அஞ்சும் மூணும் எட்டு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2025
பார்வையிட்டோர்: 6,028 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜன்னலைத் திறந்தபோது, சற்றுத் தொலைவில் மூர்த்தியும் சாருவும் நடந்து வருவது தெரிந்தது. வெள்ளைச் சட்டையும், வெள்ளை நிக்கரும் போதாமல் போய்விட்டது போல், சாருவின் உடம்பைக் கவ்விப் பிடித்திருந்தன. வெளேரென்ற உடம்பும், மூங்கிலில் விளைந்தாற் போன்ற நெகுநெகுவென்ற வளர்த்தியும்… யாருடைய கண்ணாவது படப் போகிறதே என்றிருந்தது ஜானகிக்கு, டென்னிஸ் விளையாடிய பின் உடை மாற்றிக் கொண்டு வரும்படி, எத்தனையோ தடவை சொல்லியாயிற்று.

“அம்மா, ஒரே பசி. ஐம் கோயிங் டு ஆர்டர் பீட்ஸா” சொல்லிக்கொண்டே வந்தவளை இடை மறித்தாள் ஜானகி, “சாரு, பீன்ஸ்கறியும், மோர்க்குழம்பும் பண்ணி இருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு வா, சுடச்சுடச் சாப்பிடலாம்.”

“ஓ! நோம்மா இன்னிக்கு பீட்ஸா சாப்பிடணும் போல இருக்கு!”

அநேக விஷயங்களில் சாரு இப்படித் தான். துடிப்பும், துள்ளலும் கொப்பளித்துக் கொண்டிருக்கும். “என்னம்மா?” என்று தப்பித் தவறிக்கூட மூர்த்தி பெண்ணைக் கேட்டுவிட மாட்டார். அத்தனை அருமை! சாரு ஏதேனும் முதல் நாள் கேட்டுவிட்டால், மறுநாளே அது அவள் கைக்கு வந்துவிடும்.

“அப்பா, சொல்ல மறந்துட்டேனே! எங்க காலேஜ்ல எல்லோரும் எக்ஸ்கர்ஷன் போக ப்ளான் பண்ணி இருக்கோம். இன் ஃபாக்ட், இந்தப் பிளானைச் சொன்னதே நான்தான். எங்க போறோம்னு தெரியுமா? டெல்லி, ஹரித்வார், முசௌரி என்று கம்ப்ளீட்டா நார்த் இந்தியா பக்கம்… சும்மா பத்தே நாள் தான்!”

சாரு பேசிக்கொண்டே போக, ஜானகிக்குப் பொறுக்க வில்லை. “தோ பாரு சாரு! அதெல்லாம் எதுவும் வேண்டாம். காலம் இருக்கும் இருப்பில், அவ்வளவு தூரம் உன்னை அனுப்பிட்டு நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எங்க பார்த்தாலும் ஸ்டிரைக்கும். டெரரிஸ்ட் பயமும்…”

“நிறுத்தும்மா…நீ ஏதாவது ஏடாகூடமா கற்பனை பண்ணிண்டு என்னோட மூடைக் கெடுக்காதே. அப்பா, ஐம் கோயிங்… ஓகே?”

“தட்ஸ் ஃபைன் சாரும்மா. ஆனா, ஜாக்கிரதையா இருக்கணும். பணம் எவ்வளவு தேவைப்படும்னு சொல்லு…” சொல்லியபடியே மூர்த்தி எழுந்து கொண்டார்.


ஒருவழியாகத் தேர்வு முடிந்தது. இஷ்டம் போல் தொலைக் காட்சி பார்த்து, செல்ஃபோனில் அரட்டை அடித்து, நேரம் கால மில்லாமல் ஊர் சுற்றி, ஜிம்முக்குப் போய் வந்து… நாட்கள் சென்று கொண்டிருந்தன.

சாவகாசமாய் எழுந்து வந்த சாருவிடம் ப்ரெட் டோஸ்டைக் கொடுத்தபடியே, மெள்ள ஆரம்பித்தாள் ஜானகி.

“சாரும்மா! நாள் இப்படி ஓடிண்டே இருக்கே. சரோஜா டீச்சர்கிட்ட உன்னோட விட்டுப்போன பாட்டு க்ளாசை ஆரம்பி. அப்படியே கிருஷ்ணன் சாரிடமும் வயலின் கிளாஸ் பத்திப் பேசு…”

“உஸ்… உடனே ஆரம்பிச்சிட்டியா? நான் அதெல்லாம் எதுவும் செய்யப் போறதில்ல… கார் டிரைவிங் கத்துக்கப் போறேன்… அதோட ஃபிரெஞ்ச் கத்துக்கப் போறேன்…”

ஜானகியின் கோபம் தலைக்கேறியது. “சாரு, டிரைவிங்கும் ஃபிரெஞ்சும் சுத்துக்கிட்டா, தட்டுல சாதம் வந்துடுமா? நாம பெரிய ராயல் ஃபேமிலியா என்ன? மனசுல நீ என்னதான் நினைச்சுண்டிருக்கியோ..?”

“அய்யோ… ப்ளீஸ் அம்மா… கத்தாதே. பாட்டும் வயலினும் ஏழு வருஷம் கத்துண்டாச்சு. அதனால டயம் கிடைக்கிறச்சே சும்மா பிராக்டீஸ் பண்ணினாப் போதும்… என்னை என் வழியிலே போகவிடும்மா… சும்மா போரடிக்காதே…” பாப் தலையைச் சிலுப்பிக் கொண்டு விருட்டென்று கிளம்பினாள் சாரு. மூர்த்தியிடம் சொல்லி சொன்ன தினுசில், ஃபிரெஞ்சும், கார் டிரைவிங்கும் கற்றுக் கொள்ளச் சென்று வந்தாள். சரியாக எட்டே வாரங்களில் கையில் லைசென்ஸோடு வந்தபோது, ஜானகி வாயடைத்துத்தான் போனாள்!


நல்ல பெண், நல்ல அப்பா… இப்படி எல்லாம் தன்னால் இருக்க முடிந்ததா? அப்பா அம்மா கிழித்த கோட்டைத் தாண்டாமல், எப்படி வளர்த்தேன்! அப்படி இருந்ததால் என்ன கெட்டுப் போயிற்று?

கல்லூரி முடித்த கையோடு, அப்பா திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்த போது, கொஞ்ச நாட்களுக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஜானகியின் ஆசை அப்படியே அடங்கிப் போனது. அவ்வளவு என்ற அவளை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல், ‘நல்ல வரன்… விட்டால் கிடைப்பது கஷ்டம்’ என்ற ரீதியில் திரும்பத் திரும்பப் பேசி, கல்யாணத்தையே முடித்துவிட்டார்கள்.


தன் அளவுக்கு அப்படி அடங்கிப் போகாமல், ஓரளவுக்குச் சுதந்திரம் கொடுத்துத் தன்னோட பெண்ணை வளர்க்கணும் என்று சாருவைச் சுதந்திரமாக வளர்த்தவளே ஜானகிதான்! இப்போ என்னடா வென்றால், சாருவின் போக்கும் குணமும் அவளை நிரம்பவே பயமுறுத்தின.

காதைப் பொத்திக்கொண்டாள் ஜானகி, சாருவின் அறையிலிருந்து மரியாகேரியின் பாப் மியூசிக் அலறியது. அவளது தோழிகள் வேறு வந்திருந்தபடியால் உரத்த சிரிப்பும், பாட்டும், கும்மாளமுமாக இருந்தது.

“ஆன்ட்டி… கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா…?” என்றபடி வந்த பெண்ணின் தோள் பட்டையில் தேளும் பாம்புமாக டாட்டு இருந்தது.

“அப்பாடி… என்ன பொண்ணுகளோ? எல்லாம் பிசாசுகள்!”

சாருவின் தோழிகள் எல்லாம் ஓவ்வொன்றும் ஒரு ரகம். அதுவும் கட்டிய பசுபோல இருந்த மீரா, கொஞ்ச நாட்களுக்கு முன் அவர்களோடு படித்த ஆல்பர்ட்டைத் திருமணம் செய்து கொண்ட போது, ஆடிப்போய் விட்டாள் ஜானகி. ‘அம்மா! ஒரு பெண்ணும் ஆணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிறது அவ்வளவு பெரிய விஷயமா என்ன? லவ் ஈஸ் சம்திங் கிரேட் அண்ட் பியாண்ட் எவ்ரிதிங்..’ சாரு பேசிக் கொண்டே போனபோது, ஜானகியின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அன்றிலிருந்து சாருவின் மீது தனியாகக் கண் பதித்துப் பரிசோதனை செய்தாள். சாரு யாரோடெல்லாம் பழகுகிறாள். பேசுகிறாள் என்றெல்லாம் ரகசியமாக ஸர்வே எடுத்தாள், அவ்வப்போது மூர்த்தியிடம் ஏதாவது சொல்லப் போனால், அவர் ரௌத்ர மூர்த்தி ஆகிவிடுவார்…


டெலிஃபோன் அடிக்கவே விரைந்து எடுத்தாள் ஜானகி. மூர்த்திதான்,

“ஜானா! உன்கிட்ட என் ஃபிரெண்ட் கோவர்த்தன் பத்திச் சொல்லி இருக்கேன் இல்லையா? அவன் குடும்பத்தோட இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்திருக்கானாம். இன்னிக்கு டின்னருக்கு இன்வைட் பண்ணி இருக்கேன். கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பிறகு பார்க்கப் போறதால ரொம்பவும் எக்ஸைட்டாயிட்டான்…”

“சரி” என்றவள் மளமளவென்று சமையலில் இறங்கினாள். ரவா இட்லி க்ரீன்பீஸ் புலாவ், பூந்தி ராய்தா, சேமியா, பகளாபாத்… அத்துடன் ஸ்டார்ட்டருக்கு உருளை போண்டாவும், அவல் கேசரியும்…கூடவே புதினா சட்னியும் பைனாப்பிளையும், தர்ப் பூரணியையும் ‘டைஸ்’ மாதிரி அழகாக வெட்டி ஃபிர்ட்ஜில் வைத்தாள். எலுமிச்சை நன்னாரி சேர்த்து குளிர்பானமும் தயார் செய்துவிட்டு, ஜானகி ரெடியான போது, சொல்லி வைத்தாற் போல் அனைவரும் வந்து விட்டார்கள். பெண்ணாக லட் சணமாக, சாருவும் ஒரு சல்வாரில் வந்து எல்லோரையும் வரவேற்றாள்.

கோவர்த்தனும், அவர் மனைவி ராதாவும் மிகவும் சிலாகித்துச் சாப்பிட்டார்கள். ‘வெரி நைஸ் வெரி நைஸ்’ என்று அவர்கள் பிள்ளை சம்பத் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டபோது, ஜானகியின் மனது சந்தோஷத்தில் நிரம்பியது. அவர்களின் எளிமையும், பழகுவதில் தென்பட்ட இனிமையும் அவர்களின் தரத்தைச் சொல்லாமல் சொல்லின.

“மூர்த்தி… இப்படிச் செய்தால் என்ன…? உன்னோட பெண் சாருவை சம்பத்துக்குப் பேசி முடித்துவிட்டால்…?”


கோவர்த்தனின் வெளிப்படையான அணுகுமுறை, மூர்த்திக்குச் சந்தோஷ அதிர்ச்சியைக் கொடுத்தது.

சம்பத்தைப் பார்த்ததிலிருந்து, அவருக்கும் அந்த எண்ணம் துளிர் விட்டிருந்தது. இந்தச் சின்ன வயதிலேயே ஒரு பெரிய இண்டர்நேஷனல் சாஃப்ட்வேர் கம்பெனியில் உயர் பதவியில் இருந்தான். முன்னுக்கு வரக்கூடிய துடிப்பும், உயர்ந்த இலக்கை அடையக்கூடிய திறமையும், அவனது கண்ணியமான தோற்றமும் மூர்த்தியைக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு ‘யெஸ்’ சொல்லி விடலாம்தான்..ஆனால், சாருவைக் கேட்காமல் அப்படியெல்லாம் சொல்ல அவர் விரும்பவில்லை.

அதற்குள்ளாகச் சாருவும், சம்பத்தும் ஒபாமா, இலங்கைப்போர், ஸ்லம்டாக் மில்லியனர் என எதையும் விட்டு விடாமல் அலசிக்கொண்டிருந்தனர். அவர்களது இயல்பான பேச்சும், ஒருமித்த எண்ணமும் அவர்களைச் சற்றே நெருக்கத்துக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

கோவர்த்தனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மூர்த்தி மிகுந்த யோசனையுடன் சாருவைப் பார்த்தபோது, கோவர்த்தன் சாருவிடமே கேட்டுவிட்டார்…. “ஓ! அங்கிள், என்னோட அப்பா எது சொன்னாலும் எது பண்ணினாலும் எனக்கு ஓ.கே” என்ற போது, சாருவின் திருமண விஷயம் அந்த நிமிஷத்திலேயே நிச்சயமாகிப் போனது.


அசுர வேகத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்து, இதோ சாருவின் கல்யாணம் முடிந்து விளையாட்டுப் போல் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஷாம்பூ தலை பறக்க, பாட்டும் சப்தமுமாக வளைய வந்துகொண்டிருந்த சாரு இல்லாமல் வீடு வீடாகவே இல்லை. அவள் போய் வந்த சுற்றுலாப் பயணம் போலவே… அவளது திருமணமும் ஒரு சுணத்தில் முடிவானது தான், ஜானகிக்கு இன்னமும் ஆச்சர்யத்தைத் தந்து கொண்டிருந்தது.

‘அப்பாடி! என்னவெல்லாம் நினைத்துப் பயந்து கொண்டிருந்தேன்… சாருவின் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் சந்தோஷம்தான்… ஆனாலும் இயற்கையாகவே அவ்வப்போது எழும் பயம் அவளைக் கொஞ்சம் நிம்மதி இல்லாமல் செய்து கொண்டிருந்தது. சம்பத்தின் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, கஸின்ஸ், கிட்ட… தூரத்துச் சொந்தம் என்று ஏகப்பட்ட பேர் வந்தபோது, அவர்களைக் கவனிப்பதில், ஜானகியும் மூர்த்தியும் சற்றே திணறித்தான் போனார்கள். இத்தனை பெரிய குடும்பத்தில், இந்தப் பெண் சாரு எப்படி புகுந்து புறப்பட்டு வரப் போகிறாளோ என்று இனந் தெரியாத கலக்கம் அவளிடத்தில் இருந்துகொண்டே தான் இருந்தது.

இங்கிருந்த வரையில், கடுகு மிளகாய் தாளித்து ஒரு சமையல் செய்தோ, இரண்டிழை கோலம் போட்டு சுவாமி விளக்கேற்றியதோ இல்லை… அங்கே என்ன செய்கிறாளோ? சாருவிடமிருந்து ஃபோன் வரும்போதெல்லாம்… ஏதேனும் புகார் சொல்வதாக… குற்றம் காண்பதாகச் சொல்லி விடுவாளோ என்று மனது அடித்துக் கொள்ளும்.


டெலிபோன் மணி ஒலித்தது… “ஜானா! அடுத்த வாரம் நான் டெல்லிக்கு ஒரு கான்ஃபரன்சுக்காகப் போகணும். அப்படியே போய் சனி… ஞாயிறன்று நம்ப சாருவைப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.”

மூர்த்தி சொன்னதுதான் தாமதம்… உடனே சாரு மிகவும் விரும்பிச் சாப்பிடும் பத்த வாடும், ரிப்பன் பக்கோடாவும் பாக் செய்தாள். கல்யாணத்தின் போது திரட்டுப் பால் என்றால் தனக்கு ரொம்ப இஷ்டம் என்று சம்பத் சொன்னது நினைவுக்கு வரவே, அதையும் டப்பர் வேரில் போட்டு வைத்தாள். சாருவுக்கு ஒரு லெஹங்காவும், புது மோஸ்தரில் வந்திருக்கும் ஜேட் ப்ரேஸ்லெட்டும் வைத்து கிஃப்ட்ராப் செய்தாள். ராதாவுக்கு ஒரு வெங்கிடகிரி புடைவையும் கோவர்த்தனுக்கு அருணாசாயிராமின் இசைவட்டுகளும் வாங்கி, அழகாக லெதர் சூட்கேசில் எடுத்து வைத்தாள்.


சாருவிடமிருந்து ஃபோன்.

“நீயும் அப்பாவோட வந்திருக்கலாமே அம்மா…! உன்னை ரொம்பவும் மிஸ் பண்றேம்மா…” சாரு நெகிழ்ச்சியோடு சொன்ன போது, ஜானகியின் கண்களில் குற்றால அருவி பொங்கிற்று.

டெல்லியிலிருந்து மூர்த்தி வந்தாயிற்று. “இந்தா ஜாவா! சாரு என்னமோ கொடுத்து விட்டிருக்கா பாரு…”அவர் நீட்டிய பையில் அவளுக்குப் பிடித்த பெரிய சைஸ் சீதாப் பழங்களும், மயில் கழுத்து கலரில் வல்கலம் புடைவையும்… வெளேரென்று ஒரு மார்பிள் பிள்ளையாரும்… கூடவே ‘என்னோட ஸ்வீட் அம்மாவுக்கு’ என்று முத்து முத்தாக எழுதிய கடிதமும் இருந்தன.

“அம்மா! என்னோட ஸ்வீட் அம்மா! உன்னை, முக்கியமா உன்னோட அறுவையை இடைவிடாத தொண தொணப்பை, நான் ரொம்பவே மிஸ் பண்றேன். அப்பா சொன்னார்… கல்யாணத்துக்கு அப்புறமும் நீ, என்னைப் பத்திக் கவலைப்படறதை நிறுத்தலைனு. ஏன்மா…? அம்மா… நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி… சம்பத் அருமையானவர். எனது இன்-லாஸும் அவ்வளவு அருமையாகப் பார்த்துக் கொள்கிறார்கள். என்னோட குட் ஃப்ரெண்ட்ஸ் யார் தெரி யுமா… தாத்தாவும் பாட்டியும்தான்…

ஒவ்வொருவருக்கும் ஒருவித டேஸ்ட் இருக்கு. ரசனை இருக்கு. யாரும் எதையும் பிறர் மீது திணிப்பதில்லை… அதனால் அவரவர்களின் தனித்தத்துவத்தை இழக்காமல், ரொம்பவும் இயல்பா இருக்க முடிகிறது. சமையல் செய்யத் தெரியாது என்று சொன்னபோது, மனசுக்குள் முதல் தடவையா பயமும்… கூடவே உனது முகமும் எட்டிப் பார்த்தன. ஆனால், பாட்டி என்னைத் தட்டிக் கொடுத்தபடி…

‘சாரும்மா, சமையல் என்ன பிரம்ம வித்தையா? அஞ்சும் முணும் எட்டானால் அறியாப் பொண்ணும் கறி சமைப்பாள் தெரியுமா? ரெண்டு நாள், அப்புறம் ரெண்டு வாரம்னு சும்மா இப்படி சமையல்கட்டுக்கு வந்து கூடவே இருந்து பாரு… விளையாட்டுப் போல கவனி! அப்புறம் பாரு… தன்னால உனக்கும் ஆர்வம் வந்து, நீயும் தூள் கிளப்புவாய்’ என்றார். உண்மைதான்! ஓர் அதட்டல் இல்ல… அதிகாரம் இல்ல… இப்போ வாரத்தில ரெண்டு நாட்கள் என்னோட சமையல்தான்…

தாத்தாவோட தினமும் வாக் போகும்போது, நமது சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் ரொம்ப அழகாச் சொல்லிக்கிட்டே வருவார். அம்மா! உனக்குத் தோன்றலாம்… இப்போ மட்டும் எனக்கு எப்படி திடீர்னு ஆர்வம் வந்ததுனு? அம்மா, ஒன்றை யோசித்துப் பார்… என் மீது உனக்கு என்றாவது நம்பிக்கை வந்திருக்கிறதா? உனக்கு நான் பரம எதிரியாகத்தான் தெரிந்தேன். நான் எது செய்ய விரும்பினாலும் உடனே உன்னிடமிருந்து ஆட்சேபம்தான் கிளம்பும்.

அம்மா! நானும் ஒரு பெண்தான்… நீயும் ஒரு பெண்தான். ஒரே மண்ணில் செய்த இரண்டு வித்தியாசமான பொருட்களைப் போல்தான்… கொதித்துக் கொதித்துப் பண்டத்தைச் சிதறவிடாத பானை தான் நீ என்றால், மணமும் வண்ணமும் கொண்ட மலர்களைத் தாங்கிய பூ ஜாடி நான்! ட்ரைவிங் கற்றுக்கொள்ள விரும்பிய போது. நாமென்ன ராயல் ஃபாமிலியா என்று கேட்டாய்? அம்மா, இங்கு சம்பத்தை கம்பெனியில் ட்ராப் செய்து, பிக்கப் செய்து… எனது மாமியாரைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று, தாத்தா பாட்டியை டாக்டரிடம் கூட்டிச் சென்று… இந்த வேலையெல்லாம் நான்தான் செய்கிறேன் தெரியுமா?

இன்னொரு குட்நியூஸ். ஃபிரெஞ்ச் தூதரகத்தில் எனக்கு வேலை கிடைச்சிருக்கு… இப்போதைக்கு இங்குள்ள சுற்று வட்டாரக் குழந்தைகளுக்குப் பாட்டும், வயலினும் சனி, ஞாயிறுகளில் சொல்லித் தர்றேன்…

..அம்மா, இனிமேலாவது, என்னைப் பற்றிக் கவலைப்படாதே. நீ வாழ்வில் கெட்ட பெயர் வாங்காத போது, உன்னோட பெண்… நான் மட்டும் விதி விலக்கா என்ன? பாட்டி சொன்ன மாதிரி, அஞ்சும் மூணும் என்னைக்குமே எட்டு தான்! தப்பே வராது…”

கடிதத்தைப் படித்து முடித்தபோது, ஜானகியின் மனம் நிரம்பியது போலவே கண்களும் நிரம்பித் தளும்பின.

– மங்கையர் மலர் பிப்ரவரி-மார்ச் 2009.

எனது சிறுகதைகள் மங்கையர்மலர், ஆனந்த விகடன், அமெரிக்காவின் தென்றல், கலைமகளில் வெளிவருகின்றன. சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ்முரசில் எனது படைப்புக்கள் வெளிவந்துள்ளன..  மேலும், சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது.  கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். (சிங்கப்பூர் வெள்ளி பத்தாயிரம்). அது தவிரவும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் போன்றவை நடத்திய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *