அணில் விரட்டும் கிளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 8,068 
 
 

தொலைக்காட்சியைப் பார்த்தபோது, ரொறன்ரோவில் புனிப்புயல் வீசலாம் என்ற காலநிலை மையத்தின் அறிவித்தல் இருந்தது, அதனால் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே வெளிக்கிட்டுச் சென்றிருந்தேன். பனி கொட்டும்போது, விமான ஓடுபாதையில் பனியுறைந்திருந்தால், சிலசமயம் விமானசேவையில் தடங்கலோ அல்லது தாமதமோ ஏற்படலாம் என எதிர்பார்த்தேன்.

நல்லகாலம், சோதனைகளை முடித்துவிட்டு, ‘ஸ்ராபக்’ காப்பி அருந்திக் கொண்டிருந்த போது, பயணிகளை உள்ளே வரும்படி அறிவித்தல் வந்தது. வரிசையில் சென்று விமானத்தில் ஏறி எனது இருக்கையைத் தேடினேன்.

மூவர் இருக்கக்கூடிய வரிசையில் யன்னல்கரையோரமாக ஒரு பெண்ணும், நடுவில் இன்னுமொரு பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். எனது இருக்கை நடைபாதைக் கரையில் என்பதால் நான் அதில் அமர்ந்து கொண்டேன். முகச்சாயலில் இருந்து அவர்கள் இருவரும் சகோதரிகளா அல்லது சினேகிதிகளா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

எனக்கு அருகே இருந்த பெண்ணின் மடியில் ஒரு குழந்தை ஒரு வயதிருக்கலாம், விளையாடிக் கொண்டிருந்தது. எனது பிரசன்னத்தால் கவரப்பட்ட அந்தக் குழந்தை அருகே இருந்த என்னைப் பார்த்துக் கையசைத்துச் சிரிக்கவே, நானும் பதிலுக்கு அந்தக் குழந்தையைப் பார்த்துச் சிரித்தேன்.

தாயாராக இருக்கலாம், ‘கிவ் கிம் பைவ்’ என்று சொல்லி குழந்தையின் கையைப்பிடித்து எனது வலது உள்ளங்கையில் செல்லமாக தட்டிவிட்டார். அப்போது அவரே குழந்தைக்குப் பதிலாக ‘ஓலா’ என்றும் சொன்னார். ஓலா என்றால் இஸ்பானிய மொழியில் ‘ஹலோ’ என்று பொருள் படும். ‘ஐயாம் ஸோபியா’ என்று தன்னையும் அவர் அறிமுகம் செய்தார். நானும் பதிலுக்கு ‘ஓலா’ என்று சொல்லி என்னை அறிமுகம் செய்துவிட்டு, விமானத்திற்குள்ளே என்ன நடக்கிறது என்று நோட்டம் விட்டேன்.

அனேகமான பயணிகள் குடும்பமாகக் குழந்தைகளோடு பயணித்தார்கள், ஆங்காங்கே குழந்தைகளின் அழுகுரல் கேட்டதால், விமானப் பணிப்பெண்கள் விரைந்து சென்று குழந்தைகளின் தாய்மாருக்கு உதவி செய்தார்கள். விமானம் புறப்படப் போவதாகவும், இருக்கைப் பட்டியை அணியும்படியும் அறிவிப்பு வந்தது, அதைத் தொடர்ந்து நாங்கள் செல்ல வேண்டிய இடமான சிறந்த வெண்மணற் பரப்புக் கடற்கரைகளைக் கொண்ட, தென்னமெரிக்காவுக்கு அருகே உள்ள ‘அரூபா’ என்ற சிறிய தீவை நோக்கி விமானம் கிளம்பியது.

737- 800 ரகவிமானம் 180 பயணிகள் பயணிக்கக்கூடியது, அப்போது சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. பொதுவாக விமானங்களில், தற்செயலாகத் தண்ணீரில் விழுந்தால் ஆபத்து நேரத்தில் பாவிக்கக்கூடிய உயிர் பாதுகாப்பு கவசம் இருக்கைக்கு அடியில்தான் இருப்பது வழக்கம். ஆனால் இந்த விமானத்தில் மேலே கபினோடு வைத்திருந்தார்கள்.

ஐந்துமணி நேரம் விமானத்தில் பொழுதுபோக்க வேண்டும் என்பதால், அதற்கான ஆயத்தங்களுடன் அனேகமான பயணிகள் வந்திருந்தார்கள். அவர்களில் சிலர் புளுரூத்தைக் காதில் செருகி, தங்களுக்கு விருப்பமான பாட்டுக் கேட்டுக் கொண்டும், சிலர் புத்தகம் வாசித்துக் கொண்டும், வேறுசிலர் அரைகுறைத் தூக்கம் போட்டுக் கொண்டுமிருந்தனர்.

நானும் பொழுதுபோவதற்காக, சுஜாதாவின் ‘ஆயிரத்தில் இருவரை’ பலநாட்களின் பின் மீண்டும் ஒரு தடவை வாசித்து முடித்தேன். என்னைக் கதை எழுதத் தூண்டியதே அவரது கதைகள்தான் என்பதால், அந்தக் கதைக்குள் மூழ்கிப் போனதால் நேரம் போனதே தெரியவில்லை. எந்தப் பந்தாவும் இல்லாமல் கதை சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.

‘புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் அதிகமோ?’ என்று அருகே இருந்த ஸோபியா கேட்டாள்.

‘ஆமாம், நிறைய வாசிப்பேன்’ என்று சொன்னேன்.

‘புத்தகத்திற்குள் மூழ்கியே போய்விட்டீர்கள்’ என்று சொல்லி, என்னிடமிருந்த அந்தப் புத்தகத்தை வாங்கி அட்டைப்படத்தைப் பார்த்தாள், ஒரு ஆணும் பெண்ணும் அணைத்தபடி நின்றார்கள்.

‘லவ் ஸ்ரோரியா, இது என்ன மொழி?’ என்றாள்.

‘லவ் ஸ்ரோரி என்று சொல்ல முடியாது, ஆனால் கதையில் காதலும் வருகிறது, இது தமிழ் மொழி, காலத்தால் நீண்ட மிகப்பழைய மொழி’ என்று சிறிது விளக்கமும் கொடுத்தேன். அவளுக்குத் தமிழ் மொழி பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை, ஆனால் ஆர்வத்தோடு கேட்டாள்.

குழந்தையின் தாயார் பற்றிய எனது கணிப்புத் தப்பானது என்பதைச் சற்று நேரத்தால் யன்னல் கரையில் இருந்த பெண், குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்த போதுதான் புரிந்து கொண்டேன். அப்போது இவள் உணர்ச்சி வசப்பட்டு ‘ஐ லவ்யூ டார்லிங்’ என்று சொல்லி, யன்னல்கரையில் இருந்த அவளுக்கு எட்டிக் கன்னத்தில் ‘இச்’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் பதிலுக்கு இவளது கன்னத்தைத் தடவி, ஒரு வெட்கப்புன்னகை உதிர்த்துவிட்டு வெளியே பார்வையைச் செலுத்தினாள். அந்தப் பெண்மணியிடம் பெண்மையின் கவர்ச்சியும், அங்க அசைவில் நளினமும் இருந்தாலும் ஏதோ இனம்புரியாத சோகம் அவளிடம் குடியிருப்பதையும் அவளது முகத்தில் அவதானித்தேன்.

வெண்பஞ்சு மேகக்கூட்டத்திற்கு மேல் விமானம் மிதந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தால் யன்னல் கரையில் இருந்த குழந்தையின்தாய் எழுந்து கழிவறைக்குச் சென்றாள். நான் எழுந்து அவள் செல்வதற்கு வழி விட்டு விலகி நின்றேன். அவள் எனக்குத் தாங்ஸ் சொல்லுவாள் என்று ஸோபியா எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் சென்றது ஸோபியாவிற்கு என்னவோ போல இருந்திருக்க வேண்டும், அவளுக்குப் பதிலாக இவள் எனக்கு ‘தாங்ஸ்’ சொன்னாள். என்ன அவசரமோ, ஒவ்வொருவருக்கும் அந்த நேரநிலைமைக்கு ஏற்ப, அவர்களின் மனநிலை இருக்கும் என்பதால், நான் அந்த சம்பவத்தைப் பெரிது படுத்தவில்லை.

அப்பொழுதுதான் இன்னும் சில மணி நேரங்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்பதாலோ என்னவோ, தனது நெருங்கிய சினேகிதி பற்றி இவள் என்னிடம் சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டாள். ‘கல்லூரி நாட்களில் இருந்தே தங்கள் நட்புத் தொடருவதாகவும், சினேகிதி திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் குழந்தை தாயின் வயிற்றிலே மூன்று மாதமாக இருந்த போது குழந்தை வேண்டாம் என்று கணவன் அடம் பிடித்ததால் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இருவரும் பிரிந்து இருப்பதாக’ இவள் குறிப்பிட்டாள்.

குழந்தை பிறந்த பிற்பாடு ‘டிப்ரஸன்’ என்று சொல்லப்படும் மனச்சோர்வால் சினேகிதி பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால்தான் ஒரு மாற்றத்திற்காகக் கட்டாயப்படுத்தி அவளை அரூபாவிற்கு அழைத்து வந்ததாகவும் ஸோபியா மேலும் குறிப்பிட்டாள்.

இப்படியானவர்களின் மனநலனைப் பேணுவதற்கு இதுபோன்ற சூழல் மாற்றங்கள் கட்டாயம் தேவைதான், நல்ல முடிவைத்தான் சினேகிதி என்ற வகையில் இவள் எடுத்திருக்கிறாள் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தால், கழிவறைக்குச் சென்ற குழந்தையின் தாயார் வந்து தனது இருக்கையில் அமர்ந்து கொள்ள, இவள் குழந்தையை அவளிடம் கொடுத்தாள். தாயின் மடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தால் தூங்கிவிட்டது.

இவர்கள் இருவரும் கைகோர்த்தபடி தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே காதலர்கள்போல, இவள் எட்டி அவளை அணைத்து முத்தம் கொடுப்பதும், அவள் முகம் நாணி, வெட்கப்படுவதுமாக இருந்தாள்.

இது போன்ற ஒரேபாலினத்தவரின் செய்கைகளை புலம்பெயர்ந்த இந்தக் கனடா மண்ணில், தினமும் பொது இடங்களில் பார்க்கும் போது, தொடக்கத்தில் கூச்சமாக இருந்தாலும், இப்போ இது எமக்குச் சாதாரண காட்சிகள்தான். இங்கே நான் மட்டுமல்ல, தெரிந்தும் தெரியாதது போல எல்லோரும் நடந்து கொள்வார்கள். இங்கே உள்ள எல்லா இனத்தவர்களிடமும் இதை வெளிப்படையாகவே காணமுடிகின்றது. இதை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல் மண்ணுக்கு மண் மாறுபடலாம். ஊரிலே இது போன்ற செய்கைகள் சமூகக் கட்டுப்பாடு காரணமாகப் பொது இடங்களில் நடப்பதில்லை, நானும் பார்த்ததில்லை.

கடிகாரத்தைப் பார்த்தேன், ஐந்துமணி நேரம் கடந்திருந்தது, சற்றுநேரத்தால், விமானம் தரை இறங்கப் போவதாக அறிவிப்பு வந்தது. விமானம் தரிப்பிடத்தில் நின்றதும், வாசலில் நின்ற விமானிக்கும், விமானப்பணிப்பெண்ணுக்கும் ‘பாய்’ சொல்லிவிட்டு, வரிசையாக எல்லோரும் வெளியே வந்தோம்;. அரூபா விமான நிலையத்தில் அவரவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு, அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். விமானப்பயண நட்பும் அத்துடன் முடிந்து விட்டது.

நான்கு நாட்களில் அரூபாவிற்கு வந்த பணி முடிந்துவிட்டதால் ஒரு நாள் இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. வடமுனையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கலிபோணியா கலங்கரைவிளக்கம், ஓல்லாந்தரின் பழைய கோட்டை, கைவிடப்பட்ட கோல்ட்மைன், 1940 ஆம் ஆண்டு கடற்கரையில் மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மனியின் எஸ்.எஸ்.அன்ரில்லா கப்பல் என்று சில இடங்களைச் சென்று பார்த்தேன். கடல் உணவுக்கு அரூபா பிரபலமானது என்பதால், கூகுளில் தேடிப் பார்த்து, ‘ஸீரோவர்’ என்ற ஒரு உணவகத்தைத் தெரிவுசெய்து அங்கு சென்று உணவருந்தினேன்.

உடன் கடலுணவு என்பதால் நன்றாக இருந்தது, ஆனால் சிறிது நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டி வந்தது. ஊரிலே சாப்பிட்டது போல, மெல்லியதாக வெட்டிய மீன் துண்டுகள் பொரியலாகவும், ‘ரெயில்ஆன்’ இறால் பிரட்டல் கறியும், பெரிய துண்டுகளாக உருளைக் கிழங்குப் பொரியலும், ரோஸ்பாண் துண்டுகளும் கிடைத்தன. அருகே இருந்தவர்கள் ரெட்லொப்ரேஸ், கணவாய் போன்றவற்றை மதுபானத்தோடு ருசித்துச் சாப்பிடுவதையும் பார்த்தேன். உணவை முடித்துக் கொண்டு, அதன்பின் அரூபாவின் பிரபலமான ‘ஈக்கிள்பீச்’ என்று சொல்லப்படுகின்ற கடற்கரைக்குச் போயிருந்தேன். யாழ்ப்பாணத்து வெய்யில்போலச் சுட்டாலும், கடற்கரை ஓரங்களில் இதமான குளிர்காற்று வீசியது.

அத்திலாண்டிக் சமுத்திரத்தின் அலைகள் ஆர்ப்பாட்ட மில்லாமல் அமைதியாக இருந்தன. கண்ணுக்குத் தெரிந்த தூரமெல்லாம் நீச்சல் உடையில் சுற்றுலாப் பயணிகள் தென்பட்டார்கள். தண்ணீர் சற்றுக் குளிராக இருந்தாலும், நீச்சல் அடித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வெண்மணற் பரப்பில் சிறிது தூரம் நடந்தேன்.

பயணிகளைக் கவர்ந்த, கரையோரத்தில் இருந்த அந்த டிவி-டிவி மரம் ஒரு பக்கம் மட்டுமே கிளைகளைப் பரப்பி அழகாக இருந்தது. சுற்றுலாத் துறையினர் இந்த மரத்தைத்தான் அரூபாவின் நினைவுச் சின்னமாக விளம்பரப் படுத்தி இருந்தார்கள். மரம் சரிந்து விடலாம் என்ற பயத்தில் அதற்கு ஒரு முண்டும் கொடுத்திருந்தார்கள். ஒரு மொடல் அழகியைப் படம் பிடிப்பதுபோல, பயணிகள் பலரும் அந்த மரத்தை ஒவ்வொரு கோணத்தில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதிக படங்களுக்குப் போஸ் கொடுத்த மரம் இதுவாகத்தான் இருக்குமென்று நான் நினைத்தேன். அரூபாவின் நினைவுகளை மீட்பதற்காக, அதன் அருகே நின்று நானும் சில செல்பிகளை எடுத்துக் கொண்டேன்.

நீண்ட அலகுகளைக் கொண்ட பெலிகன் பறவைகள் இரையைத் தேடி வட்டமடித்து சட்டென்று தண்ணீருக்குள் மூழ்கி மீன்களைக் கௌவிக் கொண்டு பறப்பதை ஆச்சரியமாகப் பார்த்தபடி நடந்தேன். பருந்துகளை விட இவற்றுக்கு ஊசிக்கண்களாக இருக்கலாம், காரணம் உயரப் பறந்தபடியே தண்ணீருக்குள்ளும் மீன்களைத் தேடிக் கண்டு பிடித்து, குறிவைத்து இரையாக்குகின்றனவே!

பின்னால் யாரோ வேகமாக நடந்து வரும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, ‘ஹலோ என்னை ஞாபகம் இருக்கா?’ என்ற பெண் குரல் அருகே கேட்டது.

திரும்பிப் பார்த்தேன், ஸோபியா தான் நின்றாள்.

அவளைத் திரும்பவும் அங்கே சந்திப்பேன் என நான் நினைத்ததில்லை. ஆனாலும் 20 மைலே நீளமான சிறிய தீவான அரூபா அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

‘ஓ.. நீங்களா ஸோபியா, எப்படி இருக்கிறீங்க?’ என்றேன்.

‘நல்லாயிருக்கேன், பரவாயில்லை என்னுடைய பெயரை ஞாபகம் வெச்சிருக்கிறீங்களே’ என்றாள்.

‘எங்கே உங்க சினேகிதியையும், குழந்தையையும் காணோம்?’

‘அவங்க என் கூட வரவில்லை, வெளியே போயிருக்கிறாங்க’ என்றாள் ஸோபியா.

‘அப்படியா, குழந்தையோடு தனியாகச் சமாளிப்பாங்களா?’

‘அவள் தனியாகப் போகவில்லை, அவளுடைய புருஷனோட…!’

‘புருஷனா? அவனை எங்கே சந்தித்தாள்?’

‘நான் சொன்னேன்தானே அவனைப்பற்றி, எப்படியோ நாங்கள் இங்கே வந்திருப்பதைக் கேள்விப்பட்டு இங்கே வந்திட்டான். இதுவரை காலமும் பிரிந்திருந்ததற்கு ஆயிரம் கதைகள் சொல்லி, மன்னிப்புக் கேட்டு அவளை நம்பவைத்து விட்டான்.’

‘நல்லதுதானே, பிரிந்தவர்கள் எப்படியோ ஒன்று சேர்ந்தது பாராட்டப்பட வேண்டியதுதானே’ என்றேன்.

‘நீங்க ஒன்று, எனக்கு இதில் நம்பிக்கை இல்லை, அவன் இவளுடைய பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதில் குளிர்காயப் பார்க்கிறான்’ என்றாள்.

‘பலவீனமா, அது என்ன.?’

‘வேறு என்ன, எல்லாம் அது..தான்..?’ என்றாள் விரக்தியோடு.

‘ஏன் அப்படி நினைக்கிறீங்க, நல்லது நடக்க வாய்ப்பிருந்தால் வாழ்த்துவோம்’ என்றேன்.

அவளுடைய முகம் சட்டென்று மாறியது.

‘மத சக்…’ என்றவள் வார்த்தையை முடிக்காது, சட்டென்று ‘சொறி’ என்றாள்.

‘ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு?’ என்றேன்.

‘உங்களுக்குப் புரியாது, அவன் இவளை ஏமாற்றப் போகிறான், கொஞ்சநாளைக்கு இவளை வெச்சு நல்லா அனுபவிச்சிட்டு இன்னுமொரு பிள்ளையையும் கொடுத்திட்டுத் தப்பிச்சுப் போயிடுவான்.’ என்றாள்.

‘உங்களுக்கு அவர்கள் ஒன்று சேர்வதில் உடன்பாடு இல்லையா?’

‘எனக்கு இதில் ஒருபோதும் உடன்பாடு இல்லை, இதிலே நான் மட்டும் முடிவெடுக்க முடியாது, அவளுக்கு இப்படி ஒரு உதவாக்கரை தேவையா, இல்லையா என்பதை அவள்தான் முடிவெடுக்கணும்!’

அவனைப் பற்றிய இவளது கணிப்பு அதுவாக இருந்தது. அவர்கள் ஒன்று சேர்வதில் இவளுக்கு என்ன பிரச்சினை?

கரடி போல அவளது கணவன் இடையே புகுந்து விட்டதால், தனது சினேகிதியுடன் தான் விரும்பியபடி சந்தோஷமாகத் தனியாக விடுமுறையைக் களிக்கமுடியவிலை என்ற ஏக்கமா? அல்லது இவனது வருகையால் தனது நெருங்கிய சினேகிதியை நிரந்தரமாகவே இழந்திடுவோம் என்ற மனதில் ஏற்பட்ட பயமா?

நான் ஒரு அந்நியன் என்று தெரிந்திருந்தும், அவள் தனது மனதில் இருந்த ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்திருந்தாள். அவளது எதிர்பார்ப்பு என்னவென்பதையும், காதல் தோல்வி அடைந்தவர்கள் போல, சினேகிதியைப் பிரிந்து விடுவோமோ என்ற பயத்தில் மனதளவில் இவளும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நானும் கதை கேட்கும் ஆர்வத்தில் அவள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘காட்டுக்குள் என்ன நடந்தது என்பதைச் சிங்கம் வந்து சொல்லும்வரை, வேட்டைக்காரன் தான் விரும்பியபடி அளந்து விடுவதை நம்பவேண்டியதுதான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு. அதுபோல அவள் சொல்வது எல்லாவற்றையும், ஒருபக்கமாக நம்பவேண்டிய நிலையில் அப்போது நானிருந்தேன்.

ஊரிலே எங்க வீட்டில் நின்ற விலாட் மாமரத்தின் காய்கள் வெய்யில் பட்டதும் மேற்பக்கம் சிகப்பு நிறமாக மாறி சிகப்பும் பச்சையுமாய், ஆப்பிள் போல அழகாக இருக்கும். அவை மெல்லக் கனியும் பருவம் வரும் போது அவற்றைத் தின்பதற்கு அணில்கள் ஒவ்வொரு கிளைகளாக ஏறியிறங்கும்.

சின்ன வயதில் நான் கண்ணால் பார்த்ததால், மாங்காயை அணில்கள்தான் கொந்துவதாக நம்பியிருந்தேன், ஆனால் ‘அணில்கள் மட்டுமல்ல, அவ்வப்போது கிளிகளும் மாங்காய்களைக் கொந்தும்’ என்று ஒருநாள் ஜெயாரீச்சர் சொன்னது சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது.

பசி எடுத்தால் மாங்காய் கனியுமுன்பே, கிளியை விரட்டிவிட்டு அணில் கொந்துவதும், அணிலை விரட்டிவிட்டுக் கிளி கொந்துவதுமாய் மாறிமாறி நடப்பதுண்டு. அதனால்தான் ருசித்து அனுபவப்பட்ட மனிதர்களும் கொந்தல் மாங்காய்களின் ருசி அதிகம் என்கிறார்களோ தெரியவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *