அதிலும் ஒரு லாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2025
பார்வையிட்டோர்: 359 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஆபீசுக்கு நேரமாகிவிட்டதே ; இவ்வளவு நாழிகை பேசியிருந்து விட்டோமே என்கிற அவசரம் சுந்தரேசனுக்கு. வேகமாக ஸ்நான அறைக்குள் நுழைந்தான். வெந்நீர் மொள்ள அண்டாவில் செம்பை விடவும் அதில் தண்ணீர் கொஞ்சந்தான் இருந்ததாகை யால் நிதானம் தவறிச் செம்பு, சத்தத்துடன் அண்டாவுக்குள் விழுந்தது. “அவசரத்துக்கு இந்த வீட்டில் ஒன்றும் சரியாக இராது” என்று முணுமுணுத்துக் கொண்டவன், “வெந்நீரைச் சரி பார்த்து வைக்கக் கூடாதா?” என்று கடிந்து கொள்வதற்கோ, “இப்பொழுது இதைக் கவனி” என்று மனைவிக்கு உத்தரவிடுவதற்கோ இன்று மனமில்லை. 

நேற்று இருவருக்கும் சண்டை பலமாகிப் பேச்சு வார்த்தைகள் இல்லையே. ‘இதை எளிதில் விட்டுவிடக் கூடாது. போனால் போகிறதென்று பார்த்தால் வர வரத் தலைக்கு மேல் ஏறுகிறது. கொஞ்சம் பயம் வரும்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று சுந்தரேசன் தீர்மானித்திருந்தான். அதன் பலன்தான் இது. 

இரண்டு குடம் தண்ணீர் மொண்டு அண்டாவில் கொட்டினான். அவசரத்தில் வெளியிலெல்லாம் தண்ணீர் சிதறிவிட்டது. புகைந்து எரிந்து கொண்டிருந்த அடுப்பு அணைந்து ஒரேய மாட்டாய்ப் புகைய ஆரம்பித்தது. “அட இழவே” என்று பக்கத்தில் கிடந்த விசிறியைக் கொண்டு விசிறி எரியவிட முயன்றான்; பயன்படவில்லை. அவசரத்துக்கு அடுப்பு என்ன செய்யும்? ஐப்பசி மாச மழையில் நனைந்த விற்கல்லவா? ‘சொய்’யென்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது. குனிந்து ஊதிப் பார்த்தான். புகை கண்ணை அவித்ததேயொழியப் பலனில்லை. மனைவியை அப்பொழுதும் கூப்பிட மனம் வரவில்லை. கோபத்தோடு பச்சைத் தண்ணீரை மொண்டு வீட்டுக் கொண்டு ஸ்நானம் செய்துவிட்டு அவசரமாகச் சாப்பிட உட்கார்ந்தான். 

இவ்வளவையும் அவன் மனைவி சுந்தரி கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். ‘அவ்வளவு கோபமா? இருக்கட்டுமே’ என்று பேசாமல் இருந்து விட்டாள். அவள் மனத்திலும், ‘நாம் தாழ்ந்து போய்க் கௌரவத்தைக் கெடுத்துக் கொள்வதா?’ என்ற எண்ணம். ‘இந்தத் தடவை அவருக்காயிற்று, நமக்காயிற்று; பார்த்து விடுகிறது’ என்ற தீர்மானத்துடன் இருந்தாள். ‘இத்தனை நாள் நடுங்கி நடுங்கி நடந்ததற்கு என்ன கிரீடம் வைத்து விட்டார்? திண்டாடினால்தான் கொஞ்சமாவது அருமை தெரியவரும்’. 

சுந்தரேசன் அவளை நிமிர்ந்து பாராமலே சாப்பிட்டு விட்டு எழுந்து ஆபீசுக்குச் சென்றான். ‘வேண்டாம், வேணும் என்று சொல்வதற்குக்கூட வாயில் கொழுக் கட்டையா என்ன? அடே அப்பா, கோபமே! என்ன தான் அப்படிக் கொலைபாதகத் தொழில் செய்துவிட்டேனோ தெரியவில்லை. இவர் பெண்ணையும் பிள்ளையையும் கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டேனா? நன்றாயிருக்கிறது!’ என்று எண்ணமிட்டாள் சுந்தரி. 

‘நான் சாதாரணமாகச் சொன்னதற்கு இத்தனை சண்டையா? “ஆபீசிலிருந்து வரும் பொழுது ராமநாதையரைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றேன். நேற்றுக் கூடச் சரஸ்வதி என்னிடம், “நாம் இருவரும் ஒன்றாக வளர்ந்து ஒன்றாக வாசித்துத் தோழிகளாக இருப்பதற்கு, நம் கணவர்களும் ஏன் சிநேகிதர்களாக இருக்கக்கூடாது?” என்றாள். நான், ‘எங்காத்தில் அவரை உன் கணவரை வந்து பார்க்கச் சொல்லுகிறேன்’ என்று சொன்னேன். இந்த விஷயத்தை இவரிடம் சொன்னேன். இதில் என்ன தவறு? அதற்கு எவ்வளவெல்லாம் சொன்னார்! அவர் பெரிய ஆபீசராம்; இவரை மதிக்க மாட்டாராம்! ஏதோ தயைக்கு வந்திருப்பதாக நினைத்துக் கொள்ளுவாராம்! “நமது சிநேகம் அவனுக்கு எதற்கு? சிநேகத்தை விரும்புகிறவனா யிருந்தால் இத்தனை நாளாக நம்மை வந்து பார்க்காமல் இருப்பானா?” என்கிறார். இருந்தாலும், நல்ல சிநேகிதமே இவருக்கு ஒரு நாளும் பிடிப்பதில்லை. இவருக்குக் கீழ்ப்பட்டு இவரிடம் பல்லைக் காட்டித் தலையைத் தடவிக் காசு பறிக்கிறார்களே, அவர்களே இவருக்குச் சரி. இதைச் சொல்லி விட்டேன். வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! ‘வீடு வீடாக எச்சில் இலை நாய்போல் நுழைந்து பார்க்க என்னால் முடியாது’ என்று கர்ஜித்தார். 

‘என்றுமே தாம் பிடித்த முயலுக்கு மூன்றே காலென்று சாதித்துப் பிடிவாதம் செய்யும் குணம் இவரிடம் அதிகம். இப்பொழுது வர வரக் கோபம் வேறு மூக்கிற்கு மேல் வருகிறது. இவரை அவசியமில்லாமல் தாழ்ந்து போகும்படி நான் தான் சொல்லுவேனா? இது ஏன் இவருக்குத் தோன்றவில்லை? ஆபீசர்களின் ராங்கியும் பெருமையும் நானும் கொஞ்சம் தெரிந்து கொண்டு தான் இருக்கிறேன். அவர்களாவது ஒரு மாதிரி இருக்க நியாயமுண்டு; பல பேருடன் பழக வேண்டியவர்கள் அல்லவா? ஆனால் அவர்கள் மனைவிகள் தாங்கள் பிறவியிலேயே கௌரவத்தோடு உதித்து வந்திருப்பதாகத் தான் நினைக்கிறார்கள். சரஸ்வதி மாத்திரம் அப்பேர்ப்பட்டவள் அல்ல. அவள் எனக்கு இன்று நேற்றுச் சிநேகமா? அவள் புருஷரும் நல்ல மனுஷரென்றே எல்லோரும் சொல்லுகிறார்கள். இல்லை; ஒரு தரம் இவர் அவரிடம் போய் வந்தால் என்ன, குடியா முழுகிப் போய்விடும்? நமக்கு மனசுக்குப் பிடித்தால் தானே சிநேகம் செய்து கொள்ளப் போகிறோம்?’ 

இந்த மாதிரி நடந்ததையும் நடக்காததையும் நினைத்து நினைத்து அவளுக்குச் சாப்பாடுகூடச் செல்ல வில்லை. “இவர் குணம் தெரியாமல் சரஸ்வதியிடம், ‘நாளை இவரை உங்காத்துக்காரரை வந்து பார்க்கச் சொல்லுகிறேன்’ என்று தைரியமாகச் சொல்லிவிட்டேனே!” என்று தவித்தாள். 

சுந்தரேசன் குழந்தை போல் ஒரு வார்த்தையையும் காதில் ஏற்காமல் பிடிவாதம் செய்வானென்று அவள் கண்டாளா? ‘புருஷர்கள் பாடு; அவர்கள் எப்படியோ போகட்டும் என்று சொல்லாமற் போனேனே; இப்பொழுது அவள் தன் கணவரிடம் இவர் வருவார் என்பதைச் சொல்லியிருக்க மாட்டாளா? இவர் வராததைக் கண்டு அவருக்கு என்ன தோன்றும்? தம்மை வந்து பார்க்க இவருக்கு மனமில்லை என்று தானே கருதுவார்? இதிலிருந்து தம் மனைவி என்னிடம் வருவது போவது கூட அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டால்? ஐயோ! அவர்கள் இவ்வளவு நாள் வெளியூர்களி லெல்லாம் இருந்தார்களே; இப்பொழுது இங்கே எதற்கு வந்தார்கள்? எல்லாம் என் துரதிருஷ்டந்தான்’ என்று சுந்தரிக்குத் தோன்றிற்று. இப்படியா நேரவேண்டும் என்று அவள் தனக்குத் தானே அங்கலாய்த்தாள். 

இனிமேல் சரஸ்வதிக்கும் தனக்கும் இடையே உள்ள சிநேகம் வரவரக் குறைந்து வருவது போன்ற தோற்றம் அவளுக்கு உண்டாயிற்று. அடுத்த முறை கிளப்பில் இருவரும் சந்திக்கிறார்கள். சரஸ்வதி ஏதோ ஒரு விதமாகப் பார்க்கிறாள். சுந்தரி ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாள். பேச வாய் வரவில்லை. பெரிய குற்றத்தைச் செய்த குற்றவாளியைப் போல விழிக்கிறாள். அதற்கு அடுத்த தடவை சரஸ்வதி அவளைக் கடைக்கண்ணால் பார்த்த படியே போய் விடுகிறாள். சுந்தரிக்கு மனத்தில் ஒரு நடுக்கம் ஏற்படுகிறது. நாளடைவில் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதே நின்று போய்விடுகிறது. இப்படி யெல்லாம் நடப்பதாக அவள் கற்பனை செய்தாள். 

இந்தச் சிந்தனையில் அவளுக்கு வீட்டுக் காரியமே ஓடவில்லை. அவள் மகன் பாலசந்திரன் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்தான். அவன் வரும்போது அவனுக்கு டிபனும் காபியும் தினந்தோறும் தயாராக இருக்கும். இன்று ஓர் ஏற்பாட்டையும் காணவில்லை. “அம்மா,  உடம்பு சரியில்லையா?” என்றான். 

“இல்லையே அப்பா; ஏன்?” என்றாள் சுந்தரி, தன் நினைவு வந்தவளாய். 

“பின்னே ஏன் எனக்கு ஒன்றும் இல்லை? எனக்குப் பசிக்கிறதே.” 

“இதோ செய்து கொடுக்கிறேன்” என்று சொல்லி அவனுக்குக் காபி பலகாரம் செய்யத் தொடங்கினாள் சுந்தரி. இந்தச் சமயத்தில் சுந்தரேசன் என்றும் இல்லாத படி சீக்கிரம் ஆபீசிலிருந்து வருவதை அவள் பார்த்தாள். ‘ஏன்?’ ஒரு நிமிஷந்தான் இந்தச் சந்தேகம். உடனே அவள் மனம் தெளிந்துவிட்டது. ‘ஓகோ, இவர் அவர்கள்  வீட்டுக்குப் போய்வருகிறாரோ என்று தப்பித் தவறிக்கூட நான் சந்தேகித்து விடக் கூடாதென்று வழக்கத்தை விட இவ்வளவு சடுதியில் வீடு திரும்பி இருக்கிறார்’ என்று தீர்மானித்தாள். அவ்வளவுதான். ஏற்கனவே இருந்த கோபம் பன்மடங்காயிற்று. சுந்தரேசன் சட்டையைக் கழற்ற உள்ளே சென்றவன் திரும்பி வெளி வராததையும் அவள் கவனிக்கவில்லை. 

“அம்மா, அப்பாவுக்குத் தலை வலிக்கிறதாம்” என்று சொல்லிக்கொண்டு வந்தான் பாலசந்திரன். 

“பின்னே என்ன போ” என்று சொல்லிப் பேசாமல் இருந்துவிட்டாள். சும்மாத் தன்னை மிரட்டும் வார்த்தை அது என்றே அவள் கருதினாள். அவனிடம் சென்று உடம்பு என்னவென்று பார்க்கவோ, காபியாவது சாப்பிடுகிறானா என்று கேட்கவோ அவள் முயலவில்லை. அவன் இருமுவதும் தும்முவதும் காதில் விழுந்தபொழுது கூட, ‘பச்சைத் தண்ணீரில் என்றுமில்லாமல் முழுகினதால், ஜலதோஷம் பிடித்திருக்கிறது. என்ன வேண்டாத கோபம்!’ என்று தான் எண்ணினாளே தவிரச் சிறிதுகூட ‘என்னவோ?’ என்று கவலை கொள்ளவில்லை. 

இரவு சுந்தரேசன் சாப்பாடு வேண்டாமென்று சொல்லிவிட்டான். “கஞ்சியாவது வைத்துத் தரட்டுமா?” என்று பிள்ளையைக் கொண்டு கேட்கச் சொன்னாள். சுந்தரேசன் அதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டான். ‘உடம்பு பளுவாயிருக்கும் பொழுது பட்டினி நல்லதுதான்’ என்று சுந்தரி நினைத்தாள். 

இரவு அவளுக்கு நல்ல தூக்கம் என்னவோ வரவில்லை. சுந்தரேசன் அடிக்கடி கட்டிலில் புரளுவதும் முனகுவதுமாக இருந்தான். அவளுக்குக் கவலையும் வேதனையும் உண்டாயின. ஒரு வேளை காய்ச்சல் பலமாக வந்துவிட்டதா என்ன? என்று நினைத்தாள். எழுந்து சென்று தொட்டுப் பார்க்க அவள் கோபம் இடங் கொடுக்கவில்லை. பொழுது விடியட்டும் என்று இருந்தாள். இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லாமை யால் விடியற்காலை சிறிது கண்ணயர்ந்துவிட்டாள். 

அவள் எழுந்திருந்த பொழுது நன்றாக விடிந்து விட்டது. ஆபீசுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் நேரமாகிவிடுமே என்கிற பரபரப்பில் எல்லாவற்றையும் மறந்து விட்டுக் காரியத்தில் முனைந்தாள். மணி ஏழுக்கு மேலாகியும் சுந்தரேசன் எழுந்து வரவில்லை. பாலசந்திரனிடம், “அப்பா ஏன் இன்னும் எழுந்திருக்க வில்லை? பார்; காபி சாப்பிட வேண்டாமா? கேள்” என்றாள். 

லசந்திரன் திரும்பி வந்து, “அப்பாவுக்கு ஜூ-ரம் அடிக்கிறது. கோடியாத்து டாக்டர் மாமாவைக் கூப்பிடச் சொல்லுகிறார். போய்க் கூப்பிட்டு வருகிறேன்” என்று சொல்லி வெளியில் ஓடினான். 

டாக்டர் வந்து பார்த்து, “நல்ல ஜுரம் அடிக்கிறது. ஜலதோஷம்; மார்பிலும் கொஞ்சம் கபம் இருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டாம். ஆகாரம் கஞ்சியே சாப்பிடட்டும்” என்று சொல்லி மருந்து கொடுத்துப் போனார். 

சுந்தரிக்கு இப்போது கோபமெல்லாம் இருந்த இட தெரியாமல் போய்விட்டது. கவலை அவள் உள்ளத்திற் குடிகொண்டது. சரஸ்வதி, அவள் புருஷர், அவர்கள் சிநேகம் ஒன்றும் இப்பொழுது அவளுக்குப் பெரிதன்று. வேளைக்கு கணவனுக்கு மருந்து கொடுப்பது, சரியான ஆகாரங்கள் கொடுப்பது முதலியவற்றை அவளல்லாமல் வேறு யார் செய்வார்கள் ? 

ஒரு வாரம் சுந்தரேசனுக்குப் பலத்த காய்ச்சல் அடித்தது. செயலற்றுக் கிடந்தான். டாக்டர் வந்து பார்ப்பதும் மருந்து கொடுப்பதுமாக இருந்தார். சுந்தரி வீட்டுக் காரியத்திலும் கணவன் சுச்ரூஷையிலும் தன்னையே மறந்தாள். நடு நடுவில், “ஐயோ! என்ன அசட்டுக் கோபம்! இப்பொழுது குடி முழுகி விடும்போல் இருக்கிறதே, ஈச்வரா! என்னை மன்னித்துவிடு. என்னையே நான் வெறுக்கும்படி செய்துவிடாதே” என்று சுவாமியைத் தியானிப்பாள். 

என்றும் இல்லாமல் பச்சைத் தண்ணீரில் ஸ்நானம் செய்தது, புகையில் அவிந்தது எல்லாமாகச் சேர்ந்து இப்பொழுது நிமோனியா ஜூரத்தைக் கொண்டு வந்து விட்டன. அவளுக்கு அந்த ஜூரத்தைப் பற்றி எண்ணும் போதே அச்சம் உண்டாயிற்று. 

‘பாவி! என்ன புத்திக் கோளாறு ! அற்பக் காரியத்துக்கு இவ்வளவா? அவர் என்னதான் பிசகு பண்ணி விட்டார்? உத்தியோகஸ்தர்கள் எல்லாரிடமும் சகஜமாகப் பழகிக் கொள்ளுகிறவர்களா? எனக்குத்தான் இது ஒரு பிரமாதமாகத் தோன்றுவானேன்! சரஸ்வதி யினுடைய சிநேகம் வாழ்விற்கே இன்றியமையாததா? பகவானே ! சிறு பிழைக்குக் கடுமையாகத் தண்டித்து விடாதே” என்று வேண்டிக்கொண்டாள். அவள் வயிறு பகீரென்றது. “டாக்டர் என்ன சொல்லுவாரோ!” என்று ஒவ்வொரு நாளும் ஆவலாக எதிர்பார்ப்பாள். 

ஒரு வாரம் கழிந்தது. சுந்தரேசனுக்குப் படிப்படியாகக் குணம் கண்டது. முதல் நாலு நாளைக்கு டாக்டர் அவனை யாரும் பார்க்கக் கூடாது என்று சொல்லி யிருந்தார். பிறகு இப்பொழுது விசாரிக்க வருகிறவர்களிடம் அதிகச் சிரமப்படுத்திக் கொள்ளாமல் அவன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பதில் சொல்லி அனுப்பி வந்தான். 

சரஸ்வதி விசாரிக்க வந்தாள். முதலில் அவள் வந்த சில தினங்களில் சுந்தரிக்கு நின்று பதில் சொல்லக்கூட நேரமில்லை. சுந்தரிதான் தன்னையே மறந்திருந்தாளே! இதைக் கண்டு கொண்ட சரஸ்வதியும் அவளுக்கு வீண் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டித் தன் கணவரையே விசாரித்து வரும்படி சொல்லி யிருந்தாள். அவரும் ஆபீசுக்குப் போகும் பொழுதோ திரும்பி வரும் பொழுதோ தினந்தவறாமல் வீட்டு வாசலில் விளையாடும் பாலசந்திரனையோ வேறு யாராவது இருந்தால் அவர் களையோ சமாசாரம் விசாரித்துப் போவார். இது சுந்தரிக்குத் தெரியாது. அவள் இப்பொழுது யார் வந்தா லென்ன போனாலென்ன என்று இருந்தாள். 

இன்றும் வழக்கம் போல் ராமநாதையர் ஆபீசிலிருந்து திரும்பி வரும்பொழுது விசாரித்துப் போக வந்தார். இப்பொழுதுதான் அப்பாவிடம் எல்லோரும் பேசிப் போகிறார்களே என்று சொன்ன பாலசந்திரன், “மாமா, வாருங்கள். உள்ளே வந்து அப்பாவைப் பார்க்கலாமே” என்று வற்புறுத்திக் காரை விட்டு அவர் இறங்கும்படி செய்தான். அவரை அழைத்துக்கொண்டு சுந்தரேசன் இருந்த அறையில் நுழையும் பொழுது அங்கு வாயிற்படியில் சுந்தரியைக் காணவும் பாலசந்திரன், “அம்மா, மாமா தினம் வாசலில் இருந்தபடியே விசாரித்துப் போகிறார். அப்பாதான் இப்பொழுது எல்லோரையும் பார்க்கிறாரே; அதற்காக நான் இவரை உள்ளே அழைத்து வந்தேன்!” என்று கூறிக் கொண்டே, சுந்தரி திகைப்பு நீங்கிப் பதில் சொல்லு முன் சுந்தரேசன் அறைக்குள் அவருடன் நுழைந்தான். 

சுந்தரேசனுக்கு அவரைப் பார்த்தவுடனே இன்னா ரென்று தெரிந்துவிட்டது. “மிஸ்டர் ராமநாதன், வாருங்கள், உட்காருங்கள்” என்றான் சிறிது பரபரப் புடன். அவர் அங்கே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். தேக ஸ்திதியைப் பற்றி அவனைச் சிறிது விசாரித்து விட்டு, “நான் போய் வருகிறேன். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; அலட்டிக் கொள்ளாதீர்கள்” என்றார். பிறகு தங்கள் பின்னோடு உள்ளே நுழைந்த சுந்தரியிடம், “இன்று நான் இவரை நேரில் பார்த்தேனென்று சொன்ன பிறகுதான் சரஸ்வதி கவலை நீங்கிச் சந்தோஷம் கொள்வாள். இந்தப் பத்து நாளாக அவளுக்கு ஒரே கவலை” என்றார். 

“சரஸ்வதியைப் பார்க்க வேண்டும். கட்டாயம் வரச் சொல்லுங்கள்” என்று முணுமுணுத்தாள் சுந்தரி. 

அவர் விடை பெற்றுக்கொண்டு சென்றார். சுந்தரேசனுக்கு உள்ளுக்குள்ளே என்னவோ செய்தது. அவன் இந்த நிகழ்ச்சியை எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய சிந்தனை பின்னாலே சென்று தனக்கும் சுந்தரிக்கும் நடந்த வாக்குவாதங்களையும் பேசாமல் இருந்த காலத்தையும் வெந்நீர் அண்டாவின் முன் முணுமுணுத்த படியே நின்று பச்சை ஜலத்தை விட்டுக்கொண்டதையும், ஜுரம் வந்ததையும் இதுவரையில் வரிசையாக நடந்தவற்றையும் எண்ணிப் பார்த்தது. 

சுந்தரேசன் மனைவியைப் பக்கத்தில் அழைத்தான். அவன் கோபமெல்லாம் தலைவலியும் ஜுரமும் வந்த அன்றே போய்விட்டது. கோபத்தின் விளைவாக இவ்வளவு சிரமத்துக்கும் கவலைக்கும் அவளை ஆளாக்கியதற்காக அவன் தன்னைத் தானே நொந்து கொண்டான். அடிக்கடி, “கவலைப்படாதே, வருந்தாதே” என்றெல்லாம் இந்தப் பத்து நாளாக அவளுக்கு ஆறுதல் சொல்லுவான். அவள் ஒவ்வொன்று செய்யும் பொழுதும் அன்பும் வருத்தமும் ததும்பப் பேசுவான். 

இப்பொழுது அவளைத் தன்னிடம் அழைத்தது அத்தகைய ஒன்றுக்கும் அல்ல; அது வேறு விஷயம். ஆபீசர்களைப் பற்றித் தான் கொண்ட எண்ணம் முழுவதும் பிசகு என்பதை ஒப்புக்கொள்ளவே, ராமநாதையர் வந்து போனதிலிருந்து அவரைப் பற்றி இவன் மனம் முற்றும் மாறிவிட்டது. ‘என்ன தங்கமான மனுஷர்? இவரைப் பார்த்து வரவா நாம் இவ்வளவு சண்டை சச்சரவு செய்தோம்? இவருடைய சிநேகம் பெருமையல்லவா அளிக்கும்?’ என்று எண்ணினான். 

“சுந்தரி, என்னைப்போல் முட்டாள் எங்கே உண்டு? இவரைப் போன்றவரைப் பார்க்க உன்னோடு சண்டை யிட்டேனே!” என்றான். 

“இதற்காகவா கூப்பிட்டீர்கள்? என்னவோ என்று பார்த்தேன். நீங்கள் சொன்னதிலும் ஒன்றும் தப்பித மில்லை. என்னவோ இவரை விதிக்கு விரோதம் என்று தான் சொல்ல வேண்டும்” என்றாள். 

“என்ன இருப்பினும் பார்க்காமலே அபிப்பிராயம் கொள்வது பிசகல்லவா? நீ சொன்னதும் அதுதானே? அது தெரியாமல் நான் நடந்தது சுத்தப் பைத்தியக்காரத் தனம் அதற்காகத்தான் இவ்வளவும் அநுபவித்தேன் போல் இருக்கிறது. வேண்டும் எனக்கு. ஆனால் நீ எனக்காகக் கஷ்டப்பட்டதை நினைத்தால்தான் வருத்தம் தாங்க முடியவில்லை. நான் கஷ்டப்பட்டது நியாயம்; உனக்கு எதற்கு இந்தச் சிரமம்?” 

“எல்லாம் வேளை. வீணாய் அலட்டிக் கொள்ளாதீர்கள்” என்றாள் சுந்தரி. அவள் மனம் அப்போது அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் தான் பட்ட சிரமத்திற்கு மேற்பட்ட கூலியாகவே அவளுக்குத் தோன்றின. அவள் கணவன் தான் செய்த பிழையை ஒப்புக்கொள்வ தென்றால் அது சாமானியமா? 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *