அதன் பேர் ஸ..ரீ..க..ம..




(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஸரீகமா என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று திடுதிப்பென்று கேட்டார் சக பிரயாணி.

“என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? அது குழந்தைகளுக்குத் தரும் பிரபல பால் உணவாச்சே! சிலோன் ரேடியோவை முடுக்கும் போதெல்லாம் ஸரீகமாவின் பெயர் தானே காதைத் துளைக்கிறது?”
“அந்த உணவுப் பொருளைக் கண்டுபிடித்துத் தயாரிப்பவன் நான்தான்.”
“ஆமாம், ஸரீகமா என்று இந்தப் ‘பிராடக்டி ற்கு ஏன் பெயர் தந்தீர்கள்? உங்களுக்குக் கர்நாட க சங்கீதம் என்றால் உயிரோ?”
“அதெல்லாம் ஒன்றுமில்லை.”
“பின்னே?”
“இதே கேள்வியை என்னைப் பல பேர் கேட்கிறார்கள் எனக்கும் கதை சொல்லி அலுத்து விட்டது. எனவே இந்தப் பெயருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சுவையான வரலாற்றை இதோ, ஒரு சிறு ‘புக்லெட் ‘டாக வெளியிட்டிருக்கிறேன். என்னிடம் கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் ஒரு பிரதி தந்து படிக்கச் சொல்வது வழக்கம்.. பிடியுங்கள் உங்கள் பிரதியை ‘
மகாலிங்கம் பரமபரைப் பணக்காரர் அப்பாவிடமிருந்து அவருக்கு வந்த சொத்துக்கள் நாலு ரைஸ் மில்கள ஒரு தோல் மண்டி, ஒரு பிளாஸ்டி தொழிற்சாலை முதலியன. அவர் திருமண செய்து கொண்ட கங்கை அம்மாளும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
இவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தும் தம்பதிகளுக்குக் குழந்தை ஏது இருக்கவில்லை. பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் கை விரிக்கப் போய் தெய்வ சகாயத்தை நாடினார்கள் தம்பதிகள்
எத்தனையோ கோயில்களுக்கு போனார்கள். ஓர் ஆலமரம். அரச மரம் விடாது சுற்றினார்கள். காசியிலிருந்து வந்த ஊமை ஜோசியன் சொன்னானென்று தங்கத்தில் நாகம் செய்து அதற்குப் பாலாபிஷேகம் செய்தார்கள். இந்து கடவுள்களுடன் மற்ற மதங்களைச் சேர்ந்த சாமிகளையும் வழிபட்டுப் பார்த்தார்கள். ஊஹூம்! எதுவும் எதிர்பார்த்த பலன் தரவில்லை.
“எப்படி குழந்தை பிறக்கும்னு கேட்கிறேன்? மாலியோடே கொள்ளு பாட்டியொருத்தி அரக்கி வேலைன்னா செஞ்சு கொண்டிருந்தாள்? எத்தனை குழந்தைகளைப் பிறக்காமல் அடிச்சாள் பாவி! அந்தப் பாவமெல்லாம் இவள் தலையிலே விடிஞ்சிருக்கு. பிராரப்த கர்மாவை அனுபவிக்கிறாள். வேறென்ன இந்தப் பரம்பரைச் சொத்தெல்லாப் எங்கிருந்து வந்தது? எல்லாம் அந்த ராட்சஸி அநியாயமாகச் சம்பாதிச்சி வட்டிக்கு விட்ட பணமதானே? சாமி இந்த மட்டோடு விட்டாரே. மேலும் துன்புறுத்தாமல்” என்று தம்பதியர் காது கேட்க அடிக்கடி அங்கலாய்ப்பாள் எண்பது வயதுக்கு மேலாகிவிட்ட சேஷிப்பாட்டி.
மகாலிங்கத்தை மேலும் மேலும் துன்புறுத்துவது என்று விதி முடிவு கட்டியிருந்தது போலும்! இல்லாவிட்டால் அவருக்கு அந்த விசித்திரமான வியாதி ஏன் வர வேண்டும்? எத்தனையோ டாக்டர்கள் என்னென்னமோ செய்து பார்த்தார்கள். அந்த வியாதி இன்னதென்றே அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மேல் நாடுகளிலும் ட்ரீட்மெண்ட் நடந்தது. அங்கே ஒரு டாக்டர் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்! மகாலிங்கம் இனி மேல் வாழப் போவதெல்லாம் ஆறே ஆறு மாதங்கள் தானென்று!
ஊருக்குத் திரும்பி வந்தவர் இங்கிலீஷ் வைத்தியத்திற்குத் தலை மூழ்கி ஆயுர்வேதம், யுனானி என்று மாதம் ஒரு நிபுணரைத் தேடி அலைந்தார். கடைசியில் ஓர் இமாலய யோகியைச் சந்தித்தார். அவர் டாக்டராக இருந்து யோகியாக மாறினவர். அவர் மகாலிங்கத்திற்குக் கொஞ்சம் நம்பிக்கை தந்தார். தொடர்ந்து சில வாரங்கள் மகாலிங்கம் முப்பது அவுன்ஸ் இளம் தாய்ப்பாலை மட்டும் அதிகாலையிலும், மாலையிலும் சில பச்சிலைகளுடன் சாப்பிட்டு வந்தால் அவரை வாட்டி வந்த பிணி சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிடும் என்று உறுதியாகக் கூறினார். மகாலிங்கம் வைத்தியத்தைப் பரீட்சை பண்ணிப் பார்ப்பது என்று தீர்மானித்தார். தாய்ப்பால் தேடி அலைந்தபோதுதான், அது கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தது.
முக்கால்வாசி வீடுகளிலும் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதா? அந்த வழக்கம் இங்கில்லை முகத்திலடித்தாற் போல் சொல்லி விட்டார்கள். ‘பிகர்’ (Figure) கெட்டுப் போய்விடும் என்று எண்ணி அவர்களெல்லாம் குழந்தைக்குப் புட்டிப் பால் புகட்டுகிறார்களாம்!
சமூகத்தின் உயர் மட்டத்தில் வாழுகிறவர்களை அணுகிப் பலனில்லை என்று தீர்மானித்து, லோட டாவுடன் கும்மிருள் குடிசைகளை நாடினான் மகாலிங்கத்தின் மனைவி. அங்கே பால் தந்து உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் நிறைய இருந்தது. ஆனால் பால்தான் இல்லை. அநேகம் குழந்தைகள் அம்மையின் வற்றிய மார்பிலிருந்து இரத்தத்தைத்தான் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தன.
கடைசியில் நாலு பெண்கள் பால் தர முன் வந்தார்கள். ஒரு தடவை ஒருவரால் அதிகம் போனால் மூன்று அவுன்ஸ்தான் தர முடியும். ஒரு நாளைக்கு எப்படியாவது ஆறு அவுன்ஸ் தர ஒப்புக் கொண்டார்கள். தங்கள் குழந்தைகளைக் கொஞ்சம் பட்டினி போட்டாவது ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் அவர்கள் உதவி செய்ய முன் வந்ததற்குக் காரணம். மகாலிங்கம் பணம் தருவதாகச் சொன்னவுடன் மறுத்ததுடன், மிகவும் கோபித்துக் கொண்டார்கள்!
இமாலய யோகியின் மருந்து பலன் தந்தது. நான்கே வாரங்களில் அவர் பழைய மகாலிங்கமாக மாறினார்.
உடம்பில் தெம்பு வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆம்! செயற்கை முறையில் தாய்ப் பால் தயாரிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டார். இதற்காகவே ஒரு சிறு ஆராய்ச்சி சாலையைச் சொந்தச் செலவில் நிறுவினார். பெரிய பெரிய விஞ்ஞானிகளை யெல்லாம் வரவழைத்துப் பணத்தைத் தண்ணீராட்டம் வாரி இறைத்தார். தனக்கு வந்த வியாதி வேறு யாருக்காவது வந்து அவர்கள் தாய்ப் பாலின்றிக் கஷ்டப்படக் கூடாதல்லவா? தவிர, செயற்கைத் தாய்ப் பால் தயாரிப்பதில் வெற்றி பெற்றால் ஏழைக் குழந்தைகளுக்கு வேறு உதவலாமே!
ஒரு வருடத்திற்குப்பின் விஞ்ஞானிகள் கை விரித்தார்கள். இயற்கையுடன் போட்டியிட்டு அவர்கள் ஜெயிக்க முடியாதாம்! செயற்கை இரத்தம், செயற்கைத் தாய்ப்பால் எல்லாம் வீண் கனவு என்று ஐயத்திற்கு இடமின்றிச் சொல்லி விட்டார்கள்.
இது மகாலிங்கத்தை மிகவும் வருத்தியது ஆனால் விஞ்ஞானிகள் சொன்ன இன்னெரு செய்தி அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. செயற்கைத் தாய்ப் பால் தயாரிப்பதற்காக அவர் செலவழித்த பணம் வீண் இல்லையாம். தாய்ப்பாலுக்குப் பதிலாக மிகச் சிறந்த சத்துள்ள பால் உணவு ஒன்றை உருவாக்கும் முறையை அவர்கள் அதிசயமாய் எதேச்சையாகக் கண்டுபிடித்திருந்தார்களாம். தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு அந்த உணவு ஒரு வரப் பிரசாதமாம்!
“ஸரீகம வியாபார ரீதியில் பணம் சம்பாதிப்பதற்காகத் தயாரிக்கப்படும் பால் உணவு அல்ல. நம் நாட்டுக் குழந்தைகள் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து சிறந்த பிரஜைகளாக வேண்டும். என்பதுதான் அதன் ஆதார சுருதி.”
“ஆமாம், ஸரீகம என்று ஏன் பெயர் வைத்தீர்கள்?”
“பார்த்தீர்களா, ‘புக்லெட்’டில் குறிப்பிட்டிருக்கும் முக்கியமான அந்த விஷயத்தைப் படிக்காமல் விட்டு விட்டீர்களே! நான் வியாதியாகப் படுத்திருக்கையில் எனக்குப் பால் தந்து உதவிய நாலு தியாகினிகளின் பெயர்களின் முதல் எழுத்துக்கள்தான் ஸரீகம… ஸரஸ்வதி, ரீடா. கல்யாணி, மல்லிகா. அவர்கள் ‘பப்ளிஸிடி’யை விரும்பாதவர்கள். நாலு பேருக்குத் தெரியாமல் எனக்கு உதவி செய்தவர்கள். என் தாய்க்கு ஈடாக நான் அவர்களை மதிக்கிறேன்”, என்று கதையை முடித்தார் மகாலிங்கம்.