அடக்கம் – ஒரு பக்க கதை





“அப்படியானால், முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது?’
நிருபர்கள் கேட்டார்கள்.
புன்னகைத்தவாறே பக்கத்திலிருந்த மனைவியைப் பார்த்தவாறு பதிலளித்தார் தொழிலதிபர் சதாசிவம். “சந்தேகமென்ன? போற்றுதலுக்கு உரியவள் என் மனைவி ராகா! எனக்கு குடும்பக் கவலையே இல்லாதவாறு தொழிலில் அவ்வப்போது ஆலோசனைகள் கூறியும், நான் இடிந்து போகும் சமயங்களிலெல்லாம் தெம்பூட்டியும்… நடுத்தர நிலையிலிருந்த என்னை இன்று இந்த உயர்ந்த நிலைக்கு ஆளாக்கியதும் ராகாதான்! அவள்முகம் சுளித்து நான் பார்த்ததில்லை. சுடுசொல் கூறிக் கேட்டதில்லை. அவளை மனைவியாக நான் அடைந்ததற்கு நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’
“கட்!’ என்றார் இயக்குநர்.
கேமரா சுழற்றி நின்றது. ராகாவாக நடித்த சுவர்னா தனது நாற்காலியில் வந்து அமர்ந்தாள். பதிபக்தியுள்ள மனைவி வேடங்களென்றாலே, கண்ணை மூடிக்கொண்டு சுவர்ணாவையே திரைப்பட உலகம் நடிக்க வைத்தது.
அதே சமயம் வக்கீலிடம் சுவர்ணாவின் காதல் கணவன் சோகமாகப் புலம்பிக் கொண்டிருந்தான். “ஆமா சார்! இனிமேலும் என்னால தாக்குப்பிடிக்கவே முடியாது. சுவர்ணா என்னை அலட்சியப்படுத்துறது அளவுக்கு மீறிப் போய்ருச்சு. இனிமேலும் ரோஷம் மானம் கெட்டுப் போயி அவகூட நான் இருக்க விரும்பல. என்னைத் திட்டுறதோடு மட்டுமில்லாம, கை ஓங்கியும் விடுறா…விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யுங்க சார், ப்ளீஸ்!.’
– அன்பிற்கினியவன் (மே 2011)