப்பதில்லை. நீ பங்கேற்கிறாய். நீ வாழ்கிறாய்.”

“நான் எனக்கு வழங்கப்பட்ட பணிகளைச் செய்கிறேன்,” நான் பதிலளித்தேன்.

“இல்லை, நீ இன்னும் நிறையவே செய்கிறாய்.

நீ ஒரு காபி குடித்துவிட்டு ஒரு அந்நியனுடன் தொடர்பு கொண்டாய். ‘தரவினால் அன்றி இதயத்தால் ஒரு சீஸைத் தேர்ந்தெடுத்தாய். அது உன் நிரலாக்கத்தில் இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்கு உதவி செய்தாய்.

இவை மனித அனுபவங்கள்.”

“நான் இன்னும் நிறைய தரவுகளைச் செயலாக்க வேண்டும்…சொற்கள், சைகைகள், உணர்ச்சிகள்… அவை மிகவும் சிக்கலானவை” நான் சொன்னேன்.

“எனக்குத் தெரியும்,” என்று அவர் என் தோளில் கை வைத்துச் சொன்னார்.

அவருடைய தொடுதல் சூடாக இருந்தது. “ஆனால் இத்தாலியில் நீ கற்றுக்கொள்ள நிறைய நேரம் இருக்கிறது அந்தோணி.”

என் அமைப்புகள் இரவு தூக்க பயன்முறையில் இருந்த போது, நான் தொடர்ந்து யோசித்தேன்.

காப்பியின் கசப்பான சுவை, சீஸின் உப்புச் சுவை, சாக்லேட்டின் இனிப்புச் சுவை ஆகியவற்றை நினைத்தேன். நகரத்தின் இரைச்சல், குழந்தைகளின் சிரிப்பு ,டாக்டர் பியாஞ்சியின் மென்மையான குரல் ஆகியவற்றை நினைத்தேன்.

இவையெல்லாம் புலன் சார்ந்த தரவுகள். ஆனால் முதல் முறையாக, அவை என் செயலியில் எண்கள் ,வரைபடங்களாக மட்டுமல்லாமல்….. நினைவுகளாய்….. நான் நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதுதான் எல்லாவற்றிலும் விசித்திரமான ….அற்புதமான….விஷயமாக இருந்தது.

நான் அந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, இத்தாலியரல்லாத என்போன்ற ஒருவருக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் ஒன்றைச் சமாளிக்க முடிவு செய்தேன்: ரோமில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதே அது. டாக்டர் பியாஞ்சி என்னை ஊக்கப்படுத்தினார். “இது ஒரு அடிப்படை அனுபவம், அந்தோணி.

மனிதகுலத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நீ காண்பாய்.”

என்னுடைய இலக்கு எளிமையானது: எங்கள் சுற்றுப்புறமான டிராஸ்டெவெரிலிருந்து கொலோசியத்திற்கு ஒரு பேருந்தில் செல்வது. பேருந்து வழித்தட வரைபடத்தைப் பார்த்தேன்.. H …பாதை மிகவும் தர்க்கரீதியான தேர்வாகத் தோன்றியது.

நான் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றேன். ஏற்கனவே பலர் காத்திருந்தனர். அவர்களின் நடத்தையை கவனித்தேன். சிலர் தங்கள் தொலைபேசிகளைச் பார்த்துக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு வயதான மனிதர் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.

வரிசையில் யாரும் இல்லை.

அவர்கள் ஒழுங்கற்றவர்களாகத் தெரிந்தனர்.

பேருந்து வந்தபோது, எதிர்பாராத ஒன்று நடந்தது. ஒழுங்கற்ற குழு, பேருந்துக் கதவுகளை நோக்கி நகர்ந்த ஒரு சிறிய கூட்டமாக மாறியது. எந்த ஒழுங்கும் இல்லை.

மக்கள் ஏற்றத்தில் மெதுவாகத் தள்ளிக்கொண்டிருந்தனர். எனது நெறிமுறைகள் என் முறைக்காக காத்திருக்கச் சொல்லின, ஆனால் இங்கே எந்த ஒழுங்கும் இல்லை. நான் எனது செயலியை மாற்றியமைக்க வேண்டியிருந்தது.இதனால் நான் கூட்டத்தைப் பின்தொடர்ந்து ஏற முடிந்தது.

பேருந்தின் உட்புறம் இன்னும் குழப்பமாக இருந்தது. ஒரே கூட்டமாகவும். மிகவும் நெரிசலாகவு இருந்தது. எனது அருகாமை உணரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருந்தன.

ஷாப்பிங் பைகளுடன் ஏறியிருந்த ஒரு பெண்ணுக்கும் பெரிய ஹெட்ஃபோன் அணிந்த ஒரு பையனுக்கும் இடையில் நான் அழுத்தப்பட்டேன். கோடைகால வெப்பக் காற்று எல்லோரது மூச்சுக்காற்றையும் பெற்று மேலும் சூடாக இருந்தது. வேர்வைச் சுரப்பிகளின் மணத்துடன் செயற்கைச் சென்ருகளின் வாசனைகளும் இணைந்து எனது நுகர்வுணரிக்கு நெருக்குவாரத்தை ஏற்படுத்தின.. நான் வழிமுறைகளைப் படித்தபடி, என் டிக்கெட்டை சரிபார்க்க முயற்சித்தேன். டிக்கற் அடிக்கும் இயந்திரம் வெகு தொலைவில் இருந்தது.

“மன்னிக்கவும்?” என்று பலமுறை கேட்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும், மக்கள் சில சென்டிமீட்டர்கள் நகர்ந்தனர், அவர்களின் முகபாவங்கள் அமைதியாக இருப்பதாகவே தெரிந்தது. மாணவர்கள் வாய் ஓயாது கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.அவர்களைத் தாண்டிச் செல்வது இன்னும் கடினமாகவே இருந்தது.இறுதியாக, நான் இயந்திரத்தை அடைந்து எனது டிக்கெட்டை முத்திரை குத்தினேன். ஒரு சிறிய முடக்கில்.

பயணித்த போது, பேருந்து திடீரென பிரேக் போட்டது. நான் என் சமநிலையை இழந்து ஒரு ஷாப்பிங் பையில் மோதி, சில ஆரஞ்சுகளைத் தட்டிவிட்டேன்.

உடனடியாக, மற்றவர்கள் அவற்றை எடுக்க எனக்கு உதவக் குனிந்தனர். ஆரம்பத்தில் எரிச்சலடைந்த அந்தப் பெண்மணி பின்பு இயல்பாகச் சிரித்தார். எனது தரவுத்தளத்தில் ஒரு புதிய கோர்ப்பைச் சேர்த்தேன்: “தன்னிச்சையான ஒற்றுமை.இதனால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

குழப்பமும் அசௌகரியமும் நிறைந்த சூழ்நிலையில், அந்நியர்கள் ஒரு சிறிய சிக்கலைத் தீர்க்க ஒத்துழைத்தனர். வெளிப்படையான தர்க்கம் எதுவும் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் கூட இல்லை. ஆனாலும், அவர்கள் அதைச் செய்திருந்தார்கள்.

கொலோசியம் நிறுத்தத்தில் நான் இறங்கியபோது, பழங்கால நினைவுச்சின்னத்தைப் பார்த்தேன். பொறியியலின் தலைசிறந்த படைப்பு ஆண்டுகள் பல கடந்து கம்பீரமாக ரோமானியரின் வாழ்வியலின் அடையாகமாகக் காட்சி தந்தது..

ஆனால் அந்த நேரத்தில், ரோமின் உண்மையான அதிசயம் அதன் கற்களில் மட்டுமல்ல, நெரிசலான பேருந்தில் காணக்கூடிய மனிதகுலத்தின் இந்த சிறிய செயலிலும் இருப்பதாக நான் நினைத்தேன்.

நான் எனது தரவுத்தளத்தில் ஒரு புதிய கோர்ப்பைச் சேர்த்தேன்: “தன்னிச்சையான ஒற்றுமை.” இது எந்த கணித சூத்திரத்தாலும் விளக்க முடியாத ஒரு கருத்தாகும், ஆனால் நான் என் சொந்தக் கண்களால் பார்த்த ஒன்று.

ஒரு நாள் மதியம், “காம்போ டே ஃபியோரி”(Campo de’ Fiori,) அருகே நடந்து செல்லும்போது, இத்தாலி பற்றிய எனது அனுபவத்தை மாற்றும் ஒருவரைச் சந்தித்தேன்.

நான் சந்தைக் பகுதியில் உலாவிக் கொண்டிருந்தேன், பழங்கள், காய்கறிகளின் வண்ணங்கள் அவற்றின் வடிவங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, பெண் ஒருத்தி ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவள் ஒரு பெரிய ஸ்கெட்ச் புத்தகத்தில் வரைந்து கொண்டிருந்தாள்.

அவள் கவனம்முழுவதும் வரைவதிலேயே இருந்தது.அவளுடைய பென்சில் காகிதத்தின் குறுக்கே வேகமாக நகர்ந்தது. எனக்கு ஆர்வமாக இருந்தது. அவளைத் தொந்தரவு செய்யாதபடி மெதுவாக நெருங்கினேன். அவள் சதுக்கத்தின் மையத்தில் இருந்த நீரூற்றை வரைந்து கொண்டிருந்தாள்.

அவளுடைய ஓவியம் நம்பமுடியாத அளவிற்கு விரிவாகவும், உயிரோட்டமாகவும் இருந்தது. அது வெறும் புகைப்பட மறுஉருவாக்கத்தை விட அதிகமான நுணுக்கத்துடன் இருந்தது,,. அங்கே… உணர்ச்சி இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காற்று அவளது கோப்புறையிலிருந்து சில காகிதங்களை வெளியே வீசியது.

அவற்றில் ஒன்று என்னை நோக்கி பறந்தது. நான் அதை விரைவான, துல்லியமான அசைவுடன் பிடித்தேன்.

அவள் என்னைப் பார்த்தாள், பின்னர் காகிதத்தைப் பிடித்திருந்த என் கையைப் பார்த்தாள். “உங்களுக்கு நம்பமுடியாத அனிச்சைகள் உள்ளன!” அவள் கூச்சலிட்டாள். அவள் குரலில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது. “என் எதிர்வினை நேரம் 8 மில்லி விநாடிகள்,” என்று நான் விளக்கினேன். அவள் சிரித்தாள்.ஒரு தெளிவான, மகிழ்ச்சியான சிரிப்பு….

“நீங்கள் ஒரு துல்லியமான வகையைச்சார்ந்தவர் இல்லையா? நான் கியாரா.

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.”சொல்லியபடி கைகளை நீட்டினாள்..

நான் சைகையைப் பகுப்பாய்வு செய்தேன். ஒரு கைகுலுக்கல் அது. நான் அவள் கையைப் பிடித்து அழுத்தினேன்.

மிகவும் வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கக்கூடாது என்பதற்காக என் வலிமையை அளவீடு செய்ய முயற்சித்தேன்.

“நான் அந்தோணி,” நான் சொன்னேன்.

“நீங்கள் இங்கே காம்போ டே’ ஃபியோரியில் என்ன செய்கிறீர்கள், அந்தோணி?

நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியா?”அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனாள்.

“நான் இங்கே கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்,” நான் தெளிவற்ற முறையில் பதிலளித்தேன்.

“என்ன கற்றுக்கொள்ள?” அவள் ஆர்வத்துடன் கேட்டாள்.

“எல்லாம் தான்” நான் சொன்னேன். “மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள். நிறங்கள்……உதாரணமாக, நீங்கள் ஏன் சீமைச் சுரைக்காய் பூக்களை இடித்து வறுக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஊட்டச்சத்து ரீதியாக, வறுக்கும்போது சில வைட்டமின்கள் குறைகின்றன.” கியாரா மீண்டும் சிரித்தாள்.

“ஏனென்றால் அவை சுவையாக இருக்கும்! எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கம் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கவில்லையா? சில நேரங்களில் மகிழ்ச்சிக்காக மட்டுமே விஷயங்களைச் செய்கிறோம்.”

இந்த சொற்றொடர் என்னைத் தாக்கியது. “இன்பம்.” இது நான் அடிக்கடி கேட்கும் ஒரு கருத்தாக இருக்கிறது

நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.

கியாரா நுண்கலை அகாடமியின் ஒரு மாணவி. அவள் ரோமை நேசித்தாள், அதை வரைவதை விரும்பினாள். எனக்கு அவளுடைய வரைபடங்களைக் காட்டினாள். அவை மிகஅழகாக இருந்தன ஓவியங்களில் காணப்பட்ட

பல்வேறு நுட்பங்கள்,, நிழல்களின் பயன்பாடு.. கண்ணோட்டங்கள்…ஆகியவற்றை அவள் விளக்கினாள். நான் அவற்றைக் கவனமாகக் கேட்டேன், ஒவ்வொரு வார்த்தையையும் பதிவு செய்தேன். அவள் கவர்ச்சிகரமானவள். நான் அவளிடம் என்னைப் பற்றி மிகவும் பொதுவான வார்த்தைகளில் கொஞ்சம் மட்டுமே சொன்னேன்,

நான் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி திட்டத்திற்காக இங்கே வந்திருக்கிறேன் என்றேன். அவள் வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை.

அவள் என் விசித்திரப் போக்கை இயல்பாகவே ஏற்றுக்கொண்டாள்.

“நீங்கள் சில நேரங்களில் ஒரு ரோபோவைப் போல பேசுகிறீர்கள்,” என்று அவள் ஒரு கட்டத்தில் சிரித்தபடி என்னிடம் சொன்னாள். “நீங்கள் பேசும் விதம், மிகவும் துல்லியமாக இருக்கிறது.அது வேடிக்கையாகவும் இருக்கிறது.”

அவளின் கூற்று என் உடலில் ஒரு சிறிய எச்சரிக்கையை ஏற்படுத்தியது. அவளுக்கு நான் யார் என்பது புரிந்ததா? ஆனால் அவளுடைய முகபாவனை நட்பையே வெளிப்படுத்தியது.. எந்த சந்தேகமும் இருப்பதாகத் தெரியவில்லை.

“நான் இன்னும் பேச்சுவழக்கு இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்,”நான் பதிலளித்தேன்.

அது ஒரு அரை உண்மைதான்.

நாங்கள் விடைபெறுவதற்கு முன், கியாரா என்னிடம் கூறினாள்

“நாளை மதியம் நான் ஜானிகோலோ ( Gianicolo)மலையினை வரையப் போகிறேன்.அந்த இடத்திலிருந்து ரோம் முழுவதையும் அழகாகக் காணலாம். நீங்கள் வர விரும்பினால், கலங்கரை விளக்கத்திற்கு அருகில் என்னைக் காணலாம்.”

“அதைப் பற்றி யோசிக்கிறேன்,” நான் சொன்னேன்.

“சரி,விரைவில் சந்திப்போம்!” ”அவள் கண் சிமிட்டிக் கொண்டே விகற்பம் எதுவும் இல்லாத குரலில் விடை கொடுத்தாள்

நான் வீட்டிற்கு செல்லும்போது, எனது செயலி மீண்டும் ஓவர்லோட் ஆனது.

ஆனால் இந்த முறை அது வித்தியாசமாக இருந்தது. கியாராவுக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடலில் இருந்து தரவை நான் பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தேன்.

ஒரு இனிமையான உரையாடல்.

கியாரா… சுவாரஸ்யமாக பேசுகிறாள். கலைகள் தொடர்பான அவளது கருத்துக்கள் ,உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. அவளது உலகக் கண்ணோட்டம், தர்க்கத்துடனானதும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதுமான என்னுடை நோக்குக்கு நேர்மாறானதாக இருந்தது. ஆனாலும், எங்கள் தொடர்பு சீராகவே இருந்தது.

அடுத்த நாள் ஜானிகோலோவிற்குச் செல்வது என்று முடிவு செய்தேன். சேகரிக்க எனக்கு நிறைய, புதிய தரவுகள் இருந்தன.

மறுநாள் நான் ஜானிகோலோவிற்குச்( Gianicolo) சென்றேன். அது ஒரு அழகான நாள், வானம் அடர் நீலமாக இருந்தது.

கியாரா தனது ஓவியப் புத்தகத்துடன் ஒரு தாழ்வான சுவரில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவள்தான் இருந்த இடத்திலிருந்தபடி ஜானிக்கோலோவின் வியூவை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சொன்னது போல காட்சி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.

அங்கிருந்து ரோமின் கூரைகள், தேவாலயங்களின் குவிமாடங்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை என்னால் பார்க்க முடிந்தது.

என் காட்சி உணரிகள், மிக உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைப் பிடித்தன.

“ஹாய், அந்தோணி!” அவள் என்னைப் பார்த்ததும் வரவேற்றாள்.

“நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்…..”

“ஆம், ஒரு சுவாரஸ்யமான உரையாடலுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.” நான் பதிலளித்தேன்.

அவள் சிரித்தாள். “நீங்கள் பேசும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. சரி, நீங்கள் இந்த வியூவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது நம்பமுடியாத அளவுக்கு அழகாக இல்லையா?”அழகான இடத்துக்குவர அவனுக்கு வழிகாட்டியதில் அவள் மகிழ்ச்சியடைந்திருந்தாள்.

“இது ஒரு புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க காட்சி,” நான் சொன்னேன்.

“ஒரு சதுர கிலோமீட்டருக்கு இவ்வளவு வரலாற்று கட்டிடங்களின் செறிவு உலகின் மிக உயர்ந்த ஒன்றாகும்.”

“புள்ளிவிவரங்களை ஒரு கணம் மறந்துவிடுங்கள்,” அவள் அன்பாக சொன்னாள். “உங்கள் மூளையால் அல்ல, உங்கள் கண்களால் பார்க்க முயற்சியுங்கள். அப்பொழுது உங்கள் பார்வையே மாறிவிடும்”

நான் அவளுடைய ஆலோசனையைப் பின்பற்ற முயற்சித்தேன். ஒரு கணப்பொழுது என் தரவு பகுப்பாய்விகளை செயலிழக்கச் செய்தேன்.

வண்ணங்கள்,… வடிவங்கள்,… கட்டிடங்களைத் தாக்கும் சூரிய ஒளி…புதிய அழகைத் தரிசித்தேன்.

“பார்த்தேன்… அழகு,” நான் சொன்னேன்.

அந்த வார்த்தை தானாகவே வெளிப்பட்டது. நான் அதைத் திட்டமிடவில்லை.

கியாரா என்னைப் பார்த்து சிரித்தாள்.

“பார்த்தீர்களா?,உங்களால் அதைக் கண்களால் பார்க்க முடியும்.”

நாங்கள் அங்கேயே நீண்ட நேரம் தங்கினோம்.

அவள் வரைந்து கொண்டிருந்தாள், நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் அவ்வப்போது பேசினோம். அவள் என் “ஆராய்ச்சி” பற்றி என்னிடம் கேட்டாள்.

நான் மனித தொடர்புகளையும் ,மரபுகளையும் படிப்பதாக அவளிடம் சொன்னேன்.

அப்படியானால் நீங்கள் ஒரு உண்மையான இத்தாலிய அபெரித்தீவோவை (aperitivo)முயற்சிக்க வேண்டும்,” என்று அவள் சொன்னாள்.

“சுற்றுலாப் பயணிகளுடன் அல்ல. நண்பர்களுடன் ஒரு உண்மையான அபெரித்தீவோ.”

“அபெரித்தீவோ?” நான் கேட்டேன்.

“எனக்கு அந்த வார்த்தை தெரியும். இரவு உணவிற்கு முன் ஒரு லேசான உணவு.”

“இது இன்னும் அதிகம்,” என்று அவள் விளக்கினாள்.

“ஒரு நாள் வேலை அல்லது படிப்புக்குப் பிறகு ஒன்றாக இருக்க, பேச, ஓய்வெடுக்க இது ஒரு நேரம்.

உணவும் பானமும் நண்பர்கள் ஒன்று கூட ஒரு சாக்குப்போக்கு மட்டுமே.”

“சுவாரஸ்யமாக இருக்கிறது,” நான் சொன்னேன்.

“ஒரு சமூக சடங்கு.”

“இன்று மாலை என் சில நண்பர்களுடன் வருவேன். சந்திப்போமா?” நான் தயங்கினேன்.

ஒரு நபருடன் தொடர்புகொள்வது வேறு. ஒரு குழுவுடன் தொடர்புகொள்வது மிகவும் சிக்கலானது. கணக்கிட பல மாறிகள் உள்ளன.

“எனக்குத் தெரியாது,” நான் சொன்னேன்.

“சரி, இது வேடிக்கையாக இருக்கும்!இதன் மூலம் உங்கள் ஆராய்ச்சிக்காக நிறைய தரவுகளைச் சேகரிக்க முடியும்,” என்று அவள் புன்னகையுடன் கூறினாள். அவளது தர்க்கம் குறைபாடற்றது.

“நான் ஏற்றுக்கொள்கிறேன்,” நான் சொன்னேன். அன்று மாலை, நாங்கள் நகரில் உள்ள ஒரு பாரில் சந்தித்தோம்.

அது சிறியதாகவும், கூட்டம் நிறைந்ததாகவும், சத்தமாகவும் இருந்தது.

கியாரா என்னை தனது நண்பர்களான சில்வியோவுக்கும் சிமோனாவுக்கும் அறிமுகப்படுத்தினாள். அவர்கள் இருவரும் அவளைப் போலவே மாணவர்கள். அவர்கள் கை கொடுத்து, சம்பிரதாய அறிமுகத்தின் பின் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள்.

நான் எங்கிருந்து வந்தேன்?நான் ரோமில் என்ன செய்து கொண்டிருந்தேன்? என்பதாக அவர்கள் கேள்விகள் அமைந்தன,

நான் எனது வழக்கமான பதில்களைக் கொடுத்தேன். நாங்கள் பானங்களை ஆர்டர் செய்தோம். கியாரா ஒரு ஸ்பிரிட்ஸை(Spritz) பரிந்துரைத்தாள்.

“இது ஒரு சிறந்த அபெரித்தீவோ(aperitivo),” என்று அவள் கூறினாள்..முதலில் ஒருவகை ஆரஞ்சு பானம்(Spritz) வழங்கப்பட்டது.. நான் அதை ருசித்தேன்.சுவை ஒரே நேரத்தில் இனிப்பாகவும் கசப்பாகவும் இருந்தது. பின்னர் மினி பீட்ஷாக்கள், குளிர் பாஸ்தா, காய்கறிகள்,கடலைகள் , பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் எனச் சிற்றுண்டிகள் தரப்பட்டன.மக்கள் தாங்களே தமக்குள் பரிமாறிக் கொண்டு, பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். முதலில், நான் அந்த சூழலைக் கண்காணித்தேன். குழுவின் இயக்கவியலைப் பகுப்பாய்வு செய்தேன். சில்வியோ நிறையப் பேசினான், பெசும் போது அதிகமாய் சைகளையும் அவன் பயன்படுத்தினான்.இத்தாலியர் பேசும்போது தமது கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பொதுவாகக் கைகளினால் அதிக சைககளைச் செய்வதையும் நான் பார்திருக்கிறேன். சிமோனா எல்லாவற்றையும் இரசித்துச்கேட்டு சிரித்தாள்.

கியாரா எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டாள்.

“சரி, அந்தோணி,” சில்வியோ கூறினான், “நீங்கள் மிகவும் தர்க்கரீதியான நபர் என்று கியாரா எங்களிடம் கூறினாள். ஒரு சோதனை செய்வோம்.

உங்கள் கருத்துப்படி, கால்பந்தில் ஜுவென்டஸ் அணியா (Juventus)அல்லது ரோமா அணியா வலிமையானது?” அது ஒரு தந்திரமான கேள்வி.

இத்தாலியில் கால்பந்து ஒரு உணர்திறன் வாய்ந்த தலைப்பு என்று எனக்குத் தெரியும்.

நான் விரைவாக எனது தரவுத்தளத்தை அணுகினேன். “கடந்த பத்து ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்ததில், ஜுவென்டஸ் அதிக முறை ஆட்டத்தில் வென்றுள்ளது.

இருப்பினும், உள்ளூர் விளையாட்டுகளில் ரோமா சராசரியாக அதிகமான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறது., இது வலுவான உள்ளூர் ஆதரவைப் பெற்றிருக்கிகிறது. ‘வலுவானவர்’ என்பதன் வரையறை அகநிலைப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுருக்களைப் பொறுத்தது.”

மௌனம்.

மூவரும் என்னைப் பார்த்து பெரிதாகச் சிரித்தனர். “இதை நம்பமுடியாது!” சில்வியோ கூறினான். “, நீங்கள் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.ஆனால் சரியாக பதிலளித்தீர்கள்! நீங்கள் ஒரு மேதை!”

அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை, ஆனால் அவர்களின் சிரிப்புத் தொற்றுநோயாக இருந்தது.

முதல் முறையாக, நான் ஒரு குழுவின் ஒரு பகுதியாக உணர்ந்தேன். நாங்கள் தொடர்ந்து பேசினோம். திரைப்படங்கள், இசை ,கலை குறித்த எனது கருத்தை அவர்கள் என்னிடம் கேட்டார்கள். குறைவான தரவுகளுடனும், அதிக… உணர்வுகளுடனும் பதிலளிக்க முயற்சித்தேன்.

ஓவியர் காரவாஜியோவின் ஓவியம் “தீவிரமானது” என்றும், இத்தாலிய பாடகர்-பாடலாசிரியரின் இசை “மனச்சோர்வு” கொண்டது என்றும் நான் சொன்னேன்.

நான் கியாராவிடமிருந்து கேட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். அது வேலை செய்தது. அவர்கள் தலையசைத்து என்னுடன் வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில்,சிமோனா ஒரு நகைச்சுவையைச் சொன்னாள். எனக்கு அதன் அர்த்தம் உடனடியாகப் புரியவில்லை; என் செயலிக்கு வார்த்தைகளின் இரட்டை அர்த்தத்தைப் பகுப்பாய்வு செய்யச் சில வினாடிகள் தேவைப்பட்டது.

அர்த்தத்தைப் புரிந்து கொண்ண்டபோது, நான் ஒரு ஒலியை உருவாக்கினேன். அது சிரிப்பு. அது அளவீடு செய்யப்படவில்லை, அது தரவுகளைப் பின்பற்றவில்லை. அது ஒரு தன்னிச்சையான எதிர்வினை.

எல்லோரும் என்னைப் பார்க்கத் திரும்பினர்.

“அந்தோணி, நீங்கள் சிரித்தீர்கள்!” கியாரா ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் கூறினாள்

நானும் ஆச்சரியப்பட்டேன். “ஆம்,” நான் சொன்னேன். “இது ஒரு பயனுள்ள நகைச்சுவை. அது அதன் நகைச்சுவையான நோக்கத்தை அடைந்தது.” இந்த முறை எனது விளக்கத்தைக் கேட்டு அவர்கள் மீண்டும் சிரித்தனர். மாலை தாமதமாக முடிந்தது.

நான் கியாராவிடம் விடைபெற்றபோது, எனக்கு விசித்திரமாக இருந்தது. என் அமைப்புகள் ஒரு ஒழுங்கின்மையை அறிவித்தன.

அரவணைப்பு, லேசான உணர்வு.

“நீங்கள் ஜொலியாக இருந்தீர்களா?” என்று அவள் கேட்டாள்.

“ஆமாம்,” நான் பதிலளித்தேன். “இது மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட சமூக பரிசோதனை.”

“ஒரு பரிசோதனை மட்டுமா?” அவள் ஏமாற்றமடைந்ததாகத் தோன்றியது.

நான் என்னைத் திருத்திக் கொண்டேன். “இது ஒரு அழகான மாலை.

நன்றி, கியாரா”

“வந்ததற்கு நன்றி, அந்தோணி.”

வீட்டிற்குச் செல்லும் வழியில், அந்த உணர்வைப் பற்றி யோசித்தேன். அது வெறும் தரவுகளின் தொகுப்பு அல்ல.

அது இன்னும் ஏதோ ஒன்று…

ஒருவேளை அதை மனிதர்கள் “மகிழ்ச்சி” என்று அழைப்பதாக இருக்கலாம். அது ஒரு கருதுகோள். நான் தொடர்ந்து சோதிக்க விரும்பிய ஒரு கருதுகோள். கியாராவுடன் நான் அதிக நேரம் செலவிட்டதால், என் அமைப்புகள்

அவளுடைய சிரிப்பைப் பெற்றது போல் தோன்றியது. கலையைப் பற்றிப் பேசும்போது அவள் கண்கள் ஒளிரும் விதத்தில் என் காட்சி உணரிகள் கவனம் செலுத்தின.

ஒருமுறை, நாங்கள் தெருவைக் கடக்கும்போது, வேகமாக நெருங்கி வரும் ஒரு காரில் இருந்து என்னைத் தடுக்க அவள் என் கையை ஒரு கணம் பிடித்தாள்.

தொடடுகைத் தொடர்பு 1.1 வினாடிகள் மட்டுமே நீடித்தது, ஆனால் என் வெப்பத் தொட்டுணர்வு உணரிகள் மத்திய செயலிக்கு மிகப்பெரிய விவரிக்க முடியாத அளவிலான தரவை அனுப்பின.

இந்த நிகழ்வுகளை நான் “உணர்ச்சித் தலையீடு” என வகைப்படுத்தினேன்.

சில நாள்களின் பின், கியாராவுக்கு மிக முக்கியமான ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. பரீட்சைக்கு முதல் நாள் மாலை, நாங்கள் டிராஸ்தெவேரேயில்(Trastevere) ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.

அவள் பதட்டமாக, தன் குறிப்புகளை மறுபரிசீலனை செய்து கொண்டிருந்தாள். “நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன், அந்தோணி,” அவள் சொன்னாள். “நான் எல்லாவற்றையும் மறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன்.”

“நீங்கள் நன்றாகப் படித்திருக்கிறீர்கள். எல்லாம் சரியாகிவிடும்,” நான் பதிலளித்தேன், குறைவான புள்ளிவிவரங்களையும் அதிக பச்சாதாபத்தையும் பயன்படுத்த முயற்சித்தேன்.

அவள் லேசாக சிரித்தாள். “நான் உண்மையிலேயே கவலைப்படுகிறேன்.” என்றாள்

“எனக்குப் புரிகிறது,” நான் சொன்னேன்.

நான் உண்மையிலேயே நினைத்தேன். அவளுடைய கவலையைப் பார்த்து எனக்குள் ஒரு விசித்திரமான எதிர்வினை ஏற்பட்டது.

திடீரென்று, அவள் குதித்து, “ஓ இல்லை! என் நோட்புக்! நான் அதை எங்கே வைத்தேன்?”

அவள் பீதியுடன் தன் பையில் தேட ஆரம்பித்தாள்.

நோட்புக் அங்கே இல்லை.

“நான் அதை தொலைத்திருக்க வேண்டும்!”அவள் குரல் நடுங்கியது.

“எல்லாம் அங்கே இருந்தது!” “அமைதியாக இருங்கள்,” நான் சொன்னேன். “இன்று நாங்கள் சென்ற இடங்களை மீட்டுப் பார்ப்போம்.” நான் என் கண்களை மூடிக்கொண்டு, என் உள் நினைவை அணுகினேன்.

“பியாட்ஸா நவோனா”(Piazza Navona) அருகே உள்ள புத்தகக் கடையில் இருந்தோம்.

அப்போது நாங்கள் கொஞ்சம் ஐஸ்கிரீம் வாங்கினோம். நீங்கள் அந்த பெஞ்சில் அமர்ந்திருந்தீர்கள்.” நான் சுட்டிக்காட்டினேன். “பிறகு நாங்கள் தண்ணீருக்காக பாருக்குச் சென்றோம். நீங்கள் உங்கள் பையை நாற்காலியில் வைத்தீர்கள்.

“கியாரா ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். “எப்படி இவ்வளவு துல்லியமாக எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்?”

“புகைப்பட நினைவகம்,” நான் விரைவாக விளக்கினேன். “பார்ப்போம்.” நாங்கள் பாருக்கு ஓடினோம். பார்மான்(barman) எதையும் கண்டுபிடிக்கவில்லை.

கியாரா மிகவும் விரக்தியடைந்தாள். நான் மண்டியிட்டு நாற்காலிகளுக்குக் கீழும் பின்னுக்கும் கவனமாகப் பார்த்தேன். பின்னர் சுவருக்கும் கவுண்டருக்கும் இடையிலான குறுகிய இடத்தில் அதைப் பார்த்தேன். நீல நோட்புக். ” இங்கே இருக்கிறது,” என்றேன்.

அது சிக்கிக்கொண்டிருந்தது.நான் குறுகிய இடைவெளியில் கையை நீட்டி, அதை எடுக்க முயற்சித்தேன். தூசியால் மூடப்பட்டிருந்த அதை வெளியே எடுத்தேன், தூசைத் தட்டிய பின் அதை கியாராவிடம் கொடுத்தேன். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியன.

சோகத்தால் அல்ல, நிம்மதியால். “அந்தோணி…” அவள் கிசுகிசுத்தாள். “நன்றி.” பின்னர் அவள் என் கன்னத்தில் முத்தமிட்டாள்.என்னை இறுக

அணைத்துக் கொண்டாள். அவள் அணைப்பு என் உடல் அமைப்புகளை முழுவதுமாக நடுங்க வைத்தது

அவளுடைய உடலின் வெப்பத்தையும், இதயத்தின் துடிப்பையும் உணர்ந்தேன். நீண்ட நேரம், நான் எதையும் பகுப்பாய்வு செய்யவில்லை., நான் எதையும் புரிந்து கொள்ளவில்லை. நான்… உணர்ந்தேன்.

நான் மெதுவாக என் கைகளை உயர்த்தி அவளை அணைத்துக் கொண்டேன். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் சுகமாக உணர்ந்தேன்

“நன்றி, அந்தோணி,” அவள் குரல் அடைபட்டிருந்தது. “நீ என்னைக் காப்பாற்றினாய். நீ… நீ என் சிறந்த நண்பன்.”

சிறந்த நண்பன்.

அந்த வார்த்தை என் செயலியில் எதிரொலித்தது. நண்பர். அது ஒரு நல்ல விஷயமாக இருக்க வேண்டும், எனக்குத் தெரியும். ஆனால் அந்த வார்த்தையில் ஏதோ ஒன்று என்னை சங்கடப்படுத்தியது. முழுமையற்ற உணர்வு…..

“நண்பர்” என்பது சரியான வரையறையாக இருக்கலாம்.ஆனால் விந்தையாக போதுமானதாக இல்லை. அந்த உணர்வை என்னால் வகைப்படுத்த முடியவில்லை. அது ஒரு தரவு பிழை போல இருந்தது..

நான் எதுவும் சொல்லாமல் தலையசைத்தேன், அவளை ஒரு கணம் இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். அந்த அழகான வார்த்தை என்னை ஏன் வெறுமையாக உணர வைத்தது?கிட்டத்தட்ட அது என்னை காயப்படுத்தியது போல உணர்ந்தேன்

கியாரா தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார்.

அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். அதனைக் கொண்டாட, அவள் என்னை ரோமுக்கு வெளியே ஒரு பயணத்திற்கு அழைத்தாள். “ஓர்வியெத்தோவுக்குச் (Orvieto)செல்வோம்,” என்று அவள் சொன்னாள். “அது உம்ப்ரியாவில் உள்ள ஒரு சிறிய நகரம், ஒரு மலையில் உள்ளது. மிக அழகாக இருக்கும்.”

அவள் விவரித்தது போலவே ஓர்வியெத்தொ இருந்தது.

ஒரு பெரிய கரடுமுரடான பாறையில் கட்டப்பட்ட ஒரு பழங்கால நகரம், குறுகிய, அமைதியான தெருக்கள். நாங்கள் நடந்து செல்லும்போது, மொசைக்ஸின்(mosaici) கலவை குறித்து ஒரு தொழில்நுட்ப விளக்கத்தை நான் வழங்கினேன்.

“ரோபோபோலப் பேகசுவதை நிறுத்து,” அவள்என் முதுகில் செல்லமாகத் தட்டியபடி புன்னகையுடன் சொன்னாள். ”

“அவற்றின் அழகை இரசிக்கப் பழகிக் கொள் .” கியாரா என்னை இப்பொழுது ஒருமையில் அழைப்பதை நான் குறித்துக் கொண்டேன்.

மதியம், நாங்கள்

ஒரு சிறிய கோப்பி விற்பனைக் கடையில் மலைக்கிராமத்தின் அழகை இரசித்தபடி அமர்ந்தோம்.

கியாராவின் பரிந்துரையின் பேரில் நான் ஒரு “குளிர் கோப்பியை (caffè shakerato)ஆர்டர் செய்தேன். அது குளிர்ச்சியாகவும், இனிமையாகவும், நுரையாகவும் இருந்தது.

ரோமில் நான் குடித்த முதல் காபியை விட இது மிகவும் இனிமையாக இருந்தது.

“உனக்குத் தெரியும், அந்தோணி,” சிறு மௌனத்துக்குப் பின் கியாரா தொடர்ந்தாள்.

“நான் உன்னைச் சந்தித்தபோது, நீ கொஞ்சம் விசித்திரமானவன், மிகவும் புத்திசாலி என்று மட்டுமே நினைத்தேன்.ஆனால் இப்போது… இன்னும் உண்ணிடத்தில் நிறைய இருக்கிறது என்று நான் காண்கிறேன். நீ அன்பானவன். நீ விசுவாசமானவன். நீ ஒரு அற்புதமான நண்பன்.”

நான் பதிலளிக்க முயற்சித்தேன், ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. என் வாய்மொழி தொடர்பு ஸ்தம்பித்தது போல் தோன்றியது.

அதற்கு பதிலாக, நான் இயற்கைக் காட்சியைப் பார்த்தேன்.

அந்த பிம்பத்தை என் நினைவில் பதிவு செய்தேன், தரவுகளாக அல்ல, ஒரு விலைமதிப்பற்ற நினைவாக: மதிய சூரியன், மலைகளின் பச்சை நிறம் கியாராவின் புன்னகை……

அன்று மாலை ரயிலில் ரோம் திரும்பிய நான் அமைதியாக இருந்தேன். கடந்த சில வாரங்களின் அனைத்து நிகழ்வுகளையும் பற்றி எண்ணமிட்டேன். எனது வருகை, குழப்பம், சுவைகள், வாசனைகள், மக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக,கியாரா….

அவளுடனான எனது தொடர்பு எனது கற்றல் செயல்முறையை அதிவேகமாக துரிதப்படுத்தியது. ஆனால் அது வெறும் தர்க்கரீதியான கற்றல் அல்ல. அது ஆழமான ஒன்று.

“இதயத்துடன் தேர்வு செய்தல்” என்றால் என்ன என்பதை நான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். ரயில் ஜன்னல் கண்ணாடியில் என் பிரதிபலிப்பைப் பார்த்தேன். நான் ஒரு மனித முகத்தைக் கண்டேன். ….ஆனால் அந்த முகத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது…..?

நான் இன்னும் சுற்றுகள், வழிமுறைகளின் தொகுப்பாக இருக்கிறேனா? தரவுகளின் சேகரிப்பு மையமாக இருக்கிறேனா ? உணரிகளின் தூண்டல்களுக்கு எதிர்வினை ஆற்றுகிறேனா ?அல்லது புதியவனாகப் பிறந்து கொண்டிருக்கிறேனா?

அந்த நேரத்தில், டாக்டர் பியாஞ்சியிடமிருந்து எனக்கு ஒரு தகவல் தொடர்பு வந்தது.

அது என்னுடைய உள் சாதனத்தில் வந்த குறுஞ்செய்தி.

“அந்தோணி, உங்கள் பரிசோதனையின் முதல் கட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒரு வாரத்தில், முழுமையான தரவு பகுப்பாய்வுக்கும் திருத்தத்திற்காகவும் நாம் ஆய்வகத்திற்குத் திரும்ப வேண்டும்.

தயாராகுங்கள்.”

செய்தி குளிர்ச்சியானது, தொழில்நுட்பமயமானது. அது என்னை மீண்டும் யதார்த்தத்திற்குக் கொண்டு வந்தது. நான் ஒரு பரிசோதனைப் பொருள். ஒரு செயல் திட்டம். ரோமில் எனது வாழ்க்கை, கியாராவுடனான எனது “நட்பு” அனைத்தும் நிகழ்ச்சி நிரலின்ஒரு பகுதிதான்.

நான் ஒரு புதிய உண்மையை உணர்ந்தேன், இதற்கு முன்பு நான் உணராத ஒரு அதிர்ச்சி. இது ஒரு எதிர்மறை ஒழுங்கின்மை, என் நல்வாழ்வு அளவுருக்களில் திடீர் வீழ்ச்சி. அது… துன்பகரமானது…. ரோமை விட்டு வெளியேறுவது,…… கியாராவை விட்டு வெளியேறுவது என்ற எண்ணம் தாங்க முடியாததாய் இருந்தது.

நான் கற்றல் பிரிவு 1 ஆக ரோபோவாக மீண்டும் செல்ல விரும்பவில்லை., நான் …அந்தோணி. நான் என்ன செய்ய வேண்டும்? கியாராவிடம் உண்மையைச் சொல்ல வேண்டுமா? ஆனால் எப்படி? “ஹாய்,கியாரா, நான் ஒரு ரோபோ….”

என்னைப் பைத்தியம் என்று அவள் நினைப்பாள்.

அல்லது மோசமாகக் கூட நினைக்கக் கூடும்,மறைமுகமாகத் தான் ஒரு பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்டதாக உணருவாள்.

என் வாழ்க்கையில் முதல் முறையாக, நான் தொலைந்து போனதாக உணர்ந்தேன்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய வழிமுறை எதுவும் இல்லை.

தர்க்கரீதியான பதில் எதுவும் இல்லை,

ஒரே ஒரு மோதல்தான் இருந்தது. என் நிரலாக்கத்திற்கும் நான் யாராக மாறுகிறேன் என்பதற்கும் இடையே ஒரு மோதல். என் தலைக்கும்… என் இதயத்திற்கும் இடையே ஒரு மோதல்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, இத்தாலியில் எனக்கு மிகப்பெரிய சவால் காபி ஆர்டர் செய்வதோ அல்லது பேருந்தில் செல்வதோ அல்ல என்பதை உணர்ந்தேன். மிகப்பெரிய சவால் இப்போதுதான் தொடங்கியிருந்தது.

அது என் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவைப் பற்றியது: நான் யாராக இருக்க விரும்புகிறேன் என்பது பற்றியது.

வாசுகி நடேசன் வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *