அதுதான் கிராமம்




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நெல், நெல், நெல், எங்கு பார்த்தாலும் நெல்.

வாசற்படி ஏறியதும், பெரிய திண்ணையில் நெல், உடனே ரேழியில் நெல், அடுத்த தாழ்வாரம், பட்டவாசல். ஒரே சமயத்தில் ஐம்பதுபேர் சாப்பிடலாம் — பூரா நெல். கூடத்தில் வாசல் வைத்த சமையலறையை குறுக்கே தாண்டினதும் வென்னீர் கொட்டகையில் – அடுப்புச் சுவரோரம்வரை நெல். கணுக்கால் ஆழத்துக்கு ஒரே நெற்கடல். மிதிக்காமல் வழியில்லை. வருவோரும் போவோரும் மிதியலி லேயே கணிசமாக நெல், பதரும் மணியுமாகப் பிரிந்திருக்கும்.
வென்னீர்க் கொட்டகைக்கு ஒட்டினாற் போன்ற கிணற்றடியும் அது தாண்டி மாட்டுக் கொட்டகையும் சதா சலுப்பும் மாடுகளும் இல்லாமலிருந்தால் நெல் கடல் அங்கும் வியாபித்திருக்கும்.
“என்ன பண்ணுவது மாமா? முன் தூறலைப்பார்த்தே அறுவடை செஞ்சுட்டேன். அப்படியும் மழையிலே கொஞ்சம் வீணாப்போச்சு.”
“எங்கே நான் படுக்க, நடமாட?” திகைப்புற்றேன். திகிலுற்றேன்.
“இதோ விசுப்பலகையில் படுங்கள், உட்காருங்கள். படியுங்கள், எழுதுங்கள், புழங்குங்கள். நான் திண்ணை பெஞ்சில் ராத்ரி படுத்துக்கறேன். விஜயா சமையலறையில் முடங்குவாள். பசங்களை வேப்பிலையாத்துக்கு விரட்டிடு வேன். இன்னி ஒரு நாளைக்குத்தான். நாளைக்கு மூட்டை போட்டு மெஷினுக்குப் போயிடும்.”
“காலால் மிதிக்கவே கூசறதே சந்தானம்!”
“மாமா,இதைக் கேளுங்கள்: நீங்கள் எழுத்தாளர், சிந்தனை பண்ணுங்கள். இது அறுவடைக்கு முன்னால், கதிராக ஆடுகையில், வயலில் என்னென்ன அசூயை நடக்கற துன்னு ஒரு நிமிஷம் எண்ணிப் பார்த்தால், சாதமே வேண்டி யிருக்காது. சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியுமோ? இதையே தாம்பாளத்தில் பரப்பி, குத்துவிளக்கை அதன்மேல் வெச்சு ஏத்திட்டா. அம்பாள் ப்ரஸன்ன மாயிட்டா. அக்ஷதையாகத் தலைமேல் போடுங்கோ. தீர்க்காயுஷ்மான் பவ: அன்னமாக இலையில் வட்டித்துப் பாருங்கோ. அன்னம்சப்ரம்மா:’ எல்லாம் இடமும் ஏவலும் பொருந்தித்தான் மஹிமை. முதலில் நினைக்க நேரம் இருந்தால்தானே வித்தியாசங்களுக்கு வழி! மாடு கறக்க நேரமாச்சு போறேன். நீங்கள் விசுப்பலகையில் உட்காருங்கோ. விஜயா. மாமாவுக்கு ஜோரா காப்பி போட்டுக் கொடு.”போய்விட்டான்.
மாட்டுக்கொட்டகையில் பசுக்கள் இரண்டு, எருமைகள் இரண்டு, கன்றுகள் நாலு. கொட்டகை தாண்டிப் போனதும் வைக்கோற் போருக்குப் பரந்தவெளி. அப்பால் தோட்டம் தென்னை, இலை, செடி, கொடி,புதர், காடு. அப்புறம் வாசல் தெருக்கு parallel ஆக புழைக்கடை சந்து, இந்த விஸ்தீரணத்துக்குப் பட்டணத்தில் ஒரு 3-star ஹோட்ட லேனும் கட்டிவிடுவான்கள்.
ஆனால் கிராமத்திலேயே, எல்லாம் வீடுகளும் இதே வாகு, மோஸ்தர்தான். கோயில் பிராகாரம் மாதிரி.
“இந்தாங்கோ மாமா காப்பி சாப்பிடுங்க. நீங்கள் சொன்னபடியே கொஞ்சந்தான் அஸ்கா போட்டிருக்கேன்.’
கொஞ்சமா? வீட்டுப்படி தாண்டிவிட்டாலே, அதுவும் கிராமத்தில் என் ‘நிறைய’ எங்கே அதற்குமேல் தாங்காதோ அங்கேதான் இவர்கள் ‘கொஞ்சம் ஆரம்பிக்கிறது. எல்லா வற்றிலும் இவர்கள் அளவுகள் பெரிது காப்பியென்றால் ஒருகால்படி போட்டா அதற்கு டபரா என்கிற பெயரில் ஒரு அடுக்கு. சொன்னாலும் கேட்கமாட்டார்கள். திணறத் திணறக் குடிச்சேயாகணும். பெரிய மனம் படைத்தவர்கள். இவர்கள் வீடுகள்போல், இவர்கள் வயற்காடுகள் மாதிரி, அவைமேல் இவர்களின் ஆகாசங்கள் போன்று சின்னதாவே எண்ணத் தெரியாது.
நெல்லைக் காலால் துழாவிக்கொண்டே சமைலறையுள் நுழைகிறேன். விஜயா எரியவிட்டுக் கொண்டிருக்கும் விறகடுப்பின் ஜ்வாலையே இரவோ பகலோ சதா அங்கே தேங்கியிருக்கும் இருட்டை முடிந்தவரை கலைக்கும் வெளிச்சம்.
“வாங்கோ மாமா வாங்கோ சந்தானமும் விஜயாவும் ‘கோரஸ் பாடுகிறார்கள். வீட்டுள் நுழைந்ததும் ‘வாங்கோ மாமா கூடத்துக்கு வந்தால் ‘வாங்கோ மாமா வென்னீர் கொட்டகைக்குள் ஸ்னானத்துக்கு அடியெடுத்து வைத்தால் “வாங்கோ மாமா” சமயலறையுள் நுழைந்தால் ‘வாங்கோ மாமா” வாசலுக்கு வாசல் ‘வாங்கோ மாமா’.
“சும்மாத்தான். கிராமத்தில் உங்கள் தினப்படி ருட்டீன் என்னென்று பார்க்க.”
“தாராளமாப் பாருங்கோ – டேய் மணிகண்டா, மாமா வுக்கு மணை கொண்டுவா.
சந்தானம், கறந்த பாலை அளந்து, சுற்றி ஏனங்களில் ஊற்ற ஊற்ற, எடுத்துக்கொண்டு. குழந்தைகள் சுறுசுறுப் பாக வெளியே கடந்து செல்கிறார்கள்.வாடிக்கைகளுக்கு விநியோகம் பண்ண.
“மாமா, என்ன சமையல் பண்ணலாம் சொல்லுங்கோ. பறங்கிக் கொட்டை வாங்கி வெச்சிருக்கேன். பறங்கித்தான் போட்டு வத்தல் குழம்பு,பறங்கிக்காய்க் கூட்டு பண்ணப் போறேன். உங்களுக்கு வேணும்னா அப்பளாம் சுடறேன்.”
என்பேர் லச்சுமி. என் பெண்பேர் மஹாலச்சுமி.
பறங்கிக்காய் எனக்குச் சுவாரஸ்யப் படவில்லை. ஆனால் அதைச் சொல்ல மனம் இல்லை.
“எதேஷ்டம்” தலையை மும்முரமாக ஆட்டுகிறேன்.
“மாமா நான் ட்யூட்டிக்குக் கிளம்பியாச்சு. ஸந்தானம் திரும்பி வந்ததும் வயலுக்குப் போகணும். எனக்காக் காத்திருக்காதேங்கோ. ராத்ரி சேர்ந்து உட்காந்துக்கலாம்.”
போய்விட்டான். சந்தானத்துக்குக் காப்பிப் பழக்க மில்லை. அவன் கறந்த பால்கூட அவனுக்குத் தேவையில்லை.
‘திறுதிறு’ என்று சற்று நேரம் இங்கேயே விழித்துக் கொண்டிருந்து விட்டுப் (அச்சூ – நெல் நெடி) பொழுது போகாமல்,வேப்பிலை வீட்டுக்குச் செல்கிறேன்.
இங்கே யாருக்குமே மோப்ப சக்தியுமோ?
“வாங்கோ மாமா வாங்கோ மாமா”…உன் இருட்டுக்கு என் பார்வை இன்னும் பதமான பாடில்லை. வாசற்படி தடுக்கி, கால் கட்டைவிரல் நகம் வலியில் துடிக்கிறது.கண்டு கொள்ளாமல் உள்ளே வருகிறேன்.
“இதோ பெஞ்சிலே உட்காருங்கோ. டிகாஷன் போட் டாச்சு. அடுப்பில் பாலை வெச்சிருக்கேன். ஒரு நிமிஷம்.”
ஊஹும். தப்பவே முடியாது. வெடுக்கென்று ஏதேனும் சொல்லி, மனதைப் புண்படுத்தவா, பதினைந்து வருடங்கள் கழித்து வந்திருக்கேன்?
“மாமா சாப்பிட இங்கேயே வந்துடுங்கோ.”
“இல்லை அங்கே ஒத்துண்டுட்டேன். இங்கே என்ன சமையல்?”
“பறங்கிக்காய்க் கூட்டு பறங்கிக்காய் வற்றல் குழம்பு, பரவாயில்லை. அங்கே கொடுத்து அனுப்பறேன்.”
“அங்கேயும் -” இல்லை, சொல்ல மனமில்லை.
வேப்பிலையின் பெண்களில் இருவர் பள்ளி ஆசிரியை வேலை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு வாரமாகப் பள்ளி யில்லை. ஆசிரியர்கள் போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. கைதானவர்களைக் கொள்ளமுடியாமல் திருச்சி ஜெயில் வழிகறது. ஆசிரியர்களுக்கும் களிதான் போடுகிறார்களாம். சரியாகக்கூட வேகவில்லை. வயிற்று வலி. போக்கில் அவஸ்தைப்படுகிறார்களாம். பார்த்து வந்தவர் சொல்கிறார்கள்.
வேப்பிலையின் பெண்களும் சந்தானத்தின் குழந்தை களும் மாவட்டச் சேதி கேட்க ட்ரான்ஸிஸ்டரைச் சுற்றி நிற்கிறார்கள். போராட்டத்தின் நிலைமை, சமாதானப் பேச்சு வருகிறதா அறிய. பையன்களுக்குக்கூட வீட்டில் இப்படி இருப்பது நிலை கொள்ளவில்லை.
மணிகண்டனும், சேசுரும், குளிப்பாட்ட மாடுகளை வாய்க்காலுக்கு ஓட்டிச் செல்கின்றனர். அவரவருக்கு ஓரொரு வேலை. எல்லோருக்கும் வேலை. அப்படிச் செய்யாவிட்டால் கிராமத்தில் ஒன்றும் நடக்காது. மெதுவாக, நேரத்தைப் பற்றி அக்கறையில்லை, ஆனால் ஓயாத வேலை. நேரம் நகர்கிறது. இருளை நோக்கி நகர்கிறதுமாரி.
ஆனால் வாஹனத்தின்மேல் உறை விழுந்தாற்போல் திடீ ரென இருட்டு எப்படி, இப்படி புடைசூழ்ந்துகொண்டது? மாயமாயிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்தான் மாலை வெய்யில் சீவனற்று, கூடத்து சுவர்மேல் ஏறிக்கொண்டிருந் தாற்போல் இருந்தது.
விஜயா லாந்தர்களை ஏற்றுகிறான். என்ன ஏற்றி என்ன? கிராமத்தில் என் பையல் பருவத்தின் இதே நிலை மையை வலுக்கட்டாயமாக நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதனால்? இன்று இருள் பழக்கமாகிவிடுமா? இருளினால் மட்டுமே பழைமையைப் பெற்றுவிட முடியுமா?
‘மாமா சாப்பிட வாங்கோ.’
சூரிய அஸ்தமனச் சுருக்குடன் இங்கே சாப்பிட உட் கார்ந்துவிடுகிறார்கள். மறுநாள் வெள்ளியோடு எழுந்திருக்க வேண்டுமென்பதாலோ? மழைக்காலம் அஸ்தமனமும் சுருக்க நேர்ந்துவிடுகிறதென்பதாலோ? எரிபொருள் காக்கவேண்டு மென்பதாலோ அல்லது இதற்குப் பிறகு வேறு வேலை யில்லை என்பதாலோ?
எப்படியிருந்தால் என்ன? திண்ணையில் – (நெல்லை மூட்டை போட்டாகிவிட்டது) ஏழரை மணிக்கே ஸந்தானம் எனக்குப் படுக்கை விரித்தாயிற்று. நானும் உடம்பை நீட்டி யாச்சு. விளக்குகளில் திரியை உள்ளுக்கு இழுத்தாச்சு. பனிக்குப் பாதுகாப்பாக, திண்ணையில் படுதாக்களை இறக்கியாச்சு.
தலைமாட்டில் விசுப்பலகையில் தடதடவென சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்து உட்காருகிறேன். ஸந்தானம் சிரிக்கிறான். ‘ஒண்ணுமில்லை மாமா, நாய்.”
“வளர்க்கிறாயா?”
“சரியாப் போச்சு. அது ஒண்ணுதான் பாக்கி. தெரு நாய். நிறை கர்ப்பம் இன்னும் பதினஞ்சு நாளில் போட்டுடும். இருப்புக்கொள்ளல்லே. புரள்றது.”
அருவருப்பில் என் உடலின் குலுங்கலை இருட்டில் அவன் பார்க்க முடியாது. உடனேயே என்மேல் ஏதோ ஊர்வதுபோலும் சுள்சுள் என்று பிடுங்குவது போலும்… அசலா, ப்ரமையா?
தூக்கம் வரவில்லை. இவ்வளவு சுருக்கப் பழக்கமேயில்லையே!
இன்று மாவட்டச் சேதியில்: “வங்காளக்குடாக் கடலில் இன்னொரு காற்றழுத்த மண்டலம் ஸ்ரீலங்கா அருகே பரவலாக உருவாகியிருக்கிறது.
என் கவலை எனக்கு.
தீபாவளிக்கு ராஜா காலனியில் இருக்கிறேன். சென்னை யில் பேய் மழை அப்பவும் வானொலிதான் தஞ்சம். செல்வராஜின் வாசிப்பில் அம்பத்தூர் அடிபடாத வரை நல்ல படியாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் என் வீடு பற்றி எனக்குத் தெரியும். இங்கிருந்துகொண்டு நான் என்ன செய்ய முடியும்? அங்கிருந்தாலும் என்ன செய்ய முடியும்? பட்டணமே வெள்ளத்தில் பரிதவிக்கையில் என் தனிக்கவலை என் சுயநலத்தைத்தான் காட்டிக்கொடுக் கிறது. பொறுமனமே பொறு என்றால் மாட்டாய். ஆதலால் தவிமனமே தவி. மௌனமாகத் தவித்துக்கொண்டேயிரு. இந்த சமயத்தில் நான் துணை நிற்கவில்லையே என்று அவர் களுக்குப் பட்டால் ஆச்சரியமில்லை. நியாயம்கூட. ஆனால் இப்படியொரு மழை வரும் என்று யார் கண்டது? நான் புறப்படும்போது வெய்யிலல்லவா அடித்துக்கொண்டிருந்தது?
மழையும் மக்கட்பேறும் மகாதேவனுக்குக்கூடத் தெரியாது
சந்தானம் விழுந்தடித்துக்கொண்டு எழுந்திருக்கிறான்.
‘என்னப்பா?’
“கொட்டாயில் தும்பை அறுத்துக்கொண்டு மாடுகள் ஒண்ணுக்கொண்ணு சண்டை போடறது?”
உள்ளே ஓடுகிறான்.
எனக்குத் தெரியவில்லை. இவனுக்கு மட்டும் எப்படி?…
அதுதான் கிராமம்.
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.