அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்!

2
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2025
பார்வையிட்டோர்: 10,953 
 
 

மொட்டை மாடியிலிருந்து விடு விடுவென்று கோபத்துடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் விதமாக இறங்கி வந்தாள் பூரணி. 

மனைவியை   என்ன ஏதுவென்று வாசு  விசாரிக்கும் முன்னால் பூரணி தானாகவே வாய் திறந்தாள்.

“இந்த அநியாயத்தைப் கேட்டேளா…நல்ல வெளிச்சத்துல யாராவது பார்க்க மாட்டாளான்னு கொஞ்சங்கூட பயமே இல்லாம இப்படியா நடந்துக்கறது?” 

“என்ன அநியாயம் நடந்தது…அப்படி வெளிச்சத்துல என்னதான்  பார்த்தே?”

“எதிராத்துல  புதுசா குடி வந்திருக்குதே ஒரு குடும்பம். அவா  வீட்டுப் பொண்ணு மொட்டைமாடியில திண்ணையில் நன்னா செளகரியமா உட்கார்ந்து  சாய்ஞ்சபடி பக்கத்து வீட்டுப் பையனை முறைச்சுப் பார்த்துக்கிட்டிருக்கு. இது அநியாயம் இல்லையா?” 

வாசு மெலிதாகச் சிரித்தபடி, “ஓஹோ!இதைத்தான் அண்ணலும் நோக்கினார். அவளும் நோக்கினாள்னு சொல்றதோ!” என்று ஹாஸ்யத்துடன் சொன்னார். 

“விளையாடாதீங்க. சின்னப் பசங்க இப்படிக் கெட்டழியறதேன்னு தவிச்சுக்கிட்டிருக்கேன். நீங்க வியாக்கியானம் பேசறீங்க!” 

சிரிப்பு குறையாமல் கிட்ட நெருங்கி வாசு தன் மனைவியைக் குறு குறுவென்று பார்க்க கணவரின் பார்வையைத் தவிர்த்து மெல்ல தலை கவிழ்ந்தாள் பூரணி.

“பூரணி! நமக்கே ஒருமாதிரியா இருக்கும்போது…சின்னஞ்சிறுசுகள் அதுங்களுக்கு இன்னும் ரொமான்ஸா இருக்காதா? இதையெல்லாம் நீ கண்டிருக்கக் கூடாது. சரி அப்படிக் கண்டாலும் பெரிசா எடுத்துக்கக் கூடாது. ஒருவேளை அவாளுக்குள்ளே இது சகஜமா இருக்கலாமில்லையா…நாம யாரு அவா  விஷயத்தில தலையிட! போய் வேற வேலையைப் பாரு!” 

கணவர் ஆயிரம்தான் சொன்னாலும் தன்னால் அந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை பூரணிக்கு. சமீபத்தில் குடிவந்த பெண்ணுக்கு பக்கத்துவீட்டுப் பையனிடம் எப்படி அவ்வளவு சீக்கிரம் சிநேகம் ஏற்படமுடியும்! ஒருவேளை நீண்டநாளாகவே அவாளுக்குள்ளே ‘அது ‘ இருந்திருக்குமோ?  அதை இங்கேயும் கண்டினியு பண்றாளோ….தேவையில்லாமல் அந்த நிகழ்வு பூரணி மனதில் நெருடிக் கொண்டே. இருந்தது! 

மேலும் அதனால் மண்டை வெடித்துவிடு ம்போலவும் இருந்தது. 

அதே நாள்  மாலை பர பரப்புடன் ஓடிவந்த பூரணி ஈ.ஸி.சேரில் சாய்ந்தபடி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கணவர் எதிரில் வந்து நின்றாள். சப்தம் கேட்டு கண்திறந்தார் வாசு.

“என்ன பூரணி! ஏன் உன் கண் கலங்கியிருக்கு…யாருக்காவது உடம்பு சரியில்லையா?” 

“பாவம்ங்க அந்த எதிர்த்த வீட்டுப் பொண்ணு!” மூக்குறிஞ்சினாள் பூரணி.

“என்னாச்சு அதுக்கு?” 

“அதுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதாம். மொட்டைமாடியில காத்து வாங்கணும்னு சொன்னதாம். உடனே  அவங்கம்மா மெல்லக் கை புடிச்சு அந்தப் பொண்ணை மொட்டை மாடியில இருக்கிற திண்ணையில சாய்வா உட்கார வச்சுட்டுக் கீழே போயிருக்கா. பொண்ணும் நல்லா சாய்ஞ்சபடி எங்கேயோ இலக்கில்லாம பார்த்திருக்கு. பக்கத்து வீட்டுப் பையன் அவ தன்னத்தான் பார்க்கறான்னு நினைச்சு அத தனக்கு சாதகமா பயன்படுத்தியிருக்கான்.என்ன வொரு நெஞ்சழுத்தம் அந்தப்  பையனுக்கு பார்த்தீங்களா?” 

“சரி. நீ அந்தம்மாக்கிட்ட நடந்ததச் சொன்னயா?” 

“பொண்ணத் தனியா விடாதீங்க..காலம் கெட்டுக்கிடக்கு அப்படின்னு பூடகமா சொல்லிட்டு வந்தேன்.”

“நல்லவேலை பண்ணினே! நீ ஆரம்பத்திலே சொன்னக் கேட்டு நான்கூட அந்தப் பொண்ணைப் பத்தி ஒருமாதிரியாகத்தான் நினைச்சேன். ஆனா இப்போ அவளுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு நீ சொல்றதக் கேட்க மனசுக்கு வேதனையா இருக்கு பூரணி!

அண்ணல் நோக்கினாலும் அவளால் நோக்கமுடியாதுங்கறத நம்பக் கஷ்டமாயிருக்கு!” சொல்லி மூடித்த வாசுவின் கண்களும் கலங்கியிருந்தன.

2 thoughts on “அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்!

  1. சிறுகதை இணையதளம் எங்களுக்குப்
    பெரிய தளம்! இதன் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களை
    எங்கள் எழுத்து சென்று அடைகிறது
    என்றால் தங்களின் சிறப்பான பிரசுரிப்
    பே காரணம். வாழ்க தங்களின் சிறப்பான பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *