அது வரையில்…
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 67
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மருதமுத்து இறப்பதற்கு முன் தன் மகன் மலரவனை அருகில் அழைத்து, ”மகனே நீ பிறந்தவுடன் உன் தாய் இந்த உலகத்தை விட்டுவிட்டுப் போய்விட்டாள். உன்னை வளர்ப்பதற்காகவே நான் மீண்டும் மணம் செய்து கொண்டேன். ஆனால் அவள் உனக்கு ஒரு நல்ல தாயாக அமையவில்லை. உன் மீது அன்பு காட்டுவதற்குப் பதில் வெறுப்புதான் காட்டினாள். உன் மீது உன் சித்திக்கு அன்பு இல்லை. அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் உன்னோடு பேசவும் பழகவும் அவள் விடவில்லை. அதனால் அவர்களும் உன்னை மதிப்பதில்லை. நீ தாயன்பிற்கும் உடன்பிறப்புகளின் பாசத்திற்கும் ஏங்குகிறாய் என்பது எனக்குத் தெரியும். இதை எல்லாம் எண்ணியெண்ணி நான் கண்ணீர் விடாத நாளே இல்லை. இன்று யாரையும் எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலை உனக்கு இல்லை. அதனால் நான் இறந்த பிறகு, நீ இந்த வீட்டைவிட்டு போய்விடக் கூடாது. ஆயிரம் தான் உன் சித்தி தவறு செய்திருந்தாலும் கடைசி வரைக்கும் உன் சித்தியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உன் தங்கை அருணாவையும் தம்பி அகிலனையும் கரை சேர்க்க வேண்டியது உன் பொறுப்பாகும். நான் சொன்னதைச் செய்வதாக எனக்குச் சத்தியம் செய்து கொடு” என்று சத்தியம் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
கடைசி நேரத்தில் அப்பாவுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தால் மலரவன், சித்தியையும் அவர் பிள்ளைகளையும் தனியே விட்டுவிட்டுப் போக முடியாத நிலையில் இருந்தான்.
தன் கணவர் இருக்கும்போதே மங்களம் மலரவனைப் படாதபாடு படுத்துவாள். இப்போது கேட்கவே வேண்டியதில்லை. நினைத்த நேரம் எல்லாம் பணம் கேட்பது. கண்டபடி செலவு செய்வது தன் பிள்ளைகளுக்கு அதை வாங்கிக் கொடு, இதை வாங்கிக் கொடு என்று கட்டாயப்படுத்தி வந்தாள்.
மலரவன், கை நிறைய சம்பாதித்ததால், அவள் சொன்னபடி எல்லாம் செய்து வந்தான். தன்னுடைய நிலையை ஒரு நாள் தன் நண்பன் ரகுவரனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
ரகுவரன், மலரவனிடம், “நீ திருமணம் செய்து கொண்டால் என்ன?” என்று கேட்டான்.
“நான் படும் பாடு போதாதா? வீணாக ஒரு பெண்ணை இந்த ராட்சசக் கூட்டத்தில் கொண்டு வந்து, சித்திரவதைப் படும்படி செய்ய சொல்கிறாயா? அதெல்லாம் வேண்டாம்” என்றான்.
“நீ பயப்பட வேண்டாம். உன் தாயையும், தங்கை தம்பியையும் திருத்தி நல்வழி படுத்தக்கூடிய ஒரு பெண்ணாகப் பார்க்கிறேன்’ என்றான் ரகுவரன்.
ரகுவரன் தனக்குத் தெரிந்த மாலதியிடம் மலரவனின் நிலையை எடுத்துக்கூறி அவனை மணந்து கொள்ளச் சொன்னான்.
முதலில் முடியாது என்று மாலதி சொல்லிவிட்டாள். பிறகு ஏன் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றிப்பெற முயற்சிக்க கூடாது?” என்று பலமுறை சிந்தித்தாள். கடைசியில் மலரவனை மணந்து கொண்டாள்.
மலரவனிடம், “நான் எடுத்துக் கொண்டுள்ள சவாலில் வெற்றி பெறும் வரையில் நாம் உடலால் உறவு கொள்ளக் கூடாது; உறவால் அன்பு கொள்வோம்” என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.
மங்களம் வீட்டிற்கு வந்த மருமகளிடமும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்த தவறவில்லை. தான் கூப்பிடுகின்ற பொழுது, தன் முன்னே வந்து நிற்க வேண்டும் என்றும், தான் கேட்பதை எல்லாம் கொடுக்க வேணும் என்றும் கட்டளை இட்டாள்.
மாலதி, மங்களத்தின் மீது எந்தவிதமான வெறுப்பும் கொள்ளாமல் நடந்து வந்தாள்.
மாலதியும் தனக்குப் பயந்து கொண்டிருக்கிறாள் என்று மங்களம் நினைத்தாள்.
ஒரு நாள் காலையில் அறையிலிருந்து வெளியே வந்த மங்களம், அதிகாரத் தோரணையுடன் எப்போதும் போல் பணிப் பெண்ணின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே வந்தாள்.
பணிப்பெண் அவளுடைய குரலுக்குப் பதில் கொடுக்கவில்லை.
கோபத்துடன் சமையல் அறை பக்கம் போனாள். அங்கே மாலதி நின்று கொண்டிருந்தாள்.
“எங்கே அந்த வேலைக்காரி?” என்று கேட்டாள்.
“வரவில்லை” என்றாள் மாலதி.
“ஏன்?” என்று கேட்டாள் மங்களம்.
“நிறுத்திவிட்டேன்” என்றாள் மாலதி.
“ஏன் நிறுத்தினாய்? யாரைக் கேட்டு நிறுத்தினாய்?” என்று மங்களம் கோபமாகக் கேட்டாள்.
“நம்முடைய வேலைகளை நாமே செய்து கொண்டால், வேலைக்கு ஆள் எதற்கு?” என்று கேட்டாள் மாலதி.
“நீ வேண்டும் என்றால் உன் வேலையைச் செய்து கொள். என்னாலும் என் பிள்ளைகளாலும் வேலை செய்ய முடியாது. மங்களம் தொடர்ந்து, நீ வேலைக்காரியை நிறுத்திவிட்டால், நீ தான் எங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினாள்.
மாலதி எதுவும் பேசாமல் இருந்தாள்.
மறுநாளும் பணிப்பெண் வரவில்லை. மாலதி தனக்கு வேண்டியவற்றைச் செய்து கொண்டு வேலைக்குப் போய்விட்டாள்.
மங்களம் எரிமலை என குமுறினாள். அவளுடைய பிள்ளைகளும் அவளுக்கு ஒத்து ஊதினார்கள்.
மாலையில் வீடு திரும்பியவுடன் மங்களம், மாலதியிடம் பூகம்பமாக வெடித்தாள்.
அப்போது, “நமக்கு வேண்டியதை நாமே செய்து கொள்வதுதான் நல்லது என நினைக்கிறேன். உடல் சுகம் இல்லாத சமயத்தில் மற்றவரின் உதவியை நாடலாம். அத்தானும் வேலைக்குப் போறாங்க. நானும் அருணாவும் கூட வேலைக்குப் போகிறோம். தம்பி அகிலனும் பள்ளிக்குப் போகிறான். நீங்கதான் வீட்டிலே இருக்கிறீங்க. உங்களால் முடிந்த வேலைகளை நீங்கள் செய்து வந்தால், வீடு திரும்பியவுடன் எங்களால் முடிந்த வேலைகளை நாங்கள் செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் என்றால் வீட்டிற்குப் பணிப்பெண் தேவை இல்லை. பணிப்பெண்ணுக்குக் கொடுக்கிற பணத்தை மிச்சப்படுத்தி வைத்திருந்தால் வெளிநாடுகளுக்குச் சென்று வரலாம். நமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லை அத்தை. உங்கள் உடல் நலத்தையும் நீங்க கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். வேலை எதுவும் செய்யாமல் உட்கார்ந்து இருந்தீங்க என்றால். வியாதிகள் வர சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது” என்று மாலதி ஒரு சிற்றுரையே ஆற்றிவிட்டாள்.
மருமகளின் பேச்சைக் கேட்ட மங்களத்தால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை.
தன்னுடைய அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மங்களம் விரும்பவில்லை.
“இந்தா பாரு!” இது என் குடும்பம். என் இஷ்டம் போல் தான் எல்லாம் நடக்கணும்” என்று காரசாரமாக கூறினாள் மங்களம்.
மாலதி எதுவும் பேசாமல் அறைக்குள் போய்விட்டாள்.
ஒரு நாள், குளியல் அறையில் மங்களம் வழுக்கி விழுந்துவிட்டாள். அப்போது முழங்கால் முட்டியில் நன்றாக அடிபட்டுவிட்டது. அவளால் எழுந்து நடக்க முடியவில்லை.
வீடு திரும்பிய மாலதி அதை அறிந்தவுடன் மங்களத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்க வேண்டிய நிலைமை மங்களத்திற்கு ஏற்பட்டது.
அந்த இரண்டு நாட்களும் மாலதி, வேலை முடிந்து வீடு திரும்பும்போது, மருத்துவமனைக்குச் சென்று அத்தையைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுதான் வருவாள்.
மங்களம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் மாலதி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, மங்களத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தாள்.
மங்களத்தைக் குளிப்பாட்டினாள். சில வேளைகளில் அவள் சிறுநீர் கழிக்க கஷ்டப்பட்டபோது மாலதி உதவி செய்தாள். ஆனால் மங்களத்தின் மகள் அருணா, தன் தாய்க்கு எந்தவிதமான உதவிகளும் செய்ய முன்வரவில்லை.
தன் மருமகள் மாலதியை ஓட ஓட விரட்டிய போதிலும் அவள் என் மீது வெறுப்படையவில்லை. என்னைத் தன் தாய் போல் நினைத்து எனக்கு வேண்டிய பணிவிடைகளை ஒழுங்காகச் செய்து வருகிறாள். ஆனால் தன் மகள் எதையும் கண்டு கொள்ளவில்லை. அப்போதுதான் மங்களம், தான் தன் மகளை வளர்த்த முறைக்கும்; மாலதியை அவள் தாய் அவள் தாய் வளர்த்த முறைக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்ந்தாள்.
ஒருவாறு மங்களம் எழுந்து நடக்கத் தொடங்கினாள்.
வேலை விட்டு திரும்பியவுடன் மாலதி வீட்டு வேலைகளைச் செய்தாள். அவளுக்கு உதவியாக மலரவனும் இருந்தான். இதை எல்லாம் பார்த்தபோது மங்களத்தின் மனதில் ஓர் உறுத்தல் ஏற்பட்டது.
பாவம் பிள்ளைகள் வேலைக்குப் போய்விட்டு வந்து வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக ஏன் நான் இருக்கக் கூடாது?” என்று எண்ணினாள். பிறகு சிறுசிறு வேலைகளைச் செய்ய மங்களம் தொடங்கினாள். மாலதியைக் கண்டால் கடுகடுத்த மங்களம், இப்போது இலேசாகப் புன்னகை செய்யத் தொடங்கினாள்.
மாமியாரிடம் ஏற்பட்டுள்ள மாறுதல்களை மாலதி அறியாமல் இல்லை. அவளின் முயற்சி வெற்றி பெற தொடங்கிவிட்டதை எண்ணி மகிழ்ந்தாள்.
மங்களத்தின் பிறந்த நாள் அன்று புதிய பட்டுப்புடவையும் தங்கச் சங்கிலியும் வளையல்களும் வாங்கிக் கொடுத்து, பிறந்த நாளைக் கோலாகலமாக மாலதி கொண்டாடினாள். இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்காதிருந்த மங்களம் அப்படியே அதிசயத்துப் போனாள். மருமகள் இவ்வளவு அன்புடையவளா என்று எண்ணினாள்.
அதன் பிறகு, மங்களத்திற்கு மாலதியின் மீது ஒரு பற்றும் மரியாதையும் உண்டாயின. குடும்பத்திலுள்ள பெரியவளான நான்தானே சிறியவங்களுக்கு உதவியாக இருந்து வரவேண்டும் என்ற எண்ணம் மங்களத்தின் மனதில் வேர் ஊற்றியது. அதன் பிறகு மங்களம் வீட்டுப் பொறுப்புகளைத் தானே முன்வந்து செய்யத் தொடங்கினாள். அதன்பிறகு மாமியாரும் மருமளும் தாயும் மகளும்போல் பழகத் தொடங்கினார்கள்.
ஒரு நாள், மங்களம் தன் மருமகள் மாலதியிடம் “எப்போது எனக்கு ஒரு பேரனைப் பெற்றுத்தரப் போகிறாய்” என்று கேட்டாள்.
நான் எடுத்துக் கொண்டுள்ள சவாலில் முழுமையாக வெற்றி பெற்ற பிறகுதான் அதெல்லாம் என்றாள்” மாலதி.
மங்களம் எதுவும் புரியாமல் விழித்தாள்.
மாமியாரைத் திருத்தியாச்சு, அடுத்து, நாத்தியைத் திருத்த வேண்டும் என்று மாலதி எண்ணினாள். அந்த நேரத்தில், மங்களம் மாலதியிடம், “நான் என் பிள்ளைகளையும் கெடுத்துவிட்டேன். அவர்களை ஒழுங்கான முறையில் வளர்க்கவில்லை. மகள் அருணா என் பேச்சைக் கேட்பதில்லை. அவன் நினைத்தபடி நடந்து கொள்கிறாள். அகிலனும் ஒழுங்காகப் படிக்கவில்லை. நீதான் அவர்களைத் திருத்தி நல்லவர்களாக மாற்ற வேண்டும்” என்று கூறினாள்.
“கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல” தனக்குத் தன் மாமியாரே பச்சைக்கொடி காட்டிவிட்டதால், அவளுடைய பாணங்களை அருணா மீது பாய்ச்ச தயாராகிவிட்டாள் மாலதி.
அன்றிரவு நீண்ட நேரமாகியும் அருணா வீடு திரும்பவில்லை. இன்று அருணாவுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணிய மாலதி, கதவின் உள் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு, சோபாவிலேயே படுத்துக் கொண்டாள்… விடியற்காலை இரண்டு மணி இருக்கும். அந்த நேரத்தில் வீடு திரும்பிய அருணா, கதவைத் திறக்கும் போது, திறக்க முடியவில்லை. நீண்ட நேரம் கதவைத்தட்டினாள். ஆனால் மாலதி கதவைத் திறக்கவில்லை.
அருணா, அம்மா! அம்மா! என்று கூப்பிட்டாள். மாலதி, ஏதோ திட்டத்துடன்தான் கதவைத் தாழ்ப்பாள் போட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட மங்களம் பேசாமல் இருந்துவிட்டாள்.
அரைமணி நேரத்திற்குப் பிறகு, மாலதி எழுந்துபோய் கதவைத் திறந்தாள்.
அருணா ஆத்திரத்துடன், யார் தாழ்ப்பாள் போட்டது என்று கேட்டாள்.
மாலதி, நான் தான் என்றாள்.
”ஏன்?” என்று கேட்டாள் அருணா.
“இது குடியிருக்கும் வீடு. வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாக்க தாழ்ப்பாள் போட்டு வைக்க வேண்டியது அவசியம்” என்றான் மாலதி.
“நான் வீட்டில் இல்லை என்பது தெரிந்தும் ஏன் தாழ்ப்பாள் போட்டீங்க!”
“பருவமடைந்த ஒரு பெண். இவ்வளவு நேரம் வெளியில் இருப்பாள் என்று எனக்குத் தெரியாது. நீ நாங்கள் படுக்கைக்குப் போவதற்குள் வீடு திரும்பி இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.” என்றாள் மாலதி.
“வெளியே போவதும் வருவதும் என்னுடைய இஷ்டம். இதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை” என்றாள் அருணா.
“உன் இஷ்டத்திற்குப் போவதற்கும் வருவதற்கும் இது ‘ஹோட்டல்’ இல்லை. குடியிருக்கும் வீடு. வீடு என்று ஒன்று இருந்தால், அதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றிற்கு உட்பட்டு நடக்க வேண்டியது உன்னுடைய கடமை என்பதை நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்” என்றாள் மாலதி.
நீ இந்த வீட்டுப் பெண். உனக்கு ஏதாவது நடக்கக் கூடாது நடந்து விட்டால், அது உன்னை மட்டும் பாதிக்காது. இந்தக் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதையும் தெரிந்து கொள்.
நீ நாளைக்கு இன்னொரு வீட்டிற்குப் போய் வாழ வேண்டிய பெண். இந்த வீட்டிலேயே காலம் பூராவும் இருக்கக் கூடியவள் அல்ல. அதனால் ஒரு குடும்பப்பாங்கானப் பெண்ணாக இருக்க வேண்டியது முக்கியம்.
இந்த மாதிரி இரவிலே வெளியே போய்விட்டு நேரம் கெட்ட நேரத்தில் வருவது சரியல்ல. இன்றைக்குப் பிறகு, நீ நேரத்தோடு வீட்டிற்கு வர வேண்டும்” என்று கூறிவிட்டு மாலதி அவளுடைய அறைக்குப் போய்விட்டாள்.
மாலதியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அருணா, விளக்கை அணைத்துவிட்டு, அவளுடைய அறைக்குள் போனாள்.
மாலதியின் பேச்சுக்குப் பயந்தோ அல்லது மதிப்புக் கொடுத்தோ, அருணா அதன் பிறகு நேரத்தோடு வீட்டுக்கு வந்தாள். நேரம் கழித்து வருவதாக இருந்தால், தன் தாயிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.
ஒரு நாள் மாலதி அலுவலகத்தில் இருந்து சாப்பிடச் சென்றபோது, அருணா ஒரு வாலிபனுடன் சேர்ந்து போனதைப் பார்த்தாள்.
அன்றிரவு அத்தையிடமும், அருணாவிடமும் அவளின் திருமணத்தைப் பற்றி பேசினாள்.
அருணா தான் விரும்புபவரைப் பற்றிக் கூறினாள். மாலதி, அந்தப் பையனை வீட்டிற்கு அழைத்து வரும்படி சொன்னாள்.
அவ்வாறே அருணா செய்தாள். வீட்டிற்கு வந்த பிறகு அந்தப் பையனைப் பற்றி மாலதி விசாரித்தாள். அவன் முன்பே திருமணமாகி, விவாகரத்து செய்தவன் என்பதை அறிந்தாள்.
அருணாவிடம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லி அவனை மறந்துவிடுமாறு கேட்டுக் கொண்டாள்.
தன்னுடன் வேலை செய்த ரகுவரனுக்கும் அருணாவுக்கும் திருமணம் செய்து வைத்தாள் மாலதி.
ரகுவரனின் உயர்ந்த குணங்களையும் நற்பண்புகளையும் கண்டு மனம் மகிழ்ந்து போனாள் அருணா. தன்னுடைய வாழ்வில் விளக்கேற்றி வைத்த தன் அண்ணி மாலதியை வாயாரப் புகழ்ந்தாள்.
மாலதி, அகிலன் பள்ளிக்குப் போனாள். அவன் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதில்லை என்று ஆசிரியர்கள் கூறினார்கள்.
அகிலன், சில நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு இருப்பதை அறிந்தாள்.
அவள் அகிலனிடம், படித்து முன்னுக்கு வரப் போகிறாயா அல்லது மாணவர்கள் நன்னடத்தைப் பள்ளிக்குப் போகப் போகிறாயா? என்று கேட்டாள்.
தான் இனிமேல் அண்ணியிடமிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த அகிலன், ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான்.
தன்னுடைய குடும்பத்தைத் திருத்தும் வரையில், தான் பிள்ளையே பெற்றுக் கொள்ள போவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டு, தன் தாயையும் தன்னையும் தம்பியையும் திருத்திய மாலதியின் உயர்ந்த குணத்தை வாயாரப் புகழ்ந்தாள் அருணா.
தன் அண்ணனையும் அண்ணியையும் தேனிலவுக்கு நீயூலாந்திற்கு அனுப்பி வைத்தாள்.
தான் எடுத்துக் கொண்ட சபதத்தில் வெற்றி பொங்க மாலதி தேனீலவுக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உண்மைச் சுதந்திரம்
அல்போன்ஸ் மோசஸ்
August 25, 2026
கிழக்கின் வெளிச்சம்
தாட்சாயணி
August 25, 2026
அந்த நிமிடம்
சந்திரகௌரி சிவபாலன்
August 25, 2026
