அது ஒரு நிலாக்காலம்







(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

நினைப்பு ஒரு வற்றாத ஜீவப் பெருநதி வாழ்க்கை நெடுக மனித மனவெளியில், நினைப்பு ஓர் இயக்கமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. என்றோ நடந்து முடிந்துபோன பல நிகழ்ச்சிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம். என்றாவது நடக்காதா வென்று நாம் ஆசைப்படும் நம்முடைய அபிலாஷைகளை மனத்தில் கற்பனை வடிவில் நிகழ்த்தியே பார்க்கிறோம். நடந்து விடக்கூடாதேயென்ற பயங்களையும் எண்ண வடிவில் நடத்திக் கலவரம் அடைகிறோம். நமது பிரச்சனைகளை நினைக்கிறோம்; வருத்தங்களை நினைக்கிறோம்; ஏமாற்றங்களை, பகைமையை, உறவை… இப்படி ஏதேனும் ஒன்றைச் சதா மனத்தால் நினைத்துக் கொண்டே இருக்கிறோம். எதைப் பார்த்தாலும் அல்லது யாரைக் கண்டா லும் ஏதோ ஒன்று நம் நினைப்பில் வந்து போகிறது; சில நிமிடங்களுக்கு மனத்தை நெருடுகிறது.
-இதோ, சில மாதங்கள் கழித்து குவாலியர் நகரி லிருந்து சுசுந்தா எழுதியிருக்கும் துயரம் தோய்ந்த கடிதத்தைப் பார்த்ததும் எப்படி எனக்கு அவள் ஓர் ஆத்ம சிநேகிதியாக ஒரு காலத்தில் என்னுடைய வாழ்க்கையில் உன்னத இடம் பெற்றிருந்தாள் என்ற மெலிதான நினைவலைகள் என்னுள் சில கணங்கன் புரண்டு கொண்டிருந்தன. அதே போல, ஜன்னலுக்கு வெளியில் தெருவில் ஒரு சிறுமி ரோஜாப்பூ விற்றுச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது என் தோழி – என் மகள் ரோஸ்மேரி என் மன வெளியில் அழகிய மேகம் பாலக் கடந்து சென்றாள்.
இருபத்தொரு வயதாகி விட்டாலும் மனத்தன்மையில் ரோஸ்மேரி வெறும் பன்னிரெண்டு வயதுப் பெண்ணாகத் தான் இருந்தாள்.
அந்தப் பெண் ரோஜா மலர்களின்மீது அலாதியான நேசம் கொண்டிருந்தாள். ரோஜாக்களை வருடுவாள். ரோஜாக்களை முத்தமிடுவாள். ரோஜாக்களோடு பேசவும் செய்வாள் ரோஜாப் பூக்களும் அவளோடு பேசுமாம்…
ஒரு நாள்…
ரோஸ்மேரியின் அறையில் ஈஸிச்சேரில் சாய்ந்து படித் துக் கொண்டிருந்தேன். தோட்டத்திலிருந்து ரோஸ்மேரி என்னைக் கூப்பிட்டபடியே வந்தாள். அவள் கூப்பிட்டது என் காதில் விழுந்தாலும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சுவாரஸ்டத்திலிருந்து கலையாமலே அமர்ந் திருந்தேன்.
“பாஸ், இங்கே பாரேன்…”
“படிச்சிட்டிருக்கேன். தொந்தரவு பண்ணாதே…” – தலையை நிமிர்த்தாமலே சொன்னேன்.
“ஊஹும்… ஒரே ஒரு நிமிஷம் பார் பாஸ்”- சிணுங்கினாள்.
“எதுக்கு?”- பார்வையை உயர்த்தாமலே கேட்டேன்.
“பாரேன்…”
நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டியபடி நின்றாள்.
”போச்சு, உனக்கு வயசாயிடுச்சு பாஸ்… கண் சரியாத் தெரியலை…”
”கண்ணெல்லாம் நல்லாத்தான் தெரியுது…”
”என்ன தெரியுது? நல்லா பாத்துட்டு சொல்லு.”
”ஓ! ரெண்டு கையிலேயும் ரெண்டு ரோஜா வச்சிருக்கியா? ஸாரிம்மா! நான் பாக்கலை…”
ரோஸ்மேரி அழகு காட்டிவிட்டுச் சொன்னாள்: ”வேற ரெண்டைக் காட்டினா மட்டும் உடனே பாத்துடுவே!”
பட்டென்று புத்தகத்தை மூடினேன். “அன்னிக்கி ஒரு நாள் உன்னை இந்த மாதிரி வல்கரா பேசாதேன்னு வார்ன் பண்ணிருக்கேன். மறுபடியும் வம்புக்காக பேசறே. ஜாக்கிரதை! மறுபடியும் இந்த மாதிரி சம்பந்தமே இல்லாம அசிங்கமா பேசினே— ‘பளார்’னு கன்னத்துல அறைஞ்சிடுவேன்.”
“அறை பாக்கலாம்.”
“உன் அக்கா கன்னாபின்னான்னு பேசறதைப் பார்த்துட்டு நீயும் அந்த மாதிரியெல்லாம் பேசணும்னு நெனைக்காத. புரியுதா? நீ வேற, அவ வேற. அது சுத்தமா தண்ணி தெளிக்க வேண்டிய கேஸ். நீ அப்படி யில்லை, தெரிஞ்சுக்க. ஜெம் நீ!”
ரோஸ்மேரியின் கண்களில் விநோத அன்புக் கலவை தெரிந்தது. அவளின் மிருதுவான மெத்தென்ற கைகள் என் கழுத்தைச் சுற்றிப் பின்னிக் கொண்டன. ”உன்னை மாதிரி ஓர் ஆளை லைஃப்ல இனிமே நான் மீட் பண்ணலே போறதில்லை பாஸ்…”
ரோஸ்மேரியின் அன்பில் தோய்ந்த இந்தச் சொற்கள் என்னைப் பற்றிய வெறும் புகழுரைகள் இல்லை; இச் சொற்கள் என்னைப் பற்றிய உண்மைகளே. இந்த ரோஸ்மேரி போன்ற, இரண்டொரு மாதங்களுக்கு ஒரு முறை குவாலியரிலிருந்து துயரம் இழையக் கடிதம் எழுதும் சுகந்தா போன்ற, இன்னும் என் வாழ்க்கை நெடுக நான் உறலாடிப் பிரிந்து போன பற்பல பெண்களின் நேசம் தான் இறுதியில் என்னை நிர்மலமான மனிதனாக மலரச் செய்ததென்று சொல்லலாம்.
“ரோஸி…! இப்படியே உன்னைத் தூக்கிட்டுப் போய் எங்க அம்மாகிட்ட காட்டணும் போல இருக்கு எனக்கு…”
”பாஸ், நெஜமாவே என்னை ஒருநாள் உன் மதர் கிட்ட கூட்டிட்டுப் போறீயா?”
“கண்டிப்பா அழைச்சிட்டு போறேன்.”
“ப்ராமிஸ்?”
“ப்ராமிஸ்”
“உன் மதர்கிட்ட என்னை யார்னு சொல்லே?”
“யார்னு சொல்லணும் சொல். அதே மாதிரி சொல்றேன்.”
“நீயும் நானும் வெறும் ஃப்ரெண்ட்ஸா?”
”இல்லை!”
“ப்ரதர் சிஸ்டர் மாதிரியா?”
“நோ!”
“ஹஸ்பண்ட் ஒய்ஃப் மாதிரியா?!”
“நஹி!'”
“நாம யார் பாஸ்?!”
“தெரியலை டார்லிங்… ஆனா உண்மையா சொல்லப் போனா… நீ எனக்கு டாட்டர்!”
“பாஸ்…”
“பெஸ்…”
“என்னை நீ விட்டுட்டுப் போயிட மாட்டியே ?”
“கண்டிப்பா போகமாட்டேன் சின்ன சுண்ணம்மா…”
நான் – இந்த ராம்குமார் எங்கேயும் போகவில்லை. ரோஸ்மேரியாவது எங்கேயும் போய்விடமாட்டாயே என்று என்னிடம்தான் மருட்சியுடன் கேட்டாள். ஆனால், சுகந்தா? என்னை விட்டு ஒரு போதும் பிரிந்து போகவே மாட்டேனென்று வங்கக் கடலின் எதிரில் எனக்கு அவள் தந்த வாக்கை மீறி எங்கேயோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று விட்டாள்.
சென்னை நகரின் கிழக்கே விரிந்து பரந்திருந்த வங்கக் கடலின் எதிரில் என்னைவிட்டு ஒருபோதும் பிரிந்து, போகவே மாட்டேனென்று சுகந்தா உறுதி மொழிந்த அந்தச் சம்பவத்தை நோக்கி என் நினைவுத் தடம் பயர்ந்து செல்கிறது. அந்தச் சிறிய சம்பவத்தை சொல்வதற்குமுன் ராம்குமார் என்ற என்னைப் பற்றியும், சுகந்தா என்ற என் சிநேகிதி பற்றியும் சில அவசியமான தகவல்களை இங்கே சொல்லி விடுவது பொருத்தமாக இருக்கும்.
மதுரைக்கு மேற்கே நாற்பதாவது மைலில் இருக்கும் பெரியகுளம் என்ற மிகப் பெரிய கிராமத்தின் தென்கரை என்ற பகுதியின் புழுதிக் காட்டில் பிறந்து வளர்ந்தவன் நான். தேக்கடி, கம்பம் போன்ற வனத்துறைகளில் வன விலங்குகளை நேருக்கு நேர் ஒற்றையாகவே சந்தித்திருக் கிற அச்சமற்ற தன்மை குழந்தைப் பருவத்திலிருந்தே என்னுள் மிக இலகுவாகப் படிந்திருந்தது. அந்த வனத்தன்மை என் தோற்றத்தில் நான் சென்னையில் வந்து வேரூன்றி விட்ட பின்பும் ஒரு சிதையாத கம்பீரத்தை நிரந்தரமாகவே என்னில் படியச் செய்திருந்தது அறிவார்த்த ரீதியில் நவீன வாழ்க்கையின் எல்லா அம்சங்களோடும் நான் கைகோத்துக் கொண்டிருந்தாலும் கூட பரம்பரை பரம்பரையாக வீரம் உறைந்த ஒரு குலத்தில் பிறந்து ஆளாகியிருந்த கம்பிரம், என்னை சென்னை நகரத்து இளைஞர்களிடமிருந்து சுகந்தாவுக்கு முற்றிலுமாக மாறுபட்ட மனிதனாகக் காட்டி விட்டது.
ஓர் அகில உலக நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த நவநாகரிக யுவதியாக மட்டுமல்லாமல், பல மொழிகளில் அநாயாசமாக உரையாடத் தெரிந்த சுகந்தா தமிழ், ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழியிலும் இலகுவாகப் பேச தெரியாத எனக்கு, ஓர் அருமையான பெண்ணாகத் தெரிந்ததில் வியப்பில்லை. இத்தனைக்கும் என்னுடைய இலக்கிய, சங்கீத ஞானத் தேர்ச்சியில் சுகந்தா பத்தில் ஒரு பங்குகூடத் தேர்ச்சி பெறாதவள் தான். ஆனாலும் அவளின் குடும்பப் பின்னணியின் தன்னம்பிக்கையின் முன் அவளுடன் பழகத்துவங்கிய ஆரம்பத்தில் அவளிடம் எனக்கு ஒரு தாழ்வு மனப் பான்மை இருந்தது. தேக்கடிக் காடுகளில் எத்தனையோ சமயங்களில் ஒற்றையாக எதிர்ப்பட்ட யானையின் முன்னிலையில் கூடப் பயப்பட்டிராத நான், துவக்கத்தில் சுசுந்தாவிடம் பேசக் கூடப் பயந்து போயிருந்தேன்!
ஏறக்குறைய ஒரு வருடம் பஸ் பயணத்தில் அந்நியர்களாகவே ஒன்றாகப் பயணமாகி. எதிர்பாராமல் மயிலாப்பூரில் இருந்த பட்டாடை விற்பனைக் கூடத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க நேரிட்டு, தயங்கித் தயங்கி ஓரிரு வார்த்தைகள் பேசி, தினமும் மாலை வேளைகளில் சந்திக்கிற நண்பர்களாகி விட்டிருந்தோம்.
ஒவ்வொரு சந்திப்பிலும் எனக்கு சுகந்தாவின் மேல் இருந்த ஈர்ப்பின் நீர் மட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது! இழை இழையாக அவளோடு நட்பின் இறுக் சுத்தை உறுதிப்படுத்திக் கொண்டபின் என்னுடைய காதலை உரிய தருணத்தில் சுகந்தாவிடம் வெளிப்படுத்திக் கொள்ளக் காத்திருந்தேன். ஒருநாள் மாலை மெரீனா மணல் வெளியில் அவளும் நானும் எதிர் எதிராக மெளன மாக அமர்ந்திருந்தோம். நான் கடலையே பார்த்துக் கொண்டிருக்க, சுசுந்தா பொய்யாக ஒரு புத்தகத்தைப் மிக மிகக் நிமிடங்கள் புரட்டிக் கொண்டிருந்தாள். கனமாகக் கழிந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்துக்குப் பின் புத்தகத்தை மூடி வைத்தாள். நான் கடலையே கவனித்துக் கொண்டிருந்தேன்.
“ராம்குமார்…”- மெல்லிய குரலில் அழைத்தாள். நான் கடலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் மௌனமாக இருந்த பின் மறுபடியும் கூப்பிட்டாள்:
“ஹலோ – ராம்குமார்…!”
“யெஸ்….!” – சற்றே அதிர்ந்தவன் போல சுகந்தா வைத் திரும்பிப் பார்த்தேன். அவளின் கண்கள் சில கணங்கள் என்னை நோக்கின.
“சொல்லுங்க சுகந்தா…!” என்றேன்.
“கடலையே பார்த்திண்டு இருந்தீங்களே- என்னவோ யோசிச்சிண்டிருந்த மாதிரி… அப்படியென்ன யோசனை?” – சுகந்தா கேட்டாள். இந்தக் கேள்வி தான் எங்கள் இருவருடைய வாழ்க்கையின் போக்கை முழுமையாக மாற்றி அமைத்து விட்டது!
சுகந்தாவின் இந்தக் கேள்வி பெண்ணுடன் ஏற்படுகிற நட்பு அல்லது காதல் உறவில் எனக்கே இயல்பான ஒரு கள்ளங்கபடமற்ற தன்மை வெளிப் பாட்டைப் பளீரெனக் காட்டி விட்டது.
“ஒண்ணுமில்லே கசுந்தா… ஒண்ணுமில்லே… கடலையே பாத்திட்டிருந்தப்ப சின்ன ஒரு சந்தேகம் வந்திச்சி எனக்கு…”
“என்ன சந்தேகம் ராம்குமார்?”
“ஒண்ணுமில்லே, கடல்ல ஒவ்வொரு அலையா வந்து வந்து போயிட்டிருந்ததைப் பார்த்ததும் நீங்களும் என் வாழ்க்கையில் ஒரு அழகான கடல் அலை மாதிரி வந்திட்டு கடல் அலை மாதிரியே போயிடுவீங்களோன்னு ஜஸ்ட் நெனைச்சிப் பார்த்தேன்..”
நான் எதிர்பார்க்கவே இல்லை, சுகந்தா பளிச்சென்று முழங்கால்களில் அவளின் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். லேசாக அவளின் உடல் விசும்பிக் கொண்டிருந்தது. சுகந்தாவின் உருவில் ஏதோ ஒரு கடல் தணிந்து விட்டாற் போல் தெரிந்தது, நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
பல நிமிஷங்களுக்குப் பின் முகத்தை முழங்கால்களிலிருந்து நிமிர்த்திய போது கிரஹணம் கடந்த நிலா போல அவளின் முகம் ஓர் உறுதியடைந்திருந்தது. நட்பு என்ற தளத்திலிருந்து எங்களின் உறவு காதல் என்ற விரித்த பரிவர்த்தனைக்குப் பரிணாமமடைபும் துளிர்ப்புகளை சுகந்தாவின் கண்களில் அந்தக் கணத்திலேயே என்னால் கண்டு கொள்ள முடிந்தது.
முற்றிலும் புதிய குரலில் சொன்னாள்: “போக மாட் டேன் ராம்குமார்…அலை மாதிரி வந்திட்டு நான் போகவே மாட்டேன். சத்தியமா மாட்டேன்.”
சுகந்தா என்னை விட்டு சத்தியமாகப் போசுவே மாட்டேனென்று மட்டும் சொல்லவில்லை. ராம்குமார் என்ற கடலோடுதான் சுசுந்தா என்ற நதி வந்து கலந்து ஒன்றாகும் என்று கொஞ்சம் உணர்வு மேலிட்டும் கூறினாள்.
ஆனால், அவள் தான் என்னை விட்டுப் பிரிந்தாள். இசை மாறிய நதியாக வேறொரு கடலில் போய் விழவும் செய்தாள்…!
இப்போது அவை எல்லாமே வெறும் நினைவுப் படி மங்கள் தானேயன்றி விசனங்கள் அல்ல!
இன்றைக்கு. அந்த சுகந்தாவையோ, ரோஸ்மேரி யையோ அல்லது ரோஸ்மேரியின் அறிமுகம் எனக்குக் கிடைப்பதற்கே காரணமான அவளின் மூத்த சகோதரி யான ஸீலியாவையோ நினைத்துப் பார்க்கிறபோது என்னுள் எந்த உணர்வுச் சார்பும் எழாமல், ஏதோ எனக்குச் சம்பந்தமே இல்லா த ஒரு நாடகத்தின் மேடைக் காட்சிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிற கவனம் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அன்றைக்கு?
காதலாலும் இழப்பாலும் கோபத்தாலும் மூர்க்கத் தனத்தாலும் பொங்கி, முட்டி மோதி உராய்ந்து வீழ்ந்த அந்த நாள்கள் அன்றைய சுணங்களில் எத்தனை குரூரமானவை… எவ்வளவு அவலமானவை!
அங்கும் இங்குமாக வானத்தில் நட்சத்திரம் ஒளிர்வது போல் என்னுள் மின்னிய நினைவுத் துணுக்குகள் ரோஸ் மேரியின் மூத்த சகோதரி ஸீலியா எனக்கு அறிமுகம் ஆகிய சம்பவத்தை அடைந்து ஒர் ஒழுங்கான நினைவுத் தொடராகவே நீட்சி கொள்கிறது…
அப்போது என்னுடைய தொழில் பட்டறையும் அலு வலகமும், ஒன்றாக இணைந்ததாக கிண்டியில் இருந்தது. மருத்துவமனைகல்,ஹோட்டல்கள்மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கான ஸ்டீல் பீரோ, கட்டில், “மேஜை, நாற்காலி போன்ற தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த அந்தச் சிறிய நிறுவனத்தை, தனியொரு முதலாளியாக அந்த மிக இளமையான வயதிலேயே நான் நிர்வகித்துக் கொண்டிருந்தேன்.
ரோஸ்மேரியின் சகோதரி ஸீலியா ஜேஸ்மின், சிறிது முன் பணம் செலுத்தி என்றைக்கோ ஒரு பெரிய ஸ்டீல் பீரோவுக்கும் ஒரு பெரிய சுட்டில் ஒன்றுக்கும் ஆர்டர் கொடுத்து விட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து முழுத் தொகையையும் செலுத்தி டெலிவரி எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டு போயிருக்கிறாள். ஆனால், அவள் டெலிவரி பெற்றுக் கொள்ளச் சம்மதித்துப் போயிருந்த அந்தக் குறிப்பிட்ட தேதிக்கு மேல் ஒரு வாரம் ஆகியும் ஸீலியா பொருட்களை வாங்கிக் கொள்ள வராததால், இவ்விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பாக்கிப் பணத்தையும் செலுத்தி உடனே பொருள்களை வந்து டெலிவரி எடுத்துக் கொள்ளக் கொள்ளச் சொல்லி ஸீலியாவுக்குக் கடிதம் எழுதினோம். ஸீலியா வரவில்லை. கடிதத்துக்குப் பதிலும் எழுதவில்லை.
பத்து தினங்கள் கழித்து ஸீலியா பணத்துடன் டெலி வரி எடுத்துக் கொள்ள வந்தபோது, அவளுக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த பீரோ அவசரமாகக் கேட்டு வந்திருந்த வேறொருவருக்கு இரண்டு நாள்களுக்கு முன் தவிர்க்க முடியாமல் டெலிவரி செய்யப்பட்டிருந்தது. தனக்கு உடனே பீரோ வேண்டுமென்று முறையிட்ட ஸீலியாவைப் பணியாள்கள் என்னிடம் தயக்கத்துடன் அழைத்து வந்தார்கள்.
பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணப் பெட்டியின் அருகில் அழுக்குப் படிந்து கிடக்கும் ராம்குமார் என்னும் ஒரு தொப்பை பெருத்த முதலாளியை மனத்தில் கற்பனை செய்தபடி என்னுடைய அறைக்குள் பிரவேசித்த ஸீலியா என்ற கவர்ச்சியான அந்த இளம் ஆங்கிலோ இந்தியப் பெண், சுச்சிதமான உடையில் மிகச் சுத்தமான கம்பீரத்துடன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருந்த இளைஞனான என்னைப் பார்த்துச் சில விநாடிகள் திக்கு முக்காடிப் போனாள்! அதே திகைப்பு எனக்குள்ளும் ஏற்பட்டது. அவளோடு கலந்து வந்த நறுமணம் சட்டென என்னுடையஅறையின் சூழலைப் புதுப்பித்து விட்டது.
‘ஐ’ம் ஸீலியா ஜேஸ்மின் சார் – குட் ஈவினிங்!”
“குட் ஈவினிங்! ப்ளீஸ், உட்காருங்க.”
“ஸாரி சார்! ஐ வாஸ் இன் நர்ஸிங் ஹோம்…ஸோ- நா வந்து டெலிவரி எடுத்துக்க முடியாமப் போச்சு…”
“எங்க லெட்டருக்காவது உங்க வீட்ல இருந்து யாரா வது லெட்டர் போட்டிருக்கலாமே? யாருமே வரலை? பதிலும் இல்லை…நாங்க என்ன பண்றது, சொல்லுங்க…?”
“ஸாரி சார்…வீட்ல ஓல்ட் ஆண்ட்டியைத் தவிர வேற யாருமில்லை… நர்ஸிங் ஹோம்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த அப்புறம் தான் நா உங்க லெட்டரையே பார்த்தேன்…”
அவளுக்கு நான் என்ன பதில் சொல்லலாமென்று சில விநாடிகள் யோசித்துக் கொண்டிருந்த போது, ஸீலியாவே தணிந்து சொன்னாள்:
“பரவால்ல சார். நீங்க வேற ஒரு டேட் சொல்லுங்க. கரெக்ட்டா வந்து டெலிவரி எடுத்துக்கறேன்- பணம் இப்ப பே பண்ணிடறேன்…”
“பணம் இப்ப கட்ட வேணாம். டெலிவரி எடுக்கும் போது குடுங்க போதும்…” என்றேன்.
மிக விசித்திரமாக ஸீலியாவின் சிறிய கண்கள் என்னுடைய கண்களை விடா முயற்சியுடன் சந்தித்தன. என்ன செய்யலாம் என்ற பொய்யான பாவனையில் நானும் அவளுடைய கண்களையே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
எழுந்து கொண்ட ஸீலியா உலகையுடன் என்னைப் பார்த்து, “தேங்க்யூ வெரி மச்!” என்றாள்,
நானும் எழுந்து நின்றேன். “பரவாயில்லே…”
“வெரி ஹேப்பி டு ஹேல் மெட் யூ” என்றபடி என்னை நோக்கிக் கையை நீட்டினாள்.
இதை எதிர்பாராத நான் விருட்டென அவளுடன் கை குலுக்கினேன். ஸீலியாவின் வாசனைத் திரவியம் அதீதமாகக் கமழ்ந்த நெருக்கத்தில், அவளின் எதிர்பாராத கை குலுக்கலின் ஒரு ரகசியமான சாகசத்தில் என்னுடைய இளமை சற்றே மயக்கமுற்றுவிட்டது! அந்த ஆண்மையின் பலவீனத்தை அப் பெண்மையின் பலம் கண்டு கொண்டது போலும்!
அத்தியாயம் – 2
ஸீலியா என்னைச் சந்தித்துச் சென்ற இரண்டு தினங்களுக்குப் பின் ஆபீஸில் என்னுடைய அறையில் இருந்தேன். சிகரெட் புகையப் புகைய நாற்காலியில் அமர்ந்தபடி ஸீலியாவைச் சிறிது நேரத்துக்கு நினைவில் கொண்டு வந்தேன். முன்பு படித்த டி.எச். லாரென்ஸின் ‘விமென் இன் லவ்’ நாவலை ஒரு பொருத்தமான புத்துணர்வுடன் மீண்டும் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அப்போது டெலிபோன் ஒலித்தது.
ரிஸீவரை எடுத்து “ஹலோ!” என்றேன்.
“ஹலோ ராம்ஜி…!”
-சுகந்தா பேசினாள். அந்தக் கணத்தில் என் உணர்வுகளில் பரிவு நீர்ஊற்றுப் போலப் பீரிட்டது.
“என்னம்மா, காலங்காத்தாலேயே போன் பண்ற? எதுவும் விசேஷமா?”
“சும்மா தான் ரிங் பண்ணினேன். பிஸியா இருக்கேளா?”
“பிஸியாவது கிளியாவது. சும்மா கதை படிச்சிட் டிருக்கேன்.”
“எனக்கு ஓர்க் ஒண்ணும் இல்ல. ஓங்க நெனப்பு வந்தது. அதான் போன் பண்ணினேன்…!”
“சரி, இன்னிக்கு ஈவினிங் எங்கேயாவது போகலாமா?”
”இல்லை ராம்ஜி. இன்னிக்கு ஜானகியோட வீட்ல அவ குழந்தையோட பர்த்டே. என்னை அழைச்சிருக்கா. நீங்களும் வாங்க ராம்ஜி. ரெண்டு பேருமா போயிட்டு அப்படியே சாப்பிட்டுட்டு வந்துடலாம்…”
“ஐயையோ! நான் வரலையம்மா அந்த அறுவை வீட்டுக்கு…”
“ப்ளீஸ்! எனக்காக வாங்கோ. நீங்களும் வந்தா ஜாலியா இருக்கும்.”
“என்னமோ உன்னோட புள்ளைக்கு பர்த்டே மாதிரி தான் கூப்பிடறே!”
சுகந்தாவிடமிருந்து பதில் இல்லை. சிரமத்துடன் சிரிப்பை அவள் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை என்னால் கற்பனையில் காண முடிந்தது.
“ஏய்! என்ன பேச்சு மூச்சைக் காணோம்?”
“போன்ல இந்த மாதிரியெல்லாம் அறுத்தேள்னா அப்புறம் ஒரு நாளும் உங்களுக்குப் போன் பண்ணவே மாட்டேன் ராம்ஜி…”
“சரி, அப்ப இன்னிக்கு ஈவினிங் உன்னை மீட் பண்ண முடியாது…”
“சீரியஸாவே கூப்பிடறேன். நீங்களும் வாங்கோ.”
“இல்லை சுசுந்தா, நான் வரலை…!”
”ஏன், வேற எங்கேயும் போறேளா?”
“நோ நோ. அதெல்லாம் இல்லை. ஆனா, அவ வீட்டுக்கு நான் வரலை.”
“ஏன் வரலை?”
“வரலேன்னா வரலேதான்!”
“உங்களைத் திருத்தவே முடியாது. அப்போ வச்சிடட்டுமா?”
“நாளைக்கு ஈவினிங் பார்ப்போம்…”
“நோ!”
“ஏன், நாளைக்கும் ஜானகி புள்ளைக்கு பர்த்டேயா?”
“யெஸ்!”
“போய்த் தொலை.'”
வழக்கத்துக்குப் புறம்பாக அன்று மாலை வரை ஆபீஸிலிருந்து விட்டு செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதி வரை வாக்கிங் போய் வரலாமென்ற நினைப்புடன் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் காம்பவுண்டுச் சுவரில் உட்கார்ந்து உற்சாக மாகச் சில நீக்ரோ இளைஞர்கள் கிடார்களில் கார்டுகளை விரித்துக் கொண்டிருந்தார்கள். உயர்ந்த மரங்களில் இலைகளின் மறைவில் குயில்கள் ஒற்றை ஒற்றையாகக் கூவிக் கொண்டிருந்தன.
அகன்ற மைதானத்தை நோக்கித் திரும்பிய சிறிய பாதையில் நடந்தேன். இடது புறம் ஐந்தாவது வீட்டின் முன் தோட்டத்தில் ஸீலியா ஜேஸ்மின் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். சட்டென்று திரும்பி நடந்து விடலாமா என்று நினைத்தேன், ஆனால் ஸீலியா என்னைப் பார்த்து விட்டாள். ஒரு வசீகரமான வலைக்குள் பிரவேசிக்கிற நூதன உணர்வுடன் வேறு வழியின்றி நேராகவே நடந்தேன். என்னை வரவேற்பது போல, அவள் தோட்டத்தின் குட்டையான கதவுகளைத் திறந்து வெளியில் வந்து நின்று என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். பொதுவாக நான் பெண்களைப் பார்த்துப் புன்னகை செய்வதே இல்லை!
அதனால் வெறுமே “குட்-ஈலினிங்!” என்றேன். “குட் ஈவினிங் மிஸ்டர் ராம்குமார்! இதுதான் என்னோட வீடு. ப்ளீஸ் கம்” என்றாள்.
நான் தயங்கினேன். “பரவாயில்ல- இன்னொரு நாள் வரேன்!” என்றேன்.
“நோ நோ. யு மஸ்ட் கம் ப்ளீஸ்…!”
நான் மேலும் தயங்கினேன். பஞ்சும் நெருப்பும் நெருங்குவது போன்ற ஒரு விபரீத எண்ணம் எனக்குள் தோன்றியது.
“ப்ளீஸ் கம் இன் சார்!”
விபரீத எண்ணம் கலைந்தது. அந்த வலைக்குள் நுழைந்து தான் பார்ப்போமே என்ற இறுமாப்புடன், திறந்து கொண்ட மரக் கதவுகளினூடே ஸீலியாவுடன் நுழைந்து அவளின் வீட்டுக்குள் சென்றேன் – உடன் வந்த நறுமணத்தை சுவாசித்தபடியே…
ஹாலில் இரண்டு நீண்ட செவ்வக வடிவமான கண்ணாடித் தொட்டிகளில் பல வண்ண மீன்கள் சலன மற்று ஊர்ந்து கொண்டிருந்தன.
அவளின் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றாள். அழகிய சோபாவில் என்னை உட்கார வைத்தாள். உயரமான அவளின் படுக்கை விரிந்த கட்டிலின் சட்டங்களில் அவளின் சில உள்ளாடைகள் அவசியமற்றுக் கிடந்து என்னுடைய இளமை உணர்வுகளைப் பார்த்துக் கண் சிமிட்டின.
சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வயதான ஓர் அம்மாள் வந்து எட்டிப் பார்த்தாள். ஓவல் கலந்து கொண்டு வரும்படி ஸீலியா அந்த அம்மாளிடம் கூறினாள்.
”மதரா?” – ஏதாவது கேட்கவேண்டுமே என்பதற் காசுக் கேட்டு வைத்தேன்.’
“நோ நோ… எங்க ஆண்ட்டி.”
“உங்க ஃபாதர் மதர் எல்லாம் எங்கே இருக்காங்க?”
“டாடி இஸ் நோமோர். மம்மி இஸ் இன் லண்டன்…”
“அந்தப் போட்டோவில் இருக்கறது?”
“அது என்னாட யங்கர் சிஸ்டர். குன்னூரில் அங்கிள் கூட இருக்கு.”
ஓவல் வந்தது. ஓவலைத் துளித் துளியாக உறிஞ்சிக் கொண்டிருந்த போதும், கட்டிலில் கிடந்த ஸீலியாவின் உள்ளாடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“டு யூ லைக் ம்யூஸிக்?”-என்னை நெடு நேரத்துக்கு அங்கு இருக்கச் செய்கிற உத்தியை ஸீலியா கையாள்கிறாள் என்பதை உடனே என்னால உணர முடிந்தது.
காலிக் கோப்பையை அவளிடம் நீட்டிய படியே. “என்ன ம்யூஸிக்?” என்றேன்.
“ராக், பாப், ஜாஸ்”
நான் எழுந்து விட்டேன். ”ஓகே ஸீலியா…ஸீயூ!”
திடுதிப்பென்று இப்படி எழுந்து விடுவேன் என்பதை நினைத்துப் பார்த்திராத ஸீலியா கொஞ்சம் திகைத்துப் போனாள். இன்னும் சிறிது நேரம் இருந்து விட்டுப் வெளிப்படையாக அத்தனை போங்களேன் என்று என்னிடம் அவள் உரிமை கொண்டாடவா முடியும்…? கட்டிலின் சட்டத்தில் ஒரு கவர்ச்சிகரமான இளம் பெண்ணின் உள்ளாடைகளைப் பார்த்துக் கொண்டே, அருகிலேயே அவளிடமிருந்து மெலிதாக அலையடிக்கிற நறுமணத்தையும் சுவாசித்துக் கொண்டே ஒரு படுக்கையறையில் என்னால் பொய்யாக உரையாடிக் கொண்டிருக்கவா முடியும்? அவளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் வேகமாக அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன்.
இரவு தூக்கம் வராமல் படுக்கையில் வெகுநேரம் விழித்திருந்தேன். ஸீலியாவின் வீட்டுக்குள் நுழைந்தது மிகப் பெரிய பிழையாகத் தெரிந்தது. ஆனால் மறுகணமே அவளின் நறுமணத்தை இன்னும் கொஞ்சம் நெருங்கியே என்ற மோகமும் சுவாசித்துப் பார்த்திருக்கலாமோ
மனத்துள் மூண்டது! மோகம் முப்பது நிமிடம் தானோ என்னவோ – முப்பது நிமிடங்களுக்குப்பின் கடிகாரத்தின் ரேடிய முட்களை நான் உணரவில்லை.
மறுநாள் மாலை.
நானும் சுகந்தாவும் கடற்கரையில் உட்கார்ந்திருந்தோம். ஏறக்குறைய ஒரு வருடமாக இப்படிச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
”என்ன, நேத்திக்கு பர்த்டே பார்ட்டியெல்லாம் ரொம்ப தடபுடலா?” – சுகந்தாவைக் கேட்டேன்.
“அதெல்லாம் கிடையாது, ரொம்ப சிம்பிள்தான். ஆனா, நீங்கள் தான் வரமாட்டேன்னு சொல்லிட்டேளே… பட் ராம்ஜி, நீங்க வராதது கூட ஒரு விதத்துல நல்லதாத் தான் போச்சு…”
”ஏன், என்ன ஆச்சு?”
“திடீர்னு ஜானகியோட வீட்டுக்கு என்னோட தங்கையும் வந்திட்டா!”
“பாத்தியா… எனக்குத் தெரியும், உன்னோட தங்கை திடீர்னு அங்கே வந்து நிப்பாள்னு…!”
“ரொம்பத்தான் வழியறது… அதோ சாக்கோ பார் வரான்… வாங்கலாமா?”
”ஓயெஸ்! கூப்டு கூப்டு…”
“சாக்கோ பாருக்கு நாந்தான் பே பண்ணுவேன்.” சுகந்தா அவளுக்கே உரிய காதல் முறையில் சொன்னாள்.
“ரொம்பத் தங்கமா போச்சி! என்னோட எல்லா செலவுக்குமே நீயே பணம் தந்திடு: பேசாம என் பிசினெஸை யெல்லாம் க்ளோஸ் பண்ணிடறேன். வாழ்க்கையிலேயே எனக்குப் பிடிக்காத விஷயம் – இந்த ஆபீசுக்குப் போறதுதான் பெரிய்ய பேஜார்…”
சாக்கோபாருக்கு சுசுந்தா காசு கொடுத்தாள்.
“சாக்கோபார் எப்படியிருக்கு ராம்ஜி?”
“கேக்கணுமா, டாப்!”
“சரி, நேத்திக்கு ஈலினிங் நீங்க என்ன செஞ்சேள்?”
“இரு: இந்த சிகரெட்டைப் பத்த வச்சிட்டுச் சொல்றேன்.”
காற்றில் மூன்று குச்சிகள் வீணாகி விட்டன.
”குடுங்கோ நான் பத்த வைக்கிறேன்… இப்படித் திரும்பி உக்காருங்கோ…”
”போன ஜென்மத்தில் நீ பெரிய செயின் ஸ்மோக்கரா இருந்திருப்பேன்னு நெனைக்கிறேன்! எவ்வளவு ஜோரா பத்த வைக்கிறே…”
“சரி,அதெல்லாம் இருக்கட்டும். நேத்திக்கு என்ன பண்ணினேள் – அதைச் சொல்லுங்கோ.”
“நேத்திக்கா? ரைட். நேத்திக்கு செயின்ட் தாமஸ் மவுண்ட் பக்கம் போயிருந்தேன்.”
“எதுக்கு?”
“சும்மாதான். ஆபீஸ்ல இருந்து அப்படியே கிளம்பி ஒரு வாக் போனேன்…”
“வாக் போய்…?”
“வாக் போயிட்டே இருந்தேனா – அப்ப ஒரு வீட்டு வாசல்ல ஓர் ஆங்கிலோ இண்டியன் லேடி நின்னுட்டிருந்தா. ஒரு மாதிரி என்னைப் பாத்தா…”
“ஐயையோ! தெரிஞ்சவளா உங்களுக்கு?”
“நோ நோ…அவளை எனக்குத் தெரியவே தெரியாது! என்னை அவ ஒரு மாதிரி பார்த்தது மட்டுமில்லாமே ஒரு மாதிரி சிரிக்க வேற செஞ்சா!” – சுகந்தா சீரியஸாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“போனாப் போறதுன்னு ஒரு மரியாதைக்காக நானும் அவளைப் பாத்துச் சிரிச்சேன்! அவ்வளவுதான்: வீட்டுக்குள்ள வாங்களேன்னு கூப்ட்டுட்டா! தப்பிச்சா போதும்னு அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமே ஓடி வந்துட்டேன்…”
சுகந்தா மௌனமாக மணலைக் கிறுக்கிக் கொண்டிருந்தாள். நான் உல்லாசமாக சிகரெட்டைப் புகைத்தபடி மணலில் சாய்ந்திருந்தேன். சில கணங்கள் சுகந்தா தயக்கத்துடன் என்னையும் கடலையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளின் பார்வையில் சிறிது வருத்தம் வந்திருந்தது.
“நீங்க பொய் பேசறேள் ராம்ஜி!” என்றாள் மெல்லிய குரலில்,
‘சுள்’ ளென்று விரல்களின் இடுக்கில் கரைந்திருந்த சிகரெட் சுட்டது. மிகவும் செயற்கையாக அவளைப் பார்த்தபடி கேட்டேன், “பொய்யா, நானா பொய் சொல்றேன்னு சொல்றே?”
“அவளை நீங்க திரும்பிப் பாக்காமே ஓடி வரலை”- சொல்லிவிட்டு சுகந்தா தலையைக் குனிந்து கொண்டாள். அவளின் அழகிய உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. அவளுடைய அறிவுக்கூர்மையின் எதிரில் நான் வெட்கத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டேன். வானிலை நிசப்தமாக இருந்தது.
”ஒப்புக்கறேளா, இல்லையா?”
அவளுடைய பார்வையும் என்னுடைய பார்வையும் சந்தித்து ஸ்தம்பித்தன. சுகந்தாவின் பார்வையில் பரிவு இருந்தது காட்சண்யம் இல்லை.
“பொய் தானே நீங்க சொன்னது?” – மறுபடியும் கேட்டாள்.
மௌனமாக தலையை அசைத்து ஒப்புக் கொண்டேன்.
“இன்னுமா என்கிட்டே பொய் பேசறேள்?” – சுகந்தாவின் குரல் சிறிது உடைந்தது. கண்கள் லேசாகச் சிவந்தன. வருத்தத்துடன் அவளின் கையைப் பற்றிக் கொண்டேன்
“ஸாரி சுகந்தா! உன்னை ஏமாத்தனுங்கற இண்டென்ஷன்ல நான் பொய் சொல்லலை…”
சுகந்தா விருட்டென்று குறுக்கிட்டுச் சொன்னாள் : “என்னை நீங்க ஏமாத்தறதா நானும் சொல்லலை. ஏன் பொய் பேசறேள்னுதான் கேட்டேன்…”
“உண்மையைச் சொல்லறதுக்குத்தான் ஆனா, அதுக்குள்ளே ஏன்னு எனக்கே தெரியாம பொய் சொல்லிட்டேன்…!
சுசுந்தா கைக்குட்டையை எடுத்துக் கண்களில் சுரந்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். அவளுடைய மனத்தின் மென்மை என்னை நெகிழச் செய்தது, புதிதாக ஒரு சிசுரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி நானே பற்ற வைத்துக் கொண்டேன். சிறிது நேரம் இருவருமே மௌனமாக இருந்தோம்.
“சரி, இப்ப உண்மையைச் சொல்லிடட்டுமா நேத்திக்கி ஆச்சுவலா என்ன நடந்ததுன்னு?”
அவனைச் சமாதானப்படுத்துவது போலக் கேட்டேன். பதில் சொல்லாமல் வெகு தொலைவில் பார்த்துக் சொண்டிருந்தாள்.
“ஸாரி சுகந்தா! அந்த ஆங்லோ இண்டியன் பொம்பளையோட வீட்டுக்குள் நான் போகத்தான் செஞ்சேன். ஆனா…”
விருட்டென்று சுகந்தா அவளுடைய விரல்களால் என் வாயை மூடினாள்.
நான் அவளுடைய விரல்களை விலக்கி விட்டுச் சொல்ல முயன்றேன். “இரு இரு, நடந்ததை சுருக்கமா அப்படியே சொல்லிடறேன்…”
சுகந்தா மறுபடியும் அவளுடைய விரல்களால் என் வாயை இறுக்க மூடி விட்டாள்: “உங்களைப் பத்தின உண்மை ஒவ்வொன்னையும் என்கிட்டே நீங்க சொல்லிடணும்னு நான் சொல்லலை. என்கிட்ட நீங்க பொய் பேசாம இருந்தா போறும்…!”
சில நிமிட மௌனங்களில் சூழல் இளகித் தணிந்து விட்டது. காற்றில் சுகந்தாவின் நெற்றிக்குமேல் இறுக்கம் தளர்ந்திருந்த கூந்தல் மெலிதாகப் படபடத்துக் கொண்டிருந்தது.
“சுகந்தா…!”
“உம்…!
‘”ஒனக்கு அழுகை வரும்போதுதான் நீ ரொம்ப அழகா இருக்கே…!”
“இருப்பேன் இருப்பேன்…! ஏன் சொல்லமாட்டேள். மனுஷியை இம்சை பண்றது இல்லாமே – இது வேறயா?”
சிகரெட்டை மணலில் நெரித்துப் புதைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“வந்ததுமே உன்கிட்ட சொல்லணும்னு நெனைச்சேன் சுகந்தா. மறந்துட்டேன். நேத்திக்கு நைட் நான் ஒரு கனவு கண்டேன் – ரொம்ப அருமையான கனவு… சொல்லட்டுமா?”
“அந்தக் கனவுல நான் வரேனா?”
“நீ இல்லாம கனவு வருமா எனக்கு?”
“அப்போ சொல்லுங்கோ…”
“அந்தக் கனவுப்படி-ஒன்னை நான் இதுவரைக்கும் பார்த்ததேயில்லை நீ யார்னே எனக்குத் தெரியாது. ஒன் பேர் கூடத் தெரியாது. இப்படி இருக்கும்போது நம்ம கடவுள் ஒருத்தர் வந்து என் முன்னாடி லட்சம் பொண்ணுங்களை நிக்கவைக்கிறார். அந்த லட்சம் பொண்ணுங்கள்ள நீயும் ஒருத்தியா நிக்கறே…”
“லட்சத்துல ஒருத்தியா?””
“ஆமா… அப்ப கடவுள் என்கிட்ட ‘இந்த லட்சம் பொண்ணுங்கள்ள ஒருத்தி கிட்டேயும் ஒரு வார்த்தை கூடப் பேசாம ரொம்ப உத்தமமான பொண்ணை ஒன்னோட மனைவியா ஒன்னால செலக்ட் பண்ண முடியுமாடா?”ன்னு கேக்கறார். உடனே எனக்கு ரொம்ப ரொம்ப ஜாலியாயிடுது! இது எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலையாச்சே! ‘ஓயெஸ், முடியும்னு’ சொல்றேன். எனக்கு லட்சம் பொண்ணுங்க வரிசையா எதிர்த்தாப்ல நிக்குதுங்க! அதில் நீ நாலாவதோ அஞ்சாவதோ நிக்கறே.. அந்த ஒன்னைப் பார்க்கறேன் நான். அவ்வளவுதான். நிமிஷமே கடவுள்கிட்டே சொல்றேன் – இந்த அம்மா தான்ப்பா நம்ம செலக்ஷன்னு..! அதுக்கு அந்த கடவுள் “என்னடா நீ ஃபூலா இருக்கே. முதல்ல லட்சம் பொண்ணையும் பார். இவளையும் விட அபாரமான பொண்ணு இருந்தாலும் இருப்பா-அப்புறமா செலக்ட் பண்ணு’ன்னு திட்றார்! அதுக்கு நான்சொல்றேன் – ‘நோ மேன்; இன்னும் நீ பத்துக் கோடி பொண்ணுங்களை அழைச்சிட்டு வந்து நிறுத்தினாலும் – ஐ டோண்ட் கேர்! இவதான் என்னோட ஃபைனல் செலக்ஷன்’னு அடிச்சி சொல்லிடறேன்! எப்படிக் கனவு!”
காதலாலும் ஆனந்தத்தாலும் என் சுகந்தாலின் கண்கள் என்னைப் பார்த்தவாறு ரம்மியத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தன. செவி ஓரங்களில் அவளின் கூந்தலை சரி பண்ணியபடியே மெல்லிய குரலில் சொன்னேன்:
‘”சுகந்தா, உன் கிட்ட தான் லட்சம் பொய் சொன்னாலும் – இந்த ஒரே ஒரு கனவுக்காக என்னை நீ மன்னிச்சிடலாம் – இல்லையா?”
“நிச்சயமா!”
காதலுடன் என் கையைத் தன்னுடைய கன்னத்தில் அழுத்திக் கொண்ட சுகந்தாவுக்குத் தெரியாது – அப்படி யொரு கனவை நான் கண்டதாகச் சொன்னதே பெரும் பொய்தானென்று !
அத்தியாயம் – 3
மறுநாள் அதிகாலையில் ஒற்றையாக நான் கடலின் எதிரில் நின்றேன். நீர்ப் பிரவாகம் அனைத்திலும் சமுத்திரம் ஆச்சரியம் மிகுந் தது. பிரமிக்கச்கூடியது. விரிந்த மனாலில் கடல் அலை வீச்சின் பரவல் ஓர் ஆனந்தச் சித்திரம். கடற்பரப்பில் மனிதனுக்கு ஏதோ வொரு செய்தி தளும்பிக் கொண்டிருப்பதாக நான் மயங்கியதுண்டு. இதுவரை கடலையே பார்த்திராத பல கிராமத்துச் சுற்றுலாப் பயணிகள், சுடும் வெயிலில் மெரீனா கடற் கரை நோக்கி ஓடி வருகிற பரவசங்களைக் கண்டு பல சமயங்களில் நான் மனம் சுளித்தது உண்டு. உயிர் பிரியும் தருணத்தில் என் உடல் கடலுக்குள் வீசி எறியப்பட்டு அந்த உப்புச் சுலையை ருசித்துக் கொண்டே நான் மாண்டு போக வேண்டுமென்ற உருக்கத்துக்கு ஆளாகிப் போயிருக் கிற அளவுக்கு கடல் என்னுள் குடியேறி இருப்பதால் தானோ என்னவோ, சுகந்தாவோடு எனக்குக் கிடைத் திருந்த காதலுறவின் சுக போகச் சம்பவங்கள் எல்லாமே கடற்கரையில் தான் நடந்து முடிந்தன. இன்னுமா என் கிட்டே பொய் பேசறேள்?” என்று அவள் மனம் வெதுப்பிக் கேட்டாளே-அதற்குக் காரணமான ஒரு பெரிய பொய்யை இதே கடற்கரையில் தான் அவள் முன்னிலையில் சில மாதங்களுக்கு முன்னால் போட்டு உடைத்திருந்தேன்! அந்த அதிகாலையில் அச்சம்பவம் என் நினைவில் தெரிந்தது…
சுசுந்தாவின் நட்பு எனக்கு எதிர்பாராமல் கிடைக்க நேரிட்ட பரவசச் சிலிர்ப்பில், என்னை அவள் மிஸ்டர் ராம்குமார் என்று அழைத்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில், அவள் பி. ஏ. பட்டதாரி என்று தெரிந்தபோது என்னுடைய கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நடுக்கத்தில் வெறும் பி.ஏ.பட்டதாரி கூட இல்லாத நான் அவளிடம் எம்.ஏ., பட்டதாரி என்று பெரிய பொய்யாகச் சொல்லிவிட்டேன்! நட்பு அற்புதக் காதலாகி, மிஸ்டர் ராம்குமார் சுகந்தாவின் ராம்ஜியாகி. எனக்கு அவள் சிகரெட் பற்ற வைக்கும் ஆப்த சிநேகிதி யாக நெருங்கிவிட்ட பிறகும் என்னால் அந்தப் பொய்யைச் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை. வெளி யில் ஒரு நாள் கொட்டிவிடத் தருணம் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கடற்கரையில் வானிலை அதற்கு ஏற்றாற் போலிருந்தது! கோடை காலத்து சாயங்கால வெயில் சுகந்தாவின் முகத்தில் இதமாகப் படிந்திருந்ததைப் பார்த்தபடியே ஆரம்பித்தேன்.
“சுசுந்தா!”
“உம்…!”
தயக்கமாகவே இருந்தது. மறுபடியும். “சுசுந்தா…” என்றேன்.
“சுகந்தாவுக்கு என்னவாம்?”
“சுகந்தா…”
“ஏன் இப்படி அறுக்கறேள் – சுகந்தா சுகந்தான்னு…”
“ஒரு விஷயம் கொஞ்ச நாளா உன்கிட்ட சொல்லணும் சொல்லணும்னு தோணுது. ஆனா, அதை உன்கிட்ட சொல்றதுக்குப் பயமா இருக்கு.”
“அவ்வளவு பெரிய விஷயமா?”
“பெரிய விஷயமா நீ எடுத்துப்பியோன்னுதான் பயமா இருக்கு!”
“நீங்க இப்படிச் சொல்றதைப் பார்க்கறச்சேதான் எனக்குப் பயமாருக்கு!”
சிறிது நேரம் வெகுதூரத்துக் கப்பலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“சொன்னா என்னைத் தப்பா நெனைச்சுக்க, மாட்டியே?”
“கண்டிப்பா மாட்டேன்… சொல்லுங்கோ…”
ஒரு கணம் சுகந்தாவின் அந்த நேசம் என்னை உணர்ச்சிவசப்படுத்தியது.
அவளைக் கேட்டேன்:
”சுகந்தா நீ எதுவரைக்கும் படிச்சிருக்கே?”
“பி.ஏ., தான். அதுக்கென்ன இப்போ?”
“சரி. நான் எதுவரைக்கும் படிச்சிருக்கேன்?”
“நீங்க எம் ஏ!”
ஒரு பெரிய அலையை மோதிச் சிதறச் செய்கிற தொனியில் சொன்னேன்:
“நோ சுகந்தா, நான் எம். ஏ. பட்டதாரி இல்லை!”
குப்பென்று என் உடல் வியர்த்துவிட்டது. அனைத்தும் ஒடுங்கி விட்டாற் போலிருந்தது. காட்சிகள் ஊமைச் சித்திரமாகத் தெரிந்தன. சுகந்தா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் பார்வை அலைந்தது. சொல்லாமலேயே இருந்திருக்கலாம் போலிருந்தது! சுகந்தாவின் முகம் சிவந்து கண்களில் சினம் வந்திருந்தது.
“அப்போ இதுவரைக்கும் எம்.ஏ. க்ராஜுவேட்னு சொல்லி என்னை ஏமாத்தியிருக்கேள்?”
நான் வருத்தத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சுகந்தா சில விநாடிகள் கண்களை வேதனையுடன் மூடியிருந்தாள். ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டாற் போன்ற ஓர் இறுக்கம் அவளில் தளர்வது தெரிந்தது.
”ஓகே! மே ஐ ஸே குட்-பை?” என்றாள்.
சட்டென அவளுடைய கண்களை என் கண்கள் கலவரத்துடன் சந்தித்தன. என் கண்களிலிருந்து நீர் உதிர்ந்து விடாமல் இருக்க நான் மிகப் பிரயாசையுடன் பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தேன். எனக்கும் சுகந்தாவுக்கும் இடையே பரிச்சயமே இல்லாதது போல நெடு நேரத்துக்கு இருவருமே பேசாமல் இருந்தோம். சுகந்தா கண்களை மூடியபடி நெற்றியைத்தேய்த்துக் கொண்டே இருந்தாள்.
”சொல்லுங்கோ. உங்களுக்கு ஒரு குட்-பை சொல்லிட்டு இந்த நிமிஷமே எழுந்து போயிடட்டுமா?”
அந்த நிமிஷமே எனக்குத் தெரிந்து விட்டது – சுகந்தா எனக்கு குட்-பை சொல்லி விட்டு உடனே எழுந்து போகப் போவதில்லையென்று! அவளின் கோபம் துளித் துளியாக வடிந்து விடுமென்ற தந்திரமான எதிர்பார்ப்போடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
”என்னத்துக்கு இத்தனை பெரிய பொய் சொன்னேள்…?”-குரல் கம்மக் கேட்டாள்.
“தப்புத்தான்.”
“ரொம்ப ஈஸியா சொல்லிட்டேள் தப்புத்தான்னு! உள்ளுக்குள்ள நான் என்ன பாடுபடறேன்னு தெரியுமா?”
மௌனமாக இருந்தேன்.
“இன்னும் என்னென்ன பொய்யெல்லாம் சொல்லி யிருக்கேளோ?”
அவமானத்துடன் பேசாமலேயே இருந்தேன்.
“பொய் பேசினா மட்டும் எனக்குப் பிடிக்கவே பிடிக் காது – அது யாராயிருந்தாலும் சரி”
நான் பதில் சொல்லாமல் மெதுவாக சிகரெட் பெட்டியைத் திறந்தேன். சட்டென சிகரெட்டைப் பறித்துக் கொண்டாள். “முதல்ல எனக்குப் பதில் சொல்லுங்கோ அப்புறமா ஸ்மோக் பண்ணலாம்!!”
என்னுடைய உணர்வுகள் சிறிது படபடத்தன. இனி பதில் சொல்லியே ஆக வேண்டுமென்ற அகந்தை எனக்குள்ளும் ஏற்பட்டு விட்டது
“வெயிட்! ஒன்னை ஏமாத்தறதுதான் என்னோட மோட்டிவ்வா இருந்தா இப்ப உண்மையைச் சொல்லி யிருக்க மாட்டேனே…?”
“அப்போ அந்தப் பொய்யைச் சொல்லாமலேயே இருந்திருக்கணும்! ஏன் சொன்னேள்?”
எனக்குள் சுகந்தாவின் மேல் இருக்கும் காதல் சிலிர்த்துக் கொண்டது.
“நீ ஒரு க்ராஜுவேட்டா இருக்கறப்ப நான் ஒரு சாதாரண க்ராஜுவேட்கூட இல்லேங்கிறதை சொல்லிக்க வெக்கமா இருந்துச்சி, நீ என்னை லவ் பண்ணமாட்டி யோன்னு பயமா இருந்தது. ஸாரி, அதனாலதான் அப்படி பொய் சொல்லிட்டேன்!”
சுகந்தா பட்டென்று சொன்னாள்: “இப்போகூட உங்களை நான் லவ் பண்றதா யார் சொன்னது? நான் ஒண்ணும் உங்களை லவ் பண்ணலையே!”
-எங்கள் இருவரிடையே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் நான் திகைப்புடன் அவளைப் பார்த்தேன். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னாள் :
“இப்போ நான் பொய் சொன்னது மட்டும் உங்களுக்கு எப்படி இருக்கு… அப்படித் தானே இருக்கும் எனக்கும்…?”
சுகந்தாலின் குரல் நெகிழ்ந்து உடைந்தது. அவளின் நெஞ்சு விம்மியது. மேலான காதலும் கண்ணியமும் அவளுடைய கண்களில் நீராகத் ததும்பித் தெரிந்தன.
ஒருவிதக் குற்ற உணர்வோடும் ஒரு புதிய இன்பத் தோடும் சுகந்தாவைப் பார்த்து நன்றியுடன் சிரித்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டேன்.
“சிரிங்கோ வெக்கமில்லாமே “பொருமினாள்.
“ஸாரி சுசுந்தா! வெக்கத்தோடத்தான் சிரிக்கிறேன்!”
“சொல்லுங்கோ… நீங்க எம்.ஏ. படிச்சிருந்தாத்தான் உங்ககிட்டே பழகுவேன்னு சொன்னேனா?”
“இல்லை!”
“அப்புறம்? நீங்க எம். ஏ. படிச்சவர்னா நித்திக்கும் ஆபீஸ் முடிஞ்சதும் கொஞ்ச நாழியாவது உங்களோட பேசிண்டு இருந்துட்டுப் போகலாம்னு பித்துப் பிடிச்சவ மாதிரி இப்படி ஓடி ஓடி வந்தீண்டிருக்கேன்…?”
அதற்கு மேல் பேசமுடியாமல் சுகந்தாவின் கண்களி லிருந்து நீர் சரசரவென்று வடிந்தது. அதீத கனமடைந்து விட்ட அந்தச் சூழ்நிலை என்னால் தாங்க முடியவில்லை. மார்போடு மார்பாக சுசுந்தாவை இறுக அள்ளி அணைத்துக் கொள்ள என் உணர்வுகள் பரபரத்தன. இயலாமையில் பேசாமல் குறுகிப் போயிருந்தேன்.
சுகந்தா கொஞ்சம் கொஞ்சமாக அமைதி அடைந்தாள். முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டாள். சிறிது நேரம் அவளுடைய கையில் வைத்துக் கொண்டிருந்த என்னுடைய சிகரெட் பாக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “சிகரெட் வேணுமா?” என்றாள்.
“குடு. அப்படியே நீ ஒண்ணு வேணும்னாலும் எடுத்துப் பத்த வச்சிக்க!”
“போறும்! இதிலெல்லாம் ஒண்ணும் குறைச்சல் கிடையாது… இன்னும் எனக்கு மனசு சமாதானமாகலை- தெரிஞ்சிக்கோங்க…”
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையை ஆழமாக உறுஞ்சி ஊதியதும் நெஞ்சின் கனமெல்லாம் பறந்து விட்டது.
“சுகந்தா…இவ்வளவு கேடித்தனமான பொய்யை உன்கிட்ட சொன்னதுக்கு எனக்கு நீ என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கறேன் – ஒரு மாசம் உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு சொல்லு – பார்க்காமலேயே இருக்கேன், சரியா?”
“தண்டனை உங்களுக்கு மட்டும்தான் தராப்பல இருக்கணும். இப்போ நீங்க சொல்றது எனக்கும் சேர்த்துன்னா மாதிரி இருக்கு…?”
பளிச்சென நான் சுகந்தாவின் கண்களை உணர்வு வயப்பட்டுப் பார்த்தேன். உலகத்தின் அத்தனை கோடி பெண்களின் காதல் தன்மையும் அவளின் கண்களில் சொட்டிக் கொண்டிருந்தது. உலகத்தின் அத்தனை கோடி பெண்களின் சாகஸக் குணமும் அவளின் கண்களில் கசிந்து கொண்டிருந்தது| சிகரெட்டைத் தூக்கி எறிந்து விட்டுச் சொன்னேன் :
“சுகந்தா இப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? உன் ஒருத்தி கூட உக்காந்து பேசிட்டு இருக்றது உலகத்ல இருக்ற அத்தனை பொம்பளைங்க கூடேயும் உக்காந்து பேசிட்டு இருக்ற மாதிரி இருக்கு!”
“இருக்கும் இருக்கும் | இத்தோட விட்டேன்னு நெனைச்சுட வேணாம்! வட்டியும் முதலுமா ஒரு நாள் சேர்த்து வாங்கிடுவேன்!” என்றாள்.
-அதே போல் மிகப் பல மாதங்கள் கழித்து சுசுந்தா வட்டியும் முதலுமாக அவளுடைய ராம்ஜியிடம் வாங்குவதாக எண்ணி அவளின் மொத்த முதலைத்தான் இழந்து நின்றாள்.
“சரி, இப்போ உண்மையைச் சொல்லுங்கோ – நீங்க எதுவரைக்கும் தான் படிச்சேள்?”
“பி.எ., ஒரு வருஷம் போனேன். அந்தோட சரி. தூக்கி எறிஞ்சிட்டேன்.”
“ஏன் திடீர்னு நட் கழண்டுடுத்தா?”
“எனக்கு ஏம்மா சுழல்றது? எங்க காலேஜ் வாத்தியா ருக்குத்தான் மேல் மாடி காலியா இருந்தது. ஒரு நாள் க்ளாஸ்ல அவன் என்னவோ லெக்சர் குடுத்துட்டு இருந் தான்- ஹேம்லெட் பத்தி. அப்ப நான் சீரியஸா நம்ம டி.எச். லாரென்ஸ் இல்ல-அவனோட ‘சன்ஸ் அண் லவர்ஸ்ட் புக்கைப் படிச்சிட்டிருந்தேன். அவன் சொல்றதைக் கேக்காம நான் என்னவோ படிச்சிட்டிருந் த்தைப் பார்த்துட்டு வேகமா வந்து “என்னடா படிக்கி Jற ?’ன்னு கோலமா கேட்டான். இதைத் தான் படிக்கிறேன்னு சொல்லி புக்கை எடுத்துக் காட்டினேன் ! ‘ச்சீ போர்னோக்ராப்பியா படிச்சிட்டு இருக்கே க்ளாஸ் ரூமிலே? எந்திருச்சி வெளியில் போய் படிரா’ன்னு துரத்தி விட்டுட்டான். அன்னிக்கு வெளியில வந்தவன்தான் நான். திரும்பி காலேஜ்குள்ளாறேயே போகலை! பாவிப்பய! அவனும் பெரிசா இங்கிலீஷ் லிட்ரேச்சர்தான் படிச்சிருக்கான். ஆனா லாரென்ஸ் பத்தித் தெரிஞ்சுக்கலை. அவன் படிச்சி என்ன செய்ய? அதான் கோவம் எனக்கு… ராஸ்சுல் பொய் பேசறாள்!”
சுகந்தா இகழ்ச்சியுடன் சொன்னாள்: “ஆமாமா. நீங்க எல்லாம் உண்மையாகத் தான் பேசறேள்!”
“நான் ஒரு அருமையான பொம்பளையோட காதலை அடையறதுக்குப் பொய் சொன்னேன்!”
“அப்போ காதலுக்காகப் பொய் சொல்லலாம்னு சொல்றேள்?”
“அது. எனக்குத் தெரியாது! நான் பொய் சொன்னேன்! ஆனா, இனிமே சொல்ல மாட்டேன்.”
“இன்னமே சொன்னா தெரியும் சேதி.”
“அப்ப இன்னிக்கு என்னை மன்னிச்சிட்டே?”
“இந்த ஒரு தடவை.”
“அப்பா, நப்பிச்சேன்…!”
செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் அந்த ஸீலியா ஜேஸ்மின் என்ற ஆங்கிலோ இண்டியப் பெண்ணின் அழகான மீன் தொட்டி போன்ற வீட்டுக்குள் சில நிமிடங் கள் அமர்ந்திருந்து விட்டு சட்டென எழுந்து வெளியேறி வந்து விட்டேனே – அந்தச் சின்னஞ்சிறிய சம்பவம் ஏனோ எனக்குள் ஓர் இசைத்தட்டு போல் சுழன்று கொண்டேயிருந்தது. என்னுடைய ஏதோ ஓர் உணர்வுக்கு ஸீலியாவின் வாசனை மிக்க அருகாமை உவப்பாக இருந்தது. வேறொரு உணர்வுக்குக் கசப்பாக இருந்தது. உலப்பைச் சுலைத்து விட்டுக் கசப்பைத் துப்பி விடு என்று அறிவு எனக்கு யோசனை சொன்னது! தற்காலிகமாக அந்த யோசனையை நான் நிராகரித்தேன்! ஆனால், விதி அதை நிராகரிக்கவில்லை!
இரண்டு தினங்கள் கழித்து விதி, ஸீலியா ஜேஸ்மின் என்ற பெண்ணின் உருவில் எனக்கு டயல் பண்ணியது…
“ஹலோ…!*
”ஹலோ, இஸிட் மிஸ்டர் ராம்குமார்?”
“யெஸ்…!””
“குட்மார்னிங் பாஸ்! ஸீலியா ஜேஸ்மின் ஸ்பீக்கிங்…”
எனக்கு மேஜைமேல் ஏறி அமர்ந்து கொள்ளலாம் போலிருந்தது ! ஒரே ஒரு நாள் ஐந்து நிமிடம் வீட்டுக்குள் போய்விட்டு வந்திருக்கிறேன்- அதற்குள் பாஸ் என் கிறாள்! சிவப்பு விளக்கை சிக்னலில் கண்டு நின்று விடும் வாகனம் போல- சில விநாடிகளுக்கு ஐ வாஸ் ஆஃப்! பின், தெரியாதது போல் கேட்டேன் : “விச் ஸீலியா ஜேஸ்மின்?”
“ஓ காட்! மறந்துட்டீங்களா? உங்களிடம் ஸ்டீல் பீரோ ஆர்டர் கொடுத்த ஸீலியா ஜேஸ்மின்…”
“ஓ… நிஜம்மா மறந்துட்டேன்… ஸாரி”
”அன்றைக்கு எங்கள் வீட்டிலிருந்து வேகமா எழுந்து போயிட்டீங்களே- ஏதாவது நான் தப்பா நடந்திட்டேனா?”
“நோ நோ….அதெல்லாம் கிடையாதுங்க… எனக்கு அவசரமா வெளியே போக வேண்டியிருந்தது. அதனால் தான் ஒடனே கிளம்பிட்டேன்,”
“நான் ரொம்ப பயந்துட்டேன் – உங்க மனசு எதுவும் ஹர்ட்டாயிடுச்சோன்னு…”
”சே சே ! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே…”
“இதைத் தெரிஞ்சிக்கிறதுக்காகத்தான் உங்களுக்கு ரிங் பண்ணினேன். தாங்க்யூ…”
“ரொம்ப தாங்ஸ்!”
ரிஸீவரை வைத்து விட்டேன். ஸீலியா என்னை அணுக விரும்புகிறாள் என்பது தெரிந்தது. ஒருவிதச் செருக்குடன் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன் உவப்புச் சுவைக்காகச் சற்று அவளை நெருங்கிப் பார்க்க லாமா என்ற யோசனை வந்தது! அந்த யோசனையைக் கலைப்பது போல மீண்டும் டெலிபோன் ஒலித்தது.
“ஹலோ…!”
”சே! ஏன் ராம்ஜி, இத்தனை நேரம் யாரோட வள வளன்னு பேசிண்டிருந்தேள்?”
“நீதானா! ஒரு கஸ்டமர் கூடப் பேசிட்டிருந்தேன் தொணதொணன்னு பேசி அந்த ஆள் கழுத்தை அறுத்துட்டான். சரி, நீ காலங்கார்த்தால போன் பண்ற வேகத்தைப் பார்த்தா ஏதோ விஷயம் இருக்கு… சரிதானா நான் சொல்றது?”
“ரொம்ப ரொம்ப சரி. இன்னிக்கி நைட் நான் பங்களூர் போறேன்.”
“பங்களூரா? போச்சுடா. யாரோட போறே…?”
“எங்க பெரியப்பா வந்திருந்தார் இல்லையா, இன்னிக்கி நைட் கிளம்பறார். என்னையும் வாயேன்னார். ஒரே ஒரு வாரம் போயிட்டு வந்துடறேன்…”
“திடீர்னு என்னை இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போறே!”
“நீங்க மட்டும் என்னை விட்டுட்டு விட்டுட்டு உங்க ஊருக்கு எத்தனை தடவை போறேன்…”
“சரி.. ஜோரா போயிட்டுவா! ஆனா ஒரு கண்டிஷன்!”
“சொல்லுங்கோ…”
”ஒரே ஒரு வாரம்தான். அதுக்கு மேலே இருந்தே – தாங்காது!”
“எனக்கும் அதேதான்! அப்போ இன்னிக்கி நைட் கிளம்பறேன்…”
“ரெண்டு நாள் கழிச்சி எனக்கு லெட்டர் போடு”
“ஓயெஸ்,”
“பங்களூர்ல இப்ப கொஞ்சம் குளிர் ஜாஸ்தியா இருக்கும். ஸ்கார்ப் இல்லாம வெளியில போவாத…”
”ஓயெஸ்..”
சிறிது நேரம் பிடரியில் கைகளைக் கோத்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன். ஸீலியாவைச் சற்று நெருங்கிப் பார்க்கலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சுகந்தா ஒரு வாரம் பங்களூர் போய்விடப் போகிறாள் என்ற செய்தி ஒரு சுதந்தர உணர்வை அவிழ்த்து விட்டாற் போலிருந்தது. வெகு நேரம் மூக்கைத் தடவிக் கொண்டே இருந்தேன். ஆனால் மனம் முற்றிலும் கட்டவிழ்ந்து விடவில்லை! என் உணர்வுகளில் எங்கேயோ ஏதோ ஒன்று திறந்து கொள்ள மறுத்தது!
– தொடரும்…
– ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது.
– அது ஒரு நிலாக்காலம் (நாவல்), முதற் பதிப்பு: 2010. கலைஞன் பதிப்பகம், சென்னை.